உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்க வல்லரசு, தனது மேலாதிக்கத்தை தக்கவைத்து கொள்வதற்கும், மூன்றாம் உலக நாடுகளை அடிமைப்படுத்துவதற்கும் பல்வேறு கொள்கைகள், திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் “அனைத்துலக வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை”யும் (USAID – United States Agency for International Development) அதன் கீழ் வழங்கப்பட்டு வந்த உலகளாவிய நிதியுதவிகளும்.
1961-இல் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியால் உருவாக்கப்பட்ட யு.எஸ். எய்ட் முகமை சோவியத் ஒன்றிய ஆதரவு நாடுகளில், ஆளும் அரசுக்கு எதிரான கருத்துகளை பரப்புவது, சீர்குலைவு, ஆட்சிக் கவிழ்ப்புகளில் ஈடுபடுவது போன்ற சதிகளை செயல்படுத்தி வந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்ய – சீன ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், அமெரிக்காவிற்கு ஆதரவாகவும் பொதுக் கருத்தை உருவாக்குவதற்கு இம்முகமை பயன்படுத்தப்பட்டு வந்தது.
மேலும், இயற்கை சீற்றங்கள், போரினால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உணவு, மருத்துவ உதவிகள் செய்யும் மனிதாபிமான நிறுவனமாக வேடமிட்டுக் கொண்டு, பல ஏழை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் படிப்படியாக தலையிட்டு, அந்நாடுகளை அமெரிக்காவின் அணிவரிசையில் இணைத்துக் கொள்வதை உத்தியாக கையாண்டது. இதற்காக அமெரிக்க வல்லரசு பல்லாயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஆண்டுதோறும் ஒதுக்கி வந்தது.
இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தன்னார்வ நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், ஜனநாயக மேம்பாட்டுக்கான அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், ஊடக அமைப்புகள் போன்ற பெயர்களில் உலகெங்கும் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஹெச்.ஐ.வி., காசநோய், போலியோ மற்றும் நோய் தொற்றுகளை தடுப்பது, தாய்மார்களின் பேறுகால இறப்பு, குழந்தை இறப்புகளை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். பல ஏழை நாடுகள் தங்களது சுகாதார – மருத்துவத் தேவைகளுக்காக பெரும்பாலும் அமெரிக்காவின் யு.எஸ். எய்ட் நிதியைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்தாண்டு ஜனவரியில் பாசிஸ்ட் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, யு.எஸ். எய்ட் நிறுவனம் 90 நாட்களுக்கு முடக்கப்பட்டது. அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) முகவர்கள், யு.எஸ். எய்ட் அலுவலகங்களை சோதனையிட்டதை அடுத்து, அந்நிறுவனத்தின் இணையதள பக்கம் கைப்பற்றப்பட்டு முடக்கப்பட்டது. மார்ச் மாத நிலவரப்படி, யு.எஸ். எய்டின் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான திட்டங்கள் முடக்கப்பட்ட நிலையில், ஜூலை 1 அன்று யு.எஸ். எய்ட்-ஐ அதிகாரப்பூர்வமாக இழுத்து மூடியது பாசிச டிரம்ப் அரசு.
யு.எஸ். எய்ட் மூடப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் 24 லட்ச மக்களும், 2030-ஆம் ஆண்டிற்குள் 1.4 கோடி மக்களும் கொல்லப்படுவர், அதில் 45 லட்சம் பேர் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளாக இருப்பர் என்று “தி லான்செட்” மருத்துவ இதழில் ஆராய்ச்சி முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யு.எஸ். எய்ட் நிதி முடக்கத்தால் கென்யாவில் உள்ள அகதிகள் முகாம்களில், ஊட்டச்சத்து மற்றும் உணவு உதவிகள் நிறுத்தப்பட்டு அங்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாக சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிற்கு கொடூரமான நிலநடுக்கம் ஏற்பட்டு 3,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், யு.எஸ். எய்ட் நிதி முடக்கம் அந்நாட்டு மக்களுக்கு மேலும் பேரழிவாக அமைந்தது.
இந்நிலையில், கடந்த நவம்பரில் “தி நியூயார்க் டைம்ஸ்” வெளியிட்ட செய்தியில், “யு.எஸ். எய்ட் முடக்கத்தால் ஏற்கெனவே ஆறு லட்சம் மக்கள் இறந்துவிட்டனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள்” என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. போரைப் போலல்லாமல், இம்மரணங்கள் உலகம் முழுவதும் பரவி மெதுவாகவும் பொதுவெளியில் தெரியாமலும் அரங்கேறி வருவதாக அச்செய்தி இந்த அபாயத்தை எடுத்துரைத்துள்ளது.
மேலும், யு.எஸ். எய்ட் நிதி நேரடியாக பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, பிற மனிதாபிமான நிறுவனங்களுக்கு நிதியுதவியாகவும் அளிக்கப்படுகிறது. சான்றாக, யு.என். எய்ட்ஸ் (UNAIDS) நிறுவனத்தின் சர்வதேச எச்.ஐ.வி. நிதியில் 75 சதவிகிதம் யு.எஸ். எய்ட் நிதியிலிருந்தே பெறப்படுகிறது. அது தற்போது துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், உலகெங்கும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக யு.என். எய்ட்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிதி முடக்கத்தால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டு எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட மக்கள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ள யு.என். எய்ட்ஸ்-இன் அறிக்கை, ஹெச்.ஐ.வி. பரிசோதனை செய்ய முடியாமல் பெண்கள், குழந்தைகள் கைவிடப் பட்டுள்ளதாகவும், 20 லட்சத்திற்கும் அதிகமான இளம் பெண்கள் அத்தியாவசிய சுகாதார சேவைகளை இழந்துள்ளதாகவும் அம்பலப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நிதி முடக்கத்தால் 25 லட்சம் மக்களால் பிஆர்.ஈ.பி. (PrEP) எனப்படும் ஹெச்.ஐ.வி. தடுப்பு மருந்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான புருண்டியில் 64 சதவிகிதமும், உகாண்டாவில் 38 சதவிகிதமும் இம்மருந்து பயன்பாடு குறைந்துள்ளது. அதேபோல், நைஜீரியாவில் ஆணுறை விநியோகம் 55 சதவிகிதம் குறைந்துள்ளது. இத்தகைய காரணங்களால் உலகம் முழுவதும் ஹெச்.ஐ.வி. இறப்பு மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும், இந்த நிதி முடக்கத்தால் இந்தியா ஆண்டுதோறும் பெற்றுவந்த சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட பாதிப்புகளும் இறப்புகளும் இந்தியாவிலும் அரங்கேறும் அபாயம் உள்ளது. ஆனால், எது குறித்தும் முறையாக புள்ளிவிவரத்தை வெளியிடாமல் மோசடிகளில் ஈடுபட்டுவரும் பாசிச மோடியின் ஆட்சியில் இந்த பாதிப்புகள் குறித்த உண்மை தரவுகளை கூட அறிந்துகொள்ள முடியாத அவல நிலையே உள்ளது.
இவ்வாறு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் உயிரை குடித்துவரும் யு.எஸ். எய்ட் நிதி முடக்கத்திற்கு நியாயம் கற்பிக்கும் பாசிச டிரம்ப் அரசு, உலக நாடுகளுக்கு அமெரிக்கா செலவிட்டு வருவது மோசடி என்றும் வெட்டிச் செலவு என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், மூன்றாம் உலக நாடுகளுக்கு இந்த சொற்ப பணத்தை ஒதுக்கிவிட்டு, அந்நாடுகளின் வளங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் வரைமுறையின்றி கொள்ளையடித்து வருகிறது என்பதே நிதர்சனம்.
உண்மையில், மூன்றாம் உலக நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு இந்த சொற்ப பணத்தை கூட செலவிட வேண்டியதில்லை; மிரட்டல், வரி தாக்குதல், போர் அறிவிப்பு போன்ற உத்திகளை கையாள்வதன் மூலமே அந்நாடுகளை அடிமைப்படுத்தி விடலாம் என்பதே டிரம்ப் தலைமையிலான பாசிச கும்பலின் அணுகுமுறையாக உள்ளது. இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
ஏகாதிபத்திய கழுகுகளுக்கு மனிதாபிமான உதவிகள் குறித்தெல்லாம் கவலை இல்லை, கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையும் மேலாதிக்க நலனுமே முக்கியம் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இது அமெரிக்க வல்லரசிற்கு எதிராக சர்வதேச உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை முன்னெப்போதையும் விட தீவிரப்படுத்தியுள்ளது.
![]()
துலிபா
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










