பெல்ஜியத்தை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists- IFJ) 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய பத்திரிகையாளர்கள் படுகொலை குறித்து அறிக்கை ஒன்றை டிசம்பர் 31 அன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டில் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின்போது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது 2024 ஆம் ஆண்டைவிட அதிகமாகும்.
படுகொலை செய்யப்பட்ட 128 பத்திரிகையாளர்களில் 10 பெண் பத்திரிகையாளர்கள் உள்ளனர். படுகொலை செய்யப்பட்ட 74 பத்திரிகையாளர்கள் மேற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இனவெறி இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலில் காசாவில் 56 பத்திரிகையாளர்கள் (மொத்த எண்ணிக்கையில் 4 சதவீதம்) படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் 18 பத்திரிகையாளர்களும், சீனா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 15 பத்திரிகையாளர்களும், பாசிஸ்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் அமெரிக்காவில் 11 பத்திரிகையாளர்களும், ஐரோப்பிய நாடுகளில் 10 பத்திரிகையாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நான்கு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் பா.ஜ.க ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் சாலை கட்டுமான திட்டத்தில் நடந்த ஊழலை அம்பலப்படுத்திய ”யபஸ்தர் ஜங்ஷன்” என்ற யூடியூப் சேனலின் பத்திரிகையாளர் முகேஷ் சந்திகாரி படுகொலை செய்யப்பட்டதை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது தவிர உலகம் முழுவதும் ஒன்பது பத்திரிகையாளர்கள் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் தாங்கள் செய்த வேலைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கூட்டமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது. அதில் ஆசிய – பசிபிக் பிராந்தியம் முதலிடத்தில் உள்ளது. சீனாவில் 143 மற்றும் மியான்மரில் 49 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைப் போன்று, 2024 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 122 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், 516 பேர் சிறையில் அடைக்கப்பட்டதையும் கூட்டமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் 1990 முதல் உலகளவில் 3,170-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதையும் ஆண்டு வாரியாக ஆவணப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 91 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
படிக்க: இஸ்ரேலின் இனவெறிப் படுகொலைகளும் பத்திரிகையாளர்களின் தியாகமும்
பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்துப் பேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அந்தோணி பெல்லாங்கர் “ஒரு வருடத்தில் 128 பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது வெறும் புள்ளிவிவரம் அல்ல, இது ஒரு உலகளாவிய நெருக்கடி. பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையைச் செய்ததற்காகக் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதற்கான ’கொடூரமான நினைவூட்டல்’. ஊடக ஊழியர்களைப் பாதுகாக்கவும், கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்தவும் அரசாங்கங்கள் இப்போதே செயல்பட வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரத்திற்கான குரல்வளை நெறிக்கப்பட்டும், அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பும் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் வருகின்றனர். குறிப்பாக பத்திரிகையாளர்கள் காசா மீதான இனவெறி இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதல்களை தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் நேரடியாகக் களத்திற்குச் சென்று வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி வருகின்றனர். தங்களுடைய குடும்பம், குழந்தைகளைப் பிரிந்து அநீதிக்கு எதிரான குரலாக ஒளித்து வருகின்றனர். இதுபோன்ற அர்ப்பணிப்புள்ள பத்திரிகையாளர்கள் இனவெறி இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனைப் போன்ற படுகொலைகள் உலகளவில் தீவிரமடைந்து வருவதை சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பின் அறிக்கை நினைவூட்டுகிறது. எனவே பத்திரிகையாளர் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராகவும், பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் குரல் எழுப்ப வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











