பாசிச மோடி அரசு “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை” நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக, “விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்)” (வளர்ந்த பாரத கிராமிய வேலை மற்றும் வாழ்வாதாரத் திட்டம் – VB-G RAM G) என்ற மசோதாவை நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளது.
வழக்கம் போல, நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாட்களில், போதிய விவாதங்களின்றி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, மசோதாவை நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்து, குரல் வாக்கெடுப்பு என்ற பாசிச முறையின் மூலமே இப்பாசிச மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மேலும், மசோதாவிற்கு இந்தியில் பெயர் வைத்து தனது பாசிச திமிரைக் காட்டியுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்ட இரு நாட்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் இம்மசோதா சட்டமாகியுள்ளது.
நூறு நாள் வேலைத் திட்டத்தை நிதி ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும் சிதைத்து அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டத்தின் மூலம் மோடி அரசானது நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் ஒன்றிய அரசின் பங்கைக் குறைத்து மாநிலங்களின் நிதிப்பங்கீட்டை அதிகரித்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலையின்மை உதவித்தொகை மற்றும் இழப்பீடு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசுகளின் தலையில் ஏற்றி கைகழுவியுள்ளது.
பழைய சட்டத்தின்படி, இத்திட்டத்திற்கான மொத்த செலவினத்தில் சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேல் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி வந்தது. ஆனால், புதிய சட்டத்தில், 60 சதவிகிதம் நிதியையே ஒன்றிய அரசு ஒதுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 60 சதவிகித நிதிப்பங்கீட்டையும் மோடி அரசு ஆண்டுதோறும் முறையாக ஒதுக்குமா என்றால் அதுவும் கேள்விக்குறியே.
ஏற்கெனவே, மோடி அரசின் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு பாசிச நடவடிக்கைகளால் மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. கடன் சுமை அதிகரித்த போதிலும் மக்களின் அடித்தளத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக கவர்ச்சிவாதத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. மறுபுறம், தங்களுடைய கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளால் அரசுத்துறைகளில் கார்ப்பரேட்-காண்டிராக்ட்மயத்தை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இச்சூழலில் மாநில அரசுகள் இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மறுக்கவே செய்யும். இதனை அறிந்தே, இத்திட்டத்தை படிப்படியாக ஒழித்துக்கட்டுவதற்காக ஒன்றிய அரசின் நிதிப்பங்கீட்டை குறைத்து மாநில அரசுகளின் நிதிப்பங்கீட்டை மோடி அரசு அதிகரித்துள்ளது.
மேலும், இப்புதிய சட்டத்தில் ஒன்றிய அரசு பரிந்துரைக்கும் புறநிலை அளவுருக்களின் (objective parameters) அடிப்படையில், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் மாநில வாரியான நெறிமுறை ஒதுக்கீட்டை (State-wise normative allocation) ஒன்றிய அரசு தீர்மானிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சான்றாக, “பல பரிமாண வறுமை குறியீடு” புறநிலை அளவுருவாக நிர்ணயிக்கப்படும் பட்சத்தில், பா.ஜ.க. கும்பல் ஆளும் வடமாநிலங்களை விட வறுமைக் குறியீட்டில் முன்னேறியுள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும்.
அதாவது, ஜி.எஸ்.டி. வரிப் பகிர்வு, ரயில்வே நிதி ஒதுக்கீடு போன்ற திட்டங்களில் தென்னிந்திய மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கி வஞ்சிக்கும் நிலை இத்திட்டத்திற்கும் ஏற்படும்.
அதேபோல், புதிய சட்டமானது ஊரக வேலை வாய்ப்பு திட்டம் எந்தெந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறித்து ஒன்றிய அரசிற்கு வழங்குகிறது. அதாவது, ஒன்றிய அரசு அறிவிக்கும் பகுதிகளில் மட்டுமே இனி இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாநில அரசுகளின் பெயரளவிலான கூட்டாட்சி உரிமையை மோடி அரசு குழித்தோண்டி புதைத்திருக்கிறது.
மேலும், பழைய சட்டத்தின் படி, இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை கோரும் எந்தவொரு கிராமப்புற வயது வந்தவர்களுக்கும் 15 நாட்களுக்குள் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், புதிய சட்டத்தின்படி, ஒன்றிய அரசு தீர்மானிக்கும் பகுதிகளுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தாலும் அங்கு வேலை வழங்க இயலாது. எனவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும் என்ற உரிமை புதிய சட்டத்தில் பறிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேவைக்கேற்ப செயல்படுத்த வேண்டிய நூறு நாள் வேலைத் திட்டத்தை வரம்புக்குட்பட்ட திட்டமாக சுருக்கி, கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறது.
மேலும், புதிய சட்டத்தின்படி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட நிதியின் பயன்பாட்டில் ஏதேனும் புகார்கள் எழுந்தால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைப்பதற்கான அதிகாரமும் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மேற்குவங்க மாநிலத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி இத்திட்டத்திற்கான நிதியை மூன்று ஆண்டுகளாக நிறுத்திவைத்து பழிவாங்கி வருகிறது மோடி அரசு. இந்நிலையில், இச்சட்டமானது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதியை நிறுத்திவைத்து மிரட்டுவதற்கு மோடி அரசிற்கு சட்டப்பூர்வ வாய்ப்பை வழங்குகிறது.
அதுமட்டுமின்றி, புதிய சட்டமானது விவசாய வேலைகள் நடைபெறக்கூடிய பருவங்களில், 60 நாட்கள் வரையில் இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குவதை நிறுத்திவைக்க பரிந்துரைக்கிறது. இந்தியாவில் விவசாயப் பணிகள் பல்வேறு பருவங்களில் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. எனவே, இச்சட்டத்தின் கீழ் மாதக்கணக்கில் வேலை வழங்கப்படாமல் கிராமப்புற மக்கள் வஞ்சிக்கப்படுவர்.
இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரத்திற்காக ஆதிக்கச்சாதி மற்றும் பண்ணை வர்க்கங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும், விவசாயத்தில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அற்பக் கூலிக்கு மக்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். “நூறு நாள் வேலைத்திட்டத்தால் மக்கள் சோம்பேறியாக்கப்படுகின்றனர், விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை” என்று தமிழ்நாட்டில் சீமான் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததன் நோக்கம் இதுவே.
இவ்வாறு, புதிய சட்டத்தில் உள்ள சரத்துகள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் உள்ள மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்து, அதனை படிப்படியாக சட்டமுறைக்குட்பட்ட வகையிலேயே ஒழித்துக்கட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால், பா.ஜ.க. கும்பலானது புதிய சட்டத்தில் வேலை நாட்கள் 125-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதை மட்டும் ஊதிப்பெருக்கி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், 2018-19 நிதியாண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பெற்றவர்களில் 7.4 சதவிகிதம் பேருக்கு மட்டுமே 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, பொய் பிரச்சாரங்களின் மூலம் இச்சட்டத்தின் பாசிச நோக்கங்களை மறைக்க முயற்சிக்கிறது பா.ஜ.க. கும்பல்.
மேலும், தன்னுடைய 11 ஆண்டுகால பாசிச ஆட்சிக்காலத்திலும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ஒழிக்கும் வகையிலேயே மோடி அரசு செயல்பட்டு வந்துள்ளது. இத்திட்டத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுப்பதாகக் கூறிக்கொண்டு “கட்டாயமாக்கப்பட்ட ஆதார் அடிப்படையிலான கட்டண முறை” (ABPS) மற்றும் ஆன்லைனில் வருகையை நிர்வகிப்பதற்கான “தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு” (NMMS) ஆகிய டிஜிட்டல்மயமாக்க முறைகளை திணித்துள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தை அணுகுவதை கடினமாக்கியும், கிராமப்புற மக்களை இத்திட்டத்திலிருந்து வெளியேற்றியும் வருகிறது.
மேலும், ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு சொற்ப நிதியை மட்டுமே ஒதுக்கும் மோடி அரசு அதனையும் முறையாக வழங்காமல் இழுத்தடிக்கிறது. இதன் மூலம் மக்களை விரக்தியடையச் செய்து இத்திட்டத்திலிருந்து விரட்டியடிக்கிறது.
இந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டமானது கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிராமப்புற மக்களுக்கு பொருளாதார அரணாக அமைந்ததாக முதலாளித்துவப் பத்திரிகைகளே தெரிவிக்கின்றன. மேலும், இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாகவும் சுமார் 40 சதவிகிதம் பேர் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவுமே உள்ளனர்.
குறிப்பாக, 1990-களுக்குப் பிறகு இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளால் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட மக்களின், அரசுக் கட்டமைப்பின் மீதான கோபத்தை தணிப்பதற்காகவே நூறு நாள் வேலைத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. கிராமப்புற மக்களின் பட்டினிச் சாவுகளைத் தவிர்த்து அவர்கள் ஒருவேளை கஞ்சி குடிப்பதற்காகவாவது இத்திட்டம் உதவிகரமாக இருந்தது.
முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் உட்பட பலரும் இத்திட்டத்திற்கான வேலை நாட்களையும் ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். விவசாயிகளும் இக்கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற நிலைக்குழுவும் ஊதிய உயர்வு குறித்து பரிந்துரைத்துள்ளது. ஆனால், புதிய சட்டத்தில் ஒரு நாள் ஊதியமாக ரூ.240 என்ற அற்ப தொகையையே மோடி அரசு நிர்ணயித்துள்ளது.
நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் கண்ணியமான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், மோடி அரசானது அதற்கு நேர்மாறாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு அரசின் சேவை மற்றும் நலத்திட்டங்களை கைகழுவ வேண்டும் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையிலிருந்தே நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக்கட்டி வருகிறது.
![]()
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











