மதுரவாயல் சேட்டு அம்மா மறைந்தார்!

சேட்டு அம்மா தன்னுடைய மகன் இந்த அமைப்பில் போய் தன் வாழ்க்கையை இழந்து விட்டான் என்று எப்போதும் நினைத்தது கிடையாது. மாறாக எவன் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களுக்கு சொல்லுவார்.

துரவாயல் சேட்டு (எ) நெடுஞ்செழியன் அவர்களின் அம்மா இறந்து விட்டார் என்ற தகவலை மிகத் தாமதமாக இன்று மாலை 4 மணிக்கு தான் தெரிந்து கொண்டேன். வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று உடனே தோன்றியது. சுமார் ஐந்து மணிக்கு அம்மாவின் உடலை நேரில் சென்று பார்த்தேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே மனிதர்கள். உயர்ந்த கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் எல்லாம் பழைய நினைவைத் தூண்டின.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணிக்கு மிகவும் நெருக்கடியான காலகட்டம் 2010 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியது. மதுரவாயலில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி என்றாலே அதற்கு தாய் வீடு பிள்ளையார் கோவில் தெருதான்.

எண்: 15 பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல் இதுதான் சேட்டு வீட்டு முகவரி. அப்போது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சென்னை மாவட்ட இணைச் செயலாளராக சேட்டு இருந்தார்.

அமைப்பை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகவே ரவுடிகளும் போலீசும் சேர்ந்து நடத்திய அராஜகங்கள் கணக்கில் அடங்காதவை. அமைப்புத் தோழர்கள் எத்தனை பேர் வந்தாலும் சோறாக்கிக் கொண்டே இருப்பார்கள். ஒரு நாள் கூட தோழர்களை முகம் சுளிக்க வைத்ததில்லை அந்த குடும்பம்.

போலீஸ் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குள் வந்து சோதனையிடும். சேட்டு உடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று பேர். சேட்டு அம்மா மட்டுமல்ல சேட்டு மற்றும் அவர் குடும்பத்தினர் அத்தனை பேரும் போலீசின் அராஜக நடவடிக்கைகளை எதிர்த்து நின்றவர்கள் தான்.

சேட்டு அம்மா தன்னுடைய மகன் இந்த அமைப்பில் போய் தன் வாழ்க்கையை இழந்து விட்டான் என்று எப்போதும் நினைத்தது கிடையாது. மாறாக எவன் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களுக்கு சொல்லுவார்.

எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் தண்ணீர், சோறு போடவும், இளைப்பாறவும் இருந்த வீடு அது. அந்த வீட்டில் உள்ள யாவரும் நிம்மதியாக எப்போதும் உறங்க முடியாது.

ஒன்று போலீஸ் தொல்லை இருக்கும் அல்லது தோழர்களாகிய நாங்கள் இருப்போம்.

எப்போதும் கூட்டம் நடத்திக் கொண்டும் அனுபவம் பேசிக்கொண்டும் தோழர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் .

மொட்டை மாடியில் கூட்டம் நடக்காத நாளே கிடையாது. கீழே இருப்பவர்கள் எப்படி நிம்மதியாக தூங்க முடியும்? மக்களுக்காக போராடுபவர்களின் ‘தொல்லைகளை’ எவ்வளவு மகிழ்ச்சியுடன் தாங்கிக் கொண்டனர்‌ அந்த அம்மாவும் அவர் குடும்பத்தினரும்.

போலீசின் தொடர் தொல்லை காரணமாக பல ஆண்டுகள் அவர்கள் செய்து வந்த அப்பளத் தொழிலை கூட கைவிட்டார்கள். 2014 ஆம் ஆண்டு வரை அம்மாவும் அந்தக் குடும்பமும் பெற்ற இன்னல்கள் ஏராளம்.

தோழர்களைக் காத்து நின்றது அக்குடும்பம்.

அமைப்புப் பிளவுக்குப் பிறகு சேட்டும் நானும் எதிரெதிர் துருவத்திற்குச் சென்றாலும் அவரும் அவரது குடும்பத்தினரும் செய்த தியாகங்களை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் கனக்கும்.

இது போன்ற எத்தனையோ தாய்மார்கள் தங்கள் சொந்த சுகங்களை துறந்துதான் இந்த கட்சியை, தோழர்களைக் காப்பாற்றினார்கள்.

இப்படிப்பட்ட தாய்மார்களை உயிரோடு இருக்கும்பொழுதே பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்தாலும் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.

சேட்டு அம்மாவின் பெயரைக் கூட இப்போதுதான் நான் அறிந்தேன். மதுரவாயல் சேட்டு அம்மா, சாரதி அம்மா, நட்ராஜ் அம்மா, சந்தோஷ் நகர் சுவன் அம்மா, அசோக் அம்மா, சைதாப்பேட்டை பிரகாஷ் அம்மா இப்படி எத்தனையோ அம்மாக்கள் தோழர்களை தங்கள் பிள்ளைகளாக வளர்த்தார்கள். அவர்கள் எப்போதும் என்னிடம் எதுக்கு இந்த அமைப்பு வேலை என்று கேட்டதே இல்லை. அவர்களின் வாழ்வும் அர்ப்பணிப்பும் நம்மை மக்களுக்காக வாழ வைக்கத்தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.


முகநூலில்:
தோழர் மருது,
மாநிலச் செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க