அமெரிக்க ஐக்கிய அஞ்சல் சேவை என்பது 250 ஆண்டு காலமாக அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற மிகப்பெரிய அதேசமயம் மக்களுக்கான மிகவும் முக்கியமானதொரு சேவைத் துறையாகும். இது 1970 முதல் தன்னதிகாரத்துடன் தனித்தியங்கும் (Autonomous) அரசுத்துறையாகச் செயல்பட்டு வருகிறது.
இவ்வளவு பாரம்பரியம் கொண்ட அரசின் சேவைத் துறையை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்திட டிரம்ப் அரசு முடிவு செய்திருக்கிறது. அஞ்சல் சேவைத்துறை தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதாக அதற்குக் காரணம் கூறுகிறது. தற்போது அமெரிக்க அஞ்சல் துறையில் 6.4 லட்சம் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் உடனடியாக 31,000 கீழ் நிலைப் பணிகளை இரத்து செய்ய முடிவு செய்திருக்கிறது மக்கள் விரோத டிரம்ப் அரசு.
அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் 5.1 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் அஞ்சல் சேவைக்கு அமெரிக்க அரசின் அஞ்சல் சேவையை மட்டுமே சார்ந்திருக்கின்றனர். தனியார் கூரியர் சேவைகள், அமேசான், ஃபெட் எக்ஸ் (Fed X), யு.எஸ்.பி ஆகியவை இப்பொழுது புற புறநகர்ப் பகுதிகளுக்கு தங்களது சேவைகளுக்காக அரசின் அஞ்சல் துறையையே பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனங்கள் அஞ்சல் துறையில் அரசின் சேவைகளைக் குறைக்கக் கோரிவருகின்றன. சில புறநகர் பகுதிகளுக்கு பார்சல்கள் மற்றும் கடிதங்கள் அனுப்புவது போன்ற சில சேவைகளை உடனேயே தனியாரிடம் ஒப்படைத்து (Out Source) விடலாம் என்று ஆறு கார்ப்பரேட் முதலாளிகள் கோரிவருகிறார்கள் என்று வாஷிங்டன் போஸ்ட் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
தனியார்மயம் என்று ஆகிவிட்டால் நாடு தழுவிய அஞ்சல் சேவை என்பது முடக்கப்படும். புறநகர் பகுதி மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவர். புறநகர்ப் பகுதியில் அமெரிக்காவில் ஒரு வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்குமிடையில் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும் என்பது மிகவும் சாதாரணமாகும். எல்லாம் தனியார் சேவை என்றானால் இது போன்ற இடங்களுக்குச் சேவை கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தி விடுவர் அல்லது சேவையே கிடைக்காமல் செய்துவிடுவர்.
அஞ்சல் சேவை மட்டுமல்ல மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு, சமூகப் பாதுகாப்பு, மற்றும் பல சமூக நலத் திட்டங்கள் எல்லாமும் இப்போது தனியார் மயமாக்கப்படும் ஆபத்தில் இருக்கின்றன. அமெரிக்காவில் கோடிக்கணக்கான மக்கள் அரசின் சமூக நலத் திட்டங்களைச் சார்ந்து இருக்கின்றனர் என்பது உலகறிந்த உண்மையாகும். ஆனால் டிரம்ப் அரசு இவை அனைத்தையும் வெட்டிச் செலவு என்று பார்க்கிறது; அனைத்தையும் ஒழித்துக்கட்டிவிட எத்தனிக்கிறது.
மேலும் டிரம்ப் அரசாங்கம் இப்பொழுது ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறையை வணிகத்துறையின் (Commerce) கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறது. இந்த தேவைக்காகவே ஹோவர்ட் லுத்னிக் என்பவரை வணிகத்துறை செயலாளராக புதிதாக நியமித்துள்ளார் டிரம்ப். அதற்கும் தனியார்மயமாக்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எனப்படும் தலைமை அதிகாரியான லூயிஸ் டிஜாய் கடந்த பிப்ரவரி 17 அன்று ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: மேற்குவங்கம்: பெண் தொழிலாளர்களின் முன்னுதாரணமிக்க போராட்டம்
இப்போது இருந்து வருகின்ற தொழிற்சங்கம் (NALC – National Association of Letter Carriers) அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உருவாக்கிய தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைத் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொழிற்சங்கம் ஏற்றுக் கொண்ட பண வீக்கத்திற்கும் கீழான அதாவது 1.3 சதவீதம் ஊதிய உயர்வு என்பதைத் தொழிலாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். ஆனால் தொழிற்சங்கமோ அரசுடன் சேர்ந்து கொண்டு அதையே ஆதரித்து நிற்கிறது. தொழிலாளர்களை பெரும் எண்ணிக்கையில் வேலையிலிருந்து வெளியேற்றுவது பற்றியோ பணிப் பாதுகாப்பு பற்றியோ எதுவுமே பேசுவதில்லை.
எனவே “ஐக்கிய அமெரிக்க அஞ்சல் சேவையை (USPS – United States Postal Service) தனியார்மயப்படுத்தும் டிரம்பின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவோம்!”, “சட்டவிரோதமான NALC ஒப்பந்தத்தை ரத்து செய்!” என்கிற முழக்கங்களை முன்வைத்து இப்போது ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறை தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகிய அனைவருக்குமாக “அஞ்சல் துறை ஊழியர்கள் கமிட்டி” என்கிற சங்கம் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இருக்கின்ற சங்கங்கள் அதிகார வர்க்க கண்ணோட்டம் கொண்டதாக மாறிப்போன நிலையில் ஊழியர்கள் மத்தியில் அவை அம்பலப்பட்டு வருகின்றன.
எலான் மஸ்க் தலைமையில் டிரம்ப் புதிதாக உருவாக்கி இருக்கும் அரசாங்க திறன் மேம்பாட்டுத் துறை (Department of Government Efficiency) தொடர்ந்து அரசின் செலவுகளைக் குறைப்பது, சிக்கனப்படுத்துவது, திறனை மேம்படுத்துவதைக் குறித்து மட்டுமே பேசுகிறது. அது தொழிலாளர்களை வஞ்சிக்கிறது.
புதிய அஞ்சல் துறை ஊழியர்கள் கமிட்டி கடந்த மாதத்தில் அஞ்சல் சேவை ஊழியர்களின் மாபெரும் பேரணியை அமெரிக்காவெங்கும் நாடு தழுவிய முறையில் நடத்தியது. அரிசோனா, நியூ மெக்சிகோ மற்றும் டெக்ஸாஸிலிருந்து இண்டியானா; மிசௌரி மற்றும் ஃபுளோரிடாவில் இருந்து நியூயார்க்; ஃபிலடெல்பியா மற்றும் வாஷிங்டன் என்று எல்லா நகரங்களிலும் அஞ்சல் துறை ஊழியர்களின் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன.
படிக்க: சாம்சங் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஐக்கிய அமெரிக்க அஞ்சல் சேவை ஊழியர்களின் இந்த போராட்டம் ஊழியர்களின் வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில் உருவாகி வரும் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கும் எதிரான போராட்டமாகும்.
டிரம்பின் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது. நிதி ஆதிக்க கும்பல்கள் டிரம்பின் தலைமையில் மன்னர் ஆட்சியைப் போன்றதொரு போலீசு ராஜ்ஜியத்தைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளனர். மக்கள் உரிமைகள் முற்றாக மறுக்கப்படும் ஒரு அமெரிக்காவாக மாற்றிவிடத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார்கள்.
பிரிட்டனில் இதே போன்ற அஞ்சல் துறை தனியார்மயம் 2013 இல் நடைபெற்றது. விளைவாக அஞ்சல் சேவையே முற்றிலும் முடங்கி விட்டது. 20,000 வேலைகள் காலி செய்யப்பட்டன. ஊழியர்களுக்கு ஊதியம் தேங்கியது. அஞ்சல் துறையில் தொடக்க நிலை ஊதியம் என்பது அரசின் குறைந்தபட்ச கூலியை விட சற்றே மேலாக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையிலிருந்தே நீக்கிவிட்டது. அங்கு தொழிற்சங்கம் நடத்திய வாக்கெடுப்பில் 96 சதவிகித ஊழியர்கள் தனியார்மயத்தை எதிர்த்து வாக்களித்தனர். ஆனாலும் அரசாங்கம் இது வெறும் கருத்தறிதல் மட்டுமே என்று கூறிவிட்டது.
அங்கு தொழிற்சங்கமே முதலாளிகளுடன் ரகசிய கூட்டில் இருப்பதாகத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். தொழிற்சங்கம் ஊழியர்களை விற்று விட்டது. எதைப் பற்றியும் ஊழியர்களுக்கு எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை. சரியாகச் சொல்வதென்றால் தொழிற்சங்கம் காட்டிக் கொடுத்து விட்டது என்று குற்றம் சுமத்துகின்றனர் ஊழியர்கள். அன்று எதிர்த்துப் போராடாமல் விட்டு விட்டோம் தவறு செய்து விட்டோம், சங்கத்தை நம்பி ஏமாந்து விட்டோம் என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள் பிரிட்டனின் அஞ்சல் சேவை ஊழியர்கள்.
அதேபோலவே அமெரிக்காவிலும் தொழிலாளர் ஒற்றுமை தான் தொழிலாளர் வாழ்வைக் காப்பாற்றும் என்பதை அமெரிக்கத் தொழிலாளர்கள் வெகுவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆண்டுகளில் நடந்த பல்வேறு தொழிற்சங்க போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அமெரிக்காவில் கிழக்குக் கடற்கரை துறைமுகத் தொழிலாளர்கள் கடந்த ஆண்டில் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தின் போது ஜோ பைடனின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார்கள் என்றால் மிகையில்லை. தங்களின் வர்க்க ஒற்றுமை உணர்வினால் ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த அன்று இரவு 12 மணிக்கு வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார்கள். மூன்றே நாட்களில் தாங்கள் கேட்ட ஊதிய உயர்வை ஒப்புக்கொள்ள வைத்தனர்.
அதேபோன்றுதான் போயிங் விமான தயாரிப்புத் தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை முன் வைத்து நடத்திய மாபெரும் போராட்டத்தில் 40 நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து நிர்வாகத்தை நிர்ப்பந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வைத்தார்கள். எனினும் இன்னும் அவை பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் என்ற அளவிலேயே இருக்கிறது. ஆயினும் அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது என்பது கவனத்திற்குரியதாகும். அந்த வரிசையில் தற்போது தொடங்கியுள்ளது அரசின் தனியார்மயக் கொள்கைக்கு எதிரான ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறை ஊழியர்களின் போராட்டம்.
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram