பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் வன்மம் மிகுந்த இன அழிப்பு, வரலாறு காணாததாகும்.
காசாவில், பள்ளி செல்லும் குழந்தைகளையும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளையும் பசி கொடுமையால் உணவுக்காக காத்திருக்கும் மக்களையும் இஸ்ரேல் இராணுவம் விமானத்தின் மூலம் குண்டு வீசிக் கொல்லும் கொடுமை உலக நாடுகளின் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
மறுபுறம், பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் (West bank) ஹமாஸ் அமைப்பின் அதிகாரத்தை ஒழித்துவிட்டு காசாவை மொத்தமாக இஸ்ரேலுடன் இணைத்துக்கொண்டு பாலஸ்தீனம் என்ற நாட்டையே இல்லாமல் செய்து அகண்ட இஸ்ரேலை (Greater Israel) உருவாக்கும் தனது போர்த்தந்திர திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல் எல்லா அடாவடித்தனங்களையும் செய்து வருகிறது.
இவ்வளவு அநீதியான கொடூரமான ஒரு இனப்படுகொலையை உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் வரலாறு காணாததேயாகும்.
காசாவில் மட்டுமல்லாது, ஈரான் மீது தாக்குதல், ஹிஸ்புல்லாவை காரணம்காட்டி லெபனான் மீது தாக்குதல், ஹவுத்தி இயக்கத்தினரை காரணமாகக் காட்டி ஏமன் நாட்டின் மீது தாக்குதல் என்று பாரசீக வளைகுடா பிராந்தியத்தையே இஸ்ரேல் போர் சூழலில் அழுத்தி வைத்திருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 9 அன்று கத்தாரின் தலைநகர் தோகாவின் மீது இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் தாக்குதலுக்கு உள்ளான அந்த கட்டடத்தில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தலைவர்களுடன் கத்தார் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அதாவது, 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிப்பது; இஸ்ரேலின் பிணைக் கைதிகள் அனைவரையும் (இறந்தவர் உடல் உள்ளிட்டு) விடுதலை செய்வது; ஈடாக பாலஸ்தீன கைதிகளைப் பரிமாறிக் கொள்வது; அதனைத் தொடர்ந்து நிரந்தர சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடர்வது என்று அமெரிக்கா அதிபர் பாசிஸ்ட் டிரம்ப் முன்வைத்த போர் நிறுத்தம் மற்றும் சமாதானத்துக்கான திட்டத்தின் மீது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை ஏற்கும்படி கத்தார் அரசு, ஹமாஸ் தலைவர்களை நிர்ப்பந்தித்து வந்தது.
படிக்க: இஸ்ரேலிய இனவெறி பாசிஸ்டுக்கு சிவப்பு கம்பளம் விரித்த மோடி அரசு!
இப்பேச்சுவார்த்தையை விரும்பாத இஸ்ரேல் அரசு, தனது எஜமானரே முன்வைத்த திட்டம் என்ற போதும் அதனை ஏற்க மறுத்து, பேச்சுவார்த்தை நடந்துவந்த கட்டடத்தின் மீது 15 போர் விமானங்கள் மற்றும் எண்ணற்ற டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. ஐந்து ஹமாஸ் தலைவர்கள், ஒரு கத்தார் நாட்டு அதிகாரி என ஆறு பேரை கொன்றொழித்தது. இஸ்ரேலின் தாக்குதல் இலக்காக இருந்த ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களான கலீல் ஹையா, ஜாகர் ஜபாரின் உள்ளிட்டோர் நல்வாய்ப்பாக உயிர்த் தப்பினர்.
இத்தாக்குதல் சர்வதேச விதிகள் அனைத்தையும் மீறிய ரவுடித்தனமான செயலாகும். இது பற்றி கருத்து தெரிவித்த இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, “கத்தார் மட்டுமல்ல பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் எல்லா நாடுகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களை (ஹமாஸ்) கைது செய்யுங்கள் அல்லது வெளியேற்றி விடுங்கள். இல்லை என்றால் அதை நாங்கள் செய்வோம்” என்று பேட்டை ரவுடியை போல எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கத்தார் அரசு கூறுகையில், “இத்தாக்குதல் இழிவானதும் கோழைத்தனமானதும் ஆகும். மேலும், கத்தார் நாட்டின் இறையாண்மையை மதிக்காத அராஜகமானதாகும்” என்று சாடியுள்ளது.
கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரகுமான் பின் ஜெசிம் அல்தானி, “இத்தாக்குதல் காசாவில் அமைதிக்கான முயற்சிகளை அழிக்கும் வன்மம் கொண்டது. இதன் மூலம் இஸ்ரேல் தனது நாட்டின் பிணைக் கைதிகளின் விதியையும் முடித்து வைத்து விட்டது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் கத்தார் இராணுவம் அதன் தலைநகரை பாதுகாக்கத் தவறிவிட்டது. இத்தாக்குதல் திட்டமும் அதன் விளைவுகளும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்குமே நன்கு தெரியும். இதில் நாங்கள் மறைத்து பேச எதுவும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.
மேலும், “இதற்கான எங்களின் எதிர் நடவடிக்கை என்பது இப்பிராந்தியத்தின் கூட்டு முடிவாகவே இருக்கும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன” என்று சி.என்.என்-க்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
படிக்க: காசாவில் பட்டினிப் படுகொலை: போரின் விளைவல்ல, மையம்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது பற்றி கூறுகையில், “எல்லாமும் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன. எனவே, நான் இதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை. ஆனால், இது உகந்த நிலைமை அல்ல. நிலைமைகள் மோசமாக இருந்த போதிலும் இஸ்ரேலின் பிணைக் கைதிகள் மீட்கப்பட வேண்டும். கடந்த ஒவ்வொரு செயல் குறித்தும் நான் பெரிதும் கவலை கொண்டிருக்கிறேன்” என்று தனக்கு இத்தாக்குதல் குறித்து எதுவுமே தெரியாதது போல் பாசாங்கு செய்துள்ளார். ஆனால், கத்தார் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்பே அதுகுறித்து அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
உண்மையில், பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் கத்தார் நாட்டுடனான அமெரிக்க உறவு அவ்வளவு நெருக்கமானது. அப்பிராந்தியத்திலேயே மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத் தளம் கத்தாரில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் பாதுகாப்புக்கு அமெரிக்கா பொறுப்பேற்று இருக்கிறது. ஆனாலும், கத்தாரின் தலைநகர் மீதான தாக்குதலைக் கூட தடுத்து நிறுத்த முயலவில்லை.
இதைப்பற்றி செய்தி வெளியிட்ட ஈரானின் அரசு தொலைக்காட்சி, “பிராந்தியத்திலேயே மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளம் அமைக்கப்பட்டு இருந்த போதும் தலைநகர் தோகாவின் மீது நடந்த தாக்குதலின் போது அந்த விமானப்படை ஒரே ஒரு குண்டை கூட சுடவில்லை” என்று அமெரிக்காவின் கூட்டுக் களவாணித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும், இத்தாக்குதலானது ஹமாசுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தையின் போலித்தன்மையை அம்பலப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
கத்தார் மீதான இஸ்ரேலின் இத்தாக்குதலானது, சமாதானத்தைக் கிடப்பில் போடவும், போரை எப்போதும் நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்கவும், நெதன்யாகுவை இஸ்ரேலிய பிரதமராக நீடிக்க செய்யவுமான திட்டமிட்ட நடவடிக்கையாகும். மேலும், அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்துக்கான போர்த்தந்திரத்தின் ஒரு பகுதியாக பாரசீக வளைகுடாவை போர் பதற்றத்தில் வைத்திருப்பதற்கான நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க வேண்டும்.
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram