நெல்லை சிறப்பு வரிவசூல் முகாம்: வரிகள் மக்களுக்கான திட்டங்களாக மாறுவதில்லை!

நெல்லை மாநகரம் 'ஸ்மார்ட் சிட்டி' ஆனபின் சொத்துவரி உள்ளிட்ட வரிகள் கூடியுள்ளது. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.

நெல்லை மாநகராட்சியில் சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு வரி வசூல் முகாமில் மேலப்பாளையம் மண்டலத்தில் மட்டும் சொத்துவரி 24.63 லட்சம் ரூபாயும், இதர வரியினங்கள் 13.68 லட்சம் ரூபாயும் சேர்த்து மொத்தமாக ரூபாய் 38.31 லட்சம் வசூலிக்கப்பட்டது. மற்ற மூன்று மண்டலங்களுக்குமான (தச்சை, டவுண், பாளை) தொகை ரூபாய் 88.15 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் செலுத்தப்படும் வரியானது, திட்டங்களாக மக்களுக்கு மீண்டும் சென்றடைகிறதா  என்றால் அது இல்லை.

மேலப்பாளையம் சந்தைப்பகுதி தெருக்கள், அண்ணா வீதி போன்ற தெருக்கள் குண்டும், குழியுமான சாலைகளாக உள்ளது. சிறு மழை விழுந்தாலே ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் நீந்தி கரை சேரும் அளவிற்கு இது மாறும் நிலைதான் உள்ளது‌.

முறையான சாக்கடை வசதி இல்லாமல், பாதாளச் சாக்கடையோடு இணைக்கப்படாமல் பல இடங்கள் திறந்தவெளி சாக்கடையாகக் காட்சி அளிக்கிறது. இனி மழைக்காலம் என்பதால் சாக்கடையானது நோய்களை உற்பத்தி செய்யும் மையமாக இருக்கும்.

அரசு மருத்துவமனை இயங்கினாலும் அது பெயரளவிற்கே இருக்கிறது.

காலை நேரத்தில் வீ.எஸ்.டி பள்ளிவாசல் நான்கு வழி சந்திப்பானது பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்பவர்கள் ஒரே நேரத்தில் சந்திக்கும் மையமாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஆகிறது‌. பல நேரங்களில் போக்குவரத்தைச் சரி செய்ய போக்குவரத்து காவலர் இல்லாததால் வாகன ஓட்டிகள் தங்களுக்குள் சண்டை செய்து கொள்ளும் நிலை வருகிறது. அருகிலிருக்கும் ஆட்டோ ஸ்டேன்ட் தோழர்கள் போக்குவரத்து நெருக்கடியைச் சரி செய்கிறார்கள்.

மேலப்பாளையம் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி. தன்னார்வலர்கள், கட்சிகள் தங்களது சொந்த முயற்சியால் மருத்துவ முகாம்களை ஏற்படுத்தி நோயிலிருந்து மக்களை காத்து வருகிறார்கள். அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.

மேலும் பீடி சுற்றி குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்கள் அதிகம். ஆனால் சரியான கூலி, போனஸ் ஆகியவை கிடைப்பதில்லை. இதைப் பற்றியும் மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த அக்கறையும் இல்லை. போராடினாலும் ”அது பீடிக் கம்பெனியோடு தொடர்புடையது; நமக்கு என்ன வந்தது என்று தங்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என அரசு பாராமுகமாக இருக்கிறது. ஆனால் வரிவசூல் மட்டும் கேட்கிறது.

நெல்லை மாநகரம் ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆனபின் சொத்துவரி உள்ளிட்ட வரிகள் கூடியுள்ளது. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.

யாரிடம் கேட்கிறாய் வரி, எங்களோடு வயலுக்கு வந்தாயா…. என்கிற கட்டபொம்மன் திரைப்பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

அரசு என்பது மக்களை கசக்கி பிழியும் இயந்திரமாக இருக்கிறது. மக்கள் தங்களது சாரத்தை எல்லாம் அதில் இழந்துவிட்டு சக்கையாக கிடக்கும் அவலம்தான் நீடிக்கிறது. 12 ருபாய் காசு கொடுத்து குடிக்கும் டீ நன்றாக இல்லை என்றால் கடைக்காரரிடம் கேட்கிறோம் அல்லது அடுத்த நாள் வேறு கடைக்கு போகிறோம். ஆனால் உழைத்து கட்டும் வரிக்கு உண்டான பலன் கிடைக்கவில்லை என்றால் சகித்துக் கொள்கிறோம்.

நாம் கட்டிய வரிக்கு நமக்கு திருப்பி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதை கேட்பது நமது ஜனநாயக உரிமை. நமக்கான ஜனநாயகம் வேண்டும் என்று நாம் ஒன்றிணையும்போதுதான் நமக்கான உரிமைகள் கிடைக்கும்.


பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க