எஸ்.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள்: கார்ப்பரேட்மயமாகிவரும் அரசுக் கட்டமைப்பு

தேர்வில் நேர்மையான அணுகுமுறை வேண்டுமென்று கருதுபவர்கள் தேர்தலில் நேர்மையான முறை இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வில் மட்டுமல்ல, தேர்தலிலும் நேர்மையான முறையில்லை.

டெல்லி ஜந்தர் மந்தரில் எஸ்.எஸ்.சி. தலைமையகத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டம்

எஸ்.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள்:
கார்ப்பரேட்மயமாகிவரும் அரசுக் கட்டமைப்பு;
தேவை, இன்னொரு சுதந்திரப் போராட்டம்!

ன்றிய அரசின் அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியாளர் தேர்வாணையம் (Staff Seleciton Commission – SSC) ஜூலை 24 முதல் ஆகஸ்டு 1-ஆம் தேதி வரை நடத்திய 13-ஆம் கட்டத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியுள்ளன. இதனையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தின் தலைமையகத்தை தேர்வர்களும் ஆசிரியர்களும் முற்றுகையிட்டு ஆகஸ்டு 2-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்குப் பதிலாக, ஆகஸ்டு 3-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசைக் கொண்டு தடியடி நடத்தியது ஒன்றிய மோடி அரசு.

இதனையடுத்து இத்தேர்வை நடத்திய “எடுகுயூட்டி” (Eduquity) எனும் தனியார் நிறுவனத்துடனான (Exam Conducting Agency) ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், நேர்மையான தேர்வு முறை வேண்டும் போன்ற முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து, பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகஸ்டு 6-ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் “டெல்லி சலோ” போராட்டத்தை நடத்தினர்.

தேசிய ஊடகங்களில் ஒருசிலவற்றைத் தவிர பெரும்பாலான ஊடகங்கள் இப்போராட்டத்தை மூடிமறைத்து பாசிச மோடி அரசுக்கு தமது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டது தனிக்கதையாகும்.

தற்போது மட்டுமல்ல, இந்த ஆண்டு ஏப்ரலில் கூட மேற்குவங்கத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வில் குளறுபடிகள் – முறைகேடுகள் நடந்ததையொட்டி, தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்த பின்னர், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மட்டுமின்றி, ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் நீட் (NEET), க்யூட் (CUET) உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னர், தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பது வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

தேர்வு மையத்தை பல நூறு கி.மீட்டர் தொலைவில் அமைப்பது; தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் இருப்பது; தேர்வு மையத்திற்கு வந்த பின்னர், தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பது; வினாத் தாள்கள் முறையற்று இருப்பது, வினாத்தாள்கள் கசிவது, பாடத்திற்கு வெளியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவது… போன்ற பல குளறுபடிகள், முறைகேடுகள் இத்தேர்வுகளில் அரங்கேறுகின்றன. இவ்வாறு தேர்வு முறைகேடுகள் அதிகரிப்பதன் பொருள் என்ன?

ஒன்றிய அரசின் முக்கியமான துறைகளுக்கு பணியாளர்களை உருவாக்கும் இத்தேர்வுகளில் முறைகேடுகள், குளறுபடிகள் நடப்பதை எப்படி புரிந்துகொள்வது?

பொதுவில் நுழைவுத் தேர்வுகளாக இருக்கட்டும் அல்லது மேற்கண்ட பணியாளர் தேர்வுகளாக இருக்கட்டும். இவை அந்தத் துறைக்கு பொருத்தமானவர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வுகள் என்று குறிப்பிடுகின்றன. சான்றாக, “நீட்” நுழைவுத் தேர்வானது, நாடு தழுவிய அளவில், பொதுவான தேர்வு முறையைப் பின்பற்றி மருத்துவம் படிப்பதற்குத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு எனக் குறிப்பிடுகிறது.

ஆனால், ஆண்டுந்தோறும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது அதனுடன் அத்தேர்வில் நடந்த முறைகேடுகளும் சேர்ந்தே அம்பலமாகின்றன. கடந்த ஆண்டு நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதுவும், பா.ஜ.க. ஆளும் ஹரியானா மாநிலத்தில் ஒரே பள்ளியில் தேர்வெழுதிய ஆறு பேர் முதலிடம் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு மாஃபியா கும்பல் ஒன்று நீட் தேர்வு வினாத்தாளை இலட்சக்கணக்கில் விற்று கொள்ளையடித்த சம்பவம் அம்பலமானது.

இவ்வாறு மோசடி செய்து வெற்றிபெறுபவர்கள் எப்படி தகுதியான மாணவர்களாக இருக்க முடியும். அதேபோல், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களால்தான் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்த முடியும் என்று கற்பிக்கப்படும் நியாயவாதமும் இங்கு அடிபட்டுவிட்டது. உண்மையில், இவ்வாறான நுழைவுத் தேர்வுகள் என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கிறதே ஒழிய, திறைமையான மாணவர்களை தேர்வு செய்வதற்கல்ல.

உண்மையில், மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கு நுழைவுத் தேர்வே தேவையில்லை. அவர்களின் பள்ளிப் படிப்பே அதற்கு போதுமானது. அது போலவே, ஒன்றிய பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கும் மையப்படுத்தப்பட்ட ஒன்றிய தேர்வு முறைகள் தேவையில்லை. எனில், இத்தேர்வுகளை கார்ப்பரேட் நிறுவனங்களைக் கொண்டு நடத்துவதன் நோக்கம் என்ன?

கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகள் அனைத்தும் வணிகமாக்கப்பட்டு கார்ப்பரேட் ஆதிக்கம் கோலோச்சும் சூழலில், அரசுக் கட்டமைப்பே கார்ப்பரேட்மயமாகி வரும் சூழலில், வேலையின்மை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துவரும் சூழலில், இத்தேர்வுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக நடத்துவதற்கு அரசு முன்வைக்கும் காரணம் உண்மையானது அல்ல. அது மக்களிடையே பொய்யான மாயையை ஏற்படுத்துவதற்கானதாகும்.

சமூகத்தின் பொது நிலையில் விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக விவசாயம் செய்யப்படும் நிலப்பரப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. விவசாயத்தில் ஈடுபடும் மக்களின் சராசரி வயதானது 50-60 என்ற நிலைக்குச் சென்றுள்ளது. பழங்குடி மக்கள், சிறு தொழில் செய்வோர் ஆகியோரின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. இவை அனைத்திற்கும் அடிப்படை, கார்ப்பரேட் ஆதிக்கம்தான்.

உற்பத்தித் துறையில் ஆதிக்கம் புரிந்துவரும் இந்த கார்ப்பரேட்மயமாக்கமானது, டிஜிட்டல்மயமாக்கமாக மேலும் முன்னேறி வருகிறது. இதன் விளைவாக, இத்துறைகளில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மனித உழைப்பின் அளவும் குறைந்து வருகிறது. இதனால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள் அன்றாடம் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர்; பணியில் இருப்பவர்களின் வேலை நிலைமையானது மிகவும் கொடுமையானதாக, அடக்குமுறைகள் நிறைந்ததாக மாறிவருகிறது.

இந்த கார்ப்பரேட்மயமாக்கத்தை, டிஜிட்டல்மயமாக்கத்தை அனைத்துத் துறைகளிலும் ஊக்குவித்து வளர்ப்பதைத்தான் இன்றைய அரசு கொள்கையாகக் கொண்டுள்ளது. அதன் அங்கமாகத்தான் அரசுக் கட்டமைப்பும் கார்ப்பரேட் ஆதிக்கம், டிஜிட்டல்மயமாக்கத்தை எதிர்கொண்டிருப்பதாகும்.

இதன் அடிப்படையிலேயே, அரசுத் துறைகளில் ஊழியர்களுக்கு உரிமைகளற்ற நிலைமை, ஒப்பந்தப் பணிமுறை திணிப்பு, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் செய்யப்படும் அறிவிக்கப்படாத ஆட்குறைப்பு ஆகியவை திட்டமிட்டு நடந்தேறி வருகின்றன. இந்த டிஜிட்டல்மயமாக்கத்தின் மூலம் “அலுவலகம் இல்லா அரசு நிர்வாகம் – ஊழியர்கள் இல்லாத பணி முறை” என்ற நிலையை ஒன்றிய-மாநில அரசாங்கங்கள் சத்தமின்றி உருவாக்கி வருகின்றன.

ஆனால், அதனை மறைத்து மக்களை ஏமாற்றுவதற்காக தேர்வுகளை நடத்தி வருகின்றன. இதனால்தான் மிகச் சொற்பமான அரசுப் பணியிடங்களுக்கான போட்டி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, மிகச் சொற்பமான இடங்கள், மிக அதிகமான போட்டியாளர்கள் என்ற இந்த அராஜக நிலைமை – நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

மேலும், கல்வி-வேலைவாய்ப்பு வழங்குவதிலிருந்து அரசு விலகிக்கொள்வதைப் போல அதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பில் இருந்தும் விலகிக்கொண்டு அதில் கார்ப்பரேட்டுகளை உள்நுழைக்கிறது. இதனால், நுழைவுத் தேர்வு என்பதே இந்தியாவில் மிகப்பெரிய சந்தையாக மாற்றப்பட்டு அதில் மோசடி-முறைகேடுகள், ஊழல், கொள்ளை உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஆகவே, பணியாளர் தேர்வுகளின் நோக்கமும் முதன்மையான இலக்கும் வேலை தருவதாக இல்லை; நீட் போன்ற தேர்வுகளின் முதன்மையான நோக்கம், மருத்துவக் கல்விக்கான மாணவர்களைத் தேர்வு செய்வதாக இல்லை. இவற்றை சந்தைமயப்படுத்துவதற்கு ஏதுவாக இந்தத் தேர்வை நடத்தும் பணிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழலில் ஈடுபடுகின்றன. தற்போது, பணியாளர் தேர்வுகளை நடத்தும் எடுகுயிட்டி நிறுவனம் வியாபம் போன்றதொரு ஊழலுடன் தொடர்புடையது என்பது இதற்குத் தக்கச் சான்றாகும்.

000

“திறமைக்குரிய வேலைவாய்ப்பு” என்ற முழக்கமானது முதலாளித்துவ ஜனநாயக உரிமையாகும். உரிமைக்கான போராட்டங்களை நடத்தி விழிப்புணர்வு பெற்றுள்ள நாடுகளில் இந்த உரிமையானது ஓரளவிற்கு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பார்ப்பனிய சாதி ஆதிக்கத்தினாலும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தினாலும் உருவாக்கப்பட்டுள்ள இந்திய அரசும் பல ஆண்டுகளாக மாறிமாறி நிலவிய ஆட்சிகளும், நீண்டகாலமாகவே, “திறமைக்குரிய வேலைவாய்ப்பு” என்ற ஜனநாயக முகமூடியை அணிந்து மக்களை ஏமாற்றியே வந்தன. 2014-இல் இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்புவரை, இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொள்கை ரீதியாக இந்த முகமூடியைத் தக்கவைப்பதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால், 2014-இல் இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், இந்தக் கொள்கையானது கொஞ்சம் கொஞ்சமாக மறைமுகமாக கைகழுவப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான், ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் பணியாளர் தேர்வுகள், மருத்துவம் உள்ளிட்ட கல்விகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகரித்துவருவதும், முறைகேடுகள் மலிந்திருப்பதும் ஆகும்.

“திறமைக்குரிய வேலைவாய்ப்பு” கிடைக்காது என்று இந்த இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் ஒருபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. வேலைவாய்ப்பு இருப்பதைப் போன்ற தோற்றத்தை நிலைநிறுத்திக் கொண்டே, உழைக்கும் மக்களை ஒடுக்குவதுதான் அதன் இலக்காகும்.

அதேபோல், இசுலாமியர்கள் அதிகமான குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர், அவர்களால்தான் வேலையின்மை உருவாகிறது, அவர்களால்தான் இந்துக்களின் தொழில்களும் வியாபாரமும் நசிகிறது என்ற இந்துமதவெறிப் பிரச்சாரத்தை பாசிச கும்பல் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.

ஆனால், என்னதான் பாசிஸ்டுகளின் இந்துமதவெறிக்கு பலியாகியிருந்தாலும், தங்களது வாழ்வாதாரம் என வரும்போது, திறமைக்கேற்ற வேலை, உயர்ந்த ஊதியம் வேண்டுமென்ற உணர்வானது, பெரும்பான்மையான படித்த இளைஞர்களிடம் ஆதிக்கம் செலுத்தவே செய்கிறது.

திறமைக்கேற்ற வேலைவாய்ப்பும் மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசுக் கட்டமைப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. அரசுக் கட்டமைப்பும் சமூகக் கட்டமைப்பும் இந்துராஷ்டிர – கார்ப்பரேட் அடிமைத்தனத்தை நோக்கி வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், திறமைக்கேற்ற வேலைவாய்ப்பையும் மக்களுக்கு பொறுப்பு கூறும் ஜனநாயகக் கட்டமைப்பையும் எதிர்பார்க்க முடியாது; இந்த அரசுக் கட்டமைப்பை சீர்த்திருத்தி, அவற்றை நிலைநாட்டிவிடவும் முடியாது.

தேர்வில் நேர்மையான அணுகுமுறை வேண்டுமென்று கருதுபவர்கள் தேர்தலில் நேர்மையான முறை இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வில் மட்டுமல்ல, தேர்தலிலும் நேர்மையான முறையில்லை.

ஆகஸ்டு 6-ஆம் தேதி நேர்மையான தேர்வு முறை வேண்டுமென்று எஸ்.எஸ்.சி. தேர்வர்கள் டெல்லி சலோ போராட்டம் நடத்தினர்; ஆகஸ்டு 11-ஆம் தேதி, நேர்மையான தேர்தல் வேண்டுமென்று (ஓட்டுத் திருட்டுக்கு எதிராக) எதிர்க்கட்சிகள் டெல்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்; தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டுமென்று தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் கட்டடத்தை முற்றுகையிட்டுப் போராடினர்.

இவை அனைத்தும் வேறு வேறு விசயங்கள் அல்ல, இவை அரசுக் கட்டமைப்பும் சமூகக் கட்டமைப்பும் கார்ப்பரேட்மயமாகி வருவதன் சான்றுகளாகும்.

விவசாயத்தை அழித்தல், காடுகளை ஆக்கிரமித்தல், சிறுதொழில்களை நாசம் செய்தல், அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடுதல் போன்றவற்றையே கொள்கையாகக் கொண்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பு, தனக்கான பணியாளர் தேர்வுகளை மட்டும் எப்படி நேர்மையாக, முறைகேடுகள் இல்லாமல் நடத்த முடியும்?

ஆகையால், உழைக்கும் மக்களின் நலன், தற்சார்ப்பு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்வாதார உத்தரவாதம், இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகும்; இவற்றை உண்மையான ஒரு ஜனநாயகக் குடியரசால்தான் உத்தரவாதப்படுத்த முடியும். அதனை உருவாக்குவதற்கு மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.

ஆகஸ்டு 6-ஆம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, “டெல்லி சலோ” போராட்டத்தை நடத்தியவர்கள் இதனை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை!


நந்தன்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க