தேசிய தொழிலாளர் கொள்கை வரைவு: குலத்தொழிலை வலியுறுத்தும் மோடி அரசு

பண்டைய காலங்களில் தொழிலாளர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை; கூலி முறையும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பண்டைய இந்து நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கொள்கைக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டந்த அக்டோபர் 8 ஆம் தேதி ஒன்றிய தொழிலாளர் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை வரைவு பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்காக வெளியிடப்பட்டது. ஆனால், இந்த வரைவு அறிக்கை சமூக, பொருளாதார, பாலின சமத்துவமின்மையை வலியுறுத்தும் மனுஸ்மிருதியை  அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த வரைவு கொள்கையில், உழைப்பு என்பதை ’இராஜதர்மம்’ என வரையறுத்துள்ளது. இதில் “சமூக ஒற்றுமை, பொருளாதார ரீதியான வளமான வாழ்வு, மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைத்து நீடிக்கச் செய்வதில் உழைப்பு செலுத்துவது என்பது புனிதமான மற்றும் தார்மீக கடமையாகும்.

“இந்திய உலகக் கண்ணோட்டத்தின் படி, வேலை என்பது வெறும் வாழ்வாதாரத்திற்கானது மட்டுமல்ல. அது பரந்த தர்மத்திற்கு (பிறப்பின் அடிப்படையிலான கடமை) செய்யும் பங்களிப்புமாகும். இந்த கண்ணோட்டம் என்பது, அனைத்து தொழிலாளர்களையும் (கைவினைஞர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் அல்லது தொழிலாளர்கள்) சமூக உருவாக்கத்தில் ஒரு அத்தியாவசிய பங்கேற்பாளராக அங்கீகரிக்கிறது.

“மனு ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, சுக்ராநிதி மற்றும் அர்த்தசாஸ்திரம் போன்ற பண்டைய நூல்கள் ராஜதர்மம் என்ற நெறிமுறைகளை வெளிப்படுத்துகிறது. நீதி, நியாயமான ஊதியம் மற்றும் தொழிலாளர்களைச் சுரண்டலிலிருந்து பாதுகாப்பது ஆட்சியாளரின் கடமை என வலியுறுத்துகிறது.” என இந்த வரைவு அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால், பண்டைய காலங்களில் தொழிலாளர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை; கூலி முறையும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பண்டைய இந்து நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கொள்கைக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


படிக்க: ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்கப்படும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்! போராடும் மாணவர்களுக்குத் துணை நிற்போம்!


“இந்து நூல்களில் போற்றப்படும் ’உழைப்பு’ என்பது மீண்டும் சாதிய படிநிலையை உயர்த்திப்பிடிப்பதை தவிர வேறொன்றுமில்லை. மதச் சடங்குகளைச் செய்து பிராமணர்கள் உயர்ந்த அந்தஸ்தில் இருத்திக் கொள்வதாகும்” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முறைசாரா துறை மற்றும் தொழிலாளர் ஆய்வுகளுக்கான மையத்தில் படிக்கும் பிரதீப் சிண்டே தெரிவித்தார்.

“தொழிலாளர் உரிமைகள் குறித்த விசயத்தில் ஸ்மிருதிகளை உள்ளே நுழைப்பதென்பது பிராமணர்களின் முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்தவும், அதை தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அங்கீகரிக்கவும் ஆர்.எஸ்.எஸ் மேற்கொள்ளும் செயல்பாடுகளாகும்.” என அவர் மேலும் கூறினார்.

“உழைப்பை தர்மம் அல்லது இராஜதர்மத்துடன் ஒப்பிடுவது என்பது ஒரு மோசமான யோசனையாகும். ஏனெனில், அது தொழிலாளர்களின் உரிமைகள், நியாயமான ஊதியம் மற்றும் பாதுகாப்பைப் புறக்கணிக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), உடனடியாக இந்த வரைவைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இவை தொழிற்சங்கங்களிடம் ஆலோசிக்காமல் தயாரிக்கப்பட்டவை எனத் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்கு முன்பு மத்திய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் தொடங்கப்பட வேண்டும் என AITUC கோரியுள்ளது.

பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியில் தொழிலாளர் உரிமைகள் வெட்டி சுருக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், குலத்தொழிலை ஊக்குவித்து சாதியப் படிநிலையைப் பாதுகாக்கும் வகையில் விஸ்வகர்மா யோஜனா போன்ற திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதன் நீட்சியாகவே இந்த தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கொள்கை வரைவையும் பார்க்க வேண்டியுள்ளது.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க