பி.எம். விஸ்வகர்மா பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான சதித்திட்டம்!

இத்திட்டத்தின் மூலம் நேரடியாக குலத்தொழிலை திணிக்காமல், மக்களின் வறிய பொருளாதார நிலைமைகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மறைமுகமாக திணிக்கிறது மோடி அரசு.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மக்களின் (OBC) வாக்குகளைக் கவர்வதற்காகவும் குலத்தொழிலைப் புதுப்பித்து பிற்படுத்தப்பட்ட மக்கள்மீது சுமத்தப்பட்ட பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பிப்பதற்காகவும் “பி.எம் விஸ்வகர்மா” என்ற திட்டத்தை தன்னுடைய பிறந்தநாளில் தொடங்கிவைத்துள்ளார், பிரதமர் மோடி.

“விஸ்வகர்மா ஜெயந்தி அன்று பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு வேலை செய்யும் கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கைவினைத் தொழிலாளர்களுக்கு சுமார் 13,000 முதல் 15,000 கோடி ரூபாய் வரை வழங்கவிருக்கிறோம்” என நாட்டின் 77-வது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார், மோடி. அடுத்த நாளே, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Economic Affairs) விஸ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டது.

இத்திட்ட பயனாளிகளுக்கு முதல் தவணையில் ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்றும், இரண்டாவது தவணையில் இரண்டு லட்சம் ரூபாய் ஐந்து சதவிகித வட்டியுடன் கடனாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது மோடி அரசு.

மேலும், பயனாளிகளுக்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் அடிப்படை பயிற்சியும், 15 நாட்கள் மேம்பட்ட திறன் பயிற்சியும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. பயிற்சிகளின் போது உதவித்தொகையாக நாள் ஒன்றுக்கு 500 ரூபாயும், உபகரணங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு ஊக்கத்தொகையாக 15,000 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது மோடி அரசு.

முடி திருத்துபவர்கள், பூமாலை கட்டுபவர்கள், சலவைத் தொழிலாளர்கள், தையல்காரர்கள், காலணி தைப்பவர்கள், குயவர்கள், சிற்பிகள் போன்ற 18 வகை தொழில்கள் செய்பவர்கள் இத்திட்டத்தின் பயனாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொழில்கள் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட மக்கள் செய்யும் தொழில்களாகும்.

குலத்தொழிலைத் திணிக்கும் மோடி அரசு

ஆர்வமுள்ளவர்களுக்கு திறனை வளர்த்தெடுப்பது (Skill development) என்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே தொழில் தெரிந்தவர்களுக்கு திறனை மேம்படுத்துவது (skill upgradation) என்பதை இத்திட்டத்தின் நோக்கமாகக் குறிப்பிட்டுள்ளது மோடி அரசு. அதாவது முடி திருத்துபவர்களுக்கு முடி திருத்தும் திறன் பரம்பரை பரம்பரையாக உள்ளதென்றும், அந்தத் திறனை மேம்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம், வெளிப்படையாக குலத்தொழில் முறையை ஊக்குவிப்பதை அறிவித்துள்ளது.

“அவர்கள் விருப்பப்பட்டு செய்யும் போது நாங்கள் கடன் வழங்குகிறோம். நீங்கள் இந்தத் தொழில்தான் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியா அவர்களை கட்டாயப்படுத்துகிறார்” என்று தினமலர் சேனலுக்கு அளித்த பேட்டியில் கேள்வியெழுப்புகிறார், தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை. ஆம், பரம்பரை பரம்பரையாக செய்துக்கொண்டிருக்கும் குலத்தொழிலைதான் செய்ய வேண்டும் என்று மோடி அரசு கட்டாயப்படுத்ததான் செய்கிறது.


படிக்க: இந்துராஷ்டிர தர்பார்!


சான்றாக, இத்திட்டத்தின் கீழ் முடி திருத்தும் தொழிலை செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு எல்லாம் கடன் கொடுப்பதற்கு பதிலாக, முடி திருத்துவதையே பரம்பரை பரம்பரையாக செய்து வருபவர்களுக்குத் தான் கடன் கொடுக்கிறது, மோடி அரசு.

விஸ்வகர்மா திட்டத்தில் விருப்பப்பட்டவர்கள் சேர்ந்துக்கொள்ளலாம் என்றுதானே கூறப்பட்டுள்ளது. கட்டாயம் என்று கூறவில்லையே? அப்படியிருக்க, இத்திட்டம் குலத்தொழிலை திணிப்பதாக எப்படி கூற முடியும் என்று சங்கிகள் கேள்வி எழுப்பலாம்.

இத்திட்டத்தின் மூலம் நேரடியாக குலத்தொழிலை திணிக்காமல், மக்களின் வறிய பொருளாதார நிலைமைகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மறைமுகமாக திணிக்கிறது மோடி அரசு.

இந்தியாவில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை வறுமையும், விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும் பேயைப் போல பிடித்தாட்டுகின்றன. பல குடும்பங்கள் இருவேளை உணவு சாப்பிடும் நிலைமையில்தான் உள்ளன. இந்த நிலைமை தமிழ்நாடு போன்ற ஓரளவுக்கு முன்னேறிய மாநிலங்களை விட, வட இந்திய மாநிலங்களில் மிகவும் மோசமாக உள்ளது. எனவே, வட இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள், விஸ்வகர்மா திட்டத்தை தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகத்தான் பார்ப்பார்கள்.

இத்திட்டத்தால், சாதிக் கொடுமைகளால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் குடும்பங்கள், மீண்டும் கிராமங்களுக்கு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்படும்; பழைய நிலைமைக்கு அதாவது தங்களுடைய குலத்தொழிலை செய்ய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படும் போது, கிராமங்களில் உள்ள சாதி ஆதிக்கத்தையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, இத்திட்டத்தால் கிராமப்புறங்களில் சாதி அடக்குமுறைகள் தற்போது உள்ளதை விட மேலும் வலுவாகும்.

இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் (ஓ.பி.சி.) சேர்ந்த ஏழை மக்களின் பிள்ளைகள் மட்டும்தான் இத்திட்டத்தில் இணைய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் 17 வயதில் 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு, மேல்படிப்புக்கு கல்லூரிகளுக்குச் செல்லவேண்டும். ஆனால், இத்திட்டமானது ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஒழித்துக்கட்டி, அவர்களை முற்றிலுமாக குலத்தொழிலுக்குள்ளேயே அமுக்குகிறது.


படிக்க: நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!


பெரியார், அம்பேத்கர் போன்ற பார்ப்பனிய எதிர்ப்பு போராளிகள், கம்யூனிஸ்டுகள் குலத்தொழிலுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாகத்தான், தீண்டத்தகாத சாதிகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த, முடி திருத்துதல், சலவைத் தொழில் போன்ற தொழில் செய்துவந்த குடும்பங்களில் இருந்து பட்டம் பெற்றவர்களும் பொறியாளர்களும் மருத்துவர்களும் உருவாகியுள்ளார்கள்.

ஆனால், மோடி அரசோ இந்நிலைமைகளை எல்லாம் ஒழித்துக்கட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாதிக்கட்டமைப்பை மீட்டுருவாக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விஸ்வகர்மா திட்டமும் அதில் ஒரு அங்கம்தான்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக…

விஸ்வகர்மா திட்டத்தின் மூலம், ஓ.பி.சி. மக்கள் மத்தியில் குலத்தொழிலை திணித்து சாதிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காவிகளிடம் இருந்தாலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி.சி. மக்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காகத்தான் இத்திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்திற்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் உள்ளதைப் போல வட மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை. அதன் மூலம் ஓ.பி.சி. மக்களை தன் பக்கம் திரட்டிக்கொள்ள விழைகிறது பா.ஜ.க. கும்பல்.

மோடி – அமித்ஷா கும்பல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஓ.பி.சி. மக்களின் வாக்குகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஒன்றிய அரசின் புள்ளிவிவரப்படி, இந்திய மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்ட அளவில் ஓ.பி.சி. மக்கள் உள்ளனர். மோடி அரசு, பீகார் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதும், இந்தியா முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை புறக்கணித்து வருவதும் ஓ.பி.சி. மக்களின் வாக்குகளை கவர்வதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை தடுப்பதற்காகத்தான்.

மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஒன்றிய அமைச்சகத்திலும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுத்தது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தை அமைத்தது; கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா நிறுவனங்களில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியது போன்ற செயல்பாடுகள் மூலம் ஓ.பி.சி. மக்கள் மத்தியில் தனது அடித்தளத்தை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது, பா.ஜ.க கும்பல்.

இதன்விளைவாக, பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள ஓ.பி.சி. மக்கள் மத்தியில், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 22 சதவிகிதமாக இருந்த பா.ஜ.க.விற்கான ஆதரவு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 44 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகிலேஷ் யாதவ், நிதிஷ்குமார் யாதவ், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களின் கட்சிகளுக்கு ஓ.பி.சி. பிரிவில் வேளாண் தொழிலை பூர்விகமாக செய்து வரும் சாதி மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. எனவே, பா.ஜ.க. கும்பலானது ஓ.பி.சி. பிரிவில் முடி திருத்துதல், சலவைத் தொழில் போன்ற தொழில்களை பூர்வீகமாக செய்துவரும் சாதி மக்களை தன் பக்கம் கவர்வதற்காக விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவிற்கு ஓ.பி.சி. பிரிவைச் சார்ந்த யாதவர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதால், யாதவர்களை தவிர பிற ஓ.பி.சி. பிரிவினர் மத்தியில் வேலை செய்த அனுபவமும் பா.ஜ.க. கும்பலிடம் உள்ளது. இதைப்போல பல மாநிலங்களில் பா.ஜ.க. கும்பல் வேலை செய்துள்ளது.

ஒடிசாவில் எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க, விஸ்வகர்மா திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் ஓ.பி.சி. மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பேரை பயனாளர்களாக மாற்ற வேண்டும் என்று இலக்கு வைத்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. இதைப்போல பல மாநிலங்களில் பா.ஜ.க. கும்பல் வேலை செய்யும் என்று நாம் உறுதியாக கூற முடியும்.

எனவே, விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் குலத்தொழிலைத் திணித்து சாதிக் கட்டமைப்பை வலுப்படுத்த விழையும் பா.ஜ.க. கும்பலின் நோக்கத்தை அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓ.பி.சி. மக்களை தன் பக்கம் திரட்டிக்கொள்ள முயலும் சதித்திட்டத்தையும் முறியடிக்கும் வகையில் பிரச்சாரங்களை கட்டியமைக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க