Saturday, May 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 3

லெனின் 155: பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்! 

கம்யூனிசப் பேராசான் தோழர் லெனின் 155 ஆவது பிறந்தநாள்!

பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்! 

ப்ரல் 22 – உலகின் ஆறில் ஒரு பங்கு நிலப்பரப்பில் புரட்சியின் மூலம் முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோசலிசத்தை நிறுவிக் காட்டிய தோழர் லெனினின் 155வது பிறந்தநாள்.

ரசியாவில் 1905 இல் நடைபெற்ற புரட்சியானது ரசிய மக்களுக்கு தங்களின் விடுதலைக்குத் தலைமையேற்கப் போவது போல்ஷ்விக்குகள் தான் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது. 1917 நவம்பர் புரட்சியில் அதுதான் நடந்தது.

1905 ஆம் ஆண்டு, ஜனவரி 3 அன்று, செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள மிகப்பெரிய தொழிற்சாலையான புடிலோவ் ஒர்க்ஸில் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, போலீசின் கைக்கூலியான கோபன் என்ற பாதிரியாரின் தலைமையில் ஜனவரி 9 அன்று ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, குளிர்கால அரண்மனைக்குப் பேரணியாகச் சென்று, ஜார் மன்னனிடம் கையேந்துவது என்ற துரோகத் திட்டம்தான் அது. இதன் மூலம் தொழிலாளி வர்க்கப் புரட்சியை ஒழித்துக் கட்டுவதுதான் நோக்கம்.

அவ்வாறு சென்ற தொழிலாளர்கள், ஜாரின் படைகளால் ஆயிரக்கணக்கான பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்துயரச் சம்பவம் ‘இரத்த ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. இச்சம்பவத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை போராட்டத்தின் மூலம் மட்டுமே, புரட்சியின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதை நடைமுறையிலிருந்து உணர்ந்தார்கள். “ஜார் நமக்கு துப்பாக்கிக் குண்டுகளைக் கொடுத்தான், இப்போது நாம் அவனுக்கு அதைத் திருப்பிக் கொடுப்போம்” என்று முழங்கினார்கள்.

இச்சம்பவத்திற்குப் பின் ரசியாவில் புரட்சி பற்றிப் பரவத் தொடங்கியது. போல்ஷ்விக்குகள்தான் தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் உறுதியாக நின்று வழிகாட்டினார்கள். ஆனால் மென்ஷ்விக்குகளோ, தொழிலாளிகளைக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள்.

1905 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கிய புரட்சிப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு, ஜாரின் மந்திரி ஸ்டாலோபின் நாடெங்கும் தூக்குமேடைகளைத் தீர்மானித்தான். பல்லாயிரக்கணக்கான புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ஸ்டாலோபின் பிற்போக்குக் காலத்திலும் தோழர் லெனினின் தலைமையில் போல்ஷ்விக்குகள் மட்டுமே உறுதியாகப் புரட்சியைப் பற்றி நின்றனர்.

மென்ஷ்விக்குகளோ சந்தர்ப்பவாத நிலையெடுத்து தொழிலாளி வர்க்கத்துக்கும், புரட்சிக்கும் துரோகமிழைத்தனர். மார்க்சியத் தத்துவ அடிப்படைகளின் மீதே போர் தொடுத்தனர். அத்துடன் கட்சி கலைப்புவாதத்தையும் முன்வைத்தனர்.


படிக்க: இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை


மென்ஷ்விக் கும்பலின் சந்தர்ப்பவாதத்தை சித்தாந்த ரீதியாக முறியடிக்கும் வரலாற்றுக் கடமை லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகளையே சார்ந்திருந்தது. 1909 இல் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூலை எழுதி, சித்தாந்த ரீதியாக சந்தர்ப்பவாதத்தை முறியடித்தார்.

தொழிலாளி வர்க்கம் புரட்சியில் போல்ஷ்விக்குகளின் தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு, 1905 புரட்சி மற்றும் ஸ்டோலோபின் அடக்குமுறை ஆகிய காலகட்டங்களில், தோழர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறையிலும் தொழிலாளி வர்க்கத்தின் பக்கமும், புரட்சியின் பக்கமும் உறுதியாக நின்றதே அடிப்படைக் காரணமாகும்.

இதனை இன்றைய சூழலோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். இந்தியாவில் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, பாசிச எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதற்கு நாம் ஆசான் லெனினிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

பாசிஸ்டுகளை நாடாளுமன்றத்தில் வீழ்த்தி விட முடியும் என்றோ, பாசிச எதிர்ப்பு என்றால் நிபந்தனையின்றி தி.மு.க-வை ஆதரிக்க வேண்டும் என்றோ, இந்தியாவில் பாசிசத்தை மென்மைப் போக்கு கொண்டதாக வரையறுக்கும் சி.பி.எம்-இன் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளைக் கொண்டோ ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது. இவையனைத்தும் முதலாளித்துவ சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளே.

பாசிசத்தை நேருக்கு நேர் களத்தில் மட்டுமே, மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலமே வீழ்த்த முடியும் என்பதை இந்தியா முழுவதும் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்துகின்றன.

ஸ்டாலோபின் பிற்போக்கு அடக்குமுறைக் காலத்தில் கட்சியை விட்டு ஓடிய கலைப்புவாதிகளிடம் இருந்தும், திரிபுவாதிகளிடம் இருந்தும் மார்க்சியத் தத்துவத்தைப் பாதுகாத்தார் தோழர் லெனின்.

தோழர் லெனின் காட்டிய பாதையில், கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் தோலுரிப்போம். உழைக்கும் மக்களின் நலனைச் சார்ந்து உறுதியான நிலைப்பாட்டில் ஊன்றி நிற்போம். மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்! ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவோம்!


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஜூலை, 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 16 | 1990 ஜூலை 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கட்டுப்பாடற்ற கொள்ளைக்கு கதவு திறந்தது!
  • ஹெக்டே: கலைந்தது பரிசுத்த பிரமை!
  • இ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் கொலை: துரோகிகள் சாவில் பசப்புகளுக்கு இடமில்லை
  • ரௌடித்தனத்தில் போலிகள் வெற்றி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • நீதிமன்ற ஊழல்கள்
  • போலீசு பயங்கரத்துக்குப் பணிய மறுத்த உழைப்பாளிச் சிறுவன்
  • கேள்வி – பதில்
  • சுயநிதிக் கல்வி நிறுவனங்கள்: ஓட்டுப் பொறுக்கிகளின் கொழுத்த வியாபாரம்
  • தி.க. வீரமணியின் தமிழினத் தொண்டு!
  • ஈழம்: மீண்டும் போர்
    ஈழத் தமிழருக்குத் தீர்வு எப்போது?
  • ரஷிய மாற்றங்கள் பற்றி ‘மார்க்சிஸ்டு’களின் நிலைப்பாடு
    மீனுக்குத் தலை! பாம்புக்கு வால்!
  • ஈசன் குரூப் நிறுவனம்
    14 வருட அடக்குமுறை! தொடரும் போராட்டம்!
  • தேவாரம் மீனாட்சிபுரம் – மக்கள் மீது போலீசின் வெறித்தாக்குதல்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜூன் 22: கலவரம் நடத்தத் திட்டமிடும் இந்து முன்னணியின் மாநாட்டைத் தடை செய்!

ஜூன் 22: கலவரம் நடத்தத் திட்டமிடும்
இந்து முன்னணியின் மாநாட்டைத் தடை செய்!

மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் ஜனநாயக சக்திகள் ஆட்சியரிடம் மனு

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஜூன், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 15 | 1990 ஜூன் 16-30, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கருணாநிதியின் தமிழினத் துரோகம்
  • திவாரி விவகாரம்: புனிதப் போர்வை
  • கருணாநிதி பிறந்தநாள் விழா: அருவெறுப்பான சுயவிளம்பரம்
  • வி.பி.சிங் அரசு அனத்துப் பிரச்சினைகளிலும் தோல்வி
    ஒப்பனை கலைந்தது!
  • எச்சரிக்கை! போலீஸ் வெறியர்கள்!!
  • பார்ப்பன முதலாளியும் ‘சூத்திர’ அரசும் கூட்டு!
  • ஒரு லட்சம் பேரை விபச்சாரிகளாக்கி ஓராயிரம் பேரை மீட்டார்கள்…
    சமுதாயத் திருப்பமா?
  • மார்க்சிய – லெனினிய ஆசான்கள் மீது: தி.க.வின் வக்கிரம்!
  • கறம்பக்குடி ‘லாக்அப்’ கொலை
    மக்கள் ஆவேசம்! போலீசு ஓட்டம்!
  • பொன்மலை: தொழிலாளர்கள் உறுதி! நிர்வாகம் பணிந்தது!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



திருப்பரங்குன்றம்: கலவர முயற்சி செய்யும் எல்.முருகனை கைது செய்! | ம.க.இ.க புகார்

திருப்பரங்குன்றம்:
கலவர முயற்சி செய்யும் எல்.முருகனை கைது செய்! | ம.க.இ.க புகார்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பரந்தூர் மக்கள் போராட்டம்: 1000-ஆவது நாள் | கண்டுகொள்ளாத திமுக அரசு | தோழர் ரவி

பரந்தூர் மக்கள் போராட்டம்: 1000-ஆவது நாள்
கண்டுகொள்ளாத திமுக அரசு | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 6

படித்துவிட்டு வேலைக்கு வந்தும் தீண்டாதவர் பட்ட துன்பம்!

தை விட மேலும் மோசமான நிகழ்ச்சி ஒன்று உள்ளது. பம்பாய் தாதர் பகுதியில் வுல்லன் மில்லின் பின்பக்கத்தில் உள்ள காசர்வாடியின் பங்கிக்களின் கூட்டம் ஒன்று 1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதியன்று, இந்துலால் யாத்நிக் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஒரு பங்கி சிறுவன் கீழ்க்கண்டவாறு தன் அனுபவத்தை விளக்கிக் கூறினான்:

தாய்மொழியிலான இறுதித் தேர்வில் நான் 1933இல் தேர்வு பெற்றேன். 4ஆம் வகுப்புவரை நான் ஆங்கிலம் படித்திருந்தேன். பம்பாய் நகராட்சியின் பள்ளிக் கமிட்டிக்கு ஆசிரியர் வேலை கேட்டு நான் விண்ணப்பித்தேன். அப்போது காலியிடம் இல்லாததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. தலாதி என்னும் கிராம பட்வாரி வேலைக்காக அகமதாபாத் பிற்படுத்தப்பட்ட பிரிவு அதிகாரிக்கு நான் விண்ணப்பித்தேன். வெற்றி பெற்ற எனக்கு அந்த வேலை கிடைத்தது. 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று, கெடா மாவட்டம் பொர்சாத் தாலுகாவின் மம்லதார் அலுவலகத்திற்கு நான் தலாதியாக நியமிக்கப்பட்டேன்.

எனது குடும்பம் குஜராத்திலிருந்து வந்ததுதான் என்ற போதிலும், இதற்கு முன் நான் குஜராத்துக்குச் சென்றதே இல்லை. அங்கு நான் செல்வது இதுவே முதல் முறையாகும். அதே போல், அரசு அலுவலகங்களிலும் தீண்டாமை பாராட்டப்பட்டு வந்தது என்பதையும் நான் அறிந்திருக்கவில்லை. மேலும் என் விண்ணப்பத்தில் நான் ஓர் அரிஜன் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அலுவலகத்தில் என்னுடன் பணி புரிபவர்கள் நான் யார் என்பதை முன்கூட்டியே அறிந்திருப்பார்கள் என்றே நான் எதிர்பார்த்தேன். தலாதிப் பணியின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நான் மம்லதார் அலுவலகத்துக்குச் சென்றபோது அங்கிருந்த குமாஸ்தாவின் போக்கைக் கண்டு நான் வியப்படைந்தேன்.

“நீ யார்” என்று அந்தக் கார்குன் வெறுப்புடன் கேட்டார். “அய்யா நான் ஓர் அரிஜன்” என்று கூறினேன். “போ.போ.போய் எட்டி நில்; என் அருகில் வந்து நிற்க உனக்கு என்ன தைரியம்? நீ அலுவலகத்தில் இருக்கிறாய்; நீ மட்டும் வெளியே இவ்வாறு செய்திருந்தால் நான் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கு வேலைக்கு வர உனக்கு என்ன திமிர் இருக்கும்?” என்று கேட்டார். பின்னர் தலாதியாக என்னை நியமித்த உத்தரவையும, என் சான்றிதழையும் தரையில் வைக்கும்படி என்னைக் கேட்டார். பின்னர் அவர் அதனை எடுத்துக் கொண்டார். போர்சாத் மம்லதார் அலுவலகத்தில் நான் பணியாற்றியபோது, குடிப்பதற்குத் தண்ணீர் பெறுவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். குடிநீர் உள்ள பாத்திரங்கள் வராண்டாவில் வைக்கப்பட்டிருக்கும். இந்தத் தண்ணீர்ப் பாத்திரங்களுக்குப் பொறுப்பான ஒரு தண்ணீர்க்காரர் இருந்தார். அலுவலகத்திலுள்ள குமாஸ்தாவுக்குத் தண்ணீர் தேவைப்படும்போது தண்ணீர் ஊற்றுவதுதான் அவர் வேலை அவர் இல்லாதபோது மற்றவர்கள் பாத்திரங்களில் இருந்து அவர்களாகவே தண்ணீர் எடுத்துக் குடிப்பார்கள். ஆனால், நான் அவ்வாறு செய்ய முடியாது. நான் தொட்டாலே தீட்டாகிவிடும் என்பதால் தண்ணீர்ப் பாத்திரங்களைத் தொட என்னால் முடியாது. அதனால் தண்ணீர்க்காரரின் கருணையையே நம்பி நான் இருக்கவேண்டியதாயிற்று. எனது உபயோகத்துக்காக அங்கே ஓர் அழுக்கடைந்த பானை இருந்தது. என்னைத் தவிர வேறு எவரும் அதைத் தொடவும் மாட்டார்கள். கழுவவும் மாட்டார்கள். இந்தப் பானையில்தான் நான் குடிப்பதற்கு தண்ணீர்க்காரர் தண்ணீர் ஊற்றுவார். ஆனால், அந்தத் தண்ணீர்க்காரர் அந்த இடத்தில் இருந்தால் தான் எனக்குத் தண்ணீர் கிடைக்கும். எனக்குத் தண்ணீர் ஊற்றுவது இந்தத் தண்ணீர்க்காரருக்குப் பிடிக்காது. தண்ணீருக்காக நான் வருவதைக் கண்டால், அவர் எங்கேயாவது போய்விடுவார்; அதன்பின் எனக்குத் தண்ணீரே கிடைக்காமற் போய்விடும். இவ்வாறு நான் தண்ணீரே குடிக்காமல் போன நாள்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இதே போன்று தங்குமிடத்திற்கும் நான் சிரமப்பட வேண்டியதாயிற்று. போர்சாத்துக்கு நான் முற்றிலும் புதியவன். எந்த ஓர் ஜாதி இந்துவும் வாடகைக்கு எனக்கு வீடு கொடுக்கமாட்டார். என் தகுதிக்கு அதிகமாக ஒரு குமாஸ்தாவாக வாழும் என் முயற்சியை விரும்பாத இந்துக்களுக்குக் கோபம் ஏற்படுமே என்ற அச்சத்தில் எனக்கு வீடு கொடுக்க போர்சாத் தீண்டத்தகாதவர்களும் தயாராக இல்லை. அனைத்தையும் விட மிகப் பெரிய துன்பம் உணவைப் பற்றியது. நான் உண்பதற்கு எனக்கு எந்த ஓர் இடமுமில்லை; எனக்கு உணவளிப்போரும் எவருமிலர். தினமும் காலையிலும் மாலையிலும் பஜாசுகளை வாங்கி, கிராமத்துக்கு வெளியே தனியான ஓரிடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, மம்லதார் அலுவலக வராண்டாவுக்கு வந்து படுத்து உறங்குவதை நான் வழக்கமாக்கிக் கொண்டேன். இவ்வாறு நான்கு நாள்களை நான் கழித்தேன். இவையெல்லாம் என்னால் தாங்க முடியாதவையாக ஆகிவிட்டன. பின்னர் எனது மூதாதையரின் ஊரான ஜெந்த்ராலுக்குச் சென்று வசிக்கச் சென்றேன். அது போர்சாத்திலிருந்து 6 மைல் தொலைவில் இருந்தது. தினமும் நான் பன்னிரண்டு மைல் தொலைவு நடக்கவேண்டியிருந்தது. இதையும் நான் ஒன்றரை மாத காலம் செய்தேன்.

பின்னர் ஒரு தலாத்தியிடம் வேலை கற்றுக் கொள்ள மம்லதார் என்னை அனுப்பினார். இந்த தலாத்தி ஜெந்த்ரால், காபர், சாஜ்பூர் என்ற மூன்று கிராமங்களுக்குப் பொறுப்பானவர் ஜெந்த்ரால் அவரது தலைமையிடம். இந்தத் தலாத்தியுடன் ஜெந்த்ராலில் நான் இரண்டு மாதம் இருந்தேன். அவர் எனக்கு எதுவுமே கற்றுக் கொடுக்கவில்லை. கிராம அலுவலகத்துக்குள் நான் ஒரு நாள் கூட சென்றதில்லை. அந்தக் கிராமத் தலைவர் குறிப்பாக என்னை எதிரிபோலவே கருதி நடத்தினார். ஒரு முறை, “பயலே, நீயும், உன் தந்தையும், உன் சகோதரனும் கிராம அலுவலகத்தைப் பெருக்கும் பணியாளர்கள்; நீ எங்களுக்குச் சமமாக அலுவலகத்தில் உட்கார விரும்புகிறாயா? ஜாக்கிரதையாக இரு; இந்த வேலையை விட்டு விட்டு நீ ஓடிப் போவதே உனக்கு நல்லது” என்று கூறினார்.

ஒரு நாள் சாஜிபூர் கிராமத்தின் மக்கள் தொகைப் பட்டியல் தயாரிக்க என்னை தலாத்தி அழைத்தார். ஜெந்த்ராலில் இருந்து நான் சாஜிபூருக்குச் சென்றேன். கிராமத்தலைவரும், தலாத்தியும் கிராம அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்து கொண்டிருந்ததை நான் கண்டேன். நான் 15 நிமிடம் வெளியே நின்றேன். ஏற்கெனவே நான் இத்தகைய வாழ்க்கை பற்றிச் சோர்வடைந்து போயிருந்தேன், இவ்வாறு அலட்சியப்படுத்தப்படுவது, அவமானப்படுத்தப்படுவது கண்டு எனக்குச் சினம் எழுந்தது. அங்கிருந்த நாற்காலி ஒன்றில் நான் உட்கார்ந்து கொண்டேன். நான் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த தலாத்தியும், கிராமத் தலைவரும் எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டனர். சிறிது நேரத்திற்குப் பின் மக்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கி என்னைச் சுற்றி ஒரு பெரும் கூட்டமே கூடிவிட்டது. கிராம நூலகத்தின் நூலகரால் அக்கூட்டம் வழிநடத்தி வரப்பட்டு இருந்தது, படித்த ஒரு மனிதர் ஏன் இவ்வாறு கூட்டம் கூட்டிக் கொண்டு வருகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. மிக மோசமான சொற்களால் அவர் என்னைத் திட்டத் தொடங்கினார். கிராமப் பணியாளரான ராவனியாவைப் பார்த்து, “இந்தக் கேடு கெட்ட பங்கி நாயை நாற்காலியில் உட்கார யார் அனுமதித்தார்கள்?” என்று கேட்டார் ராவனியா என்னை எழுப்பிவிட்டு நாற்காலியை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். நான் தரையில் உட்கார்ந்து

கொண்டேன். அதன்பின் அக் கூட்டம் கிராம அலுவலகத்துக்குள் நுழைந்து, என்னைச் சூழ்ந்து கொண்டது. கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் என்னைத் திட்டிக்கொண்டும், இன்னும் சிலர் என்னைக் கத்தியால் துண்டு துண்டாக வெட்டிவிடுவதாக அச்சுறுத்திக் கொண்டும் மிரட்டிக் கொண்டிருந்தனர். என்னை மன்னிக்கும்படியும், என் மீது கருணை காட்டும்படியும் நான் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். நான் கூறியது எதுவும் அக்கூட்டத்தினரிடையே எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. என்னை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை. எனக்கு நேர்ந்த கதியைப் பற்றியும், இக் கூட்டத்தினால் நான் கொல்லப்பட்டால் என் உடலை என்ன செய்வது என்றும் மம்லதாருக்குக் கடிதம் எழுதிவைக்கலாம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அவர்களுக்கு எதிராக மம்லதாருக்கு நான் புகார் எழுதுகிறேன் என்று தெரிந்தால், ஒரு வேளை அவர்கள் என்னைத் தாக்காமல் இருக்கக்கூடும் என்று நான் கருதினேன். ஒரு காகிதம் கொடுக்கும்படி ரவினாவை நான் கேட்டு வாங்கிக் கொண்டு அக் காகிதத்தில் கொட்டை கொட்டையாக அனைவரும் படிக்கும்படியாக கீழ்க்கண்டவாறு எனது பேனா கொண்டு எழுதத் தொடங்கினேன்.

பெறுநர்:

             மம்லதார், தாலுகா போர்டு

அய்யா,

பர்மார் காளிதாஸ் சிவராமின் பணிவான வணக்கங்களை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று என்மீது சாவின் கரங்கள் விழுந்துவிட்டதைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். எனது பெற்றோரின் சொற்களை நான் கேட்டிருந்தால் இவ்வாறு எனக்கு நேர்ந்திருக்காது. எனவே என் சாவைப் பற்றி என் பெற்றோருக்குத் தயவுசெய்து தெரிவித்து விடுங்கள்.

நான் எழுதியதைப் படித்த நூலகர் உடனே அதனைக் கிழித்துப் போடும்படி கூறினார். நானும் கிழித்துப் போட்டேன். என் மீது அவர்கள் வசைமாரி பொழிந்தார்கள். “நீ என்ன உன்னை எங்களின் தலாத்தியாக நினைத்து பேசவேண்டும் என்று நினைக்கிறாயா? நீயோ ஒரு பங்கி; இந்த அலுவலகத்திற்குள் நுழைந்து நாற்காலியில் உட்கார நீ விரும்புகிறாயா?” என்று கேட்டார். என் மீது கருணை காட்டும்படியும், இனி நான் இதுபோல் செய்யமாட்டேன் என்றும், எனது வேலையை நான் விட்டுவிடுவதாகவும் கூறினேன். அந்தக் கும்பல் கலைந்து செல்லும் வரை மாலை 7:00 மணி வரை நான் அங்கே வைக்கப்பட்டிருந்தேன். அதுவரை தலாத்தியோ, கிராமத்தலைவரோ அங்கே வரவேயில்லை. அதன்பின் 15 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பம்பாய்க்கு என் பெற்றோரிடம் திரும்பி வந்துவிட்டேன்.

முற்றும்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஜூன், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 14 | 1990 ஜூன் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காஷ்மீர் கொலைகளும் நிர்வாக மாற்றமும்
  • அரியானா – மேகம் தேர்தல் அராஜகம்: தீவட்டிக் கொள்ளையனும் முகமூடிக் கொள்ளையனும்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • மூதேவி ஸ்ரீதேவி ஆன கதை!
  • நர்மதா திட்டம்: ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
  • நிலப்பிரப்புக்கள் கொட்டம்!
  • விமர்சனமும் விளக்கமும்
    அம்பேத்கர் புரட்சியாளரா?
  • ஹோ-சி-மின்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் புயல்
  • கடின உழைப்பும் கறுப்பு வரமும் கொள்ளை!
  • புதுப் புனல் ரஷ்யாவில் மோசடிகள் உண்டா
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை; மக்கள் போராட்டங்களே முதன்மைக் காரணம்!

19.04.2025

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை;
மக்கள் போராட்டங்களே முதன்மைக் காரணம்!

போராட்டங்களை வலுப்படுத்துவோம்!
வக்ஃப் சட்டத் திருத்தத்தைத் தூக்கியெறிவோம்!

பத்திரிகை செய்தி

க்ஃப் (திருத்த மற்றும் ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) சட்டம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அமலுக்கு வந்தது. முஸ்லீம் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கி தனிமைப்படுத்தும் பாசிசக் கும்பலின் இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களும், இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இன்னொரு பக்கம் இச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து, ”இந்தியா” கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வில், ஏப்ரல் 16, 17 ஆகிய நாட்களில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவான், சி.யு.சிங் உள்ளிட்டோர் ஆஜராகினர். ஒன்றிய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

விசாரணையின் இறுதியில், வக்ஃப் திருத்தச் சட்டப் பிரிவுகளுக்கு  இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. இத்தீர்ப்பை ஜனநாயக சக்திகள் பலரும் வரவேற்றுள்ளனர். அதேசமயம் உச்சநீதிமன்றம் சாட்டையைச் சுழற்றியிருக்கிறது என்ற கோணத்தில் கருத்துகளை முன்வைப்பதையும் பார்க்க முடிகிறது.

உண்மையில் இடைக்காலத் தடை விதிப்பதற்கு முதன்மையான காரணம், நாடு முழுவதும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களின் தாக்கம்தான்.

அதேசமயம், இத்தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் பாசிச கும்பலுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்கிறது. பாசிச பி.ஜே.பி அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் “சட்டத்தில் சில நேர்மறையான விஷயங்கள் இருப்பதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். அதேபோல் சட்டத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என்று சொல்வதும் சரிதான், எல்லா நேரத்திலும் சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்தி வைப்பதில்லை” என்று பாசிச கும்பலுக்குச் சாதகமான குரலில் நீதிபதிகள் பேசியதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

வழக்கு முடியும் வரை திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையிலான நடைமுறைகள் அமலுக்கு வராது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்றாலும், மேற்கொண்டு கூறிய கருத்துகள் சிக்கலுக்குரியவையாகவே இருக்கின்றன.

மே 5 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மை குறித்த மனுதாரர்களின் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேசமயம் எதிர்த்தரப்பு மனுதாரர்கள் 73 பேரில் 5 மனுதாரர்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். மற்றவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டவையாகக் கருதப்படும் என்றும் கூறியுள்ளனர். இவையெல்லாம் வழக்கைப் பலவீனப்படுத்தும் வகையில் இருப்பதாகவே தோன்றுகிறது.

மேலும்  கடந்த காலங்களில் குஜராத் இனப்படுகொலை, பாபர் மசூதி உள்ளிட்டு பல்வேறு வழக்குகளில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும், பாசிச கும்பலுக்கு ஆதரவாகவும் பல்வேறு தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்கில் சிறைப்பட்டிருக்கும் தோழர்களைப் பிணையில் விடுவிக்க சட்டப்பூர்வ வாய்ப்புகள் இருந்தும், அதைக் கண்டுகொள்ளாமல் உச்சநீதிமன்றம் கள்ள மௌனத்தில் இருக்கிறது என்பதையும் மறக்கக் கூடாது.

சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேசமயம், மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது ஒன்றே வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் தூக்கியெறிவதற்கும், பாசிச கும்பலைப் பணியவைப்பதற்கும் முன்னிபந்தனையாகும். அவ்வழியில் பாசிச எதிர்ப்பு சக்திகள் தமது செயல்பாடுகளை முன்னகர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பெருங்காமநல்லூர் படுகொலை – தென்னக ஜாலியன் வாலாபாக்

ப்ரல் 3 – பெருங்காமநல்லூர் படுகொலை என்பது குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக போராடிய பிரமலைக் கள்ளர் சாதி மக்களை பிரிட்டிஷ் அரசு சுட்டுக் கொன்ற நிகழ்வைக் குறிப்பதாகும். தென்னக ஜாலியன் வாலாபாக் என்று குறிப்பிடப்படும் இந்நிகழ்வில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

குற்றப்பரம்பரைச் சட்டம் என்பது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பிட்ட சாதிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம். முதன்முதலில், இந்தச் சட்டம் வங்காளத்தில், 1871 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ம் தேதி நிறைவேற்றப்பட்டது. சென்னை மாகாணத்தில் 1911 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்றப்பட்ட நாளிலிருந்து பல சட்டத்திருத்தங்களுக்கு உள்ளாகி, இறுதியாக 1924 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒரே சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பிரிட்டிஷ் அரசு, இந்தியா முழுவதும் உள்ள 213 சாதிகளைக் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் எந்தவொரு சாதியையும் ‘குற்றப்பரம்பரை’ என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. ஒரு சாதியில் பிறந்தவர்கள் அனைவரும் பிறவிக் குற்றவாளிகள் என்றது அச்சட்டம். தமிழ்நாட்டில் 89 சாதிகளை குற்றப்பரம்பரைச் சட்டப் பட்டியலில் இணைத்தனர். பட்டியலில் இருந்த சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக் கூடாது. போலீசின் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது போலீஸ் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர்கள், புதிதாகத் திருமணமானவர்களுக்குக் கூட விதிவிலக்கு கிடையாது.

பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் அனுமதி பெற வேண்டும். இந்த விதிகளை மீறினால், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், ஊர்த் தலையாரி கூட அவரைக் கைது செய்யலாம். சந்தேகப்படும்படி நடந்து கொண்டால் கூட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். காலையில் சூரியன் உதித்ததிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை அவர்கள் தம் வீட்டிலிருந்து வேறு எங்காவது போக வேண்டுமானால், கிராமத் தலைவரால் வழங்கப்படும் ராதாரி சீட்டு எனும் அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும்.


படிக்க: குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!


அப்போதைய மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி இந்தப் பட்டியலின் கீழ் கள்ளர்கள் பதிவு செய்யப்படுவதைத் தொடங்கி வைத்தார். அப்போது கள்ளர் சாதியினரின் மக்கள் தொகை 60,000 பேராக இருந்தும், 3000 பேர் மட்டுமே பதிவு செய்தனர். மேலும் ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்வதற்கு வந்துள்ளனர் என்பதை அறிந்த அதிகாரிகள் ஆத்திரம் கொண்டனர்.

அதிகாரிகள் இந்தச் சட்டத்தை பிரமலைக் கள்ளர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, பெருங்காமநல்லூருக்கு வந்தனர். ஆனால், மக்கள் அடிபணிய மறுத்தனர்.

மார்ச் 2, 1920 அன்று, போலீசின் கைரேகைப்பதிவு அதிகாரிகளுடன் முகாமிடத் தொடங்கினர். ஊர்த் தலைவர்களும், பெரியவர்களும், “கள்ளர்கள் விவசாயிகள்; காட்டுமிராண்டிகள் அல்ல. எனவே, நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

பெருங்காமநல்லூர் மக்கள் 1920 ஏப்ரல் 2,3 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்குப் பதிவு செய்வதற்காக தனித்துணை ஆட்சியர் முன் வர வேண்டும் என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி மார்ச் 29, 1920 அன்று உத்தரவிட்டார். இந்நிலையில் ஏப்ரல் 1, 1920 அன்று பெருங்காமநல்லூர் ஊர்க்கோயிலில் கூடிய மக்கள், இத்தீர்ப்புக்கு அடிபணியாமல் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துப் போராடுவது என முடிவு செய்தனர்.

மக்களின் தலைவர்களுக்கும் போலீசுக்கும் வருவாய்த்துறையினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அது பயனற்றுப் போகவே, மக்கள் போராட்டக்களம் புகுந்தனர். போலீசின் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் 16 பேரின் உடல்களை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி, உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டின் போது போராடிய மக்களுக்கு குடிநீர் எடுத்துக் கொடுத்து உதவியதற்காக மாயாக்காள் என்ற பெண்ணை போலீசு துப்பாக்கியின் கத்தியினால் குத்திக் கொலை செய்தது. சுமார் 200 பேருக்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து, சங்கிலிகளால் விலங்கிட்டு ஆடு மாடுகளைப் போல் நடைப்பயணமாக 20 கி.மீ தொலைவிலுள்ள திருமங்கலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போலீசு அதிகாரிகள் மக்களிடையே சாதி மோதல்களைத் தூண்டிவிடவும் பல்வேறு வகைகளில் முயன்றனர்.


படிக்க: டங்ஸ்டன் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுவோம்!


அத்தருணத்தில் கைரேகை சட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு, சிறைப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் குரல் கொடுத்து வந்தார். சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையும் பெற்றுத் தந்தார். மக்களைப் போராட்டங்களத்திலும் ஒருங்கிணைத்தார். ஜோசப் என்ற பெயர் வாயில் நுழையாததால், மக்கள் அவரை ரோஜாப்பூ என்று அழைத்தனர். இன்றும் அவர் பெருங்காமநல்லூர் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறார். இன்று வரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டும் வழக்கம் அம்மக்களிடம் இருந்து வருகிறது.

பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள், உ.முத்துராமலிங்கம் ஆகியோரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். பலகட்டப் போராட்டங்களுக்குப் பின் அச்சட்டத்தை மக்கள் தகர்த்தெறிந்தார்கள்.

இக்குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து எவ்வித முயற்சியையும்  அன்றைய இராசாசி அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. அன்றைய காங்கிரஸ் பார்ப்பனியத் தலைமையும் இந்திய அளவில் எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை என்பதையே வரலாறு கூறுகிறது.

அன்று, உழைக்கும் மக்களின் மீதான இத்தகைய பிரிட்டிஷ் கொடுங்கோலாட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட காங்கிரசில் இருந்த பார்ப்பனக் கும்பல்தான், பார்ப்பனியம்தான் இன்று ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி என்ற மக்கள் விரோத பாசிச சக்திகளின் பின்னணியாக, சித்தாந்தமாக இருக்கிறது என்பதை இந்த இடத்தில் நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

அன்று, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி உயிர்நீத்தனர் பெருங்காமநல்லூர் ஈகிகள். இன்றோ, தங்களின் வாழ்க்கையை அழிக்க எத்தனிக்கும் பார்ப்பன, பனியா கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் சதிகளை எதிர்த்து, வீரம் செறிந்த டங்ஸ்டன் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி தங்களின் உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர் மதுரை மண்ணின் மக்கள்.

ஆம், ஏகாதிபத்திய, பார்ப்பனிய அடக்குமுறைகளுக்கு எதிராக வீறுகொண்டெழுந்து, தங்கள் இன்னுயிரை ஈந்து, உரிமைகளை நிலைநாட்டிய தீரர்களின், ஈகியர்களின் வரலாற்றுத் தொடர்ச்சிதான் நாம். அவர்களின் வழியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னகர்த்துவோம்.


தமிழன்பன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 5

மனிதத் தன்மையே அற்ற மருத்துவர்!

அடுத்த வழக்கு இதுபோன்று நிலையை எடுத்துக் காட்டுவதாகும். அது கத்தியவார் கிராமத்தில் உள்ள ஒரு தீண்டத்தகாத ஆசிரியரின் வழக்கு. காந்தியால் வெளியிடப்பட்டு வரும் ‘யங் இந்தியா’ என்றும் பத்திரிகையின் 1929 டிசம்பர் 12 ஆம் தேதிய பதிப்பில் கீழ்க்கண்ட கடிதம் வெளியிடப்பட்டது. குழந்தை பெற்றிருந்த தனது மனைவிக்கு ஒரு மருத்துவரை மருத்துவம் பார்க்கச் செய்ய, தான் எதிர்கொண்ட இடையூறுகளை அக்கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்த அவர், தனது மனைவியும், குழந்தையும் மருத்துவ உதவியின்றி எவ்வாறு இறக்க நேர்ந்தது என்பதையும் கூறியிருக்கிறார். அக் கடிதம் கூறுவதாவது:

“இந்த மாதம் 5 ஆம் தேதி என் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. 7 ஆம் தேதியன்று உடல் நலமிழந்த என் மனைவிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.

அவளது பலம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது; அவளது மார்பு வீங்கிக் கொண்டது. மூச்சு விடுவதற்கே துன்பப்பட்ட அவளது மார்பெலும்புகளில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. நான் ஒரு மருத்துவரை அழைக்கச் சென்றேன். ஆனால், தான் ஓர் அரிஜன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று கூறிய அவர் எனது குழந்தையையும் பரிசோதனை செய்து பார்க்கத் தயாராக இல்லை. பின்னர் நாகர்சேத் மற்றும் கராசியா தர்பாருக்குச் சென்ற நான் எனக்கு உதவும்படி வேண்டினேன். மருத்துவருக்கான மருத்துவக் கட்டணம் இரண்டு ரூபாயை முழுமையாக நான் கொடுப்பதற்கு நாகர்சேத் பிணையாக நின்றார்.

பின்னர் மருத்துவர் வந்தார்; ஆனால், ஒரு நிபந்தனையின் பேரில். அரிஜன் காலனிக்கு வெளியேதான் நோயாளியைச் சோதனை செய்வேன் என்பதுதான் அந்த நிபந்தனை. பிறந்த குழந்தையுடன் என் மனைவியை அரிஜன் காலனிக்கு வெளியே கொண்டு வந்தேன். பின்னர் மருத்துவர் ஒரு தர்மாமீட்டரை ஒரு முஸ்லிமிடம் கொடுக்க, அந்த முஸ்லிம் அதனை என்னிடம் கொடுத்தார். என் மனைவியிடம் கொடுத்த நான் பின்னர் அதைத் திரும்பப் பெற்று முஸ்லிமிடம் கொடுத்தேன். அந்த முஸ்லிம் அதை மருத்துவரிடம் கொடுத்தார். அப்போது இரவு எட்டுமணி ஆகிவிட்டது. ஒரு விளக்கு வெளிச்சத்தில் அந்த தெர்மாமீட்டரைப் பார்த்த மருத்துவர் நோயாளி நிமோனியா நோயால் துன்புறுவதாகக் கூறினார்.

பின்னர் அங்கிருந்து சென்ற மருத்துவர் மருந்து அனுப்பி வைத்தார். சிறிது ஆளி விதைகளை நான் கடைத் தெருவிலிருந்து வாங்கி வந்து நோயாளி மீது அதைப் பயன்படுத்தினேன். மருத்துவருக்கு இரண்டு ரூபாய் கட்டணத்தை நான் கொடுத்த பிறகும். மறுபடியும் நோயாளியை வந்து பார்க்க அவர் மறுத்துவிட்டார். அந்த நோய் மிகவும் ஆபத்தானது; கடவுள் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும். எனது வாழ்க்கையின் ஒளி அணைந்துவிட்டது. அன்று பிற்பகல் இரண்டு மணி அளவில் என் மனைவி இறந்துவிட்டாள்”.

அந்தத் தீண்டத்தகாத ஆசிரியரின் பெயர் கொடுக்கப் பட்டிருக்கவில்லை. அதே போல அந்த மருத்துவரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. பெயரைக் குறிப்பிட்டால் பழிவாங்கும் செயல்கள் எழலாம் என்ற அந்தத் தீண்டத்தகாத ஆசிரியரின் அச்சத்தினால் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதே அதன் காரணம். ஆனால், அதில் குறிப்பிடப்பட்ட உண்மைகள் மறுக்க முடியாதவை.

இதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நோய்வாய்ப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிக்கு தெர்மாமீட்டர் வைத்து சோதனை செய்ய அந்த மருத்துவர், படித்தவராக இருந்தும் கூட, மறுத்துள்ளார். அந்தப் பெண்மணிக்குச் சிகிச்சை செய்ய அவர் மறுத்ததன் காரணமாக அந்தப் பெண்மணி இறந்துபோனார். அவரது தொழில் அவருக்கு விதித்துள்ள கடமையைப் புறக்கணிக்கிறோம் என்ற வருத்தமோ உணர்வோ அந்த மருத்துவர் கொண்டிருக்கவில்லை. ஒரு தீண்டத்தகாதவரைத் தொடுவதைவிட, மனிதத் தன்மையே அற்றவனாக இருப்பதையே ஓர் இந்து விரும்புகிறான்.

தொடரும்..

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 மே, 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 13 | 1990 மே 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நக்சலிசம் – மகத்தான மக்கள் எழுச்சி!
  • மலிவுவிலை மது திட்டத்தை எதிர்த்து இயக்கம்
  • ஓட்டுக்கட்சிகளின் முகவிலாசம் வெட்ட வெளிச்சமாகியது
  • இந்தியும் ஒரு தாய்மொழிதான்!
  • ராமஜென்ம பூமி வழியில்…
  • ஜனதா தள தலைவர் தேர்தல்: உட்கட்சி ஜனநாயகம் ஒரு கேலி கூத்து!
  • கரையான் புற்றெடுத்து கருநாகம் விரட்டுகிறது!
  • கொலையாளிகள் சாதிமத வெறிக்கு வித்திடுகிறார்கள்
  • அ.ஐ.வி.மு.வின் பலவீனங்கள்: சமரசமும் சாகசமும்
  • பஸ்தார் பூர்வ பழங்குடிகள்: சொந்த மண்ணில் வாழ்விழந்தவர்கள்!
  • மேதினி சிவக்க மே தின நிகழ்ச்சிகள்!
  • அமெரிக்காவின் சூப்பர் 301 வர்த்தகச் சட்டம்: இந்திய மக்களை ஒட்டசுரண்டுவதற்கான உரிமம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


 

‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 4

மகமதியரும் தீண்டாமை பாராட்டினர்!

நான் ஒப்புக் கொண்டால் ஒரு சுற்றுலா செல்ல விரும்புவதாக, எங்கள் இயக்கத்தின் சகதோழர்கள் சிலர் 1934இல் தெரிவித்தார்கள்; நானும் ஒப்புக் கொண்டேன். வெரூலில் உள்ள புத்தமதக் குகைகளையும் நமது சுற்றுப் பயணத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நாசிக் சென்று மற்றவர்களுடன் நான் சேர்ந்து கொள்வது என்று ஏற்பாடு ஆயிற்று. வெரூல் செல்ல நாம் அவுரங்காபாத் செல்ல வேண்டும். அய்தராபாத் மேதகு நிஜாம் அவர்களின் மகமதிய சமஸ்தானத்தின் ஆளுமைக்குட்பட்ட ஒரு நகரம் அவுரங்காபாத். அவுரங்காபாத் செல்லும் முன் தவுலதாபாத் என்னும் மற்றொரு நகரத்தை நாம் கடக்க வேண்டும்; இதுவும் நிஜாமின் அய்தராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. தவுலதாபாத் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரம்; புகழ் பெற்ற இராம்தியோ ராய் என்ற இந்து மன்னரின் தலைநகராக அது ஒரு காலத்தில் விளங்கியது. தவுலதாபாத் கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நினைவுச் சின்னம் என்பதால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதைக் காணத் தவறுவதில்லை. அதன்படி தவுலதாபாத் கோட்டையைப் பார்ப்பது என்பது எங்கள் பயணத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டது.

சில சுற்றுலாக் கார்களையும் பேருந்துகளையும் நாங்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். நாங்கள் மொத்தம் 30 பேர் இருந்தோம். நாங்கள் நாசிக்கில் இருந்து புறப்பட்டு அவுரங்காபாத் செல்லும் வழியில் உள்ள யியோலாவுக்குச் சென்றோம். எங்களது சுற்றுப் பயணத்தை நாங்கள் வேண்டுமென்றே வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நாட்டின் புறநகர்ப் பகுதிகளில் தீண்டத்தகாத மக்கள் எதிர்கொள்ள வேண்டிய இடையூறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் யார் என்பது வெளியில் தெரியாதவாறு பயணம் செய்ய விரும்பினோம். நாங்கள் தங்குவது என்ற முடிவு செய்த இடங்களில் இருக்கும் எங்கள் மக்களுக்கு மட்டும் நாங்கள் எங்கள் பயணத் திட்டத்தைத் தெரிவித்திருந்தோம். அதனால் நிஜாம் சமஸ்தானத்தில் பல கிராமங்களை நாங்கள் கடந்து சென்றபோது எங்கள் மக்கள் எவரும் வந்து எங்களைச் சந்திக்கவில்லை.

ஆனால், நாங்கள் வருகிறோம் என்று தவுலாபாத் நண்பர்களுக்குத் தெரிவித்து இருந்ததால், எங்களை எதிர்பார்த்து அவர்கள் நகரின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். வண்டியிலிருந்து இறங்கி, தேநீரும் சிற்றுண்டியும் அருந்திவிட்டு, பின்னர் கோட்டையைக் காணச் செல்லலாம் என்று அவர்கள் கூறினார்கள். எங்களுக்கு அப்போது தேநீர் மிகவும் தேவையாக இருந்தபோதும், இருட்டும் முன் கோட்டையைக் காண, போதிய நேரம் தேவை என்று கருதியதால் அதனை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் உடனே கோட்டைக்குப் புறப்பட்ட நாங்கள் திரும்பி வரும்போது தேநீர் அருந்துவதாக அவர்களிடம் கூறினோம். அதன்படி எங்கள் ஓட்டுநர்களை விரைந்து செல்லும்படி கூறினோம்; கோட்டை வாயிலுக்குச் சில நிமிடங்களில் நாங்கள் வந்து சேர்ந்தோம்.

அந்த மாதம் மகமதியர்களுக்குப் புனிதமான ரம்ஜான் மாதமாக இருந்தது. கோட்டை வாயிலுக்கு எதிரில் விளிம்பு வரை நீர் நிறைந்த ஒரு குளம் இருந்தது. அதனைச் சுற்றி ஒரு கல் நடைபாதை இருந்தது. பயணத்தின்போது எங்கள் உடைகளும், உடலும், முகமும் தூசு படிந்து அழுக்காகி இருந்த படியால், நாங்கள் முகம் கழுவிக் கொள்ள விரும்பினோம். அதிகமாக யோசனை செய்யாமல், எங்களில் சிலர் அந்தக் குளத்தின் கரையில் நின்று கொண்டே தங்களின் முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டனர். பின்னர் நாங்கள் கோட்டை வாயிலுக்குச் சென்றோம். கோட்டையினுள் ஆயுதந்தாங்கி இராணுவ வீரர்கள் இருந்தனர் பெரிய கதவுகளைத் திறந்து அவர்கள் எங்களை உள்ளே செல்லவிட்டனர்.

கோட்டையினுள் செல்வதற்கு அனுமதி பெற என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தபோது. எங்களுக்குப் பின்னாலிருந்து, “அந்தத் தீண்டத்தகாதவர்கள் குளத்தை அசுத்தப்படுத்தி விட்டார்கள்” என்று கத்திக் கொண்டு நரைத்துப் போன தாடி கொண்ட ஒரு வயது முதிர்ந்த மகமதியர் வந்தார். உடனே அங்கிருந்த மகமதிய இளைஞர்கள், முதியவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கொண்டு எங்களைத் திட்டத் தொடங்கினர். “தீண்டத்தகாதவர்களுக்கு மிகவும் திமிராகிவிட்டது. தங்களின் இழிந்த ஜாதியையும், தாங்கள் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்” என்று எங்களை அவர்கள் பயமுறுத்துவது போல் பேசிக்கொண்டே போனார்கள்.

நாங்கள் வெளியூர்க்காரர்கள் என்றும், உள்ளூர்ப் பழக்க வழக்கங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றும் நாங்கள் கூறினோம். அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த உள்ளூர்த் தோழர்கள் மீது அவர்கள் கோபம் திரும்பியது. “இந்தக் குளத்தைத் தீண்டத்தகாதவர்கள் பயன்படுத்த முடியாது என்று நீங்கள் ஏன் இந்த வெளியூர்க்காரர்களுக்குக் கூறவில்லை” என்ற கேள்வியை அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

“நாங்கள் குளத்துக்குப் போனபோது அவர்கள் அங்கே வந்தே சேரவில்லை. எங்கள் தவறு அல்ல” என்று அவர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். எதையும் கேட்காமல் செய்தது எங்கள் குற்றம்தான் அது. ஆனால், மகமதியர்கள் எனது விளக்கத்தைக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. எங்களை அவர்கள் தொடர்ந்து இழிவான சொற்களில் திட்டிக்கொண்டே இருந்தது எங்களை வெறுப்படையச் செய்தது, வெகு எளிதாக அங்கே கலகம் ஏற்பட்டு அதனால் மரணம் கூட சம்பவித்திருக்க இயலும். என்றாலும் நாங்கள் ஒருவாறு எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம். எங்களது சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் எந்தக் குற்றவியல் வழக்கிலும் சிக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அங்கிருந்த ஒரு மகமதிய இளைஞர் கூறிக் கொண்டே இருந்தான். ஒரு பொதுக் குளத்திலிருந்து தீண்டத்தகாதவர்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதையே அவன் குறித்துக் கூறினான். எனது அமைதியை இழந்த நான் அவனிடம் கோபமான குரலில், ‘அதுதான் உன் மதம் உனக்குப் போதிக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் முஸ்லிமாக மாறி விட்டால், இக் குளத்திலிருந்து அவன் தண்ணீர் எடுப்பதை நீ தடுப்பாயா?’ என்று கேட்டேன். இந்த நேரடியான கேள்விகள் அந்த மகமதியர்களைப் பாதித்தன. எந்தப் பதிலும் அளிக்காமல் அவர்கள் அமைதியாக நின்றனர்.

காவல்காரரிடம் திரும்பிய நான் கோபமாகவே கேட்டேன். ‘கோட்டைக்குள் நாங்கள் போக முடியுமா, முடியாதா என்று சொல். போகமுடியாது என்றால் இங்கே நின்றுகொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை’ என்று கேட்டேன். என் பெயரைக் கேட்ட அவர், நான் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொண்டு கோட்டைக் கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று பின்னர் திரும்பி வந்தார். கோட்டைக்குள் போகலாம் என்று எங்களிடம் கூறிய காவலர் கோட்டைக்குள் எந்த இடத்தில் இருக்கும் தண்ணீரையும் நாங்கள் தொடக்கூடாது என்று கூறினார். அதை நாங்கள் மீறிவிடாமல் இருக்க, எங்களுடன் ஓர் ஆயுதந்தாங்கிய வீரர் அனுப்பப்பட்டார்.

ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் எவ்வாறு ஒரு பார்சிக்கும் தீண்டத்தகாதவர் ஆகிறார் என்பதற்கு நான் ஓர் எடுத்துக்காட்டு அளித்திருந்தேன். இப்போது இந்த நிகழ்ச்சி ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் ஒரு மகமதியருக்கும் தீண்டத்தகாதவரே என்பதைக் காட்டுகிறது.

தொடரும்..

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஏப்ரல், 1-15 மே 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 11-12 | 1990 ஏப்ரல் 16-30, மே 1-15,  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்தியா – பாகிஸ்தான் போரை எதிர்ப்போம்!
  • ரணதிவே மறைவு: போலிகளின் ‘இடது’ சாரி தோற்றமும் மறைந்தது!
  • காஷ்மீர்: இந்தியாவின் காலனியா?
  • அம்பேத்கார் நூற்றாண்டு விழா – பெருமை யாருக்கு?
  • ஆக்கிரமிப்பு-ஆதிக்கப் பேராசை மாறவில்லை
  • தமிழினத் தலைவர் நகைமுகன் கைது
  • நக்சல்பாரி கட்சி வரலாறு
    வசந்தத்தின் இடிமுழக்கம்
  • நம்புங்கள் துரை சொல்கிறார்! போலீஸ் எதிர்ப்பு ‘ஜூ.வி.ஸ்டைல்’
  • கருணாநிதி ஊழல் விளம்பரம்: ஊழலின் ஊற்றுமூலம் என்ன?
  • லித்துவேனியா: கோர்பியை அச்சுறுத்தும் புதிய ந்ருக்கடி
  • உலக விபச்சாரத் தலைநகராக பம்பாய்
  • டான்செம் தொழிலாளர்களின் அவலநிலை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மதுரையில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற எல்.முருகன் மீது ம.க.இ.க வழக்கு!

மதுரையில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற எல்.முருகன் மீது ம.க.இ.க வழக்கு!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram