வழக்கறிஞர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்…. தீர்வு காண தஞ்சை வாரீர்!
மதிப்பிற்குரிய வழக்கறிஞர்களே!
வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் எல்லை மீறி போய்க்கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். “மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர், செயலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு” என்றுதான் இப்பிரச்சனை சென்ற மாதத்தில் தொடங்கியது. பிறகு, “சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்குப் பாதுகாப்பில்லை என்பதால், மத்திய தொழில் பாதுகாப்பு படையை கொண்டுவரலாம்” என்று தலைமை நீதிபதி தெரிவிக்க, மாநில அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி தடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து, ‘சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தரங்கெட்டுப் போனதாக’ உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தொடர்பேயில்லாத ஒரு வழக்கில் பேச, அது நாளேடுகளில் தலைப்புச் செய்தியானது. மறுகணமே, தமிழக பார் கவுன்சிலைப் புறக்கணித்துவிட்டு, அனைத்திந்திய பார் கவுன்சில் 14 மதுரை வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து அறிவித்தது. “மதுரை வழக்கறிஞர் சங்கத்தை காலி செய்யவேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் போன்ற பல ஊர்களின் சங்கங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடைபெற்ற விவாதங்கள் அனைத்தும் வழக்கறிஞர் சமூகத்தையே கிரிமினல்கள் போலச் சித்தரித்தன. “வழக்கறிஞர்கள் நீதிபதிகளையோ போலீசையோ விமர்சித்து எந்த ஊடகத்தில் பேட்டி கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்போம்” என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வம் தொலைக்காட்சியிலேயே அறிவித்தார்.
“நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே மாலை 7 மணிக்கு மேல் இருக்கக்கூடாது” என்றும், “வளாகத்துக்கு உள்ளேயோ வெளியேயோ துண்டறிக்கை, சுவரொட்டி, கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது” என்றும் கருத்துரிமையை முற்றிலுமாகப் பறித்து உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார்.
இந்த நிலைமைகள் குறித்து விவாதிக்க திருச்சி வாசவி மகாலில் செப்டம்பர் 27 அன்று கூட்டம் நடத்தினோம். அதற்கு ஏற்பாடு செய்த திருச்சி பார் அசோசியேசன் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு பார் கவுன்சில் விளக்கம் கோரும் நோட்டீசு அனுப்பியிருக்கிறது. அதில் கலந்து கொண்ட பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கும் விளக்கம் கோரும் நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது, தமிழகத்துக்கும் தமிழக வழக்கறிஞர்களுக்கும் எதிராக ஒரு மிகப்பெரிய சதித்திட்டம் தில்லியில் தீட்டப்பட்டு அமுல்படுத்தப்படுவதாகவே தெரிகிறது.
”நீதித்துறை ஊழலைப் பற்றி பேசக்கூடாது!
நீதிபதிகளின் நியமனத்தைப் பற்றி பேசக்கூடாது!
முறைகேடான தீர்ப்புகளை விமர்சிக்க கூடாது!
கை கட்டி வாய் பொத்தி அடிமைகளாய் நடந்துகொள்ள வேண்டும்”
என தில்லியிலிருந்து நம்மை அச்சுறுத்துகிறார்கள்.
இதற்கு நாம் பணிந்துவிட்டால் பெரியாருக்கும் அம்பேத்காருக்கும் முந்தைய காலத்துக்கு நாம் தள்ளப்படுவோம். அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, சங்கம் சேரும் உரிமை போன்ற உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களுக்கு அவற்றை பெற்றுத்தரும் வழக்கறிஞர்களாகிய நாம், இன்று அந்த உரிமைகளை பறிகொடுத்திருக்கிறோம். நாம் அன்றாடம் புழங்குகின்ற நீதிமன்ற வளாகத்தில் நமது பிரச்சனைகளுக்கான துண்டறிக்கை கூட விநியோகிக்க கூடாதாம். இதைவிட பெரிய அவமதிப்பு வெறென்ன இருக்கிறது?
“மேலும் 2000 வழக்கறிஞர்களைக் கூட நீக்குவோம்” என தமிழக வழக்கறிஞர் சமூகத்தையே அடக்கி ஆள நினைக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில்.
இது சுயமரியாதை மண் என்பதைக் காட்டுவோம். தவறாமல் தஞ்சைக்கு வாருங்கள்!
நாள் : 11-10-2015 ஞாயிறு நேரம்: காலை 10 மணியளவில் இடம் : ஆர்.எம்.வி இராஜசேகர் திருமண மண்டபம், வ.உ.சி நகர், தஞ்சாவூர்
திருச்சியில் செப்டம்ப்ர 27-ம் தேதி நடந்த வழக்கறிஞர்கள் கூட்டம்
தகவல்,
வழக்கறிஞர்கள், கீழமை நீதி மன்றங்கள் – தமிழ்நாடு தொடர்புக்கு : 98945 68144
05-10-2015 அன்று காங்கயம் பேருந்து நிலையத்தில், “டாஸ்மாக்கை மூடு , மக்கள் அதிகாரத்தை நிறுவு..” என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட அனுமதிக்கு பலமுறை இழுத்தடித்து பிறகு அனுமதி வழங்கியது காங்கயம் போலிசு. திட்டமிட்டபடி மாலை 5.00 மணிக்கு பறை முழக்கத்துடன் துவங்கியது ஆர்ப்பாட்டம் .
“இப்பொழுதெல்லாம் சாராயம் லத்தியாக, பூடிசாக, ஜே.சி.பி இயந்திரமாக, இரும்பு பைப்பாக மாறி வருகிறது. ஆனால் மக்கள் அதிகாரமோ மாணவர்களோ இதற்க்கெல்லாம் அஞ்சி ஓடப்போவதில்லை.”
மக்கள் அதிகாரம் வாழ்க !
அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு !
இதோ ஆளவருகுது மக்கள் அதிகாரம்!
குடி கெடுக்கும் டாஸ்மாக்கை !
இழுத்து மூடு இழுத்து மூடு !
ரத்து செய் ரத்து செய்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது
போடப்பட்ட பொய் வழக்கை
ரத்து செய் !
கெஞ்சாதே கெஞ்சாதே !
குடி கெடுக்கும் அரசிடம்
கெஞ்சாதே கெஞ்சாதே !!
தீரவில்லை தீரவில்லை
நீதிமன்றம் தீரவில்லை !
சட்டமன்றம் தீரவில்லை !
ஒன்றே தீர்வு ! ஒன்றே தீர்வு !
மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு!!
என்ற விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.
“டாஸ்மாக்கை மூடு , மக்கள் அதிகாரத்தை நிறுவு..”
தலைமை உரையில் தோழர் வசந்தன் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்களை இந்த அரசு ஒடுக்குவதை அமைதிப்படை சினிமா வசனத்துடன் ஒப்பிட்டு நையாண்டி செய்தார். சாராயம் சட்ட விரோதம் என்றாலும் அதை பாதுகாக்க இந்த போலிசு எப்படியெல்லாம் பாடுபடுகிறது .என்பதை அம்பலப்படுத்தி பேசினார். ஏதோ சூட்டிங் நடப்பது போல போலிசு கேமராக்கள் ஆங்காங்கே தோழர்களை தீவிரவாதிகளை போல படம் பிடிப்பதை எள்ளி நகையாடினார். ‘நேர்மையான’ காவல் துறை தோழர்களை தேடிச் செல்லும்போது டாஸ்மாக்குக்கு எதிராக போராடுபவர்கள் என்று மக்களிடம் விசாரிக்கவில்லை. மாறாக திருடர்களை போல சித்தரிக்க முயற்சி செய்து தோற்று போனதை அம்பலப்படுத்தினார். அடக்கு முறையால் ஒரு போதும் எமது அமைப்பை வெல்லமுடியாது என்பதை பதிவு செய்தார்.
அடுத்ததாக தோழர் புஸ்பராஜ் பேசியபோது
“டாஸ்மாக்குக்கு எதிராக ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தான் துவங்கி வைத்தனர். சசி பெருமாளின் மரணத்திற்கு பிறகு இந்த டாஸ்மாக்குக்கு எதிரான எழுச்சி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் துவங்கப்பட்டது. இந்தப் போராட்டத் தீ தமிழகம் முழுவதும் பற்றி படர்ந்தது. போராடிய மாணவர்களை கொலைவெறியோடு தாக்கும் போலிசு, அவர்களின் பிள்ளைகள் குடித்து விட்டு வரும்போது சந்தோசப்படுவார்களா” என கேள்வி எழுப்பியபோது போலிசாரின் முகத்தில் ஈ ஆடியதை பார்க்க முடிந்தது. “இந்த அடக்கு முறை எங்களை ஒன்றும் முடக்கி விடாது” என்ற அறைகூவலுடன் தமது உரையை நிறைவு செய்தார்.
தோழர் ராமசாமி, மக்கள் அதிகாரம் தமது சொந்த அனுபவங்கள் மூலம் இந்த டாஸ்மாக்கினால் வரும் பாதிப்புகள் அன்றாடம் மக்களை எப்படியெல்லாம் வதைக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும், இந்த டாஸ்மாக்கினால் பெண்கள் இழந்த குடும்பங்களுக்கும் இந்த அரசு என்ன பதில் சொல்ப்போகிறது என்பதை கேள்வி எழுப்பினார். ஆனால், எதற்கும் சம்மந்தம் இல்லாதது போல் தன்னை காட்டிக்கொள்ளும் இந்த அரசினை இனியும் நம்பி இருப்பதில் பலனில்லை, இனி மக்கள் அதிகாரத்தை நிறுவுவதே தீர்வு என்று தன் உரையை முடித்தார்.
“நாங்கள் பிறந்த மண் இது. இதில் எங்கு அநீதி நடந்தாலும் நாங்கள் போராடுவோம்
விளவை ராமசாமி, மாநில துணைத்தலைவர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, “நாங்கள் பிறந்த மண் இது. இதில் எங்கு அநீதி நடந்தாலும் நாங்கள் போராடுவோம்” என்று உரையை துவங்கினார். “நாங்கள் இம்மண்ணில் வாழ்வதே மக்களுக்காக போராடுவதுதான். அதில்தான் மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கிறது. எனவேதான் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக்கை எதிர்த்து போராடினார்கள். அந்தப் போராட்டத்தில் மிகக் கேவலமாக நடந்து கொண்டது போலிசு. நிராயுதபாணியான மாணவர்களை போலிசு லத்திகளும். இரும்பு பைப்புகளும் சூழ்ந்துகொண்டு தாக்கினர். இதை விட கோழைத்தனம் வேறெங்கு இருக்க முடியும். இதை ஒரு பெரிய வீரமாக நினைத்துக்கொள்கிறார்கள். இத்தனை ஆயுதங்களை கொண்டு தாக்கியபோதும் கொஞ்சமும் பின்வாங்கவில்லை மாணவர்கள்.
இப்பொழுதெல்லாம் சாராயம் லத்தியாக, பூடிசாக, ஜே.சி.பி இயந்திரமாக, இரும்பு பைப்பாக மாறி வருகிறது. ஆனால் மக்கள் அதிகாரமோ மாணவர்களோ இதற்க்கெல்லாம் அஞ்சி ஓடப்போவதில்லை. உங்களால் என்ன செய்ய முடியுமோ. அதை நீங்கள் செய்யுங்கள். எங்கள் மண்ணிற்கு கேடு வரும் போது நாங்கள் எதிர்த்து நிற்ப்போம்.
இந்த அரசு தோற்று போவது உறுதி. எனவேதான். நேர்மையானவர்கள் இந்த அரசில் நீடிக்க முடிவதில்லை . உதாரணத்திற்கு டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை சம்பவம் , ஒவ்வொரு நேர்மையானவர்களையும் அழிக்க வேண்டும் என்று இந்த அரசு துடிக்கிறது. சகாயம் விசயத்திலும் இதுதான் நடக்கிறது. இதைத்தான் கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம். இந்த அரசு ஆளும் தகுதியை இழந்து விட்டது. மக்களே அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்ற அறை கூவலோடு தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக தோழர் செந்தூரன் நன்றி உரை வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் இடையில் ரிசர்வு படையை இறக்கி பீதி ஊட்ட நினைத்தது போலிசு. ஆனால் இதற்க்கெல்லாம் மக்களோ மக்கள் அதிகாரத்தின் தோழர்களோ அஞ்சப் போவதில்லை என்ற உறுதியுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் இறுதி வரை இந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்துச் சென்றனர். காங்கயத்தில் மக்கள் அதிகாரத்தின் முதல் ஆர்ப்பாட்டம் மக்களின் பேராதரவுடன் நடைபெற்றது.
தலைவாரிப் பூச்சூடி உன்னை… பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை… மலைவாழை அல்லவோ கல்வி… நீ… வாயார உண்ணுவாய் போ என் புதல்வி.
– கவிஞர் பாரதிதாசன்
மனிதகுலம் தனது வாழ்க்கைத் தேவைகளுக்காக இயற்கையுடன் நடத்திய போராட்டத்தினூடாக சேகரித்துள்ள அறிவுச் செல்வங்கள் ஏராளம். எண்ணும், எழுத்துமாகக் கொட்டிக்கிடக்கும் அந்த அறிவுச் சாகரத்தின் நுழைவாயில் கல்வி.
சீரழிவுக்குத் தள்ளப்பட்ட தனது வாழ்வை மீட்டெடுத்துப் புத்துயிரூட்டிய தனது முதல் ஆசிரியன் குறித்த ஒரு பின்தங்கிய கிராமத்தின் ஏழைச் சிறுமியின் நினைவுகளாக விரிகிறது இக்குறுநாவல்.
இயற்கையின் புதிர் கண்டஞ்சிக் கிடந்தவர்களை இன்று மருத்துவர்களாக, பொறியியல் வல்லுநர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, பல்துறை விற்பன்னர்களாகப் பரிணமிக்கச் செய்துள்ளது கல்வி.
அறியாமை இருளகற்றும் கல்விப் பணியின் வாயிலாக, நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி, வளமூட்டும் அறிவெனும் அகல்விளக்கேற்றியவர்களில் முதன்மையானவர்கள் நம் ஆசிரியப்பெருமக்கள்.
ஏற்றுக்கொண்ட ஆசிரியப்பணியின் கடமை நிமித்தம் என்றில்லாமல், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முன்னிட்டுத் தான் பிறந்து, வளர்ந்த நகர்ப்புறம் விட்டுநீங்கி, நாகரிகத்தின் ‘வளர்ச்சி’ தீண்டியிராத அன்றைய சிற்றூர்களில் சென்று தங்கி துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வங்களின் மனதில் கல்வியின் விதைகளைப் பதியமிட்டு வளர்த்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மகத்தானது.
உயிர்தந்து, உணவூட்டி, உடல்வளர்க்குந் தாயினும் சாலப்பரிந்து கல்வி அமுதூட்டி நம் அறிவுப் பயிர் வளர்த்து, வாழ்க்கையில் ஒளியேற்றிய இத்தகைய ஆசிரியப் பெருந்தகைகள் குறித்த நீங்கா நினைவுகள் இன்றும் நம்மில் பலரின் மனதிலும் உண்டு. இடம், பொருள், ஏவல் என்பதாக களத்தையும், காலத்தையும் பற்றி நிற்கின்றன மாமனிதர்களின் தோற்றங்களும், மனித சமூகத்தை மாற்றியமைத்த வரலாற்றுச் சம்பவங்களும்.
********
அது 1924-ம் ஆண்டு. சோவியத் மண்ணில் பொதுவுடமைச் சமூகம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்த காலம். தனது மக்களின் அனைத்துந் தழுவிய வளர்ச்சிக்கான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திக் கொண்டிருந்தது பாட்டாளிகளின் அரசு. ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியின்கீழ் கொடூரமாக வதைக்கப்பட்டு ஏழ்மையிலும், அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த மக்களை விடுவித்த கையோடு அவர்களது கல்வி வளர்ச்சியிலும் மும்முரமாக ஈடுபட்டது.
அன்றைய சோவியத் நாட்டின் கிர்கீஸியப் பகுதியில் ஒரு மலையடிவாரத்திலிருந்தது குர்கூரெவு எனும் அந்தச் சிற்றூர். ஏழ்மையின் பிடியில் வாடிய பல நாடோடிக் குடும்பங்கள் அங்கே வசித்தனர்.
அங்கிருந்த சிறுவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பதற்காக சோவியத் அரசால் அனுப்பி வைக்கப்பட்டு அவ்வூருக்கு வந்து சேர்கிறான் துய்ஷேன் எனும் இளங் கம்யூனிஸ்டுக் கழக இளைஞன். அவனும் அவ்வூரைச் சேர்ந்தவன்தான். ஆனால், முன்பு பஞ்சம் நிலவிய காலத்தில் வேலைதேடி வெளியூர் சென்றவன்; இன்று, பள்ளியாசிரியனாகத் திரும்பி வந்துள்ளான்.
விவசாய வேலைகளைச் செய்வதற்குப் பள்ளிப்படிப்பெதற்கு? என்று அறியாமையில் கேட்கும் அப்பாவி ஏழை மக்களிடம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறான், துய்ஷேன்; ஏற்க மறுத்து எள்ளி நகையாடுகின்றனர் ஊர்மக்கள். சோர்ந்துவிடவில்லை அவ்விளைஞன்.
அந்தக் கிராமத்தினருகிலிருந்த குன்றின்மீது சிதிலமடைந்த நிலையிருந்த – முன்பொரு காலத்தில் ஒரு பணக்காரனுக்குச் சொந்தமாயிருந்த – குதிரைக் கொட்டடியைத் தனியொருவனாகச் செப்பனிட்டு பள்ளிக்கூடமாக மாற்றுகிறான். வீடு வீடாகச்சென்று பெற்றோர்களிடம் பேசி, வற்புறுத்தி, சோவியத் அரசின் உத்தரவைக் காண்பித்து பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்து வருகிறான். முன்பு பகல்வேளைகளில் வயலுக்குத் தேவையான சாணத்தைப் பொறுக்குவதற்காக ஸ்டெப்பிப் புல்வெளிகளில் அலைந்து திரிந்த அக்குழந்தைகள் துய்ஷேனின் வருகையால் புத்துலகைக் காணும் வாய்ப்பினைப் பெற்றனர்.
துய்ஷேன் ஆரம்பக் கல்வியினைக்கூட முறையாகக் கற்றிருக்கவில்லை. ஓரளவு எழுதவும், எழுத்துக்கூட்டிப் படிக்கவும் மட்டுமே தெரியும். ஆயினும், தனக்குத் தெரிந்தவற்றையேனும் அக்குழந்தைகளுக்குக் கற்றுத் தந்துவிட வேண்டுமென்ற ஆர்வமே உந்து சக்தியாக இருந்து அவனை இயக்கியது. முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வந்திருக்கும் அவ்விளம் பிஞ்சுகளுக்குக் கல்வி புகட்டுவதில் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் ஈடுபட்டான். தங்களிடம் அன்பு பாராட்டி, இனிமையாகப் பழகிய அந்த இளம் ஆசிரியரிடம் பிள்ளைகளும் மிகுந்த நேசத்துடன் பழகினர்; ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.
அல்தினாய் சுலைமானவ்னா – பெற்றோரை இழந்து உற்றாரின் ‘பராமரிப்பில்’ வளரும் அவ்வூரின் ஏழைச் சிறுமி. கற்றுக்கொள்வதில் ஆர்வமிக்க, துய்ஷேனின் அன்புக்குரிய மாணவி. அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் வயதில் மூத்தவள்.
அனாதைக்குப் படிப்பெதற்கு? என்று அல்தினாயை ஒரு வயதானவருக்கு இரண்டாம் தாரமாக மணம்செய்துவைக்க முடிவெடுக்கிறாள் அவளது வளர்ப்புத் தாய். இதனால் அதிர்ச்சியுற்ற அல்தினாய்க்கு ஆறுதல் கூறி அவ்வூரிலிருந்த அவளது பாட்டியின் வீட்டில் தங்கவைத்துப் பாதுகாக்கிறார், துய்ஷேன். ஆனால், குண்டர்களுடன் பள்ளிக்கூடத்துக்கே வருகிறாள் அவளது சித்தி. அல்தினாயை அவர்களுடன் அனுப்ப மறுத்துப் போராடும் ஆசிரியரைக் கடுமையாக அடித்து உதைத்து, கைகளை முறித்து, குற்றுயிரும், குலையுயிருமாக்கிவிட்டு அல்தினாயைத் தூக்கிச் செல்கின்றனர் அம்முரடர்கள்.
சோவியத் செம்படை வீரர்களுடன் சென்று அல்தினாயை மீட்டு வருகிறார் அவளது அன்பிற்குரிய ஆசிரியர் துய்ஷேன். அவளது பாதுகாப்பு கருதியும், மேல்படிப்புக்காகவும் நகரத்துக்கு அனுப்பிவைக்கிறார். பாட்டாளிகளின் அரசு அந்த ஏழைச்சிறுமிக்குக் கல்வியூட்டி வளர்த்தெடுக்கிறது. கற்பது மிகவும் சிரமமாக இருந்தபோதிலும் அல்தினாயின் விடாப்பிடியான போராட்டம் அவளை மிகவும் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்கிறது. தற்போது அல்தினாய் சுலைமானவ்னா ஒரு பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்; தத்துவ விரிவுரையாளர்.
காலத்தின் கரங்கள் அவளது பிறந்த ஊரிலும் மாற்றத்தைக் கொண்டுசேர்த்தது. அவ்வூரின் மக்கள் இப்போது கூட்டுப்பண்ணையின் உறுப்பினர்கள். துய்சேன் ஊன்றிய கல்வியின் விதைகள் நல்ல விளைச்சலை உண்டுபண்ணியிருந்தன. பள்ளிப் படிப்பும், உயர்கல்வியும் கற்றவர்கள் பலர் தற்போது அவ்வூரிலிருந்தனர்.
தனது ஊரில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்தின் திறப்புவிழாவிற்கு விருந்தினராக வருகிறார் அல்தினாய். அப்போது தபால்காரர் துய்ஷேன் பற்றிய பேச்சும் எழுகிறது, அவ்விருந்தில்.
ஆம். அவ்வூரின் முதல் ஆசிரியரான அதே துய்ஷேன் தற்போது, தனது முதிய வயதிலும் கடமை தவறாத தபால்காரராகப் பணியாற்றி வருகிறார். இதை அறிந்துகொண்ட அல்தினாய் மிகவும் வேதனைப்படுகிறார். கல்வியின் விதைகளை அவ்வூரில் முதன்முதலாகத் தூவிய அந்த அற்புத மனிதனை இந்தப் புதிய கல்விக்கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைத்து உரிய மரியாதை செய்யத் தவறியது குறித்து அவரது மனம் வேதனைப்படுகிறது.
சீரழிவுக்குத் தள்ளப்பட்ட தனது வாழ்வை மீட்டெடுத்துப் புத்துயிரூட்டிய தனது முதல் ஆசிரியன் குறித்த ஒரு பின்தங்கிய கிராமத்தின் ஏழைச் சிறுமியின் நினைவுகளாக விரிகிறது இக்குறுநாவல்.
புறக்கணிப்பால் சோர்ந்துவிடாத செயலார்வம்; இன்னல்களைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் போராடும் வீரம்; குழந்தைகளின் மீதான நேசம்; அவர்களது கல்வி வளர்ச்சியின்பால் கொண்டிருந்த அக்கறை; தனது போதாமை, குறைபாடு குறித்த கழிவிரக்கம் ஏதுமின்றி மக்கள் நலன்பேணும் தனது அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் காட்டிய இலட்சிய உறுதி; பிரதிபலன் பாராமல் பணியாற்றும் கடமையுணர்வு; அனைத்துக்கும் மேலாக தனது வாழ்க்கையில் ஒளியேற்றிய ஆசான்.. என்று மாமனிதராக உயர்ந்து நிற்கிறார் அல்தினாயின், குர்கூரெவு கிராமத்தின் முதல் ஆசிரியன்.
மனிதர்கள் தமது உயரிய சிந்தனைகளால் சிறப்படைகிறார்கள். உயரிய சிந்தனைகள் உயர்வான சமூகத்தில் இயல்பாகவே உதித்தெழுகின்றன. பொதுவுடமையே அந்த உயர்ந்த சமூகம். முதல் ஆசிரியன் எனும் இந்நூல் அதில் விளைந்துள்ள இலக்கிய முத்து.
*****
முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறது இன்றைய நம் வாழ்க்கை. சந்தையின் விதிகள் சகலத்தையும் மாற்றியமைக்கின்றன. சரஸ்வதியும்கூட ஒரு சரக்கு மட்டுமே.
முன்னாள் கள்ளச் சாராய ரவுடிகளும், திடீர் பணக்கார, அரசியல் ரவுடிகளுமே கல்விக்கோயிலின் இந்நாள் தெய்வங்கள். காசுள்ளவன் பக்கம் மட்டுமே திரும்புகின்றன கல்விக் கடவுளர்களின் கடைக்கண் பார்வைகள். உண்டியலில் கொட்டப்படும் காணிக்கையின் அளவைப்பொருத்தே அமைகிறது கல்விச் சேவையின் தரம். கல்வி வள்ளல்களின் கருணையில் பொங்கி வழிகிறது கல்வி வியாபாரம்.
மகத்தான ஆசிரியப்பணியின் மாண்புகள் கொடூரமாக வெட்டி வீசப்படுகின்றன தனியார்மயக் கல்விக்கொள்ளையர்களால். மாணவச் செல்வங்களின் அறிவுக்கண்களைத் திறப்பதல்ல; முதலாளித்துவச் சந்தையில் விலைபோகும் வண்ணம் பிராய்லர் குழந்தைகளை அடைகாப்பதே வேலை என்பதாக மாற்றப்பட்டுள்ளது ஆசிரியப்பணியின் வரையறைகள். மெத்தப் படித்திருந்தும் கல்வித்தந்தைகளின் பொறியில் -பொறியியல் கல்வி நிறுவனங்களில்- அகப்பட்ட கூலி அடிமைகளாக உழல்கின்றனர் இன்றைய பேராசிரியர்கள்.
கல்விச்சேவையில் கைகழுவிக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஆண்டுதோறும் வெட்டிக்குறுக்கப்படுகிறது கல்விக்கான மானியம். நாள்தோறும் இழுத்துமூடப்படுகின்றன அரசுப்பள்ளிகள். ஏழைகளின் எட்டாக்கனியாகத் தொலைவில் செல்கின்றன அருகமைப்பள்ளிகள். நல்லாசிரியர் விருதுகளை எள்ளி நகையாடுகின்றன சில அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சீரிய கந்துவட்டிப்பணி.
ஆதிக்கசாதி வெறியும், தனியார்மயக் கொள்ளையும் நிரம்பி வழியும் முதலாளித்துவக் குப்பைக்கிடங்கில் பற்றியெரியும் பார்ப்பனியத்தீ இன்றைய கல்விச்சூழலில் நச்சுக்காற்றைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது நம் குழந்தைகளின் கல்வி. பல அல்டினாய்கள் பிஞ்சு வயதில் கருகிகொண்டிருக்கின்றனர்.
முடைநாற்றமடிக்கும் இந்த விசக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு அப்துல் கலாமின் வல்லரசுக்கனவில் மயங்கிக் கிடப்பதா? அல்லது, அழுகி நாறும் இந்த சமூக அமைப்பைத் தூக்கியெறிந்து, நம் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து முன்னெடுக்கப் போகிறோமா? என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி.
முதல் ஆசிரியர்
ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367
நூல் அறிமுகம் செய்பவர்
மருதமுத்து,
பொதுக்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
“இந்த அரசு டாஸ்மாக் கடைகளை மூடாது” என்று சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆவுடையார்கோவில் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பினர், தமிழக மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்ககூடிய மதுவிலக்கிற்கு ஆதரவாக “மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் 29-09-2015 அன்று பெருந்திரளான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
“எங்கள் ஊரில் டாஸ்மாக் கடையை அகற்ற நீங்கள் தலைமை தாங்குங்கள், நாங்கள் மூடுகிறோம்”
இந்த ஆர்ப்பாட்ட பிரச்சாரங்களை பிரசுரங்களாக அச்சிட்டு மக்களிடம் கிராமம் கிராமமாக கொண்டு சென்றபோது, கிராமத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் தோழர்களை வரவேற்று, “எங்கள் ஊரில் டாஸ்மாக் கடையை அகற்ற நீங்கள் தலைமை தாங்குங்கள், நாங்கள் மூடுகிறோம்” என கோரிக்கை வைத்தனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பினரின் பிரச்சாரம் மக்களை ஈர்க்கும் என்பதை அறிந்த உளவுத்துறையினர் மக்கள் அதிகாரத்தில் திரண்ட புதியவர்களை அணுகி, “டாஸ்மாக்கை மூடுவதை நாங்களும் ஆதரிக்கிறோம், ஆனால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற மக்கள் அதிகாரம் அமைப்பில் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். வேறு அமைப்பில் சேர்ந்து செய்யுங்கள். இந்த அமைப்பில் சேர்ந்தால் அரசு வேலை கிடைகக்காது” என்று நயமாகவும், மிரட்டியும் வந்தனர். அதனை புறம் தள்ளிய மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் மக்களை திரட்டுவதற்கு முழுவீச்சாக பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஆர்ப்பாட்டம் சரியாக 29-09-2015 அன்று 5.30 மணிக்கு எழுச்சிகரமான முழக்கங்களுடன் தொடங்கியது.
29-09-2015-ம் தேதி ஆர்ப்பாட்ட நாளன்று உளவுத்துறையும், போலீசும் “ஏதோ 10, 20 பேர் வந்து கத்திவிட்டு போவர்கள்” என்று கடைக்காரர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆர்ப்பாட்ட நாளன்று மாலை 4.00 மணியிலிருந்து ஆவுடையார்கோவிலைச் சுற்றியிருக்கும் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் டெம்போவிலும், வேனிலும் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த குவிய தொடங்கினார்கள். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உளவுத்துறையும், போலீசும் செய்வது அறியாது விழித்தனர்.
ஆர்ப்பாட்டம் சரியாக 29-09-2015 அன்று 5.30 மணிக்கு எழுச்சிகரமான முழக்கங்களுடன் தொடங்கியது. முழக்கம் முடிந்தவுடன் மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவினர் பாடல்பாட துவங்கியவுடன் ஆவுடையார்கோவில் கடைவீதியில் இருந்த மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்ட இடத்தில் குவிய தொடங்கினர். பெருந்திரளான மக்கள் திரண்டு இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகார அமைப்பின் உறுப்பினர் தோழர் MSK பழனி அவர்கள் தலைமை தாங்கி பேசினார்.
அவர் தனது தலைமை உரையில், பச்சையப்பா கல்லுரி மாணவர்கள் மீதான காவல்துறையின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கும் நீதிமன்றத்தின் நியாயமற்ற போக்கிற்கும் கண்டனம் தெரிவித்தும், ஆவுடையார்கோவில் பகுதியில் டாஸ்மாக்கால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொது இடத்தில் ஏற்படும் சீரழிவு ஆகியவற்றை விளக்கி பேசியும், ஆவுடையார் கோவிலில் மக்கள் அதிகாரம் அமைப்பில் தாங்கள் இணைந்து டாஸ்மாக்கை மூட வேண்டி நடக்கின்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டிய அவசியத்தை விளக்கியும் பேசினார்.
ஆவுடையார்கோவில் கடைவீதியில் இருந்த மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்ட இடத்தில் குவிந்தனர்.
அடுத்ததாக கண்டன உரை ஆற்றிய வழக்கறிஞர் உலகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கண்ணன், தி.மு.கவைச் சேர்ந்த சதீஸ் ஆகியோர் “இந்த அரசு டாஸ்மாக்கை மூடமாட்டேன் என அடம் பிடிப்பது தவறு. மக்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக்கை மூடவேண்டும்” என்று வலியுறுத்தி பேசினார்கள்.
அடுத்ததாக சமூக ஆர்வலர்கள், அருள்மேகி உலகநாதன், சொனமுத்து ஆகியோர் தங்கள் ஊழல் டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைத்து மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியிருக்கிய இந்த அரசினை கண்டித்தும் உடனடியாக தமது குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனா.
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்களான பழனி, ரமேஷ் ஆகியோர் தமது உரையில் போலீசின் அடாவடித்தனத்தை கண்டித்தும் குடிகாரர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையில் காவல்துறை இருந்து வருவதை சுட்டிக்காட்டி, அப்பாவி மக்களிடம் காட்டப்படும் காவல்துறையின் வீரத்தை எள்ளி நகையாடியும், “மக்கள் ஆள தகுதி இழந்த இந்த அரசு கட்டமைப்பிடம் டாஸ்மாக்கை மூட மனு கொடுப்பதால் எந்த பயனும் இல்லை, மக்களே தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்து டாஸ்மாக்கை மூடவேண்டும்” என்று அறைகூவி, “மக்கள் குடியிருப்பு பகுதியில் எங்கள் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் கடைகள் திறந்து நடத்தப்படுகின்றன. ஏன் கோபாலபுரத்திலும் , போயஸ்தோட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் திறந்து நடத்த வேண்டியதுதானே?” என்று கேள்வி எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த மக்கள் கலையாமல் உறுதியாக நின்று கொண்டு பேச்சை கேட்டனர்.
இறுதியில் நிறைவுரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் பேச ஆரம்பித்தபோது மழை குறுக்கிட்டது. இருந்தாலும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த மக்கள் கலையாமல் உறுதியாக ஆங்காங்கே கடைகளின் கூரைகளில் ஒண்டி நின்று கொண்டு தோழரின் சுமார் 40 நிமிட பேச்சை கேட்டனர்.
தோழர் காளியப்பன் தமது உரையில் ஜெயா அரசின் பாசிச தன்மையையும், இந்த அரசு ஆளத் தகுதி இழந்துவிட்டது என்பதையும் விளக்கிப் பேசி மாவட்ட ஆட்சித்தலைவரும், போலீசும் டாஸ்மாக்கிற்க்காக வேலை செய்வதையும் காவல் நிற்பதையும் அம்பலப்படுத்தியும் டாஸ்மாக்கால் மக்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறினார். ஒட்டுமொத்த தமிழகமே மதுவிலக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்து மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கி போராடும் போது, போராட்டங்களை போலீசை கொண்டு ஒடுக்கிவரும் இந்த அரசின் போக்கை கண்டித்தார். ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளின் மதுவிலக்கு போராட்டங்களை அம்பலப்படுத்தி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்குக்த்தான்” என அரசியல் கட்சிகள் பேசுவதை எள்ளி நகையாடினார். “மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்து போராடினால்தான் டாஸ்மாக்கை மட்டும் அல்ல மக்களின் அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்” என்று கூறி நிறைவுசெய்தார்.
கண்டன உரைகளுக்கு இடை இடையே ம.க.இ.கவின் மைய கலைக்குழுவினர் நிகழ்த்திய புரட்சிகர பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அதிலும் குறிப்பாக “மூடு டாஸ்மாக்கை”, “ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயசுல உல்லாசம்”, “சொத்துக்குவிப்பு வழக்கில் சொன்ன தீர்ப்பு தப்பா” போன்ற பாடல்கள் பாடிய போது மக்கள் சாலைகளின் இரு புறமும் கூடி பாடல்களின் புரட்சிகர தன்மையை கண்டு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து கொண்டு இருந்தனர். இதனை பார்த்த போலீசார் மக்களை வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏறி ஊருக்கு போக சொல்லி விரட்டிக் கொண்டு இருந்தனர். இதனால் ஒலி பெருக்கி மூலம் போலீசாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த உடன் போலீசார் தங்கள் செய்கையை நிறுத்திக் கொண்டனர்.
கண்டன உரைகளுக்கு இடை இடையே ம.க.இ.கவின் மைய கலைக்குழுவினர் நிகழ்த்திய புரட்சிகர பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
இறுதியாக மக்கள் அதிகார அமைப்பின் தோழர் கண்ணன் நன்றியுரை கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பினர் அந்த பகுதி மக்களிடையே ஆலோசித்து டாஸ்மாக்கை மூடுவதற்கான அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாரகி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்நடத்திய மக்கள் அதிகாரதோழர்கள்மீதுஇன்ஸ்பெக்டர் காட்டியவீரம்!
ஆவுடையார்கோவிலில் காவல்துறை ஆய்வாளராக உள்ள பிரேம் ஆனந்த் சென்னையில் பணிபுரிந்தபோது யாருக்கும் பயப்படாமல் அரசியல்வாதியையும் வழக்கறிஞர்களையும், எலும்பை முறித்ததாக புகார் கொடுக்கச் செல்லும் மக்களிடமும், இந்த பகுதி அரசியல் கட்சியினரிடமும் பீலாவிட்டு வருவது வழக்கம். “போலீசை எவன் எதிர்த்தாலும் அவன் எலும்பை முறிப்பேன்” என சிங்கம் பட பாணியில் வீர வசனம் பேசி வருவதும் அவரது வாடிக்கை.
இந்நிலையில் 29-09-2015-ம் தேதி மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆய்வாளர் பிரேம்ஆனந்த் நிற்கும்போது, காவல்துறையின் அயோக்கியதனங்களை பட்டியலிட்டு தோழர்கள் விமர்சித்து பேசியுள்ளார்கள். தனக்கு கீழ் வேலை பார்க்கும் போலீசுகாரர்களை புகார்தாரர்கள், குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் முன்பே, “பொட்ட பயலே” என்றும், “கோத்த, கொம்மா” என்றும் கெட்ட வார்த்தைகளிலும் பேசி வருபவர் பிரேம்ஆனந்த். மேலும் போலீசுகாரர்களிடம் சென்னையில் வேலை பார்க்கும் போது உயர் அதிகாரிகளையை மதித்தது கிடையாது என்றும் பல பேரை தான் அடித்து புரட்டி எடுத்துள்ளதாகவும் தான் யாருக்கும் பயப்படாத வீராதி வீரன் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி சக போலீசுகாரர்களிடம் பயத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 03-10-2015-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக பேசியுள்ளார்கள். இதில் ஆர்ப்பாட்டத்திற்கு இவ்வளவு பெரும்திரளான மக்கள் திரண்டதை முன்கூட்டியே கணித்து அறியமுடியாத ஆவுடையார்கோவில் காவல்துறை ஆய்வாளரை கண்டித்துள்ளதாக தெரிகிறது. போதக்குறைக்கு ஆவுடையார்கோவில் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் மாரிமுத்து என்ற காவலர், “எங்களிடம் வீரன் என தற்பெருமை பேசுகிறாயே, 29-ம் தேதி நடந்த ஆர்பாட்டத்தில் போலீசைப் பற்றியும், மக்கள் அதிகாரத்தைப் பற்றியும் பேசும் போது வாலை சுருட்டிக் கொண்டு ஏன் நின்றீர்கள்? உங்கள் வீரத்தை அவர்களிடம் காட்ட வேண்டியது தானே” எனச் சொல்லி உசுப்பு ஏற்றியுள்ளார். தனது பிம்பம் உடைவதை அறிந்த பிரேம ஆனந்த் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் தலைக்கு ஏறிய பிரேம் ஆனந்த் 04.10.2015-ம் தேதி காலை 8 மணிக்கு கைலியுடன் கடைத்தெருவுக்கு வந்திருக்கிறார். மக்கள் அதிகாரத் தோழர்கள் MSK பழனி, இந்தியன் பழனி ஆகியோர் டீ குடித்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்து கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு “மைக்கை புடிச்சி பேசின தேவுடியா பயலுக நீங்க தானடா? இப்ப போலீச பத்தி பேசுங்கடா, ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா மோதி பார்ப்போம்” என்று தகராறு செய்துள்ளார்.
அதற்கு தோழர்கள் ”நாங்கள் பேசியது தவறு என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்” என்று கூறியதற்கு
“நான் எந்த சட்டத்தையும் மயிருக்குகூட மதிக்க மாட்டேன்” என்று கூறி தன்னுடன் வந்த காவலர் மாரிமுத்துவிடம் “இவனுகளை அடித்து ஸ்டேசனுக்கு இழுத்து வா” என்று உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவினர் பாடல்பாட துவங்கியவுடன் ஆவுடையார்கோவில் கடைவீதியில் இருந்த மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்ட இடத்தில் குவியத் தொடங்கினர்
இந்த உத்தரவை நிறைவேற்ற தயங்கிய காவலர் மாரிமுத்துவை பார்த்து ”ஏண்டா பொட்டப் பயலே, நீயெல்லாம் போலீசா?” என்று ஆணாதிக்கத் திமிரோடு திட்டி ஆத்திரத்தில் மாரிமுத்துவின் செல்போனை பிடுங்கி ரோட்டில் போட்டு உடைத்துள்ளார்.
பின்னர் தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றுள்ளார். அதற்கு தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்து நின்றபோது, ஆய்வாளர் பிரேம் ஆனந்த் ”நான் ஆம்பிளடா வாங்கடா மோதி பார்ப்போம்” என்று பலமுறை கூறியுள்ளார். ஆய்வாளரின் கைலியை மடித்து கட்டிய ரவுடித்தனத்தை காண மக்கள் திரளாக கூடிவிட்டதால் ஆண்மையுள்ள இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் ”உங்களை பின்னாடி பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு இடத்தை காலிசெய்துவிட்டு சென்றுள்ளார்.
சம்பவத்தை விசாரித்த பொதுமக்கள்,”வார்த்தைக்கு வார்த்தை நான் ஆம்பிள்ளை என்று கூறும் ஆய்வாளார் பிரேம் ஆனந்த் ஆம்பிளையாக இருந்தால் ஆர்ப்பாட்டத்தில் போலீசை விமர்சித்து பேசியபோதே தட்டிக்கேட்டிருக்கலாமே, இப்போ, தோழர்கள் தனியா இருக்கும்போது தகராறு செய்வது என்ன நியாயம்?” என ஆய்வாளர் பிரேம் ஆனந்தின் வீரத்தை எள்ளி நகையாடி சென்றனர்.
மக்கள் அதிகாரம் ஆவுடையார்கோவில் பகுதியில் நடத்திய ஆர்ப்பட்டத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டதால் அதிர்ச்சி அடைந்து அதிகாரவர்க்கமும், போலீசும் முன்னணியில் உள்ள தோழர்களை மிரட்டியும், பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தால் ஒடுக்கிவிடலாம் என திட்டம் தீட்டி இருப்பதாக தெரியவருகிறது. அதன் விளைவு தான் பிரேம் ஆனந்த், வடிவேல் பாணியில் தோழர்களிடம் மீரட்டி தகராறு செய்துள்ளார். ஆனால் மக்கள் அதிகாரம் தோழர்களின் உறுதி பிரேம் ஆனந்த் போன்றவர்களை காமெடி பீஸாக்கி விட்டது.
தோழர்களை அடித்து சித்ரவதை செய்து பொய்வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன் என்றும் ரவுடி லிஸ்டில் சேர்ப்பேன் என்றும் பிரேம் ஆனந்த் மிரட்டினாலும் அல்லது அதை செய்தாலும் மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் அதை எதிர் கொண்டு போலீசின் தார்மீக பலத்தை இழக்கச் செய்வார்கள்.
தகவல்
மக்கள் அதிகாரம் ஆவுடையார்கோவில் பகுதி புதுக்கோட்டை மாவட்டம்.
தமிழ்நாட்டில் மாபியா கும்பல் ஆட்சி நடக்கிறது! மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு இல்லாத நிர்வாகத்துறை!
“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ-வுக்கு ஜாமீன் வழங்க ஒரு ரூபாய் கூட முன்பணம் கட்ட சொல்லவில்லை!
டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய மாணவனுக்கு ரூ. 50,000 முன்பணம் கட்டினால் தான் ஜாமீன்!
நீதிமன்றம் அரசின் பச்சையான ஒடுக்குமுறைக்கு துணை நிற்கிறது!
பாதிக்கப்படும் மக்கள் போராடும் பொழுது தோளோடு தோளாக துணை நிற்கிறோம்!”
வழக்குரைஞர் மில்ட்டன், செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை 16-09-2015 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ”விடியலே வா” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அரை மணி நேர காணொளி காட்சி!
வழக்குரைஞர் சு. ஜிம்ராஜ் மில்ட்டன், செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
50, முதல்மாடி, ஆர்மேனியன் தெரு,
பாரிமுனை, சென்னை – 600 001 Contact : 90946 66320
ஆயிரக்கணக்கான மக்கள் சிறை செல்லத் தயாராகி மணல் கொள்ளைக்கு எதிராக ஆற்றில் இறங்கி போராடினோம். கார்மாங்குடி மணல் குவாரியை மூடினோம்.
மேலப்பாலையூர் டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராடி 14 பேர் ஒரு மாதம் சிறை சென்றார்கள். அந்த டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் (கோப்புப் படம்)
ஆனால், “டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகி விடும். எனவே டாஸ்மாக்கை மூட முடியாது” என்று திமிர்த்தனமாக பேசுகிறார்கள் ஆட்சியாளர்கள். கள்ளச்சாராயம் விற்ற காலத்தில் கூட சிறுவர்கள், மாணவர்கள் யாரும் குடித்ததில்லை. ஊருக்குள் குடிப்பவர்கள் கூட விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் அன்றைக்கு குடிப்பவர்கள், குடிப்பது கேவலம், அசிங்கம் என்று கருதினார்கள். இன்றைக்கு சிறுவர்கள், மாணவர்கள் அனைவரும் குடிப்பது, புகைபிடிப்பது, பாக்கு போடுவது அனைத்தும் நாகரிகமானதாகவும், அது ஒன்றும் பெரிய தவறில்லை என்ற கேடுகெட்ட பண்பாட்டை பரப்பி உள்ளார்கள் ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கங்களும்.
குடிப்பதனால் கொலை, திருட்டு, பெண்களை கேலி செய்வது, பாலியல் வன்முறைக்கு செல்வது போன்ற ஊதாரித்தனமான வாழ்க்கைக்கு சென்றது. கௌரவம், ஒழுக்கம், இந்த சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள், சமூக அக்கறை என அனைத்திலும் ஏதுமற்ற விட்டேத்திகளாக, எது சொன்னாலும் தலையை ஆட்ட வேண்டும் என்ற ஆட்டு மந்தைகளாக நம்மை மாற்றியுள்ளார்கள் ஆட்சியாளர்கள்.
இந்த கேடுகெட்ட அடிமைத்தனமான பண்பாட்டை இனியும் சம்மதிக்கப் போகிறோமா? அல்லது அதை வீழ்த்தப் போகிறோமா? ஆம். வீழ்த்துவதுதான் நம்மையும், நமது சமூகத்தையும் சீர்படுத்தும். அடிப்படை உரிமைகளையும், சமூக அக்கறை சமூக அக்கறையையும் பெற்றுத் தரும்.
காவனூர் டாஸ்மாக்கை மூடவும், பவழங்குடி, தேவங்குடி ரோடு போடவும் அனைவரும் குடும்பத்தோடு போராடினால்தான் கோரிக்கையில் வெற்றிபெற முடியும்.
திருடக் கூடாது, பொய் சொல்லக்கூடாது, குடிபோதை கூடாது, பெண்களை மதிக்க வேண்டும் என்பதை குடும்பத்தின், சமூகத்தின் பண்பாடாக மாற்றப் போராடுவோம். இதுதான் எதிர்கால மனித குலத்திற்கு நாம் செய்யும் அடிப்படை கடமையாகும்.
மேலப்பாலையூர் டாஸ்மாக் கடையை மூட போராடி சிறை சென்றவர்கள்
S.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடுS.செந்தில்குமார், மாவட்டத் தலைவர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், விருதைR.நந்தகுமார், மாவட்டச் செயலாளர்,
விவசாய சங்கம், மேலப்பாலையூர்
ஆளும் அருகதையற்ற அதிகாரிகள் செய்ய மாட்டார்கள்! இனி மக்கள்தான் அதிகாரத்தை கையிலெடுத்து செயல்படுத்த வேண்டும்!! ஒன்று திரள்வோம் மக்கள் அதிகாரத்தில்!!!
மாபெரும் ஆர்ப்பாட்டம்
07-10-2015 புதன், மாலை 4 மணி, கருவேப்பிலங்குறிச்சி
தலைமை R. நந்தக்குமார், மாவட்ட செயலாளர், விவசாய சங்கம், மேலப்பாலையூர்
ஆர்ப்பாட்ட உரை
தோழர் முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், விருதை.R ராஜவன்னியன்,
ஒன்றிய செயலாளர்., தே.மு.தி.க, சி.கீரனூர்திருமதி மந்திரிகுமாரி,
கச்சிராயந்ததம்.T.இளங்கோவன் தலைமை ஆசிரியர் (ஓய்வு) கருவேப்பிலங்குறிச்சி
இல. சிறுத்தொண்ட நாயனார்,
தலைமை ஆசிரியர் (ஓய்வு), தே.பவழங்குடி
சி.தெய்வக்கண்ணு,
உழவர்மன்றம், பவழங்குடி
வெங்கடேசன்,
மக்கள் அதிகாரம், விளாங்காட்டூர்.
G.கொளஞ்சி,
மேலப்பாலையூர்
M.G.பஞ்சமூர்த்தி,
மருங்கூர்
K. செல்வக்குமார், செயற்குழு உறுப்பினர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், விருதை.K. சுப்பிரமணியன், நேரம்A.கோபாலகிருஷ்ணன், கார்மாங்குடி
தோழர் கதிர்வேல், செயலர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருதை
வை.வெங்கடேசன், மாவட்டத் தலைவர்
மா.க.உ.பெ சங்கம், விருதை
வழக்கறிஞர் செந்தில்குமார், மாவட்டத் தலைவர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்
வழக்கறிஞர் பா. சிவாஜிசிங், விருதை வழக்கறிஞர் S. சுரேஷ்குமார், விருதை
வழக்கறிஞர் R. புஷ்பதேவன், மாவட்டச் செயலாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், விருதை.
சிறப்புரை : வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
நன்றியுரை : K.வேல்முருகன், மேலப்பாளையூர்.
தகவல்
மக்கள் அதிகாரம்-தமிழ்நாடு விருத்தாசலம் வட்டம் : 9791286994
பட்டேல்களின் போராட்டம் - ஆர்.எஸ்.எஸ்-இன் சதித் திட்டம்
வல்லபாய் பட்டேல் சிலை முன்பு ஹர்திக் பட்டேல் – பனியாக்களின் உத்தி!
இந்து மதவெறிக் கலவரங்களுக்காக இழிபுகழ் பெற்ற குஜராத்தில் ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞனின் தலைமையில் ஆகஸ்டு மத்தியில் இடவொதுக்கீடு கோரித் துவங்கிய போராட்டம் இலட்சக்கணக்கானவர்களின் பங்கேற்போடு துவங்கி சில பத்து பேர்கள் கலந்து கொண்ட மூத்திரச் சந்து கூட்டம் ஒன்றோடு நிறைவு பெற்றுள்ளது.
படேல் மற்றும் படேல்களின் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் குஜராத் மாநிலமே குலுங்கியதாக முதலாளித்துவ ஊடகங்கள் தெரிவித்தன. தமிழ் நாட்டின் இடஒதுக்கீடு அரசியல் போராளிகளோ “பெரியாரின் சிரிப்பொலி மோடியின் குஜராத்திலேயே கேட்கிறது பாருங்கள்” என்று பெருமையாக காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள். அகில இந்திய ஊடகங்களோ, ஹர்திக் படேலுக்கு “மோடி விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப வந்த புதிய தலைவராக” ஞானஸ்நானம் செய்வித்தன.
2002-ம் ஆண்டுக் கலரவத்தில் மோடி ‘சாதித்துக்’ காட்டியதற்குப் பின் ஹர்திக் படேல் தான் பெரிய கும்பலைத் திரட்டிக் காட்டியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆகஸ்டு (2015) மாதம் 25-ம் தேதி அகமதாபாத்தில் ஹர்திக் படேல் நடத்திய ‘புரட்சிப் பேரணியில்’ சுமார் ஐந்து லட்சம் படேல்கள் கலந்து கொண்டனர். பேரணிக்குப் பின் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுக்கவே, போலீசார் பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைத்தனர்.
அகமதாபாத் பேரணியைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிக்கபட்டன; ஏ.டி.எம் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன; இதர அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன – வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்ட சேதம் அல்லது இழப்பின் மதிப்பு நூறு கோடிக்கும் மேல் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பெருகி வரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து வசதி ரத்து செய்யப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் கலவரக்காரர்களால் தகவல் பரிமாறப்பட்டு அதன் மூலம் வன்முறை பரவுவதைத் தடுக்க கைப்பேசி இணையம் முடக்கப்பட்டது.
இலட்சத்தில் ஆரம்பித்து பத்திருபதில் முடிந்த போராட்டம்
உச்சகட்டமாக படேல்கள் ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்திய பேரணியில் நடந்த கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் 17 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தின் சிறு மற்றும் குறுந் தொழில்களைக் கையில் வைத்துள்ள படேல்கள், பொருளாதார ரீதியில் தமது எதிர்ப்பைக் காட்ட உள்ளூர் வங்கிகளில் தாம் செய்திருந்த முதலீடுகளைத் திரும்ப பெற்றனர். செப்டெம்பரில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட மோடியின் முன்னிலையில் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் அமெரிக்க வாழ் படேல் சாதியினர்.
எனினும், இந்த ஆரம்பகட்ட ஆரவாரங்கள் ஒருவழியாய் ஓய்ந்து பல ஆயிரங்களில் திரண்ட கூட்டம் மெல்ல சில ஆயிரங்களாக குறைந்து, பின் சில நூறாக சுருங்கி கடைசியில் ஹர்திக் படேல் அறிவித்திருந்த ஏக்தா யாத்ரா பேரணியில் சுமார் ஐம்பதிற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். தடையை மீறி ஊர்வலத்திற்கு ஒழுங்கு செய்ததாக ஹர்திக் படேலை போலீசார் கைது செய்ய முனைந்த போது, ஹர்திக் படேல் பிக்பாக்கெட் குற்றவாளியைப் போல் தெரு வழியே ஓடித் தப்பும் நிலை உருவானது. ஒருவழியாக பெரும் கலகமாக சித்தரிக்கப்பட்ட படேல் இடவொதுக்கீடு போராட்டம் இறுதியில் நகைப்பிற்கிடமான முடிவை எட்டியது.
எனினும், இந்தப் போராட்டங்கள் எதைச் சாதிப்பதற்காக தூண்டி விடப்பட்டதோ அந்த நோக்கத்தை ஏறக்குறைய நிறைவேற்றி விட்டது என்பதை தற்போது வெளியாகி வரும் செய்திகளில் இருந்து அறிய முடியும். அந்தச் செய்திகளை நாம் பார்ப்பதற்கு முன், படேல்களின் கோரிக்கைகள் என்ன? அதன் உண்மையான பின்னணி என்ன? உண்மையில், குஜராத்தில் கேட்பது பெரியாரின் சிரிப்பொலி தானா? என்று பார்க்கலாம்.
இட ஒதுக்கீட்டினால் வாழ்விழந்த பட்டேல் பணக்காரர்கள் – பார்ப்பனிய தந்திரம்
படேல்கள் – ஒரு சுருக்கமான அறிமுகம்!
லேவா, அஞ்சனா மற்றும் கன்பி அல்லது கடவா ஆகிய மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது படேல் சாதி. பெரும்பாலான சாதிகளின் வரலாற்றைப் போல படேல் சாதி இன்றுள்ள இதே வடிவத்தோடும், சாதிய அடையாளத்தோடும் காலங்காலமாக இருக்கவில்லை. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தின் போது தான் தனித்தனி சாதிகளாக அறியப்பட்ட இம்மூன்று பிரிவினரும் ஒரே சாதியாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். அப்போது ‘படேல்’ என்பது சாதியின் பெயராக அல்லாமல், ஒரு பட்டப் பெயராகவே பயன்பட்டு வந்தது.
இன்றைக்கு இந்து ஒற்றுமையின் சின்னமாக சொல்லப்படும் குஜராத்தின் ஒற்றுமையை உண்மையிலேயே சாதித்தது இந்து மன்னர்கள் அல்ல – இசுலாமிய மொகலாயர்கள். மத்திய நூற்றாண்டில் சிறிய சமஸ்தானங்களாக பிளவுபட்டு தமக்குள் மோதிக் கிடந்த குஜராத்தை 1600-களில் கேதா நகரில் நிலை கொண்ட மொகலாயப் படை அமைதியை நிலைநாட்டியது. வரலாற்று ரீதியில் மேற்குலகோடு வணிக தொடர்பைப் பேணி வந்த குஜராத்தில் அமைதி நிலவ வேண்டியதன் முக்கியத்துவத்தை மொகலாயர்கள் உணர்ந்திருந்தனர். இந்தக் காலகட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட லேவா படேல்கள், இசுலாமிய ’ஆக்கிரமிப்பாளர்களை’ எதிர்த்து போராடி நேரத்தை வீணாக்காமல் தொழில்களில் ஈடுபட்டு தம்மை வளப்படுத்திக் கொண்டனர்.
மொகலாயர்களுக்கும் தேவைப்பட்ட தொழில் அமைதி அன்றைய அண்டை பிராந்திய ஹிந்து மன்னர்களுக்குத் தேவைப்படவில்லை. வளமான குஜராத்தை கொள்ளையடிப்பதற்கான இலக்காக கொண்டனர் ஹிந்து மராத்தியர்கள். 1705-ம் ஆண்டு வாக்கில் மாராத்தியர்களின் கை ஓங்கி மொகலாயர்கள் குஜராத்திலிருந்து பின் வாங்கினர். மாராத்தியர்கள் தமது வருகையோடு மிகப் பிற்போக்கான நிலபிரபுத்துவ ஆட்சி முறையையும் கொண்டு வந்து சேர்த்தனர். மொத்த மாநிலமும் அதுவரை வணிகத்தின் மூலமும் விவசாயத்தின் மூலம் அடைந்திருந்த செழிப்பைச் சுரண்டித் தின்பதே ஹிந்து மராத்தியர்களின் நோக்கமாக இருந்தது. இதற்காக கீழ்மட்டத்தில் வரிவசூல் செய்யும் முறை ஒன்றை ஏற்படுத்தினர் – அதற்கு கன்பி மற்றும் லேவா சாதியினர் பொருத்தமான அடியாட்களாயினர்.
இவ்வாறு வரிவசூலில் ஈடுபட்ட கன்பி மற்றும் லேவா சாதியினருக்கு அளிக்கப்பட்ட பட்டம் – மட்டாதர். இதே சாதிகளைச் சேர்ந்த நிலவுடைமையாளர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் – பட்டிதார் (பட்டி – நிலம் (அ) நிலத்தின் அளவை). பின்னர் ஆங்கிலேயர்கள் மராத்தியர்களை விரட்டியடித்த பின்னரும் கீழ்மட்டத்தில் இருந்த நிர்வாக அலகுகளை அப்படியே பயன்படுத்திக் கொண்டனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது விசுவாசத்தை அதிகளவு நிரூபித்த படேல்களுக்கு தேசாய், அமீன் போன்ற பட்டங்களை வெள்ளையர்கள் வாரி வழங்கினர்.
காலை நக்கியே ’முன்னேற’ முடியும் என்பதற்கு சிறந்த இலக்கணம் படேல் சாதியினர். இன்றைக்கு படேல் சாதியினரின் தொழில் வளர்ச்சி திகைக்க வைக்கும் அளவுக்கு உள்ளதற்குப் பின் உள்ள வரலாற்றின் தோற்றம் இது தான். இன்றைய தேதியில் குஜராத் மக்கள் தொகையில் 15 சதவீதம் உள்ள படேல் சாதியின் பதவி விகிதங்களை கவனியுங்கள். 7 பேர் கேபினெட் அமைச்சர்கள். குஜராத்தின் 120 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் படேல்கள். தவிர குஜராத்தின் வைர வியாபாரம், நெசவுத் தொழில் மற்றும் பல்வேறு சிறு மற்றும் குறுந் தொழில்கள் முற்றிலும் படேல்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இது போக கிராமப்புறங்களின் நிலவுடைமையையும் பணக்கார மற்றும் நடுத்தர பட்டேல் விவசாயிகள் கட்டுப்படுத்துகின்றனர்.
அமெரிக்கா என்ற தேசம் வல்லரசாக அமையத் துவங்கிய காலம் தொட்டே இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயரத் துவங்கிய படேல்களின் கட்டுப்பாட்டில் அமெரிக்காவின் 30 சதவீத உணவு விடுதிகள் உள்ளன. இங்கிலாந்தின் 50 சதவீத நடுத்தர மளிகைக்கடைகளுக்கு படேல்கள் சொந்தக்காரர்கள். முதல் தலைமுறையாக சிறு தொழில் முனைவோராக அமெரிக்காவுக்குச் சென்ற படேல்களின் இன்றைய வாரிசுகள் சிலிக்கான் பள்ளத்தாக்கின் பல நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் அமர்ந்திருப்பதோடு தமது சாதியைச் சேர்ந்தவர்களை வளர்த்தும் விடுகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 1,45,000 படேல்கள் இருக்கிறார்கள்.
பட்டேலை வைத்து திசை திருப்பும் ஆளும் வர்க்கம்
குஜராத்தின் பனியா சாதிகளில் செல்வாக்கான படேல்கள்தான் இந்துமதவெறியர்களின் முதன்மையான சமூக அடிப்படை. காங்கிரசின் செல்வாக்கில் இருந்த குஜராத்தில் இன்று பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களும் பட்டேல்கள்தான். இந்துமதவெறியர்களின் கலவரங்களில் குறிப்பிடத்தக்க பங்கையும் இவர்கள் அளித்தனர். இசுலாமிய வணிகர்கள் மற்றும் குறு முதலாளிகளோடு தொழில் ரீதியான போட்டியும் இவர்களை இயல்பாக இந்துமதவெறியர் பக்கம் சேர வைத்தது. மேலும் குஜராத்தில் மட்டுமல்ல வட இந்தியாவில் நடந்த பல்வேறு இந்து-முஸ்லீம் ‘கலவரங்களின்’ இறுதியில் இசுலாமியர்கள் தமது பராம்பரிய வணிக உரிமைகளை சொத்துக்களை இழந்ததை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
படேல்களின் இடவொதுக்கீட்டு ‘காதல்’ பின்னணியைப் புரிந்து கொள்வது அத்தனை சிரமமானது அல்ல. அவர்கள் முன்வைத்த கோரிக்கை முழக்கத்தின் முதல் பாதியை மட்டும் ஊதிப் பெருக்கிக் காட்டிய பார்ப்பன மற்றும் முதலாளிய ஊடகங்கள், அந்த முழக்கத்தின் பின் பகுதியை திட்டமிட்டு மறைத்தனர். “படேல்களுக்கு இடவொதுக்கீடு வழங்கு” என்று துவங்கும் அந்தக் கோரிக்கை, “எங்களுக்கு இல்லாவிட்டால் யாரும் இடவொதுக்கீடு வழங்காதே” என்று முடிவுறுகிறது. ஹர்திக் படேலின் ஆரம்ப கால பேரணி மற்றும் ஆர்பாட்ட நிகழ்ச்சிகளில் காவிக் கொடிகளோடும், பாரதிய ஜனதா கொடிகளோடும் இந்துத்துவ அமைப்புகளின் கொடிகளோடு தொண்டர்கள் கலந்து கொண்டதும் – இந்துத்துவ கும்பலின் இடவொதுக்கீட்டுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடும், தற்போது இடவொதுக்கீடு குறித்து நாடெங்கிலும் பெரியளவில் “விவாதம்” ஒன்று நடந்து வருவதாக சொல்லப்படுவதும் தற்செயலானவைகள் அல்ல.
ஆகஸ்டு 25-ம் தேதி அகமதாபாத்தில் ஹர்திக் நடத்திய பேரணி முடிவதற்குள்ளாகவே, வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் வேறு ஒரு பிரச்சாரம் ’வைரலாக’ (திடீர் பரபரப்பு) கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் மோடிக்கு விண்ணப்பம் என்று துவங்கிய அந்த பகிர்வில் ”இடவொதுக்கீடு என்ற முறை இருப்பதால் தானே எல்லோரும் அதைக் கோரி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்? நாட்டின் முன்னேற்றத்திற்கும், திறமைக்கும், பொது அமைதிக்கும் எதிரான இந்த முறையையே ஒழித்து விட வேண்டும் என்ற கோரிக்கை திட்டமிட்டு பரப்பப்பட்ட்து.
இட ஒதுக்கீடு கொடு இல்லாட்டி எடு
சொல்லி வைத்தாற் போல் அடுத்தடுத்து வேறு சில நிகழ்வுகளும் நடந்தேறின. குஜராத் மாநில பிராமண சமாஜம் என்ற அமைப்பு உடனடியாக தமக்குள் உள்ள 400 உட்பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களோடு கலந்தாலோசித்து பிராமணர்களுக்கும் பொருளாதார ரீதியிலான இடவொதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பேரணி ஒன்றை நடத்தினர். அதோடு, படேல்களின் போராட்டங்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். பார்ப்பன சங்கம் நடத்திய பேரணியைத் தொடர்ந்து ரகுவன்ஷி என்ற இன்னொரு ‘உயர்’ சாதியைச் சேர்ந்த சங்கமும் இடவொதுக்கீடு கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளது.
‘மேல்’ சாதியினரின் இடவொதுக்கீடு கோரிக்கையை அடுத்து குஜராத் மற்றும் இந்தி பேசும் பிற வட மாநிலங்களைச் சேர்ந்த, ஏற்கனவே இடவொதுக்கீட்டின் பலன்களை அனுபவித்து வரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் படேல்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கினர். இடவொதுக்கீடு கோரும் போராட்டங்களுக்கு மிகையான முக்கியத்துவம் அளித்த முதலாளிய மற்றும் பார்ப்பன ஊடகங்கள், நடப்பது ஒரு நாய்ச் சண்டை என்பது போன்ற தோற்றத்தை ஒருபுறம் ஏற்படுத்தினர்.
பொருளாதார ரீதியிலான இடவொதுக்கீடு என்ற கோரிக்கையே இடவொதுக்கீட்டின் அடிப்படைகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் தான் முன்வைக்கப்படுகிறது. சமூக ரீதியில் பல்லாண்டுகளாக ஒதுக்கப்பட்டு அதன் விளைவாக பொருளாதாய வாழ்வு முடக்கப்பட்ட பிரிவினருக்கான தற்காலிக நிவாரணம் தான் இடவொதுக்கீடு. தட்டு பொறுக்கும் பார்ப்பனர்களும் பீயள்ளும் தலித்தும் பொருளாதார ரீதியில் ஒரே படித்தானவர்களாக இருக்கலாம் – ஆனால், இருவருக்கும் உள்ள சமூக அந்தஸ்தும், சமூக உறவுகளும், மேல்மட்ட தொடர்புகளும், முன்னேறும் வாய்ப்புகளும் சமமானதல்ல. தட்டு பொறுக்கும் பார்ப்பானுக்கு இடவொதுக்கீடு செய்வது என்பதன் பொருள் – அதன் அடித்தளத்தையே குலைப்பது தான்.
மேலும் இட ஒதுக்கீடு என்பதே பிற்படுத்தப்பட்ட சாதிகளின் முன்னேறிய பிரிவினரின் அரசியல் வேட்கையைத் தணிக்க செய்யப்பட்ட நடவடிக்கை. கூடவே உலகமயமாக்க நாட்களில் சொல்லிக் கொள்ளப்படும் இந்த இட ஒதுக்கீடும் கிடைக்காத படி அரசு மற்றும் பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இட ஒதுக்கீடு கேட்டு வட இந்தியாவில் நடக்கும் ஆதிக்க சாதி ‘போராட்டங்கள்’ அனைத்தும் மக்களின் பொருளாதாரக் கோரிக்கைகளை திசைதிருப்பும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன.
பொருளாதார ரீதியில் இடவொதுக்கீடு வழங்க வேண்டும் என்ற “விவாதம்” பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாக பார்ப்பன மற்றும் முதலாளிய ஊடகங்கள் பம்மாத்து செய்து கொண்டிருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ் முகாமிலிருந்து அதன் உண்மையான குரல் வெளிப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான பாஞ்சஜன்யாவுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், “குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்து, இடவொதுக்கீட்டு முறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இடவொதுக்கீட்டு முறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதன் பின்னுள்ள பார்ப்பனிய தந்திரம் என்னவென்பதை யாரும் விளக்காமலேயே நாம் புரிந்து கொள்ள முடியும் – “குடிமைச் சமுகத்தின் அங்கத்தினர்” என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறான கமிட்டி ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் மத்திய பாரதிய ஜனதா அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படும் குடிமைச் சமூகத்தின் அங்கத்தினர்கள் யாராக இருப்பார்கள் என்பதை நாம் விளக்கத் தேவையில்லை.
அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளும், பிற ஜனநாயக சக்திகளும் பல்லாண்டுகளாக போராடிப் பெற்ற இடவொதுக்கீட்டு முறையை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, மக்களுக்கு பதில் சொல்லும் கடமை இல்லாத – இந்துத்துவ தலைமை பீடத்தால் பொறுக்கியெடுக்கப்பட்ட “குடிமைச் சமூக பிரதிநிதிகள்” என்கிற இந்துத்துவ அடியாள் கும்பலைக் கொண்டு ஒழித்துக் கட்டும் முயற்சி தான் இது. இந்தி பேசும் மாநிலங்களின் ஆதிக்க சாதிகளை தொடர்ந்து செல்வாக்கில் வைத்திருக்க ஆர்.எஸ்.எஸ் செய்யும் முயற்சி இது.
பட்டேல்களின் போராட்டம் – ஆர்.எஸ்.எஸ்-இன் சதித் திட்டம்
ஹர்திக் படேலின் திடீர் எழுச்சியும், உயர் சாதியினரின் பொருளாதார ரீதியிலான இடவொதுக்கீடு கோரிக்கைகளும், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனிய கும்பலின் இடவொதுக்கீட்டுக்கு எதிரான கோரிக்கைகளும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொள்ளும் இடம் இது தான். மகாபாரத கர்ணனுக்கு தேரோட்ட முன்வந்த சல்லியனின் ஆத்மார்த்தமான விருப்பம் – கர்ணன் ஒழிந்து போக வேண்டும் என்பது தான். அதே பழைய பார்ப்பன தந்திரத்தை பின்பற்றி இடவொதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசும் தொணியிலேயே அதற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது இந்துத்துவ கும்பல்.
இடவொதுக்கீடு ஒரு தற்காலிக நிவாரணம், மக்களுக்கு முழு விடுதலை அல்ல என்றாலும், அது ஒரு ஜனநாயக கோரிக்கை என்ற முறையில் கூட நீடிப்பதை இந்துமதவெறியர்கள் விரும்பவில்லை. இடவொதுக்கீடு என்ற ஒரே அம்சத்தை தமது அரசியலின் அடித்தளமாக கொண்டிருக்கும் சமூக நீதிக் கட்சிகளோ படேல்களின் போராட்டத்திற்கு பின் உள்ள பார்ப்பன தந்திரத்தை காணும் திறனற்றவர்களாய் உள்ளனர். காரணம் இவர்களும் ஏனைய அரசியல் கொள்கைகளில் குறிப்பாக மறுகாலனியாக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதால் இந்த வேறுபாட்டிற்கு அடிப்படை இல்லை.
இட ஒதுக்கீட்டின் பெயரில் நடக்கும் போராட்டங்கள் மற்றும் விவாதத்தின் போது, மோடி அரசு முழு இந்தியாவையும் தினுசு தினுசாக விற்று வருகிறது. நில அபகரிப்பு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பள வரவேற்பு என்பதோடு, இந்துத்துவ செயல்திட்டங்களான இந்தி-சம்ஸ்கிருத திணிப்பு, கல்வி நிறுவனங்களை காவி மயமாக்குதல் போன்றவற்றையும் அமல்படுத்தி வருகின்றது.
இத்தகைய பிரச்சினைகளிலிருந்து நாட்டு மக்களை திசைதிருப்பும் வண்ணமாகவே பட்டேல்களை முன்வைத்து நடந்த இந்த போராட்டம் உதவியிருக்கிறது.
எனவே இதை வெறும் இட ஒதுக்கீட்டு பிரச்சினை என்று புரிந்து கொள்ளாமல் மோடி அரசின் பார்ப்பனிய மற்றும் பொருளாதார தாக்குதல்களோடு இணைத்து மக்கள் அரங்கில் கொண்டு செல்லப்பட வேண்டும்.
2009-ம் ஆண்டு ஈழத்தில் இறுதி கட்டப் போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப் பொறுக்கும் திருவிழா களை கட்டியிருந்தது. எதிரிகளும், துரோகிகளும், சந்தர்ப்பவாதிகளும் கூட்டணிகள் அமைத்து தேர்தலில் நின்றும், ஏதாவது ஒரு தரப்பை ஆதரித்தோ, எதிர்த்தோ பிரச்சாரம் செய்தும் ஈழத் தமிழர்கள் மீதான போரை முன்நின்று நடத்திக் கொண்டிருந்த இந்திய ‘ஜனநாயகத்துக்கு’ கொடி பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அத்தகைய சூழலில் “ஈழப்போர் என்பது இந்திய அரசின் மேலாதிக்க நோக்கத்திற்காகவே. இதை முறியடிக்க போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம். புதிய ஜனநாயக புரட்சிக்கு அணி திரள்வோம்” என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் களம் இறங்கினர்.
ப.சிதம்பரத்துக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய சிவகங்கை வந்த காங்கிரசின் இளைய இளவரசர் ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி காட்டி கைதான ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தோழர்களின் போலீசுடனும், நீதித்துறையுடனுமான போராட்டம் 6 ஆண்டுகள் நீடித்தது. காட்டியது கொடி என்றாலும் அரசும், போலிசும் அதை வைத்து எப்படி எதிர்ப்புணர்வை முடக்க நினைக்கிறது என்பதை இந்த 6 ஆண்டு கால வரலாறு காட்டுகிறது.
கருப்புக்கொடி !
ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இறுதிப்போர் 2009-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே உச்சகட்டத்தில் இருந்தது. கொத்துக்கொத்தாக தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் போரை இந்திய அரசுதான் சிங்கள இராணுவத்திற்க்கு முன்னணி படையாக நின்று வழி நடத்திக் கொண்டிருந்தது.
ஈழத்தமிழ் மக்களின் துயரக்குரல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. “நாங்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுகிறோம். இந்தப் போரை நிறுத்துங்கள்” என்று கதறினார்கள். ஆனால், இந்தக் கதறல் நொடிக்கு நொடி தமிழ் மக்களின் துயரை பேசி திரிந்தவர்களின் காதில் விழவில்லை. (விழுந்தாலும் கேட்காத மாதிரியே நடித்தார்கள்) அவர்களின் காதில் விழுந்தது என்னமோ நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி பேரம், தொகுப்பங்கீடு என்று பொறுக்கித்தின்னும் அரசியலின் வாய்ஜாலங்களே. அவர்களுக்கு தேர்தல், நாற்காலி, அமைச்சரவை, எம்பி, எம்.எல்.ஏ. இதுதான் முக்கியம். இதற்காக அவர்கள் வாய் நீளாத இடமில்லை
இந்த அயோக்கியர்களின் உண்மை முகம் அறியாத தமிழ் மக்களோ இவர்களிடமே போரை நிறுத்த சொன்னார்கள். இது ஒரு குழந்தையை கடத்திச் சென்று கண்ணைப் பிடுங்கி, பிச்சை எடுக்க வைக்கும் அயோக்கியனிடமே, அந்தக் குழந்தை தன்னை விடுவிக்கக் கோருவதற்கு சமம். அந்தக் குழந்தைக்காவது தன் கண்ணை பிடுங்கியவன் யார் என்று தெரியும். பாவம் ஈழத்தமிழ் மக்களுக்கோ யார் பிழைப்புவாதிகள், யார் துரோகிகள் என்று தெரியாது. கையேந்தி உயிர்ப்பிச்சை கேட்டு நின்றார்கள்.
ஆனால் ஓட்டுப் பொறுக்கிகள் தங்களது கைதேர்ந்த பிழைப்பு வாதத்தை நாடாளுமன்ற தேர்தலில் காட்டினர்.
ஓட்டுப் பொறுக்கிகள் தங்களது கைதேர்ந்த பிழைப்பு வாதத்தை நாடாளுமன்ற தேர்தலில் காட்டினர்.
1. “போரென்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்” என்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசிய ஜெயாவுடன், தமிழ் மக்களின் இரத்த உறவு என்று சொன்ன வைகோ கூட்டணி, பழ.நெடுமாறன் கூட்டணி (இவர்கள் தான் இந்த தாயை ஈழத்தாயாக அறிவித்தார்கள்.)
2. நாம் தமிழர் – சீமானோ “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று முழங்கினார். தமிழர் கண்ணோட்டம் மணியாசனோ “காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க” என்று மறைவில் இலைக்கு ஆதரவு தேடினார்.
3. “தமிழ் நாட்டின் பிரபாகரன்” என்று அழைக்கப்பட்ட தொல் திருமாவளவனோ, ஈழத்தமிழ் மக்களின் மீதான போரை இந்திய அரசு சார்பில் நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுடன் அடைக்கலம்
4. பா.ம.க. இராமதாஸ் ஈழ ஆதரவு வேடம் தரித்து அ.தி.மு.க-உடன் இணைந்தார். ஒரு பின் குறிப்பு : மருத்துவரின் மகள் அன்புமணி இராமதாசோ, இதற்கு முன்னாள் காங்கிரசு அமைச்சரவையில், மத்திய அமைச்சர்; ஈழ மக்களுக்கு ஆதரவாக தனது இரண்டு மாத பதவியைக் கூட துறக்காத உத்தமர்.
5. இராஜீவின் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்க்கு கூஜா தூக்கிய வலது கம்யூனிஸ்டு கட்சி தா.பாண்டியன் ஈழ ஆதரவு நிலைப்பட்டுக்கா போயஸ் தோட்டத்தில் தஞ்சம் புகுந்தார்.
6. மார்க்சிஸ்டுகள் மட்டும் தான் அம்மாவுடன் கொள்கைபூர்வமாக கூட்டணி அமைத்தார்கள் என்பது இன்னொரு கேலிக்கூத்து.
7. பா.ஜ.க வெளிப்படையாகவே நாங்களும் காங்கிரசும் ஈழப்பிரச்சனையில் ஒன்று என்று பகிங்கிரமாகவே அறிவித்தது. ஆனால் இல.கணேசனும், தமிழிசையும் வாயளவில் பேசி தமிழின ஆதரவாளர்கள் பின்னால் திரிந்தார்கள்.
இப்படி எல்லா கூட்டங்களிலும் துரோகிகளும், சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் நிறைந்து இருந்ததால் எந்தக் கூட்டணியும் எதிர் கூட்டணியைப்பற்றி புகார் தெரிவிக்காமல் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் அமைதியான வழியில் நடந்தது.
தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் களம் இறங்கினர் (கோப்புப் படம்).
காங்கிரஸ்காரர்களோ, “ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது, ஈழதமிழ் மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்வோம” என்று பொய் கூறி திரிந்தனர்; எந்த வித எதிர்ப்பும் இன்றி தமிழ்நாட்டுக்குள் ஓட்டு கேட்க வந்து போய் கொண்டிருந்தனர்.
இப்படிப்பட்ட நிலைமையில் தான் தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் களம் இறங்கினர்.
“ஈழப்போர் என்பது இந்திய அரசின் மேலாதிக்க நோக்கத்திற்காகவே. இதை முறியடிக்க போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம். புதிய ஜனநாயக புரட்சிக்கு அணி திரள்வோம்” என்ற முழக்கத்தின் கீழ் மக்களை உணர்வூட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை ம.க.இ.க மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் குலக்கொழுந்து ராகுல் காந்தி 08-05-2009 அன்று சிவகங்கை வரவிருப்பதை அறிந்தார்கள்
பொதுக்கூட்டம் நடக்க இருந்த 08-05-2009-க்கு ஒரு நாள் முன்பே கருப்புக்கொடி காட்டப்போவதாக பத்திரிகை மற்றும் காவல்துறைக்கு அறிவித்தார்கள். போலீசுக்கோ அதிர்ச்சி. அரண்டு போய் எழுந்து தோழர்களை வலை வீசித் தேடினார்கள். தோழர்கள் காவல்துறை கண்ணில் தட்டுப்படவில்லை. போலீசின் மோப்ப சக்தியை நன்கு உணர்திருந்ததால் வீட்டில் இல்லை. தோழர்களின் தொலைபேசிக்கு அழைத்து எப்படியாவது பேசி மயக்கி பிடித்து விடலாம் என்று கட்டம் கட்டினார்கள் அவர்களின் கண்ணில் மண்ணைத்தூவி பல அடுக்கு பாதுகாப்பையும் தாண்டி தாங்கள் மறைத்து வைத்திருந்த கருப்புக் கொடியுடன் சென்று முதல் வரிசையில் அமர்ந்தனர், ம.க.இ.க தோழர்கள் கணேசன், இராஜாங்கம் மற்றும் பு.ஜ.தொ.மு தோழர்கள் ஆனந்த் மற்றும் சபி.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் குலக்கொழுந்து ராகுல் காந்தி
தமிழகத்தில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த இராகுல் சிரித்த முகத்துடன், கை அசைத்து மேடையின் அருகில் வந்த போது தோழர்கள் நால்வரும் தங்கள் ஆடைக்குள் வைத்திருந்த கருப்புத் துணியை எடுத்து இராகுலின் முகத்திற்கு நேராக காண்பித்து, “ஈழத்தமிழ் மக்களை ஒடுக்கும் இராகுலே திரும்பிப் போ” என்று கோசம் போட்டார்கள்.
இராகுலின் முகம் சுருங்கி போய் விட்டது. இராகுலின் முகத்தை பார்த்த ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலுக்கும் முகம் சுருங்கி இருண்டது. உடனே காங்கிரஸ் கயவாளிகள் கட்டையை உருவி தோழர் ஆனந்தின் தலையில் அடித்தனர். மற்ற தோழர்களையும் கடுமையாக தாக்கினார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோழர்கள் கோஷமிட்டனர். சிறிது நேரம் கழித்து வந்த காக்கி துறை அங்கிருந்த தோழர்களை பிடித்துக் கொண்டு போய் போலீஸ் வண்டியில் போட்டு அடைத்தனர்.
இதற்கு பின்பு பேச வந்த இராகுலுக்கு ஒரே நடுக்கம். பதின்மூன்றே நிமிடத்தில் மொழிப்பெயர்ப்புடன் கூடிய தனது உரையை முடித்து விட்டு, “ப.சிதம்பரத்துக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று கூட சொல்லாமல் அவசரமாக ஒடினார். சுதாரித்த ப.சிதம்பரம் வேகமாக போய் இராகுலின் காதில் முணுமுணுக்க அவர் திரும்பி வந்து “ப.சிதம்பரத்துக்கு ஓட்டு போடுங்கள்” என்று சொல்லி ஓடி விட்டார். இதன்பின் திருச்சிக்குச் சென்ற இராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அங்கு காத்திருந்தனர் புரட்சிகர இயக்கங்கள்.
ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி (கோப்புப்படம்)
ஆனால் கருப்புக் கொடி காட்டிய சிவகங்கை பகுதி தோழர்களை, போலீஸ் கடத்திச் சென்றது. ஐந்து மணி நேரமாக தோழர்கள் எங்கு இருந்தார்கள் என்பதே தெரியவில்லை. பின்பு இருக்கும் இடத்தை மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் எஸ்.பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றனர்.
கடத்தி சென்ற போலீஸாரோ தங்களால் முடிந்த அளவுக்கு தோழர்களின் ஆடைகளை கழட்டி இழிவுபடுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொடூரமாக தாக்கினர். சிவகங்கையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காளையார்கோவில் காவல்நிலையத்தில் வைத்து வழக்கு பதிவு செய்தனர். அங்கு சார்பு ஆய்வாளராக இருந்த லேடி சுந்தரி என்பவர் “யாரிடம் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு கருப்பு கொடி காட்டினீர்கள்” என்று கேட்க,
“நாங்கள் புரட்சியாளர்கள் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்றவுடன் தான் சட்டையில் மாட்டியிருந்த நேம்பேட்ஜை கழற்றி பைக்குள் வைத்துக் கொண்டு சென்றவர் கடைசி வரை வரவில்லை.
ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி (கோப்புப்படம்)
தோழர்களை காளையார் கோவிலுக்கு கொண்டு செல்லும் வழியால் காட்டுப் பகுதியில் சென்றனர்.
“காட்டுக்குள் ஏன் செல்கிறீர்கள்” என்று கேட்க,
“உங்களை சுட்டுக் கொல்லப் போகிறோம்” என்றான் செல்லப்பனேந்தல் கார்த்திக் என்ற போலீஸ்காரன்.
“முடிந்தால் சுட்டுப்பார்” என்றனர் தோழர்கள்.
கோபமுற்ற போலீஸ்காரர்களான கார்த்திக், முத்துக்கருப்பன் கடுமையாக தோழர்களை தாக்கினார்கள்.
தோழர்கள் பதிலுக்கு, “நீங்கள் பணத்திற்காக வேலை செய்கிற அடியாள்படை. நாங்கள் லட்சியத்திற்காக போராடுகிற போராளிகள். நீங்கள் 15 பேர் நாங்கள் 4 பேர். வண்டியை விட்டு இறங்கி அடித்து பார்ப்போம் யார் யாரை அடிக்கிறோம்” என்று கூற எஸ்.ஐ-யாக இருந்த பிரபாகரன் சத்தம் போட்டு, “அடிக்காத கார்த்தி எஸ்.பி-யிடம் சொல்வேன்” என்றவுடன் அடிப்பதை நிறுத்தினார்கள்.
இதற்கு முன்னராக தோழர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதற்கு, “சிறுநீர் தருகிறோம் குடிங்கடா” என்று கூறி அவமானப்படுத்தினார், கார்த்திக்.
பின்பு நள்ளிரவில் மாஜிஸ்ரேட்டிடம் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கொண்டு செல்லும் முன்பாகவே போலீஸ்-மாஜிஸ்ரேட், காங்கிரஸ் சிவகங்கை மாவட்ட தலைவர் ஆகியோர் அனைவரும் சேர்ந்து தோழர்களுக்கு எதிராக பொய் கேஸ் தயாரித்து பிணையில் உடனே வெளி வர முடியாத அளவிற்கு எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின்பு தான் மாஜிஸ்ட்ரேட் அனுராதா வீட்டிற்கு அழைத்து வந்தனர். அந்தம்மா முன் கூட்டியே முடிவு செய்ததை, தோழர்களிடம் கையெழுத்து வாங்க காத்து நிமிடம் தான் ஆனது. எந்த விசாரணையும் செய்யவில்லை. தோழர்கள் அனுபவித்த கொடுமைகளை கேட்கவில்லை. இதற்காக வழக்கறிஞர் தோழர்கள் போராடியும், அந்தம்மா அதை மறுத்து ஓடி விட்டார்.
ராகுல்காந்திக்கு சிவகங்கையில் கருப்புக் கொடி (கோப்புப் படம்)
பின்பு தோழர்களை மதுரை மத்திய சிறையில் கொண்டு போய் அடைத்தனர். 15 நாட்கள் கழித்து தோழர்கள் வழக்கறிஞர் தோழர்களின் கடும் முயற்சியால் பிணையில் வந்தனர்.
ஆனால் பொய் வழக்கோ தொடர்ந்தது. பொய் வழக்கு என்னவென்றால் தோழர்கள் நான்கு பேரும் கருப்புக்கொடி காட்டவில்லையாம், (இராகுலின் முகத்திடம் கேட்டிருக்கலாம் பதில் சொல்லியிருக்கும்) மாறாக தோழர்கள் நான்கு பேரும் கூட்டத்தில் இருந்த காங்கிரஸ்காரர்களை கெட்டவார்த்தையால் திட்டி, கன்னத்தில் அறைந்து, வயிற்றில் குத்தி, அவர்கள் கையில் கட்டியிருந்த 2000ரூ கடிகாரத்தை உடைத்தும் அராஜகம் செய்தார்களாம். இப்படித்தான் இந்த முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தார்கள். இந்த முழுப் பூசணிக்காயை சோற்றில் தேட நீதித்துறைக்கு ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளது.
இப்போது 2015 ஜூலை மாதம்தான் வழக்கை தள்ளுபடி செய்து தோழர்களை விடுவித்துள்ளார்கள். ஆறு வருடங்களாக வழக்கு, வாய்தா, போன்று தோழர்களின் வாழ்க்கையிலும், இழப்புகள் ஏராளம். இதையெல்லாம் கடந்து தான் தொடர்ந்து ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தோழர்கள் களத்தில் நின்றனர்.
இதை அன்றே உணர்ந்த ஒருவர் கருப்புக் கொடி காட்டியதற்க்கு மறுநாள் ஒரு டீக்கடையில் தோழர்கள் நின்று பேசும் போது அவர்களிடம் கூறியது. “அவர்கள் நான்கு பேரும் சிங்கம்யா. அவ்வளவு கூட்டத்தைப் பார்த்தும் பயப்படாமல் கருப்புக்கொடி காட்டி இரத்தம் சொட்ட அடிவாங்கி, கோஷமிட்டு துணிச்சலா நின்றதை நான் அருகில் நின்று பார்த்தேன். இராகுல், சிதம்பரம் முகம் சுருங்கி விட்டது. ஈழத்திலே தமிழர்களை அழித்து விட்டு தமிழ் நாட்டுக்குள் இவனுங்கள நுழைய அனுமதிக்கலாமா? மிகப்பெரிய காரியம் பண்ணிட்டாங்கையா. பலருக்கும் சந்தோசமையா” என்று கூறி முடித்தார்.
வெள்ளை ஆதிக்க காலத்தின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற வீரமிகு வரலாற்றை இன்று இந்த மண்ணில் புரட்சிகர இயக்கங்கள் தொடர்கின்றன.
கோவையின் கல்லூரி மாணவர்கள் சந்தித்து அரட்டையடிக்க வாய்ப்புள்ள இடங்களில் முதன்மையானது தேநீர் கடைகள். கோவையின் டீ மாஸ்டர்கள் கணக்கில் அசகாய சூரர்கள். “மாஸ்டர், டூ பை த்ரீ… சிக்ஸ் பை 15.. ஒன் பை போர்” என்று விதம் விதமாக வேண்டுகோள் வந்தாலும் குழம்ப மாட்டார்கள். அதிலும், காந்திபுரம் ஆறாவது குறுக்குச் சந்தில் முன்பு ஒரு கில்லாடி கேரள சேட்டன் இருப்பார்.. அவருக்காகவே அந்தக் கடையில் கூட்டம் அள்ளும்.
மேற்படி நாயர் கடையில் இருந்து சில மீட்டர்கள் தள்ளி இருந்த அந்தக் கட்டிடத்தின் முன் அப்போதே விலையுயர்ந்த கார்கள் அணிவகுத்து நிற்கும். பளபளப்பான மேட்டுக்குடி மக்களுக்கு இந்த அழுக்கு சந்துக்குள் என்ன தான் வேலை?
“டேய்… மார்ட்டினை பார்க்க வந்திருருப்பானுக டா.. மார்ட்டின் தெரியுமில்லெ? எமத் திருடன்” நண்பர்கள் குசுகுசுத்தது நினைவில் இருக்கிறது.
மார்ட்டின்…!
கோவையின் அசிங்கம். தற்போது மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கொத்தா மற்றும் சிலிகுரி மாவட்டத்தில் நடந்த வருமானவரித் துறையினரின் சோதனைகளில் சுமார் 80 கோடி ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி சோதனைகளில் லாட்டரி மார்ட்டினின் நெருங்கிய தொழில் கூட்டாளியான நாகராஜன் மற்றும் செந்தில் குமார் மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாட்டரி மாஃபியா மார்ட்டின்
சோதனைகளில் கிடைத்த ரொக்கத்தைத் தவிர, சுமார் 1200 வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த வங்கிக் கணக்குகளின் மூலம், மத்திய கிழக்கிலிருந்து வங்க தேசத்தின் வழியே சிக்கிம் மாநிலத்திற்கு நுழைந்துள்ள ஹவாலா பணம், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாவட்டத்தின் மூலம் தென் மாநிலங்களுக்குப் பாய்ந்துள்ளது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட கருப்புப் பணம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வைத்து ரியல் எஸ்டேட் தொழிலின் மூலம் வெள்ளையாக்கப்படுவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டுள்ள நாகராஜனுக்கு சொந்தமான டீசல் மார்க்கெட்டிங் ஏஜென்சி என்ற நிறுவனம் 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்ட ஒரு உப்புமா கம்பெனி. துவங்கிய சில மாதங்களிலேயே இந்தக் கம்பெனியும் ஜார்கண்டைச் சேர்ந்த ஸ்மார்ட் அசோசியேட்ஸ் என்ற மார்ட்டினின் கம்பெனியும் இணைகின்றன.
இணைப்பிற்குப் பின் 2013 பிப்ரவரி மாதம், சட்டப்படியான ஆவணங்களின் படியே டீசல் மார்க்கெட்டிங் நிறுவனம், மார்ட்டினின் இரண்டு மகன்களுக்கு சுமார் 1000 பங்குகளை கைமாற்றிக் கொடுத்துள்ளது. இந்த பரிவர்த்தனைக்குப் பின் வேறு தொழில் முகாந்திரங்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்கள் மற்றும் பினாமிகளின் கட்டுப்பாட்டில் பல உப்புமா நிறுவனங்களைத் துவக்கியுள்ள மார்ட்டின், அவற்றை ஹவாலா கருப்புப் பண சுழற்சிக்காகவே பயன்படுத்தி வந்துள்ளார்.
போலி லாட்டரியின் மன்னன் என்று வருணிக்கப்படும் மார்ட்டினின் சொத்து மதிப்பு சுமார் 7000 கோடிகளாக இருக்கலாம் என்று பத்திரிகை செய்திகள் மதிப்பிடுகின்றன. ஆனால், பினாமிகளின் பேரிலும் இன்னும் இரகசியமான வகைகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அவர் குவித்து வைத்திருப்பது நிச்சயம். உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பில் கருப்பு எவ்வளவு வெள்ளை எவ்வளவு என்பதை எவரும் அறிய முடியாது. இந்தியாவிலோ இன்னும் மோசம்.
மனைவி லீமா ரோசுடன் லாட்டரி தாதா மார்ட்டின்
இன்றைக்கு தமிழகத்தில் சட்டப்பூர்வ லாட்டரி தடை செய்யப்பட்டிருப்பதாக சொன்னாலும், போலி லாட்டரி எந்த தடையுமின்றி புழக்கத்தில் தான் உள்ளன. மாவட்ட வாரியாக லாட்டரி முகவர்கள், அவர்களுக்குக் கீழ் வட்டார முகவர்கள், இவர்களுக்கு கீழே விற்பனை பிரதிநிதிகள் என்று இந்த இரகசிய வலைப்பின்னல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. லாட்டரி மோகத்திற்கு அடிமையானவர்களை தடைக்குப் பின்னும் அறிந்து வைத்திருக்கும் விற்பனை பிரதிநிதிகள், அவர்களிடம் துண்டுச் சீட்டில் எழுதிய எண்களை விற்கிறார்கள். காலையில் இவ்வாறு விற்கப்படும் போலி லாட்டரி சீட்டுகளுக்கான முடிவுகள் அன்று மாலையே அறிவிக்கப்படுகின்றன.
முடிவுகள் மாவட்ட – வட்டார முகவர்களின் வழியே விற்பனை பிரதிநிதிக்கு சொல்லப்பட்டு அவர்கள் மூலம் அந்த குறிப்பிட்ட எண் கொண்ட சீட்டை வாங்கியவருக்கு சொல்லப்படுகிறது. இதில் போட்ட காசைத் தொலைத்து வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளமானவர்கள் – ஆனால், எவரும் வாயைத் திறக்க முடியாது. லாட்டரி வலைப்பின்னலின் ஒவ்வொரு கண்ணியும் நெருக்கமாகவும் இரசியமாகவும் உள்ளதோடு ஒரு மாஃபியா கும்பலைப் கட்டுக்கோப்புடன் போல் செயல்படுகிறது. காசைத் தொலைத்தவர்கள் ஒருவேளை எதிர்த்தால், அவர்களை நேரடியாகவும், லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிய போலீசு மற்றும் அரசு அதிகாரிகள் மூலமும் ’தட்டி’ வைப்பார்கள்.
லாட்டரி தடை செய்யப்பட்ட மாநிலங்களில் இவ்வாறாகவும், தடையில்லாத மாநிலங்களில் சட்டப்பூர்வமாகவும் செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் குவித்துள்ளனர் லாட்டரி மாஃபியாக்கள். இந்த மாஃபியா கும்பல்களிலேயே பெரிய கும்பலின் தலைவர் தான் சாண்டியாகோ மார்ட்டின்.
1988-ல் லாட்டரி தொழிலுக்குள் மார்ட்டின் இறங்குவதற்கு முன் பர்மாவில் சாதாரண தொழிலாளியாக இருந்தார் என்று சொல்வார்கள். அதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார், அவரது பூர்வாசிரமம் என்னவென்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. பொதுவில் இத்தகைய திடீர் முதலாளிகள் உழைத்து முன்னேறினார்கள் என்பதற்காகவே இத்தகையை பழங்கதைகள் நேர்த்தியான திரைக்கதையாக தயாரிக்கப்படுகின்றன.
பச்சமுத்து கட்சியில் சேர்ந்தார் லீமா ரோஸ்
கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் பத்திருபது ஆண்டுகளில் பல ஆயிரம் கோடிகளின் அதிபதி என்றால் அது நேர்மையான வழியில் இருக்க முடியுமா என்ன? இந்நிலையில், தமிழகத்தில் 2003-ம் ஆண்டு வாக்கில் லாட்டரி தடை அமுலுக்கு வந்த போது மார்டினின் சாம்ராஜ்ஜியத்தின் மதிப்பு 14 ஆயிரம் கோடி என்பது வியப்பு ஏற்படுத்தவில்லை.”எப்படி இவன் அம்மாவை பகைத்துக் கொண்டான்?” என்பதே பலருடைய வியப்புக்கு காரணம்.
ஆட்சியில் யார் அமர்ந்தாலும் உடன் போய் ஒட்டிக் கொண்டு தன்னையும் தனது லாட்டரி சாம்ராஜ்யத்தையும் பாதுகாத்துக் கொள்வது மார்டினுக்கு கைவந்த கலை. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய “இளைஞன்” திரைப்படம் மார்டினின் தயாரிப்பில் வெளியானது என்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம் – ஆனால், அந்த பாடாவதி படத்திற்கு கருணாநிதி எழுதிய மொக்கை வசனத்திற்கு வழங்கப்பட்ட சம்பளம் 45 லட்சம். அந்த தொகை தான் கருணாநிதி வாங்கிய சம்பளத்திலேயே அதிகமானதாம்.
45 லட்சத்தை சும்மா தூக்கிக் கொடுக்க மார்டின் ஒன்றும் இனா வானா அல்ல – 2011-ம் ஆண்டு கேரள அரசு மார்டின் மீது வழக்குத் தொடுத்த போது அப்போதைய தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ் ராமன் மார்டினுக்காக கேரள நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பின்னர் கேரள அரசே தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பிய பின், ராமனை அந்த வழக்கிலிருந்து திரும்ப பெற்றார் கருணாநிதி.
தொன்னூறுகளின் துவக்கத்தில் அ.தி.மு.கவுடன் இணக்கமான உறவைப் பேணி தனது லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேன் தொழிலை வெற்றிகரமாக நிலைநாட்டிக் கொண்ட மார்டின், பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொண்டார். மீண்டும், 2001-ல் அ.தி.மு.க் ஆட்சிக்கு வந்ததும் அங்கே ஒட்டிக் கொள்ள கடும் முயற்சிகள் செய்துள்ளார் மார்டின். அப்போது நடந்த பேரம் படியாததால் தான், 2003-ல் லாட்டரி தொழிலை தடை செய்து மார்டினை நெருக்கடிக்குள் தள்ளியது அ.தி.மு.க அரசு.
மார்ட்டினின் மூத்த மகன் சார்லஸ் மார்ட்டின்
மீண்டும் தி.மு.க ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டாலும், லாட்டரியை மீண்டும் திறந்து விட்டு மக்களின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொள்ள கருணாநிதி தயங்கினார். ஆனால், அதற்குள் மார்டினின் வலைப்பின்னல் தமிழகத்தைத் தாண்டி மற்ற தென்னிந்திய மாநிலங்களில் வலுவாக நிலை கொண்டிருந்தது. தமிழகத்தில் ரியல் எஸ்டேட் – நில ஆக்கிரமிப்பு மற்றும் அது தொடர்பான கட்டப்பஞ்சாயத்துகளை தி.மு.கவின் ஆதரவோடு தக்க வைத்துக் கொண்டார் மார்ட்டின்.
இந்த சமயத்தில் கோவை காந்திபுரம் ஆறாவது குறுக்குச் சந்தில் அமைந்திருந்த லாட்டரி தலைமை அலுவலகம் ரியல் எஸ்டேட் கொள்ளைகளின் குவிமையமாக மாற்றமடைந்திருந்தது. கோவை மாவட்டம் மட்டுமின்றி கொங்கு பெல்ட்டில் எங்கே கோடிகளில் நில பேரங்கள் நடந்தாலும், அதில் மார்டினின் கை இருக்கும் என்று சொல்லுமளவிற்கு தனது செல்வாக்கை நிலை நாட்டியிருந்தார். மற்ற மாநிலங்களில் சட்டவிரோத லட்டரித் தொழிலில் ஈட்டிய கள்ளப்பணத்தை வெள்ளையாக்க தமிழகத்தின் ரியல் எஸ்டேட் தொழிலை பயன்படுத்திக் கொண்டார்.
தமிழகத்தில் சட்டப்பூர்வ லாட்டரி தடைசெய்யப்பட்டிருந்தாலும், தனது வலுவான வலைப்பின்னலின் மூலம் சட்டவிரோத லாட்டரிகளை நடத்தி வந்திருக்கிறார் மார்ட்டின் – அத்தனைக்கும் 2006 – 2011 காலகட்டத்தில் தி.மு.கவின் நேரடி மற்றும் மறைமுக ஆசி இருந்தது. அந்த உதவிக்கான கைமாறுதான் 45 லட்ச ரூபாய் சம்பளம்.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க பதவிக்கு வந்ததும் மார்ட்டின் குடும்பத்தின் மேல் சராமாரியாக வழக்குகள் பாய்ந்தன. மார்ட்டினின் மீதே நில அபகரிப்பு வழக்குகள் அடுக்கடுக்காக பாய்ந்தன. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க அம்மாவின் ஆசியோடு மார்ட்டின் தனது மனைவியின் மூலம் கருணாநிதியின் மகள் செல்வியின் மீது ஒரு வழக்கை பதிந்தார் – தனது கணவருக்கு நில அபகரிப்பில் தொடர்பு ஏதும் இல்லை என்றும், கருணாநிதியின் மகள் செல்வியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று அதில் மார்டினின் மனைவி லீமா ரோஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
ஜெயலலிதா எதிர்பார்த்ததும் இது தான் – அதாவது, எப்போது வேண்டுமானாலும் கருணாநிதி குடும்பத்திற்குள் சட்டம் தன் கடமையைச் செய்வதற்கான கதவை மார்ட்டினைக் கொண்டு திறந்து வைத்துக் கொண்ட ஜெயலலிதா, அதன் பின் மார்ட்டினின் மேலான வழக்குகளின் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டார்.
பா.ஜ.கவில் சேர்ந்தார் சார்லஸ் மார்ட்டின்
ஏறக்குறைய இதே நேரத்தில் மார்ட்டினின் மற்ற மாநில போலி லாட்டரி தொழிலும் தொய்வடைந்திருந்தன. கர்நாடக அரசில் நல்ல செல்வாக்கோடு இருந்த மார்ட்டின் அங்கே நடந்த ஆட்சி மாற்றங்களுக்குப் பின் புதிய அதிகார பீடங்கள் உடனான பேரங்கள் படியாமல் முரண்பட்டிருந்தார். கேரள ’காம்ரேடுகளின்’ கட்சிக்கு 2 கோடி ரூபாய் மொய் வைத்து முந்தைய ’இடது’ முன்னணி அரசின் உள்வட்டங்கள் வரை நுழைந்து வருமளவிற்கு செல்வாக்கோடு இருந்தவருக்கு அடுத்து வந்த காங்கிரசின் மேல்மட்டத்தோடு பேரம் படியவில்லை.
கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக மார்டினின் போலி லாட்டரி தொழிலை கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த கர்நாடக அரசு, மார்ட்டினின் நெருங்கிய கூட்டாளியான பார் ராஜனை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. கேரள அரசாங்கம் 2011-ம் ஆண்டு முதலே வழக்கு மேல் வழக்காக தொடுத்து மார்ட்டினின் லாட்டரி தொழிலை நெருக்கடிக்குள் தள்ளி விட்டிருக்கிறது. இதற்கிடையே சிக்கிம் மாநில அரசு தமக்குச் சேர வேண்டிய 4500 கோடி ரூபாய் வருவாயை மார்ட்டின் கையாடி விட்டதாக வழக்கு ஒன்றைத் தொடுத்திரக்கிறது. இவை தவிர வருமான வரித்துறையினரால் 32-க்கும் மேற்பட்ட வழக்குகள் மார்ட்டினின் மேல் பதியப்பட்டுள்ளன.
தனது சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகளே ஒரே வழி என்று தீர்மானித்த மார்ட்டின், தன்னைப் போலவே சிந்தித்து தனது கல்வி வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்திய ஜனநாயக கட்சி என்ற பெயர்பலகை கட்சி நடத்தி வரும் எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவின் கட்சியில் தனது மனைவி லீமா ரோஸை இணைய வைக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த மோடியின் மேடையை லீமா ரோஸ் வீர வாளும் கையுமாக அலங்கரித்தார்.
தமிழர் விடியல் கட்சியின் மேடையில் டைசன் மற்றும் திருமுருகன் காந்தி
மனைவியின் மூலம் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியில் நுழைந்த மார்ட்டின் தனது மூத்த மகன் சார்லஸ் ஜோஸ் மார்டினை பாரதிய ஜனதா கட்சியிலேயே நுழைத்துள்ளார். இன்னொரு மகன் டைசனை வைத்து தமிழர் விடியல் கட்சி என்ற இன்னொரு பெயர் பலகை அமைப்பைத் துவங்கி தமிழ்நாட்டின் தமிழ் மற்றும் ஈழ “உணர்வாளர்களோடு” நெருங்கியுள்ளார். இதே டைசனால் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்திக்கு 50 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது என அந்த அமைப்பிலிருந்து விலகிய உமர் சமீபத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தது நினைவிருக்கலாம். மேலும் இதே டைசன் பல்வேறு ‘போரட்டங்களில்’ கலந்து கொண்டு போஸ் கொடுக்கும் ஃபோட்டோக்களை மேற்படி தமிழ் உணர்வாளர்கள் மரியாதையுடன் வெளியிடுகின்றனர்.
காலையில் கக்கூசு ஒழுங்காக போகவில்லை என்றாலும் கருணாநிதியை காரணம் காட்டும் உணர்வாளர்கள், தற்போது லாட்டரி மார்ட்டின் வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் தி.மு.கவை விமரிசிக்காமல் கள்ள மௌனம் சாதிப்பதே உமரின் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நிரூபிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை ‘உணர்வாளர்கள்’ என்ற பெயரில் செயல்படும் பல்வேறு பெயர்ப்பலகை குழுக்களின் யோக்கியதை இதுதான். இதற்கு மேல் நாம் உள்ளே நுழைந்து எதையும் புதிதாக கண்டுபிடிக்கவோ நிரூபிக்கவோ அவசியமில்லை.
ஜெயாலலிதா, கருணாநிதி, போலிக் கம்யூனிஸ்டுகள், தமிழ் உணர்வாளர்கள், பாரதிய ஜனதா என்று ஓட்டுக்கட்சிகள் மற்றும் தமிழ் சார்ந்த குட்டிக் குழுக்கள் வரை மார்ட்டினின் பணம் விளையாடுகிறது. உங்கள் முன்னே தெரிவிக்கப்படும் பல்வேறு ‘அரசியல்’ கொள்கைகள் – போராட்டங்கள் – களப்பணிகளின் ஸ்பான்சரே மார்ட்டின்தான் என்றால் அந்த அரசியலின் யோக்கியதை என்ன என்பதை விளக்க வேண்டுமா?
ஆளும் வர்க்கம், அரசு மட்டுமல்ல அரசியல் கொள்கை சாரந்து பேசும் கட்சிகளும் காலாவதியாகி வருகின்றன. புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் மக்கள் அதிகாரம் மலர்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதற்கு மார்ட்டினின் லாட்டரி கொள்ளைப் பணமும் அந்த கொள்ளைப் பணம் பேசும் ‘கொள்கைகளும்’ ஒரு சான்று!
உலகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் சமூக உறவுகளின் இலக்கணத்தில் கூடி வாழும் மனிதத் தன்மையை ரத்து செய்து விட்டு பணத்தின் தயவால் மட்டுமே உறவாட முடியும் என்று மாற்றி விட்டது.
கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்திலிருந்த அரிதான காதல் இன்றைய தொழில் நுட்பப் புரட்சியின் விளைவாக சுலபமாகியிருக்கலாம். ஆனால் காதல் உருவாக்குவதாக சொல்லப்படும் அன்பும், கனிவும், கருணையும் இன்று அரிதாகிவிட்டது.
செல்பேசிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளைஸ்’ அதிகம். காதலோடு மல்லுக் கட்டும் பணம் போலவே பார்ப்பனியமும் பகை கொண்டிருக்கிறது. முன்னெப்போதைக் காட்டிலும் ‘கௌரவக் கொலைகள்’ அதிகரித்திருக்கின்றது. தலித் இளைஞர்கள் பகிரங்கமாக தலை துண்டிக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதிவெறியின் அரிவாளை எதிர்த்துப் போராட வேண்டிய காதல் வெள்ளித் திரையில் வெளிநாடு பறந்து ரோசாப்பூ கொடுப்பதையே கிராபிக்சில் சித்திரிக்கிறது.
சாதி, மதவெறியை தவிர்த்து விட்டுப் பார்த்தால் சொல்லிக் கொள்ளப்படும் காதலில் கூட ஆணாதிக்கத்தின் அமில வீச்சு அதிகம். பெண் என்பவள் ஆணின் வேட்கைக்கு அடிபணியும் விலங்காகவே தமிழ் சினிமாவும், ஊடகங்களும் உணர்த்துகின்றன. விளைவாக பாலியல் வன்முறைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டன.
காதலாய் கசிய வேண்டிய காமம் இன்று வெறியாய் மாற்றப்பட்டிருப்பது மற்றுமொரு விளைவு. அதனால் நமது பெண் – ஆண் குழந்தைகள் தப்பிப்பது எப்படி என்ற கவலை கொள்ளாதார் யாருமில்லை. சமூக வாழ்க்கையின் துறைகளில் ஆணுக்கு நிகராய் தலை நிமிரும் பெண்கள் கூடவே பாலியல் சுரண்டலை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கிறது.
வன்முறையின் அங்கமாக மாற்றப்பட்டிருக்கும் காதலையும், காமத்தையும் மற்றவர் பிரச்சினை என எவரும் தப்பிப்பது இயலாது. அதைப் புரிந்து கொண்டு சமூக நடவடிக்கைகளில் நம்மையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி? இந்தக் கட்டுரைகள் உதவி செய்யுமென நம்புகிறோம்.
இந்தியா டுடேயின் செக்ஸ் விற்பனையும்,
தமிழ்க் கற்பின் கூச்சல்களும்!
ஜீன்ஸ் பேண்டும், பாலியல் வன்முறையும்!
பூவரசியின் கொலையும் ‘தற்கொலையும்’!
சினிமா விமரிசனம்: காதலில் சொதப்புவது எப்படி?
அஞ்சலி குப்தா: இந்தியா விமானப் படையின் ஆணாதிக்கத்திற்கு பலிகடா!
பிஞ்சுகளைக் குதறும் வெறியர்கள்!
‘ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்
பேருந்தில் ஒரு மிருகம்!
வேடிக்கை பார்த்த மௌனம்!!
பக்கங்கள் : 80 விலை ரூ. 20.00
_______________________
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸூல உல்லாசம்
(ஊருக்கு ஊரு சாராயம்…)
இட்டிலி ஒத்த ரூவா, கக்கூசு அஞ்சு ரூவா
பட்ட சோறு அஞ்சு ரூவா, பருப்பு விலை நூறு ரூவா
பாட்டில் தண்ணி பத்து ரூவா, படிக்க பீசு லட்ச ரூவா
நீ வாழ வெச்ச தெய்வமுண்ணு கூவலைண்ணா கொன்னுருவா
(ஊருக்கு ஊரு சாராயம்…)
படிக்க வுடாம உஸ்கூல மூடுறான்
குடிக்க ஒயின்சாப்ப கோயிலாண்ட தெறக்கிறான்
மாசம் ஒருநாள்தான் மண்ணெண்ணெ ஊத்துறான்
இந்த நாசமத்த கடைய மட்டும் மிட்நைட்லதான் சாத்தறான்
மாட்டிறைச்சி உண்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி ஒரு முஸ்லிமை அடித்து கொன்றுள்ளது இந்துத்துவ கும்பல். உத்திர பிரதேச மாநிலம் தாத்ரியில் வசித்து வரும் முகமது அக்லாக் தான் கொல்லப்பட்டவர். கடந்த 28-ம் தேதி இரவு அவர் வீடு புகுந்த ஒரு கும்பல் அக்லாக் மற்றும் அவரது மகன் தானிஷை வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வெளியே போட்டுள்ளது. பின்னர் தடிகளாலும், கற்களாலும் தாக்கியதில் அக்லாக் உடல் சிதைந்து இறந்துள்ளார். அவரது மகன் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் தாத்ரியின் அருகாமை கிராமமான பிசாராவில் ஒரு கோயிலின் மைக்கில் அக்லாக் குடும்பம் மாட்டிறைச்சி வீட்டில் வாங்கி வைத்து சாப்பிட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட முகமது அக்லாக்
அக்லாக்கின் மகள் சஜிதாவை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளது இந்துத்துவ கும்பல். பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேரை கைது செய்தது போலீஸ். கொலையாளிகளில் சிலர் கைது செய்யப்பட்ட தகவல் பரவிய உடனே ‘மாட்டிறைச்சி உண்ட’ அக்லாக் குடும்பத்தினருக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி இந்துக்களை சாலை மறியலில் ஈடுபட வைத்திருக்கின்றனர் இந்து மதவெறியர்கள்.
போலீஸ் வந்து விசாரித்த போது அது ஈத் பெருநாளுக்காக வாங்கிய ஆட்டிறைச்சி என்று அக்லாக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தங்கள் நடவடிக்கையில் ‘நடுநிலையை பேண’ விரும்பிய போலீஸ் அக்லாக் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது.
‘தங்கள் வீட்டில் கைப்பற்றியது மாட்டிறைச்சி இல்லை என்றால் தனது தந்தையின் உயிரை திரும்ப பெற்று தருவார்களா?’ என்று கேட்கிறார், சஜிதா.
ரத்தத்தை உறைய வைக்கும் இந்த சம்பவம் பசுவை வைத்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முன்னெடுக்கும் அரசியல் தொடர் நிகழ்வின் ஒரு பகுதி. 1996-ம் வருடம் இயற்றப்பட்டு கிடப்பில் கிடந்த மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை கடந்த மார்ச் மாதத்தில் புத்துயிரூட்டியது மகராஷ்டிர பா.ஜ.க. அரசு. அதனை தொடர்ந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி அரசு ஆளும் காஷ்மீரிலும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரப்பட்டதை எதிர்த்து அந்த மாநில மக்கள் செப்டம்பர் 25-ம் தேதி பக்ரீத் தொழுகை முடிந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்லாக்கின் உறவினர்கள்
‘மாட்டிறைச்சிக்கு தானே தடை; நாம் தான் அதனை உண்பதில்லையே’ என்று இருந்து விடலாமா என்றால் அதற்கும் சோதனையை ஏற்படுத்தியது மகராஷ்டிரா அரசு. ஜைனர்களின் மதவிழா ஒன்றை காரணம் காட்டி செப்டம்பர் 14-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை சிக்கன், மட்டனுக்கு தடை விதித்தது மகராஷ்டிர பா.ஜ.க அரசு.
உலகமே தின்னும் மாட்டிறைச்சியை கொலைக்கான தண்டனையாக வைத்திருப்பது மனுநீதியின் பிறப்பிடமான இந்தியாவில் மட்டும்தான். பல்வேறு நாடுகளில் விபத்துக்களால், போர்களால், குடும்ப வன்முறைகளால் மக்கள் இறக்கின்றனர். மதவெறியாலும் கூட இறக்கின்றனர். ஆனால் ஒரு உணவுப் பொருளால் கொல்லப்படும் இந்துமதவெறிக்கு இணை எதுவுமில்லை. இதைவிட காட்டுமிராண்டித்தனமும், அநாகரிகமும் எங்காவது உள்ளதா? இல்லை அசைவ உணவு உண்போருக்கு வீடு வாடகைக்கு இல்லை என்று வெளிப்படையாக பலகை போடும் அசிங்கம்தான் இந்தியா அன்றி எங்கேயாவது கேள்விப்பட முடியுமா?
வேண்டாம் வம்பு என்று ஒதுங்கி செல்ல நினைத்தாலும் கையை பிடித்திழுத்து அடிக்கும் கதையாக இந்த சமூகம் இந்துமதவெறியால் பாதிக்கப்பட்டு வருகிறது. ‘அக்லாக் மாட்டிறைச்சி உண்ணவில்லை’ என்ற ‘நற்சான்றிதழுடன்’ அவர் குடும்பம் நீதிக்காக ஏங்குகிறது. இந்த கையறு நிலை உங்களை உறுத்தவில்லை என்றால் பார்ப்பன இந்துமதவெறியின் பலிபீடத்தில் நமது அரசியல், பண்பாட்டு உரிமைகளை நாம் ஒவ்வொன்றாக இழக்க நேரிடும்.
நீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்?
நமது நண்பர்கள் வாஞ்சிநாதன், திருநாவுக்கரசு, சி.எம்.ஆறுமுகம் மற்றும் 11 சக வழக்கறிஞர்களை, எந்த விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் பார் கவுன்சில் ஆப் இந்தியா தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது.
உயர்நீதிமன்ற வழக்குரைஞர் லஜபதிராய்
இவ்வாறு தற்காலிக நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை வழக்கறிஞர் சட்டத்தின் பிரிவுகள் 35 மற்றும் 36 ஆகியவை, பார் கவுன்சிலுக்கு வழங்கவில்லை என்பதை சட்டம் குறித்த ஆரம்ப அறிவு கொண்ட எந்த ஒரு நபராலும் புரிந்து கொள்ள முடியும்.
நமது நண்பர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையாகப் போராடியவர்கள். அவர்களுடன் நாம் கரம் கோர்த்து நிற்கிறோம். அவர்கள் நமது அரசமைப்பு கூறும் விழுமியங்களை வேறு யாரை விடவும் அதிகமாகப் பாதுகாத்து நின்றவர்கள். அவர்களுக்கு எதிரான பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை நெறியற்றது, சட்டவிரோதமானது.
கருத்துரிமை அழிக்கப்பட்டதென்றால், அரசமைப்புச் சட்டமே அழிக்கப்பட்டுவிட்டதாகப் பொருள் என்றார் டாக்டர் அம்பேத்கர். உயர் நீதிமன்றங்களின் மாட்சிமை தங்கிய நீதியரசர்கள் கருத்துரிமையை நசுக்கக்கூடாது. அது நீதித்துறை பாசிசம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஜெர்மனியில் அதுதான் நடந்தது. இவர்கள் அரசமைப்பு குறித்து கொண்டிருக்கும் புரிதலின்மையையே இது காட்டுகிறது.
உயர்நீதிமன்றத்தின் ஒவ்வொரு அறையிலும் காந்தியின் படம் பெருமையுடன் தொங்கவிடப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்க டர்பன் நீதிமன்றத்தின் நீதிபதி, காந்தியிடம் அவரது தலைப்பாகையை அகற்றுமாறு கூறியபோது காந்தி அகற்ற மறுத்தாரே, அது நீதிமன்றத்தில் அவர் நிகழ்த்திய கலமில்லையா?
கிறித்தவ முறைப்படி அல்லாத திருமணங்கள் செல்லத்தக்கவையல்ல என்று தென்ஆப்பிரிக்க தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தனது மனைவியுடன் காந்தி கைது ஆனாரே அது ஏன்?
ஒரு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காந்தி கைது ஆனது தவறு என்றால், அவரது படத்தை நீதிமன்ற அறைகளிலிருந்து அகற்றி விடலாமே.
ஒரு தீர்ப்பை விமரிசிப்பது என்ன வகையில் சட்ட விரோதமானது?
மதுரா வல்லுறவு வழக்கில் மாட்சிமை தங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும் விமரிசனத்துக்கு உள்ளாக்கப்படவில்லையா?
வல்லுறவு தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு பிரிவு 376A சேர்க்கப்பட்டதே அந்த விமரிசனத்தின் விளைவுதான் என்பது உண்மையில்லையா?
திரு.ஏ.கே ராமசாமிக்கும், தர்மராஜுக்கும் எதிராக எதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
பகத் சிங் செய்த தவறென்ன? தமிழகத்தின் நீதிமன்றங்களில் தாய்மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்ற அறைக்குள்ளே மவுனமான முறையில் கோரி நின்றது பாவச்செயலா?
நீதிமன்றத்தின் மாண்பை நாசமாக்கியவர்கள் யார்? வழக்குரைஞர்களா அல்லது சக நீதிபதியை அவரது அறைக்குள்ளே ஆபாசமாக வசை பாடிய இன்னொரு உயர்நீதிமன்ற நீதிபதியா?
உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்வதையொட்டி அவருக்கு சென்னையில் நடைபெற்ற பிரிவுபசார விழாவில் அவர் கண்ணீர் விட்டு அழவில்லையா? அப்போதெல்லாம் தலைமை நீதிபதி வாய் திறக்கவில்லையே ஏன்?
வழக்கறிஞர்களுக்கு எதிரான இந்த அவதூறுகள் அவசியமற்றவை. வெறு எந்த நிறுவனத்தைக் காட்டிலும் அரசியல் நிர்ணயச் சட்டத்தைக் காத்து நின்றவர்கள் வழக்கறிஞர்கள்தான்.
அனைத்திந்திய பார் கவுன்சில் சட்ட விரோதமான தற்காலிக நீக்கங்களில் அவசரம் அவசரமாக ஏன் ஈடுபடுகிறது?
நீதிபதிகளுக்குச் சளி பிடித்துக் கொண்டால், அனைத்திந்திய பார் கவுன்சில் எதற்காகத் தும்முகிறது?
– மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு.லஜபதி ராய் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம்.