Monday, October 14, 2019
முகப்பு போலி ஜனநாயகம் போலீசு மூடு டாஸ்மாக்கை - காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

மூடு டாஸ்மாக்கை – காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

-

05-10-2015 அன்று காங்கயம் பேருந்து நிலையத்தில், “டாஸ்மாக்கை மூடு , மக்கள் அதிகாரத்தை நிறுவு..” என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட அனுமதிக்கு பலமுறை இழுத்தடித்து பிறகு அனுமதி வழங்கியது காங்கயம் போலிசு. திட்டமிட்டபடி மாலை 5.00 மணிக்கு பறை முழக்கத்துடன் துவங்கியது ஆர்ப்பாட்டம் .

காங்கயம் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
“இப்பொழுதெல்லாம் சாராயம் லத்தியாக, பூடிசாக, ஜே.சி.பி இயந்திரமாக, இரும்பு பைப்பாக மாறி வருகிறது. ஆனால் மக்கள் அதிகாரமோ மாணவர்களோ இதற்க்கெல்லாம் அஞ்சி ஓடப்போவதில்லை.”

மக்கள் அதிகாரம் வாழ்க !
அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு !
இதோ ஆளவருகுது மக்கள் அதிகாரம்!
குடி கெடுக்கும் டாஸ்மாக்கை !
இழுத்து மூடு இழுத்து மூடு !

வெட்கக் கேடு வெட்கக் கேடு !
கஜானாவை நிரப்பிட
ஊத்திக்கொடுப்பது வெட்கக் கேடு !

குடி போதையில் கெட்ட குடும்பம்
கோடிகளை தாண்டுது
சாராயம் தான் கொள்கையென
அரசாங்கம் சொல்லுது !

பொறுக்கி செய்யும் வேலையெல்லாம்
அரசாங்கம் செய்யுது ; இத
பொறுப்போட செய்வதற்கே
அதிகார வர்க்கம் இருக்குது.

கடைய மூடுன்னு போராடினா
போலிசு உதைக்குது
கடைக்கு கடை காவல் போட்டு
பாதுகாப்பு கொடுக்குது !

ஊருக்கு ஊரு கடைய வெச்சு
தாலியறுக்குது டாஸ்மாக்கு !
கடைய மூடுன்னு மக்கள் சொன்னா
காக்கிச் சட்ட பாயுது!

கல்வி கொடுக்க வக்கில்ல !
வேல கொடுக்க வக்கில்ல !
குடி கெடுக்கும் டாஸ்மாக் எதுக்கு !

புத்தகத்த படிக்கவா ?
சாராயத்தை குடிக்கவா ?

இழுத்து மூடு ! இழுத்து மூடு !
குடிகெடுக்கும் டாஸ்மாக்கை
இழுத்து மூடு , இழுத்து மூடு !!

ரத்து செய் ரத்து செய்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது
போடப்பட்ட பொய் வழக்கை
ரத்து செய் !

கெஞ்சாதே கெஞ்சாதே !
குடி கெடுக்கும் அரசிடம்
கெஞ்சாதே கெஞ்சாதே !!

தீரவில்லை தீரவில்லை
நீதிமன்றம் தீரவில்லை !
சட்டமன்றம் தீரவில்லை !
ஒன்றே தீர்வு ! ஒன்றே தீர்வு !
மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு!!

என்ற விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

காங்கயம் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
“டாஸ்மாக்கை மூடு , மக்கள் அதிகாரத்தை நிறுவு..”

தலைமை உரையில் தோழர் வசந்தன் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்களை இந்த அரசு ஒடுக்குவதை அமைதிப்படை சினிமா வசனத்துடன் ஒப்பிட்டு நையாண்டி செய்தார். சாராயம் சட்ட விரோதம் என்றாலும் அதை பாதுகாக்க இந்த போலிசு எப்படியெல்லாம் பாடுபடுகிறது .என்பதை அம்பலப்படுத்தி பேசினார். ஏதோ சூட்டிங் நடப்பது போல போலிசு கேமராக்கள் ஆங்காங்கே தோழர்களை தீவிரவாதிகளை போல படம் பிடிப்பதை எள்ளி நகையாடினார். ‘நேர்மையான’ காவல் துறை தோழர்களை தேடிச் செல்லும்போது டாஸ்மாக்குக்கு எதிராக போராடுபவர்கள் என்று மக்களிடம் விசாரிக்கவில்லை. மாறாக திருடர்களை போல சித்தரிக்க முயற்சி செய்து தோற்று போனதை அம்பலப்படுத்தினார். அடக்கு முறையால் ஒரு போதும் எமது அமைப்பை வெல்லமுடியாது என்பதை பதிவு செய்தார்.

அடுத்ததாக தோழர் புஸ்பராஜ் பேசியபோது

“டாஸ்மாக்குக்கு எதிராக ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தான் துவங்கி வைத்தனர். சசி பெருமாளின் மரணத்திற்கு பிறகு இந்த டாஸ்மாக்குக்கு எதிரான எழுச்சி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் துவங்கப்பட்டது. இந்தப் போராட்டத் தீ தமிழகம் முழுவதும் பற்றி படர்ந்தது. போராடிய மாணவர்களை கொலைவெறியோடு தாக்கும் போலிசு, அவர்களின் பிள்ளைகள் குடித்து விட்டு வரும்போது சந்தோசப்படுவார்களா” என கேள்வி எழுப்பியபோது போலிசாரின் முகத்தில் ஈ ஆடியதை பார்க்க முடிந்தது. “இந்த அடக்கு முறை எங்களை ஒன்றும் முடக்கி விடாது” என்ற அறைகூவலுடன் தமது உரையை நிறைவு செய்தார்.

தோழர் ராமசாமி, மக்கள் அதிகாரம் தமது சொந்த அனுபவங்கள் மூலம் இந்த டாஸ்மாக்கினால் வரும் பாதிப்புகள் அன்றாடம் மக்களை எப்படியெல்லாம் வதைக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும், இந்த டாஸ்மாக்கினால் பெண்கள் இழந்த குடும்பங்களுக்கும் இந்த அரசு என்ன பதில் சொல்ப்போகிறது என்பதை கேள்வி எழுப்பினார். ஆனால், எதற்கும் சம்மந்தம் இல்லாதது போல் தன்னை காட்டிக்கொள்ளும் இந்த அரசினை இனியும் நம்பி இருப்பதில் பலனில்லை, இனி மக்கள் அதிகாரத்தை நிறுவுவதே தீர்வு என்று தன் உரையை முடித்தார்.

காங்கயம் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
“நாங்கள் பிறந்த மண் இது. இதில் எங்கு அநீதி நடந்தாலும் நாங்கள் போராடுவோம்

விளவை ராமசாமி, மாநில துணைத்தலைவர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, “நாங்கள் பிறந்த மண் இது. இதில் எங்கு அநீதி நடந்தாலும் நாங்கள் போராடுவோம்” என்று உரையை துவங்கினார். “நாங்கள் இம்மண்ணில் வாழ்வதே மக்களுக்காக போராடுவதுதான். அதில்தான் மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கிறது. எனவேதான் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக்கை எதிர்த்து போராடினார்கள். அந்தப் போராட்டத்தில் மிகக் கேவலமாக நடந்து கொண்டது போலிசு. நிராயுதபாணியான மாணவர்களை போலிசு லத்திகளும். இரும்பு பைப்புகளும் சூழ்ந்துகொண்டு தாக்கினர். இதை விட கோழைத்தனம் வேறெங்கு இருக்க முடியும். இதை ஒரு பெரிய வீரமாக நினைத்துக்கொள்கிறார்கள். இத்தனை ஆயுதங்களை கொண்டு தாக்கியபோதும் கொஞ்சமும் பின்வாங்கவில்லை மாணவர்கள்.

இப்பொழுதெல்லாம் சாராயம் லத்தியாக, பூடிசாக, ஜே.சி.பி இயந்திரமாக, இரும்பு பைப்பாக மாறி வருகிறது. ஆனால் மக்கள் அதிகாரமோ மாணவர்களோ இதற்க்கெல்லாம் அஞ்சி ஓடப்போவதில்லை. உங்களால் என்ன செய்ய முடியுமோ. அதை நீங்கள் செய்யுங்கள். எங்கள் மண்ணிற்கு கேடு வரும் போது நாங்கள் எதிர்த்து நிற்ப்போம்.

இந்த அரசு தோற்று போவது உறுதி. எனவேதான். நேர்மையானவர்கள் இந்த அரசில் நீடிக்க முடிவதில்லை . உதாரணத்திற்கு டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை சம்பவம் , ஒவ்வொரு நேர்மையானவர்களையும் அழிக்க வேண்டும் என்று இந்த அரசு துடிக்கிறது. சகாயம் விசயத்திலும் இதுதான் நடக்கிறது. இதைத்தான் கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம். இந்த அரசு ஆளும் தகுதியை இழந்து விட்டது. மக்களே அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்ற அறை கூவலோடு தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக தோழர் செந்தூரன் நன்றி உரை வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் இடையில் ரிசர்வு படையை இறக்கி பீதி ஊட்ட நினைத்தது போலிசு. ஆனால் இதற்க்கெல்லாம் மக்களோ மக்கள் அதிகாரத்தின் தோழர்களோ அஞ்சப் போவதில்லை என்ற உறுதியுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் இறுதி வரை இந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்துச் சென்றனர். காங்கயத்தில் மக்கள் அதிகாரத்தின் முதல் ஆர்ப்பாட்டம் மக்களின் பேராதரவுடன் நடைபெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
காங்கயம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க