Friday, August 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 602

கோவையில் லெனின் பிறந்த நாள் – கம்யூனிஸ்டின் தகுதி எது ?

6

ன்பார்ந்த தோழர்களே !.

தோழர் லெனின்
இந்தச் சேனையில் வீரர்களாயிருப்பதைத் தவிர, மேலதிகமான உயர்வான கவுரவம் வேறெதுவும் இல்லை.

விளாடிமிர் இலியீச் உல்யானவ் 1870 ஏப்ரல் 22ஆம் தேதி ரசியாவில் வால்கா நதிக் கரையிலுள்ள ஸிம்பீர்ஸ்க் என்னும் நகரில் பிறந்தார். தன்னுடைய 54 ஆண்டு கால வாழ்வில் உழைப்பாளி மக்களை அணிதிரட்டி போராடி உலகில் முதன் முதலாக தொழிலாளிகள் அரசு ஏற்படுத்தினார்.

தோழர் லெனினை பற்றி தோழர் ஸ்டாலின் கூறுகிறார்.

தோழர்களே கம்யூனிஸ்டுகளாகிய நாம் தனி வார்ப்பிலானவர்கள். நாம் தனி வகை மூலப்பொருள்களால் ஆக்கப்பட்டவர்கள். நாம் மகத்தான் பாட்டாளி வர்க்க போர்த் தந்திர நிபுணரின் படையை தோழர் லெனினுடைய படையைச் சேர்ந்தவர்கள். இந்தச் சேனையில் வீரர்களாயிருப்பதைத் தவிர, மேலதிகமான உயர்வான கவுரவம் வேறெதுவும் இல்லை. தோழர் லெனினை நிறுவனராகவும் தலைவராகவும் கொண்ட கட்சியின் உறுப்பினர் என்பதை விட, மேலதிகமான உயர்வான பட்டம் வேறேதுவும் இல்லை. இத்தகைய கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பது எல்லோருக்கும் வாய்க்கின்ற ஒன்றல்ல. இத்தகைய கட்சியின் உறுப்பினராக இருப்பதால் ஏற்படும் எல்லா நெருக்கடிகளையும் தாங்கி போராட்ட புயல்களை எதிர்கொள்ள இயலுவது எல்லோராலும் முடியக் கூடிய ஒன்றல்ல. தொழிலாளர் வர்க்கத்தின் புதல்வர்கள்தான் வாழ்க்கையில் இல்லாமையை எதிர்கொண்டும், போராட்டத்திற்கு அஞ்சாத புதல்வர்கள்தான், நம்பவொண்ணா வறுமையிலும் வீரஞ்செறிந்த முயற்சிகளை மேற்கொள்ளும் புதல்வர்கள்தான் எல்லோரையும் முந்திக் கொண்டு இத்தகைய கட்சியில் உறுப்பினராக வேண்டும். இதனால்தான், லெனினிய வாதிகளின் கட்சி, பொதுவுடைமையாளர்களின் கட்சி, தொழிலாளி வர்க்கத்தின் கட்சி என்று அழைக்கப்படுகிறது.”

நாள் தோறும் 16 மணி நேரம் கடும் உழைப்பில் கம்பெனிகளில் வேலை செய்த தொழிலாளர்கள் லெனின் கட்சியில் கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராகி ரசியாவை மாற்றிக் காட்டினார்கள். உலக முதலாளிகளை நடுநடுங்க வைத்தார்கள்.

லெனின், ஸ்டாலின்மத வெறியர்களை எதிர்க்க முடியாது, பன்னாட்டு முதலாளிகளை எதிர்க்க முடியாது, தொழிலாளிகளை புரட்சிக்கு அணி திரட்ட முடியாது என்று இன்றும் நமது நாட்டில் பல பேர் ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்களை பார்த்து தோழர் லெனின் கூறுகிறார்.

“முடியாது என்று சொல்லாதே
செய்ய மாட்டேன் என்று சொல்”

என இடித்துரைத்தார்.

தேர்தலில் தொழிலாளர்கள் ஒவ்வொரு முறை ஓட்டுப் போடும் போதும் ஒவ்வொரு உரிமையாக பறி போய்க் கொண்டிருக்கிறது. ஓட்டுப் போடுவதன் மூலம் ஓட்டே போடாத முதலாளிகளுக்கு திமிர் அதிகம் ஏறுகிறது.

சின்னவேடம்பட்டி சி‌.ஆர்‌.ஐ முதலாளி அரசிடம் அனுமதி வாங்காமல் கம்பெனியை கதவடைப்பு செய்கிறார். நீதி மன்றத்தில் தடை உத்தரவு இருக்கும் போதே லாக் அவுட் செய்கிறார் எங்கிருந்து இந்த துணிச்சல் வந்தது? சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்கள் பிளவுபட்டு இருப்பதால்தான் இந்நிலை வந்தது. சோழா பம்ப்ஸ், ரேன்சர் உள்ளிட்ட CRI யின் ஆறு யூனிட் தொழிலாளிகளும் ஒன்றுபட்டால் முதலாளியின் ஆணவம் அடங்கி விடும்.

லெனின்
இந்த நாடு நம்முடையது, கம்பெனிகள் நம்முடையது எனும் உணர்வுடன் நாம் செயல்பட்டால் முதலாளித்துவத்தின் மூச்சடங்கும்.

இந்த நாடு நம்முடையது, கம்பெனிகள் நம்முடையது எனும் உணர்வுடன் நாம் செயல்பட்டால் முதலாளித்துவத்தின் மூச்சடங்கும். நம் போராட்டத்தின் கால வரையறை என்ன? மூடிய கதவை முதலாளியாக திறக்கும் வரை நம் போராட்டம் தொடர வேண்டும். பெஸ்ட் கம்பெனி தொழிலாளர்களும் சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்களும் இதனை நெஞ்சில் வரித்துக் கொண்டு போராடி வெற்றி பெற வேண்டும்.

தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்து தொழிலாளர் உரிமைகளை தக்க வைக்க வேண்டுமானால், புதிய உரிமைகளைப் பெற வேண்டுமானால் தோழர் லெனின் காட்டிய வழியில் புதிய ஜனநாயக அரசு அமைப்பதே தீர்வு. இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறையால் இப்போது மட்டுமல்ல எப்போதுமே தொழிலாளர்கள் எந்த உரிமையையும் பெற முடியாது.

முதலாளியோ, வியாபாரியோ, அல்லது நிலப்பிரபுவோ தொழிலாளர்களுக்கு வேலைகளை வழங்கி விட்டார்கள் என்று கூறுவது சரியல்ல. மாறாக உழைப்பாளிதான் தனது உழைப்பின் மூலம் இந்த உலகை இயக்குகிறான். முதலாளி உள்ளிட்ட இந்த மொத்த உலகிற்கும் சோறு போடுகிறான். தனது உழைப்பின் பெரும் பகுதியை இனாமாக மற்றவர்களுக்கு வழங்குகிறான் என தோழர் லெனின் சுரண்டல் பேர்வழிகளை திரை கிழித்து தொழிலாளர்களுக்கு ஊக்கமூட்டினார்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ
இயந்திரங்களை இயக்கி உழைப்பது மட்டும் நம் வேலையல்ல; தொழிற் சங்கமாக மட்டும் திரண்டு போராடுவதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. அதற்கு மேலேயும் போக வேண்டும்.

தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்; ஆசான். அவர் தலைமையில் ரசிய கம்யூனிஸ்டு கட்சி, உழைப்பாளி மக்களை அணி திரட்டியது. இயந்திரங்களை இயக்கி உழைப்பது மட்டும் நம் வேலையல்ல; தொழிற் சங்கமாக மட்டும் திரண்டு போராடுவதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. அதற்கு மேலேயும் போக வேண்டும். கூலி அடிமைத் தனத்தையே ஒழிக்க வேண்டும். நாட்டை ஆளவும் வேண்டும். உழைப்பவர்களுக்கான அரசியல் அதிகாரத்தை படைக்க வேண்டும். இந்தப் பாதையில் நாம் நடை போட வேண்டும். போராட வேண்டும். தானேயான தொழிலாளி வர்க்கத்தை தனக்கான வர்க்கமாக மாற்ற வேண்டும். இத்தகைய வரலாற்றுக் கடமையை தோழர் லெனின் காட்டிய வழியில் ரசியத் தொழிலாளர்கள் நிறைவேற்றியதால் சோசலிச அரசு அமைந்தது

அதன் சாதனைகள்:

  • ஆரம்ப பாட சாலை முதல் பல்கலைக் கழகம் வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. தொழிலாளர்கள் விவசாயிகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் தொழிற்கல்வி அளிக்கப்பட்டது.
  • சோவியத் நாட்டில் வீடு இல்லாத மனிதனே கிடையாது எனும் நிலையை உருவாக்கியது.
  • சாதாரண காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரையில் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
  • வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான இலவச பராமரிப்பு நிலையங்கள்.
  • மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்கு வரத்து வசதி. ஒரு ரூபாயில் ஒரு நகரத்தையே சுற்றி வரலாம்.
  • ஆலைத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை. அரசு செலவில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சுற்றுலா பயணம்.
  • ஊழியர்களின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது. வேறெந்த மறைமுகமான வரிகளும் கிடையாது.
லெனின்
ஆயிரக்கணக்கான சிறப்புகளை லெனின் தலைமையில் ரசியப் பாட்டாளிகள் நிகழ்த்தினர்.

இன்னும் இது போல ஆயிரக்கணக்கான சிறப்புகளை லெனின் தலைமையில் ரசியப் பாட்டாளிகள் நிகழ்த்தினர். இதனை நமது நாட்டிலும் அமுல்படுத்த வேண்டுமானால் லெனினிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எனவே தான் தோழர் ஆசான் லெனின் பிறந்த நாளை நமது சங்கம் கொண்டாடுகிறது. இதனை ஏற்க மறுப்பவர்கள் நிச்சயம் சமூக விரோதிகளாகத்தான் இருப்பார்கள்.

தொழிலாளர்கள் அனைவரும் சங்கம் அமைத்து போனஸ், சம்பள உயர்வு என பூச்சிகளைப் போல பேசிக் கொண்டு இருந்தால் போதாது. அரசு வேண்டும்; அதிகாரம் வேண்டும் என முழங்க வேண்டும். அதற்காக அணி திரள வேண்டும். நாம் நாட்டில் நிலவுகின்ற அரசியல் சமூக அமைப்பு முறை முழுவதற்கும் தொழிலாளர் நலன்களுக்கும் இடையே இணக்கம் காண முடியாத பகைமையை, தொழிற்சங்கங்கள் எடுத்துக் காட்ட வேண்டும். மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிமைத் தனத்தை ஒழிக்க போராடுவதே முதன்மையான பணி என்பதை தொழிற்சங்கங்கள் விளக்க வேண்டும்.

மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப்படுத்தப்பட்டுள்ளதை சட்ட மன்றமும் பாராளுமன்றமும் ஏற்கிறது. ஆனால் நமது பாதையோ உழைப்பை ஆள்பவனே உலகை ஆள வேண்டும் என்பதே, எனவே தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். புரட்சிக்கு அணிதிரள வேண்டும்.

லெனின்
சொத்துடைமையற்றவர்கள் தங்களை முதலாளிக்கு விற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்ற இச்சமுதாய அமைப்பு முறையை ஒழிப்பதற்கு போராடுவதையே முழுமையான பணியாகக் கொள்ள வேண்டும்.

தொழிற்சங்கங்கள் கூலி உயர்வுக்கான போராட்டங்களோடு சொத்துடைமையற்றவர்கள் தங்களை முதலாளிக்கு விற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்ற இச்சமுதாய அமைப்பு முறையை ஒழிப்பதற்கு போராடுவதையே முழுமையான பணியாகக் கொள்ள வேண்டும்.

“தொழிலாளர்கள் தாங்கள் பெறும் சம்பளம் அல்லது கூலி உயர்வாகவோ குறைவாகவோ இருப்பதில் எந்த இழிவும் இல்லை. தன் உழைப்பில் உண்டான செல்வம் முழுவதையும் பெறுவதற்கு பதிலாக தான் சொந்த உற்பத்தி பொருளின் கூலி எனப்படும் பகுதியை மட்டும் பெறுவதோடு தொழிலாளி வர்க்கம் திருப்திப்பட வேண்டி இருப்பதுதான் மாபெரும் இழிவு”

என்கிறார் தோழர் லெனின்

நூறு ரூபாய் கூலி உயர்வுக்கு மேல் இருநூறு ரூபாய் கூலி உயர்வு கோருவது சாதாரண வர்க்க போராட்டம். உயர்ந்த வர்க்க போராட்டம் என்பது தொழிலாளர்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதுதான்.

தொழிலாளர்கள் தங்கள் நலனுக்காக மட்டுமல்லாமல் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்காகவும் அவர்களுக்கு தலைமை தாங்கி நடத்தும் போராட்டம் தான் அரசியல் போராட்டம். இப்படியானதொரு உன்னதமான பாதையில் தோழர் ஆசான் லெனின் பாதையில் போராடும் சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து போராடுவோம் ! ஒட்டு மொத்த இயற்கைக்கும் மனித குலத்துக்கும் விரோதியான முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

லெனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நிகழ்ச்சி நிரல்

நாள் : 22.04.2015 மாலை 5 மணி

இடம் : சி‌ஆர்‌ஐ கம்பெனி நுழைவாயில் (சின்னவேடம்பட்டி)

தலைமை : தோழர் மூர்த்தி சி‌ஆர்‌ஐ கிளைத் தலைவர்

முன்னிலை : தோழர் திலீப் மாவட்டச் செயலர் பு..தொ.மு

தோழர் குமாரவேல் மாவட்டத் தலைவர், பு..தொ.மு

உரை வீச்சு : தோழர் நித்தியானந்தன் பெரோலிங்க்ஸ் கிளைச் செயலர்

தோழர் கோபிநாத் அமைப்புச் செயலர்

தோழர் கோபால் பங்கஜா மில் கிளைச் செயலர்

தோழர் மோகன் ராஜ் கம்போடியா மில் கிளைச் செயலர்

தோழர் ரங்கசாமி முருகன் மில் கிளைத் தலைவர்

தோழர் பூவண்ணன் மாவட்ட பொருளாளர் பு..தொ.மு

எழுச்சியுரை : தோழர் விளவை இராமசாமி மாநிலத் துணைத் தலைவர் , பு..தொ.மு

நன்றியுரை : தோழர் இராஜன் எஸ்‌.ஆர்‌.ஐ கிளைச் செயலர்

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

அர்ச்சகர் வழக்கு – பார்ப்பன அறநிலையத்துறை சதி

4

சூத்திரன், பஞ்சமன் தொட்டால் சாமிக்குத் தீட்டா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை முறியடிக்க ஆலயத் தீண்டாமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்ற வழக்கில் சதி செய்யும்

பார்ப்பன அறநிலையத்துறையைக் கண்டித்து

ஆர்ப்பாட்டம்

21.4.2015 மதியம் 1.30 மணி சென்னை உயர்நீதிமன்ற வாயிலில்

அன்பார்ந்த தமிழ் மக்களே,

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு 1972-க்குப் பின் தற்போது மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அர்ச்சகர் வழக்கு
உச்சநீதிமன்றத்தில் அர்ச்சகர் மாணவர்களுடன் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள்.

“கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் ஈனச்சாதியாய், சூத்திரர்களாய் வாழ்வதை விட கிளர்ச்சி செய்து சிறை செல்வது மேல் அல்லவா?” என நம்மீது சுமத்தப்பட்ட சாதி இழிவை அகற்றப் போராடுமாறு, தனது 95 வயதில் தமிழக மக்களை நோக்கிக் அறைகூவினார் பெரியார்.

இன்றோ, “நீங்கள் ஈனச்சாதிதான். பார்ப்பனரல்லாத  பிற சாதியினர் சாமி சிலையைத் தொட்டால், கோயில் தீட்டாகிவிடும்; கடவுள் வெளியேறி விடுவார்” என்று கருவறைத் தீண்டாமையைத் தொடர்ந்து பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பன அர்ச்சகர்கள்.

“அப்படி நடந்தால் நான் கோவிலுக்குப் போவதையே நிறுத்தி விடுவேன்” என்று உச்ச நீதிமன்றத்தில் ஆத்திரமாகப் வாதிடுகிறார் மூத்த வழக்குரைஞர் எனப்படும் பராசரன்.

“சூத்திரன் என்று அழைத்தால் ஆத்திரம் கொண்டு அடி” என்று சுயமரியாதையுடன் முழங்கிய தமிழகமோ, இன்று சொரணையே இல்லாமல் சுருண்டு கிடக்கிறது. இந்த அவலநிலை நோக்கி உங்கள் கவனத்தை ஈர்க்க விழைகிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006–ல் தமிழக அரசு  அரசாணை பிறப்பித்தது. அறநிலையத்துறை நிறுவிய அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி முடித்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பணி நியமனத்தை, அவர்கள் பார்ப்பனரில்லை என்ற ஒரே காரணத்துக்காக தடுத்து வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அர்ச்சக மாணவர்கள் சார்பில் இந்த வழக்கை 2009 முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்தி வருகிறது.

அர்ச்சகர் நியமனத்தில் பரம்பரை நியமனத்தை ஒழிக்கும் சட்டம் செல்லும் என்று 1972-லேயே 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்து விட்டது. இருந்த போதிலும் இன்று வரையில் பார்ப்பன அர்ச்சகர்கள் வாரிசு அடிப்படையில்தான் அறநிலையத்துறையால் நியமனம் செய்யப்படுகிறார்கள். வாரிசுரிமை ஒழிக்கப்பட்டாலும், ஆகமவிதிகளின் படி அர்ச்சகராகும் தகுதி பிறப்பால் பார்ப்பனருக்கு மட்டும்தான் உண்டு என்பதுதான் நீதிமன்றத்தில் அவாள் முன்வைத்து வரும் வாதம். இது பார்ப்பனரல்லாத பிற சாதியினரை தீண்டத்தகாதவர்களாக்கும் தீண்டாமைக் குற்றம் என்பது நமது வாதம்.

இனி, உச்ச நீதிமன்றத்தில் நடப்பதென்ன என்ற விசயத்துக்கு வருவோம்.

ஜெயலலிதாவைப் போல வாய்தா வாங்கியே இந்த வழக்கை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் பார்ப்பன அர்ச்சகர்களின் திட்டம். அதனை முறியடித்து பல முறை இந்த வழக்கை இறுதி விசாரணை நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்கள் வழக்கை இழுத்தடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக டில்லிக்கு அலைந்து அலைந்து போக்குவரத்து செலவும் வழக்குரைஞர் கட்டணமுமாக இதுவரை பல இலட்சங்கள் செலவாகி விட்டன. இறுதியாக 8 ஆண்டுகளுக்குப் பின் வழக்கு இப்போது விசாரணைக்கு வந்திருக்கிறது.

பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகராகக் கூடாது என்பதில் ஜெயலலிதா தெளிவாக இருக்கிறார். சாலைப்பணியாளர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ததைப் போல, வெளிப்படையாக செய்தால், தனது பார்ப்பனப் பாசம் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினால், தந்திரமாகச் செய்கிறார். அறநிலையத்துறைக்கு எதிராக நடக்கும் இந்த வழக்கை நடத்த, இந்து அறநிலையத்துறை சார்பில் யாரும் உச்ச நீதிமன்றத்துக்கு வரவில்லை. தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் பி.பி.ராவ் என்ற மூத்த வழக்குரைஞர் தனது சொந்த ஆர்வத்தில் மட்டுமே வாதிடுகிறார். அவருக்கு தமிழக அரசின் வழக்குரைஞர் ஒத்துழைக்கவில்லை

உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதையைப் பற்றியோ சொல்லத்தேவையில்லை. தலைமை நீதிபதி தத்து, ஜெயலலிதாவுக்கு அதிரடியாகப் பிணை வழங்கியவர். மேல் முறையீட்டை மூன்றே மாதத்தில் முடிக்க உத்தரவிட்டவர். இவையெல்லாம் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்கள், சட்ட விரோத நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டி ஆயிரம் வழக்குரைஞர்கள் கையொப்பமிட்டு குடியரசுத் தலைவரிடம் மனுக்கொடுத்தோம். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் கர்நாடக தலைமை நீதிபதி வகேலாவுக்கு மாற்றல் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் தத்து.

தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும், 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்திருந்த போதிலும் அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு சென்ற ஆண்டு ஆட்சேபம் தெரிவித்தது. இதன் விளைவாக நாடு முழுவதும் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சுமார் 1500 கைதிகள் விடுதலையாக முடியாமல், சிறையில் வாடுகிறார்கள். ஓராண்டு காலமாக இதற்கு ஒரு சிறப்பு அமர்வை நியமிக்க முடியாத தலைமை நீதிபதி தத்து, பவானி சிங் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, பதிவாளர் அலுவலகத்துக்கு நடந்தே சென்று, ஜெயாவுக்காக ஒரே நாளில் சிறப்பு அமர்வை நியமித்து, வண்டு முருகனையே விஞ்சப் பார்க்கிறார்.

அம்மா வழக்கிலும், அர்ச்சகர் வழக்கிலும், சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கிலும் பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதிதான் – உங்களால் என்ன செய்ய முடியும் என்று நமக்குச் சவால் விடுகிறது உச்சுக் குடுமிமன்றம். நம் சட்டைப்பையில் கைவிட்டு திருடினாலும், நீதிபதிக்கு மட்டும் சட்டப்பாதுகாப்பு உண்டு. மக்களை மிரட்டுவதற்கு நீதிமன்ற அவமதிப்பு என்ற அதிகாரம் வேறு. இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டாமா? ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற இந்த மனுதர்ம வருணாசிரமக் கொடுமையை ஒழிக்க நீதிமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் நாம் போராட வேண்டும்.

அர்ச்சக மாணவர்களின் வழக்கை நடத்துவதற்கு நாங்கள் எடுத்து வரும் முயற்சிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ந்த அமைப்புகள் துணை நிற்கின்றன. சென்னையைச் சேர்ந்த திரு கிருபானந்தசாமி அவர்களும் இதில் எங்களுடன் தோளோடு தோள் நின்று போராடி வருகிறார். ஆயிரம் வழக்குரைஞர்களிடம் கையெழுத்து, தத்துவுக்கு எதிராக குடியரசுத்தலைவரிடம் மனு, டில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு, அர்ச்சகர் வழக்கு என்பன போன்ற பணிகளில் கடந்த சில வாரங்களாக எமது வழக்குரைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழுணர்வும், சுயமரியாதை உணர்வும் கொண்ட தனிப்பட்ட சில மனிதர்களும், ஐந்தும் பத்துமாக நன்கொடை அளித்த இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் அளித்த காசிலும், கடனிலும்தான் இந்த வழக்கை இதுவரை தள்ளிக் கொண்டு வந்திருக்கிறோம்.

எனவே,

  • இயன்றவர்கள் அனைவரும் வழக்கு நிதி தாருங்கள்.
  • “இயலாது” என்று இருந்து விடாமல் பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு எதிராகப் பரப்புரை செய்யுங்கள்.
  • இந்தத் துண்டறிக்கை கூறும் செய்தியை மக்களிடையே பரப்புங்கள்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
பெண்கள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தொடர்புக்கு: மில்ட்டன், வழக்குரைஞர் கைபேசி: 90946 66320

சர்வதேச செம்மரக் கடத்தல் தொழில்

2

ந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேசாச்சலம் வனப்பகுதியில் போலிசால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலாளர்களைப் பற்றியும், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் அவர்களது கிராமங்களின் வாழ்நிலை பற்றியும் நேரடி செய்தியறிக்கையாக எழுதியிருந்தோம். இந்தக் கட்டுரையில் சர்வதேச செம்மரக் கடத்தலின் பரிமாணங்கள் குறித்து பார்க்கலாம்.

செம்மரக் கடத்தல் தடங்கள்
‘சுதந்திரச் சந்தை’யும், முதலாளித்துவ முதலீடும் அளிக்கும் உந்துவிசை உள்ளூர் ரவுடிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதல் சர்வதேச கடத்தல்காரர்கள் வரை இயக்குகிறது.

கூலிக்கு மரம் வெட்ட அழைத்துச் செல்லப்படும் மலை கிராம தொழிலாளர்கள், அவர்களை போலி மோதலில் கொலை செய்யும், கைது செய்யும் ஆந்திர போலீஸ் இவர்களைத் தாண்டி நூற்றுக் கணக்கான கரங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன.

செம்மர ஏற்றுமதி 1998-ம் ஆண்டு முதல் இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அருகிவரும் தாவர, விலங்கு பொருட்களின் சர்வதேச வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தின் (CITES – Convention on International Trade in Endangered Species) உறுப்பு நாடுகளும் செம்மர வர்த்தகத்தை தடை செய்திருக்கின்றன. ஆனால், ‘சுதந்திரச் சந்தை’யும், முதலாளித்துவ முதலீடும் அளிக்கும் உந்துவிசை அந்த தடைப் பட்டியல்களை உடைத்து உள்ளூர் ரவுடிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதல் சர்வதேச கடத்தல்காரர்கள் வரை இயக்குகிறது.

சர்வதேச சந்தையில் செம்மரம் 3 தரத்தில் விற்கப்படுகிறது. முதல் தர மரம் இந்தியாவில் டன்னுக்கு ரூ 10 லட்சம் வரையிலும், வெளிநாட்டில் டன்னுக்கு ரூ 1 கோடி வரையிலும் விலை போகிறது.

  • சென்ற ஆண்டு திருப்பத்தூர் அருகில் உள்ள வனத்துறை விற்பனை நிலையத்தில் C தரத்திலான செம்மரம் டன் ரூ 7.64 லட்சத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதற்கு, கடத்தல் சந்தையில் ஒரு டன்னுக்கு ரூ 15 லட்சத்துக்கு குறையாத விலை கிடைக்கிறது என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
  • உயர்தர செம்மரக் கட்டையை டன்னுக்கு ரூ 1.5 கோடி மதிப்பில் ஏலம் விட்டிருக்கிறது ஆந்திர அரசு.
மரப்பாச்சி பொம்மை
நம் ஊரில் முன்பு மரப்பாச்சி பொம்மை செய்வதற்கு செம்மரத்தை பயன்படுத்தியிருக்கின்றனர்.

ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர் மாவட்டங்களின் சேசாச்சலம் வனப்பகுதிகளில் சுமார் 5,500 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 1.4 கோடி செம்மரங்கள் வளர்கின்றன என்று ஆந்திர அரசு மதிப்பிட்டுள்ளது. ஆந்திரக் காடுகளிலிருந்து சீனாவின் அல்லது மேற்கு ஆசியாவின் மேட்டுக்குடியினரின் பயன்பாட்டுக்கான இசைக் கருவிகள், மருந்து பொருட்கள் மற்றும் அறைக்கலன்கள் வரை நீளும் இந்த நீண்ட சங்கிலியின் சில கண்ணிகளைத் தேடி இணையத்திலும், சென்னையின் தெருக்களிலும் நடத்தப்பட்ட தேடல்களிலிருந்து சில விவரங்களை தருகிறோம்.

இந்தியாவில் வெட்டப்படும் செம்மரத்தில் மூன்றில் இரண்டு பங்குதான் ஏற்றுமதியாகிறது.

நம் ஊரில் முன்பு மரப்பாச்சி பொம்மை செய்வதற்கு செம்மரத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். இது போக கலைப்பொருட்கள் செய்யவும் பயன்படுத்தியிருக்கின்றனர். இப்போது, சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக அரசின் பூம்புகார் கலைப்பொருட்கள் காட்சியகத்தில், செம்மரத்தில் செய்த ஒரு மரப்பாச்சியின் விலை ரூ 6,500. அதே அளவிலான விநாயகர் சிலையின் விலை ரூ 9,500. பெரிய விநாயகர் சிலை ரூ 20,000.

பூம்புகார்
சென்னை அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் கைவினைப் பொருள் கடையில் செம்மரக் கட்டையில் செய்த மரப்பாச்சி, பிள்ளையார் பொம்மைகள்.

“இதெல்லாம் 5 வருசத்துக்கு முன்ன வந்தது சார். மைசூர்ல எங்க ஃபேக்டரில செஞ்சு வரும். இப்பல்லாம் வர்றது. இல்ல. இது அதிகமா விக்கிறதும் இல்ல. வெளிநாட்டுக் காரங்களுக்கு டிசைன் டிசைனா இருந்தாத்தான் வாங்குவாங்க. ஒரே மாதிரி டிசைனா இருந்தா வாங்க மாட்டாங்க” என்றார் விற்பனை ஊழியரான பெண்.

பூம்புகாரைத் தவிர்த்த அண்ணா சாலையில் உள்ள மற்ற அனைத்து தனியார் கடைகளிலும், “செம்மரம் என்ற ஒன்றை கண்ணாலேயே பார்த்ததில்லை” என்று சாதித்தனர். கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாத குறையாக கடையிலிருந்து அனுப்பி வைத்தனர். அது எவ்வளவு மோசடியானது என்பதை பின்னர் பார்ப்போம்.

The Old Curiosity Shop
“இன்னும் கொஞ்ச நாள்ல இதுல எதுவும் மிஞ்சாது. இதைப் போல (ஒரு பொம்மையை காட்டுகிறார்) பிளாஸ்டிக்ல செஞ்சு பெயின்ட் அடிச்சுதான் கலைப்பொருட்களே கிடைக்கும்”

the old curiosity shop என்ற கடையில் இருந்த லத்தீப் என்பவர், ஆந்திராவில் மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டித்தார். ஆனால், பண வேட்டைக்கான தொழிலில் இது தவிர்க்க முடியாதது என்றார்.

“வேறென்ன எதிர்பார்க்கிறீங்க. ஒரு மர வகையை வெட்டி பொருள் செஞ்சா, சீக்கிரம் அந்த மர இனமே அழிஞ்சுதான் போகும். உதாரணமா, அகர் பத்தியை எடுத்துக்கோங்க. அந்தமான் காடுகள்ல அகர்-னு ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தோட கட்டையை கொழுத்தினா நல்லா வாசம் வரும். அதை மன்னர்களுக்கு பயன்படுத்தினாங்க. அதையே பெரிய அளவில சந்தைப்படுத்த ஆரம்பிச்சதும், சீக்கிரமே மரத்தை எல்லாம் வெட்டி காலி பண்ணிட்டாங்க. இப்ப மூங்கில் குச்சியில, ஏதோ பசையைத் தடவி அகர்பத்தின்னு விக்கிறாங்க

இந்த கலைப்பொருட்கள பாருங்க, சந்தன மரம், கருங்காலி மரம், ரோஸ்வுட் எல்லாம் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல இதுல எதுவும் மிஞ்சாது. இதைப் போல (ஒரு பொம்மையை காட்டுகிறார்) பிளாஸ்டிக்ல செஞ்சு பெயின்ட் அடிச்சுதான் கலைப்பொருட்களே கிடைக்கும். ஒண்ணும் செய்ய முடியாது”

கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் மலைகளும், தென் மாவட்ட கடற்கரைகளில் தாதுமணலும் கொள்ளை போவதைப் போல, இந்திய மாபியாக்கள் சர்வதேச சந்தையில் கொள்ளை விலைக்கு விற்று பணம் ஈட்டுவதற்காக ஆந்திராவிலிருந்து செம்மரக் கடத்தலும் அதிகமாகியிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் வருவாய்த்துறை கண்காணிப்பு இயக்குனரகத்தின் சென்னைக் கிளை, சென்னை துறைமுகத்திலிருந்தும் சென்னையைச் சுற்றியிருக்கும் பொன்னேரி, ரெட் ஹில்ஸ், வண்ணாரப்பேட்டை, யானை கவுனி போன்ற இடங்களிலிருந்து ரூ 415 கோடி மதிப்பிலான 155 டன் செம்மரக் கட்டைகளை கைப்பற்றியிருக்கிறது. “பிடிபடாமல் கடத்திச் செல்லப்பட்ட கட்டைகளின் அளவு இதை விட பல மடங்கு இருக்கும்” என்கின்றனர் வருவாய்த் துறை அதிகாரிகள். ஆந்திர காடுகளில் வெட்டி கடத்தப்பட்டு வரும் செம்மரக் கட்டைகள், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு மரக் கிடங்குகளில் வைக்கப்பட்டு சென்னை துறைமுகம் வழியாக கடத்தப்படுகின்றன.

“பைக்ல, கார்ல வச்சு கொண்டு வந்திருவாங்க சார். எல்லாத்தையும் ரெட் ஹில்ஸ் பக்கத்திலதான் சேர்த்து வைப்பாங்க. வாங்கி கைமாத்துவதுதான் எங்க வேல. 200 ரூபாய், 300 ரூபாய் கிலோவுக்கு வாங்கி, தரத்தை பொறுத்து 1000 ரூபாய் கிலோ வரைக்கும் வித்துடுவோம். எங்க கடைக்கு எல்லாம் சரக்கு வராது.

சென்னையிலேயே 200-300 பேரு இந்த வியாபாரத்தில இருக்காங்க. எங்க கிட்ட வாங்குறவங்க என்ன கொண்டு போறாங்கன்னு தெரியாது. ஆனா, நாங்க மாசத்துக்கு 1 டன் வரைக்கும் வாங்கி விக்கிறோம்.

கோயில் கலசத்தில இந்தக் கட்டைய வைப்பாங்கன்னு சொல்றாங்க. மாதவிடாய் பிரச்சனைங்க, ஆண்மை குறைவு இதுக்கெல்லாம் பயன்படுமாம். இந்தக் கட்டையில செஞ்ச பொருள் பல வருசத்துக்கு கெடாம இருக்கும்”.

இதைச் சொன்னவர் வடசென்னையில் மரத் தொழில் செய்யும் ஒரு வியாபாரி.

சமீபத்தில், சென்னைக்கு அருகில் கார்களில் கடத்தப்படும் செம்மரக் கட்டைகள் பல முறை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் முதல் வாரத்தில் போளூரைச் சேர்ந்த செல்வம் மற்றும் ஜமுனாமத்தூரைச் சேர்ந்த ராமராஜன் ஆகியோர் காரில் 746 கிலோ எடையுள்ள 23 செம்மரக் கட்டைகளுடன் சோளிங்கர் அருகில் வந்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கடத்தல் கலன்கள்
“கன்டெய்னருக்குள்ள செம்மரக் கட்டை என்ன, குடுவை குடுவையா மனுச உறுப்பை அனுப்பினாங்கன்னா கூட யாருக்கும் தெரியாது”

சென்ற ஒரு மாதத்தில், காட்பாடி உருகில் 2 வண்டிகளிலும், ரத்னகிரி அருகில் உள்ள ஆரப்பாக்கத்தில் 1 வண்டியும் செம்மரங்களுடன் விபத்தில் சிக்கி கைவிடப்பட்டு காணப்பட்டன. ஒவ்வொரு காரிலிருந்தும் 17 முதல் 18 செம்மரக் கட்டைகளை போலீஸ் கைப்பற்றியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 1,000 டன் செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்படுகின்றன. “இப்போது பல்வேறு மாநில அரசுகளின் கைவசம் சுமார் 11,800 டன் செம்மரக் கட்டைகள் உள்ளன” என்கிறார் திருப்பதி மண்டல வனத்துறை அலுவலர் ஜி. ஸ்ரீனிவாசலு. ஆந்திர அரசின் கைவசம் 2002 முதல் கைப்பற்றப்பட்ட சுமார் 8,500 டன் (மதிப்பு சுமார் ரூ 3,000 கோடி) செம்மரக் கட்டைகள் உள்ளன. இது போக மகாராஷ்டிரா, குஜராத் அரசுகளும் கணிசமான அளவு கட்டைகளை கைவசம் வைத்திருக்கின்றன.

தற்போது ஆந்திர போலிசின் என்கவுண்டர் கொடூரத்தால் மாநில அரசுகள் வைத்திருக்கும் செம்மரக் கட்டைகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துவிடும். அவற்றை விற்றால் மாநில அரசுகளும் கூட பெரும் பணத்தை திரட்ட முடியும்.

செம்மரக் கடத்தல்
2013-14ல் பிடிக்கப்பட்ட செம்மரக் கட்டைகள் பற்றிய புள்ளிவிவரம்.

சென்னை துறைமுகத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரை தொடர்பு கொண்டோம். “சார், துறைமுகத்துக்கு என்ன வருது, என்ன வெளிய போகுதுன்னு தொழிலாளிக்கு தெரிய சான்சே இல்ல சார். 1990-ல 25,000 தொழிலாளிங்க இருந்தாங்க, இப்போ 6,000 பேர்தான் இருக்காங்க. பலருக்கு விருப்ப ஓய்வு, புதிதாக ஆள் எடுப்பது இல்லைன்னு எல்லாத்தையும் தனியார் கையில ஒப்படைச்சிட்டாங்க.

எல்லாமே கன்டெய்னர்ல அடைச்சி, சீல் வச்சி வரும். கன்டெய்னரை கிரேன் கொக்கியில் மாட்டி விடுவது மட்டும்தான் வேலை. அதைக் கூட துறைமுகத் தொழிலாளி செய்றதில்ல. தனியார் கம்பெனி ஆள் வெச்சி செஞ்சிக்கிறாங்க. கன்டெய்னருக்குள்ள செம்மரக் கட்டை என்ன, குடுவை குடுவையா மனுச உறுப்பை அனுப்பினாங்கன்னா கூட யாருக்கும் தெரியாது.” என்றார் அவர். 2001 முதல் சென்னை துறைமுகத்தின் கன்டெய்னர் (சரக்கு கலன்) முனையத்தை டி.பி வேர்ல்ட் என்ற பன்னாட்டு தனியார் நிறுவனம்தான் இயக்கி வருகிறது.

கொல்லப்பட்ட தொழிலாளிகள்
கடந்த 2014-ல் ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளிகள்.

சரக்கு கலன் முனையத்தில் சுங்க அதிகாரிகள் அல்லது, ஏற்றுமதியாளரின் கிடங்கிலேயே கலால்துறை அதிகாரிகள் சீல் (முத்திரை) வைத்து விடுகிறார்கள். அவர்களது ஒத்துழைப்புடனோ அல்லது துறைமுகத்துக்கு கொண்டு வரும் வழியில் முத்திரையை உடைக்காமலேயே சரக்கு கலத்தின் ஹிஞ்சுகளை கழற்றி பொருளை மாற்றி விடுகின்றனர்.

சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் தவிர சித்தூரிலிருந்து தொலைவில் இருக்கும் மேற்கு கடற்கரையின் மும்பை துறைமுகம் வழியாகவும், கிழக்கு கடற்கரையின் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாகவும் கூட செம்மரக் கட்டைகள் கடத்தப்படுகின்றன.

சென்ற ஆண்டில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பிடிபட்ட 3 ஏற்றுமதி பொதிகளைப் பற்றி பார்க்கலாம். இவற்றைத் தவிர பிடிபடாமல் 100 கணக்கான பொதிகள் போயிருக்கும் என்கிறது இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ்.

ஆந்திரா செம்மரக் காடுகள்பிடிபட்ட 3 பொதிகளில் இரண்டு ஒரிசாவின் ரூர்கேலா, கட்டாக் நகரங்களிலிருந்து வந்ததாக காட்டப்பட்டிருக்கின்றன. இன்னொன்று சென்னையிலிருந்து வந்திருக்கிறது.

மே 2013-ல் வருவாய்த்துறை அதிகாரிகள், மலேசியாவுக்கு போகும் கப்பலில் ஏற்றப்படவிருந்த 16 டன் செம்மரக் கட்டைகளை (மதிப்பு ரூ 5 கோடிக்கும் மேல்) கைப்பற்றினர். 28 டன் கொள்ளளவு கொண்ட அந்த கலத்தில் 16 டன் சுடுகலன் சிமென்டை (refractory cement) மலேசியாவுக்கு அனுப்புவதாக ரூர்கேலாவைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஆவணங்களை கொடுத்திருந்தது. அந்த சரக்கு கலம், ஏற்றுமதி நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் கலால் துறை அதிகாரிகளால் முத்திரை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திறந்து பார்த்த போது கலத்தில் 16 டன் எடையுள்ள 400 செம்மரக் கட்டைகள் இருந்திருக்கின்றன. மலேசியா அல்லது துபாய்க்கு அனுப்பப்படும் இந்த செம்மரக் கட்டைகள் அங்கிருந்து சீனாவை சென்றடைகின்றன.

இன்னொரு முறை, கிரானைட் கற்களை ஹாங்காங்குக்கு அனுப்புவதாக ஆவணப்படுத்தப்பட்டிருந்த கப்பல் கலத்திலிருந்து செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்பட்டன.

செம்மரக் கடத்தல்
செம்மரக் கட்டைகள் அடங்கிய ஒரு லாரி அசாம் போலீசால் கைப்பற்றப்பபட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது (படம் விளக்கத்துக்காக மட்டும்).

செம்மரம் மானாவாரியாக வளரும் ஆந்திர காடுகளுக்கும், செம்மரக் கட்டைகள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் விற்கப்படும் சீன சந்தைக்கும் இடையே பாதை கடலில் மட்டுமின்றி நிலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. அசாமின் கர்பி அங்லோங் மாவட்டம் வழியாக நடந்த கடத்தலைப் பற்றிய ஒரு கதையை கேட்போம்.

ஆந்திர பிரதேசத்தின் வனத்துறை அதிகாரிகள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களோடு, நன்றாக பொதியப்பட்டு லாரி நிறைய செம்மரக் கட்டை சுமைகள் அசாமை சென்றடைகின்றன. அவற்றுக்கான போலி ஆவணங்களையும் கைவசம் வைத்திருக்கின்றனர். வடகிழக்கு இந்தியாவின் கடைசி எல்லைப் புற நகரமான மோரே வழியாக மியன்மாருக்குள் அனுப்பப்பட்டு அந்நாட்டின் கச்சின் பள்ளத்தாக்கு வழியாக சீனாவுக்குள் கடத்தப்படுகின்றன, செம்மரக் கட்டைகள்.

2009-ம் ஆண்டு செம்மரக் கட்டைகள் அடங்கிய ஒரு லாரி அசாம் போலீசால் கைப்பற்றப்பபட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. 16 டன் செம்மரக் கட்டைகளும், அவற்றை ஏற்றிச் சென்ற லாரியும், வனத்துறை மண்டல அதிகாரியால் ‘யாரும் சொந்தம் கொண்டாடாத சொத்து’ என்று அறிவிக்கப்படுகிறது. அதாவது, யார் மீதும் கிரிமினல் வழக்கு போடப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட செம்மரக் கட்டைகள்
2011-ல் கொச்சியில் பிடிபட்ட செம்மரம் நிரம்பிய கன்டெய்னர் (ஏற்றுமதிக்கான ஆவணங்களில் ரப்பர் மிதியடிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது).

மண்டல வனத்துறை அதிகாரி இந்த 16 டன் செம்மரக் கட்டைகளை விற்று விடுவது என்று முடிவு செய்கிறார். அரசின் அதிகார பூர்வ விலையின் படி அதற்கு ரூ 4.5 லட்சம் என்று விலை நிர்ணயித்து, இது தொடர்பான போலி டெண்டர் ஆவணங்களையும் தயாரிக்கிறது அந்த அதிகார வர்க்க கும்பல். இந்த செம்மரக் கட்டைகள் மியன்மாருக்கு பாதுகாப்பாக அனுப்ப வசதியாக, 4 லாரி சுமை தேக்கு மரக் கட்டைகளையும் சேர்த்து விற்க முடிவு செய்கின்றனர்.

4 லாரி தேக்குமரம், 1 லாரி செம்மரம் இவற்றை ரூ 7.5 லட்சத்துக்கு சங்கீதா தெரன்பீ என்ற மாணவிக்கு விற்பதற்கு, கர்பி ஆங்லோங் சுயாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுகிறது வனத்துறை. சங்கீதா, வனத்துறையில் பணிபுரியும் ரேகா பரூவா என்ற அதிகாரியின் மூத்த மகள். மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள தனது வங்கிக் கணக்கிலிருந்து சங்கீதா ரூ 7.5 லட்சம் தொகையை செலுத்தியிருக்கிறார். மார்ச் 2009-ல் இந்த 16 டன் செம்மரக் கட்டைகளை மோரே வரை அனுப்புவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

செம்மரக் கடத்தல்
மும்பை துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட செம்மரக் கட்டைகள்.

2009-ல் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு அசாமில் இதே அளவிலான பல செம்மர பொதிகள் அசாம் போலீசாலும், வனத்துறையாலும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. எல்லைப் புற நகரான மோரேவிலும் சில கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

ஆந்திர காடுகளில் வெட்டப்படும் இந்த மரங்கள், எந்தத் தடையும் இல்லாமல் ஆந்திரா, ஒரிசா, மேற்குவங்கம், அசாம் வழியா மியன்மாருக்கு கடத்தப்பட்டு தென் சீனாவை அடைய முடிகிறது என்றால் இந்த சங்கிலித் தொடரில் இடம் பெறும் அதிகாரிகள், பண முதலைகள், உள்ளூர் ரவுடிகளின் தொடர்பு பலத்தை புரிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6 டன் செம்மரக் கட்டைகளை கடத்த முயற்சித்ததாக தான் ஷூய் (51), தோய் யுயான் (45), சர் ஷாய் (25), மற்றும் வெய் சீலியாங் (27) ஆகிய 4 சீனர்கள் கர்நாடகாவின் ஹோஸ்கோட் தொழில்துறை பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

செம்மரக் கடத்தல்
கொச்சியில் விமான பயணிகளின் பெட்டிகளிலிருந்து கைப்பற்றப்பட்ட செம்மரக் கட்டைகள்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம், விஜயவாடாவின் நியூ ஆட்டோ நகரில் உள்ள ஒரு கிடங்களிலிருந்து ரூ 100 கோடி மதிப்பிலான 30 டன் செம்மரக் கட்டைகளை பிடித்திருக்கின்றனர். சேசாச்சலம் காடுகளிலிருந்து நெல்லூர் வழியாக இவை விஜயவாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

கடல் வழியாக, தரை வழியாக மட்டுமின்றி வான் வழியாகவும் செம்மரக் கட்டைகள் பறக்கின்றன.

“2013-ம் ஆண்டில் 55 சீனர்கள் தமது கைப் பெட்டியில் செம்மரக் கட்டைகளை கடத்தி செல்வதை பிடித்திருக்கிறோம்” என்கிறார் டெல்லி விமான நிலையத்தின் மூத்த அதிகாரி. 2013-ல் டெல்லி விமான நிலையத்தில் பிடிக்கப்பட்ட மொத்தம் 71 கடத்தல் முயற்சிகளில் 18 டன் மரம் பிடிபட்டிருக்கிறது.

செம்மரக் கடத்தலை ஏழைத் தொழிலாளிகள் படுகொலையாக மட்டும் பார்க்க முடியாது. வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளையிலிருந்து, பி.ஆர் பழனிச்சாமியின் கிரானைட் கொள்ளை, ரெட்டி சகோதரர்களின் இரும்புத் தாது கொள்ளை, வேதாந்தா அலுமினிய தாதுவை கைப்பற்றும் முயற்சி என்று நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஆண்டு தோறும், பல லட்சம் கோடி மதிப்பிலான செல்வங்கள் கொள்ளை போகின்றன.

தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே இந்த இயற்கை வளக் கொள்ளைகள் நடந்து வருகின்றன. இவற்றைத் தடுக்க முடியாததோடு தாமும் கூட்டாக கொள்ளையில் ஈடுபடுபவையாக அரசும், அரசியல்வாதிகளும் சீரழிந்து போயிருக்கின்றனர்.

செம்மரம் என்பது ஏதோ சில மலைவாழ் மக்களால் வெட்டி எடுக்கப்பட்டு விற்கப்படும் குடிசைத் தொழில் அல்ல. சர்வதேச வலைப்பின்னலோடும், அரசு, முதலாளிகளின் கூட்டோடும் நடத்தப்படும் ஒரு திருட்டு வணிகம்.

உலக அளவில் மேட்டுக்குடி சந்தையைக் கைப்பற்றும் வண்ணம் இத்தகைய ‘அரிய’ வகை பொருட்கள் பற்றிய கதைகள் வருடத்திற்கொரு முறை ஓதப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் செம்மரம் இப்படி ஒரு உயர்நிலை நுகர்வை அடைந்துள்ளது.

தென் கிழக்காசிய நாடுகளிலும், சீனாவிலும் இவற்றிற்கு சந்தை இருந்தாலும், இதன் நிர்வாக வேலைப் பிரிவினைகள் சித்தூரிலிருந்தே ஆரம்பிக்கிறது. மரம் வெட்டும் அனுபவமுள்ள தொழிலாளிகள், அவர்களை அழைத்து வரும் தரகர்கள், போக்குவரத்து, கிட்டங்கி, ஏற்றுமதி, அதிகார வர்க்கம், போலீசு, இவற்றின் பல நிலைகளில் உதவி செய்யும் அரசியல்வாதிகள், உள்ளூர் பிரமுகர்கள் என்று இதன் வலைப்பின்னல் பெரியது. அரியவகை மரம் என்பதை வைத்து உருவாக்கப்படும் செம்மரங்களின் மதிப்பும் வர்த்தகமும் மிகப்பெரிய பணத்தை புரட்டுகிறது.

ஆகவே இந்த தொழிலால் ஆதாயம் அடையும் சக்திகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளிகள் மட்டும் குறிவைத்து கொல்லப்படுவது என்பது நிச்சயம் திருடர்களுக்கிடையே நடக்கும் பங்குச் சண்டைதான். செம்மர கடத்தலால் ஆதாயம் அடைந்தவர்கள் பகிரங்கமாக உலா வர, வெட்டியவர்கள் மட்டும் சிறைகளில் வாழ்கின்றனர். சிலர் கொல்லவும் படுகின்றனர்.

ஆளும் வர்க்கம் முழுவதுமே இந்தக் கூட்டணியில் உள்ளது. இந்தக் கூட்டணியை முறியடிக்காமல் செம்மரங்களை பாதுகாக்க முடியாது.

– வினவு செய்தியாளர்கள்.

இது தொடர்பான செய்திகள்

கார்ப்பரேட் ‘சமூக’ப் பாதுகாப்புத் திட்டங்கள்

0

ட்ஜெட் உரையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என்று பெயர் சூட்டப்பட்ட திட்டங்களை விவரிப்பதற்கு நிதியமைச்சர் கணிசமான நேரம் எடுத்துக் கொண்டார். இதனுடன் ஒப்பிடும்போது, கார்ப்பரேட் வரியை 30% இலிருந்து 25% ஆக குறைப்பது பற்றிய அறிவிப்புக்கு அவர் ஒதுக்கியது சில நொடிகள் மட்டுமே. அதேபோல சுங்கவரிக் குறைப்பு குறித்த அறிவிப்புக்கும் சில நொடிகள் மட்டுமே. ஆனால், இவற்றால் அரசுக்கு ஏற்படப்போகும் இழப்போ, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என்று கூறப்படும் திட்டங்களுக்கு அவர் செலவிடவிருக்கும் தொகையைப் போலப் பன்மடங்கு அதிகம்.

10-caption-2இந்த பட்ஜெட் உரை முழுவதுமே கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வலுப்படுத்துவதைப் பற்றித்தான் பேசுகிறது. இதன் ஊடாக சமூகப் பாதுகாப்பு பற்றிய தனது முன்மொழிதல்களை நிதியமைச்சர் நெய்திருக்கிறார். அவர் அறிவித்திருக்கும் திட்டங்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவதாக, அனைத்து மக்களுக்குமான ஆயுள் காப்பீடு. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமயோஜனா என்ற இந்த திட்டம், விபத்தினால் மரணம் அடைபவர்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம். ஆண்டுக்கு 12 ரூபாய் பிரிமியம் செலுத்தவேண்டும். காப்பீட்டுத் தொகை 2 இலட்சம். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் மக்களது எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கும் என்பதுதான் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இதில் உள்ள கவர்ச்சி. அப்படி நிச்சயமாக ஒரு ஆதாயம் இருப்பதனால்தான் இந்த காப்பீட்டுத் திட்டத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறார் நிதியமைச்சர்.

அடுத்த திட்டம், இயற்கை மரணம் அல்லது விபத்தினால் மரணம் ஆகியவற்றுக்கான காப்பீடு. இது 18 வயது முதல் 50 வயது வரை உள்ளோர்க்கு மட்டும்தான். இதன் முதிர்வுத்தொகை 2 லட்சம் ரூபாய். ஆண்டுக்கு கட்ட வேண்டிய பிரிமியம் 330 ரூபாய்.

இரண்டு காப்பீட்டுத் திட்டங்களிலுமே பிரிமியம் தொகையை மக்கள்தான் (சந்தாதாரர்கள்தான்) கட்டவேண்டும். இப்படி சமூகம் (அதாவது அரசு) ஐந்து காசு கூட வழங்காத இந்தத் திட்டங்களுக்குப் பெயர் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களாம்! இப்படியான காப்பீட்டுத் திட்டத்தை எந்த காப்பீட்டு நிறுவனமும் அறிவிக்க முடியும்.

இரண்டாவது சமூக நலத் திட்டத்தின் பெயர் அடல் பென்சன் யோஜனா என்ற புதிய ஓய்வூதியத் திட்டம். ஆண்டுக்கு எவ்வளவு பிரிமியம் செலுத்துவீர்கள், எத்தனை ஆண்டுகளுக்கு செலுத்து வீர்கள் என்பதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஒரு தொகையை ஓய்வூதியமாக வழங்கும் திட்டம் இது.

10-corporate-welfareஅரசைப் பொருத்தவரை, நீங்கள் கட்ட விரும்பும் ஒரு ஆண்டுக்கான பிரிமியம் தொகையில் பாதியை அல்லது அதிகபட்சம் ஆயிரம் ரூபாயைத் தனது பங்களிப்பாக முதல் 5 ஆண்டுகளுக்கு மட்டும் செலுத்தும். அதற்குப் பின் அவரவர் பாடு. டிசம்பர் 31, 2015-க்குள் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் அரசாங்கம் இந்தத் தொகையைச் செலுத்தும் என்பது இன்னொரு கூடுதல் நிபந்தனை.

இந்த திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் நிறுவனம் எது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது அரசாங்கத் திட்டமாகவும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் திட்டமாகவும் இருப்பதால், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் இதில் முதலீடு செய்து முன்னேற்றம் காண்பார்கள். அவ்வளவே.

ஓய்வூதியம் என்பதே இல்லாத, முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைகள்தான் இந்தத் திட்டத்தின் இலக்கு. 2012-ம் ஆண்டு கணக்கின்படி இத்தகைய தொழிலாளர்களின் எண்ணிக்கை 33 கோடி. ஆனால், மத்திய அரசின் தேசிய சமூக உதவித்திட்டத்தின் கீழ் (National Social Assistance Programme) சமூக ஓய்வூதியம் பெறுகின்ற பரம ஏழைகள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். 2006 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்ட அடிப்படையில் இவர்களில் சிலருக்கு மாதம் 200 ரூபாய் தரப்படுகிறது. இந்த பரம ஏழைகள் 80 வயதைத் தாண்டி வாழ முடிந்தால், அவர்கள் மாதம் 500 ரூபாய் பெறமுடியும்.

10-ache-dinவறுமைக்கோடு என்பதற்கு அரசு நிர்ணயித்திருக்கும் அளவுகோலின்படியே இந்த பரம ஏழை மக்களுக்கு மாதம் ரூ.1000 தரப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் பணிப்பிரிவைச் சேர்ந்த (Task Force) சிறுபான்மை உறுப்பினர்கள் கோரினார்கள். இதனை நிராகரித்த அமைச்சகம், வேண்டுமானால் பணவீக்கத்துக்காக நூறு ரூபாய் சேர்த்துப் போட்டு, 300 ஆக உயர்த்திக் கொடுக்கலாம் என சிபாரிசு செய்தது. பணமில்லை என்று கூறி இந்த 300 ரூபாயைக் கூடத் தர முடியாது என்று கைவிரித்து விட்டது அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
மேற்கூறிய தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழான தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், குடும்ப உதவித் திட்டம், பேறுகால உதவித் திட்டம் ஆகியவையெல்லாம், மக்களுடைய உரிமை என்று முறைசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் (2008) கூறுகிறது. மேற்கூறிய திட்டங்களுக்கான உதவித்தொகையைப் பணவீக்கத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொடுக்க வேண்டும். ஆனால், நிதியமைச்சரோ, இந்த சமூகப் பாதுகாப்புச் சட்டம் பற்றியே பட்ஜெட்டில் மூச்சு விடவில்லை.

அடுத்து வருவது, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (Employee Provident Fund) மற்றும் ஊழியர்களுக்கான அரசு காப்பீட்டுக் கழகம் (Employee State Insurance Corporation) ஆகியவற்றை மெல்ல ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சி. இ.எஸ்.ஐ. மற்றும் இ.பி.எஃப். ஆகியவற்றுக்கு புதிய மாற்றுகளை வழங்குவது என்ற பெயரில், சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்ட மேற்சோன்ன திட்டங்களால் பயன் பெறும் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியே இழுத்து, முதலீட்டுச் சந்தை மற்றும் தனியார் காப்பீட்டுச் சந்தையில் தள்ளி, அவற்றின் விரிவாக்கத்துக்கு வழிசெய்கிறது நிதியமைச்சரின் சமூக நலத் திட்ட அறிவிப்பு.

இ.எஸ்.ஐ. வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதற்குப் பதிலாக மருத்துவக் காப்பீட்டுக்கு (Health Insurance) மாறிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பின் நோக்கம், மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனிகளுடைய சந்தையை விரிவுபடுத்துவதும், மருத்துவத்தை முற்று முழுதாக விற்பனைப் பண்டமாக்குவதும்தான்.

10-captionஊழியர் ஓய்வூதியத் திட்டத்திலேயே தொடர்வதா, அல்லது புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிக்கொள்வதா என்று முடிவு செய்யும் வாய்ப்பை தொழிலாளர்களுக்கு வழங்குவது என்ற பெயரில், அவர்களை புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு இழுத்து, அதன் மூலம் அந்தப் பணத்தை மூலதனச் சந்தைக்கு கொண்டு செல்வது என்பதுதான் இதன் நோக்கம். எனவேதான், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவோருக்கு வரிச்சலுகையும் வழங்குகிறார் நிதியமைச்சர்.

அதுமட்டுமல்ல, சமூகப் பாதுகாப்பு பற்றிப் பேசும் நிதியமைச்சர், வருங்கால வைப்பு நிதிக்காக பணப்பிடித்தம் செய்ய வேண்டுமா, வேண்டாமா என ஊழியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று ஒரு அபாயகரமான யோசனையையும் முன்வைத்திருக்கிறார். இது தொழிலாளர்களுக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சமூகப் பாதுகாப்பையும் ஒழித்துக்கட்டவே பயன்படும். அரசாங்க உத்திரவாதமுள்ள ஓய்வூதியம் என்பதற்குப் பதிலாக, பங்குச் சந்தையில் அதனை முதலீடு செய்தால், கூடுதல் ஆதாயம் கிடைக்கும் என்று ஆசை காட்டி, தொழிலாளிகளையும் நடுத்தர வர்க்கத்தினரையும் படுகுழியில் இழுத்து விடுவதுதான் இதன் நோக்கம்.

40 தொழிலாளர்களுக்குக் குறைவானவர்கள் பணி புரியும் இடங்களைத் தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் சோதனை செய்யக்கூடாது என்பன போன்ற புதிய விதிகள் மூலம் தொழிலாளர் சட்டங்கள் தளர்த்தப்பட்டு வருகின்ற இன்றைய சூழலுடன் நிதியமைச்சரின் மேற்கூறிய அறிவிப்புகளை இணைத்துப் பார்க்க வேண்டும். “மேக் இன் இந்தியா” திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், தொழில் துறையில் எவ்வித அரசாங்கத் தலையீடும் கூடாது, வேலையில்லாதவர்களுக்கு அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு வழங்கக் கூடாது என்று அரசு எண்ணுவது தெளிவாகத் தெரிகிறது.

மூன்றாவதாக, நிதியமைச்சர் அறிவித்திருப்பவை, வருமானவரி செலுத்தும் இந்தியர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள். இதிலும் பட்டியல் நீண்டதாக இருக்கிறதே தவிர, சரக்கு ஏதும் இல்லை. 80 வயதுக்கு மேற்பட்ட வெகு மூத்த குடிமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகையை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய வருமான வரி விலக்கு பெறத்தக்க மருத்துவச் செலவின் அளவு ரூ 60,000 த்திலிருந்து 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயனடையப் போகிறவர்கள் எத்தனை பேர்? இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் 3.6 கோடிப் பேர். இவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டோர் வெறும் 4.9 இலட்சம் பேர்தான். இவர்களிலும் மேற்கூறிய சலுகைகளைப் பெறும் அளவுக்கு வருமானம் அதிகமுள்ளவர்கள் வெகு குறைவு. ஆகவே, இது பணக்காரச் சிறுபான்மைக்கு வழங்கப்பட்டிருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்பதே உண்மை.

இது மட்டுமல்ல, வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எஃப்., ஜி.பி.எஃப்.,) யாராலும் பாத்தியதை கோரப்படாமல் கிடக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சொந்தமான 9000 கோடி ரூபாயை எடுத்து, மூத்த குடிமக்கள் நல நிதி ஒன்றை ஏற்படுத்தப் போவதாகவும் நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இது பற்றிய உள் விவரங்களை அவர் வெளியிடாத காரணத்தினால், இது எந்த சமூகத்துக்கு பாதுகாப்பு அளிக்கப் போகிறது என்பதை இப்போது சொல்ல முடியவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2008-ல் இயற்றப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டதாகையால், அதனைக் கோருவதற்கு சட்ட ரீதியான உரிமை மக்களுக்கு இருந்தது. தற்போது நிதியமைச்சர் அறிவித்திருக்கும் திட்டங்களுக்கு அத்தகைய சட்டரீதியான உத்திரவாதம் ஏதும் கிடையாது என்பதால், அரசு நினைத்தால் மறு கணமே இத்திட்டங்களைக் கைவிட்டு விட முடியும்.

சாந்தகுமார் கமிட்டியின் பரிந்துரைகளின்படி (இந்திய உணவுக் கழகத்தை மூடுவது, அரசுக் கொள்முதலைக் குறைத்து தனியார் கொள்முதலை ஊக்குவிப்பது, நியாயவிலைக் கடைகளை மூடுவது) உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன் பெறக்கூடிய ஏழைக் குடும்பத்தினரின் எண்ணிக்கையை 67% இலிருந்து கணிசமாகக் குறைப்பதே இந்த அரசின் திட்டம். ஆனால், பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அது பற்றி வாய் திறக்கவில்லை. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தங்களது கருத்தை உரக்கச் சொல்லியிருப்பதே நிதியமைச்சரின் தற்போதைய மவுனத்துக்குக் காரணமாக இருக்கக் கூடும். ஆனால், உணவுப் பாதுகாப்புக்காக ஒரு போராட்டம் நடத்துவதைத் தவிர்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

அடிப்படையான சமூகப் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகளைப் பொருத்தமட்டில், ஏற்கெனவே வழங்கப்பட்டிருப்பவற்றை எல்லாம் ரத்து செய்யும் திசையில் செல்வது என்பதுதான் மத்திய அரசு கூறும் செய்தி. சமூகப் பாதுகாப்பு என்ற பெயரில் ஒப்புக்கு ஏதேனும் கொடுத்தாலும், அது நிச்சயம் சந்தை அடிப்படையிலான தீர்வுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

அத்தகைய சமூக நலத் திட்டங்கள் எனப்படுபவை அனைத்தும், கார்ப்பரேட் நிறுவனங்களால் தலைமை தாங்கப்பட்டு, அரசால் பாதுகாப்பு வழங்கப்படும் ஆட்கொல்லி முதலாளித்துவத்துக்கு மேலும் ஊக்கம் கொடுப்பவையாகவே அமையும்.

(எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி மார்ச்-21 இதழில் பேரா. கே.பி.கண்ணன் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.)
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

மக்களை காவு வாங்கும் கடலூர் SIMA சாயப்பட்டறை

1
  • திருப்பூரில் விரட்டப்பட்ட “சைமா”வால் கடலூர் நகருக்கே கேடு!
  • அனுமதிக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல, “சைமா”வே திரும்பி ஓடு!

டலூர் அருகே 1985-ல் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.​ முதல் கட்டமாக 518 ஏக்கர் நிலமும்,​​ 2-ம் கட்டமாக 500 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு,​​ தொழிற்சாலைகளுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டன.​

நிலவளமும்,​​ நீர்வளமும் கொண்ட இப்பகுதியில்,​​ பிரதானமாக ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு என மத்திய அரசு அறிவித்ததால்,​​ பல்வேறு அழிவுகளையும் நாசங்களயும் உருவாக்கும் ரசாயனத் தொழிற்சாலைகள்தான் தொடங்கப்பட்டுள்ளன. வழக்கமாக எல்லா இடங்களிலும் நடப்பதைப் போல, ‘வேலைவாய்ப்பு கிடைக்கும், தொழில் வளர்ச்சி பெருகும்’ என்று ஆசை காட்டப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

நில கையகப்படுத்தும் சட்டம்
“பணிந்தவர்களுக்கு பணக்கட்டு! பணியாதவர்களுக்கு உருட்டுக்கட்டை!”

“பணிந்தவர்களுக்கு பணக்கட்டு! பணியாதவர்களுக்கு உருட்டுக்கட்டை!” என்ற பார்முலாவுடன் தற்போது கார்ப்பரேட்களுக்கு தாரைவார்க்க கொண்டுவரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு முன்னோடியாக இப்பகுதி நிலங்கள் விவசாயிகள், மற்றும் மீனவர்களிடமிருந்து பறிக்கப்படடன.

சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ 200 கோடி மூலதனத்துக்கு மேல் முதலீடு செய்து இருக்கும் பயோனீர், சாசன், டாக்ரோஸ், லாயிட்ஸ், டேன்பேப் போன்ற 5 பெரிய ரசாயன ஆலைகளும், கெம்பிளாஸ்ட், சன்மார் போன்ற யூனியன் கார்பைடுக்கு நிகரான ஆபத்தை விளைவிக்கும் பி.வி.சி தயாரிக்கும் ஆலையும், நாகார்ஜுனா போன்ற எண்ணெய் துரப்பண தொழிற்சாலைகள் உள்பட​ 34 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.​ 6 தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.​ ​ரூ 200 கோடி மூலதனத்தில்,​​ 60 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட ஜே.கே.​ ஃபார்மா,​ 60 ஏக்கர் பரப்பளவில் ரூ 120 கோடி மூலதனத்தில் தொடங்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஸ்டார்ச் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட 18 தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.

சிமா, கடலூர்
நிலத்தடி நீர் தற்போது 800 அடிக்கு மேல் போய்விட்டது. அவ்வாறு உள்ள நீரிலும் 80% குரோமியம், காட்மியம், தோரியம், சல்பேட், ஈயம் போன்ற கொடிய நச்சு வேதிப்பொருள் கலந்துவிட்டன.

இப்படிப்பட்ட ஆலைகள் துவங்கப்பட்டதால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ செழிப்பாக நடந்துகொண்டிருந்த விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக 1980-களுக்கு முன்பு 30 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 800 அடிக்கு மேல் போய்விட்டது. அவ்வாறு உள்ள நீரிலும், “80% குரோமியம், காட்மியம், தோரியம், சல்பேட், ஈயம் போன்ற கொடிய நச்சு வேதிப்பொருள் கலந்துவிட்டன” என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தங்களது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

விவசாயம் அழிவு
மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ செழிப்பாக நடந்துகொண்டிருந்த விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது.

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிறக்கும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு, குடற்புண், நுரையீரல் பாதிப்பு, கருச்சிதைவு, தோல் நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மனவளர்ச்சி குறைவு, குறைப்பிரசவம் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. புற்றுநோய் உருவாகும் சூழல் பிற இடங்களைக் காட்டிலும் 2,000 மடங்கு அதிகம் இருப்பதாக, தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து உள்ளது.

மேற்கண்ட ஆலைகளில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டும், பாய்லர் வெடித்தும், கழிவு நீர் குழாய்கள் வெடித்தும், அவ்வப்போது தொழிலாளர்கள் இறப்பதும் சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. இந்த ஆலைக் கழிவுகளால் காற்று, நீர், நிலம் என அனைத்தும் நஞ்சாகிவிட்ட நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் வந்துள்ளது திருப்பூரில் மக்களால் போராடி விரட்டியடிக்கப்பட்ட சைமா (SIMA – SOUTH INDIAN MILLS ASSOCIATION) எனும் பின்னலாடை மற்றும் சாயப்பட்டறை நிறுவனங்களின் சங்கம்.

சைமா, கடலூர்
காற்று, நீர், நிலம் என அனைத்தும் நஞ்சாகிவிட்ட நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் வந்துள்ளது திருப்பூரில் மக்களால் போராடி விரட்டியடிக்கப்பட்ட சைமா.

இதற்கு முன்பு இந்த வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் எங்கும் முந்திரி, நிலக்கடலை, நெல், கேழ்வரகு, எள், தர்பூசணி, தோட்டப்பயறு வகைகள் என்று முப்போகம் மட்டுமல்ல எந்நேரமும் மகசூல் தரும் பூமியாகும். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று சமுக்காளம் போல் விரிந்து கிடக்கும் இயற்கைச் சூழல் காண்போரின் மனதை கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தது. சிப்காட் தொழிற்பேட்டை நிலங்கள் அரசால் கையகப்படுத்தும் முன் முந்திரி,​​ மணிலா,​​ சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால் இன்றோ சைமா என்ற பின்னலாடை சாயப்பட்டறை நிறுவனத்தாரின் அடிக்கட்டுமான வேலைகளால் பாலைவனமாக்கப்பட்டுள்ளது.

சைமா, கடலூர்
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று சமுக்காளம் போல் விரிந்து கிடக்கும் இயற்கை சூழல் இன்று பாலைவனமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையை நிறுவ தேர்ந்தெடுத்துள்ள முப்போகம் விளைந்த 317 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள பெரியப்பட்டு, மடவாப்பள்ளம், வாண்டியான்பள்ளம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், சாமியார்பேட்டை சின்னாண்டிகுழி, பெரியாண்டிகுழி, கரிக்குப்பம், குமரபேட்டை, கோபாலபுரம், அன்னப்பன்பேட்டை, தச்சம்பாளையம் உள்ளிட்ட 16 கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 2013 ஆண்டு முதல் சைமாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், முற்றுகை, மனுகொடுக்கும் போராட்டம், 10,000 அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் என்று இடைவிடாமல் போராடி வருகிறார்கள்.

சைமா, கடலூர்
கழிவுநீர் வாய்க்கால் – ஆலையின் சாயக்கழிவுகளும் பூமியின் உள்ளே இறக்கப்படும், கடலிலும் கலக்கப்படும்

சைமா (ஜவுளி பூங்கா) சாயப்பட்டறை பிரிவு தொடங்க சுமார் 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்த்ப்பட்டு ரூ 600 கோடி செலவில் அடிக்கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. இவ்விடத்தில் லாயல் டெக்ஸ்டெல் மில், வி.டி.எம் லிமிடெட், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட், ஸ்ரீ சரவணா ஸ்பின்னிங் மில், பண்ணாரியம்மன் குருப்ஸ், பி.கே.எஸ் டெக்ஸ்டைல் மில் உள்ளிட்ட நிறுவனங்கள் இவ்வளாகத்தில் அமைய உள்ளன.

மத்திய ஜவுளிதுறையின் கீழ் இயக்கப்படும் இந்த நிறுவனங்களுக்கு ஜவுளித்துறையும் ஒரு பங்குதாரர் என்ற வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஆலைகளை நிறுவுவதற்கு இலவசமாக நிலம், கட்டிடம், சாலைப் போக்குவரத்து, தண்ணீர் என அனைத்து அடிக்கட்டுமான வசதிகளையும் செய்துகொடுத்து முதலாளிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மானியமாக அரசே வாரியிறைக்கிறது.

சிமா, கடலூர்
நாள் ஒன்றுக்கு 1.09 கோடி லிட்டர் தண்ணீர் பூமியிலிருந்து ஆழ்குழாய்கள் மூலம் உறிஞ்சப்படும்.

இந்த ஆலைகள் துவங்கப்பட்ட பிறகு நாள் ஒன்றுக்கு 1.09 கோடி லிட்டர் தண்ணீர் பூமியிலிருந்து ஆழ்குழாய்கள் மூலம் உறிஞ்சப்படும். இதனால் சுற்றுவட்டாரங்களில் தற்போதே 800 அடிக்கு சென்றுவிட்ட போர்வெல் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். தண்ணீர் இன்றி விவசாயம் அழியும் அபாயம் காத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஆலையின் சாயக்கழிவுகளும் பூமியின் உள்ளே இறக்கப்படும், கடலிலும் கலக்கப்படும். இதனால் கடல் நீரும், நிலத்தடி நீரும் ஒன்றாகக் கலந்து தாவரங்கள், கால்நடைகள், மீன்கள், அதைச் சார்ந்த உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாறிவிடும்.

சைமா, கடலூர்
எல்லா துறை அதிகார வர்க்க கிரிமினல்களின் ஒப்புதலோடு முதலாளிகள் இந்த கொடூர வெறியாட்டத்தை நடத்துகிறார்கள்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுசூழல் ஆணையம், பொதுப்பணித்துறை, வனத்துறை, போக்குவரத்துதுறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட எல்லா துறை அதிகார வர்க்க கிரிமினல்களின் ஒப்புதலோடு முதலாளிகள் இந்த கொடூர வெறியாட்டத்தை நடத்துகிறார்கள். இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அரசுக்கு தெரியாததல்ல, தெரிந்தேதான் நடைபெறுகிறது. திட்டமிட்டு மக்கள் மீது ஒரு போரை நடத்துகிறது இந்த அரசு. கத்தியில்லை துப்பாக்கியில்லை, அணுகுண்டு இல்லை வெடிகுண்டில்லை. இது கார்ப்பரேட் முதலாளிகளின் படுகொலை. எந்த காரணம் என்று அறியாமல், என்ன நோய் என்று கூடத் தெரியாமல் செத்து மடியப்போகிறது நம்முடைய தலைமுறை. இதை இப்படியே அனுமதிக்கப்போகிறோமா? அல்லது எதிர்த்து போராடி இம் மண்ணையும் மக்களையும் காப்பாற்றப் போகிறோமா? இதுதான் இன்று நம் கண்முன்னே உள்ள கேள்வி.

சைமை, கடலூர்
சாயப்பட்டறை கழிவுநீர் ஆற்றில் கலக்கும் காட்சி : இதை இப்படியே அனுமதிக்கப்போகிறோமா? அல்லது எதிர்த்து போராடி இம் மண்ணையும் மக்களையும் காப்பாற்றபோகிறோமா?

க்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் 15 கிராமங்களின் முன்னணியாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தினார்கள். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி துண்டறிக்கை, சுவரொட்ட, முழக்கங்கள் தயாரித்து தாங்களே மக்கள் நிதி வசூல் செய்து அதன்மூலம் இரவுபகல் பாராமல் ஊர் ஊராக மக்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு வரச்சொல்லி அழைப்பு கொடுத்து போராட்டத்திற்கு தயார்படுத்தினார்கள்.

பத்து நாட்களுக்கு முன்பாகவே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கடிதம் கொடுத்தும் கடைசிவரை அனுமதி அளிக்க வேண்டிய காவல்துறை, முதல் நாள் இரவு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து கழுத்தை அறுத்தது. முன்னணியாளர்களை இழுத்தடித்து அவர்களை சோர்வடையச்செய்து, தனது கங்காணிகள் மூலம் உள்ளூர் கிராமங்களில் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்க தடுத்து நிறுத்துவது, மிரட்டுவது போன்ற அத்தனை சதி வலைகளையும் அறுத்தெறிந்து விட்டு, பெரியப்பட்டு கடைத்தெருவில் 18-04-2015 காலை 10 மணிக்கு நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை அரங்க நிகழ்ச்சியாக மாற்ற வைத்தார்கள்.

சைமா, கடலூர்
அத்தனை சதி வலைகளையும் அறுத்தெறிந்து விட்டு, நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை அரங்க நிகழ்ச்சியாக மாற்ற வைத்தார்கள்.

டூவீலர், ஆட்டோ, கார், வேன் என திரளாக மக்கள் மண்டபத்தில் கூடினார்கள். குறிப்பாக பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள். போராட்டட்தை ஒடுக்குவதாகவே செயல்பட்ட காவல்துறையின் முகத்தில் மக்கள் கரியை பூசினார்கள்.

இக்கூட்டத்தில் முதலில் பேசிய கான்சாகிப் வாய்கால் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் சக்காப்பு பேசியபோது

கான்சாகிப் வாய்கால் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் சக்காப்பு
சாதிக்கு அப்பால், மதத்துக்கு அப்பால், அரசியலுக்கு அப்பால் ஒன்று திரண்டு போராடினால்தான் சாதிக்கமுடியும்.

“இந்த மண்ணையும் உன்னையும் பாதுகாக்கணும்னா சாதிக்கு அப்பால், மதத்துக்கு அப்பால், அரசியலுக்கு அப்பால் ஒன்று திரண்டு போராடினால்தான் சாதிக்கமுடியும்” என்று மக்களுக்கு உணர்வூட்டும் வகையில் பேசினார்.

அடுத்து பேசிய காயல்பட்டு புருஷோத்தமன்

காயல்பட்டு புருஷோத்தமன்
“சாதியும் சாராயமும் நம்மள வாழ வைக்காது, ஒன்னா சேந்து போராடுனாதான் நமக்கு வாழ்வு”

“நாம இந்த மண்ணோடயும் கடலோடயும் நீர் நிலத்தோடயும் வாழ்ந்துடோம். சாயப்பட்டறை கம்பனிய வச்சி நம்மள பிரிக்க பாக்குறாங்க, சாதியும் சாராயமும் நம்மள வாழ வைக்காது, ஒன்னா சேந்து போராடுனாதான் நமக்கு வாழ்வு” என்று முடித்தார்.

காயல்பட்டு தாஸ் என்ற இளைஞர் பேசும்போது

காயல்பட்டு தாஸ்
தண்ணி நல்லா இருந்தாதான் நிலத்துல விளையுற உணவும் கடல்ல விளையுற பாசியும், அத தின்ற மீனும், மீனத்திண்ற மனுசனும் நல்லா இருக்க முடியும்.

“உலகத்துக்கே பெரிய குப்பை இந்தியா, இந்தியாவுக்கு பெரிய குப்பை தமிழ் நாடு, தமிழ்நாட்டுக்கு பெரியகுப்பை கடலூர். நிலத்தடி நீரையும் உறியுரான். கழிவு நீரை கடல்லையும் கொட்டுரான். தண்ணி நல்லா இருந்தாதான் நிலத்துல விளையுற உணவும் கடல்ல விளையுற பாசியும், அத தின்ற மீனும், மீனத்தின்ற மனுசனும் நல்லா இருக்க முடியும். இது ஒரு சங்கிலித் தொடர் மாதிரி வாழ்க்கையோட சம்பந்தப்பட்டது. இதல்லாம் நம்ம ஊர்கடல் விஷமாச்சு, அதனால பல பெண்களுக்கு கருச்சிதைவு போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்படுது.

கிழக்க கெரண்ட்டு கம்பனி (IL&FS – INFRASTRCTURE LEASING AND FINANCIAL SERVICE), வடக்க (NOCL-NAGARJUNA OIL CORPARATION LTD), மேற்க்க (NLC-NEIVELY LIGNITE CORPARATION LTD), நடுவுல SIMA-SOUTH INDIAN MILLS ASSOCIATION) பின்னலாடை, சாயப்பட்டறை எல்லாத்துக்கும் தண்ணி வேணும். இல்லனா ஆலை இயங்காது . எல்லா கம்பனியும் எல்லா பொருளையும் தயார் பண்ண முடியுமா? எவனாவது ஒரே ஒரு நெல்லு தயார் பண்ண முடியுமா?” என முதலாளிகளின் முகத்தில் அறைந்தது போல் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அய்யம்பேட்டை இளங்கோவன் பேசியபோது

அய்யம்பேட்டை இளங்கோவன்
என் மனைவி தலையிட்டு ‘இந்த பணத்தை வாங்கிட்டு 300 குடும்பத்த சாகடிக்க போறீங்களா? நான் இப்பவே தூக்கு மாட்டி செத்துடுறேன்’ என்று எச்சரித்தார்.

“நான் ஒரு மீனவ கிராமத்தை சேர்ந்தவன். எங்க ஊர்ல NOCL கம்பனி வந்தபோது ராத்திரி 12 மணிக்கு என் வீட்டு கதவ தட்டி 2 பொட்டி நிறைய பணத்த வச்சி வெல பேசினான். அப்போது நான் அமைதியாக இருந்தேன். இந்தா பணத்தை வாங்கிக்கன்னு சொன்னாங்க. 2 மாடி வீடுகட்டி சந்தோஷமா இருன்னு சொன்னாங்க. அப்ப என் மனைவி தலையிட்டு ‘இந்த பணத்தை வாங்கிட்டு 300 குடும்பத்த சாகடிக்க போறீங்களா? நான் இப்பவே தூக்கு மாட்டி செத்துடுறேன்’ என்று எச்சரித்தார். அன்றிலிருந்து இன்று வரை எ ந்த கம்பனிகாரனுக்கும் அடிபணிய மாட்டேன், எதிர்த்து நின்று போராடுவேன், எப்போதும் போராட்டத்திற்கு வர தயாராக இருப்பேன்” என உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

அடுத்து சின்னாண்டிகுழி புருஷோத்தமன் பேசியபோது “கட்சிக்காரனவுல நம்பாதிங்க, அதிகாரிகல நம்பாதிங்க, என்ன கூப்படல உன்ன கூப்படல-னு பேதம் பாக்கக் கூடாது. இது யார் வூட்டு காரியமும் இல்ல, நம்ம தலைமுறைக்கான போராட்டம். ஊருசனம் ஒன்னா சேந்தாதான் சாதிக்கமுடியும்” என்று பேசினார்.

ஒருங்கிணைப்பாளர் பரணி
உடம்புல ஒரு இடத்துல சீழ் வச்சா மருந்து மாத்திரை ஊசிப்போட்டு சரிபன்னிடலாம் ஆனா முழு உடம்பும் சீழ் வச்சா என்ன பண்ண முடியும்.

உள்ளூர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் பேசும்போது“உலகத்தில் எல்லா நாடுகளையும் விட அதிக வளம்கொண்டது இந்தியா. இந்த வளங்களை விக்கிறத்துக்கு ஊர் ஊரா போயி நாட்ட வித்துகிட்டு இருக்காரு மோடி. உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியானு சொல்றாங்க ஆனா இந்த மண்ணையும் விக்கறதுக்குதானா நம்ம தலைவர்கள் கட்டபொம்மன், பகத்சிங் போராடினார்கள்” என்று வேதனையுடன் பேசினார்.

பாலகிருஷ்ணன்
இந்த மண்ணையும் விக்கறதுக்குதானா நம்ம தலைவர்கள் கட்டபொம்மன், பகத்சிங் போராடினார்கள்.

அடுத்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் சிதம்பரம் செந்தில், கடலூர் செந்தில்குமார் ஆகியோர் பேசுகையில், “இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து பற்றி கவலைபட தேவையில்லை. ஏனென்றால் போலீசும், நீதித்துறையும், கலெக்டர், ஆர்.டி.ஓ வும் கம்பனிகாரனுக்குதான் என்று அவர்களே சொல்லிவிட்டார்கள். அதை நாம் மதிக்க தேவையில்லை உங்களுக்கு எங்கள் அமைப்பு நீதி மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராட தயாராக இருக்கிறோம்” என்று கூறி வெள்ளாற்று மணல் கொள்ளைக்கு எதிரான போராட்ட அனுபவத்தை கூறி முடித்தார்கள்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் ராமலிங்கம் பேசும்போது

சைமா, கடலூர்
கடலூர் மீண்டும் ஒரு போபாலாக மாறும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டு இருக்கிறது.

”இந்தியாவின் மையப்பகுதி போபாலில் 1984 டிசம்பர்-2 நள்ளிரவில் யூனியன் கார்பைடு நச்சுவாயு வெளியேறியதால் முக்கால்மணி நேரத்தில் 3828 பேர் இறந்தார்கள், 50,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களின் ஆடு, மாடு, நாய் ஆங்காங்கே செத்து கிடந்தன, மும்பையிலிருந்து போபாலுக்கு வந்த ரயில் பெட்டியிலிருந்த மக்கள் மூச்சு திணறி இறந்தார்கள், அதேபோல கடலூர் மீண்டும் ஒரு போபாலாக மாறும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டு இருக்கிறது. இந்தப் பகுதியில் கம்பனி வ ந்தால் வேலைகிடைக்கும் என்று ஆசைகாட்டி மக்களை போராட்ட உணர்வை மழுங்கடிக்கச்செய்கிறார்கள். அன்று முதல் இன்று வரை அரசும் அதிகார வர்க்கமும் அரசியல் கட்சிகளும் நமக்காக வாதாடியதோ,போராடியதோ இல்லை. எனவே இந்த அரசு எங்களுக்கு தேவையில்லை என்றும் மக்களே அமைப்பாகி அரசாக மாறுவோம்” என்று பேசி முடித்தார்.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியை சார்ந்த தோழர் பாலசுப்ரமணியன் பேசும் போது

சைமா, கடலூர்
அன்று வெள்ளைக் காரனை விரட்டியடிக்க கட்டபொம்மன் போராடினான். அப்போதே காட்டிக் கொடுக்க பல எட்டப்பர்கள் இருந்தார்கள்.

“கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விரட்டியடிக்கப்பட்ட சைமா இன்று கடலூர் சிப்காட்க்கு வந்துள்ளது. இதன் கட்டுமானப் பணி துவங்கும் போதே அரசியல் சார்பற்றும் சாதி பிரிவினையற்றும் ஒன்று சேர்ந்து விரட்டியடிக்கவேண்டும். அன்று வெள்ளைக் காரனை விரட்டியடிக்க கட்டபொம்மன் போராடினான். அப்போதே காட்டிக் கொடுக்க பல எட்டப்பர்கள் இருந்தார்கள் இப்போதும் காட்டிகொடுக்க பல எட்டப்பர்கள் இருப்பார்கள் அதனால் கவலைப்பட தேவையில்லை.

இந்த அரசின் அத்தனை துறைகளும் மக்களுக்கானது அல்ல “உடம்புல ஒரு இடத்துல சீழ் வச்சா மருந்து மாத்திரை ஊசிப்போட்டு சரிபன்னிடலாம் ஆனா முழு உடம்பும் சீழ் வச்சா என்ன பண்ண முடியும். அப்படித்தான் இந்த அரசாங்கம் செயலிழந்து போச்சு. எல்லாம் முதலாளிகளுக்காகத்தான் இருக்கு. அதனால எல்ல ஊரிலும் மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தை கட்டி மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதுதான் எஞ்சி இருக்கும் ஒரே வழி.” என்று பேசினார்.

பு.மா.இ.மு தோழர்கள் – தாகத்திற்கா தண்ணீர் லாபத்திற்க்கா பாடல் பாடும்போது
பு.மா.இ.மு தோழர்கள் – தாகத்திற்கா தண்ணீர் லாபத்திற்க்கா பாடல் பாடும்போது

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்திகள்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.

தொடர்புக்கு: 9791776709

ஆந்திர படுகொலைகள் – அரசுக்கும், கட்சிகளுக்கும் PRPC கேள்விகள்

0

20 தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து 15.04.2015 அன்று திருவண்ணாமலை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

20 தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து 15.04.2015 அன்று திருவண்ணாமலை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
20 தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து 15.04.2015 அன்று திருவண்ணாமலை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் சரவணன் “ஆந்திர துப்பாக்கி சூட்டை கண்டித்து மாநிலம் முழுக்க எங்களது அமைப்பும் புரட்சிகர அமைப்புகளும் போராடிவரும் நிலைமையில் மாபெரும் எதிர்க்கட்சிகள் என்று சொல்லக்கூடிய தி.மு.க,தே.மு.தி.க, பா.ம.க, வி.சி, காங்கிரஸ், பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைவரும் வெறும் அறிக்கை விடுவதோடும், நிவாரணம் வழங்குவதோடும் நிறுத்திக்கொண்டனர். ஓ.பி யோ சந்திர பாபுவுக்கு கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார். கடிதம் எழுதுவதில் கலைஞரையே மிஞ்சிவிட்டார். ஆக, இதுதான் கட்சிகளின் நிலைப்பாடு.

20 தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து 15.04.2015 அன்று திருவண்ணாமலை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
அனைவரும் வெறும் அறிக்கை விடுவதும் நிவாரணம் வழங்குவதோடும் நிறுத்திக்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்தபோது அ.தி.மு.க தொண்டர்கள் பேருந்தை எரித்தும், கடைகளை உடைத்தும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர்கள் இப்போது எங்கே போய்விட்டார்கள்? ஊழல் அம்மாவுக்காக ஊரையே கொளுத்திய நீங்கள் அப்பாவி தமிழர்களை கொல்லும்போது ஏன் அமைதியா இருக்கீங்க?

பா.ம.க.வைச் சேர்ந்த ராமதாஸ் பிணத்தில் கூட சாதி பார்த்து,  சாதிக்காக மட்டும் பேசுறார். ராமதாசை கைது செய்த போது பஸ்சை கொளுத்திய நீங்கள் உங்களது வீரத்தை இப்போது காட்ட வேண்டியது தானே?

சாதாரண தரைக்கடை வியாபாரி தள்ளு வண்டி வியாபாரியிடம் உழைக்கும் மக்களிடமும் உங்களது சட்டத்தையும், வீரத்தையும் காட்டும் அரசாங்கம், போலீசு, ‘பல லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாது’ என்று பகிரங்கமாக அறிவிக்கும் கிங் பிஷர் முதலாளி விஜய் மல்லய்யாவை கைது செய்ய திராணி இருக்கிறதா? காடுகள், மலைகள், ஆறுகள் என இயற்கை வளங்கள் தனியார்மய கொள்கையால்தான் சுரண்டப்படுகின்றன அதற்கு இந்த போலீசு, இராணுவம், நீதிமன்றம் உள்ளிட்ட அணைத்து அரச கட்டமைப்பும் துணை நிற்கிறது. இதை முறியடிக்க தனித் தனியாக போராடாமல் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மற்றும் புரட்சிகர அமைப்புகளோடு இணைந்து போராடுவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்” என்று உரையாற்றினார்.

செம்மரம் - திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்
காடுகள், மலைகள், ஆறுகள் என இயற்கை வளங்கள் தனியார்மய கொள்கையால்தான் சுரண்டப்படுகின்றன அதற்கு இந்த போலீசு, இராணுவம், நீதிமன்றம் உள்ளிட்ட அணைத்து அரச கட்டமைப்பும் துணை நிற்கிறது.

விழுப்புரம் மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இணைச் செயலாளர் தோழர். இரஞ்சித் “இது அரசின் பச்சைப் படுகொலை என்பது மட்டும் அல்ல. இது அரச பயங்கரவாதம். மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தராத இந்த அரசு, தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக் கொன்று விட்டு லட்சம் லட்சம் என்று நிவாரண தொகையும், கணவனை இழந்த மனைவிக்கு வேலைவாய்ப்பு என்றும் கூறி இந்த அநியாயங்களை மூடி மறைக்கிறது.

மக்களின் அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்திடாத அரசை பயங்கரவாத அரசு என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? மேலும், நாடு முழுவதும் இயற்கை வளங்களை தனியார் முதலாளிகளின் லாபவெறிக்காக தூக்கி கொடுத்துவிட்டு அதைத் தவறு என தட்டிகேட்கும் மக்களை போலிசை ஏவி விட்டு அடிக்கிறது இந்த அரசு.

இப்படுகொலையை கண்டித்து எமது அமைப்புகள் தமிழகம் முழுக்க போராடிவருவதை தடுத்து நிறுத்த எங்களை சிறைவைத்தது போலீசு. இந்த அட்டூழியங்களை எல்லாம் தட்டி கேட்க வேண்டும் என்றால் மக்கள் அதிகாரத்திற்கான கமிட்டிகளை அமைத்து போராடுவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்” என்று உரையாற்றினார்.

வழக்கறிஞர் அஸ்ரப் பாஷா “இது திட்டமிட்ட படுகொலை தான் என்பது உறுதியாகிவிட்டது. இரு மாநிலங்களுக்குள் இவ்வளவு பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் மத்திய அமைச்சர்களோ, மோடியோ இதுவரை இந்த பிரச்சனையைப் பற்றி பேசவில்லை. மோடியோ வெளிநாடு பயணம் என்று சொல்லி ஊர் சுற்றுவதில் மன்மோகன் சிங்கையே மிஞ்சிவிட்டார். உழைக்கும் ஏழை எளிய மக்கள் உண்ணும் மாட்டுக்கறியை தடை செய்ய மாடு வெட்ட தடை சட்டம் போடும் அரசு 20 தொழிலாளர்களை சுட்டு கூறு போட்டிருக்கான், இதற்கு ஏன் தடை சட்டம் போடவில்லை? தி.க.வின் தாலி அறுக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் காலிகளே இங்கு 20 இந்து பெண்களின் தாலி அறுந்து போச்சே, இப்ப எங்கடா போனீங்க?” என்று பேசினார்.

செம்மரம் - திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்
தி.க. வின் தாலி அறுக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் காலிகளே இங்கு 20 இந்து பெண்களின் தாலி அறுந்து போச்சே இப்ப எங்கடா போனீங்க?

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் தோழர் கண்ணன் “சந்திர பாபு நாயுடுவின் நேரடி தலைமையில் இந்தப் படுகொலை நடந்துள்ளது. இது திட்டமிட்ட படுகொலைதான். இதற்குக் காரணமான ஆந்திர மாநில டி.ஐ.ஜி காந்தாராவ் உள்ளிட்ட போலிசு கும்பலை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், எங்களது அமைப்பின் சார்பாக துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்கையில் அங்கு மரம் வெட்டியதற்கான தடயங்கள் ஏதுமில்லை. அதுபோல மரம் வெட்டும்போது போலிசு துப்பாக்கியோடு வரும்போது தப்பியோடத்தான் நினைப்பார்களே ஒழிய எதிர்த்து தாக்கமாட்டார்கள். அப்படி ஓடும்போது முதுகில் தான் சுட்டிருக்க முடியும். மாறாக மார்பிலும், வயிற்றிலும், நெஞ்சிலும் சுடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இது திட்டமிட்ட படுகொலைதான் என்று தெரிகிறது.

சென்ற வருடம் சென்னையில் பதினோரு மாடி கட்டிடம் விழுந்து ஆந்திர தொழிலாளி இறந்து போனபோது சந்திர பாபு நாயுடு எல்லை தாண்டி தனி விமானம் மூலம் வந்து பார்த்துவிட்டு போனார்; பின்பு நிவாரணம் கொடுத்தார். ஆனால் இப்படி ஒரு படுகொலை நடந்துள்ளபோதும் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நமது மக்களை வந்து பார்க்க நேரமில்லாமல் இருக்கிறார். மக்களை பாதுகாக்க வேண்டிய இந்த அரசு, போலீசு, ராணுவம், நீதி மன்றம் என அனைத்தும் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இனிமேலும் இந்த அரசை நம்பி ஏமாறாமல் வீதிக்கு வீதி மக்கள் அதிகாரத்துக்கான மையங்களை கட்டியமைத்து போராடுவதன் மூலம் தான் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று பேசினார்.

செம்மரம் - திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்
இந்த அரசை நம்பி ஏமாறாமல் வீதிக்கு வீதி மக்கள் அதிகாரத்துக்கான மையங்களை கட்டியமைத்து போராடுவதன் மூலம் தான் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இறுதியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சுந்தர் நன்றி கூறினார்.

பேருந்து பிரச்சாரத்தில் மக்கள் நம்மை பார்த்து நீங்கள் மட்டும்தான் உண்மையான குற்றவாளி யார் என்றும் அவர்களை எப்படி தண்டிப்பது என்றும் சொல்றீங்க என்று பாராட்டினர். அனைவருமே மனமுவந்து நிதி கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.

[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்ட முழக்கம்

கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !
தமிழக தொழிலாளர்கள் 20 பேரை
நாயைப்போல சுட்டுக்கொன்ற….
ஆந்திர அரசின் பயங்கர வாதத்தை
வன்மையாக கண்டிக்கின்றோம்

படுகொலை! படுகொலை !
சமூக நீதி வேஷம் போட்ட
சந்திர பாபு நாயுடுவின்
பச்சையான படுகொலை…

டிஸ்மிஸ் செய் ! டிஸ்மிஸ் செய் !
சொந்த அரசியல் காரணங்களுக்காக
ராமச்சந்திர ரெட்டிக்கு நெருக்கடி தர…
20 கூலி தொழிலாளர்களை
கொன்று வீசிய நாயுடு அரசை
டிஸ்மிஸ் செய் ! டிஸ்மிஸ் செய் !

கைது செய்! சிறையிலடை !
ஆந்திர மாநில டி.ஐ.ஜி
காந்தாராவ் உள்ளிட்ட
போலீசு அதிகாரிகளை
கைது செய்! சிறையிலடை !

தில் இருக்கா! தில் இருக்கா !
கூலித் தொழிலாளிகளை
சுட்டுக்கொன்ற ஆந்திர அரசே
செம்மரக் கடத்தல் கொல்லையன்கள்
ராமசந்திர ரெட்டி
கிஷோர் குமார் ரெட்டி உள்ளிட்ட
ஆந்திர தமிழக மாபியாக்களை
சுட்டுக்கொல்ல தில் இருக்கா !

தாலி பற்றி பேசியதற்கு
குண்டு வீசி வெறியாட்டம் போட்ட
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி காலிகளே
20 இந்து தாலியை அறுத்துட்டான்
எங்கடா ஓடி ஒளிஞ்சிங்க
எவன் மசுர புடுங்குறீங்க…

நிராகரிப்போம் ! நிராகரிப்போம் !
ஆந்திர அரசின் படுகொலையை
தெலுங்கு இனவெறி என்று சுருக்கி
மக்களை கொன்று வரும் …
நெருங்கி வரும் அரச பயங்கரவாதத்தை
மூடி மறைக்கின்ற…
தமிழ் தேசிய கள்ளர்களை
நிராகரிப்போம் ! நிராகரிப்போம் !

இயற்கை வளத்தை சூறையாட
நாட்டையே கொள்ளையடிக்க
சாதி மத இனம் கடந்து
ஓட்டுப் பொறுக்கிகள் ஓரணி !
உழைக்கும் மக்களே நமக்கெதற்கு
ஒன்றுக்கும் பயன்படாத
சாதி மத லாவணி……
ஒன்று படுவோம்! ஒன்று படுவோம் !
உழைக்கும் வர்க்கமாய் ஒன்று படுவோம்….

முறியடிப்போம்! முறியடிப்போம் !
நாளுக்கு நாள் பெருகிவரும்
அரசின் பயங்கர வாதத்தை
முறியடிப்போம் ! முறியடிப்போம் !

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம் !
இயற்கை வளங்களை பாதுகாக்க
வீதிக்கு வீதி ஊருக்கு ஊர்…
மக்கள் அதிகார மன்றங்களை
வீரஞ்செறிந்த போராட்டங்களை
கட்டியமைப்போம் ! கட்டியமைப்போம் !

வெல்லட்டும் ! வெல்லட்டும் !
ஆந்திர அரசின்
பச்சை படுகொலைக்கு எதிரான
தமிழக மக்களின் போராட்டம்
வெல்லட்டும் ! வெல்லட்டும் !

தகவல் :
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை மாவட்ட கிளை

பிள்ளைக்கறி தின்னும் அரசு – இப்போது விழுப்புரத்தில் !

1

செய்தி : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

விழுப்புரம்அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்ள குழந்தைகள் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 பச்சிளம் குழந்தைகள் நேற்று முன்தினம் காலை 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து இறந்தன.  ஏற்கெனவே, 4 குழந்தைகள் இறந்த நிலையில் மேலும் 3 குழந்தைகள் இறந்ததால் இரண்டு நாளில் குழந்தைகளின் உயிரிழப்பு 7ஆக உயர்ந்தது.

 

infants-death-in-vilupuramபடம் : ஓவியர் முகிலன்

தங்கைகளுக்காக சிங்கப்பூரில் வதைபடும் அண்ணன்கள்

182

சிங்கப்பூருக்கு பிழைப்பு தேடி சென்ற ஒவ்வொருவருக்கும் தனிபட்ட காரணங்கள் இருந்தாலும் தமிழர்களில் பல பேருக்கு ஒற்றுமையான ஒரு காரணம் தங்கச்சி என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் பாசத்திற்குரிய சென்டிமெண்டாக இருக்கும் இந்த தங்கச்சி விவகாரம் நிஜத்தில் பொறுப்பான அண்ணன்களின் இளமையை கேட்கும் தண்டனை எனலாம். சீர், வரதட்சணை, முறை என்று ஒன்றும் குறைவைக்க கூடாது என்றால் சிங்கப்பூருக்கு வண்டி ஏற வேண்டும். அப்படி சென்றவர்களில் ஒருவர் தனபால்.

சிங்கப்பூர் தொழிலாளர்கள்
பொறுப்பான அண்ணன்களின் இளமையை கேட்கும் தண்டனை.

தினமும் அரைப் பட்டினி வயிற்றோடு பாடுபட்டு இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து கரை சேர்த்த களைப்பில் பெற்றோர்கள் இருந்தனர். மீதமுள்ள கடைக்குட்டி பெண் கல்யாணத்திற்காவது மகன் பொறுப்பேற்க மாட்டானா என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. பட்டப்படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் சோர்ந்து போன தனபாலும் இறுதியில் கைக்கெட்டும் சொர்க்கமான சிங்கப்பூருக்கு சென்றார்.

இவ்வளவு வறுமையிலும் அவர் பட்டப்படிப்பை முடித்தது எப்படி? பகுதி நேரமாக வேலை செய்து படிப்புக்கான செலவு தேவைகளை ஏற்பாடு செய்து கொண்டார். இத்தகைய பொறுப்புணர்வே அவரை சிங்கப்பூரை நோக்கியும் ஓட வைத்தது.

எதிரே நின்ற தங்கைக்காக சிங்கப்பூர் சென்று ஏழு வருட கட்டிட தொழிலாளியாக பணி முடித்து பிறகு ஊர் திரும்பி தங்கைக்கு மட்டுமல்ல தானும் மணமுடித்து மனைவி குழந்தையுடன் வாழ்கிறார். இனி சிங்கப்பூர் அனுபவம் குறித்து அவரே பேசுகிறார்.

எப்ப சிங்கப்பூர் போனீங்க?

“1998-இல் சிங்கப்பூர் போனேன். ரெண்டு வருசத்துக்கு ஒருவாட்டி விடுமுறைக்கு ஊருக்கு வந்து போவேன். 2005-ல நிரந்தரமா வந்துட்டேன்.”

சிங்கப்பூர் தொழிலாளர்கள்
விமான டிக்கெட்டுலேருந்து பொட்டி ஜட்டி வரைக்கும் எல்லாம் ஆச்சு ரெண்டு லட்சத்துக்கு.

இரண்டு வருசத்துக்கு ஒரு தடவதான் விடுமுறையா?

“வருசத்துக்கு ஒரு தடவ விடுமுறை உண்டு. வந்து போகலாம். ஆனா ஒரு வருசத்துக்கு ஒரு தடவ விசாவ புதுப்பிக்கணும். அதுக்கும், வந்து போகும் செலவு கணக்கும் பாத்தா நம்ம சம்பாத்தியத்துக்கு கட்டுபடியாகாது.”

நீங்க சிங்கப்பூர் போக எவ்வளவு செலவாச்சு?

“சிங்கப்பூருக்கு போன செலவு அத்தனைக்கும் கடன்தான். ஏஜெண்டுக்கு மட்டும் 1,65,000. விமான டிக்கெட்டுலேருந்து பொட்டி ஜட்டி வரைக்கும் எல்லாம் ஆச்சு ரெண்டு லட்சத்துக்கு.”

எவ்வளவு சம்பளம்?

“தினக்கூலிதான். படிச்சிட்டு நல்ல அட்மிசன் லெவல்ல வேலை பாத்தா மாதச் சம்பளம் மதிப்பு எல்லாம் இருக்கும். தொழிலாளியா போனா எல்லா துன்பமும் பட்டாகணும். வேலை நேரம் போக ஓவர் டைம் பாத்தாத்தான் சம்பளம் கொஞ்சமாவது கட்டுப்படியாகும். அதுவும் நாம நெனச்சா மாதிரி பாக்க முடியாது. மேனேஜருக்கு வேண்டியவனுக்கும், வேலை சுறுசுறுப்பா செய்றவனுக்கும் தான் ஓவர் டைம் கெடைக்கும். வேலை நெருக்கடியா இருந்தாத்தான் மத்தவனுக்கும் ஓ.டி. கிடைக்கும். அப்ப நமக்கு உடம்பு சரி இல்லாம இருந்தாலும் செய்ய முடியாதுன்னு சொல்ல முடியாது. இதையெல்லாம் கூட்டி கழிச்சு பாத்தா 15,000 முதல் 20,000 வரை இந்திய பணம் மாதம் கிடைக்கும்”

எத்தன வருசத்துல கடன அடைச்சிங்க?

சிங்கப்பூர் தொழிலாளர்கள்
ஏ.சி சம்மந்தமான வேலையின்னு இடைத்தரகர் சொல்லிதான் போனேன். ஆனா தொடப்பத்த கையில கொடுத்து பூச்சுப்பூசும் போது விழுவுற சிமெண்ட்ட கூட்டுன்னு சொன்னானுங்க.

“குடும்பத்துல வேற செலவு இல்லன்னா ஒரு வருசத்துல கடனை அடைச்சிருப்பேன். போன மறுவருசமே தங்கச்சி கல்யாணம் வந்துருச்சு. நல்ல மாப்பிள்ளை விட்டா கிடைக்காதுன்னு வீட்ல ஒரே புலம்பல். சிங்கப்பூர்ல இருக்குற நம்பிக்கையில தங்கச்சிக்காக வட்டிக்கி வாங்கும்படியா போச்சு.”

மொத்தமா கடன் எவ்வளவு வாங்கினிங்க? வட்டியோட சேத்து எவ்வளவு அடைச்சிங்க?

“சிங்கப்பூர் போறதுக்கு வட்டிக்கு பணமா 50,000-ம். சொந்தக்காரங்க அஞ்சு பேருகிட்ட நகையா வாங்கி அடகு வச்சுட்டு அதுல 1,50,000-ம் புரட்டிட்டு போனேன். யாருக்கு நகைங்க அவசரமா தேவைப்படுதோ அவுங்களுக்கு முதல்ல திருப்பிக் கொடுத்தேன். தங்கச்சி கல்யாணத்துக்கு நகையோடோ சேத்து 2 லட்சம் கடன் வாங்குனேன். மொத்தம் நாலு லட்சம் கடனுக்கு வட்டி மட்டும் 2 லட்சம் கிட்டக்க வந்துருச்சு. அஞ்சு வருசத்துல அசல் வட்டின்னு ஆறு லட்ச சொச்சம் அடைச்சேன்.”

நீங்க என்ன படிச்சிருக்கிங்க?

“நான் பி.எஸ்.சி முடிச்சிட்டு ஒரு சில டிப்ளம்பா கோர்ஸ்சும் முடிச்சேன். அதுல ஒண்ணுதான் ஏ.சி சர்வீஸ் பத்தினது. சிங்கப்பூர்ல கட்டிட தொழில்தான் முதன்மையானது. அதுல ஏ.சி சம்மந்தமான வேலையின்னு இடைத்தரகர் சொல்லிதான் போனேன். ஆனா தொடப்பத்த கையில கொடுத்து பூச்சுப்பூசும் போது விழுவுற சிமெண்ட்ட கூட்டுன்னு சொன்னானுங்க. ஏன்னு வாய தொறந்தா ஊருக்கு அனுப்பிடுவானுங்கன்னு மட்டும் புரிஞ்சுச்சு. கடனா, தொடப்பமான்னு பாத்தா தொடப்பந்தான் செயிச்சுச்சு.”

சிங்கப்பூர் தொழிலாளர்கள்
எந்த வேலையா இருந்தா என்ன நமக்குத் தேவை காசு.

படிச்சுட்டு இந்த வேலையா பாக்க போனிங்க?

“கலெக்டருக்கே படிச்சிருந்தாலும் ஒர்க்கர் விசாவுல போனா கக்கூசு கூட கழுவ சொல்லுவானுங்க. மறுக்க மடியாது.”

படிச்ச உங்கள கூட்ட சொன்னப்ப உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?

“நீங்க கேக்குற அளவுக்கு எனக்கு ஒன்னும் பாதிப்பா இல்லைங்க. நான் பள்ளிக்கூடம் படிக்கும் போதே கல்லு கடைக்கி வேலைக்கி போவேன். மரம் ஏறுவேன். கல்லூரி முடிஞ்சதும் பைனான்ஸ்காரங்களுக்கு கணக்கு எழுதுவேன். தண்டல் வசூலுக்கும் போவேன். அப்படி, எந்த வேலையா இருந்தா என்ன நமக்குத் தேவை காசு.”

கடைசி வரைக்கும் ஏ.சி சம்மந்தமான வேலை கிடைக்கவே இல்லையா?

“நான் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டிங்க போலருக்கே. இதுலயும் பல ப்ரோமோசன் கெடைச்சுது. ஒரு நாள் பெயிண்ட் அடிச்ச தொழிலாளி ஊருக்கு போயிட்டாருன்னு என்ன அடிக்க சொன்னானுங்க. அடிச்சேன். பரவாயில்லையே அவனவிட நீ கீழ ஒழுகாம நீட்டா ஆடிக்கிறியே நீயே அடின்னானுங்க.

சிங்கப்பூர் தொழிலாளர்கள்
நீயும் நானும் இங்க ஒரே இனம்தான். எம்மேல கோபம் வேண்டாம். ஒன்னோட வேலையை தட்டி பறிச்சிட்டதா நினைக்காதே.

நாலு வருச்ம கழிச்சு வேறொரு கம்பனி. அங்க போனதும் “ஏற்கனவே என்ன வேலை செஞ்சுருக்க” அப்படின்னானுங்க. “சிமெண்டு கூட்டுனேன்”னு சொன்னேன். அப்படியா “சரி மரம் வேலை நடக்கும் போது விழும் தூள்கள கூட்டுன்”னு திரும்பவும் தொடப்பத்த கையில கொடுத்துட்டானுங்க.

கொஞ்ச நாள் பொறுத்து ஆசாரி வேலை செஞ்ச தாய்லாந்து நாட்டுக்காரர் ஊருக்கு போய்ட்டார். என்ன மரம் அறுக்கச் சொன்னானுங்க. தாய்லாந்து ஆசாரி படிக்காத ஆள். அவருக்கு அளவு எடுத்து எழுதிக் கொடுக்க ஒரு உதவியாளர் இருந்தாரு. எனக்கு அது தேவைப்படல. நானே அளவு குறிச்சு வேகமாவும் வெட்டி தள்ளிட்டேன். ஒடனே அந்த வேலையை எனக்கு குடுத்துட்டானுங்க.”

திரும்பி வந்த தாய்லாந்துக்காரர் என்ன விரோதி மாதிரி பாத்தாரு. இங்க வாடாப்பான்னு கூப்புட்டு நீயும் நானும் இங்க ஒரே இனம்தான். எம்மேல கோபம் வேண்டாம். ஒன்னோட வேலையை தட்டி பறிச்சிட்டதா நினைக்காதே இத விட எனக்கு பெருக்குறதுதான் ஈசி. ஓனருட்ட சொல்லி எனக்கு பெருக்குற வேலையையே வாங்கி குடுத்துருன்னு சொல்லி நட்பானேன். ஓனரு ஒத்துக்க மாட்டேன்னுட்டான்.”

பெருக்குறதுக்கும் அறுக்குறதுக்கும் கூலி வித்தியாசம் எவ்வளவு?

சிங்கப்பூர் தொழிலாளர்கள்
எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும்.

“ஒரு மண்ணும் கிடையாது. அதே கூலிதான் ஒரு பத்து பைசா கூட அதிகம் தர மாட்டாங்க. மொத்தமா அவங்க எடுத்த குத்தகை மிஷினுங்கதான் தொழிலாளிங்க. எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும். நமக்கு வாய் தொறக்குற வாய்ப்பெல்லாம் கிடையாது.

ஒரு ஓனரு ஒரு கட்டிடத்தையே காண்ட்ராக்ட் எடுத்துருப்பான். இல்ல ஒரு சில வேலைகளை மட்டும் எடுத்துருப்பான். நாம எந்த முதலாளிகிட்ட வேலை பாக்குறோமோ அவனோடோ காண்ட்ராக்ட் முடிஞ்சு போச்சுன்னா அடுத்து அவன் வேலை குடுக்குற வரைக்கும் சும்மாதான் இருக்கனும். அதிகப்படியான நாள் இழுத்துட்டு போச்சுன்னா சில பேர் சாப்பாட்டுக்கு காசு தருவாங்க. இல்லன்னா அதுவும் நாமதான் பாத்துக்கனும்.”

இதுதான் வேலையின்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டு வேற வேலையை கொடுத்து தரகர்கள் ஏமாத்துறாங்களா?

“அரசாங்க வேலையின்னு கூட்டிட்டு போயியா ஏமாத்துறாங்க. அப்படியெல்லாம் கிடையாதுங்க. சிங்கப்பூருல கட்டுமான நிறுவனம்தான் அதிகம். கட்டுமான பணிக்குதான் வேலைக்குன்னு கூட்டிட்டு போறாங்க அதுல இருக்குற கொத்தனார், ஆசாரி, பிளம்பிங்கு, ஒயரிங்கு, சென்ட்ரிங்கு எல்லாந்தான் அத்துபடி அதுல ஏதாவது ஒரு வேலைதான், இதுல என்ன ஏமாத்தறது.”

சிங்கப்பூர் தொழிலாளர்கள்
வெளிநாடு, விமானப் பயணம்னு ஒரு கவர்ச்சிய ஏற்படுத்துச்சுன்னு சொல்லலாம்.

இவ்வளவு சிரமம் இருந்தும் ஏன் சிங்கப்பூரை நாடி போறாங்க?

“இந்த பகுதியில 90-கள்ல சிங்கப்பூர் போறது ஒரு ஃபேசனாவே இருந்துச்சு. பள்ளி இறுதியாண்டுல கோட்டை விட்டவங்க, கல்லூரி படிப்ப பாதியில விட்ட இளைஞர்கள் விவசாய வேலை பாக்காம வெட்டியா சுத்தறத தடுக்க நினைச்சுதான் சிங்கப்பூர் அனுப்புனாங்க. திரும்பி வரமுடியாமல் கஸ்டத்த உணர்வாங்கன்னு பெத்தவங்க நினச்சாங்க. பசங்களுக்கும் வெளிநாடு, விமானப் பயணம்னு ஒரு கவர்ச்சிய ஏற்படுத்துச்சுன்னு சொல்லலாம். அதனாலதான் திருவாரூரு, தஞ்சாவூரு, பட்டுக்கோட்டை ஆட்கள் அதிகம்”

சிங்கப்பூர் அனுபவத்துல எது முக்கியம்?

“ஊர்ல இருக்கும் போது சாராய வியாபாரிங்க கூட பழக்கம் இருந்தும் கூட குடிக்காமதான் இருந்தேன். அப்டிபட்ட என்னை குடிகானா ஆக்குன பெருமை சிங்கப்பூரையே சாரும்.”

சிங்கப்பூர் பற்றிய உங்கள் கருத்து என்ன?

சிங்கப்பூர் தொழிலாளர்கள்
எந்த வளமும் இல்லாத ஒரு தீவுதான் சிங்கப்பூர். அத்தியாவசிய தேவைக்குக் கூட ஒரு பிடி தானியம் பயிரிட முடியாது

“எந்த வளமும் இல்லாத ஒரு தீவுதான் சிங்கப்பூர். அத்தியாவசிய தேவைக்குக் கூட ஒரு பிடி தானியம் பயிரிட முடியாது. ஆனா கடந்து போகும் மந்த நாட்டவர்கள் இளைப்பாரும் ஒரு இடமா அமைச்சதுதான் அதன் சிறப்பு. அதை பயன்படுத்தி எந்த வகையில முன்னேத்திக்கலான்னு புத்திசாலித்தனமா செயல் பட்டுருக்காங்க.”

உங்களைப் போல உழைப்பாளியின் இரத்தத்தை உறிஞ்சிதானே இந்த சிறப்பெல்லாம்?

“இது ஏதோ சிங்கப்பூர்ல மட்டும் நடக்கறது மாறி பேசிரிங்க. எங்கயுமே உழைக்கிறவங்களுக்கு இதுதானே கதி.”

சிங்கப்பூர் போனதுல தங்கச்சி கல்யானம் செஞ்சிங்க வேற என்ன பொருளாதாரத்துல முன்னேற்றம்னு சொல்லுங்க?

“ஆறு லட்சம் கடன அடைச்சது போக, ஒரு ஏக்கருக்கு குறைவா நிலம் வாங்கினேன். இதையும் சேத்தா சிங்கப்பூர் போயி நான் சம்பாதிச்சது என்ன ஒரு ஏழு லட்சம் வரும். கடன் போக இந்த நிலந்தான் இப்ப மிச்சம். இதை ஊர்ல இருக்கும் போது குத்தகைக்கு எடுத்தே சம்பாதிச்சிருப்பேன். அப்டி பாத்தா சிங்கப்பூர்ல நான் அடைஞ்ச வருமானத்தையும் சந்தோசத்தையும் விட ஊருலேயே இருந்துருந்தா நல்லா சம்பாரிச்சி சிறப்பா வந்துருப்பேன். என்ன ஒன்னு, கொஞ்ச நாள் அதிகம் ஆகும் அவ்ளவுதான். எல்லா வசதியும் இருந்து மொதல் போட்டு சிங்கப்பூர் போறவங்க கொஞ்சம் காசு பாக்கலாம். வட்டிக்கி கடன்பட்டு லேபரா போயி குடும்பத்துல A to Z-வரைக்கும் நாமதான் நல்லது கெட்டது பாக்கனும்ணு சிங்கப்பூரு ஓடுனா கணக்குதான் வரும். வசதி வராது.”

சிங்கப்பூர் தொழிலாளர்கள்
நீங்க சிங்கப்பூர் போயி கடைசியில என்னதான் சம்பாதீச்சிங்க?

நீங்க சிங்கப்பூர் போயி கடைசியில என்னதான் சம்பாதீச்சிங்க?

“இந்த கேள்வியதாங்க எங்க வீட்டுக்காரம்மா நிதமும் கேக்குது.”

–    சரசம்மா
(ஊர், பெயர் அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)
_________________________________
சிங்கப்பூரில் ஓரளவு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்பவர்களே அதன் அருமை பெருமை பற்றி அளந்து விடுகிறார்கள். அங்கே கடுமுழைப்புடன் வேலை செய்யும் தொழிலாளிகள் மீதான சுரண்ட்லை இவர்கள் வசதியாக மறைத்து விடுகிறார்கள்.

சிங்கப்பூர் சுரண்டல் என்பது ஒரு விசச்சூழல். ஒன்றில் மாட்டிக் கொண்டால் அதன் தொடர் விளைவாக முழுச்சுற்று முடித்து கையில் ஒன்றுமில்லாமல்தான் வரவேண்டும். அதற்குள் சிங்கப்பூர் பொருளாதாரம் ஒரு தொழிலாளியின் ஆகச் சிறப்பான இளைமைப் பருவ உழைப்பை திருடி விடும்.

இந்த சுரண்டலுக்கு அடிநாதமாக இருப்பது சிங்கப்பூர் பற்றிய கதைகள்தாம். அந்தக் கதைகளை நம்பி தொழிலாளிகள் கடன் வாங்கி செல்கிறார்கள். சென்ற பிறகு அந்த கனவு மறைந்து கடனை அடைப்பதற்காக கிடைக்கும் தொழிலை செய்ய வேண்டியிருக்கிறது. ஓவர்டைம் என்பது இங்கே ஒரு தொழிலாளியின் விருப்பத்திலிருந்து தீர்மானிக்கப்படுவதில்லை. முதலாளி சொன்னால் செய்ய வேண்டும். அதே போன்று வேலை இல்லை என்றால் தானே தனது செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும். வேலை இருக்கும் போது தொழிலாளியை தங்க வைத்து, சோறு போட்டு வேலை வாங்கும் வேலையை கம்பெனியே செய்து விடும்.

இந்த மாறுபாடு ஏன்? இங்கே உதிரிப்பாட்டாளிகளை தங்க வைத்து நேரம் காலம் பார்க்காமல் வேலை வாங்கும் அதே உத்திதான் சிங்கப்பூரிலும். இன்னும் மருத்துவம், விடுமுறை, பொதுவான உரிமைகள் எதுவும் ஒரு தொழிலாளிக்கு கிடையாது. வேண்டுமென்றால் அதிக பணம் செலவழிக்க வேண்டும். இருப்பினும் சிங்கப்பூர் கம்பெனியின் நிறுவன முதலாளி மரணத்தின் போது மன்னார்குடியில் மலர் அஞ்சலி போடவில்லையா என்று சிலர் கேட்கலாம். அடிமைகளாக இருக்கும் போது ஆண்டைகளுக்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கத்தான் செய்யும். அது அடிமைத்தனத்திலிருந்து வரும் அவலம். அதற்காக பரிதாபப்படலாமே ஒழிய பெருமைப்படமுடியாது.

ஆகவேதான் சிங்கப்பூர் சென்று ஆறு, ஏழு வருடம் வேலை பார்த்து திரும்பும் ஒரு தொழிலாளிக்கு கடைசியில் ஏதும் மிஞ்சுவதில்லை. ஆனால் அவரிடமிருந்து எடுக்கப்பட்ட உழைப்பை வைத்து சிங்கப்பூர் முதலாளிகள் தங்களது வங்கி கணக்கை கூட்டிக் கொள்வார்கள்.

வீட்டு வேலை செய்யும் பெண்கள்,  தினக்கூலிகளாய் வாழும் தொழிலாளிகளின் கதைகளை இது வரை பார்த்து விட்டோம். அடுத்த பகுதியில் சிங்கப்பூரில் கொடிகட்டும் விபச்சாரம், சூதாட்டம், மற்றும் தொழிலாளிகளின் சமூக வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.

–    வினவு

மோடி – அருண் ஜெட்லி : திருடர்கள் ஜாக்கிரதை !

30

ட்ஜெட் வெளியான ஒரு சில நாட்களிலேயே, ரயில் நிலைய நடைமேடை கட்டணத்தை ஐந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாயாக உயர்த்தப் போவதாக அறிவித்தது, மோடி அரசு. மேலும், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாகச் சேரும் திருவிழா நேரங்களில் இக்கட்டணத்தை அதிகாரிகள் தமது மனம்போனபடி ஏற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் கூட்டம் அதிகமாகவுள்ள நாட்களில் நடக்கும் கள்ள டிக்கெட் வியாபாரத்தை, மோடி அரசு ரயில் நிலையங்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறது.

09-modi-jaitley-thieves-1இப்படியுமா பொதுமக்களைக் கொள்ளையடிக்கத் துணிவார்கள் என நீங்கள் எண்ணினால், மோடியோ அதற்கும் மேலேயும் போய் இந்திய மக்களை அதிர வைக்கிறார். ஆட்சியில் அமர்ந்தவுடன் அவரது அரசு அறிவித்த பிரீமியம் ரயில் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதன்படி, பிரீமியம் ரயில் கிளம்புவதற்கான நேரம் நெருங்க நெருங்க, அதற்கு டிக்கெட் கேட்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த ரயில்களின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துகொண்டே போகும். திருவிழா காலங்களில் ஆம்னி பஸ் முதலாளிகள் அடிக்கும் சட்டவிரோதக் கொள்ளைகூட இந்தளவிற்கு வக்கிரமாக இருப்பதில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெ விலை சரிந்தபோதெல்லாம் மோடி அரசு அதன் மீது விதிக்கப்படும் கலால் வரியை அடுத்தடுத்து உயர்த்திக் கொண்டே போனது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலையும் டீசலையும் அவற்றின் அடக்கவிலையைவிடப் பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து வாங்கித் தீர வேண்டிய கட்டாயத்திற்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டார்கள். இந்த கலால் வரி உயர்வின் மூலம் மட்டும் பட்ஜெட்டிற்கு முன்பாகவே பொதுமக்களிடமிருந்து மோடி அரசு கொள்ளையடித்த தொகை ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்.

09-modi-jaitley-thieves-2பட்ஜெட்டிலோ ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது நான்கு ரூபாய் அளவிற்குச் சாலை மேம்பாட்டு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட் வெளியான அன்றிரவே ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் கட்டண உயர்வு, வரி உயர்வு இவற்றின் மூலம் மட்டுமே இந்த ஆண்டு மைய அரசிற்குக் கிடைக்கவுள்ள கூடுதல் வருவாய் 50,000 கோடி ரூபாய். இதற்கு அப்பால் கடந்த ஆண்டில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு வழங்கப்பட்ட மானியம் 60,000 கோடி ரூபாயில் 30,000 கோடி ரூபாயை ஒரே சொடுக்கில் இந்த பட்ஜெட்டில் வெட்டி, அச்சுமையையும் மக்களின் மீது ஏற்றிவைத்துவிட்டது.

09-modi-jaitley-thieves-3வரிக்கு மேல் வரி விதித்து விவசாயிகளையும் பொதுமக்களையும் கசக்கிப் பிழிவதில் வரலாற்றில் இழிபுகழ் பெற்ற சக்கரவர்த்திகளையும் மன்னர்களையும் பாளையக்காரர்களையும் விஞ்சி நிற்கிறது, மோடி அரசு. ஊரறிந்த, உலகறிந்த கார்ப்பரேட் விசுவாசியான ப.சிதம்பரம்கூட இக்கொள்ளையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், இது ஏழைகளின் நலனைக் கருத்தில் கொள்ளாத, பெரு நிறுவனங்களுக்கும் வரி செலுத்துபவர்களுக்கும் சாதகமான பட்ஜெட்” என விமர்சித்திருக்கிறார். இந்த பட்ஜெட் ஏழைகளின் நலன்களைப் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டது என்பது மட்டுமல்ல, உள்நாட்டு தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய நிறுவனங்கள், புதுப் பணக்காரர்கள் ஆகியோரை மேலும் கொழுக்க வைப்பதற்காக மக்களின் தாலியை அறுத்திருக்கிறார், மோடி.

அடுத்த ஆண்டு பணவீக்கம் 5% சதவீதம் முதல் 6% சதவீதம் வரை இருக்கும் என வைத்துக்கொண்டால், சமூகப் பாதுகாப்புத் துறைகளில் அரசின் செலவுகள் 6% அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், மோடி அரசோ உணவு, உரம் மற்றும் எரிபொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் 10% சதவீதம் வரை வெட்டியிருப்பதோடு, சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியிலும் கணிசமாகக் கைவைத்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தை நலத் திட்டங்களுக்கு கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி 18,588 கோடி ரூபாய். அது இந்த பட்ஜெட்டில் 10,382 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 1,963 கோடியிலிருந்து 1,767 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 39,238 கோடியிலிருந்து 33,150 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அனைவருக்குக் கல்வி இயக்கத் திட்டத்திற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்பொழுது 22 சதவீத நிதி வெட்டப்பட்டு, 22,000 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் இருநூறு ரூபாய் வழங்கும் தேசிய சமூக உதவித் திட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

09-captionஉழைக்கும் மக்களின், நடுத்தர வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கும் மோடி, அதனை காப்பீடு நிறுவனங்களின் கையில் ஒப்படைத்து, அவற்றின் வருவாயையும் இலாபத்தையும் உத்தரவாதப்படுத்தியிருக்கிறார். இன்னொருபுறமோ, அடிக்கட்டுமானத் திட்டங்களை காண்டிராக்டு எடுத்துச்செய்யும் முதலாளிகள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைக் களைவதை அரசின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார். இந்த அரசு யாருக்காக வேலை செய்கிறது, யாருடைய நலனில் அக்கறை செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.

கட்டண உயர்வு, மானிய வெட்டு மட்டுமல்ல, மக்களின் மீது வரி விதிப்பதிலும் மோடி அரசு வக்கிரமான எல்லையைத் தொட்டிருப்பதை சேவை வரி உயர்வு எடுத்துக் காட்டுகிறது. தூய்மை இந்தியா என்ற பெயரில் நடந்துவரும் கூத்தைத் தொடருவதற்கும் மக்கள் மீது சேவை வரியைத் திணித்துள்ள மோடி அரசு, கார்ப்பரேட் சாமியார்கள் நடத்தும் யோகா வகுப்புகளுக்கு வரியை ரத்து செய்திருக்கிறது. செல்வந்தர்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 1,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள செல்வ வரி நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரிகளான சேவை வரி, சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றை உயர்த்தியதன் மூலம் மக்களிடமிருந்து 23,383 கோடி ரூபாயைக் கூடுதலாகக் கறந்துள்ள மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் புதுப் பணக்காரர்களுக்கும் 8,315 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது.

இந்த 8,315 கோடி ரூபாய் வரிச் சலுகை என்பது வெளியே தெரியும் முகடுதான். கட்டுக்கட்டான பட்ஜெட் கோப்புகளின் உள்ளே முதலாளி வர்க்கத்திற்கும் புதுப் பணக்காரர்களுக்கும் அளிக்கப்படும் பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகள் மறைந்துள்ளன என்பதே உண்மை. இக்கும்பல் வெளிநாடுகளிலிருந்து நாய்க்குட்டிகளை இறக்குமதி செய்துகொள்வதற்குக்கூட 250 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை அனுபவிக்கின்றனர்.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குக் குறைவாக நிதி ஒதுக்கிவிட்டு (34,699 கோடி ரூபாய்), “நாங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்கும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதில்லை” என எகத்தாளமாகப் பதில் அளித்துள்ள மோடி அரசு, மாலை நேர விருந்துகளில் அழகுப் பதுமைகளாகச் சுற்றி வரும் புதுப் பணக்கார சோம்பேறிக் கூட்டத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து தங்க, வைர நகைகளை இறக்குமதி செய்து கொள்வதற்காக 75,000 கோடி ரூபாய் சுங்க வரிச் சலுகை அளித்திருக்கிறது. இந்த 75,000 கோடி ரூபாய் வரிச் சலுகையை அனுபவிக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுள், மோடிக்கு பத்து இலட்ச ரூபாய் கோட்டு-சூட்டைப் பரிசளித்த கார்ப் நிறுவனமும் அடங்கும்.

இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள், புதுப் பணக்காரர்கள் ஆகியோரின் நலனை முன்னிறுத்தி அளிக்கப்பட்டுள்ள சுங்க வரி, கலால் வரி மற்றும் கார்ப்பரேட் வரிச் சலுகைகளால் இந்த ஆண்டு மைய அரசிற்கு ஏற்படும் வருமான இழப்பு 5,48,451 கோடி ரூபாய். கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள இழப்பு ஏறத்தாழ 42 இலட்சம் கோடி ரூபாய். அக்கும்பலுக்கு அளிக்கப்படும் இந்த அசாதாரணமான வரிச்சலுகைகள்தான் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றன.

இந்த வரிச் சலுகைகளை ஒழித்துக் கட்டாமல் பற்றாக்குறையை ஈடு செய்ய முடியாது. ஆனால், மோடி அரசோ ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமான வரிச் சலுகைகளைத் துண்டுதுண்டாக அளிப்பதற்குப் பதிலாக, அவற்றின் மீது விதிக்கப்படும் வரியை 30% சதவீதத்திலிருந்து 25% சதவீதமாகக் குறைக்கப் போவதாக அறிவித்து, வரிச் சலுகைகளை நிரந்தரமாக்கிவிட முடிவு செய்திருக்கிறது.

எட்டு சதவீதத்திற்கு மேலான பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பது என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான மூலதனம் நிதியாகவும், வங்கிக் கடனாகவும் வாரி வழங்கப்படுகிறது. அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து கடன்களைத் திரட்டிக் கொள்ள அரசே உத்தரவாதம் அளிக்கிறது. அவர்களின் இலாபத்தை உத்தரவாதப்படுத்துவதற்காகப் பழைய சட்டங்கள் கைவிடப்படுகின்றன அல்லது திருத்தப்படுகின்றன.

இதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நெருக்கடிகளின் சுமையைத் தாங்கும் இடிதாங்கிகளாக மக்கள் நிறுத்தப்படுகின்றனர். பட்ஜெட் பற்றாக்குறையை ஈடு செய்ய உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் வெட்டப்படுகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி குறைக்கப்படுகிறது. மக்களின் வரிப் பணத்தால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் நிதி முதலாளிகளுக்கு விற்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் வாராக் கடனைச் சுமக்குமாறு தள்ளப்படுகின்றன.

இந்திய ஆளுங்கும்பல் தனியார்மயம்-தாராளமயத்தைத் தொடங்கி வைத்தபொழுது, “இனி தொழிற்துறையை தனியார் முதலாளிகள் கவனித்துக் கொள்வார்கள்; சமூக நலத் திட்டங்களை அரசு கவனித்துக் கொள்ளும்” என்ற மயக்கு வார்த்தைகளை அள்ளிவீசியது. ஆனால், நடைமுறையிலோ மக்கள் போராடிப் பெற்ற அனைத்துவிதமான சலுகைகளையும், உரிமைகளையும் பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் படையல் போடும் பூசாரியாக அரசு மாறி நிற்பதைத்தான் பார்க்கிறோம். அதாவது, முதலாளி வர்க்கம் அரசின் அரவணைப்பிலும் சலுகையிலும் பாதுகாப்பிலும் காலந்தள்ளுவது முன்னைக் காட்டிலும் இப்பொழுது மிகவும் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் தனியார்மயம்-தாராளமயம் பெரும் தோல்வியைத் தழுவிவிட்டது என்பது மட்டுமல்ல, அந்த வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், தூக்கியெறியாமல் மக்களுக்கு விடிவு காலம் இல்லை என்பதும் நிரூபணமாகிவிட்டது.

– ரஹீம்
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

பட்ஜெட் : இந்தியாவைக் கொள்ளையடிப்போம் !

2

மோடி அரசின் 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, “எட்டு சதவீத வளர்ச்சியைச் சாதிக்கக்கூடிய புத்திசாலித்தனமான, புதுமையான, ஆக்கபூர்வமான பட்ஜெட்” என இந்தியத் தரகு முதலாளிகளும், ஊடகங்களும் புல்லரித்துப் போய் புகழ்ந்துள்ளன. “இந்தியாவில் அபரித வளமாக உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், தொழிற்சாலைகள் வர வேண்டும். தொழிற்சாலைகள் வர வேண்டுமென்றால் சாலை, ரயில் போக்குவரத்து, விமான சேவைகள், மின் நிலையங்கள் அடங்கிய அடிக்கட்டுமானத் துறையில் காணப்படும் தேக்கத்தை உடைக்க வேண்டும்” என்ற உபாயத்தோடு மோடி அரசு தமது பட்ஜெட்டைத் தயாரித்திருப்பதாகத் தரகு முதலாளிகளும் ஊடகங்களும் பட்ஜெட்டைப் பிரித்து மேந்து, அதில் புதைந்துள்ள வளர்ச்சியின் இரகசியத்தைக் கண்டுபிடித்துக் கூறி வருகின்றனர்.

“இதென்னடா, கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கும் கதையாக மோடியின் உபாயம் இருக்கிறது” என வாசகர்கள் கருதலாம். அப்படி “சீப்பாக” மோடியின் புத்திசாலித்தனத்தை யாரும் எடை போட்டு விடக்கூடாது என்பதற்காகவே, “இந்த பட்ஜெட்டைப் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் பொருளாதார ஞானம் இருக்க வேண்டும்” என தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர்வாள் “சீரியசாக” தலையங்கம் தீட்டி, சாதாரண வாசகர்களைத் திகிலடைய வைக்கிறார். அய்யர்வாள் குறிப்பிடும் இந்தப் பொருளாதார ஞானம் எப்படிபட்டது தெரியுமா?

08-budget-giveaways“கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரியை அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருப்பதை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அதீதமான சலுகை என வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்ற கணக்கில் விமர்சிக்கிறார்கள். ஆனால், இது சலுகையல்ல” எனக் குறிப்பிடும் வைத்தியநாத அய்யர் உள்ளிட்ட பொருளாதார புலிகள், “ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரி அதிகமாக இருக்கிறது. வரி அதிகமாக இருப்பதால்தான் வரி ஏய்ப்பும் அதிகமாக நடைபெறுகிறது. வரியைக் குறைத்துவிட்டால் வரி ஏய்ப்பும் குறைந்துவிடும் எனக் கணக்கு போட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. மேலும், வரி குறைவாக இருந்தால்தான், முதலீடு அதிகமாக வந்து வேலைவாய்ப்பும் பெருகும்” என வாதிட்டு ‘ஞானசூன்யங்களுக்கு’ விளக்கியுள்ளனர்.

வரியே இல்லாவிட்டால் வரி ஏய்ப்பே இருக்காது என்பதை இந்தப் புலிகள் அடுத்த முறை நமக்கு விளங்க வைக்கக்கூடும். அதனால்தான் என்னவோ, கார்ப்பரேட் நிறுவனங்களும் பன்னாட்டு ஏகபோக குழுமங்களும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதைக் கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது தடுப்பதற்காக முந்தைய காங்கிரசு ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பொது வரிஏய்ப்பு தடுப்புச் சட்டத்தை (General Anti Avoidance Rules) இந்த பட்ஜெட்டிலும் அமலுக்குக் கொண்டுவராமல், அதனை நடைமுறைப்படுத்துவதை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திப் போட்டிருப்பதாக அறிவித்துவிட்டது, மோடி அரசு.

பொதுப் பணத்தை, நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்களை, பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் படையல் போடுவதன் வழியாக ‘வளர்ச்சியை’க் கொண்டுவருவதுதான் குஜராத் மாடல். இதனை இந்த பட்ஜெட் வழியாக நாடு முழுவதும் காங்கிரசை விஞ்சிய வெறியோடு நடைமுறைப்படுத்தத் துணிந்திருக்கிறார், மோடி. இந்த பட்ஜெட், அடிக்கட்டுமானத் துறை வளர்ச்சி எனத் திரும்ப திரும்ப பேசுவதை நாட்டின் பொதுச் சொத்துக்களுக்கு நேரவுள்ள கேடு என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.

மோடி அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த வருமான வரிச் சலுகையின் மதிப்பு மட்டும் 62,399 கோடி ரூபாய். இதோடு, சுங்க வரி மற்றும் கலால் வரிகளில் அளிக்கப்பட்ட சலுகைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், கடந்த ஆண்டு மைய அரசுக்கு ஏற்பட்ட வரி இழப்பு 5,48,451 கோடி ரூபாய். அரசுக்குச் சேர்ந்திருக்க வேண்டிய இந்தப் பிரம்மாண்டமான தொகையில் பெரும்பகுதியைச் சுருட்டிக் கொண்டவர்கள் இந்தியத் தரகு முதலாளிகள், பன்னாட்டு ஏகபோக முதலாளிகள் மற்றும் புதுப் பணக்காரர்கள்தான். 5,48,451 கோடி ரூபாய் பெறுமான இவ்வரிச் சலுகைகள் இந்த பட்ஜெட்டிலும் தொடர்கின்றன. ஆனாலும், இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் அடிக்கட்டுமானத் துறையில் முதலீடு செய்வதற்குத் தமது பணப்பெட்டியைத் திறந்து வைக்கவில்லை. அந்தப் பொறுப்பையும் மோடி அரசே தனது கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மட்டும் மக்களின் வரிப் பணத்திலிருந்து 70,000 கோடி ரூபாய் அடிக்கட்டுமானத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டங்களில் அரசின் கூட்டாளியாக பங்கேற்கும் தனியார் முதலாளிகளுக்கு குறைந்த வட்டியில் நீண்ட காலக் கடன்களை அளிப்பதற்காக 20,000 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய முதலீட்டு நிதியமொன்றை உருவாக்கப் போவதாகவும் பட்ஜெட்டில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அடிக்கட்டுமான திட்டங்கள் அனைத்தையும் அரசு – தனியார் கூட்டின் (Public – Private Partnership) வழியாகத்தான் நிறைவேற்ற வேண்டும்; அதன் வழியாகத்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற கொள்கையில் மன்மோகன் சிங்குக்கும் மோடிக்கும் இடையே கடுகளவுகூட வேறுபாடு கிடையாது. எனினும், இத்திட்டங்களுக்கான தேவையான நிதியை, கடனை ஏற்பாடு செய்து கொடுப்பதோடு அரசு ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் இடர்ப்பாடுகள், சவால்கள் அனைத்தையும் அரசுதான் பொறுப்பேற்றுச் சமாளிக்க வேண்டும் என பட்ஜெட்டில் அறிவித்து, காங்கிரசையும் விஞ்சி நிற்கிறார் மோடி.

இந்தப் பொறுப்பினை நிறைவேற்றும் நோக்கில்தான், விவசாயிகளின் சம்மதமின்றி அவர்களின் நிலங்களை அபகரித்துக் கொள்ள வசதியாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. இதனின் தொடர்ச்சியாக காண்டிராக்டு சட்டத்திலும் திருத்தங்களைச் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது. மேலும், அடிக்கட்டுமானத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவது என்ற போர்வையில் அதில் பங்கேற்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் அனுமதிகளைப் பெறுவதற்குக் காத்திருக்கத் தேவையில்லை என்ற விதத்தில் அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களில் புதிய நடைமுறையைப் புகுத்தப் போவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவில் தயாரிப்போம்” (மேக் இன் இந்தியா) திட்டம் மூலம் இந்தியாவை உலகின் உற்பத்தி மற்றும் தொழில் கேந்திரமாக மாற்றப் போவதாகச் சவால் அடித்து வருகிறார், நரேந்திர மோடி. ஆனால், அவரது பட்ஜெட்டோ, தொழிலே தொடங்காமல், பெரிய முதலீடும் செய்யாமல், நிலம், நிலக்கரி உள்ளிட்ட இந்தியாவின் வளங்களைக் கேட்பாரற்றுக் கொள்ளையடிக்கும் வாப்பை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதாவது, “மேக் இன் இந்தியா” என்ற முகமூடி கிழிந்து, “லூட் இந்தியா” (Loot India இந்தியாவைக் கொள்ளையடிப்போம்) என்ற உண்மை அம்பலத்திற்கு வந்துவிட்டது.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கி.மீ. தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைப்பது, ஒரு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவது, ஒரு இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து மெகா மின் திட்டங்களை அமைப்பது, நகர்ப்புறங்களில் 2 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் நான்கு கோடி வீடுகளும் கட்டிக் கொடுப்பது என்பவை யாவும் பி.பி.பி. வழியாகத்தான் நிறைவேற்றப்படும் என்பதால், பொதுப் பணத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பெரும் கறி விருந்து படைக்க மோடி அரசு தயாராகி விட்டது என்றே கூறலாம்.

– திப்பு
_________________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
_________________________________

உசிலம்பட்டியில் லஞ்சம் கேட்டால் செருப்படிதான் !

2

லஞ்சத்தை தட்டிக்கேட்டால் அரசு ஊழியர் வேலையைத் தடுக்கும் குற்றமாம்! உசிலை நகராட்சி, காவல்துறை, நீதித்துறைகளின் புதிய இலக்கணம்!

டந்த 10-04-2015-ம் தேதி உசிலை பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி  துணைச்செயலாளர் தோழர் சந்திரபோஸ் மற்றும் தோழர்கள் பாண்டி, ரவி, முருகன், ஆண்டவர், ஆசை, திருமுருகன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நகராட்சி ஆணையாளரிடம் குடிநீர் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைக்குச் சென்றனர்.

நகராட்சி ஆணையர் உசிலையில் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.

‘ஆணையர் ரொம்ப கறாரானவர், குடிநீர் இணைப்புக்கு அரசு கட்டணம் ரூ 3,500- என்றால் இவர் ரூ 30,000- மட்டுமே கேட்பார்’.

ஆரோக்கியசாமின்னு பேர் வச்சிருப்பான் ஆரோக்கியமே இருக்காது! லட்சுமி-ன்னு பேரு இருக்கும் ஏழ்மைக்கு எடுத்துக்காட்டா இருக்கும். சரஸ்வதி-ன்னு பேரு இருக்கும் படிப்பு வராது. கோடீஸ்வரன்னு பேர் இருக்கும் ஆயிரத்தக்கூட கண்ணுல பார்த்திருக்க மாட்டான்.

அது மாதிரி உசிலை நகர்மன்றத்தலைவி பேரு பஞ்சம்மா. இவங்க பதவிக்கு வந்த உடனே பஞ்சம்னா என்ன? அப்படிங்கற மாதிரி காரென்ன? வீடென்ன? சொத்தென்ன? அப்படி செல்வச்செழிப்பு.

பழைய சரஸ்வதி சபதம் திரைப்படத்தில கே.ஆர்.விஜயா பிச்சைக்காரியாக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்கறப்போ, யானை மாலை போட்டு நாட்டுக்கு ராணியாகி அது பண்ற அளப்பற, அதிகாரம்…

அதுமாதிரி ஒத்த டீ யார் வாங்கி தருவா என உசிலம்பட்டி தாலுகா ஆபீஸ் முன்னாடி தொன்னாந்து கிடந்த பஞ்சம்மாளை உசிலம்பட்டி மக்கள் பெரும்பாலானோருக்கு தெரியும். அந்த பஞ்சம்மா இன்னைக்கு பதவி வந்ததும்…இது பண்ற அளப்பற, அதிகாரம்…

எருமை மாட்டுக்கு சாப்பிடுற இடம் தெரியுமா? இல்ல கக்கா(ஆய்) போற இடம் தான் தெரியுமா? எங்க புல் கெடந்தாலும் தின்னும். அதுமாதிரி இந்த நகர் மன்ற தலைவிக்கு காசு எப்படி வந்தாலும் சரிதான்.

இதுக்கு  நகராட்சி ஆணையாளரும் உடந்தை. இவரு பேரு நம்ம மக்களுக்கான விடுதலை வீரன் மருதுவின் பேரு. ஆனா மருது எதிர்த்து நின்ற ஆங்கிலேயர் மாதிரி உழைக்கும் மக்கள் பணத்தை திங்க அப்படி ஆசைப்படுறாரு.

இவருகிட்ட போய் (அதாங்க பஞ்சம்மாவோட சொம்பு ஆணையரு) குடிதண்ணீர் இணைப்பு பத்தி கேட்டா… புதிய குடிநீர் இணைப்பு சீனியாரிட்டி படிதான் கொடுப்பாராம். நல்ல விசயம். ஆனா அரசு நிர்ணயித்த ரூ 3,500-க்குப் பதில் ரூ 30,000- கொடுத்தா நீங்கதான் சீனியாரிட்டி.

குடிநீர் இணைப்புக்கு மனுகொடுத்து 7 நாளில் இணைப்பு வழங்க அரசு விதி. ஆனா ரூ 3,500- மட்டும்தான் கட்டுவேன்னு நீங்க ஒத்த கால்ல நின்னா 7 வருஷம் ஆனாலும் இணைப்பு தரமாட்டாராம். “உங்களுக்கு என்ன தெரியுமோ பார்த்துக்கோங்க” என கறாரா சொல்லிப்புட்டாரு.

அப்ப அவரு முகத்துலதான் என்ன ஒரு தேஜஸ் பொலிவு. ஊருப்பய துட்ட தின்னு வாழ்றவனுக்கு பூரா முகம் என்னவோ பொலிவாத்தான் இருக்குது.

அப்புறம் தோழர்களின் வாக்குவாதம், நகராட்சி முற்றுகையைத் தொடர்ந்து, தப்பித்து ஓடிய ஆணையர் டவுன் ஸ்டேசனில் டி.எஸ்.பி-யை வரச்செய்து வேலையை தடுப்பதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தோழர் ரவி மீது புகார் கொடுத்தார்.

usilai-protest-against-police-municipal-bureaucracyடி.எஸ்.பி.சரவணக்குமார் மிருக வைத்தியத்துக்கு வாத்தியாராவோ, டாக்டராவோ இருந்தாராம். இடையில பரீட்சை எழுதி, ‘இந்தப் பதவில நல்லா கல்லாக் கட்டலாம், அதிகாரம் பண்ணலாம்’ என இந்தத் தொழிலுக்கு வந்தவராம்.

இவரு ஆதிக்க சாதியினரின் விமலாதேவி படுகொலையில் சில லகரங்கள் கல்லாகட்டி. ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாய் வலம் வந்து தலித் மக்கள் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள், பேனர் வைக்க என அனைத்திலும் அனுமதி மறுப்பவர். இவர ஏற்கனவே வி.வி,மு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டங்களில் அம்பலப்பட்டுள்ளார்.

அதனால் மெகா கடுப்பில் இருந்த இவரும் தோழர் ரவி கொடுத்த புகார் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு ரவிமேல் மட்டும் வழக்கு பதிவு செய்தார், அரசு ஊழியர் வேலையை தடுப்பதாக.

ஆணையர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வர கூடியிருந்த மீதி தோழர்கள், “கைதுசெய்! கைதுசெய்! லஞ்சம் வாங்கும் ஆணையரை கைதுசெய்!” என முழக்கமிட்டு முற்றுகையிட்டனர்.

அப்போது ஆணையர் முகத்தில் தேஜஸ் பொலிவு எல்லாம் இல்ல. முகத்துல மலத்தை கரைச்சு ஊத்துன மாதிரி சவக்களையோடு பேயறைந்தது போல பேசாம.. நின்றார். உடனே, போலீசார் ஆணையருக்கு அபயம் அளித்து தோழர்களை கைது செய்தனர்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் டி.எஸ்.பி-யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உச்சநீதி மன்ற உத்தரவுப்படி எதிர் மனுதாரரின் மனுவையும் ஏற்று நீங்கள் ஆணையைர் மீது வழக்குப் பதிவு செய்வதுதானே சரி” எனக்கேட்க, “அதெல்லாம் முடியாது கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள்” என நகராட்சி ஆணையருக்கு சாதகமாக நடந்து கொண்டார் டி.எஸ்.பி.

நீதிமன்றத்தில் தோழர்களை ஆஜர்படுத்திய போது ம.உ.பா.மைய வழக்கறிஞர் நடராஜன், நீதிபதியிடம், “ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை பெறும் வழக்குகளில் சிறைச்சாலையில் அடைக்க வேண்டியதில்லை, வெளியில் விடலாம் என உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது” என வாதிட்டார். “வெளியில் விடாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்” என்றார்.

“காவல்துறை மீது வழக்கு தொடருங்கள்” என்றார் நீதிபதி.

“நீதித்துறை மீதும் வழக்குத் தொடரலாம்” என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது என்றார் நடராஜன்.

“வழக்கு தொடருங்கள். எதிர் கொள்வேன்” என்ற நீதிபதி சட்டத்தை மதிக்காமல் தோழர்களை சிறைக்கு அனுப்புவதே நோக்கமாக வாதத்தை நிராகரித்தார். தோழர்கள் சிறைக்கு செல்வது உறுதியானது.

ஆம்!

  • இனப்படுகொலை செய்தவர் பிரதமர்!
  • மக்கள் சொத்தை கொள்ளையடித்து முதல்வரை பின்னிருந்து இயக்குபவர் மக்கள் முதல்வர் அம்மா!
  • ஆதிக்கசாதிக்கு மட்டுமே வக்காலத்து வாங்குபவர் உசிலை எம்எல்ஏ!
  • ரோட்ல நடக்கிற கேனை, கிறுக்கு அப்பிராணிகிட்ட எல்லாம் காச புடுங்கிற நகர்மன்றத் தலைவர்! ஆணையாளர்! டிஎஸ்பி!

அப்புறம் நீதிபதி மட்டும் எந்த பக்கம் நிக்க முடியும்.

இதைத் தொடர்ந்து

  • பிழைப்புக்காக ஆந்திரமாநிலம் சென்ற 20 தமிழக கூலித் தொழிலாளர்களை நரவேட்டையாடிய ஆந்திரபோலீசைக் கண்டித்தும்!
  • உசிலம்பட்டியில் குடிநீர் இணைப்பு கேட்டதற்காக 8 விவிமு தோழர்கள் மீது பொய் வழக்கு போட்ட தமிழக போலீசைக் கண்டித்தும்!

ஒட்டுமொத்த அரசும் தன் கடமையை செய்ய மறுக்கிறது மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறிவருகிறது என்பதை வலியுறுத்தி 11.04.2015-ம் தேதியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைவகித்த உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி தனது உரையில்…

“மிகப்பெரிய அளவில் நடக்கின்ற இயற்கை வளக்கொள்ளையின் மோதலில் பலிகடாவாக ஆக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரையும் திருட்டுத்தனமான தொழிலுக்கு தள்ளிய பிழைப்புக்கு வழிகாட்டாதது தமிழகஅரசு. இதைத் திட்டமிட்டு நடத்தியது ஆந்திர போலீசும், சந்திரபாபுநாயுடு அரசும்தான். இந்தப் படுகொலை என்பது மக்களை ஆளத் தகுதியிழந்த அரசு, ஆளும்வர்க்கத்தின் வெளிப்பாடாகத்தான் நாம் பார்க்க வேண்டும்,

அடிப்படை வசதிகளுள் ஒன்றான குடிநீரை மக்களுக்கு வழங்க வக்கில்லாத உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் மருது, குடிநீர் இணைப்புக் கேட்டு சென்ற எமது தோழர்கள் 8 பேர் மீது டி.எஸ்.பி.சரவணக்குமார் உதவியுடன் கொலைமிரட்டல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் பொய்வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியுள்ளார்.

பொதுமக்களுடன் சேர்ந்து, “லஞ்சம் கொடுக்க முடியாது நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் உடனடியாக இணைப்பு வழங்குங்கள், உங்களுடைய கடைமையை நிறைவேற்றுங்கள்” என்று பலமுறை சென்று நேர்மையாக கேட்டதற்கு பணிசெய்ய மறுத்த ஆணையாளர் திட்டமிட்டு முறைகேடு செய்து விட்டு, “நாங்கள் இப்படித்தான்” என்று திமிராக நடந்து கொள்கிறார்.

லஞ்சம் வாங்கி வேலைபார்ப்பவனும் பொண்டாட்டியை கூட்டிக்கொடுத்து காசு பார்ப்பவனும் ஒன்றுதான். இந்த ஈனச்செயலை உழைக்கும் வர்க்கத்தினரும் மக்களும் வி.வி.மு தோழர்களும் செய்யமுடியாது. ‘லஞ்சம் வாங்கித்தான் வேலைபார்ப்போம்’ என்றால் நாங்கள் லஞ்சம் கொடுக்கமுடியாது. இனிமேல் உசிலம்பட்டியில் லஞ்சம் என்று கேட்டால் செருப்படிதான் கொடுப்போம்”

தோழர் தென்னரசு தனது உரையில்…

“ஒரு ஊரில் ஆடு திருடிய வழக்கில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. பின்பு அந்த வழக்கிற்கு விசாரணை செலவுக்கு ரூ. 25,000- கேட்டது போலீசு. ஆடு விலையே அவ்வளவு போகாது என்று தெரிந்து புகார் செய்தவரே சமரசமாகி பின் வாங்கினாலும் ரூ 25,000- கேட்டு நிர்ப்பந்திக்கும் போலீசின் புத்திதான் ஆந்திராவில் 20 பேரை கொலைசெய்த என்கவுண்டர் போலீசின் புத்தி.

ஒரு பிரச்சனைக்கு இரு பிரிவினரிடமும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றமே சொல்லி இருந்தும் இந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி.சரவணக்குமார், ஆணையாளருக்கு எதிராக எமது தோழர்கள் கொடுத்த புகாரை பதிய மறுக்கிறார். சட்டத்தை மீறுபவர்கள் யார் என்று மக்களே தெரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கான அதிகாரத்தை படைப்போம், ஒன்றிணைவோம்”

தேனி மாவட்ட வி.வி.மு செயலாளர் தோழர் மோகன் தனது உரையில்…

“செம்மரத்தை வெட்டி கப்பலிலும், விமானத்திலும் ஏற்றி காவல்துறையின் கண்காணிப்பில் கடத்தப்படுகிறது. கணக்கு காட்டுவதற்காக குறைந்த மரங்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை பிடித்து கணக்கு காட்டி விட்டு மற்ற வாகனங்களை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது. உழைக்கும் மக்களை பலிகடாவாக்கும் செயல்தான் இந்த போலிஎன்கவுண்டர்.

காந்தா ராவே! கூலிக்கு வந்த தொழிலாளர்களிடம் பாயும் உன் தோட்டாக்கள், குற்றத்திற்கு காரணமான அமைச்சர்கள், மாபியாக்கள் மார்பில் தோட்டாக்கள் பாயுமா? கொள்ளைக்காரர்களை தப்பிக்க விட்டு கூலிக்கு வந்தவர்களை பலியாக்குவது அப்பாவி உழைப்பாளிகளுக்குச் செய்யும் துரோகம்.

இந்த துரோகச் செயலை கண்டிக்காமல் ஹனிபா இறந்த துக்க நிகழ்ச்சிக்கு கண்ணீர்விடும் கருணாநிதி இதைப்பற்றி அழுத்தம் கொடுப்பதே இல்லை. கொள்ளைக்காரி ஜெயா இது பற்றி வாய்திறப்பதே இல்லை.

பிறகு ஏன் தி.மு.க., அ.தி.மு.க பின்னால் செல்லவேண்டும்? மக்களே சிந்திக்கவேண்டும்!

இந்த நடவடிக்கைகளுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்”

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்ட செயலாளர் லயனல் அந்தோனிராஜ் தனது உரையில்…

“கூலி தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்டதில் போலீசு,  எங்களை கற்களாலும் கத்தி கோடாரியாலும் தாக்க வந்த்தால் சுடநேர்ந்த்து என்று கூறுவது மோசடி.

உளவியல் ரீதியாக கற்களை கத்தியை கோடாரியை வைத்திருப்பவன் 200 மீட்டர் துரம் நின்று சுடக்கூடிய துப்பாக்கியை எதிர்த்து எப்படி சண்டையிட முடியும்? எப்படி துணிந்து வருவார்கள்? போலீசின் திரைக்கதையை அப்படியே வாந்தி எடுத்திருக்கின்றன பத்திரிகைகள். ஒரு சில பத்திரிகைகள் துணிந்து அம்பலப்படுத்தி உள்ளது பாராட்டுக்குரியது.

வனத்துறைக்கு செம்மர மதிப்பு தெரியும். கூலித்தொழிலாளிக்கு கூலி வாங்கி வேலை செய்வதை தவிர இதன் மதிப்பு, விற்பது, லாபம் பார்ப்பது எதுவும் தெரியாது. அனைத்தையும் செய்வது அரசும், வனத்துறையும், ஆளும் வர்க்க மாபியாக்களும்தான். மாபியாக்களின் பிரச்சனையில் பேருந்தில் பயணம் செய்த அப்பாவி கூலித்தொழிலாளர்களை அரசியல் லாபத்திற்காக குறிப்பாக இயற்கை வளக் கொள்ளையை பங்கு போடுவதில் சந்திரபாபு நாயுடு என்ற நாயுடு ஆதிக்க சாதிக்கும், ஒய்.எஸ்.ரெட்டி என்ற ரெட்டி ஆதிக்க சாதிக்கும் நடந்த அதிகார பகிர்வில் ரெட்டியை பணிய வைக்க நடந்த திட்டமிட்ட படுகொலை.

இத்தகைய படுகொலைகள் இங்கு மட்டுமல்ல. எல்லாத்துறைகளிலும் ஜனநாயக விரோதமாக நடக்கிறது. கிரானைட் கொள்ளை பிஆர்பி, தாதுமணல்கொள்ளை, வைகுண்டராஜன், ஆற்றுமணல்கொள்ளை என்று இயற்கையை வரைமுறையற்று கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு எதிராக நாம் ஒன்று திரண்டு போராடி ஆளத்தகுதியிழந்த அரசுக்கு எதிராக மாற்று அதிகாரத்தை நிறுவும்போது சரியான தீர்வு வரும்.

உச்சநீதி மன்றத்தின் உத்தரவை மதிக்காத உசிலை டிஎஸ்பி சரவணக்குமார் நகராட்சி ஆணையாளர் லஞ்ச ஊழலாளியுடன் இணைந்து பொய் வழக்கு போட்டு 8 தோழர்களை சிறையிலிட்டது லஞ்சத்திற்கு துணைபோவது என்பதோடு ஜனநாயகப் படுகொலை.

இந்த டி.எஸ்.பி வெட்னரி டாக்டர் ஆக இருந்து வந்தவர். ஒரு வேளை டாக்டராகவே இருந்திருந்தால் பல கால்நடைகளை படுகொலை செய்திருப்பார்” என்று தனது உரையை முடித்தார்.

15-04-2015-ம் தேதி அன்று வழக்கறிஞர்கள் சிறை சென்ற 8 தோழர்களை ஜாமீனில் எடுத்தார்கள். 16-04-2015ம் தேதியில் சிறைசென்ற 8 வி.வி.மு தோழர்களும் விடுவிக்கப்பட்டார்கள்.

என்னவோ நெருப்பை பொட்டலம் கட்டி வச்சுட்டா…தோழர்களை சிறைக்கு அனுப்பி்ட்டா…இது முடிவல்ல ஆரம்பம்.

இனி புதிய உற்சாகத்தோடு நகராட்சியின் லஞ்சத்திற்கு எதிராய் வீறு கொண்டெழுவோம்!

பு.ஜ செய்தியாளர்கள்,
உசிலம்பட்டி.

காக்கி விசப்பூச்சிகள் !

2

ரக்கமற்ற கொடூரர்கள், போலீஸ் சீருடை அணிந்த மிருகங்கள், வழக்கிலிருந்து தப்பிக்கும் வழி தெரிந்தவர்கள் – இவை புதுச்சேரி போலீசார் ஆறு பேரின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் கூறியுள்ள கருத்துக்கள்.

காவி விசப்பூச்சிகள்
14 வயது பள்ளிச் சிறுமிகளை வன்புணர்ச்சிக்குள்ளாக்கி, அவர்களை விபச்சாரத்திலும் தள்ளிய கொடூர மிருகங்கள்.

14 வயது பள்ளிச் சிறுமிகளை வன்புணர்ச்சிக்குள்ளாக்கி, அவர்களை விபச்சாரத்திலும் தள்ளிய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், கான்ஸ்டபிள்கள்தான் அந்தக் குற்றவாளிகள். இவர்கள் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதமே சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டனர். ஆனால் கடந்த 6 மாதங்களாக இவர்களைப் பிடிக்க முடியவில்லையென்று கதையளந்து வந்தது புதுவை போலீசு. தற்போது நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் மறுக்கவே, வேறு வழியின்றி இவர்களைத் தலைமறைவுக் குற்றவாளிகள் என்று அறிவித்து, பிடித்துக் கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு என்றும் அறிவித்திருக்கிறது, இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி.

சென்ற ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியன்று, புதுச்சேரியில் 14 வயதான இரண்டு மாணவிகள், தங்களை ஒரு கும்பல் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளியிருப்பதாகக் கூறி, குழந்தைகள் ஹெல்ப்லைன் என்ற அமைப்பிடம் தஞ்சம் புகுந்தனர். போலீசு அதிகாரிகளும் விபச்சாரத் தரகர்களும் அடங்கிய ஒரு கும்பல், தங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, வல்லுறவு கொண்டு அதனை வீடியோ எடுத்து, இணையத்தில் பரப்புவோமென மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதுடன், சக மாணவிகளையும் அழைத்து வரவைத்து, அவர்களையும் விபச்சாரத்தில் தள்ளியிருப்பதாகப் புகார் செய்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு குழந்தையும் பிறந்து அது காப்பகத்தில் இருக்கிறது.

இப்புகார் மீது போலீசு நடவடிக்கை எடுக்காததால், மகளிர் நலத்துறையிடம் அச்சிறுமிகள் புகார் செய்தனர். பின்னர் பல்வேறு அமைப்புகள் போராடின. வேறுவழியின்றி சி.பி. சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. யோக்கிய சிகாமணிகளாக சித்தரிக்கப்படும் சி.பி.சி.ஐ.டி. போலீசோ, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 15 போலீசாரின் குற்றங்களை மறைத்து, அவர்கள் விபச்சாரக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்று மட்டும் வழக்குப் பதிவு செய்தது. 15 போலீசாரின் புகைப்படங்களைச் சிறுமிகளிடம் காட்டியதாகவும், தங்களை வல்லுறவு செய்த போலீசார் என்று அவர்களில் யாரையும் அச்சிறுமிகள் அடையாளம் காட்டவில்லையென்றும் சொல்லி, குற்றவாளிகளைத் தப்பவைக்க முயன்றது. இதனை நிராகரித்த உயர்நீதிமன்றம், அடையாள அணிவகுப்பு நடத்துமாறு உத்தரவிட்டது. பிறகு, 8 போலீசாரை அச்சிறுமிகள் அடையாளம் காட்டினர். இவர்களில் 6 பேர்தான் இப்போது தலைமறைவாம்!

ஆறு பேரில் ஒருவனான ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ராஜாராமன், அந்தியூர் விஜயா வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, பின்னர் மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டவன். போலீசின் குற்றத்தை போலீசே விசாரிக்கும் இந்த நாடகத்தில் நாளை இவர்களும் விடுவிக்கப்படலாம்.

கோவையில் ஒரு மார்வாடி சிறுமியை வல்லுறவு செய்து கொன்ற ஓட்டுனருக்கு என்கவுன்டர் என்றால், இந்தக் காவல் நாய்களை என்ன செய்வது? நினைக்கவே நெஞ்சு நடுங்கும் குற்றத்தைக் கூசாமல் செய்திருக்கும் அருவருக்கத்தக்க இந்த விசப்பூச்சிகளை என்றைக்கு நசுக்குவது? கிரிமினல்களின் பிறப்பிடமான போலீசு நிலையத்தைக் காவல் நிலையம் என்றும், காக்கி உடைக் கிரிமினல்களைச் சட்டம் – ஒழுங்கின் காவலர்களென்றும், இன்னமும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்களே, அத்தகைய குற்றக் கூட்டாளிகளை என்ன செய்வது?
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

சகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் !

49
சகாயம் விசாரணை
இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புடைய கிரானைட் கொள்ளையை விசாரித்து வரும் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயம்

சகாயம் : அதிகார வர்க்க சட்டவாதப் போலி போர்வீரன்!

துரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் எனப்படும் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புடைய கிரானைட் கொள்ளையை விசாரித்து வரும் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயத்துக்கு இரண்டாவது கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுவும் வழக்கம்போல ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது கொலை மிரட்டல் வழக்கு என்னவானது என்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை. சகாயத்தைக் கிரானைட் கொள்ளைக் குற்றவாளிகள் கொலை செய்ய முயலுவதாக திருச்சி சிறைக் கைதிகள் பேசிக்கொண்டதாக அவரது குடும்பத்திற்குத் தகவல் கிடைத்ததாகவும், முறைப்படி அரசிடம் அவருக்குப் பாதுகாப்புக் கோரியதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கெல்லாம் அஞ்சாமல் அவர் துணிச்சலாகத் தனது கடமையில் கண்ணாகப் பணியாற்றுவதைப் போன்ற தோற்றம் முதலாளிய ஊடகங்களால் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், சகாயமோ கத்திமேல் நடப்பவரைப்போல “சர்க்கஸ்” காட்டுகிறார். அவர் இப்படிச் செய்வது “அஞ்சாத துணிச்சல்” என்று சொல்வதா, இல்லை அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற முட்டாள்தனமென்று சொல்வதா? விரைவிலேயே தெரிந்துவிடும்!

இதையே வேறு கோணத்திலும் பார்க்கலாம். நெல்லையில் வேளாண்துறை அதிகாரி மற்றும் வட்டாட்சியர் ஆகிய இருவர் அடுத்தடுத்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். கர்நாடகா, கோலாரில் அரசு நிர்வாகப் பணி அதிகாரி மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். கேரளாவில் இன்னொரு அதிகாரி இரு மகன்களோடு கொல்லப்பட்டார். பீகாரில் ஊழலுக்கு எதிராகப் போராடிய பொறியாளர்கள் மஞ்சுநாத் சண்முகம், சத்யேந்திர துபே ஆகியோர் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். குஜராத், ராஜஸ்தான், மராட்டியத்தில் தகவலறியும் சட்டத்தின் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டுவர முயன்ற சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் சிலரும் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இவையெல்லாம் ஒருசில எடுத்துக்காட்டுகள்தாம். உ.பி., ம.பி., அரியானாவையும் ஆந்திராவையும் சேர்த்தால் இன்னும் பல கொலைகள், தற்கொலைகள் நடந்துள்ளன. எல்லாம் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களால் (மஃபியாக்களால்), கூலிப்படைகளை வைத்து நடத்தப்பட்டவை. தமிழ்நாடு இதற்கு விதிவிலக்கு அல்ல. பாலாறு, காவிரி, தாமிரபரணி மணற்பரப்புகளில் களப் பலியானவர்களைப் பார்த்தாலே இந்த உண்மை புரியும்.

கிரானைட் கொள்ளை
இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களின் கட்டுப்பாட்டுக்குள், ஆதிக்கத்தின் கீழ் அரசு நிர்வாகம் முழுவதும் போய்விட்டது.

சகாயம் எந்த முறைகேடுகள் மீது விசாரணை நடத்துகிறாரோ அவற்றைச் செய்தவர்கள், அவர்களின் அரசியல் கூட்டாளிகள், அவர்களின் கிரிமினல் குற்றப் பின்னணிகள் பற்றிய உண்மைகள் அரசியல் அறிந்த யாரும் அறியாத இரகசியங்கள் அல்ல. மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் மட்டுமல்ல; நாடு முழுவதுமுள்ள நிலம், கடல், ஆறு, காடுகள், மலைகளில் குவிந்துள்ள கனிமங்கள், தாதுப் பொருட்கள், எரிபொருட்கள் போன்ற பொதுமக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களின் கட்டுப்பாட்டுக்குள், ஆதிக்கத்தின் கீழ் அரசு நிர்வாகம் முழுவதும் போய்விட்டது. இந்தக் கொள்ளைகளுக்குப் பாதுகாப்பாகவும் அவற்றை எதிர்த்துத் தன்னெழுச்சியாகப் போராடும் மக்களை ஒடுக்குவதாகவும் அரசுக் கட்டமைப்பு முழுவதும் மாறிவிட்டது.

நாட்டின் இந்த உண்மை நிலைமைகளோடு, சகாயம் விசாரணையில் இருந்து தொகுக்கப்பட்டிருக்கும் பின்வரும் செய்திகளைப் பொருத்திப் பாருங்கள்:

பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்களின் மோசடிக்கு மூல காரணமே அதிகாரிகள்தான் என மக்கள் பலரும் சகாயத்திடம் குற்றம்சாட்டினர். பணியில் இருக்கும் வருவாய்த் துறையினர் ஆவணங்களைத் திருத்தவும், கிரானைட் கற்களை வெட்டிப் பாதுகாக்கவும் துணை போகின்றனர். பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் வருவாய்த் துறை, டாமின் அதிகாரிகள் பி.ஆர்.பி. நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்து விடுகின்றனர். எப்படியெல்லாம் அரசு நிலத்தை மோசடி செய்யலாம் என இவர்கள்தான் பி.ஆர்.பி.க்கே யோசனை கூறுகின்றனர். அரசு நிலத்தை வளைத்துப் போடுவது எப்படி, அரசுக்கு தெரியாமல் மோசடியாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது எப்படி என கிரானைட் கொள்ளைக்கு அனைத்து வழிகளிலும் இந்த அதிகாரிகள்தான் உதவியுள்ளனர். 2012-ம் ஆண்டுவரை இதை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றனர்.

கீழையூர் அருகே ரெங்கசாமிபுரம் என்ற கிராமத்தைத் தடம் தெரியாமல் அழித்துவிட்டு, அந்த இடத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக கிடைத்த புகாரின் பேரில் அங்கு சென்று சகாயம் ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்கள் சகாயத்திடம் கூறும்போது, கிரானைட் நிறுவனங்களுக்கு நாங்கள் விரும்பி நிலங்களை கொடுக்கவில்லை. மிரட்டியதால் வேறு வழியின்றி கொடுத்துவிட்டோம். தர மறுத்தவர்களின் நிலங்களில் கற்களைக் கொட்டினர். குளங்களுக்கு நீர் செல்லும் வாய்க்கால், பாசனக் கிணறுகளிலும் மண்ணைப்போட்டு மூடிவிட்டனர். இதுபற்றி நாங்கள் அளித்த புகாரை காவல், வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த அழிவுக்கு அரசு அதிகாரிகள்தான் முக்கிய காரணம். மேலூர் தாலுகா அலுவலகத்தில் பி.ஆர்.பி. குடும்பத்தினர் பெயரில் நிலப்பட்டா மாறிவிட்டால், அதை முழுமையாகப் பாதுகாப்பது அதிகாரிகள்தான் என கிராமத்தினர் சரமாரியாக குற்றம் சாட்டியதை சகாயம் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்தப் பகுதியில் அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள் ஓய்வுக்குப் பின் கிரானைட் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து விட்டனர். எனவே அதிகாரிகள் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நீதிமன்றத்தில் இது பற்றிய விவரங்களை சமர்ப்பிப்பதாக அவர்களிடம் சகாயம் உறுதியளித்தார்.

சகாயம் விசாரணை
கிரானைட் கொள்ளை குறித்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தும் சகாயம்.

கிரானைட் முறைகேடு குறித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் விசாரணையை உளவுத்துறை போலீஸார் உன்னிப்பாக கவனித்து மேலிடத்துக்கு உடனுக்குடன் தகவல் அளித்து வருகின்றனர். மதுரையில் முதற்கட்ட விசாரணைக்கு வந்தபோது ரயிலில் அவசரப் பிரிவில் இருக்கை ஒதுக்கீடு பெற்றுத்தரவில்லை என்றும், மதுரையில் அவர் தங்கியிருந்த அறையில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், குவாரி அதிபர்களின் ஏஜெண்டுகள் விசாரணையை கண்காணிப்பதாகவும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சகாயம் மதுரையில் இறங்குவது முதல் திரும்பிச் செல்வது வரை அவரின் நடவடிக்கைகளை உளவுத்துறையினர் முழுமையாகக் கண்காணித்தனர். புகார் விவரம், அதை அளிப்பவர்களின் பின்னணி, சகாயத்தை சந்திப்பவர்கள், விசாரணைக்கு வந்து செல்லும் அதிகாரிகள், விசாரணையில் தெரிவிக்கும் தகவல்கள், அரசியல் கட்சியினர் சந்திப்பு உள்பட அனைத்து விவரங்களையும் உளவுத்துறையினர் சேகரிக்கின்றனர். இதற்காக 2 முதல் 4 உளவுப்பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டனர். குவாரிக்கு சகாயம் நேரடி ஆய்வு செய்யச் சென்ற இடங்களில் எல்லாம் உளவுத்துறையினர் கண்காணித்தனர். இவர்கள் சேகரிக்கும் தகவல்களை உடனுக்குடன் மேலிட அதிகாரிகளுக்குத் தெரிவித்தபடி இருந்தனர். இத்துடன் வருவாய்த் துறை, பொதுப்பணி, தொல்லியல், சுரங்கம் என பல்வேறு துறை அலுவலர்களும் சகாயம் விசாரணை குறித்த தகவல்களைத் தங்கள் உயரதிகாரிகளுக்குப் புள்ளி விவரங்களுடன் தெரிவித்து வருகின்றனர். அந்தந்த துறை மாவட்ட அதிகாரிகள் மூலம் துறையின் தலைமையிடத்து அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்படுகிறது.

சகாயத்திடம் பொதுமக்கள் புகார் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், பி.ஆர்.பி. தரப்பில் இருந்து வேவு பார்த்த சூப்பர்வைசர் கண்ணன், பொதுமக்களிடமும் சகாயத்திடமும் சண்டைக்கு வந்தார். குரலை உயர்த்திப் பொதுமக்கள் சொல்லும் குறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை செய்து வந்தவரை சகாயம், “உங்களிடம் நான் எதுவும் பேசவில்லை. நீங்கள் எதுவாக இருந்தாலும் முறைப்படி புகாராக எழுதி உங்கள் தரப்பு விவரத்தைச் சொல்லுங்க” என்று சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.

“சகாயம் சார்கிட்ட புகார் கொடுத்துட்டு வந்திருக்கேன். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கு” என்று புகார் கொடுத்தவர்களில் ஒருவர் சொன்னார். “இது வெறும் மலைகள் இல்லை. நாம் வாழ்ந்த வரலாற்றின் ஆவணம். அதை எப்படி அழிக்க மனசு வரும்” என்று வருத்தப்பட்டு சகாயம் பேசினார். அந்த நேரத்தில் மழைத் தூறல் ஆரம்பிக்க சகாயம் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பணியைத் தொடர்ந்தார். சகாயத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் கிரானைட் மாஃபியாக்கள், அதை முடக்கக் காத்திருக்கின்றனர். நீதிமன்றமும், மக்கள் மன்றமும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையில் சகாயத்தின் பயணம் தொடர்கிறது!”

சகாயம் விசாரணையிலிருந்து தொகுக்கப்பட்ட இந்த செய்திகளை நாட்டின் நிலைமைகளோடு பொருத்திப் பார்க்கும்போது ஒரு உண்மை தெளிவாகத் தெரிகிறது. சகாயம் கத்திமேல் நடப்பவரைப்போல “சர்க்கஸ்” தான் காட்டுகிறார்; அவர் இப்படிச் செய்வது “அஞ்சாத துணிச்சல்” என்று சொல்லமுடியாது; அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று நம்பும் “அவரது முயற்சிகள் முட்டாள்தனம்” என்றுதான் இப்போதைக்குச் சொல்லமுடியும்.

  • கிரானைட் நிறுவனங்களின் மோசடிகளுக்கு மூல காரணமே அதிகாரிகளும் போலீசும்தான்.
  • சகாயத்தின் கண் முன்பாகவே புகார் கொடுக்க வந்தவர்களை கிரானைட் நிறுவன சூப்பர்வைசர் மிரட்டுகிறார்; சுதந்திரமாகவும் பயமின்றியும் புகார்கள் பெறவும் விசாரணை அதிகாரி முயலவில்லை. குற்றவாளிகளின் அடியாளிடம் மென்மையாகப் பேசுகிறார்.
  • சகாயத்தின் விசாரணையை உளவுத்துறை போலீஸார், வருவாய்த் துறை, பொதுப்பணி, தொல்லியல், சுரங்கம் – எனப் பல்வேறு துறை அலுவலர்களும் குவாரி அதிபர்களின் ஏஜெண்டுகளும் சகாயம் விசாரணை குறித்த தகவல்களைத் திரட்டித் தமது மேலிடங்களுக்கு அனுப்புகின்றனர்.
  • மேலும், சகாயம் தனது விசாரணையை மட்டுமின்றி, குற்றவாளிகளைத் தண்டிப்பதையும் இந்த அதிகார வர்க்கத்தையும் நீதிமன்றத்தையும் கொண்டு செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்.

இதன் மூலம் அதிகார வர்க்க சட்டவாதத்துடன் நின்றுகொண்டு இன்னொரு போலிப் போர்வீரன் என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்பதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. கனிமவளக் கொள்ளைகளுக்குத் துணைநிற்கும், பாதுகாக்கும் அரசு அதிகார அமைப்புக்குள்ளேயே நின்று கொண்டு அதனைவைத்தே குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும் என்று சகாயம் நம்புகிறார். அந்த முயற்சியில் தன்னோடு ஒத்துழைக்காத அதிகாரிகளைப் பார்த்து, “ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் ஆசிரியரிடம் பெயரெழுதிக்கொடுத்து விடுவேன்” என்று எச்சரிக்கை விடுக்கும் தோரணையில் “நீதிமன்றத்திடம் அறிக்கை கொடுத்து விடுவேன்” என்று பணிவோடு மிரட்டுகிறார்.

சகாயம் விசாரணை
சகாயம் குறித்தும், அவரது விசாரணை குறித்தும் உருவாக்கப்படும் பிரமைகள்.

ஆனால், சகாயம் போன்ற இன்னொரு சட்டவாதப் போர்வீரனாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு சகாயத்துக்குச் (தமிழ் தி இந்து நாளிதழில்) சில கேள்விகள் எழுப்பியுள்ளார். அதில், முக்கியமாக நீதிமன்றங்களின் ஒத்துழைப்போடுதான் கிரானைட் கொள்ளைகளே நடந்திருக்கின்றன; அதையும் சகாயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். சகாயமோ இதைக் கவனத்தில் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியிடம் காலில் விழாத குறையாக அதிகாரிகளும் நீதிபதிகளும் நடந்து கொள்கிறார்கள். அந்தக் குற்றவாளிஅரசின் எல்லா முறைகேடுகளையும் கண்டும் காணாமல் இருப்பதோடு, அவற்றுக்கு எதிராக நியாயம் கோரிப் போடப்படும் வழக்குகளைக் அடியில்போட்டு உட்கார்ந்து கொள்ளும் இந்த நீதிமன்றங்களிடமே நீதி-நியாயம் கிடைக்கும் என்று நம்பச்சொல்லுகிறார்.

“வேறென்ன செய்ய முடியும்? வேறு மாற்று ஒன்றுமே இல்லாதபோது, சகாயம் – ஏதோ அத்திபூத்தாற் போன்று ஒரு நேர்மையான, துணிச்சலான அரசு நிர்வாகப் பணி அதிகாரி வாய்த்திருக்கிறார். முறைகேடுகளை எதிர்த்துப் போராடும் அவரது நற்பணிக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், எல்லோரையும் எல்லாவற்றையும் குறைசொல்லுவதைப் போல சகாயத்தையும் விமர்சிக்கலாமா?” என்ற கேள்வியை நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதார சிக்கலைப் புரிந்துகொள்ளாத அரசிலற்றவர்கள் எழுப்புகிறார்கள். அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை சகாயம் போன்ற தனிநபர்களின் தனிப்பட்ட நேர்மை, துணிச்சல் அல்ல. சகாயம் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்தவர் அல்ல. அரசு நிர்வாகப் பணி தேர்வில் வெற்றிபெற்று, அதற்கான முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர். அரசு நிர்வாகப் பணியின் சூட்சுமங்களையும் அதன் இன்றைய போக்குகளையும் கற்றுத் தேர்ந்தவர். தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதை அவரது சொந்த அனுபவங்களே உணர்த்தியிருக்கும். இருந்தாலும் அவ்வாறானதொரு நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார் என்றுதான் விமர்சிக்கிறோம்.

நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைக்கு எதிராக தமது சொந்த பலத்தால், மாபெரும் மக்கள் எழுச்சியும் புரட்சியுமில்லாமல் தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வு காண முடியாது. ஆனால், அவ்வாறான மாற்றுப் பாதையை கையிலெடுக்கும் நேர்மையும் துணிவுமில்லாத பல குட்டி முதலாளிய அரசியல் குழுக்களும், அறிவுஜீவிகளும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் அவ்வப்போது சகாயம், உதயகுமாரன், கேஜரிவால் போன்ற தலைமையை முன்னிறுத்தி தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகாணும் வழிமுறையின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைக்கச்சொல்லுகிறார்கள். அவசியமான, சரியான பாதையையும் தீர்வையும் நோக்கிச் சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டுவதற்குத் துணிவு கொள்வதற்குப் பதிலாக, ஒன்றுமில்லாததற்கு இதையாவது ஆதரிப்போம் என்ற மாயையில் மக்களை ஆழ்த்துகிறார்கள்.

– ஆர்.கே.
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

உ.பி.மாநிலம்: பார்ப்பன – பனியா அக்கிரகாரம் !

2

சாதி என்பது புனிதம் – தீட்டு குறித்த நம்பிக்கை மட்டுமல்ல, இத்தகைய நம்பிக்கைகளின் துணை கொண்டு சமூக மேலாதிக்கத்தை நியாயப்படுத்திக் கொள்ளும் ஒரு ஏற்பாடு. அந்த ஏற்பாட்டின் மூலமாக சமூகத்தின் மீது கட்டாயமாக வேலைப் பிரிவினையைத் திணிக்கும் ஒரு விதி. அந்த விதியின் பெயரில் உற்பத்தி சாதனங்கள் மீதான உடைமையையும், அரசியல் அதிகாரத்தையும் தம் வசம் வைத்துக் கொள்வதற்கு ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம்.

இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
“நான் பிறவி அறிவாளி. எனது வாழ்க்கையை இட ஒதுக்கீடு சீர்குலைத்து விட்டது” என்ற ஆதிக்க சாதி திமிர் பிடித்த பதாகைகளோடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

தேர்தல் ஜனநாயகத்தின் மூலமும் தொழில்மயமாக்கம் மற்றும் நகரமயமாக்கத்தின் மூலமும் சாதி என்ற நிறுவனத்தின் ஆதிக்கத்தை ஒழித்துவிட முடியும் என்பது இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோரின் கருத்து. இட ஒதுக்கீடு மற்றும் தேர்தல் வெற்றிகளின் மூலம் சாதி ஆதிக்கத்தை ஒழித்துவிட முடியும் என்பன போன்ற பல நம்பிக்கைகள் இதிலிருந்ததுதான் வளர்கின்றன.

இதனை ஜனநாயக அரசமைப்பு என்று நம்பிக் கொண்டிருப்பவர்களும் கூட, இந்த ஜனநாயக அரசு இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்தி விடவில்லை என்பதையும், சாதி உள்ளிட்ட ஜனநாயக விரோத நிறுவனங்களைப் புதுப்புது வடிவங்களில் வலுப்பெறவே செய்திருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு ஒப்புக் கொள்பவர்கள் அனைவரும் ஒத்த கருத்துள்ளவர்களோ, ஒரே முகாமைச் சேர்ந்தவர்களோ அல்ல.

தாழ்த்தப்பட்ட மக்களைப் பொருத்தவரை, தமக்கெதிரான சாதி ஆதிக்க வன்கொடுமைகள் காரணமாகவும், மதச் சிறுபான்மையினர் தமக்கெதிரான இந்துவெறித் தாக்குதல்கள் காரணமாகவும் இந்த ஜனநாயகத்தின் மீது நியாயமாகவே நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.

பார்ப்பன, பனியா, ஆதிக்க சாதியினரோ இட ஒதுக்கீட்டின் காரணமாகத் தமக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், பிறப்பின் அடிப்படையில் சலுகை வழங்கப்படும் இந்த நாட்டில் தகுதி-திறமைக்கு மதிப்பில்லை என்றும், சாதி அரசியலின் மூலம் தங்களது ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதாகவும் புலம்புகிறார்கள். இதன் காரணமாகத்தான் தங்களைப் போன்ற திறமைசாலிகள் அமெரிக்காவுக்கு ஓடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள்.

பிறப்பின் அடிப்படையில் சொத்துடைமை, கல்வி, சமூக அதிகாரம் உள்ளிட்ட பலவற்றையும் வாரிசுரிமையாகப் பெற்று அனுபவித்துக் கொண்டே, சாதி என்ற நிறுவனத்தின் பயனைத் எள்ளளவும் அனுபவிக்காதவர்கள் போலவும், சாதி அடையாளத்தைத் துறந்தவர்கள் போலவும் இவர்கள் பாவனை செய்கிறார்கள். இவர்களது முகவிலாசத்தை அம்பலப்படுத்தும் வகையிலான விவரங்களை, அண்மையில் எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை தருகிறது. (Caste and Power Elite in Allahabad, Ankita Agarwal, Jean Dreze, Aashish Gupta, EPW, Feb 7, 2015)

இந்தக் கட்டுரை உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் அதிகாரமும் செல்வாக்கும் மிக்க பதவிகளில் உள்ள 1852 நபர்களுடைய பெயர்களைத் திரட்டி, அவர்கள் எந்தெந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வு செய்திருக்கிறது. அலகாபாத் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நீதிமன்றங்கள், தொழிற்சங்கங்கள், தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் பதவியிலிருப்பவர்கள் யார் யார் என்பதை இக்கட்டுரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது.

06-job-opportunities-cartoonஉ.பி. மக்கள் தொகையில் 21% மட்டுமே உள்ள முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த ஆண்கள்தான் 75% பதவிகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. இந்த 21% க்குள்ளும், வெறும் 12% மட்டுமே உள்ள பார்ப்பன, காயஸ்தா சாதியினர்தான் 50% பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

அரசுப் பதவிகளில் மட்டுமல்ல, அலகாபாத் நகரில் உள்ள தன்னார்வக் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் 80%, பார் அசோசியேசனின் தலைமையில் 90% பேர் முன்னேறிய சாதியினர்தான் இருக்கின்றனர். பிரஸ் கிளப்பின் நிர்வாகிகளோ 100% பார்ப்பன மற்றும் காயஸ்தா சாதியினர் என்கிறது இந்த ஆய்வு. விளம்பர நிறுவன உரிமையாளர்கள் 55%, மருத்துவர்கள் 39%, மாணவர் சங்கத் தலைவர்கள் 54%, போலீசு அதிகாரிகள் 58%, ஐ.ஐ.டி. ஆசிரியர்கள் 56%, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 75%, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் 58% என்று நீள்கிறது இந்தப் பட்டியல்.

உயர் பதவிகளில் மட்டுமல்ல, வேலைவாய்ப்பு உத்திரவாதமும், நல்ல சம்பளமும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர், செக்யூரிட்டி போன்ற அதிகத் திறமை தேவைப்படாத பணிகளிலும் முன்னேறிய சாதியினர் 36% இருக்கின்றனர் என்றும், அதேநேரத்தில், கடைநிலை ஊழியர்களிலேயே கடுமையான உடலுழைப்பைக் கோருகின்ற வேலைகளில் இவர்களைக் காண முடிவதில்லை என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.

உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை அங்கே தம் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டதைப் பயன்படுத்தாதவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டும்தான். மற்ற ஆதிக்க சாதியினர் அனைவரும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டத்தை மிகவும் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, சாதிப் பட்டத்தை பயன்படுத்தாதவர் என்றாலே, அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று கருதும் நிலையே சமூகத்தில் நிலவுகிறது.

ஆனால், உத்தர பிரதேசமாக இருக்கட்டும் அல்லது பெரியார் இயக்கத்தின் காரணமாக சாதி வால் துண்டிக்கப்பட்ட தமிழகமாக இருக்கட்டும்; முன்னேறிய சாதியினரைப் பொருத்தவரை அவர்களெல்லோரும் தம்மைச் சாதி பாராட்டாதவர்கள் என்றே கூறிக்கொள்கிறார்கள். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் இவர்கள், சாதியைச் சொல்லி சலுகை பெற விரும்பாதவர்களாகவும் தங்களை சித்தரித்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் அதிகாரமும் செல்வாக்கும் மிக்க பதவிகளையும் பெருமளவில் கைப்பற்றிக் கொள்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது?

மற்ற சாதிகளில் தகுதியான நபர்கள் குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று அவர்கள் உடனே இதற்கு விளக்கமளிப்பார்கள். உண்மை அப்படியில்லை. உ.பி. மாநிலத்தின் பட்டதாரிகளில் 50% பேர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் முஸ்லிம்கள். இருந்த போதிலும் வேலைவாய்ப்பில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம், அவர்களுடைய பின்தங்கிய சமூகப் பின்புலமோ, தகுதிக்குறைவோ அல்ல. மாறாக, அவர்களை உள்ளே நுழைய விடாமல் மவுனமான முறையில் முன்னேறிய சாதியினர் காட்டும் எதிர்ப்பு.

ஏற்கெனவே அதிகாரமிக்க பதவிகளில் நிரம்பியிருக்கும் முன்னேறிய சாதியினர், ஒடுக்கப்பட்ட சாதியினரைத் தங்கள் உலகத்துக்குள் அவ்வளவு சுலபமாக அனுமதித்து விடுவதில்லை. தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கிறார்கள் என்று மட்டும் இதனை நாம் புரிந்து கொள்ளக் கூடாது. தங்களது ஆதிக்கம் தொடருவதை உத்திரவாதம் செய்து கொள்வதன் வழியாக, இந்தப் படிநிலைச் சாதி அமைப்பு குலைந்து விடாமல் பாதுகாக்கிறார்கள்.

இதனைச் சாதிப்பது முன்னேறிய சாதியினரின் சாதி ரீதியான வலைப்பின்னல். இத்தகைய சாதி அபிமானம் என்பது முன்னேறிய சாதியினருக்கு மட்டும் உரியதல்ல என்பது உண்மைதான். எனினும், ஏற்கெனவே சமூக ஆதிக்கத்தில் இருக்கும் சாதிகள் என்ற முறையில், தமது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் இவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். இந்த வலைப்பின்னல் நவீன சமுதாயத்துக்கு ஏற்ற வடிவில், சாதிச் சங்கம், கூட்டுறவு, வங்கிகள், டிரஸ்டுகள் போன்ற வடிவங்களில் இருக்கிறது.

பல சந்தர்ப்பங்களில் இது அமைப்பு என்ற ஒன்றே தனியாகத் தேவைப்படாத சுயசாதி அபிமான உள்ளுணர்வாக இருப்பதால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டைப் போல இதனை வெளிப்படையாக அடையாளம் காண முடியாது.

இந்த வலைப்பின்னலின் மூலம் முன்னேறிய சாதியினர் தங்களுடைய ஆட்களுக்கு வழங்கிக் கொள்ளும் இட ஒதுக்கீடு, ஒருவகை சங்கேத மொழியினால் ஆனது. சட்டபூர்வமான இட ஒதுக்கீட்டு ஏற்பாடு எதுவுமின்றி, தாங்கள் வகிக்கின்ற பதவி மற்றும் அதிகாரத்தின் துணையைக் கொண்டே தமது சாதியின் ஆதிக்கத்தை இவர்கள் தக்க வைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்கேற்ற, பல சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான வழிமுறைகளை இவர்கள் ஒரு கலையாகவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

மார்ச் 2011-ல் மைய அரசு வெளியிட்டுள்ள விவரப்படி, மைய அரசின் துறைச் செயலாளர்கள் 149 பேரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஒருவர்கூடக் கிடையாது. பழங்குடியினத்தவர் 2 பேர். கூடுதல் செயலர்கள் 108 பேரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர் தலா 2 பேர் மட்டும்தான்.

நாடு முழுவதும் உள்ள மையப் பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 43.5% நிரப்பப்படவில்லை. சட்டப்படி இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் அரசு வேலைவாய்ப்புகளிலேயே இதனை அவர்களால் சாதிக்க முடிகிறது என்றால், தனியார் துறையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

தனியார் நிறுவனங்களில் பதவியிலிருக்கும் முன்னேறிய சாதியினர், வேலைக்கான விண்ணப்பப் படிவங்களிலிருந்தே விண்ணப்பிக்கும் நபரின் சாதியைத் தெரிந்து கொள்ள முடிவதால், மற்றவர்களுக்கு அங்கேயே கதவு மூடப்பட்டு விடுகிறது. தனியார் நிறுவனங்களில் கடைநிலை ஊழியர் அல்லாத மற்ற வேலைகளுக்கு தலித் மற்றும் முஸ்லிம்கள் விண்ணப்பித்தால் அதற்குப் பதிலே வருவதில்லை என்று கூறுகிறது இந்த ஆய்வு. உ.பி.யில் மட்டுமல்ல, ஏறத்தாழ நாடு முழுவதுமே இதுதான் நிலைமை.

உ.பி.யை விட்டுத் தள்ளுவோம். இந்தியாவின் 40 பெரிய ஊடக நிறுவனங்கள் ஒன்றில்கூட, குறிப்பிட்டு சொல்லத்தக்க பதவி எதிலும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் கூடக் கிடையாது. 71% பதவிகளில் இருப்பவர்கள் பார்ப்பனர் உள்ளிட்ட முன்னேறிய சாதியினர்தான் என்கிறது 2006-ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.

ஆனால், உ.பி. அரசுப் பணிகளிலேயே துப்புரவுத் தொழிலாளிகளில் 40% தாழ்த்தப்பட்டவர்கள். மலம் அள்ளுவோர் 100% தாழ்த்தப்பட்டவர்கள். அலகாபாத் நகரின் ரிக்சா ஓட்டிகளில் 50% தாழ்த்தப்பட்டவர்கள். மாநகராட்சியில் இறந்து போன விலங்குகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்போர் 100% பேர் “டோம்” என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர். டோம் என்பது சாதியின் பெயராக மட்டுமின்றி, அந்தப் பணியாளர்களுக்குரிய பெயராகவே அங்கே புழங்கப்படுகிறது.

அதாவது, செத்த மாட்டைத் தூக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே செய்யவேண்டிய தொழில் என்று மிகவும் இயல்பாக இந்த ஜனநாயக சமூகத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

போலோ விளையாட்டை ராஜ்புத் சாதிக்காரர்களைத் தவிர, பிறர் விளையாடக்கூடாது என்று அந்தச் சாதியைச் சேர்ந்த தனது பள்ளி நண்பர்கள் இயல்பாகவே கருதிக் கொண்டிருந்தனர் என்றும், தன்னை விளையாட அனுமதிக்கவில்லை என்றும் ராஜஸ்தானில் தான் பெற்ற அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஒரு பத்திரிகையாளர். 2008- ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் 11 உறுப்பினர்களில் 7 பேர் பார்ப்பனர்களாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியபோது, அது தற்செயலானது என்று அலட்சியமாகப் பதிலளித்தார் தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர். அவரும் ஒரு பார்ப்பனர் என்பது இன்னொரு தற்செயல் நிகழ்வு.

இயல்பானவை அல்லது தற்செயலானவை என்று கருதப்படுவனவற்றின் பட்டியல் இதோடு முடியவில்லை. 2012-ம் ஆண்டில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் முதல் 46 கோடீசுவர தொழிலதிபர்களில், 28 பேர் பனியா, மார்வாரி சாதிகளைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பார்சி, சிந்தி, பார்ப்பனர்கள். ஒரு சிலர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். முஸ்லிம் ஒருவர். தாழ்த்தப்பட்டோர் யாரும் இல்லை. இந்தியாவின் முதல் பத்து கோடீசுவரர்களில் 8 பேர் பனியாக்கள்.

தனியார்துறை, பொதுத்துறை ஆகிய இரண்டையும் சேர்ந்த முதல் 1000 இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுடைய மொத்த இயக்குநர்களின் (போர்டு உறுப்பினர்களின்) எண்ணிக்கை 9052. இவர்களில் பார்ப்பனர்கள் 4037, வைசியர்கள் 4167, சத்திரியர்கள் 43, பிறர் 137, பிற்படுத்தப்பட்டோர் 346, தாழ்த்தப்பட்டோர் 319 பேர். அதாவது 93% பேர் முன்னேறிய சாதியினர்.

கார்ப்பரேட் நிறுவனங்களை நிர்வாகம் செய்வதற்கு நியமிக்கப்படும் தொழில்முறை இயக்குநர்களிலும் ஆகப் பெரும்பான்மையினர் பார்ப்பனர்களாகவும் பனியாக்களாகவும் இருப்பதை வாரிசுரிமை, தற்செயல், திறமை என்பன போன்ற பல சொற்கள் மூலம் அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், சாதியை ஒரு மூடுண்ட வர்க்கமாக அவர்கள் பேணுகிறார்கள் என்பதே உண்மை.

தரகு முதலாளிகளாகவும், அதிகார வர்க்கமாகவும் தங்கள் சாதிக்காரர்களே தொடர்ந்து நீடிக்கும்போது மட்டும்தான், தமது வர்க்க நலனையும் ஆதிக்கத்தையும், (அதாவது தேசிய நலனை) பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர்களுடைய உள்ளுணர்ச்சியே அவர்களுக்குச் சோல்கிறது. அர்ச்சகனாகப் பார்ப்பான் மட்டுமே இருக்க வேண்டும் என்பது தங்களுடைய நலனுக்காக செய்யப்பட்ட ஏற்பாடல்ல, கோயிலின் நலன் கருதியும் சமூகத்தின் நலன் கருதியும் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு என்று பார்ப்பனர்கள் கூறும் விளக்கத்தைப் போன்றதுதான் இது.

இது புரிந்து கொள்ளக் கடினமான விடயமல்ல. தாங்கள் வாடகைக்குக் குடியிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில், ஒரு தாழ்த்தப்பட்டவரோ முஸ்லிமோ குடியமர்ந்து விடக்கூடாது என்று எண்ணும் ஆதிக்க சாதி மனோபாவம், தனது அலுவலகத்தில் தனக்குச் சமமான ஒரு பதவியில் அவர்கள் அமர்வதை சகித்துக் கொள்ளுமா? தன்னுடைய தொழிலில் ஒரு பங்குதாரராகவோ, இயக்குநர் குழுமத்தில் ஒரு இயக்குநராகவோ அவர்களைச் சேர்த்துக் கொள்ளுமா?

இந்தச் சாதிய மனோபாவம் பழமைவாதக் கட்டுப்பெட்டித்தனமல்ல. தமது வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு பார்ப்பன, பனியா ஆதிக்க சக்திகள் நடத்தும் அழுகுணி ஆட்டம். இட ஒதுக்கீட்டுக் கொள்கை தவறு என்றும், தகுதி – திறமை – போட்டி அடிப்படையிலான சந்தைப் பொருளாதாரம்தான் வேலை வாய்ப்புகளைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் சமூகத்துக்கு உபதேசம் செய்யும் இந்த யோக்கியர்கள், எல்லா இடங்களிலும் புழக்கடை வழியாகத் தம் சாதிக்காரனை நுழைத்து போட்டியையும் திறமையையும் முறியடிக்கிறார்கள்.

சமத்துவம் கிடையாது, சமூகம் முழுமைக்கும் பொதுவான ஒரு நீதியோ விதியோ கிடையாது – என்பதுதான் சாதியமைப்பின் விதி. ஜனநாயக விழுமியங்களின்படி இது ஒரு முறைகேடு, ஊழல். அந்த வகையில் தொழில்துறை, அதிகார வர்க்கம், ஊடகங்கள் உள்ளிட்ட அரசியல் பொருளாதார சமூக நிறுவனங்கள் அனைத்தையும் ஆதிக்க சாதியினர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதென்பதுதான் இந்த சமூக அமைப்பின் முதற் பெரும் ஊழல்.

சவுதாலாவுக்கு ஒரு நீதி, ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி என்ற அயோக்கியத்தனமும், குஜராத் கொலையாளிகள் விடுவிக்கப்படுவதும், மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஊடகங்கள் காவடி எடுப்பதும், உச்சநீதி மன்றம் முதல் ஊடகங்கள் வரை சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பனத் தரகன் செல்வாக்கு செலுத்துவதும், இந்த நாட்டையே அம்பானி, அதானி தேசமாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் எதிர்ப்பின்றி நிறைவேறுவதற்கும் அடிப்படையாக அமையும் ஊழல் இதுதான்.

– அஜித்
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு – உச்சநீதிமன்ற விவாதம்

6

43 ஆண்டுகளுக்கு முன்பு “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” என இயற்றப்பட்ட தமிழக அரசின் சட்டம் செல்லும் என 1972-ல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி பார்ப்பனர்கள் வாரிசுரிமைப்படி அர்ச்சகர் பணி நியமனம் கேட்பது ஒழிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவு இன்றளவும் செல்லாக்காசாக இருக்கிறது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக இன்றளவும் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2006–ல் தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் 1972 தீர்ப்பை வைத்தே முடக்கி தடை உத்தரவு பிறப்பித்தது. பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் சார்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், 2009 முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது.

கடந்த வாரம் முதல் அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை நடந்து வருகிறது. விரைவி்ல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.

அர்ச்சகர் வழக்கு உச்சநீதிமன்றத்தில்
அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை விரைவி்ல் முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு தெரிவிக்கும் மதுரை சிவாச்சாரியர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் பராசரன் தன் சொந்த வழக்காக இன்று வரை நடத்தி வருகிறார்.

“சிவாச்சாரியார்கள் இல்லை என்றால் கோவிலுக்கு போவதை நிறுத்தி விடுவேன். கருவறையில் பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டு விடும். தெய்வீக சக்தியை இழந்து விடும்.கோவிலின் புனிதம் கெட்டு விடும்.

காலம் காலமாக பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை, மரபுகளை மாற்றக்கூடாது. இவை இந்து மதத்தின் ஆணி வேர். இவையெல்லாம் பார்ப்பனர்களின் மத உரிமை, அதில் அரசு தலையிடக்கூடாது. 1972 –ல் அர்ச்சகர் நியமனத்தில் ஆகமத்தை பின்பற்றுவோம் என, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் வாக்குறுதி அளித்தார். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என அவசரச் சட்டம் இயற்றியதுடன், அது காலாவதியான பின்பும் அரசாணை மூலம் நிற வேற்ற முயலுகிறார்கள். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார் பராசரன்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் (கோப்புப் படம்)

1972 சேசம்மாள் தீர்ப்பில் உள்ள ஆகமம் பற்றிய கட்டுக்கதைகளை ஆதாரமாக வைத்து இன்றும் ஆணித்தரமாக வாதிடுகிறார், பராசரன். உச்ச நீிதிமன்றமும் அதை நிராகரிக்காமல் கரிசனத்தோடு கேட்கிறது.

அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஙர் பி.பி. ராவ் “எதிர்காலத்தில் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்றே வழக்கு தொடுக்க முடியாது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நாங்கள் பணியமர்த்தினால் இவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்! அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், செல்லா நிலையாகும். அர்ச்சகர் பணி நியமனம் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இட ஒதுக்கீடு அடிப்படையில் அதற்கு உரிய தகுதி உள்ள மாணவர்களை பொதுக் கோவிலில் நியமிப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமை ஆகும்.

1972–ல் சேசம்மாள் வழக்கு தீர்ப்பின்படி கருவறையில் தீணடாமையை ஒழிக்க வாரிசுரிமை அரச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டது. பிற சாதியினரை அர்ச்சகராக நியமித்தால் சிவாச்சாரியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

தாங்கள் தனி வகையறா என்றால் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிரூபிக்கட்டும். சைவக் கோவில்களுக்கு உரிய பாடத்திட்டம் பயிற்சி, தகுதி, வைணவக் கோவில்களுக்கு உரிய பாடத்திட்டம், பயிற்சி, தகுதி இதில் சாதி பாகுபாடு இல்லை.

அரசு வேலை வாய்ப்பில் சாதி, மத, இன வேறுபாடும் இல்லை. அரசியலமைப்பு சட்டம் சரத்து 16-ன்படி அனைவருக்கும் சமவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அர்ச்சகராக வேண்டும். பிறர் வருவதை தடுப்பது’ என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்துக்கள் அனைவரும் சமம், அனைத்து சாதியினரும் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதை ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வும் உறுதி செய்தது. இதன் மூலம் ஆலயத்தீண்டாமை ஒழிக்கப்பட்டது. அது போல் கருவறைத் தீண்டாமையை ஒழிக்க அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணியமர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளது” என வாதிட்டார். இன்றும் தொடர்ந்து வாதிட உள்ளார்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் போராட்டம்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் (கோப்புப் படம்)

அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அரங்கநாதன், சடகோபன் சார்பில் மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வேஸ், மற்றும் வழக்கறிஞர் கோவலின் பூங்குன்றன் ஆகியோர் வாதிட உள்ளனர்.

மாணவர்கள் தரப்பில் ”பார்ப்பனரை தவிர பிற சாதியினர் சாமியை தொட்டால் கருவறை தீட்டாகிவிடும் என்பது கட்டுக்கதை. பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தையும் வருமானத்தையும் நிலைநாட்டிக் கொள்ளவே பிற சாதியினர் அர்ச்சகராவதை எதிர்க்கின்றனர். தீட்டுப்பட்டுவிடும் என்பது அரசியலமைப்பு சட்டப்படி தீண்டாமை குறற்ம்.

1972–ல் பரம்பரை வாரிசுரிமைப்படி பார்பப்னர்கள் மட்டுமே அர்ச்சகர் என்பதை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் போடப்பட்டது. அச்சட்டம் செல்லும் எனக் கூறியதை ஒதுக்கி விட்டு, அதில் கூறப்பட்டுள்ள ஆகமம் தொடர்பான கருத்துக்களை, ஆன்மிகம் தொடர்பான விபரங்களை திரித்தும், பிரித்தும், பித்தலாட்டமாக நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றனர். 43 வருடங்களுக்கும் பிறகும் எங்களைத் தவிர யாரும் அர்ச்சகராகக் கூடாது என எதிர்க்கின்றனர். அர்ச்சகர்களுக்கு உரிய தகுதி அனைத்தும் பெற்று உரிய சான்றிதழ் பெற்றும் பிறப்பில் பிராமணர் இல்லை என்பதற்காக பணி நியமனம் கூடாது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

"இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது" - அர்ச்சகர் மாணவர்கள்
“இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது” – அர்ச்சகர் மாணவர்கள்

அனைத்து பொதுக்கோவில்களிலும் உரிய தகுதியுடையவர்களை அர்ச்சகராக நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. பிறப்பால், தனி வகையறா என எதிர்க்க முடியாது. இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது” என வாதிட உள்ளோம்.

  • தகவல்:
    மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், புது தில்லி