privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்உசிலம்பட்டியில் லஞ்சம் கேட்டால் செருப்படிதான் !

உசிலம்பட்டியில் லஞ்சம் கேட்டால் செருப்படிதான் !

-

லஞ்சத்தை தட்டிக்கேட்டால் அரசு ஊழியர் வேலையைத் தடுக்கும் குற்றமாம்! உசிலை நகராட்சி, காவல்துறை, நீதித்துறைகளின் புதிய இலக்கணம்!

டந்த 10-04-2015-ம் தேதி உசிலை பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி  துணைச்செயலாளர் தோழர் சந்திரபோஸ் மற்றும் தோழர்கள் பாண்டி, ரவி, முருகன், ஆண்டவர், ஆசை, திருமுருகன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நகராட்சி ஆணையாளரிடம் குடிநீர் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைக்குச் சென்றனர்.

நகராட்சி ஆணையர் உசிலையில் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.

‘ஆணையர் ரொம்ப கறாரானவர், குடிநீர் இணைப்புக்கு அரசு கட்டணம் ரூ 3,500- என்றால் இவர் ரூ 30,000- மட்டுமே கேட்பார்’.

ஆரோக்கியசாமின்னு பேர் வச்சிருப்பான் ஆரோக்கியமே இருக்காது! லட்சுமி-ன்னு பேரு இருக்கும் ஏழ்மைக்கு எடுத்துக்காட்டா இருக்கும். சரஸ்வதி-ன்னு பேரு இருக்கும் படிப்பு வராது. கோடீஸ்வரன்னு பேர் இருக்கும் ஆயிரத்தக்கூட கண்ணுல பார்த்திருக்க மாட்டான்.

அது மாதிரி உசிலை நகர்மன்றத்தலைவி பேரு பஞ்சம்மா. இவங்க பதவிக்கு வந்த உடனே பஞ்சம்னா என்ன? அப்படிங்கற மாதிரி காரென்ன? வீடென்ன? சொத்தென்ன? அப்படி செல்வச்செழிப்பு.

பழைய சரஸ்வதி சபதம் திரைப்படத்தில கே.ஆர்.விஜயா பிச்சைக்காரியாக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்கறப்போ, யானை மாலை போட்டு நாட்டுக்கு ராணியாகி அது பண்ற அளப்பற, அதிகாரம்…

அதுமாதிரி ஒத்த டீ யார் வாங்கி தருவா என உசிலம்பட்டி தாலுகா ஆபீஸ் முன்னாடி தொன்னாந்து கிடந்த பஞ்சம்மாளை உசிலம்பட்டி மக்கள் பெரும்பாலானோருக்கு தெரியும். அந்த பஞ்சம்மா இன்னைக்கு பதவி வந்ததும்…இது பண்ற அளப்பற, அதிகாரம்…

எருமை மாட்டுக்கு சாப்பிடுற இடம் தெரியுமா? இல்ல கக்கா(ஆய்) போற இடம் தான் தெரியுமா? எங்க புல் கெடந்தாலும் தின்னும். அதுமாதிரி இந்த நகர் மன்ற தலைவிக்கு காசு எப்படி வந்தாலும் சரிதான்.

இதுக்கு  நகராட்சி ஆணையாளரும் உடந்தை. இவரு பேரு நம்ம மக்களுக்கான விடுதலை வீரன் மருதுவின் பேரு. ஆனா மருது எதிர்த்து நின்ற ஆங்கிலேயர் மாதிரி உழைக்கும் மக்கள் பணத்தை திங்க அப்படி ஆசைப்படுறாரு.

இவருகிட்ட போய் (அதாங்க பஞ்சம்மாவோட சொம்பு ஆணையரு) குடிதண்ணீர் இணைப்பு பத்தி கேட்டா… புதிய குடிநீர் இணைப்பு சீனியாரிட்டி படிதான் கொடுப்பாராம். நல்ல விசயம். ஆனா அரசு நிர்ணயித்த ரூ 3,500-க்குப் பதில் ரூ 30,000- கொடுத்தா நீங்கதான் சீனியாரிட்டி.

குடிநீர் இணைப்புக்கு மனுகொடுத்து 7 நாளில் இணைப்பு வழங்க அரசு விதி. ஆனா ரூ 3,500- மட்டும்தான் கட்டுவேன்னு நீங்க ஒத்த கால்ல நின்னா 7 வருஷம் ஆனாலும் இணைப்பு தரமாட்டாராம். “உங்களுக்கு என்ன தெரியுமோ பார்த்துக்கோங்க” என கறாரா சொல்லிப்புட்டாரு.

அப்ப அவரு முகத்துலதான் என்ன ஒரு தேஜஸ் பொலிவு. ஊருப்பய துட்ட தின்னு வாழ்றவனுக்கு பூரா முகம் என்னவோ பொலிவாத்தான் இருக்குது.

அப்புறம் தோழர்களின் வாக்குவாதம், நகராட்சி முற்றுகையைத் தொடர்ந்து, தப்பித்து ஓடிய ஆணையர் டவுன் ஸ்டேசனில் டி.எஸ்.பி-யை வரச்செய்து வேலையை தடுப்பதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தோழர் ரவி மீது புகார் கொடுத்தார்.

usilai-protest-against-police-municipal-bureaucracyடி.எஸ்.பி.சரவணக்குமார் மிருக வைத்தியத்துக்கு வாத்தியாராவோ, டாக்டராவோ இருந்தாராம். இடையில பரீட்சை எழுதி, ‘இந்தப் பதவில நல்லா கல்லாக் கட்டலாம், அதிகாரம் பண்ணலாம்’ என இந்தத் தொழிலுக்கு வந்தவராம்.

இவரு ஆதிக்க சாதியினரின் விமலாதேவி படுகொலையில் சில லகரங்கள் கல்லாகட்டி. ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாய் வலம் வந்து தலித் மக்கள் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள், பேனர் வைக்க என அனைத்திலும் அனுமதி மறுப்பவர். இவர ஏற்கனவே வி.வி,மு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டங்களில் அம்பலப்பட்டுள்ளார்.

அதனால் மெகா கடுப்பில் இருந்த இவரும் தோழர் ரவி கொடுத்த புகார் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு ரவிமேல் மட்டும் வழக்கு பதிவு செய்தார், அரசு ஊழியர் வேலையை தடுப்பதாக.

ஆணையர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வர கூடியிருந்த மீதி தோழர்கள், “கைதுசெய்! கைதுசெய்! லஞ்சம் வாங்கும் ஆணையரை கைதுசெய்!” என முழக்கமிட்டு முற்றுகையிட்டனர்.

அப்போது ஆணையர் முகத்தில் தேஜஸ் பொலிவு எல்லாம் இல்ல. முகத்துல மலத்தை கரைச்சு ஊத்துன மாதிரி சவக்களையோடு பேயறைந்தது போல பேசாம.. நின்றார். உடனே, போலீசார் ஆணையருக்கு அபயம் அளித்து தோழர்களை கைது செய்தனர்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் டி.எஸ்.பி-யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உச்சநீதி மன்ற உத்தரவுப்படி எதிர் மனுதாரரின் மனுவையும் ஏற்று நீங்கள் ஆணையைர் மீது வழக்குப் பதிவு செய்வதுதானே சரி” எனக்கேட்க, “அதெல்லாம் முடியாது கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள்” என நகராட்சி ஆணையருக்கு சாதகமாக நடந்து கொண்டார் டி.எஸ்.பி.

நீதிமன்றத்தில் தோழர்களை ஆஜர்படுத்திய போது ம.உ.பா.மைய வழக்கறிஞர் நடராஜன், நீதிபதியிடம், “ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை பெறும் வழக்குகளில் சிறைச்சாலையில் அடைக்க வேண்டியதில்லை, வெளியில் விடலாம் என உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது” என வாதிட்டார். “வெளியில் விடாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்” என்றார்.

“காவல்துறை மீது வழக்கு தொடருங்கள்” என்றார் நீதிபதி.

“நீதித்துறை மீதும் வழக்குத் தொடரலாம்” என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது என்றார் நடராஜன்.

“வழக்கு தொடருங்கள். எதிர் கொள்வேன்” என்ற நீதிபதி சட்டத்தை மதிக்காமல் தோழர்களை சிறைக்கு அனுப்புவதே நோக்கமாக வாதத்தை நிராகரித்தார். தோழர்கள் சிறைக்கு செல்வது உறுதியானது.

ஆம்!

  • இனப்படுகொலை செய்தவர் பிரதமர்!
  • மக்கள் சொத்தை கொள்ளையடித்து முதல்வரை பின்னிருந்து இயக்குபவர் மக்கள் முதல்வர் அம்மா!
  • ஆதிக்கசாதிக்கு மட்டுமே வக்காலத்து வாங்குபவர் உசிலை எம்எல்ஏ!
  • ரோட்ல நடக்கிற கேனை, கிறுக்கு அப்பிராணிகிட்ட எல்லாம் காச புடுங்கிற நகர்மன்றத் தலைவர்! ஆணையாளர்! டிஎஸ்பி!

அப்புறம் நீதிபதி மட்டும் எந்த பக்கம் நிக்க முடியும்.

இதைத் தொடர்ந்து

  • பிழைப்புக்காக ஆந்திரமாநிலம் சென்ற 20 தமிழக கூலித் தொழிலாளர்களை நரவேட்டையாடிய ஆந்திரபோலீசைக் கண்டித்தும்!
  • உசிலம்பட்டியில் குடிநீர் இணைப்பு கேட்டதற்காக 8 விவிமு தோழர்கள் மீது பொய் வழக்கு போட்ட தமிழக போலீசைக் கண்டித்தும்!

ஒட்டுமொத்த அரசும் தன் கடமையை செய்ய மறுக்கிறது மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறிவருகிறது என்பதை வலியுறுத்தி 11.04.2015-ம் தேதியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைவகித்த உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி தனது உரையில்…

“மிகப்பெரிய அளவில் நடக்கின்ற இயற்கை வளக்கொள்ளையின் மோதலில் பலிகடாவாக ஆக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரையும் திருட்டுத்தனமான தொழிலுக்கு தள்ளிய பிழைப்புக்கு வழிகாட்டாதது தமிழகஅரசு. இதைத் திட்டமிட்டு நடத்தியது ஆந்திர போலீசும், சந்திரபாபுநாயுடு அரசும்தான். இந்தப் படுகொலை என்பது மக்களை ஆளத் தகுதியிழந்த அரசு, ஆளும்வர்க்கத்தின் வெளிப்பாடாகத்தான் நாம் பார்க்க வேண்டும்,

அடிப்படை வசதிகளுள் ஒன்றான குடிநீரை மக்களுக்கு வழங்க வக்கில்லாத உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் மருது, குடிநீர் இணைப்புக் கேட்டு சென்ற எமது தோழர்கள் 8 பேர் மீது டி.எஸ்.பி.சரவணக்குமார் உதவியுடன் கொலைமிரட்டல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் பொய்வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியுள்ளார்.

பொதுமக்களுடன் சேர்ந்து, “லஞ்சம் கொடுக்க முடியாது நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் உடனடியாக இணைப்பு வழங்குங்கள், உங்களுடைய கடைமையை நிறைவேற்றுங்கள்” என்று பலமுறை சென்று நேர்மையாக கேட்டதற்கு பணிசெய்ய மறுத்த ஆணையாளர் திட்டமிட்டு முறைகேடு செய்து விட்டு, “நாங்கள் இப்படித்தான்” என்று திமிராக நடந்து கொள்கிறார்.

லஞ்சம் வாங்கி வேலைபார்ப்பவனும் பொண்டாட்டியை கூட்டிக்கொடுத்து காசு பார்ப்பவனும் ஒன்றுதான். இந்த ஈனச்செயலை உழைக்கும் வர்க்கத்தினரும் மக்களும் வி.வி.மு தோழர்களும் செய்யமுடியாது. ‘லஞ்சம் வாங்கித்தான் வேலைபார்ப்போம்’ என்றால் நாங்கள் லஞ்சம் கொடுக்கமுடியாது. இனிமேல் உசிலம்பட்டியில் லஞ்சம் என்று கேட்டால் செருப்படிதான் கொடுப்போம்”

தோழர் தென்னரசு தனது உரையில்…

“ஒரு ஊரில் ஆடு திருடிய வழக்கில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. பின்பு அந்த வழக்கிற்கு விசாரணை செலவுக்கு ரூ. 25,000- கேட்டது போலீசு. ஆடு விலையே அவ்வளவு போகாது என்று தெரிந்து புகார் செய்தவரே சமரசமாகி பின் வாங்கினாலும் ரூ 25,000- கேட்டு நிர்ப்பந்திக்கும் போலீசின் புத்திதான் ஆந்திராவில் 20 பேரை கொலைசெய்த என்கவுண்டர் போலீசின் புத்தி.

ஒரு பிரச்சனைக்கு இரு பிரிவினரிடமும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றமே சொல்லி இருந்தும் இந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி.சரவணக்குமார், ஆணையாளருக்கு எதிராக எமது தோழர்கள் கொடுத்த புகாரை பதிய மறுக்கிறார். சட்டத்தை மீறுபவர்கள் யார் என்று மக்களே தெரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கான அதிகாரத்தை படைப்போம், ஒன்றிணைவோம்”

தேனி மாவட்ட வி.வி.மு செயலாளர் தோழர் மோகன் தனது உரையில்…

“செம்மரத்தை வெட்டி கப்பலிலும், விமானத்திலும் ஏற்றி காவல்துறையின் கண்காணிப்பில் கடத்தப்படுகிறது. கணக்கு காட்டுவதற்காக குறைந்த மரங்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை பிடித்து கணக்கு காட்டி விட்டு மற்ற வாகனங்களை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது. உழைக்கும் மக்களை பலிகடாவாக்கும் செயல்தான் இந்த போலிஎன்கவுண்டர்.

காந்தா ராவே! கூலிக்கு வந்த தொழிலாளர்களிடம் பாயும் உன் தோட்டாக்கள், குற்றத்திற்கு காரணமான அமைச்சர்கள், மாபியாக்கள் மார்பில் தோட்டாக்கள் பாயுமா? கொள்ளைக்காரர்களை தப்பிக்க விட்டு கூலிக்கு வந்தவர்களை பலியாக்குவது அப்பாவி உழைப்பாளிகளுக்குச் செய்யும் துரோகம்.

இந்த துரோகச் செயலை கண்டிக்காமல் ஹனிபா இறந்த துக்க நிகழ்ச்சிக்கு கண்ணீர்விடும் கருணாநிதி இதைப்பற்றி அழுத்தம் கொடுப்பதே இல்லை. கொள்ளைக்காரி ஜெயா இது பற்றி வாய்திறப்பதே இல்லை.

பிறகு ஏன் தி.மு.க., அ.தி.மு.க பின்னால் செல்லவேண்டும்? மக்களே சிந்திக்கவேண்டும்!

இந்த நடவடிக்கைகளுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்”

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்ட செயலாளர் லயனல் அந்தோனிராஜ் தனது உரையில்…

“கூலி தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்டதில் போலீசு,  எங்களை கற்களாலும் கத்தி கோடாரியாலும் தாக்க வந்த்தால் சுடநேர்ந்த்து என்று கூறுவது மோசடி.

உளவியல் ரீதியாக கற்களை கத்தியை கோடாரியை வைத்திருப்பவன் 200 மீட்டர் துரம் நின்று சுடக்கூடிய துப்பாக்கியை எதிர்த்து எப்படி சண்டையிட முடியும்? எப்படி துணிந்து வருவார்கள்? போலீசின் திரைக்கதையை அப்படியே வாந்தி எடுத்திருக்கின்றன பத்திரிகைகள். ஒரு சில பத்திரிகைகள் துணிந்து அம்பலப்படுத்தி உள்ளது பாராட்டுக்குரியது.

வனத்துறைக்கு செம்மர மதிப்பு தெரியும். கூலித்தொழிலாளிக்கு கூலி வாங்கி வேலை செய்வதை தவிர இதன் மதிப்பு, விற்பது, லாபம் பார்ப்பது எதுவும் தெரியாது. அனைத்தையும் செய்வது அரசும், வனத்துறையும், ஆளும் வர்க்க மாபியாக்களும்தான். மாபியாக்களின் பிரச்சனையில் பேருந்தில் பயணம் செய்த அப்பாவி கூலித்தொழிலாளர்களை அரசியல் லாபத்திற்காக குறிப்பாக இயற்கை வளக் கொள்ளையை பங்கு போடுவதில் சந்திரபாபு நாயுடு என்ற நாயுடு ஆதிக்க சாதிக்கும், ஒய்.எஸ்.ரெட்டி என்ற ரெட்டி ஆதிக்க சாதிக்கும் நடந்த அதிகார பகிர்வில் ரெட்டியை பணிய வைக்க நடந்த திட்டமிட்ட படுகொலை.

இத்தகைய படுகொலைகள் இங்கு மட்டுமல்ல. எல்லாத்துறைகளிலும் ஜனநாயக விரோதமாக நடக்கிறது. கிரானைட் கொள்ளை பிஆர்பி, தாதுமணல்கொள்ளை, வைகுண்டராஜன், ஆற்றுமணல்கொள்ளை என்று இயற்கையை வரைமுறையற்று கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு எதிராக நாம் ஒன்று திரண்டு போராடி ஆளத்தகுதியிழந்த அரசுக்கு எதிராக மாற்று அதிகாரத்தை நிறுவும்போது சரியான தீர்வு வரும்.

உச்சநீதி மன்றத்தின் உத்தரவை மதிக்காத உசிலை டிஎஸ்பி சரவணக்குமார் நகராட்சி ஆணையாளர் லஞ்ச ஊழலாளியுடன் இணைந்து பொய் வழக்கு போட்டு 8 தோழர்களை சிறையிலிட்டது லஞ்சத்திற்கு துணைபோவது என்பதோடு ஜனநாயகப் படுகொலை.

இந்த டி.எஸ்.பி வெட்னரி டாக்டர் ஆக இருந்து வந்தவர். ஒரு வேளை டாக்டராகவே இருந்திருந்தால் பல கால்நடைகளை படுகொலை செய்திருப்பார்” என்று தனது உரையை முடித்தார்.

15-04-2015-ம் தேதி அன்று வழக்கறிஞர்கள் சிறை சென்ற 8 தோழர்களை ஜாமீனில் எடுத்தார்கள். 16-04-2015ம் தேதியில் சிறைசென்ற 8 வி.வி.மு தோழர்களும் விடுவிக்கப்பட்டார்கள்.

என்னவோ நெருப்பை பொட்டலம் கட்டி வச்சுட்டா…தோழர்களை சிறைக்கு அனுப்பி்ட்டா…இது முடிவல்ல ஆரம்பம்.

இனி புதிய உற்சாகத்தோடு நகராட்சியின் லஞ்சத்திற்கு எதிராய் வீறு கொண்டெழுவோம்!

பு.ஜ செய்தியாளர்கள்,
உசிலம்பட்டி.

  1. செருப்பால் அடித்துவிட்டு அல்லவா சிறை சென்றிருக்க வேண்டும்.
    மனுகொடுத்து சிறை சென்றிருக்கின்றீர்களே?
    அதுவும் பெயிலில் தானே வந்துளீர்கள்.
    வெறும் பேச்சு மட்டும் தானா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க