சில நாட்களுக்கு முன் திருப்பதியிலிருந்து சென்னை வந்த என் நண்பனை சந்திக்கச் சென்றிருந்தேன். திருப்பதியிலேயே தங்கி வேலை செய்து வருபவன் என்பதால், அவனிடம் ஆந்திர அரசியல் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பது திட்டம்.
ஆனால் அவனோ தேர்தல் பற்றி பேச்செடுத்தாலே எரிச்சலாக பேசினான். ”தேர்தல் எல்லாம் சுத்த ஹம்பக் (பொய்)” என்றான்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நான் தேர்தல் புறக்கணிப்பை பற்றி பேசினால், “அதெல்லாம் தப்பு, நாம் நிச்சயம் ஓட்டுப் போட வேண்டும், பிடிக்கவில்லை என்றால், 49-ஓ போட வேண்டும். தேர்தல் ஆணையம் நேர்மையாகத் தான் இந்தியாவில் தேர்தல் நடத்துகிறது” என்பான். ஆனால் இப்பொழுது திடீரென்று எங்கிருந்து இந்த ஞானோதயம் வந்திருக்கிறது, ஏன்?
ஆந்திராவில் இந்த முறை தேர்தலில் பணம் பயங்கரமாக விளையாடி இருக்கிறது. பொதுவாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதெல்லாம் தமிழ் நாட்டில் மட்டும் தான் என்றும், அது திராவிடக் கட்சிகள் மாத்திரம் செய்யும் அசிங்கமான வேலை என்றும் நினைப்பவர்கள் உங்கள் அறியாமையை மாற்றிக் கொள்ளுங்கள்! பா.ஜ.கவுடன் புனிதக் கூட்டணி வைத்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சியும், ஜகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் ஆந்திர தேர்தல் களத்தில் பணத்தை வாரி இறைத்துள்ளன. போலி ஜனநாயகத்தையே உண்மை ஜனநாயகமாக கருதும் நடுத்தர வர்க்கம் அதில் பண நாயகம் இருந்தே தீரும் என்பதை அறியும் போது வெறுக்கிறது. இது என் நண்பனின் தேர்தல் அலர்ஜிக்கு முதல் காரணம்.
மேலும் மக்களும் பணம் வாங்கியதை பற்றி அனைவரும் வெளிப்படையாகவே பேசியபடி இருந்துள்ளனர்.
இவன் வழக்கமாக டீ குடிக்கும் டீக் கடையின் சொந்தக்காரர்,”எப்படியும் ஆந்திராவை பிரிச்ச காங்கிரஸுக்கு ஓட்டு போடக் கூடாது என நான் நினைத்தேன், ஆனால் யாருக்கு போடுவது? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கா? இல்ல தெலுங்கு தேசம் கட்சிக்கா? என குழம்பிய போது, அதிக பணம் கொடுத்த தெலுங்கு தேசம் கட்சிக்கு எங்கள் ஓட்டை போட்டு விட்டோம்” என்றிருக்கிறார்.
“எங்கள்? என்றால் எத்தனை பேர்”
“ஆமாம் தம்பி எங்கள் வீட்டில் மொத்தம் 6 ஓட்டு”
“ஏன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பணம் கொடுக்கவில்லையா?”
“உண்மையில் சொல்லணும்ன்ன தம்பி எனக்கு ஒய்.ஆஸ்.ஆர் (ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி- முன்னாள் முதல்வர்) மேலே ஆசை இருந்தது, அதனால் தான் நான் முதல்ல அவங்க கிட்டதான் 6 ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பாங்கன்னு கேட்டேன். ஓட்டுக்கு 500 ரூபா தரன்னு சொன்னாங்க, ஆனா பாருங்க தெலுங்கு தேசம் கட்சிகாரங்க ஓட்டுக்கு 1000 ரூபா தரன்னு சொல்லிட்டாங்க. நான் அப்பவும், நம்ம ஜகன் பாபு பக்கம் தான் போனேன், அவர்கள் கடைசி வரை ஓட்டுக்கு 500 தாண்டவில்லை. கடைசியில் தெலுங்கு தேசம் கட்சிக்காரங்க மொத்தமா 12,000 கையில் வைத்து சத்தியம் வாங்கி விட்டார்கள்.” என்றிருக்கிறார்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களின் சராசரி சொத்து மதிப்பு 64 கோடி ரூபாய், ஒய்எஸ்ஆர் – ஜகன்மோகன் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களின் சராசரி சொத்து ரூ 50.9 கோடிதான் என்பதையும் இத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்தியாவிலேயே வெற்றி பெற்ற எம்பிக்களின் சொத்து மதிப்பில் முதல் இடம் வகிப்பது ஆந்திராதான். எனில் சீமாந்திராவில் சாமானியர்களுக்கான ஜனநாயகம் எப்படி இருக்கும்?
தேநீர்க் கடையில் ‘பல்பு’ வாங்கி வாயடைத்துப் போன என் நண்பன் அவன் குடியிருக்கும் வீட்டு சொந்தக்காரரிடம் இதை பற்றி பேசியிருக்கிறான். அவர் அரசாங்கத்தின் வருவாய் துறையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். தேர்தல் பணிக்கு வேறு சென்று வந்தவர்.
அவரிடம் போய் ”சார் ஓட்டுக்கு காசு வாங்கி இருக்காங்க தேர்தல் கமிஷனுக்கு இதெல்லாம் தெரியாதா?” என்று வெள்ளேந்தியாகக் கேட்டிருக்கிறான்.
அவர், ”தெரியும்ப்பா. என்ன செய்ய முடியும்? அவங்களும் மனுஷங்க தானே. இதாவது பரவாயில்லை, தேர்தல் வேலைக்கு போகும் ஆபிஸருங்க அவங்க தபால் ஓட்ட 3,000 ரூபாய்க்கு வித்திருக்காங்க. இதுக்கு என்ன சொல்லுவ?” என்று அணுகுண்டை வீசியிருக்கிறார். பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதாக நண்பனுக்கு காய்ச்சலே வந்துவிட்டது. அவனைப் பொறுத்த வரை ஏழைகள்தான் பணம் வாங்கி ஜனநாயகத்தை காலி செய்கிறார்கள் என்ற ஆய்வு முடிவை அவன் சார்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இரக்கமின்றி காலி செய்து விட்டார்கள்.
”தேர்தல் அதிகாரிங்களா?”
அவர் மிக தெளிவாகவும்,உறுதியாகவும், “தேர்தல் வேலையில் ஈடுபட்ட அதிகாரிங்களே தான்” என்று சொல்லியிருக்கிறார்.
“தேர்தல் கமிஷன் ஆட்களா? அப்படிப்பட்டவங்கள எப்படி சார் தேர்தல் கமிஷன் வேலைக்கு எடுத்தாங்க” என கேட்டிருக்கிறான்.
”தேர்தல் கமிஷன் ஆட்கள் இல்லப்பா. தேர்தல் பணியில் ஈடுபட்டவங்க” என்று விளக்கியிருக்கிறார்.
என் நண்பன் தேர்தல் கமிஷன் என்பது தனியான பல ஊழியர்களை கொண்ட ஒரு துறை என்று தான் இது வரை நினைத்திருக்கிறான்.
தபால் ஓட்டுகள் எண்ணிக்கை (கோப்புப் படம்).
நான் இடையில் புகுந்து, “தேர்தல் கமிஷன் என்பது தனியாக இருந்தாலும், அதில் நாடு முழுவதும் ஒரு 1,000 பேர் வேலை செய்யலாம். ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும், அது தன் வேலைகளுக்காக அந்தந்த மாநில அரசு ஊழியர்களையும், போலிஸ் துறையையும், மத்திய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்கள் போன்றவர்களையும்தான் வேலை செய்ய அழைத்துக் கொள்ளும்” என்று விளக்கினேன். டொரண்டில் சுடச் சுட உலக/உள்ளூர் சினிமாக்களின் புத்தம் புதிய காப்பிகளை தரவிறக்கம் செய்யும் தொழில் நுட்ப கில்லியான என் நண்பனுக்கு இது தெரியவில்லை. அவன் தனியாக தேர்தல் கமிஷன் எனும் துறையில் ஆயிரக்கணக்கான நேர்மையான் அதிகாரிகள் கீழ்மட்டம் வரை வேலை செய்து தேர்தலை நேர்மையாக நடத்துவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனைப் போலவே பலரும் உள்ளனர்.
நம் அரசு அலுவலகங்களில் 100, 500 என்று லஞ்சம் வாங்குபவர்கள், பிள்ளைகளுக்கு பொறுப்பாக பாடம் சொல்லிக் கொடுக்காமல், சம்பளம் மட்டும் குறியாக வாங்கி அதை வட்டிக்கு விடும் ஆசிரியர்கள் போன்றவர்கள்தான் கூடுதல் வருமானத்துக்காக தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறவர்கள்.
பொறுமையாக கேட்ட என் நண்பன், “என் வீட்டு சொந்தக்காரரும் இதைத்தான் சொன்னார். சரி உனக்கு தபால் ஓட்டுன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்டான்?
நான் தெரியும் என்றேன். “தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள், போய் அவர்கள் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்த முடியாது என்பதால் அவர்கள் பணியிடத்தில் இருந்தபடி மேலதிகாரி ஒப்புதலுடன், தபாலில் வாக்கு செலுத்தலாம். இவை மாத்திரம் வாக்கு சீட்டு வடிவத்தில் இருக்கும்” என்றேன்.
“ஆமாம் இதுவும் என் வீட்டு ஓனர் சொல்லி தெரிந்து கொண்டேன். என் வீட்டு ஓனர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் தபால் ஓட்டுக்கள் எண்ணும் போது 200-க்கு 50 ஓட்டுக்கள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தெலுங்கு தேசம் கட்சிக்கு விழுந்த ஓட்டுக்கள். அங்கே வந்த தெலுங்கு தேசம் கட்சி ஏஜென்ட், யாரையோ அசிங்க அசிங்கமாக திட்டத் தொடங்கி விட்டாராம்”
”சரி தான். தங்கள் கட்சிக்கு வந்த ஓட்டுகள் செல்லாதவையாக இருந்தால் கோபம் வரத் தானே செய்யும். அதுவும், படித்த அரசு ஊழியர்களே செல்லாத ஓட்டுக்கள் போட்டால் நிச்சயம் கோபம் தலைக்கு ஏறும்”
“அது தான் இல்லை. அவர் அந்தந்த இடங்களில் வேலை செய்த தம் கட்சிக்காரர்களை தான் திட்டியுள்ளார்.”
“ஏன்?”
“ஒவ்வொரு அரசு அதிகாரியிடமும் போய் தனித் தனியாக விலை பேசி தபால் ஓட்டுக்களை வாங்கி இருக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு குறைந்த பட்சம் ரூ 2,000 முதல் ரூ 4,000 வரை வாங்கிக் கொண்டு அரசு ஊழியர்கள் விற்றுள்ளார்கள். பலர் ஓட்டுக்களை தெலுங்கு தேசம் கட்சிக்கு போட்டுவிட்டு, வாக்குச் சீட்டில் அதில் மேலதிகாரி கையெழுத்து வாங்கி சமர்த்தாக கொடுத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் செல்லும். சில ஊழியர்கள், விசுவாசம் அதிகமாகி, கட்சிக்காரர்களிடமே ஓட்டுச் சீட்டை கொடுத்து விட்டார்கள். ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு டிக் அடிக்க தெரிந்த கட்சிக்காரர்களுக்கு அதில் மேலதிகாரி (கெஸ்டட் ஆபிஸர் ) கையெழுத்து வாங்க வேண்டும் என்ற அறிவில்லை. அவை அனைத்தும் காசு கொடுத்தும் செல்லாதவை ஆகிவிட்டன” என்றான்.
எனக்கே கொஞ்சம் தூக்கி வாரி போட்டது. இந்த அரசு ஊழியர்கள் தான் தேர்தலை நேர்மையாக நடத்தி இருப்பார்கள் என்று நினைத்து ஜனநாயக கோவிலுக்கு ஐந்து வருடத்திற்கொரு முறை விரதமிருந்த என் நண்பனுக்கு கடவுளும் ஃபிராடு, பூசாரியும் கேடு என்ற அறிவு வந்திருப்பது ஒரு சிறு மகிழ்ச்சி.
“பாருடா உங்கள் தேர்தல் லட்சணத்த” என்று நான் சிரித்தேன்.
அவன் “அது பரவாயில்லைடா, நான் என் ஓனருகிட்ட, நீங்க ஏதும் காசு வாங்கலையான்னு கேட்டேன்” என்றான்.
“ஆமாம், அவர் எவ்வளவு வாங்கினாராம்”
வீட்டு ஓனர் ”இந்த விஷயம் எனக்கு தெரியாமலேயே நடந்திடுச்சி. தெரிஞ்சா நான் ஒரு 3,000 ரூபா தேத்தியிருப்பேன். ஆனா அடுத்தமுறை நிச்சயம் ஒரு 4000-ஆவது தேத்திடனும்” என்றிருக்கிறார்.
கோபமான என் நண்பன் அவரிடம் ”சார் நீங்களுமா இப்படி பேசுறீங்க. அவங்க எதுக்கு இவ்வளவு காசு செலவு பண்றாங்கன்னு யோசிச்சிங்களா. புது ஆந்திராவுக்கு தலை நகர் உருவாக்கணும். தலை நகர் உருவாக்குறதுன்னா, எவ்வளவு கட்டுமான வேலைகள், எவ்வளவு ரியல் எஸ்டேட், எவ்வளவு கான்டிராக்ட். கோடிகள் விளையாடும். 3,000 முதல் போட்டு கோடிகள் சம்பாதிப்பாங்க.” என்று சிறு பிரசங்கம் நடத்தியிருக்கிறான்.
அதை கேட்டு அவர் முகம் வாடி விட்டது, எதையோ யோசித்தவராக தலை குனிந்திருக்கிறார்.
என் நண்பனுக்கு ஒருவராவது திருந்தி விட்டார் என்று ஒரு மகிழ்ச்சி.
அவர் மெல்ல “நீங்க சொல்றது சரி தான் பாபு, நான் இதை யோசிக்கல. எவ்வளவு பணம், எவ்வளவு கான்டிராக்ட், பல நூறு கோடிகள் கொள்ளையடிச்சிடுவாங்க.. ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்தாதான் தான் என் தபால் ஓட்ட போடுவேன்” என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.
பிறகு என் நண்பனுக்கு போலி ஜனநாயகம் குறித்து மாங்கு மாங்குவென்று விளக்கம் கேட்கும் அவசியமில்லாமலேயே வீட்டுக்கு வெளியே இருந்த புளியமரத்தடியில் ஞானம் பிறந்தது.
இதுதான் என் நண்பன் தேர்தல் மாயையில் இருந்து விடுபட்ட கதை.
சரி, விடுங்கள். நீங்கள் ஞானம் பெற்றவரா இல்லை யானை பெற்றவரா?
ஏடறிந்த வரலாறு நெடுகத் தேடினாலும் கம்யூனிச – சோசலிச அரசியல், சித்தாந்தத்தைப் போல அவதூறுக்கு இலக்கான வேறெதையும் காண முடியாது. அதைப் போலவே தோழர் ஸ்டாலினைப் போல அவதூறுகளுக்கு இலக்கான வேறெந்த தனிநபரையும், தலைவரையும் காண முடியாது.
1990-களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியம் மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த அதிரடி ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குப் பிறகு அமெரிக்க அரசியல் சமூகவியலாளர் ஃபிரான்சிஸ் ஃபுக்குயாமா, “வரலாற்றின் முடிவைப்” பிரகடனப்படுத்தினான். பின்நவீனத்துவ ஞானோதயம் பெற்றவர்கள், தாம் முன்னறிவித்த தத்துவத்தின் முடிவும், புதிய சகாப்தத்தின் பிறப்பும் உறுதியாகி விட்டதாக குதூகலித்தனர். ஆனால் பத்தாண்டுகளுக்குள்ளாகவே, ஃபிரான்சிஸ் ஃபுக்குயுமா தனது முடிவு பொய்த்துப் போய்விட்டதாக அறிவித்து விட்டான்.
எரிந்து சாம்பலாகிப் போய்விட்டதாக எதிரிகளால் பிரச்சாரம் செய்யப்பட்டதற்கு மாறாக “ஃபீனிக்ஸ் பறவை”யைப் போல கம்யூனிச – சோசலிசமும், ஸ்டாலினும் உயிர்த்தெழுந்து விட்டார்கள்.
“புரட்சிக்குப் பிந்திய சமுதாய ஆய்வு” என்கிற பெயரில் கம்யூனிச – சோசலிச சமுதாயங்களின் தோல்வியில் இருந்த படிப்பினைகளைத் தொகுப்பதாக புறப்பட்ட முன்னாள் மார்க்சியர்கள் அனைவரும் ஃபிரான்சிஸ் ஃபுகுயுமாவின் சகபாடிகளுடைய அவதூறுகளை விழுங்கி வாந்தியெடுத்தார்கள். இவர்களால் கற்பிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை முறியடிக்கும் அனுபவ உண்மைகளோ ஏராளமாக உள்ளன.
அவற்றில் ஒன்றாக, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் சோசலிச சமுதாயத்தை நேரில் கண்டு வந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், 1951-ம் ஆண்டு சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை இப்போது மீண்டும் மறுபதிப்பாகி வெளிவந்துள்ளது. சோவியத் சோசலிச சமுதாயம், கட்சி மற்றும் தோழர் ஸ்டாலினுக்கு எதிராகப் பரப்பப்பட்டு வரும் அவதூறுகள் பலவற்றுக்கு நேரடியான மறுப்பாகவே கலைவாணரது உரை அமைந்துள்ளது.
புரட்சிக்குப் பிந்திய சமுதாயம் பற்றி ஆய்வு செய்த “அறிஞர்கள்” எல்லாம், சோவியத் சோசலிசத்தில் பெரியார், கலைவாணர் போன்றவர்கள் கண்டு சொன்ன அனுபவ உண்மைகளை அடியோடு நிராகரித்து விட்டார்கள். இந்த வகையில் இந்த “அறிஞர்கள்” அன்றைய காங்கிரசுக்காரர்களின் வழிகாட்டுதலையே பின்பற்றுகிறார்கள் என்பதைக் கலைவாணரது உரையிலிருந்தே காண முடிகிறது.
“சமீபத்திலே நான் ரஷ்யா சென்றிருந்தபோது திருச்சியிலே ஒரு மாபெரும் கூட்டத்திலே காங்கிரஸ் தலைவர்கள் ரஷ்யாவைப் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறார்கள். ‘ரஷ்யாவிலே ஒன்றும் கிடையாது. மக்கள் எல்லாம் கஷ்டப்படுவதுதான் வழக்கம். ஆனால் அங்கிருந்து வருபவர்கள் எல்லாம் அதைப் பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசுகிறார்கள். இப்பொழுது இங்கிருந்து ஒரு கோமாளி போயிருக்கிறான். அவன் வந்து என்னென்னவோ உளறப் போகிறான். அதை நீங்கள் எல்லாம் நம்ப வேண்டாம்’ என்று எச்சரித்திருக்கிறார்கள்.”
சோவியத் சோசலிச சமுதாயத்தைப் பற்றிய அணுகுமுறையிலேயே வர்க்கப் பார்வை இருப்பதை முதலில் கலைவாணர் விளக்குகிறார்.
“ரஷ்யா பற்றி எல்லா நாடுகளிலுமே அதிலும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலே ரஷ்யா என்றால் ஒரு பூதம் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அமெரிக்காவிலே பெரிய பெரிய பணக்காரர்களும் பிச்சைக்காரர்களும் வாழுகின்றனர். அங்கே ரஷ்யா என்று சொன்னவுடனேயே அப்படிப் பயம் ஏற்படுவது இயற்கை. இந்தியாவிலே ரஷ்யாவை அவ்வளவு சண்டாளர்களாக எண்ணுவதில்லை. பணக்காரர்களுக்கு அவர்களைப் பற்றிப் பயம். ஆனால் ஏழை மக்களுக்கு ஒரு நண்பன் ரஷ்யா நாடு. ஆகையினாலே பாதிப்பேர் ரஷ்யாவை விரும்புவதும், பாதிப்பேர் அந்த நாட்டில் ஒன்றுமே கிடையாது, வெறும் கட்டுப்பாடு, கலையை அனுபவிக்கத் தெரியாதவர்கள் உள்ள நாடு என்று நினைக்கிறார்கள்.”
“நான்கூட இதைப்பற்றி தெரிவதற்கு முன்னால் இப்படித்தான் எண்ணியிருந்தேன். எல்லோருக்கும் ஒரே உடை, எல்லோருக்கும் ஒரேவித சாப்பாடு, எல்லோருக்கும் ஒரேவித வீடு. அந்த நாடு எப்படித் தானிருக்கும்? அது கட்டுப்பாடுகள் நிறைந்த நாடாகத்தானிருக்கும், எல்லோரும் பயந்துதான் இருப்பார்கள். ரஷ்யாவைப் பற்றி பத்திரிகைகளும், பணக்கார்களும் பலவிதமாகக் கூறி வந்தனர். ஆனால் அங்குச் சென்று பார்த்து வந்ததும் இந்த நிலை அடியோடு மாறிவிட்டது.”
சோவியத் ஒன்றியம் ஒரு இரும்புத் திரை நாடாக இருந்தது என்றும், வெளி உலகு பற்றிச் சோவியத் மக்களுக்கு எதுவும் தெரியாதவாறும், அங்கே என்ன நடக்கிறதென்று வெளியுலக மக்கள் அறியமுடியாதவாறும் தடுக்கப்பட்டிருக்கிறது என்றும், சோசலிசத்தின் எதிரிகள் பிரச்சாரம் செய்வதுண்டு. இவற்றுக்கெல்லாம் மறுப்புரைக்கிறார், கலைவாணர்.
“இங்கே இதைச் சொல்வது ஏனென்றால், ரஷ்யாவில் சில க்ஷேமமான இடம் இருக்கும்; காரிலே ஏற்றி வைத்து, மூடிவைத்து, அந்த சுபிக்ஷமான இடத்திற்குக் கொண்டுபோய் கதவைத் திறந்து காட்டிவிட்டு, பிற இடங்களும் இம்மாதிரியே இருக்குமென்று கூறி பழையபடி கொண்டு வந்து விடுவார்கள் என்று நினைத்தோம். இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. அப்படிக் கட்டுப்பாடு அங்கே கிடையவே கிடையாது.”
“எங்கு போய் பார்க்க வேண்டுமென்றாலும் போய்ப் பாக்கலாமென்று சொன்னார்கள். முதலிலே கொஞ்ச தூரமுள்ள இடங்களுக்குக் காரிலே சென்றோம். அப்புறம் பக்கத்திலே போக வேண்டிய இடங்களுக்கு நடந்து போனோம். தெருக்கள் வழியாகவும், கடைகள் வழியாகவும் நடந்து நடந்து ஒவ்வொரு இடத்திற்கும் போய்ப் பார்த்தோம். இரும்புத்திரை போட்டிருக்கிறார்கள் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இரும்புத் திரை இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கு இரும்பு இருக்கிறது. திரையைக் காணோம்.”
சோசலிசக் கட்டுமானத்தில் மக்கள் பங்களிப்பும் உணர்வும் எவ்வளவு சிறப்பாக இருந்தது, சமுதாயம் எவ்வாறு இயங்கியது என்பதைக் கலைவாணர் வியந்து போய்ச் சொல்லுகிறார்.
“எல்லோரும் ரயிலிலே வந்து பின்பு பேசாமல் இறங்கிப் போய் விடுகிறார்கள். டிக்கட் கேட்பதில்லை; செக்கிங் கிடையாது. நாங்கள் வந்த ஏழாவது ஸ்டேஷனிலே இதைக் கண்டோம். அங்கு எங்களோடு ஒரு சினிமா டைரக்டர் வந்தார். என்ன இது, ஒருவரும் டிக்கட் கேட்கவில்லையே என்று கேட்டேன், நாங்கள் என்ன எங்கள் தேசத்தை ஏமாற்றுவோம் என்றா நினைக்கிறீர்கள்? கொஞ்சம் கூட நினைக்க வேண்டாம். இது எங்கள் அரசாங்கம். எங்கள் அரசாங்கத்தால் போடப்பட்ட ரயில்வே. அவர்கள் கொடுக்கும் சம்பளம், இதை வைத்துக் கொண்டு அவர்களை ஏமாற்றுவோமோ? அப்படியானால் உங்கள் ஊரிலே அவ்வாறு நடக்குமா (கை தட்டல்) என்று கேட்டார். நடக்குமா எனக் கேட்டால் நான் என்ன சொல்ல? முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டேன். (கை தட்டல்) வேறு வழியில்லை.”
தோழர் ஸ்டாலினை பாசிச சர்வாதிகாரி இட்லருக்கு இணை வைத்து சோசலிசத்தின் எதிரிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். அன்றைய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே சோசலிசத்தின் பிந்தைய தோல்விக்குக் காரணம் என்று அவதூறு செய்கிறார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது கட்சி சர்வாதிகாரமாகவும், கட்சி சர்வாதிகாரம் மத்தியக் குழு சர்வாதிகாரமாகவும், இதுவே தனிநபர் தலைமையின் சர்வாதிகாரமாகவும் குறுக்கப்பட்டதாக சி.பி.ஐ., சி.பி.எம்., மணியரசன் குழு உட்பட பலரும் புளுகுகின்றனர். ஆனால் தோழர் ஸ்டாலினின் கீழிருந்து தெரிவு செய்யப்பட்ட அரசியல் அமைப்பில் அனைவருக்கும் ஆயுதமேந்தும் உரிமை உட்பட எப்படிப்பட்ட ஜனநாயகம் நிலவியது என்று கலைவாணர் விளக்குகிறார்.
“எல்லா நாடுகளிலும் பட்டாளத்திற்கு ஆள் சேர்த்துத்தான் ஆக வேண்டும். ஆனால் அங்கே பட்டாளத்திற்கு ஆட்கள் சேர்க்க வேண்டியதில்லை. பொது மக்கள் என்றாலும் பட்டாளம் என்றாலும் ஒன்றேதான். ஓட்டலிலே வேலை செய்து கொண்டிருப்பவன் சண்டை என்று கேட்டவுடனே அந்தப் பாத்திரங்களைக் கீழே போட்டு, துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு செல்வான். குப்பை பெருக்குபவன் தன் கையிலுள்ளதைக் கீழே போட்டுவிட்டு துப்பாக்கியை ஏந்திச் செல்வான் தேசமே பட்டாளம்; எல்லோரும் வீரர்கள். ஒரு படைகூட அங்கில்லை.”
“பல பெரிய மியூஸியங்கள் போன்ற இடத்தைக் காப்பதற்கு மட்டும் அங்கு சில வீரர்கள் இருக்கிறார்கள். மற்ற ஆட்கள் எல்லோரும் வேலை செய்தாக வேண்டும். அந்த நாடு சுபிட்சமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விடப் பெண்கள்தான் எல்லா இடங்களிலும் வேலை செய்கிறார்கள். எந்தத் தொழிற்சாலையைப் போய்ப் பார்த்தாலும் அவர்கள் நூற்றுக்கு எழுபது பேர்களாக வேலை செய்கிறார்கள். அந்த அரசியல் அமைப்பைப் பற்றி நினைக்க ஆச்சரியமாகவே இருக்கும்.”
சோவியத் ஒன்றியத்தில் பல கட்சி ஜனநாயகம் இருக்கவில்லை. பலகட்சி ஜனநாயகத்தைப் புரட்சியின் மூலம் ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட்டிருந்தது. கம்யூனிச இலட்சியத்தை அடையும் பாதையில் இது ஒரு இடைக்கட்டம் தான். எதிர்க் கட்சியோ, பல கட்சியோ இல்லாததை இயல்பாக எடுத்துக் கொள்ளும் கலைவாணர் கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இலக்குபற்றி சோவியத் மக்கள் அறிந்திருப்பதாகச் சொல்லுகிறார்.
குருச்சேவ் – பிரஷ்னேவ் கும்பல் அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரவர்க்க முதலாளித்துவ ஆட்சியை நிறுவுவதற்கு முன்பு வரை, சோவியத் ஒன்றியத்தில் நிலவி வந்த சோசலிச சமுதாயம் எத்தகைய உன்னத அமைப்பாக இருந்தது. இதைக் கலைவாணரின் எளிமையான, சுவையான உரை மூலம் நமது மக்கள் அறிந்திட இன்னொரு வாய்ப்புக் கிட்டியுள்ளது.
– சாத்தன்
_____________________________ புதிய கலாச்சாரம், ஜனவரி 2000
_____________________________
நூல் :
கலைவாணர் கண்ட ரஷ்யா
தொகுத்தோர் : பொ.க.சாமிநாதன், க. பரமசிவன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சமீபத்தில் நடந்து முடிந்த, உலகிலேயே மிகப்பெரிய ‘ஜனநாயக’த் திருவிழாவான 16-வது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம்/வாக்களிப்புக்கு மத்தியில் ஏப்ரல் 21-ம் தேதி நீதிபதி நரசிம்ம ரெட்டி, நீதிபதி எம்.எஸ்.கே ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கி ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற அமர்வு சுண்டூர் படுகொலை வழக்கு மேல்முறையீட்டில் தனது தீர்ப்பை வழங்கியது.
ஆந்திர உயர்நீதிமன்றம்
ஆந்திர மாநிலம் சுண்டூர் கிராமத்தில் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 8 பேர், 400-க்கும் மேற்பட்ட ரெட்டி ஆதிக்க சாதி கும்பலால் துரத்தப்பட்டு, வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அக்காலத்தில் இந்தியாவையே அதிர்ச்சியுறச் செய்தது இப்படுகொலை சம்பவம்.
14 ஆண்டு கால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, 2005-ல் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், 2007-ம் ஆண்டு 56 பேரை குற்றவாளிகள் என உறுதி செய்து தண்டனை வழங்கியது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு வழக்கில், ‘கொலை நடந்த சரியான நேரம், நடந்த இடம், தாக்கியவர்களின் அடையாளம் இவற்றை முன்வைத்து குற்றத்தை சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டது’ என்று கூறி உயர்நீதிமன்றம் அவர்களை இப்போது விடுதலை செய்திருக்கிறது.
ரெட்டிகளின் ஆதிக்க சாதிவெறிக்கு ஆதாரமில்லை என்று ஒரு ரெட்டி நீதிபதி தீர்ப்பளித்திருப்பது முரண்பாடான ஒன்றல்ல. ஒருக்கால் ரெட்டிக்கு பதில் வேறு ஆதிக்க சாதி நீதிபதிகள் இருந்தாலும் இல்லையென்றாலும் நீதிமன்றங்கள் என்னவோ, பார்ப்பன ஆதிக்க சாதி வன்கொடுமையை பற்றி நின்றே தீர்ப்பளிக்கும்.
ஆந்திராவின் கடலோர மாவட்டமான குண்டூரில் உள்ள சுண்டூர் கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 5,800. அவர்களில் பாதிபேர் ரெட்டி சாதியினர்; மொத்த விவசாய நிலத்தில் பாதியை சொந்தமாக வைத்திருந்தனர். தெலகா அல்லது கப்பு சாதியினரிடம் 250 ஏக்கர் நிலமும், பார்ப்பனர்களுக்கு சொந்தமாக 100 ஏக்கரும், வைசிய சாதியினருக்கு சொந்தமாக 65 ஏக்கரும் இருந்தன.
சுண்டூர் ரயில் நிலையம்
தாழ்த்தப்பட்ட மாலா சாதியைச் சேர்ந்த நிலமற்ற விவசாய கூலிகள் மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்காக இருந்தனர். 1990-க்கு முந்தைய சில பத்து ஆண்டுகளில் கல்வி, வேலை வாய்ப்புகளில் மாலா சாதி இளைஞர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் 200 பேர் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், 15 பேர் முதுகலை பட்டம் பெற்றிருந்தனர்.
மேலும், தெனாலி-சென்னை ரயில்தடத்தில் அமைந்துள்ள சுண்டூரில் பலருக்கு ரயில்வே, தொலை தொடர்புத்துறை மற்றும் வங்கித் துறைகளில் வேலை வாய்ப்பு கிடைத்ததோடு, ரயில் மூலம் வெளியிடங்களுக்கு காலையில் போய் வேலை செய்து விட்டு மாலை திரும்பும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால், ரெட்டி ஆதிக்க சாதியினரை பொருளாதார ரீதியாக சார்ந்திருப்பது குறைந்ததோடு, கல்வி, அரசு வேலைகளில் முன்னேறவும் செய்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த பொருளாதார சுதந்திரம் ரெட்டி சாதியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்நிலையில் 1991-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி அன்று அப்போது நாக்பூரில் பட்ட மேல்படிப்பு படித்து வந்த ரவி என்ற இளைஞர், சுண்டூரின் திரைப்பட அரங்கில் முன் இருக்கையில் காலை நீட்டியிருக்கிறார். அந்த இருக்கையில் அமர்ந்திருந்த குர்ரி சீனிவாச ரெட்டி என்பவர் ரவியை சாதி பெயர் சொல்லி திட்டியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ரெட்டிக்கள், ரவியையும் அவரது அப்பாவையும் மிரட்டி இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்க விடாமல் செய்திருக்கின்றனர். ஆனால், காவல்துறையில் புகார் கொடுக்க மறுத்த ரவி குடும்பத்துக்கு மாலா சாதி சார்பாக ரூ 25 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரெட்டி மற்றும் பிற ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட மாலா சாதியினரை சமூக புறக்கணிப்பு செய்ய ஒரு கமிட்டி ஏற்படுத்திக் கொண்டனர். ஆதிக்க சாதியினரின் நிலங்களில் வேலை செய்ய அனுமதி மறுப்பு, ஊரின் ஆதிக்க சாதி பகுதிகளுக்கு வர தடை, நிலக்குத்தகை ரத்து என்று பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுத்து அம்மக்களை பணிய வைக்க முயற்சித்திருக்கின்றனர். தமது வயல்களில் வேலை செய்ய வெளி ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருக்கின்றனர்.
மாலா மக்களோ இதற்கு அடிபணியாமல் வெளியூர்களுக்கு வேலை செய்யப் போக ஆரம்பித்திருக்கின்றனர். சாதி மோதலை தடுக்க கிராமத்தில் 50 காவலர்களை கொண்ட போலீஸ் காவல்சாவடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடம்
ஜூலை 29-ம் தேதி தடை உத்தரவு நீக்கப்பட்டது. ஆகஸ்ட் 4,5 தேதிகளில் ரெட்டி சாதிக் கும்பல் ஒன்று வேலைக்கு போய்க் கொண்டிருந்த மாலா சாதியினரை தாக்கியதில் இரண்டு பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 6-ம் தேதி பக்கத்து கிராமங்களையும் சேர்ந்த ரெட்டிகளையும் திரட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றர்.
கொலைவெறித் தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பு சர்க்கிள் இன்ஸ்பெக்டரும், வேமூரு சப் இன்ஸ்பெக்டரும் 100 காவலர்களுடன் வந்து தலித்துகளை ஓடி விடும்படி எச்சரித்திருக்கின்றனர். இதைத் தவிர தாக்குதலை எதிர்கொள்ள அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தருமபுரியில் வன்னியர் சாதி வெறியைத் தூண்டி, தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வீடுகளை எரித்தது சிதைத்தது போலவே போலீசின் கண்பார்வையிலேயே கொலை வெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. போலீசும் ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்குத்தான் பாதுகாப்பாக இருக்கும் என்பது சுண்டூர் முதல் பரமக்குடி வரை அப்பட்டமான உண்மை.
டிராக்டர்களிலும், ஸ்கூட்டரிலும் வந்த கொலை வெறி ரெட்டி சாதிக் கும்பல் ஓடிக் கொண்டிருந்தவர்களை துரத்தி வெட்டிக்கொன்றது; அத்துடன் ஆத்திரம் அடங்காமல் கொல்லப்பட்டவர்களின் உடல்களை, கண்டம் துண்டமாக வெட்டி சாக்கு பைகளில் திணித்து கால்வாயில் விட்டெறிந்தது. காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணிக்குள் பட்டப்பகலில் இந்த கொலைவெறியாட்டம் நடந்திருக்கிறது. 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
படுகொலைகள் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 9-ம் தேதி இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. நாடாளுமன்ற விசாரணைக்குழு நியமிக்க வேண்டும், நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று சில உறுப்பினர்கள் குரல் எழுப்பியதோடு தனது ஜனநாயக கடமையை முடித்துக் கொண்ட பாராளுமன்றம் அடுத்த அக்கப்போர் பணிகளுக்கு நகர்ந்து விட்டது. அப்போது இந்த படுகொலைகளை கண்டித்து பேசிய பீகாரின் தலித்திய (இப்போது லோக் ஜனசக்தி கட்சி) அரசியல்வாதி ராம்விலாஸ் பாஸ்வான், குற்றவாளிகளை விடுவிக்கும் உயர்நீதி மன்ற தீர்ப்பு வெளியான நேரத்தில் பீகாரில் தலித் மக்களை கொன்று குவித்த ரண்வீர்சேனாவின் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் ஓட்டு பொறுக்கிக் கொண்டிருந்தார். இப்போதும் மோடியுடன் பல்லிளித்தவாறு போஸ் கொடுக்கிறார். தலித்தியத்தின் சாதனை இப்படித்தான் அம்பலமேறியிருக்கிறது.
இந்தப் படுகொலைகள் நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு நாடெங்கிலும் 45-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்தியாவின் 20 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பார்ப்பனிய ஆதிக்க சாதி அடிமைத்தளை இன்று வரை உடைக்கப்படாமலேயே உள்ளது.
சுண்டூர் கொலையாளிகளை கைது செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்த போது போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட அனில்குமாரின் நினைவிடம்.
சுண்டூர் படுகொலைகள் நடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1996 ஜூலையில் பீகாரில் பதோனி டோலாவில் 21 தாழ்த்தப்பட்டவர்கள் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டனர்.
1997-ம் ஆண்டு இட ஒதுக்கீடு, உயர் பதவிகளில் சில தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடம், என்று தலித்துகளுக்கு சமூகநீதி வழங்கி விட்டதாக மோசடி பிரச்சாரம் செய்யும் இந்திய ஆளும் வர்க்கம், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கே ஆர் நாராயணனை குடியரசுத் தலைவர் ஆக்கியிருந்தது. தலித் அறிவுஜீவிகளும் இதை மாபெரும் சாதனையாக கொண்டாடியிருந்தார்கள்.
ஆனால், ‘குடியரசுத் தலைவராக ஒரு தலித் நியமிக்கப்பட்டுள்ளார், இனி நாம் ஒடுக்குமுறையை செலுத்தாமல் வாழவேண்டும்’ என்று ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ‘தெரிந்திரு’க்கவில்லை. 1997 டிசம்பர் 1 அன்று இரவு 11 மணிக்கு லட்சுமண்பூர் பதே கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களான பூமிகார் சாதியினரின் குண்டர் படையான ரண்வீர் சேனா நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 58 தாழ்த்தப்பட்டவர்கள் பலியானார்கள்.
உத்தமர் வாஜ்பாயி பிரதமராக ஆன பிறகு நவம்பர் 1998-ல் போஜபூர் மாவட்டம் நகரி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த 10 மா.லெ ஆதரவாளர்களை, ரண்வீர் சேனா என்ற ஆதிக்க சாதி கூலிப்படையினர் கொன்று குவித்தனர்.
ஜூன் 2000-ல் அவுரங்கபாத் மாவட்டம் மியான்பூர் கிராமத்தில் 34 தாழ்த்தப்பட்டவர்களை ரண்வீர் சேனா குண்டர்கள் படுகொலை செய்தனர்.
லஷ்மண்பூர்-பதே படுகொலையை கே.ஆர். நாராயணன், தேசிய அவமானம் என்று சாடி கண்டனம் தெரிவித்தார். இதைத்தாண்டி ஒரு தலித் குடியரசுத் தலைவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போது பீகாரில் ஆட்சியில் இருந்த லல்லு பிரசாத் யாதவின் மனைவியான ராப்ரி தேவியின் ராஷ்ட்ரிய ஜனதா தள அரசாங்கம் ரன்வீர் சேனாவுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரணை நடத்த நீதிபதி ஆமிர்தாஸ் தலைமையிலான ஒரு ஆணையத்தை நியமித்தது.
பின்னர் 2006-இல் ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள – பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் அந்த ஆணையத்தைக் கலைத்து, அதன் விசாரணை அறிக்கையை முடக்கி வைத்தது. அந்த நிதீஷ் குமார்தான் இப்போது தேர்தலில் தலித் ஓட்டுகளை பொறுக்குவதற்காக மகாதலித் ஜிதன் ராம் மஞ்சியை முதலமைச்சர் ஆக்குவதாக சமூகநீதி நாடகம் ஆடுகிறார்.
பதனி தோலா வழக்கில் 2012-ம் ஆண்டு ஏப்ரலில் குற்றவாளிகள் 23 பேரை பாட்னா உயர்நீதி மன்றம் விடுவித்துள்ளது.
நகரி கொலையாளிகள் 11 பேரை 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் பீகார் உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது.
லஷ்மண்பூர்பதே படுகொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை, 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போலீசு தரப்பு குற்றத்தை நிரூபிக்க தவறி விட்டது எனக் கூறி உயர்நீதி மன்றம் விடுவித்தது.
மியான்பூர் வழக்கிலும் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்து குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்திரவிட்டது பாட்னா உயர்நீதி மன்றம்.
சுண்டூர் வழக்கின் 23 ஆண்டு இழுத்தடிப்பு (படம் : நன்றி The Hindu)
இந்த சமூக, அரசியல் சூழலில்தான் சுண்டூரில் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி பெறும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
கொன்று சிதைக்கப்பட்ட உடல்களை போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர் ரவிகுமார், அந்த கொடூரம் விளைவித்த மன அழுத்தத்தை சகிக்க முடியாமல் சில நாட்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரு மருத்துவருக்கு இருக்கும் குற்ற உணர்வு இங்கே காவலர்களுக்கும் நீதிபதிகளுக்கும் இல்லை என்பதோடு அது கொலை உணர்வாகவும் உரு மாறியிருக்கிறது.
கொலையாளிகளை உடனடியாக கைது செய்யும்படி கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய 22 வயதான அனில் குமார் என்ற நேரடி சாட்சியத்தை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது. தொடர்ந்த போராட்டங்களுக்குப் பிறகு 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2005-ம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்கியது.
ஆனால், கொலையாளிகளான ரெட்டி சாதியினர் நீதித்துறையிலும், அதிகார வர்க்கத்திலும், காவல்துறையிலும் தமக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை இழுத்தடிக்கவும், நீர்த்துப் போகச் செய்யவும் அனைத்து முயற்சிகளையும் செய்தனர். இந்த படுகொலைகள் நடக்கும் போது ஆந்திராவில் முதலமைச்சராக இருந்தவர் காங்கிரசு கட்சியின் ஜனார்த்தன் ரெட்டி, உள்துறை அமைச்சராக இருந்தவர் மைசூரா ரெட்டி. படுகொலைகளுக்கு ஒன்றரை மாதம் முன்புதான் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரசுக் கட்சியின் பி.வி.நரசிம்ம ராவ் என்ற பார்ப்பனர் நாட்டின் பிரதமராகியிருந்தார். அவரது தலைமையில் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் அமெரிக்க பெப்சியும், கோக்கும், டி-20 கிரிக்கெட்டும் தலை விரித்து ஆட ஆரம்பித்து நாட்டை 21-ம் நூற்றாண்டுக்குள் கொண்டு வந்து விட்ட பிறகும் சுண்டூர் படுகொலைகளுக்கும் சரி, தருமபுரி முதல் பாட்னா வரை நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடந்து வரும் பல தாக்குதல்களுக்கும் நீதி வழங்கப்படவில்லை.
வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதை எதிர்த்து மனு, அரசு வழக்கறிஞர் நக்சலைட் ஆதரவாளர் எனக் கூறி அவரை மாற்ற வேண்டும் என்று மனு, பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி பெற்ற உரிமையான வழக்கை சுண்டூர் கிராமத்தில் நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று மனு, நீதிபதி பிரபாகர் ராவ் தலித் என்பதால் அவரை மாற்ற வேண்டும் என மனு என அடுத்தடுத்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் மூலம் வழக்கிற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர், ரெட்டி ஆதிக்க சாதிவெறியர்கள். இதன் விளைவாக நீதிபதி பிரபாகர் ராவ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு அனீஸ் என்ற நீதிபதி நியமிக்கப்பட்டார்.
நீதிக்கான போராட்டத்தில் உறுதியாக நின்ற தலித் மக்கள்.
தலித் மக்களை விலைக்கு வாங்குவதற்கு பல வழிகளில் முயற்சிக்கப்பட்டது. ஆந்திர அரசும் ரெட்டிகளின் முயற்சிக்கு துணை நின்றது. சிலருக்கு வேலை வழங்குவது, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்ற முயற்சிகளின் மூலம் நீதி வேண்டும் என்ற கோரிக்கையை அவர்களை மறந்து விடச் செய்ய முயற்சித்தது அரசு. குஜராத்தில் 2002-ல் கொல்லப்பட்ட முஸ்லீம்களுக்கு நீதிக்கு பதிலாக, தனது பாணி ‘வளர்ச்சி’யை தருவதாக மோடி சொன்னது அவரது சொந்தக் கண்டுபிடிப்பு இல்லை, பார்ப்பனிய மனுதர்மத்தின் அடிப்படையே இதுதான் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், தலித் மக்கள் தமது நீதிக்கான போராட்டத்தில் உறுதியாக நின்றனர்.
தருமபுரியில் 400 வீடுகளை தீவைத்து கொளுத்தியும், ஒரு தலித் இளைஞனை துரத்தித் துரத்தி மரணத்துக்கு தள்ளியும் வன்னிய சாதி வெறியை காட்டிய ராமதாசு பிற ஆதிக்க சாதியினரையும் இணைத்து ஒரு சாதி வெறி கூட்டணியை உருவாக்க முயற்சி செய்தது போல ரெட்டிகளும், தெலகாக்களும் இணைந்து, தலித் மக்களை ஒடுக்குவதற்காக ‘அனைத்து மக்களையும் முன்னேற்றுவதற்கான போராட்ட கமிட்டி’ ஒன்றை ஏற்படுத்தினர்.
சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் இறுதியில் 2007-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை, 35 பேருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ 2,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 43 பேர் தொடர்பான சாட்சியங்களை நிராகரித்தும், 62 பேரை சந்தேகத்தின் பேரிலும், 20 பேர் தொடர்பாக போதுமான சாட்சியங்கள் இல்லை எனவும் மொத்தம் 123 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ரெட்டி சாதியினரில் செல்வாக்கு மிகுந்த பலரை விடுவிக்கும்படி பலவீனமான குற்றப் பத்திரிகையை காவல் துறை தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தண்டனை குற்றவியல் சட்டத்தின் கீழ்தான் வழங்கப்பட்டிருந்தது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி அனீஸ் இப்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். ஒரு வகையில் இந்த தீர்ப்பே அவர்களை மேல் முறையீட்டில் விடுவிப்பதற்கான இடைக்கால ஏற்பாடு என்றும் சொல்லலாம்.
உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒரு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 35 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கக் கோரியும், விடுவிக்கப்பட்ட 123 பேரை மீண்டும் வழக்கில் சேர்க்கக் கோரியும, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும்படியும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் தாம் குற்றமற்றவர்கள் என்றும் தம்மை விடுவிக்கும்படியும் மேல்முறையீடு செய்தனர்.
உயர்நீதிமன்றமோ, குற்றவாளிகளின் மேல்முறையீட்டை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ரெட்டி சாதியினர் சிறையில் வாடுவதால் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கிறது என்று நியாயப்படுத்தினார் நீதிபதி நரசிம்மா ரெட்டி. அதை எதிர்த்து நீதிமன்ற அமர்வு மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய தலித் தரப்பை ஏளனம் செய்து, “வழக்கை விசாரிக்கும் போது எதிர் தரப்பின் விருப்பத்தின்படி ஆடினால், நீதித்துறை எப்படி செயல்பட முடியும்” என்று திமிராக பதிலளித்தார் நரசிம்மா ரெட்டி. ரெட்டி ரெட்டியுடன்தான் இனம் சேரும்.
இதே நீதித்துறை, சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்ற வைத்த போதும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நீதிபதியை மாற்றக் கோரியபோதும் கைகட்டி, வாய் புதைத்து அந்த கட்டளைகளை நிறைவேற்றி சாதிக்கேற்ற சட்டம் என்ற மனுநீதியை தவறாமல் கடைப்பிடித்து வருகிறது.
ஏப்ரல் 21-ம் தேதி தீர்ப்பின்படி குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாரும் தலித்துகள் மீதான தாக்குதலை நடத்தவில்லை என்றால் கொல்லப்பட்ட 8 தலித்துகளும் தம்மைத் தாமே வெட்டிக்கொண்டு, தமது உடலை தாமே சாக்குப் பையில் அடைத்துக் கொண்டு கால்வாயில் எறிந்து கொண்டார்கள் என்று நீதித்துறை கருதுகிறதா? என்று தலித் அமைப்புகள் குமுறுகின்றன.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தாக்குதலில் தொடர்பு உடையவர் என்பதற்கு நேரடியான எந்த ஆதாரங்களும் இல்லா விட்டாலும் நாட்டின் கூட்டு மனசாட்சியை திருப்திப் படுத்துவதற்கு அப்சல் குருவை தூக்கு மேடைக்கு அனுப்பிய இந்திய நீதித்துறை, பட்டப்பகலில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி படுகொலைகள் செய்த ரெட்டி ஆதிக்க சாதிவெறிக் கும்பலை சுதந்திர மனிதர்களாக உலாவ விட்டிருக்கிறது. தேசத்தின் கூட்டு மனசாட்சியோ மோடியின் குஜராத் பாணியிலான ஆட்சி, குஜராத் பாணியிலான கார்ப்பரேட் வளர்ச்சி என குஜராத் பாணியிலான ‘சமூகநீதி’க்கான கனவில் ஆழ்ந்திருக்கிறது. அந்த வகையில் மோடியின் ஆட்சி கூட ரெட்டிகளுக்குத்தான் வரப்பிரசாதம் என்பது உண்மை. சீமாந்திராவில் தெலுங்கு தேசம் எனும் ஆதிக்க சாதி கட்சியுடன்தானே பாரதீய ஜனதா கூட்டணி வைத்திருக்கிறது!
ஜெகன்மோகன் ரெட்டி கட்சி சார்பாக தலித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில், “தனிநபர்களும் அமைப்புகளும் பரஸ்பர மரியாதையையும், மனித பண்புகளையும் வளர்க்க முயற்சிக்க வேண்டும். நடந்ததை மறந்து சமாதானமாக வாழுங்கள்” என ‘2002-ல் கலவரம் நடந்தது, ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள், அதனால் என்ன, கொலையாளிகள் உங்களுக்கு தரும் ‘வளர்ச்சி’யை வாயைப் பொத்திக் கொண்டு வாழுங்கள்’ என்று மோடி சொல்வது போல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.
தீர்ப்பைத் தொடர்ந்து ஏப்ரல் 25-ம் தேதி ஜலடி மோசஸ் என்பவர் தேர்தலை புறக்கணிக்கும் படி கேட்பதற்கு நடத்திய கூட்டத்தில் 1,600 குடும்பங்கள் கலந்து கொண்டனர். ஆனால், தேர்தல் புறக்கணிப்பு செய்தால், இன்னொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிடலாம் என்று பயத்தில் பலர் புறக்கணிப்பு கோரிக்கையை எதிர்க்கவே அது கைவிடப்பட்டது. தமது மக்கள் கொல்லப்பட்டதற்கு தேர்தல் புறக்கணிப்பு எனும் ஜனநாயக உரிமை கூட இங்கே இல்லை. இதுதான் இந்தியாவின் ஜனநாயகம்!
உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட குற்றவாளி மடுகுலா மல்லிகார்ஜூனா ரெட்டி, வேமூரு தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மெருகா நாகார்ஜூனாவுக்கு பிரச்சாரம் செய்திருக்கிறார். “சுண்டூருக்கு நீதி” என்ற இயக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளராக இருந்த மெருகா நாகார்ஜூனா, சுண்டூர் மக்களின் ரத்தத்தில் பெற்ற பிரபலத்தை ஓட்டுக் கட்சி அரசியலில் விற்றுக் கொண்டிருக்கிறார். கூடவே சுண்டூர் கொலைகாரர்களின் உதவியோடு தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார்.
மடிகா சாதியினருக்கு (நமது அருந்ததியினர் போன்ற சாதியினர்) உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தை முன்வைத்து ஆந்திராவின் தாழ்த்தப்பட்ட சாதிகளான மாலா, மடிகா சாதியினரிடையே பிளவு ஏற்பட்டுள்ளது இதில் ஒரு கிளைக் கதை. மடிகா சாதியினர் இடஒதுக்கீடு போராட்ட கமிட்டி ஒன்றை ஏற்படுத்த மாலா சாதியினர் தலித் மாலா மாநாடு அமைப்பை உருவாக்கியினர். இந்த பிளவில் மடிகா சாதி மக்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜனநாயக உரிமையை எடுத்துக் கூறி தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய தலித் இயக்கங்கள் மாறாக பிளவு வேலையை செய்திருக்கின்றன. இன்னொரு புறம் ஓட்டுக் கட்சி கூட்டணிகள் மூலம் தமது தரப்பையும் விற்றிருக்கின்றன.
தலித்துகள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தின் கீழ், ஆதிக்க சாதி அதிகார அமைப்புகளின் முதுகெலும்பை உடைக்கும் நக்சல்பாரி புரட்சிதான் கொடூரமான பார்ப்பனிய சாதி கட்டமைப்பை ஒழித்துக் கட்டி உழைக்கும் மக்களை அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்து விடுவிப்பதற்கான ஒரே வழி. அது வரை சுண்டூர் கொலையாளிகளும் அவர்களை பாதுகாத்து வரும் இந்த சமூக அமைப்பும் சற்றே இளைப்பாறலாம். அந்த இளைப்பாறுதல் நிரந்தரமல்ல என்பதை இங்கே நினைவுபடுத்துகிறோம்.
சுண்டூர் படுகொலைகளும், நீதி தவறிய நீதிமன்றங்களும் நமது மனசாட்சியை கேள்வி கேட்கட்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம். பார்ப்பனி ஆதிக்க சாதிவெறியின் எலும்பை உடைப்போம்!
ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு ‘அடக்கமாக’ பேசினாலும் ஜனநாயகத்தை ஏற்காது என்பதற்கு மற்றொரு உதாரணமாக ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி சேனலில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பாஜக அடிப்பொடி தலைவர் நிதின் கட்காரி நிரூபித்திருக்கிறார். ஆள் அரவமற்ற சிவன் கோவில் திண்ணையில் குடியும் சீட்டுமாக வாழும் ஒரு ரவுடி போல, அடாவடியாகவும், பொறுப்பின்றியும் பேசி, பாகிஸ்தானைச் சேர்ந்த தாரிக் பிர்சாதாவை ஒருமையில் திட்டியிருக்கிறார் முன்னாள் பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி.
தாரிக் பிர்சாதா பாக் அரசில் பொறுப்பு வகித்தாலும், இந்தியா-பாக் உறவு குறித்து நாகரீகமாக பேசக் கூடியவர். அதன் பொருட்டே அவரை இந்திய தொலைக்காட்சிகள் அவ்வப்போது விவாதத்துக்கு அழைக்கின்றன. கட்காரியைப் போன்ற காட்டுமிராண்டிகள் காட்டுமிராண்டித்தனமாக பேசுவது அதிசயமில்லைதான். ஆனாலும் ஆட்சி அமைக்கும் பொழுதில், அமைச்சராக வாய்ப்புள்ள கியூவில் நிற்கும் ஒரு தொழிலதிபர், தறுதலை போல பேசியதுதான் குறிப்பிடத்தக்கது.
ஹெட்லைன்ஸ் டுடேவில் நடந்த விவாதத்தின் வீடியோவையும், உரை வடிவத்தையும் கீழே தந்திருக்கிறோம். பார்த்துவிட்டு இந்து மத வெறியர்கள் இந்தியாவின் குடிமக்களா இல்லை டிராகுலாக்களா என்பதை முடிவு செய்யுங்கள்.
++++++++++
உரை வடிவம்
பா.ஜ.க அரசு அமைக்க தயாராகி வரும் இந்நேரத்தில் அக்கட்சி பாகிஸ்தான் மீது கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மூத்த பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை நிறுத்திக் கொள்ளா விட்டால் … புதிய அரசாங்கம் பொருத்தமான பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்திருக்கிறார் என்ற அறிவிப்போடு முந்தைய இரவு ஹெட்லைன்ஸ் டுடேவில் நடைபெற்ற விவாதப் பகுதியை காண்பிக்கின்றனர்.
கட்காரி (இந்தியில்) : நான் பாகிஸ்தானிய நண்பர்களை கேட்க விரும்புகிறேன். எங்களுடைய நான்கு வீரர்களின் கழுத்தை வெட்டி சென்றீர்களே, இது போன்ற வேலை செய்வது அவர்களுடைய மிலிட்டரிக்கு அழகு சேர்க்கிறதா, நாங்கள் பாகிஸ்தானோடு அமைதியே விரும்புகிறோம். ஆனால், அவர்கள் பயங்கர நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தால், அதற்கான பதிலடி நிச்சயம்உறுதியான வடிவில் கிடைக்கும். இது மன்மோகன் சிங், காங்கிரஸ் அரசு இல்லை, எங்களுடையது.
கட்காரி (ஆங்கிலத்தில்) : நாங்க பாகிஸ்தானோடு போரை விரும்பவில்லை, நாங்கள் அமைதியை வேண்டுகிறோம். ஆனால், அதே நேரம், நாங்கள் பயங்கரவாதத்துக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக ஜீரோ சகிப்புத் தன்மை கொண்டிருக்கிறோம். (இந்தியில்) பாகிஸ்தான் இதை நிறுத்தவில்லை என்றால், இதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும். மன்மோகன் அரசு பேசாமல் இருந்தது, நாங்கள் அப்படி இருக்க மாட்டோம்.
தாரிக் பிர்சாதா (ஆங்கிலத்தில்) : நான் பதில் சொல்லலாமா, ஆங்கிலத்தில் பேசவா, உருதுவில் பேசவா?. (ஆங்கில நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேச வேண்டும், வேற்று நாட்டைச் சேர்ந்தவரிடம் நமது மொழி வெறியை காட்டக் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் பேசும் கட்காரியின் தவறை நாகரீகமாக சுட்டிக் காட்டுகிறார் பிர்சாதா)
ஒருங்கிணைப்பாளர் : “முன்னாள் பா.ஜ.க தலைவரிடமிருந்து மிகவும் பரபரப்பான சவால் வந்திருக்கிறது. நீங்கள் எங்கள் படைவீரர்களின் கழுத்தை வெட்டிச் சென்றால் நாங்கள் அமைதியாக இருப்போம் என்று எதிர்பார்க்க முடியாது” (இவர் பரபரப்பை ஏற்றி விடுகிறாராம்)
நிதின் கட்காரி
தாரிக் பிர்சாதா (ஆங்கிலத்தில்) : கட்காரி மிகவும் தவறான எண்ணத்தில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். முதலில், பாகிஸ்தான் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு நல்ல அடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால், திரு மோடி அல்லது பா.ஜ.க தாவூத் இப்ராகிம் அல்லது வேறு ஏதாவது பயங்கரவாத குழு இந்தியாவுக்கு எதிராக ஏதோ செய்து விட்டது என்ற பொய்யான முகாந்திரத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்குள் தாக்குவதற்கான திட்டத்தை வகுத்தால், நான் ஒரு விஷயத்தை சொல்ல முடியும். பாகிஸ்தான் ஒரு அணுஆயுத அரசு.
கட்காரி (இந்தியில்) : திரு பீராதா வுக்கு இந்தியாவின் வலிமை தெரியாதா என்ன? அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்றால், எங்களிடம் இல்லையா என்ன? முதலில் நாம் அமைதியை விரும்புகிறோம்.
பிர்சாதா (ஆங்கிலத்தில்): உங்களுக்கு பாகிஸ்தானின் வலிமை தெரியாது என்று நான் நினைக்கிறேன். எமது அணுஆயுத வலிமை இந்தியாவின் வலிமைக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.
கட்காரி (இந்தியில்) : திரு பீராதா இந்த மிரட்டல்கள் எல்லாம் மன்மோகன் சிங் அரசிடம் வைத்துக் கொள்ளுங்கள். எங்களிடம் வேண்டாம். (தொடை தட்டுகிறாராம்)
பிர்சாதா (இந்தியில்) : இல்லை, இல்லை. இது மிரட்டல் இல்லை, பாகிஸ்தானின் வலிமையை பற்றி நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினால் அவர்கள் புது தில்லியை துடைத்து அழித்து விட முடியும், எந்த நேரத்திலும். (பிர்சாதா அவரது இயல்புக்கு மாறாக கடுமையான கருத்தை சொல்கிறார்)
கட்காரி (இந்தியில்) : திரு பீர்ராதா, மூன்று முறை போரில் உங்களுக்கு என்ன கதி ஆனது என்று நினைவிருக்கிறதா. சிம்லாவுக்கு வர வேண்டி ஏற்பட்டது நினைவிருக்கிறதா? அதெல்லாம் மறந்து விட்டதா, அந்த வரலாறு உங்களுக்கு நினைவு இருக்கிறதா இல்லையா? உங்களுக்கு அமைதி வேண்டுமென்றால் இது போன்று தவறாக பேசாதீர்கள். இது மன்மோகன்சிங் அரசு இல்லை, இது எங்கள் அரசு. நாங்க பயங்கரவாதிகளையும், பயங்கரவாத அமைப்புகளையும் பார்த்து பயப்பட மாட்டோம். (ஏளனம் செய்து இன்னும் அவரை கோபப்படுத்த முயற்சிக்கிறாராம்)
தாரிக் பிர்சாதா
பிர்சாதா (ஆங்கிலத்தில்) : நீங்கள் உண்மைகளை திரித்து கூறுகிறீர்கள், பொய் சொல்கிறீர்கள். வரலாற்றை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு தெரியாது என்ன பேசுகிறோம் என்று. வங்கதேச போரைப் பொறுத்த வரை அது வங்க தேச மக்களுக்கானதாக போனது. 1965-ல் நாங்கள் உங்கள் விமானப் படையை அழித்து ஒழித்து விட்டோம். 1948-ல் பாகிஸ்தான் அப்போதுதான் புதிதாக உருவாகியிருந்தது. இன்றைய பாகிஸ்தான் ஒரு அணுஆயுத அரசு. பாகிஸ்தானை மிரட்டி தாக்கும் தவறை செய்யும் நாளை நினைத்து கவலைப்படுங்கள். பதிலடி மிகவும் பயங்கரமாக இருக்கும்.
பிர்சாதா (இந்தியில்) : மும்பை தாக்குதலை பொறுத்த வரை உங்களுக்குத் தெரியாது, வேண்டுமென்றால் மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. நாங்கள் உண்மை என்ன என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இந்தியாவுடன் அமைதிக்காகவே எங்களது முயற்சி. பாகிஸ்தானிலிருந்து எந்த ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் இந்தியா மீது நடக்கவில்லை, இனிமேலும் நடக்காது. நீங்கள் உங்கள் உளவுத் துறைகளிடம் கேட்டுப் பாருங்கள். நீங்கள் நேபாள் எல்லையிலிருந்து பிடித்த ஆள் யார்? நீங்கள் ஒருவரை பிடித்து அவரது பெயரை வைத்துக் கொண்டு கதை உருவாக்கி வருகிறீர்கள். (இயன்ற வரை நிதானமாக தன் தரப்பு வாதங்களை முன் வைக்கிறார்)
ஒருங்கிணைப்பாளர் (இந்தியில்) : நீங்க என்ன சொல்றீங்க, கசாப் எங்கேருந்து வந்தான், பாகிஸ்தானில் அவனுடைய அம்மா, அப்பா எல்லாம் இருக்கின்றனர். பாகிஸ்தானி சேனல் அந்த கிராமத்துக்கு போனது (எதிர் தரப்பின் கருத்துப் பற்றி கவலையே படாமல், தான் சொல்வது உலகறிந்த உண்மை என்ற விடலை பையன் போல பேசுகிறார்).
கட்காரி (இந்தியில்) : உன்னைப் போல பொய் சொல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை. எங்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு பொய் சொல்லாதே, அல்லா மீது ஆணையாக உண்மை சொல்ல பழகு. அவனுங்க கராச்சியிலிருந்து வரவில்லையா…. (பொறுக்கி மொழியில் இறங்குகிறார்)
பிர்சாதா : நீங்கதான் பொய் சொல்கிறீர்கள்
(மூன்று பேரும் ஒரே நேரத்தில் பேசிக் கொள்கின்றனர்)
==========
‘பாகிஸ்தான் காரன் இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டி எடுத்துட்டு போறான், மன்மோகன் சிங் என்ற கோழை கையை கட்டிக் கொண்டு கவலையில்லாமல் இருக்கிறார்’ என்று இந்து மத வெறி, இந்திய தேச வெறி முரடர்கள் பேசுவது போல, பாகிஸ்தானிலும்,
‘இந்திய உளவுத் துறை வேண்டுமென்றே கதைகளை கட்டி பாகிஸ்தான் மீது அவதூறு செய்கிறது. பாகிஸ்தானை அழித்து விட இந்தியா சதித்திட்டம் தீட்டுகிறது’ என்று பாகிஸ்தானிய மதவெறி, தேச வெறியர்கள் பேசுவதில் ஆச்சரியமில்லை.
நிதின் கட்காரி – தாரிக் பிர்சாதா
மேலும், இந்தியா பாகிஸ்தானை ஒரே நாளில் காலி செய்து விடும் என்று இந்த பக்கத்திலிருந்தும், பாகிஸ்தான் இந்தியாவை அழித்து ஒழித்து விடும் என்று அந்த பக்கத்திலிருந்து சவடால் விடும் போர்வெறியர்கள் இரு நாடுகளின் தெருக்களை நிரப்பியிருக்கிறார்கள்.
இந்திய உளவுத்துறைக்கும், பாகிஸ்தானிய உளவுத் துறைக்கும், அமெரிக்காவின் மேலாதிக்க திட்டங்களுக்கும் நடுவில் இருக்கும் உண்மையை மதவெறி, தேசவெறியை ஒதுக்கி விட்டு விவரங்களின் அடிப்படையில் பரிசீலித்து வந்தடைவதுதான் இரு நாடுகளிலும் உள்ள பொறுப்புள்ள ஜனநாயக சக்திகளின் கடமை. இருநாடுகளும் அமெரிக்க அடிமை என்பதோடும், உள்ளூரில் ஏழைகளை வாட்டுவதையும் ஒரே மாதிரி செய்கின்றன. இதை நாம் அம்பலப்படுத்தினால்தான் இருநாட்டு மக்களையும் இரு நாட்டு அரசுகளிடமிருந்து காப்பாற்ற முடியும். இதன்றி போர் வெறிப் பேச்சுக்களால் எப்பயனும் இல்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்த தாரிக் பிர்சாதா அத்தகைய நிதானமான அரசியல்வாதி. ஆனால், நிதின் கட்காரியும், ஹெட்லைன்ஸ் டுடே நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளரும், தொலைக்காட்சி சேனலிலேயே இந்திய-பாகிஸ்தான் போரை நடத்தி முடித்து விடுவது போல அடாவடியாக பேசுகின்றனர்.
நிதின் கட்காரி முதலான ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் உள்நாட்டில் படம் காண்பிப்பதற்காக தாரிக் பிர்சாதா போன்ற அமைதியான, முதிர்ந்த அரசிய்வாதியைக் கூட நிதானமிழக்க வைக்கும் வகையில் பேசினாலும் நிதர்சனம் வேறாக இருக்கிறது.
வாஜ்பாயி ஆட்சியின் போது கார்கில் போரை முடித்துக் கொள்ள அமெரிக்காவின் காலில் விழுந்து சமாதானம் செய்து வைக்க கெஞ்சியதும், காந்தகாருக்கு விமானம் கடத்தப்பட்ட போது கைதிகளையும், பணத்தையும் கொண்டு கொடுத்து மீட்டு வந்ததும், இரு தரப்பிலும் நல்லுறவு வேண்டும் என்று தற்போது மோடி பேசியிருப்பதும்தான் யதார்த்தம். இல்லை காந்தகாரில் பணயக் கைதியை விட முடியாது என்று அப்போதைய பாஜக அரசு ஏன் பேசவில்லை? உயிருக்கு அஞ்சாத ஸ்வயம் சேகவ குஞ்சுகள் எங்கே போயிருந்தார்கள்?
இது இவர்களது விருப்பமல்ல என்றாலும் பாக்கோடு போர் அல்லது பதட்டம் என்பது இரு நாடுகளுக்கும் கேடு விளைவிக்கும். இதை ஒரு அளவு தாண்டி ஆட முடியாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மேடைகளிலும், இணையங்களிலும் பாகிஸ்தானை கூண்டோடு காலி செய்வது போல உதார் விடுகிறார்கள்.
பாகிஸ்தான் பிரதமரும் சரி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்த நிதர்சனங்களை உணர்ந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். மோடியும் வேறு வழியின்றி பதவியேற்பு விழாவிற்கு பாக் பிரதமரை அழைத்திருக்கிறார். ஒரு வேளை இது அகண்டபாரதத்துக்கான சாணக்கிய தந்திரமென்று கூட இந்துமதவெறியர்கள் வியாக்கியானம் செய்யக்கூடும்.
நிலைமை இப்படி இருக்க பா.ஜ.கவின் நிதின் கட்காரி முதல், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் இணையத்தில் கமென்ட் போடும் இந்துத்துவா அடிப்பொடிகளும் விளைவுகளை தாம் எதிர் கொள்ளப் போவதில்லை என்ற தைரியத்தில் வெற்று வாய்ச்சவடால் அடித்து வருகிறார்கள்.
இந்த நிதின் கட்காரி ஒரு பெரும் தரகு முதலாளி என்பதோடு ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானவர். ராஜ்நாத் சிங்கிற்கு முன்னதாக அகில இந்திய தலைவராக இருந்தவர். தற்போது தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்க போகிறவர். இத்தகைய நபர் தொலைக்காட்சியில் பாகிஸ்தானை போருக்கு அழைக்கும் கொடுமையினை என்ன சொல்ல?
போர் என்று வந்தால் மோடியோ இல்லை வானரப்படையோ சண்டை போடப் போவதில்லை. இராணுவ வீரர்களும், காஷ்மீர் மக்களும் மற்றைய எல்லைப்புற மக்களும்தான் உயிரையும், உடமையையும் இழக்க வேண்டும். அப்படி போர் நடந்தால் கட்காரி தனது மும்பை வீட்டில் சேட்டுக்கடை ஜிலேபியையும், லட்டுவையும் விழுங்கிவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருப்பார்.
இத்தகைய முட்டாள் பாசிஸ்டுகள்தான் இனி இந்தியாவை ஆளப்போகின்றனர் என்றால் இதை விட என்ன அபாயம் வேண்டும்?
காலனியாதிக்க எதிர்ப்பு மரபின் வீரன், திப்பு சுல்தானின் மோதிரம் ஒன்று வரும் மே 22-ம் தேதி லண்டனில் உள்ள கிறிஸ்டி என்ற ஒரு தனியார் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வருகிறது. வழக்கமாக காந்தி கண்ணாடி, நேரு சட்டை, கென்னடி கடிதம் போன்றவைகள் ஏலம் வருவது போன்று திப்பு சுல்தானின் மோதிரம் ஏலம் வருவதைப் புறந்தள்ள முடியாது.
திப்புசுல்தானின் மோதிரம் (படம் : நன்றி The Hindu)
1799 மே 4-ம் தேதி நான்காவது மைசூர் போரில் திப்பு போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். அப்போது ஆட்சியளராக இருந்த ஆர்தர் வெல்லெஸ்லி இம்மோதிரத்தைக் கைப்பற்றினார். பிறகு அவர்களது குடும்பத்தில் இருந்து இன்னொரு யுத்த பிரபுவான ஃபிட்ஸ்ராய் சோமர்செட் என்பவரிடம் திருமணப் பரிசாக மோதிரம் கை மாறியது. தற்போது அவர்களது வழித் தோன்றல்கள் இதனை ஏலத்திற்கு கொடுத்துள்ளனர். இந்தியா இந்த ஏலத்தில் பங்கெடுத்து மோதிரத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.
இந்த குரலோடு நாமும் சேர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டு விடுதலை போரை காட்டிக் கொடுத்த எட்டப்பன், தஞ்சை சரபோஜி, புதுக்கோட்டை தொண்டைமான், ஆற்காடு நவாபு போன்ற அரசர்கள் போலன்றி திப்பு சுல்தான் சாகும் வரை சமரசமின்றி போராடி வீழ்ந்தார். ஒருவேளை வரலாறு வேறு மாதிரி அமைந்து திப்பு வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவில் நிலவுடைமை சமூக அமைப்பு அழிக்கப்பட்டு முதலாளித்துவ சமூக அமைப்பு கூட வந்திருக்கலாம். இன்னும் சாதிவெறி, மதவெறியை எதிர்த்து நாம் மூச்சுக் கொடுக்கும் சிரமத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால் ‘ஒருவேளை’ என்று வரலாற்றை திருப்பி போட முடியாது.
இந்துமதவெறியர்கள் திப்புவை அவதூறு செய்து வரலாற்றின் பக்கங்களிலிருந்து அவரது பணிகளை அழிக்க இன்றும் முயன்று வருகிறார்கள். அந்த அவதூறுக்கு இந்த மோதிரமே ஒரு பதிலை வைத்திருக்கிறது. 41.2 கிராம் எடையுள்ள அந்த மோதிரத்தில் இந்து கடவுளான ராமனின் பெயர் தேவநாகரி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இசுலாமிய மன்னன் எப்படி “ராம்” பெயர் தாங்கிய மோதிரத்தை அணிந்தான் என்று இந்துமதவெறியர்கள் மட்டுமின்றி, இசுலாமிய மதவாதிகளும் கோபம் அடையலாம்.
வழக்கம் போல ‘பல இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் மதம் மாற்ற அவர் வற்புறுத்தினார், அதற்காக குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் திப்பு கொன்றார்’ என்ற கதையை இந்துத்துவாவாதிகள் இணையத்தில் கிளப்பி விட ஆரம்பித்து விட்டனர்.
திப்புசுல்தான்
பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு உண்மையில் மத நல்லிணக்கவாதியாகவே விளங்கினார். இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாக சிவாஜியை இன்று முன்னிறுத்துகிறார்கள் சிவசேனா வகை வானரங்கள். ஆனால் அந்த மராத்திய போர் வீரர்களது படையெடுப்பிலிருந்து சிருங்கேரி மடத்தை காப்பாற்றியவர் திப்பு என்பது பலருக்கும் தெரியாத வரலாற்று உண்மை. பல இந்துக் கோவில்களுக்கு நிலத்தையும, பொன்னையும தானமாக வழங்கியுள்ளார் திப்பு. மைசூர் ராஜ்யத்தில் முதல் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டுவதற்கு நிலத்தை இலவசமாக வழங்கியவரும் திப்புதான். அவரது ஆஸ்தான அமைச்சர் பூர்ணய்யாவும் ஒரு இந்துதான்.
அமெரிக்க சுதந்திரப் போரை அங்கீகரித்ததுடன் அதனை 1776-ல் கொண்டாடிய சில உலக ஆட்சியாளர்களில் ஒருவர் திப்பு. தன்னை “குடிமகன் திப்பு” என்று பிரெஞ்சுப் புரட்சிக்கு பிறகு அழைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை. மூன்றாவது மைசூர் போரில் திப்பு தோற்ற பிறகு தனது ராஜ்யத்தில் பாதியையும், தனது பிள்ளைகளில் இருவரை பணயக் கைதியாகவும் வெள்ளையர்களிடம் கொடுத்து பின்னர் மீட்டார். நாட்டைக் காப்பாற்ற தனது பிள்ளைகளை பணயம் வைக்கும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது. இன்றோ ஆளும் வர்க்கத்தின் வாரிசுகள் அனைத்தும் நாட்டை விற்பதற்கு வாரிசு அரசியலில் இடம் பிடித்திருப்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.
முதன்முதலாக போர்ப்படையினருக்கு சம்பளம் தந்த திப்பு, தனது படைகள் கைப்பற்றும் பகுதிகளில் மக்களிடம் கொள்ளையடிக்கக் கூடாது எனவும், தானியங்களை மக்களிடமிருந்து விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றும் தனது படை வீரர்களுக்கு உத்திரவும் போட்டார். மது விற்பனையை தடை செய்தார். கஞ்சா பயிரிடக் கோரி பிரிட்டிஷார், விவசாயிகளை வலியுறுத்திய போது திப்பு அதனை தடை செய்தார். டாடாவோ அபினை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வணிகம் செய்ய இங்கிலாந்திற்கு உதவினார்.
அடிமை விற்பனையை தடை செய்த திப்பு எந்த அரசு வேலைக்கும் கூலி கொடுக்காமல் மக்களிடம் வேலை வாங்க கூடாது என்று ஆணையிட்டார். “மக்கள் நலனை விட அரசின் கருவூலத்தை பெருக்குவதுதான் முதன்மையானதா?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.
பாலியல் தொழிலை தடை செய்ததுடன் தேவதாசி முறைக்கு எதிராகவும் ஆணைகளைப் பிறப்பித்தார். பார்ப்பனியம் இழிவுபடுத்திய இத்தகைய பல்வேறு கொடூரமான நடைமுறைகளை திப்பு தடை செய்தது முக்கியமானது. தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்கு மேலாடை அணிய உரிமை வழங்கியதுடன் நில உடைமை தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைக்கவும் வழி செய்திருந்தார் என்பதை எட்கர் தட்ஸன் எனும் அறிஞர் பதிவு செய்திருக்கிறார். எந்த சாதி மதங்களை சேர்ந்தவராயினும் உழுபவருக்குதான் நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன திப்பு, ரயத்துவாரி முறையை அறிமுகம் செய்திருந்தார்.
சேலம் மாவட்டம் வேலூர் தாலுகாவில் பிரிட்டிஷாரின் வரிக்கொடுமை தாங்காமல் 4,000 விவசாயிகள் திப்புசுல்தான் ஆடசிபுரிந்த பகுதிக்கு 1792-க்கு பிறகு குடிபெயர்ந்தனராம். இதனை பின்னாட்களில் வந்த தாமஸ் மன்றோ பதிவு செய்கிறார். உள்ளூர் வணிகத்தை ஊக்குவித்த திப்பு மூன்றாவது மைசூர் போரின் தோல்விக்கு பிறகும் வெள்ளையரை தனது பகுதியில் வணிகம் செய்ய அனுமதிக்கவில்லை. இன்றைக்கோ பன்னாட்டு கம்பெனிகளில் வேட்டைக் காடாக இருக்கிறது தேசம்.
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும். மொத்த ராணுவத்தின் கௌரவத்தை குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களை கௌரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் ராணுவத்துக்கு ஆணையிட்டவர் திப்பு. விவசாயிகள் உட்பட அனைவருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என ஆணையிட்டார்.
திப்பு இறந்து விட்டதாக அவரது பிள்ளைகள் சொன்னதை வெல்லெஸ்லி முதலில் நம்பவில்லை. மன்னர் ஒருவர் போர்க்களத்திற்கு போவார் என்பதை அவர்களால் கனவிலும் நம்ப முடியவில்லை. பிறகு திப்புவைத் தேடிப் போகிறார்கள். போர்க்களத்தில் இறந்து கிடக்கிறார் திப்பு. அங்கிருந்து தான் வெல்லெஸ்லி இந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு போகிறான்.
மோதிர ஏலத்தை தடுக்க வேண்டும் என எல்லோரும் யோசிக்கின்றோம். ஆனால் தேசமே ஏலம் விடப்பட்டு மொத்த நாடும் பன்னாட்டு கம்பெனிகளிடம் கைகட்டி நிற்பது தெரிந்தும் தெரியாதது போல நிற்கிறோம். திப்புவுக்கு மரியாதை செய்வதென்பது மோதிரத்தை மீட்பதோடு மட்டுமல்ல தேசத்தை மீட்பதோடும் சேர்ந்திருக்கிறது.
நுண்ணறிவு போக்குவரத்துத் துறை என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டுகளின் நிகழ்ச்சிப் போக்கு தொடர்ந்தால் 2020-ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை 5.61 கோடியாக இருக்குமாம். இந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி 1 கோடியே 86 லட்சத்து 69 ஆயிரத்து 433 வாகனங்கள் தமிழகத்தில் இயங்குகின்றன. அதாவது தமிழக மக்கள் தொகையில் 4 பேருக்கு ஒன்று என்ற வீதத்தில் வாகனங்கள் ஓடுகின்றன. 1993-ல் 13.91 லட்சமாக இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2013-ல் 1.4 கோடியாக (10 மடங்கை விட அதிகம்) அதிகரித்திருக்கிறது.
சென்னை வாகன நெருக்கடி
சென்னையில் மட்டும் 41 லட்சத்து 61 ஆயிரத்து 790 வாகனங்கள் இயங்குகின்றன. அதாவது சென்னையில் கிட்டத்தட்ட இரண்டு பேருக்கு ஒரு வாகனம் ஓடுகிறது.
2011-12-ம் ஆண்டில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட தனியார் வாகனங்களின் எண்ணிக்கை 16.35 லட்சம் (அரசுக்கு சொந்தமான வாகனங்கள் 1.38 லட்சம் மட்டும் பதிவாயின). இதில் இரு சக்கர மற்றும் கார்களின் எண்ணிக்கை மட்டும் 16.06 லட்சம். இதனை 1993-ல் தமிழ்நாட்டில் ஓடிய மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 13.91 லட்சத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். 1993 வரை பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த வாகனங்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் 2011-12 ஒரே ஆண்டில் சாலையில் இறக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெருக்கடி, எரிபொருள் இறக்குமதிக்கான அன்னிய செலாவணி பிரச்சனை, சூற்றுச் சூழல் மாசுபடுதல், வேலைஇழப்பு, உடல்நலக் கேடு என்ற பல பிரச்சனைகளுக்கு உரம் போட்டு வளர்க்கும் இந்த நிலைமை, பொதுப் போக்குவரத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டி, பல வகை வெளிநாட்டு கார், பைக் ரகங்களை அனுமதித்து, எல்லோரையும் சொந்த வண்டியில் போக வைத்த தனியார் மய, தாராள மய, உலகமய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உருவானது.
சென்னையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 42 சதவீதமாக இருந்த பேருந்து, தொடர்வண்டி பயணிகளின் எண்ணிக்கை தற்போது 31 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு இணையாக பொதுப்போக்குவரத்து நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. வழித்தடங்கள் பலவற்றை நிறுத்தியுள்ளனர். 2008-ல் 3,260 ஆக இருந்த சென்னை பேருந்துகளின் எண்ணிக்கை, 2012-ல் 3,637 ஆக உயர்ந்து பின்னர் 2013-ல் 3365 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது, தன்னை ‘வாழ வைத்த’ பன்னாட்டு கார்/பைக் நிறுவனங்களுக்கு அம்மா செலுத்திய நன்றிக் கடன் என்றும் சொல்லலாம்.
சென்னை சாலைகளை நிறைக்கும் இரு சக்கர வாகனங்கள்
2008-ல் 47.76 லட்சமாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2010-11-ல் 55 லட்சமாக உயர்ந்து பிறகு 2012-13-ல் 48 லட்சமாக குறைந்தது. அதாவது 6 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்து பெருகி வரும் நகரத்தின் தேவைகளுக்கேற்ப வளரவில்லை. பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், பச்சை வண்ண எக்ஸ்பிரஸ் வண்டிகள் மற்றும் குளிர்சாதன வசதியுள்ள வண்டிகள் என பேருந்துகளை எளிய மக்களிடமிருந்து பிரிக்கும் வேலையை அரசு செய்து வந்துள்ளது.
அரசு பேருந்துகளுக்கு ஆண்டுக்கு ரூ 80 ஆயிரம் வரை வரி வசூலிக்கும் அதே வேளையில் கார்களுக்கோ ஆயுட்கால வரி ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது அரசு.
‘இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும், ஏற்றுமதி மூலம் அந்நிய செலவாணி அதிகரிக்கும்’ என்று வாதிட்டு சென்னையை அடுத்துள்ள சிறு நகரங்களில் ஃபோர்டு, ஹூண்டாய், நிசான் என்று வரிசையாக அன்னிய கார் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அடுத்தடுத்து மாநிலத்தை ஆண்ட கருணாநிதியும், ஜெயாவும் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டனர். அதன்படி குறைந்த விலையில் நிலம், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வரிச்சலுகை, மானிய விலையில் தடையில்லா மின்சாரம், வரம்பின்றி நிலத்தடி நீரை உறிஞ்ச அனுமதி என சலுகைகளை வாரியிறைத்தார்கள். குடியிருந்த மக்களை, அரசே சொந்த பொறுப்பில் மிகக்குறைந்த நட்ட ஈடு தந்து வெளியேற்றியது. ஹூண்டாயும், ஃபோர்டும் வந்த பிறகு அப்பகுதியினை தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்றார்கள்.
உலகில் மிகப்பெரிய மோட்டார் வாகன தொழிற்சாலைகளில் 7 சென்னையில் அமைந்துள்ளன. ஹூண்டாய், ஃபோர்டு, பிஎம்டபிள்யூ போன்ற கார் கம்பெனிகள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் துவங்கப்பட்டிருந்தன. 2007 இறுதியில் மலேசியாவை சேர்ந்த நாஸா ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ரூ 1,200 கோடி மதிப்பில் இப்பகுதியில் பட்ஜெட் வகை கார் உற்பத்தியை துவங்கியது. மகிந்திரா அண்டு மகிந்திரா செய்யாறில் தனது யூனிட்டை துவக்கியது. நிசான் நிறுவனம் படப்பையில் கார் உற்பத்தி செய்து வருகிறது.
சென்னை – தென்னிந்தியாவின் டெட்ராய்ட்?
2012-ல் ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் ஓரகடத்தில் தனது ஆலையை அமைத்தது. அதில் பேசிய முதல்வர் ஜெயா இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களில் 30 சதவீதம் சென்னையில் உற்பத்தியாவதாக குறிப்பிட்டார். சென்னையில் நிமிடத்திற்கு 3 கார்களும், 75 விநாடிகளுக்கு ஒரு சரக்கு வாகனமும் உற்பத்தியாவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அரசுக்கு இந்நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய், கொடுத்த சலுகைகளை விட மிகவும் குறைவு என்பதை பல்வேறு புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டி உள்ளன. வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை இந்நிறுவனங்களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சிபெறுபவர்கள் என்ற பெயரில் நிரந்தர பணி இன்றி குறைந்த கூலிக்கு வேலை வாங்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.
இங்கு பன்னாட்டு கம்பெனிகள் தென்னிந்தியாவின் டெட்ராய்டை உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில்தான் உண்மையான அமெரிக்க டெட்ராய்டு ஆளரவமற்ற பகுதியாக மாறத் துவங்கியது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பொருளாதார நெருக்கடி முற்றி பல லட்சம் மக்கள் வேலை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக திரிந்து கொண்டிருந்தனர். இந்நாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வாகனங்களுக்கான சந்தைத் தேவை வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் சென்னையில் தயாரான கார்களை ஏற்றுமதி செய்ய இயலவில்லை; அந்நியச் செலவாணியும் கிட்டவில்லை.
மாறாக, இங்கு ஏற்றுமதிக்காக தயாரான கார்களை உள்நாட்டிலேயே விற்கத் துவங்கினர். ஆரம்பம் முதலே இங்கு கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் நோக்கமே இந்திய நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து தமது கார்களை விற்பதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடுத்தர வர்க்கத்தினருக்குக் கூட வங்கிக் கடன், மாத தவணை என்ற பெயரில் இந்தக் கார்கள் திணிக்கப்பட்டன. குறைந்த சம்பளம் வாங்குபவர்களும், கார் நிறுத்த இடம் இல்லாதவர்களும் கூட கார் வாங்க வைக்கப்பட்டனர். இதனால் நாடு அதிகளவில் பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று.
ஐரோப்பாவில் விற்கப்பட காத்திருக்கும் கார்கள்
2001-ம் ஆண்டு ஒரு நாளைக்கு 2,200 பேரல் கச்சா எண்ணெய் பயன்படுத்தி வந்த இந்திய பொருளாதாரம் 2011-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 3,400 பேரல்கள் பயன்படுத்துவதாக மாறியது. அதாவது, 10 ஆண்டுகளில் எண்ணெய் பயன்பாடு சுமார் 50% அதிகரித்திருக்கிறது. இது 1990-களுக்கு முன்பு ஒரு நாளைக்கு 1,000 பேரலுக்கும் குறைவாக இருந்தது. புதிய பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட 20 ஆண்டுகளில் எண்ணெய் இறக்குமதி அளவு 6 மடங்கு அதிகரித்திருக்கிறது; இதனால் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அன்னியச் செலாவணி நாட்டை விட்டு வெளியேறி நெருக்கடியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 2006-07ம் ஆண்டு ரூ 2.65 லட்சம் கோடியாக இருந்த பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி 2011-12-ல் ரூ 5.2 லட்சம் கோடியாக (இரு மடங்கு) அதிகரித்திருக்கிறது.
கார் உற்பத்தியில் வேலை வாய்ப்பு, கார் ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணி என்று பசப்பி அமல்படுத்தப்பட்ட தனியார் மய கொள்கைகள், உள்நாட்டில் வாகனங்களை அதிகரிப்பதன் மூலம் பெட்ரோல்/டீசலுக்கு அன்னிய செலாவணி விரயம், சுற்றுச் சூழல் பாதிப்பு, போக்குவரத்து நெருக்கடி, உடல் மற்றும் மன ரீதியான புதிதுபுதிதான நோய்கள் எனப் பிரச்சினைகளை அதிகரிக்கவே இந்த நவீன தென்னிந்திய டெட்ராய்டு உதவியது.
மாநகரங்களில் வாகன நெரிசலில் சிக்கி மக்கள் அதிகம் அவதிப்படுவது தினந்தோறும் அதிகரித்து வருகிறது. 1996-ல் சதுர கிமீக்கு 22 ஆக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை 2004-க்குள் 52 ஆகப் பெருகி தற்போது இன்னும் அதிகரித்திருக்கிறது.
இரண்டு கார்கள் அடைத்துக் கொள்ளும் இடத்தில் ஒரு பேருந்து சுமார் 60 முதல் 100 பேருடன் பயணிக்க முடியும். எப்படி இருந்தாலும் காற்றை மாசுபடுத்தும் பிற வாகனங்களிலிருந்து 5 முதல் 50 வரையிலான எண்ணிக்கையை ஒரு பேருந்தினால் குறைக்க முடியும்.
அதிகரித்துக் கொண்டே வந்த வாகன எண்ணிக்கையினால் நகர்ப்புறங்களில் காற்று மாசுபடுதல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 2013 ஆகஸ்டில் வெளியான சிஎஸ்சி அமைப்பின் சர்வே படி சென்னையில் காற்றில் 10 மைக்ரோ மீட்டருக்கு குறைவான துகள்களின் அளவு 2007-ல் கன மீட்டருக்கு 32 மைக்ரோ கிராமாக இருந்து 2011-ல் 94 மைக்ரோகிராம் ஆக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இத்தகைய நுண்துகள்கள் மூச்சு விடுதல், நுரையீரல் தொடர்பான வியாதிகளை அதிகரிக்கின்றன.
அதிகரிக்கும் வாகன நெரிசல் காற்று மாசுபடுதலை மோசமாக்கியிருக்கிறது.
இதே கால கட்டத்தில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு கன மீட்டருக்கு 9 மைக்ரோ கிராமிலிருந்து 24 மைக்ரோ கிராமாக அதிகரித்திருந்தது. நுண்துகள் மாசுபடுத்தலில் 14 சதவீதமும், நைட்ரஜன் ஆக்சைடில் 68 சதவீதமும் வாகன புகை மூலமே வெளிப்படுவதாக சென்னை ஐஐடியின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கனமீட்டரில் 2.5 மைக்ரோ மீட்டருக்கு குறைவான அளவுள்ள துகள்களில் 35 சதவீதம் வாகனங்களில் இருந்து வெளியாகின்றன. கொல்கத்தா (150), டெல்லி (100) க்கு அடுத்தபடியாக சராசரியாக தனிநபர் சுவாசிக்கும் வாகனப்புகையின் அளவு அதிகமாக இருப்பது சென்னையில்தான் (72). உண்மையில் வாகனங்களால் ஏற்படும் மாசு அதிகமாகவே இருந்தாலும் நீண்ட கடற்கரை காரணமாக வாகனப் புகை அடர்த்தி குறைக்கப்படுகிறது.
தமிழகத்தில் இறப்பவர்களின் ஐந்தில் ஒருவர் சுற்றுப்புற காற்று மாசுபடுவதால் இறப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக கார்களை விற்பதன் மூலம் தனியார் மருத்துவ சேவைகளுக்கான தேவையை உருவாக்கி சந்தையை விரிவுபடுத்தியிருக்கின்றது இந்த மக்கள் விரோத மோசடி பொருளாதாரக் கொள்கை. சென்னையிலும் பிற நகரங்களிலும் சில ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கும் பல தனியார் மருத்துவமனைகள் முளைத்துள்ளன.
காற்று மாசுபடும் வீதம், அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 முதல் 2.42 மடங்கு வரை சமயங்களில் அதிகரித்திருந்ததும் தெரிய வந்தது. குறிப்பாக மணலி, கத்திவாக்கம், திருவெற்றியூர் பகுதிகளில் மாசு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கத்திப்பாரா, அண்ணா சாலை, ஆலந்தூர் சாலையில் காற்று மாசுபடுவது அதிகமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் முதலிடத்தில் வடக்கு உஸ்மான் சாலை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
பெட்ரோல் கார்களது மாசுபடுத்தும் துகளின் அடர்த்தியானது டீசல் காரை விட பத்து மடங்கு குறைவுதான். இஞ்சினுக்கு தக்கபடி 504 முதல் 592 கிராம் வரையிலான கார்பன் டை ஆக்சைடு வாயுவை கார்கள் வெளியேற்றுகின்றன. ஆனால் பெட்ரோலுக்கு அதிக விலை என்பதால் நாட்டின் அன்னிய செலவாணியை பறிகொடுப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். மேலும் கார்களில் ஒரிருவர் செல்வதால் நூற்றுக்கணக்கான கார்கள் ஏற்படுத்தும் மாசுபடுதலை விட நூற்றுக்கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் உருவாக்கும் மாசு குறைவுதான். எனவே பெட்ரோல் நல்லது, டீசல் கெட்டது என்ற பார்வையும் தவறுதான்.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் தான் பிரச்சனை
அடிப்படை பிரச்சனையான தனியார் மய, தாராள மய, உலகமய பொருளாதார கொள்கைகளை சரி செய்யாமல் புற்றுநோய் வந்தவருக்கு தலைவலி தைலம் தேய்த்து விடுவது போல வாகனங்களால் ஏற்படும் பிரச்சனைகளை சீர்செய்ய நடவடிக்கைகளை எடுக்கிறது அரசு. நகரத்தின் பாதி வாகனங்களே அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மாசினை வெளியிடுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 2 ஸ்டிரோக் வாகனங்களது பயன்பாட்டை தடுத்தல், சரக்கு வாகனங்களை பகலில் நகருக்குள் வர விடாமல் தடுத்தல், பார்க்கிங் வசதியை முறைப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இதனை சரிசெய்ய முயல்கிறது அரசு.
ஆனால், முதலாளித்துவ அராஜக உற்பத்தி கட்டவிழ்த்து விட்டிருக்கும் வாகன பெருக்கம் பிரச்சனைகளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. சாலைகளின் எண்ணிக்கை, பாலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் இப்பிரச்சினையை தீர்க்கலாம் என்றொரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லியில் இம்முறையினால் இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதுடன், மணிக்கு 15 கிமீ வேகத்தில்தான் வாகனங்கள் முக்கிய நேரங்களில் நகர்கின்றன. சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல.
தமிழகத்தில் ஒரு நாளில் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை 4,000, புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களது எண்ணிக்கை 3,666. புதிதாக வாகனம் வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 3 சதவீதம் அதிகரித்து வருகிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் இது 10 சதவீதமாக உயரும் எனத் தெரிகிறது.
சென்னையில் 7 சதவீதமாக இருந்த இருசக்கர வாகன பயன்பாடு தற்போது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1.5 சதவீதமாக இருந்த கார் பயன்பாடு 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னர் 1991-ல் ஒரு வீட்டுக்கு 0.25 என்ற வீதத்திலான வாகன எண்ணிக்கை தற்போது 1.25 ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே வாகன நெருக்கடியும் காற்று மாசுபடுதலும் அதிகமான மெக்சிகோ நகரத்தினை விட சென்னையில் மோட்டார் வாகன பயன்பாடு அதிகரித்துள்ளது. அலுவலக நேரத்தின் போது சில சாலைகளில் மணிக்கு 11-12 கிமீ வேகத்தில்தான் வாகனங்களில் பயணிக்க முடிகிறது.
முதலாளித்துவத்தின் திட்டமிடாத அராஜக உற்பத்தி தாக்குப் பிடிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது.
செல்பேசி குறுஞ்செய்திகள், டிஜிட்டல் ஃபோர்டுகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு முன்னரே நெரிசல் பற்றிய தகவல் தந்து விட்டால் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நெரிசலுக்குள்ளான சாலையை தவிர்த்து விடுவார்கள் என்றும் தீர்வு சொல்கிறார்கள். ஆற்றின் குறுக்கே அபாயகரமான ஆழத்தை அறிவிக்க வைத்திருக்கும் தூண் குறித்த காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது. (அதாவது அபாயகரமான ஆழத்தின் மட்டத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த தூண் தண்ணீர் மட்டம் அபாய கட்டத்தை எட்டியவுடன் நீரில் மூழ்கி விடும். புதிதாக வருபவர் அதனை பார்க்க முடியாது).
நகர, மாநகரங்களில் உள்ள மக்கட்தொகைக்கேற்ப பதிவு செய்யப்படும் வாகன எண்ணிக்கையை மட்டறுக்க வேண்டும் என்று தீர்வு முன் வைக்கப்படுகிறது. இத்தகைய அரைகுறை தீர்வுகளும் கூட தமது போதாமையால், ‘சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும் கடவுள்’ என்ற உலகமய தாசர்கள் முன் வைக்கும் முதலாளித்துவ கோட்பாட்டை நிராகரித்து சமூக அளவிலான திட்டமிடலை கோருகின்றன.
கடன் வாங்கி கார் வாங்கி, தவணை கட்டத் தவறியவர்களை ஆள் வைத்து மிரட்டி அதிகமாக பணம் பறிப்பது போன்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. இதுதான் இரு சக்கர வாகனங்களும், கார்களும் அதிகரித்த பிறகு நாடு அடைந்திருக்கும் சமூக வளர்ச்சி. தென்னிந்தியாவின் டெட்ராய்டு அடைந்துள்ள பிரமிப்பூட்டும் ‘வளர்ச்சி’.
ஒருக்கால் அரசு நடத்தும் பொதுப்போக்குவரத்துக்குரிய வசதிகளை மேம்படச் செய்தால் பேருந்துகள், ரயில்கள் மூலம் அனைவரும் விரைவில் பயணிக்கலாம் எனும் நிலைமை உருவாகும். இதன் மூலம் எரிபொருள் இறக்குமதியை குறைத்து அன்னிய செலவாணியை பாதுகாக்கலாம். மாறாக கார்களின் உற்பத்தி என்பது இந்தியாவின் வளங்களை மாசுபடுத்தி, நிதியாதாரத்தை சுரண்டி பன்னாட்டு நிறுவனங்கள் இலாபத்தை கொள்ளையடித்து செல்வதற்கே பயன்பட்டு வருகிறது.
இதுதான் ‘வளர்ச்சி’ என்றால் நாம் இதை தற்கொலை என்றே அழைக்க வேண்டும். உலகமயத்தின் புதிய பொருளாதாராக் கொள்கை இப்படித்தான் போக்குவரத்து எனும் ஒருதுறையிலேயே பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.
நாடு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சந்தை விதிகளை தகர்த்து, சோசலிச முறையிலான திட்டமிட்ட உற்பத்தியை அமல்படுத்துவதுதான் இதற்கு தீர்வு என்பதை இப்போதாவது ஏற்கிறீர்களா?
பவுத்தம் என்றால் புத்தர் சிலைகளின் தியான இருப்பு, அசோகருக்கு வழி காட்டிய ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின் அறம், தலாய் லாமாவின் துறவி வேடம் என்ற பிம்பங்கள் மட்டும் முழுமையில்லை. ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்து எஞ்சிய மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் சிங்கள-பவுத்த பேரினவாதம், மியான்மாரில் ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது தொடர் இனவெறி தாக்குதல்கள் நடத்தும் பவுத்த மதவாதம் போன்ற சமூக எதார்த்தங்ககள் இன்றி பவுத்த மதம் இல்லை.
ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
ஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக மாலத்தீவுகள் நூறு வருடங்களுக்கு பிறகு அழிந்து போகும் ஆபத்து சூழ்ந்து இருப்பதை போல எதிர்காலத்தில் ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
ரொகிங்கியா மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ரொகிங்கியா இன மக்கள் மியான்மரின் ரக்கீன் மாகாணத்தில் கணிசமாக வாழ்ந்து வருகிறவர்கள். மியான்மரில் எட்டு லட்சம் ரொகிங்கியா இனத்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் தம்மை மியான்மரின் பூர்வகுடிகள் என்று கருதும் போது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பங்களாதேஷிலிருந்து மியான்மருக்கு குடிபுகுந்தவர்கள் என்று அந்நாட்டு பெரும்பான்மை மதவாதிகள் கூறுகின்றனர். 1950-க்கு முன்புள்ள எந்த பர்மீய ஆவணத்திலும் ரொகிங்கியா என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்று கூறி இவர்களை சட்டவிரோத வந்தேறிகளாக பாவித்து அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து வருகிறது மியான்மர் அரசாங்கம்.
1948-ல் ஆங்கிலேயர்கள் மியான்மரை விட்டு வெளியேறிய பிறகு அமைந்த அரசு ரொகிங்கியாக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்தது. 1978-ல் ரொகிங்கியா மக்கள், ராணுவ சர்வாதிகார கும்பலால் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். 1982-ம் வருடம் புதிய குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு ரொகிங்கியாக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இதன் காரணமாக இம்மக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் முறைப்படியான ஆவணங்கள் எதுவும் பெற முடியாமல் போனது. ஒரு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. தங்கள் பகுதியை விட்டு அவர்கள் இதர பகுதிகளுக்கு செல்ல முடியாது.
உத்தர பிரதேச மாநில முசாபர்நகரில் ஜாட் சாதி பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக சொல்லி இந்து மதவெறியர்கள் பின்னிருந்து எப்படி ஒரு பெரும் வன்முறை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டதோ, அதே போன்றதொரு சம்பவம் 2012 மே மாதம் ரொகிங்கியா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது. வீடு திரும்பும் ஒரு பவுத்த பெண்மணி அடையாளம் தெரியாத நபர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்படுகிறார். அடுத்த சில மணி நேரங்களிலே பர்மீய போலிஸ் மூன்று ரொங்கியா இளைஞர்களை கைது செய்கிறது. சில நாட்கள் கழித்து ரொகிங்கியா மக்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பேருந்தை அடித்து நொறுக்கி 10 முஸ்லிம்களை கொன்றழிக்கின்றனர் பவுத்த மத வெறியர்கள்.
ரொகிங்கியா அகதிகள்
பவுத்த வெறியர்களுக்கு பிரச்சினையை முடிக்க மனமில்லை. அதே மாதம் ரொகிங்கியா மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. ஒரே இரவில் 14 கிராமங்கள் எரியூட்டப்பட்டன. மக்கள் பெருமளவுக்கு இடம்பெயர்கிறார்கள். சுமார் தொண்ணூறாயிரம் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறினார்கள். ரக்கீனின் தலைநகரான சித்வேக்கு ஓடிய பலரை பிடித்து அகதிகள் முகாமில் அடைத்தது போலிஸ். மக்கள் தாய்லாந்து-பர்மா எல்லை வரை ஓடினார்கள்.
அதே வருடம் அக்டோபர் மாதத்தில் திரும்பவும் இரண்டாவது அலையாக ரொகிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த முறை ரொங்கியா மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியாவுக்கு தப்பினார்கள். வழியில் படகு கவிழ்ந்து பலர் மாண்டார்கள். 1.45 லட்சம் ரொகிங்கியா முஸ்லிம்கள் மியான்மருக்கு உட்பட்ட பகுதிகளிலே சிதறி ஓடி பதுங்கி வாழ்கின்றனர். தாய்லாந்து. பங்களாதேஷ், மலேசியாவுக்கு ஓடியவர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் இருப்பார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அரசின் முழுமையான ஆதரவோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இன சுத்திகரிப்பு நடவடிக்கை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்ற ‘ஜனநாயகத்தின் தேவதை’ ஆங் சான் சூ கீ ரொகிங்கியாக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. 20 வருட சிறை வாழ்க்கையை முடித்துக் கொண்டு வந்த பின்னர் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியில் ரொகிங்கியாக்கள் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது அவர் வன்முறையை கட்டவிழ்த்து விடும் பவுத்த இனவெறியர்களையும், வன்முறைகளில் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படும் ரொகிங்கியாக்களையும் ஒரே தட்டில் வைத்தார். பவுத்த இனவாதத்தை உரத்து கண்டிப்பதற்கு பதில் ‘எதிர் தரப்பு குறித்த அச்சம் இரு தரப்பிலும் நிலவுவதாக’ தெரிவித்தார். இவருக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
“ரொகிங்கியா இனப்படுகொலையை நிறுத்து”
இந்த வருடம் மார்ச் மாதம் நடந்த வன்முறையில் நாற்பது ரொகிங்கியாக்கள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து 8,900 ரொகிங்கியாக்கள் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவுக்குள் அடைக்கலம் நாடியிருக்கும் ரொகிங்கியாக்களின் எண்ணிக்கை 15,000 வரை இருக்குமென்பது சமூக ஆர்வலர்களின் கணக்கு. பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் குடிபுகும் மக்களை கடுமையாக எச்சரித்து தனது தேர்தல் பரப்புரைகளின் போது அசாமிலும், மேற்குவங்கத்திலும் மோடி பேசியது நினைவிருக்கலாம். அசாமில் மோடி உரையாற்றிவிட்டு வந்த சில நாட்களிலே முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. எனவே மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வரும் ரொகிங்கியாக்கள் மீது புதிய அரசின் பார்வை எப்படி இருக்கும் என்ற நினைப்பே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
ரொகிங்கியா மக்களுக்கு கொடுமைகள் 2012-ம் வருடத்திலிருந்து மட்டும் இழைக்கப்படவில்லை. இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியானவர்கள். ரொகிங்கியா மக்களை மைய நீரோட்டத்திலிருந்து முழுவதுமாக ஒதுக்கி வைப்பதில் முழுமையான வெற்றியை கண்டுள்ளது பவுத்த பெரும்பான்மை சமூகம். அம்மக்கள் மீதான தாக்குதலுக்கு சமூக ஒப்புதல் பெறும் வண்ணம் பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான இனவாத அரசியலை வளர்த்து வருகின்றனர், பவுத்த பிக்குகள்.
மதவெறியால் வேட்டையாடப்படும் ரொகிங்கியா மக்கள்
நியூ யார்க் டைம்ஸ் இதழின் செய்தி கட்டுரையில் அசின் விராத்து என்னும் பவுத்த பிக்கு கூறும் போது ”அன்பும், கருணை உள்ளமும் கொண்டிருக்க வேண்டியது தான்; அதற்காக ஒரு வெறிநாயுடன் தூங்க முடியுமா?” என்று ரொகிங்கியாக்களை வெறிநாயாக சித்தரித்து இருந்தார். ”இஸ்லாமியர்களுடன் எக்காரணம் கொண்டும் இணையாதீர்கள். அவர்கள் நமது நிலங்களையும், உடைமைகளையும் பறித்துக் கொள்வார்கள்; எனவே அவர்களை தனிமைப்படுத்துங்கள்” என்று பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. 2007-ம் ஆண்டு ராணுவ சர்வாதிகார கும்பல் அரசை எதிர்த்து போராடிய பவுத்த பிக்குகளுக்கு முழு ஆதரவையும், சுதந்திரத்தையும் வழங்கி வருகிறது, தற்போதைய ராணுவ கும்பலின் ‘ஜனநாயக’ அரசு.
இப்படி பவுத்த பிக்குகளின் இனவாத அரசியலும், ராணுவ சர்வாதிகார கும்பல் அரசின் இனவாத கொள்கையும் இணைந்து பவுத்த பெரும்பான்மை மக்களிடமிருந்து முழுவதுமாக ரொகிங்கியா முஸ்லிம்களை முற்றிலுமாக அந்நியப்படுத்தி உள்ளது. அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் ரொகிங்கியாக்கள் தமது தற்போதைய வாழ்க்கைக்கு சற்று முன்பான வாழ்க்கையாவது கிடைக்குமா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் பொது பல சேனா உருவாக்கியிருக்கும் சமூக பலத்தில் ராஜபக்சே, மியான்மரில் பவுத்த பிக்குகள் உருவாக்கியிருக்கும் சமூக பலத்தில் ராணுவ சர்வாதிகார கும்பல், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் உருவாகியிருக்கும் சமூக உளவியல் பலத்தில் பாஜக என்று நம்மை பாசிசம் சூழ்ந்து நிற்கிறது. ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகளிடம் ஒற்றுமையை வளர்த்து இந்த நச்சு சூழலை வெட்டி வீழ்த்துவோம்.
தாய்மொழியில் சிந்தித்தவர்கள்தான் உலகின் தலைசிறந்த அறிவாளிகள்!
உங்களுக்குத் தெரியுமா?
அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 1 கோடியே 35 லட்சம்! அரசுப் பள்ளிகள் மொத்தம் 56,573!
தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 27 லட்சம் தனியார் மெட்ரிக் பள்ளிகள் சுமார் 16,000
தனியார் பள்ளிகளை புறக்கணித்து அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த போராடுவதுதான் நிரந்தரத் தீர்வு!
கல்வியை
அரசு இலவசமாக வழங்குகிறது
தனியார் அதை காசாக்குகிறது எது சிறந்தது? எது வேண்டும்?
தனியார் பள்ளி தரம் என போகும் பெற்றோர்களே! உயர்கல்வி, வேலைவாய்ப்பில் அரசிடம் வருவது ஏன்?
தாய்மொழி கல்வி சுயசிந்தனையை வளர்க்கும்! ஆங்கில வழி கல்வி அடிமைத்தனத்தை உருவாக்கும்!
மாணவர்களை மனிதனாக்கும் அரசு கல்வி வளர வேண்டும் மார்க் எடுக்கும் எந்திரமாக மாணவர்களை மாற்றும் தனியார் கல்வி ஒழிய வேண்டும்
4,000 சம்பளத்தில் தகுதியற்ற ஆசிரியர்கள் – தனியார் பள்ளி தரமானதா? 40,000 சம்பளத்தில் தகுதியுடைய ஆசிரியர்கள் – அரசு பள்ளி தரமற்றதா?
சுயசிந்தனை, அறிவியல் மனப்பான்மை சாதி ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாய வளர்ச்சி இதுவே கல்வியின் முழுமை! காசு, தரம், போட்டி என்று பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தள்ளி பிராய்லர் கோழியாக்குவது கொடுமை
கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராட உங்கள் ஊரில் எமது பெற்றோர் சங்கத்தின் கிளையைத் துவங்க நாங்கள் உதவுகிறோம்.
எங்களோடு இணைந்து செயல்பட உடனே தொடர்பு கொள்ளுங்கள்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் – கடலூர் மாவட்டம் – 9345067646 மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம் 9360061121
—————————
மாநாடு
7-6-2014 சனி, மக்கள் மன்றம், விருத்தாசலம்.
காலை அமர்வு – 10 மணி
தலைமை
திரு வெ வெங்கடேசன், மாவட்ட தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்
வரவேற்புரை
திரு ச. செந்தாமரைக்கந்தன், மாவட்ட செயலாளர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்
அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளை ஒப்பிட முடியாது!
பேராசிரியர் ந.சி.சந்திரசேகரன், முதல்வர் (ஓய்வு)
கந்தசாமிகண்டர் கல்லூரி,
நாமக்கல்
இலவச கல்வியின் கழுத்து நெரிக்கும் தீர்ப்புகள்!
வழக்கறிஞர் ச. மீனாட்சி, உயர்நீதிமன்றம், சென்னை
மனித உரிமை பாதுகாப்பு மையம்
ஆங்கிலவழி கல்வி சொர்க்கத்துக்கு போகும் குறுக்கு வழியா?
உதவிப் பேராசிரியர் ஆ இளங்கோவன்,
விலங்கியல் துறை, அண்ணாமலை பல்கலைக் கழகம்,
சிதம்பரம்
கல்வி கொள்ளையர்களாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்!
தோழர் த கணேசன், மாநில அமைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு
தலைமை
பொறியாளர் த.குணசேகரன், மாவட்டத் தலைவர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்
ஒருங்கிணைப்பு
திரு சி.எஸ்.பி.ரவிக்குமார்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
கொள்ளிடம்
பரிசளிப்பு நிகழ்ச்சி
பேச்சுப்போட்டி
விடுதலைப் போரின் வீரமரபு
ஓவியப்போட்டி
டாஸ்மாக் – சீரழிவு
திருக்குறள் ஒப்புவித்தல்
கல்வி, ஒழுக்கம் அதிகாரம்
போட்டிகள் ஒருங்கிணைப்பு
திரு க. செல்வக்குமார், திரு ஆ. செல்வம், திரு ப. தீபக்குமார், திரு ரா.குமார், மனித உரிமை பாதுகாப்பு மையம், திரு. வா. அன்பழகன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம்
பேரணி மாலை 5 மணி
துவங்குமிடம்
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்
துருக்கியின் சோமா நகரில் அமைந்துள்ள சுரங்கம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 13, 2014) பணிக்குழு மாற்றத்தின் (ஷிப்ட்) போது மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஏறக்குறைய 420 மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தில் சிக்கித் தவித்த சுமார் 800 தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். 363 தொழிலாளிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். 201 தொழிலாளிகள் கொல்லப்பட்டு உயிரற்ற உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள 200-க்கும் மேற்பட்டவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. எஞ்சிய தொழிலாளிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது.
சோமா நகரம் மேற்கு துருக்கியில் உள்ள மனிசா மாகாணத்தில் அமைந்துள்ளது. தலைநகர்இஸ்தான்புலில் இருந்து 250 கிமீ தூரத்தில் அமைந்துள்ள சோமா சுரங்கத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடி விபத்துக்கு நிகழ்ந்திருக்கிறது. விபத்து நடந்தவுடன் கார்பன் மோனாக்சைடு அதிக அடர்த்தியுடன் பரவி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் போதிய பிராண வாயு கிடைக்காமல் மாண்டு போயுள்ளனர்.
சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி
தரைக்கு அடியில் 2 கிமீ ஆழத்தில் துவங்கிய இந்த வெடி விபத்தைத் தொடர்ந்து சுரங்கத்திற்குள் மின்தூக்கிகள் செயலிழந்து போயின. உள்ளே சிக்கியுள்ளவர்களில் பலரும் முக்கிய கதவிலிருந்து 4 கிமீ தூரத்தில் இருக்க கூடும் எனத் தெரிகிறது. பணிக்குழு மாறும் போது விபத்து நேரிட்டதால் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு சொல்ல முடியாது என்கிறார்கள். இறந்தவர்களில் 15 வயது சிறுவனும் அடக்கம்.
சுரங்கத்திற்குள் ஆக்சிஜனை செலுத்தியபடி மீட்பு பணியை துரிதப்படுத்த முயன்றாலும் இரண்டாவது பிரிவு சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள சரிவு மீட்புப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக மாறி விட்டது. சுரங்கத்தின் முக்கிய கதவை சுற்றிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நின்று கையறு நிலையுடன் அழுதபடியே நின்று கொண்டிருக்கின்றனர்.
துருக்கியின் பிரதமர் எர்டோகன் கடந்த 2002-ம் ஆண்டு, கமால் அட்டாடுர்க்கின் மக்கள் குடியரசு கட்சியை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றினார். இந்தியாவில் காந்தியிசம் என்ற பெயரில் மக்களை ஏய்த்து வரும் காங்கிரசுக் கட்சியைப் போன்று துருக்கியில் கமாலிசம் என்ற பெயரில் நாட்டை சுரண்டி வரும் கட்சி மக்கள் குடியரசுக் கட்சி. இக்கட்சியின் மக்கள் விரோத கொள்கைகளால் வெறுப்படைந்த மக்கள் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியைப் போன்று மதவாதம், கார்ப்பரேட் நலன்கள், மற்றும் உலகமயமாக்கத்துக்கு ஆதரவான எர்டோகனின் AKP கட்சியை தேர்ந்தெடுத்து, எண்ணெய் சட்டியிலிருந்து தப்பி எரிகிற நெருப்பில் விழுந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில் துருக்கியின் பொருளாதாரம், கட்டுமானத் துறையில் (ரியல் எஸ்டேட்) குவிந்த நேரடி அன்னிய முதலீடுகளாலும், வெளிநாட்டுக் கடன்களாலும் வேகமாக வளர்ந்தது. கோட்டு-சூட்டு போட்ட முதலாளிகள் உலகளாவிய நிதிச் சூதாட்டம் மூலம் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். உழைக்கும் மக்களின் உரிமைகள் தொடர்ந்து சூறையாடப்பட்டன. பன்னாட்டு தொழிலாளர் சபையின் (ILO) புள்ளிவிபரத்தின்படி பணியிடத்தில் உயிரைப் பறிக்கும் விபத்துகளின் எண்ணிக்கையில் துருக்கி ஐரோப்பாவில் முதலிடத்திலும், உலகிலேயே 3-வது இடத்திலும் உள்ளது.
2005-ல் சுரங்கங்களை தனியார்மயமாக்கிய பிறகு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை எந்த நிறுவனமும் முறையாக பின்பற்றவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. இதுதான் விபத்துக்கு காரணம் எனத் தெரிந்தாலும் அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது.
விபத்து நடந்துள்ள சோமா நகர சுரங்கங்களில் வழக்கமான வருடாந்திர பரிசோதனைகள் ஏதும் நடைபெறவில்லை என்பதை தொழிற்சங்கங்கள் கடந்த ஏப்ரல் 29 அன்று சுட்டிக் காட்டியிருந்தன. ஆனால் அதனை ஆளும் கட்சியும், பிரதமர் எர்டோகனும் ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியம் செய்து சுரங்கத்தை நடத்தும் தனியார் நிறுவனமான சோமா கோமர்-க்கு ஆதரவாக நடந்து கொண்டனர். இந்த விபத்து நடந்த பிறகு அரசு இட்டுக் கட்டும் வேலைகளை துவங்கி விட்டது. அதாவது 2012-லிருந்து கடந்த மார்ச் வரை ஐந்து முறை சுரங்கத்தை சோதனை செய்து விட்டதாக தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் காயமடைந்த தொழிலாளி
1992-ல் துருக்கியில் கருங்கடலுக்கருகில் ஸோங்குல்டாக்கில் நடந்த சுரங்க விபத்துதான் இதுவரையில் அதிகமான பேரை பலி கொண்டதாக (270 பேர்) இருந்து வந்தது. அந்த சாவு எண்ணிக்கையை தற்போது தாண்டியுள்ள இந்த விபத்தை தனியார்மயம் கொண்டு வந்த படுகொலை என்றுதான் அங்கு போராடுபவர்கள் கூறுகிறார்கள்.
அரசு மூன்று நாள் தேசிய துக்கம் அறிவித்துள்ளது. மத விவகாரங்களுக்கான தலைமையகம் வரும் வெள்ளிக்கிழமை துருக்கியில் உள்ள மசூதிகளில் எல்லாம் சோமா சுரங்கத்தில் இறந்தவர்களுக்காக வழிபாடு செய்ய உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை புறக்கணித்து தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு வழி வகுத்த சுரங்க முதலாளி சோமா நிறுவனம் தனது இணைய பக்கத்தை கருப்பு பக்கமாக்கி தனது துக்கத்தை பகிர்ந்து கொள்வதாக நாடகமாடுகிறது.
பிரதமர் எர்டோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில் உலகில் பல சுரங்க விபத்துக்கள் நடப்பதாகவும், அவற்றில் பிரிட்டனில் 19-ம் நூற்றாண்டில் நடந்தவையும் அடங்கும் என்று விளக்கம் கூறியிருந்தார். எவ்வளவு முயன்றாலும் சிறு தவறுகள் நேருவது இயற்கைதான் என்றும் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது முதலாளிகள் தமது லாபக் குவிப்பை அதிகப்படுத்த தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு 19-ம் நூற்றாண்டு முறைகளையே பயன்படுத்துவதை நியாயப்படுத்துகிறார்.
சோமா சுரங்கத் தொழிலாளர்கள்
தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மக்கள் அரசுக்கு எதிராகவும், தனியார்மயத்துக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியபடி அங்காராவில் அமைந்துள்ள எரிசக்தித் துறை அமைச்சகத்தை நோக்கி பேரணி போகிறார்கள். இஸ்தான்புல்லில் அமைந்துள்ள கம்பெனியின் சுவற்றில் ‘படுகொலை’ என்று எழுதுகிறார்கள். ஆளும் கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகளின் குடும்பத்தினர் சோமாவிற்கு வந்த பிரதமரின் காரை முற்றுகையிடுகிறார்கள். திருடன், கொலைகாரன் என்று திட்டி முழக்கமிடுகிறார்கள். இதை எதிர்கொள்ள இயலாத பிரதமர் எர்டோகன் தப்பியோடி அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் போலீசு உதவியுடன் ஒளிந்து கொள்கிறார். இதனால் கோபமான அவரது ஆலோசகர் யூசுப் எர்கல் என்பவர் போராடும் ஒருவரை போலீசாருடன் சேர்ந்து தாக்குவது போன்ற புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகவே மக்களின் கோபம் இன்னும் அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரதமருக்கு எதிராக கண்டனங்கள் குவியத் தொடங்கியுள்ளன.
சோமா நகருக்கு வந்த துருக்கி பிரதமரை துரத்தியடிக்கும் மக்கள்
சுரங்க விபத்தையும், பாதுகாப்பற்ற பணிச்சூழலில் தொழிலாளர் உயிரிழப்பையும் கண்டித்து தேசத்தின் நான்கு முக்கிய தொழிற்சங்கங்கள் கடந்த வியாழக் கிழமை (மே 15) ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்தன. அங்காரா, இஸ்தான்புல் நகரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடத் துவங்கியுள்ளனர். சிறு நகரங்களிலும் மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தன. சிக்கன நடவடிக்கைக்காக யார் தொழிலாளிகளின் பாதுகாப்பை குறைத்துக் கொள்ள உத்திரவிட்டார்களோ அவர்கள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். போலீசார் தண்ணீர் குழாய்களாலும், கண்ணீர் புகை குண்டுகளாலும் போராடுபவர்களை எதிர் கொண்டாலும் அடக்க இயலாமல் திணறுகின்றனர்.
வரும் ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் அதுபற்றிய கவலையில் ஆளும் கட்சி இருக்கிறது. சோமா சுரங்க முதலாளியின் மனைவி ஆளும்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றவர். போராடும் பலரும் இளைஞர்கள். பிரதமரோ அடிப்படைவாதிகள் தமது அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக போராடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.
முதலாளித்துவ லாப வெறிக்கு பலியான சோமா சுரங்கத் தொழிலாளிகளுக்கு உண்மையான அஞ்சலி என்பது உலக தொழிலாளிகள் தனியார்மயத்துக்கு பாடை கட்டுவதில்தான் இருக்கிறது என்பதை துருக்கி போராட்டம் முன்னறிவிக்கிறது.
2013 – 14 ஆம் ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%. சென்ற ஆண்டை விட அதிகம். ஒரு பக்கம் தனியார் பள்ளிகள் தங்களின் தேர்ச்சி விகிதத்தைக் காட்டி அடுத்த கல்வியாண்டின் கொள்ளைக்காக தங்கள் விளம்பரங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் , சாலைகளிலும் வைத்து ஆரவாரமாக ஆள்பிடிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டன.
உண்மையில், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி எப்படி சாத்தியமாகிறது?
மாநகராட்சி பள்ளிகளுக்கு ஆதரவாக புமாஇமு ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).
தில்லு முல்லு வேலைகளை அரங்கேற்றியே தேர்ச்சி விகிதத்தை அதிகமாக்கும் கலையில் தனியார் பள்ளிகளை விஞ்சுவதற்கு யாருமில்லை. மாணவர்களுக்கு பிட் எழுதிக் கொடுப்பது, தேர்வு அறையிலேயே நோட்ஸ் கொடுத்து எழுத வைப்பது, தங்கள் பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் எங்கு திருத்தப்படுகின்றன என்பதை கண்டுபிடித்து, இலஞ்ச இலாவண்யங்கள் மூலமாக மதிப்பெண்கள் பெறுவது போன்ற திருப்பணிகளை செய்கின்றன. இதன் மூலம் தங்கள் பள்ளியின் ‘தரத்தை’ உயர்த்திக் கொள்கின்றன.
அதுமட்டுமல்ல, 10-ம் வகுப்பில் 450-க்கும் அதிகமான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டும் தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு, அதன் மூலம் 12-ம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சியை உத்தரவாதப்படுத்தி, அதன் மூலம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளும் மோசடியை தனியார் பள்ளிகள் அரங்கேற்றுகின்றன. இதிலிருந்து படித்து மதிப்பெண் எடுப்பதில்ஆற்றல் குறைவான மாணவர்களை படிக்க வைத்து அவர்களை மதிப்பெண் எடுப்பவர்களாக மாற்றும் தகுதி தனியார் பள்ளிகளுக்கு கிடையாது என்பதை உணர முடியும்.
இப்படி, நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டும் தங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளும் தனியார் பள்ளிகள், சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை தங்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றுகின்றன. ஊரப்பாக்கம் நீலன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்பு செல்லும் மாணவன் தமிழரசனை பள்ளி நிர்வாகம் கட்டாயமாக வெளியேற்றியது. காரணம், அம்மாணவன் 10-ம் வகுப்பு வந்தால் நன்றாக மதிப்பெண் எடுக்க மாட்டான் என்பதுதான். இதனால் மனமுடைந்த அம்மாணவன் அன்றே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். தனியார் பள்ளிகளின் யோக்கியதைக்கு, கொடுமைக்கு இந்த ஒரு சான்றே போதுமானது.
தனியார் பள்ளிகளைக் கண்டு தரத்திற்காக மயங்கும் பெற்றோர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். வட்டிக்கு கடன் வாங்கி, தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது, பிள்ளைகளையும் பறிகொடுக்கும் இந்நிலையைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்.
மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தி கற்பிக்கும் அம்சங்கள் தனியார் பள்ளிகளில் ஏதுமில்லை. தரமற்ற ஆசிரியர்களை நியமித்து, அவர்கள் மூலம் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து, வெறும் மதிப்பெண் மட்டுமே பெறுகின்ற இயந்திரங்களாக மாணவர்களை உற்பத்தி செய்கின்றன. அப்படிப் பெறுகின்ற மதிப்பெண்களை மூலதனமாக வைத்தே ஒவ்வொரு வருடமும் பல ஆயிரங்கள் கட்டணத்தை உயர்த்துகின்றன.
இன்னொரு புறமோ அரசுப்பள்ளிகள் அமைதியாக சாதித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டை (79%) விட இந்த ஆண்டு (84%) ஐந்து சதவிகிதம் கூடுதலான தேர்ச்சியைப் பெற்றுள்ளன. ‘எல்லா அடிப்படை வசதிகளும் உள்ளன, ஸ்மார்ட் கிளாஸ் உள்ளது, கட்டிடங்கள் பளபளப்பாக உள்ளன’ என்று பீற்றிக் கொள்ளும் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், அரசுப்பள்ளிகளின் சாதனை மகத்தானதாகும்.
அடிப்படை வசதிகள் இல்லாமல், கழிவறை, குடிநீர் வசதிகள் மிக அவசியமான வசதிகள் இல்லாமல், கற்கும் சூழல் மிக மோசமாக உள்ள நிலையிலும், எந்த வசதியும் செய்து கொடுக்காமல், பற்றாக்குறையாக உள்ள ஆசிரியர்களை நியமிக்காமல் அரசு திட்டமிட்டே அரசுப் பள்ளிகளை புறக்கணித்து, கல்வி தனியார்மயத்தை ஊக்குவித்து வரும்நிலையிலும் இந்தச் சாதனையை அரசுப் பள்ளிகள் நிகழ்த்தியுள்ளன என்பதே குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அரசுப் பள்ளிகள் தரமில்லையென்றாலும், தரமான ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே உள்ளனர். அவர்களின் கடுமையான உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலுமே இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது என்பதே உண்மை. சென்னையில் மட்டும் நான்கு மாநகராட்சி பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. பெரும்பாலான மாநகராட்சி பள்ளிகள் 90%-க்கும் மேல் தேர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளன.
இதுவே அரசுப்பள்ளிகள் தரமாக இருந்தால், மாணவர்களுக்கு பிடித்தமான கற்கும் சூழல் இருந்தால் எந்த தனியார் பள்ளியும் அரசுப்பள்ளிகளின் அருகில் நெருங்க கூட முடியாது. கட்டணமில்லாமல் மாணவர்கள் தரமான கல்வியை பெற முடியும். அதைத்தான் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி காட்டுகிறது. பல பெற்றோர்கள், தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேறி, “மாநகராட்சி பள்ளிகளில் நன்றாக கற்பிக்கிறார்கள் என்பதற்காக மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கின்றோம்” என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்ல, “தனியார் பள்ளிகளில் தாங்கள் சுயமரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறோம். ஆனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எங்களை மதித்து நடக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளையும் அவர்களின் பிள்ளைகளைப் போல பார்த்துக் கொள்கிறார்கள்” என்று மாதவரம் சாலை, பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் முதல் மதிப்பெண் (1143) எடுத்த சுகந்தி என்ற மாணவியின் அப்பா கூறுகிறார்.
தனியார் பள்ளிகள் என்றால் தரம் என்று மயங்கும் பெற்றோர்கள், தனியார் பள்ளிகளின் தரத்தைப் புரிந்து கொள்ள மேற்சொன்ன ஒரு உதாரணம் போதாதா?
அரசுப் பள்ளிகள் நமது பள்ளிகள். அங்கு நம் பிள்ளைகளை சேர்ப்போம். தரம் இல்லையென்று தனியார் பள்ளிகளுக்கு ஓடி, அங்கு தரமற்ற கல்வியை, காசு கொடுத்து பெறுவதை விட , தரமான ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உயர்த்தப் போராடுவோம். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைவதன் மூலம் கண்டிப்பாக நாம் இதை சாதிக்க முடியும். தரமான இலவசக் கல்வியை பெற முடியும். மனப்பாடக் கல்விக்கு பதிலாக உண்மையான அறிவியல்பூர்வமான கல்வியைப் பெற முடியும். ஒற்றுமையின் மூலம் இந்த அரசைப் பணிய வைக்க முடியும்.
இந்த நோக்கத்தை வலியுறுத்தி, பரவலாக மக்களிடையே இந்தக் கருத்தை பதிய வைக்கும் நோக்கத்தோடு, அரசுப்பள்ளிகளின் சாதனைக்கு வித்திட்ட ஆசிரியர்களை வாழ்த்தி சென்னை முழுக்க புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
நீதிமன்ற வாயில்கள், அரசு அலுவலகங்கள், கல்வித்துறை அலுவலகங்கள், அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் என பரவலாக தோழர்கள் மக்களிடையே சுவரொட்டிப் பிரச்சாரத்தை நடத்தியுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் அனைத்திந்திய அளவில் மோடியின் வெற்றியையும், தமிழகத்தில் ஜெயலலிதாவின் வெற்றியையும் உறுதி செய்கின்றன. இந்த முடிவே முற்றிலும் எதிர்பாராதது என்று கூறிவிட முடியாது. இந்த முடிவின் வீச்சென்னவோ அவர்களே எதிர்பாராததுதான்.
பத்தாண்டு காலம் ஒரு ஆட்சி நடந்த பின், அந்த ஆட்சியின் மீதான அதிருப்தியை அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி அறுவடை செய்து கொள்வதொன்றும் இந்தியாவின் தேர்தல் அரசியலில் புதிய விடயமல்ல. அந்த வகையில் இந்த வெற்றி என்பது மன்மோகன் அரசு மோடிக்கு போட்ட பிச்சை. எனவே, பாரதிய ஜனதா தனது வெற்றி குறித்து மிகைபடப் பீற்றிக் கொள்வதை நாம் பொருட்படுத்த தேவையில்லை.
நமது கவலைக்கும் அக்கறைக்கும் உரிய விசயங்கள் வேறு.
1
மன்மோகன் சிங் அமல்படுத்திய மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக, எந்த கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திடம் இந்திய மக்கள் தமது வாழ்க்கையையும் உரிமையையும் பறிகொடுத்தார்களோ, அதே முதலாளி வர்க்கம், இந்த தேர்தல் மூலம் மக்களின் எதிர்ப்புணர்ச்சியையும் அறுவடை செய்து கொண்டு விட்டது.
மக்களின் எதிர்ப்புணர்ச்சியை முன்னறிந்து, அதனை தான் விரும்பிய திசையில் திருப்பி, வடிவமைத்து, பிறகு தனது கைப்பிள்ளையையே தங்களுடைய தலைவனாக ஏற்கும்படி மக்களை நம்ப வைப்பதிலும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசு அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற 2009-ம் ஆண்டிலிருந்தே, “எதிர்காலப் பிரதமர் மோடி” என்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தொடங்கி விட்டதையும், “ஒளிரும் குஜராத்” என்ற புனைகதையை பரப்பியதையும் மே – 2014 இதழ் புதிய ஜனநாயகம் கட்டுரை விளக்கமாக கூறுகிறது.
பல்வேறு காரணங்களுக்காக மன்மோகன் சிங் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், மக்களுடைய அதிருப்தியின் வழியாக தனது அதிருப்திக்கு விடை கண்டுவிட்டது; மோடிக்கு முடி சூட்டுவதென்ற தனது கருத்தை இந்திய மக்களின் பொதுக்கருத்தாக மாற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறது என்பதுதான் இந்த தேர்தல் வெற்றியின் உண்மையான பொருள். இந்த தேர்தல் முடிவு, அம்பானி, டாடா, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை பிரதமர் நாற்காலியில் நேரடியாகவே அமர வைத்திருக்கிறது என்று கூறலாம். தொண்டைமானுக்குப் பதிலாக எட்டப்பன் அரியணை ஏறியிருப்பதாகவும் புரிந்து கொள்ளலாம்.
2
“இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை பிரச்சினைகள்” என்று சிலவற்றை மூடிஸ் என்ற ஏகாதிபத்திய தர நிர்ணய நிறுவனம் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும்போதே அறிவித்து விட்டது. கனிம வளக்கொள்ளைக்கு காடு, மலைகளைத் திறந்து விடுவது முதல் தொழிலாளர் உரிமைச் சட்டங்களை ரத்து செய்வது, காப்பீட்டுத் துறை தனியார்மயம் வரையிலானவை அந்த அடிப்படை பிரச்சினைகளில் அடக்கம்.
இது ஒரு புறமிருக்க, “ராமர் கோயில், காஷ்மீர் விவகாரம், பொது சிவில் சட்டம் போன்ற அடிப்படை பிரச்சினைகளை” மோடி கவனிக்க வேண்டுமென்று நேற்று ஆர்.எஸ்.எஸ் கூறியிருக்கிறது. “மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் நிர்ப்பந்தத்துக்கு பணியக்கூடாது” என்றும், “வளர்ச்சிப்பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் கார்ப்பரேட் எச்சில் பொறுக்கி ஊடகவியலாளர்கள், மோடிக்கு “அறிவுரை” கூறத்தொடங்கி விட்டனர். இனி ஊடகங்களும் ஓட்டுப் பொறுக்கிகளும் இதனைச் சுற்றி விவாதங்களையும் பொதுக்கருத்தையும் கொண்டு செல்வார்கள்.
ஆர்.எஸ்.எஸ், தான் எழுப்பும் அடிப்படைப் பிரச்சினைகளின் மீது மக்களின் கவனத்தை இழுக்கும். மூடிஸ் எழுப்பிய அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு, அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் நாட்டை அறுத்து எடைபோடுவார் மோடி. தென்னிந்திய முஜாகிதீன், தென் மாவட்ட முஜாகிதீன், சைக்கிள் குண்டு, டிபன் பாக்ஸ் குண்டு ஆகியவை தினத்தந்தி, தினமலரின் தலைப்புச் செய்திகளாக பரபரக்க, காடுகளும் மலைகளும் ஓசைப்படாமல் கைமாறும். காட் ஒப்பந்தத்துக்கும் பாபர் மசூதி பிரச்சினைக்கும் இடையிலான உறவை அன்று இந்தியா புரிந்து கொள்ளவில்லை. இன்று “வளர்ச்சி”க்கும் இந்துத்துவத்துக்கும் இடையிலான உறவை மோடி இந்தியாவுக்குப் புரிய வைப்பார்.
3
இந்த தேர்தலில் அதிமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றியும் நமது கவனத்துக்குரியது. இந்த வெற்றிக்குக் காரணம், மக்களின் அறியாமை என்று சொல்வதை விட, “அறிவு” என்று சொல்வதே பொருத்தமானதாக தெரிகிறது. வாக்குகளை விலைக்கு விற்பதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பது போலத் தெரிகிறது. மக்களின் பேரம் பேசும் ஆற்றல், தேர்தலுக்கு தேர்தல் கூடி வருகிறது.
“நாயே சும்மாவாடா ஓட்டு போட்டே, காசு வாங்கல? ஐயா போன வாட்டி நூறு ரூபா கொடுத்தீங்க கட்டுப்படியாகல, இந்த வாட்டி நூத்தம்பது கொடுங்கன்னு கேளு, அது ஜனநாயகம்; அத வுட்டுட்டு உரிமை அது இதுன்னு பேசுற?” என்று இயக்குநர் வி.சேகர் திரைப்படமொன்றில் கவுண்டமணி மக்களைப் பார்த்து பேசும் வசனம் வரும்.
இதனை நகைச்சுவைக் காட்சி என்று கருதி தமிழர்கள் இனி சிரிக்க முடியாது. தமிழகத்தில் தேர்தலுக்கு முந்தைய தினம் போடப்பட்ட 144 தடை உத்தரவு, நம்பகமான அதிகார வர்க்கத்தின் பொறுப்பில், போலீசு வேன் மூலம் அதிமுக நடத்திய பண விநியோகம் போன்றவையெல்லாம் ஊர் சிரித்துப் போன உண்மைகள்.
ஓட்டுப் பொறுக்கிகளின் ஒழுக்கக்கேடு, பிழைப்புவாதம் ஆகியவை குறித்து நாம் பேசுவதற்கு புதிதாக ஒன்றுமில்லை. அவையெல்லாம் மெல்ல மெல்ல மக்களின் பண்பாடுகளாக மாறி வருகின்றன என்பதுதான் இப்போது நம் கவலைக்குரிய விடயமாகியிருக்கிறது. அதிமுக வுக்கு பதிலாக திமுக வுக்குப் போட்டிருந்தால் அதன் காரணமாக ஒரு வெங்காயமும் மாறிவிடப் போவதில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும். நல்ல விலை கிடைத்தால் தங்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மக்களுடைய பிழைப்புவாத மனோபாவம்தான், நம்மை அச்சுறுத்துகிறது.
இந்த நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டிய சவால் இது.
கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நேரடிக் கொடுங்கோன்மை, அதனை அமலாக்கும் எடுபிடிகளாக இந்து மதவெறிக் காலாட்படை, அதன் தலைவனாக ஒரு தொழில்முறைக் கொலையாளி, இவர்களுடன் கூச்சமே இல்லாமல் கூட்டு சேரத் தயாராக இருக்கும் பல வகைப் பிழைப்புவாதக் கட்சிகள், பார்ப்பனப் பாசிசக் கும்பலின் சேவகனாகவே வேலை செய்யத் தயாராக இருக்கும் அதிகார வர்க்கம், அரசியல் மடமையும் பிழைப்புவாதமும் இணைந்த கலவையாக மக்கள்!
– இந்தச் சேர்க்கைதான் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் வெற்றி என்று வெட்கமின்றி சித்தரிக்கப்படுகிறது.
பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.
தண்டனையிலிருந்து மக்களை விடுவிக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்வோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல், அம்மாவின் செல்வாக்கை மட்டுமே நம்பி தனித்துப் போட்டியிடுவதாக அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் அவரது கைத்தடிகளும் கூறிவருகிறார்கள். வெளிப்பார்வைக்கு உண்மையைப் போலத் தெரியும் இந்தக் காட்சி ஒரு பொய்த் தோற்றம். தமிழக மக்களின் கண்ணுக்குப் புலப்படாத, ஒரு திரைமறைவான கூட்டணியை உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் கமிசன் ஆகியவற்றோடு அமைத்துக்கொண்டு, ஜெயா இந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிறார் என்பதே உண்மை. ஜெயாவிற்கு எதிராக பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவரும் வருமான வரி வழக்கு ஆகிய இரண்டிலும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புகள்; தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் தி.மு.க. தொடுத்த வழக்குகளைத் தேர்தல் கமிசனும், உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அணுகிய முறை; அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடா எதிர்க்கட்சிகளின் குறுக்கீடு இல்லாமல் நடைபெற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தேர்தலுக்கு முன்பு தமிழகம் தழுவிய அளவில் தேர்தல் கமிசனால் போடப்பட்ட 144 தடையுத்தரவு – இவற்றையெல்லாம் நியாயமாகப் பரிசீலிக்கும் யாரும் மேற்கண்ட முடிவுக்குத்தான் வர முடியும்.
ஜெயா – சசி கும்பலுக்கு விலை போகாமல் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நடத்தி வரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.
1991-96-களில் தமிழகத்தின் முதல்வராக இருந்து ஜெயா நடத்திய ஊழல், கொள்ளை தொடர்பாக ஜெயா-சசி கும்பல் மீது நாற்பதுக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழிவகைகளைக் கையாண்டும், தனது பார்ப்பன சாதி செல்வாக்கு மற்றும் அரசியல், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் பெரும்பாலான வழக்குகளில் இருந்து தண்டனையின்றித் தப்பித்துக் கொண்டார், ஜெயா. பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கு மற்றும் டான்சி வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களால் ஜெயா தண்டிக்கப்பட்டாலும், சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அசாதாரணமான முறையில் அவரைக் குற்றமற்றவராக அறிவித்தன. எனினும், சொத்துக்குவிப்பு வழக்கு, வருமான வரி வழக்கு உள்ளிட்ட மூன்று, நான்கு வழக்குகள் ஊத்தி மூடிவிட வாப்பின்றி, அவரது நிம்மதியை மட்டுமல்ல, அவரது அரசியல் நப்பாசைகளையும் கெடுத்து வருகின்றன. ஒரு புறம், நீதிபதிகள், சட்ட வல்லுநர்களையே திணறடிக்கும் வகையில் மனுவுக்கு மேல் மனு போட்டும், வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கியும் இந்த வழக்குகளை ஜெயா கும்பல் இழுத்தடித்து வருகிறது என்றால், இன்னொருபுறம் நீதிமன்றங்கள் இவ்வழக்கு விசாரணையின் இக்கட்டான தருணங்களில் ஜெயாவைக் காப்பாற்றும் ரட்சகனாக நடந்துகொண்டு, இந்த வழக்குகள் நியாயமாகவும் விரைவாகவும் விசாரிக்கப்படுவதைத் தடுத்து வருகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங்தான் அரசு வழக்குரைஞராக நீடிக்க வேண்டும்; நீதிபதி பாலகிருஷ்ணாதான் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஆண்டு ஜெயா-சசி கும்பல் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜெயாவிற்குச் சாதகமாக அளித்த தீர்ப்பே குற்றவாளி ஜெயாவுக்கும் நீதியரசர்களுக்கும் இடையே இருந்துவரும் தொடர்பை அம்பலப்படுத்தியது. இன்னார்தான் தனக்கு எதிராக வாதாட வேண்டும்; இன்னார்தான் தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் கேட்ட அதிசயமும்; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சௌகானும் பாப்டேயும் அந்தக் கோரிக்கையை ஏற்று தீர்ப்பளித்த விநோதமும் இந்த வழக்கில் நடந்தது கண்டு சட்ட வல்லுநர்களே விக்கித்துப் போனார்கள்.
ஜெயாவின் ஏஜெண்டாகச் செயல்படும் உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சௌஹான்
நீதிபதி பாலகிருஷ்ணா பதவி ஓவுபெற்ற பிறகும்கூட, அவரே இந்த வழக்கின் நீதிபதியாகத் தொடர வேண்டும் என்று ஜெயா கும்பல் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றமும் அவ்வாறே விரும்பியது. ஆனால், இந்த ஏற்பாடுக்குச் சம்மதிக்காமல் பாலகிருஷ்ணா கழண்டுகொண்ட பிறகு, புதிய நீதிபதியாக மைக்கேல் டி குன்ஹா கடந்த ஆண்டு இறுதியில் பதவியேற்றார். பாலகிருஷ்ணாவைப் போல புதிய நீதிபதி குன்ஹாவைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை ஜெயா-சசி கும்பல் புரிந்துகொண்டவுடனேயே, அக்கும்பல் வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் கிரிமினல் வேலைகளை மீண்டும் தொடங்கியது.
மைக்கேல் டி குன்ஹா வழக்கின் இறுதிகட்ட விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டவுடனேயே, “தம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட, அதேசமயம் இவ்வழக்கிற்குத் தொடர்பில்லாத பொருட்களைத் தம்மிடம் ஒப்படைக்க”க் கோரி ஜெயா கும்பல் கடந்த ஜனவரி மாத இறுதியில் மனு போட்டது. இம்மனுவிற்குப் பதில் அளிக்க தனக்கு இரண்டு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்” என வாய்தா கேட்டு குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொள்ள முயன்றார், அரசு வழக்குரைஞர் பவானி சிங். “இது குற்றவியல் நீதிமன்றமா, அல்லது ஒத்திவைப்பு மன்றமா” என அப்பொழுதே கேள்வி எழுப்பிய நீதிபதி குன்ஹா, பவானி சிங்கின் கோரிக்கையை ஏற்க மறுத்து ஜனவரி 31-க்குள் பதில் அளிக்குமாறு அவருக்கு உத்தரவிட்டார்.
இந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செயப்பட்ட பின், இறுதிகட்ட விசாரணை பிப் 3 அன்று தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு வழக்குரைஞர் பவானி சிங்கோ அன்று இறுதிகட்ட வாதத்தைத் தொடங்குவதற்குப் பதிலாக, “ஜெயாவின் ஆலோசகராக இருந்த வி. பாஸ்கரன் நீதிமன்ற அனுமதியோடு வாங்கிப் போன 55 இலட்ச ரூபாய் மதிப்பு கொண்ட வெள்ளிப் பொருட்களைச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பிறகுதான் மூல வழக்கைத் தொடர வேண்டும்” எனக் கோரும் மனுவை அளித்தார். இந்த மனு அடிப்படையிலேயே பொய்யும் புரட்டுத்தனமும் நிறைந்தது; மூல வழக்கு விசாரணையை முடக்க வேண்டும் என்ற கிரிமினல் நோக்கில் போடப்பட்டது என்பது விசாரணையின்போது அம்பலமானது.
பாஸ்கரன் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே புற்றுநோய் முற்றி இறந்து போய் விட்டதை இவ்வழக்கில் அரசு தரப்பிற்கு உதவுவதற்காக அனுமதிக்கப்பட்ட தி.மு.க. வழக்குரைஞர் நீதிமன்றத்தில் போட்டுடைத்தார். இறந்துபோன பாஸ்கரனின் மகன் சாட்சி கூண்டிலேறி, “தனது தந்தை வாங்கிப் போன வெள்ளிப் பொருட்கள் முதல் குற்றவாளியின் – ஜெயாவின் போயசு பங்களாவில் இருப்பதை” அம்பலப்படுத்தினார்.
தனக்கு ஆலோசகராக இருந்த இதே பாஸ்கரன் மீது கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிய இழிபுகழ் பெற்றது ஜெயா கும்பல். பாஸ்கரன் இறந்துபோவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் இந்தப் பொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்படிபட்ட நபர் இறந்துபோனது தெரியாது என்பது போல நடித்தும், அந்த வெள்ளிப் பொருட்கள் ஜெயாவின் வீட்டிலே இருப்பதை மறைத்தும் இப்படியொரு மனுவை ஜெயா கும்பலும் அரசு வழக்குரைஞரும் கூட்டுச் சேர்ந்து போட்டிருப்பது பஞ்சமா பாதகங்களுக்கும் அஞ்சாத கிரிமினல்தனம் அல்லவா! இந்த உண்மைகள் அம்பலமான பிறகும்கூட, பாஸ்கரன் இறந்து போனதைத் தான் இன்னமும் நம்பவில்லை எனச் சாதித்தார், ஜெயாவின் கைக்கூலியான அரசு வழக்குரைஞர்.
மினி பஸ்களில் உள்ள இரட்டை இலையை மறைக்கக் கோரி தி.மு.க தொடுத்த வழக்கில் ஜெயாவின் மனது புண்பட்டு விடாதபடி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தற்காலிகத் தலைமை நீதிபதி சதீஷ் கே. அக்னிஹோத்ரி.
இம்மோசடியான மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, மார்ச் 7 அன்று அரசு வழக்குரைஞர் தனது இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டுமென உத்தரவிட்டார், நீதிபதி குன்ஹா. ஆனால், பவானி சிங்கோ அன்று நீதிமன்றத்திற்கு வராமல் மட்டம் போட்டு நீதிமன்ற உத்தரவைக் கேலிக்கூத்தாக்கினார். இறுதி வாதத்திற்கான தேதி மார்ச் 10-க்குத் தள்ளிவைக்கப்பட்ட அன்றும் பவானி சிங் நீதிமன்றத்திற்கு வராமல் இருந்து வழக்கு விசாரணையைச் சீர்குலைத்தார். பிறகு மார்ச் 14 அன்று நீதிமன்றத்திற்கு வந்த பவானி சிங் இறுதி வாதத்தைத் தொடங்காமல், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பத்து நாட்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கக் கோரினார். இது தொடர்பாக அவர் அளித்த மருத்துவச் சான்றிதழோ, மருத்துவரின் கையொப்பம்கூட இல்லாமல் மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டிருந்தது. நடப்பது நாடகம் என்பதைப் புரிந்துகொண்ட நீதிபதி குன்ஹா இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டுமென உத்தரவிட, பவானி சிங் மறுக்க, இதன் காரணமாக அரசு வழக்குரைஞர் தனது ஒருநாள் சம்பளத்தை (ரூ.65,000-) அபராதமாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு, விசாரணையும் மார்ச் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது. பவானி சிங் அன்றும் எவ்விதக் காரணமும் கூறாமல் நீதிமன்றத்திற்கு வாரமல் போனதால், அவருக்கு மறுபடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்து பவானி சிங் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் வேறுவழியின்றி அரசு வழக்குரைஞர் பவானி சிங் இறுதிகட்ட வாதத்தைத் தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த இறுதி வாதத்தின் பொழுது, 1991-96 காலகட்டத்தில் ஜெயா-சசி கும்பல் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் தமிழகமெங்கும் சொத்துக்களை வாங்கி குவித்தார்கள் என இவ்வழக்கின் சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் படித்துக் காட்டினார், பவானி சிங். 1991-ல் வெறும் இரண்டு கோடி சொச்சம் சொத்துக்களைக் கொண்டிருந்த ஜெயாவின் சொத்து மதிப்பு, அவர் 1996-ல் முதலமைச்சர் பதவியிலிருந்து தமிழக மக்களால் துரத்தப்பட்ட சமயத்தில் 66 கோடியாக வளர்ந்து, இன்று அச்சொத்து களின் மதிப்பு 5,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பது இதன் மூலம் அம்பலமானது. பவானி சிங் சிறப்பு நீதிமன்றத்தில் படித்துக் காட்டிய இந்த மலைக்க வைக்கும் சொத்துப் பட்டியலை தினகரன், முரசொலி உள்ளிட்ட தி.மு.க. ஆதரவு நாளேடுகள் மட்டுமே வெளியிட்டன. நடுநிலை நாளேடுகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்து, தினமணி உள்ளிட்டு பல நாளேடுகள் இந்த விவரங்களை வெளியிடாமல் ஜெயாவிற்கு விசுவாசமாக நடந்து கொண்டன.
****
சொத்துக் குவிப்பு தொடர்புடைய வழக்கொன்றில் தனது வரம்பை மீறி ஜெயாவின் பினாமி நிறுவனங்களை விடுவித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.
பவானி சிங் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா-சசி கும்பல் கொள்ளையடித்து வைத்திருந்த சொத்து விவரங்களின் ஆதாரங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில், குற்றவாளிகள் தரப்பு இதனை முடக்கும் புதிய சதித் திட்டத்தை சென்னையில் அரங்கேற்றினர். சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த போது, அந்நீதிமன்றம் ஜெயா-சசி கும்பலின் பினாமிகளால் நடத்தப்பட்டு வந்த 22 நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கித் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஜெயா-சசி கும்பல் அப்பொழுதே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் சென்னை உயர்நீதி மன்றத்திற்குக் கிடையாது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ நீண்டகாலமாக கிடப்பில் கிடந்த இந்த வழக்கைத் தூசி தட்டி எடுத்து, அதனை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை நீதிபதி அருணா ஜெகதீசனிடம் ஒப்படைத்தது. அந்நீதிபதியும், “இந்த 22 சொத்துக்களும் மூல வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமானதல்ல” எனத் தீர்ப்பெழுதி, அந்த நிறுவனங்களின் சொத்துக்களை விடுவித்துத் தனது “பொறுப்பை”க் கனகச்சிதமாக முடித்தார். மேலும், இந்த 22 நிறுவனங்களுக்கும் சொத்துக்குவிப்பு வழக்கிற்கும் தொடர்பிருக்கிறதா என்பதை மீண்டும் விசாரிக்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு அறிவுரையும் வழங்கினார்.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான மனுக்கள் எங்கு விசாரிக்கப்பட்டாலும், அதில் பவானி சிங் மட்டுமே அரசு வழக்குரைஞராக ஆஜராக முடியும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கிலோ பவானி சிங்கிற்குப் பதிலாக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவரும் தமிழக அரசு வழக்குரைஞருமான இன்பதுரை அரசு வழக்குரைஞராக ஆஜராகி, ஜெயாவிற்குச் சாதகமான தீர்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்ல, இப்படியொரு வழக்கு சென்னையில் நடப்பதை குற்றவாளிகள் தரப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்குத் தெரியாமல் மூடிமறைத்து, நீதிபதியை ஏமாற்றியுள்ளனர். இந்தப் பித்தலாட்டத்தனங்கள் அனைத்திற்கும் சென்னை உயர் நீதிமன்றமும் உடந்தையாக நடந்து கொண்டுள்ளது.
பவானி சிங் மார்ச் 21 அன்று தனது இறுதிகட்ட வாதத்தை எடுத்துவைக்கத் தொடங்கிய மறுநாளே சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து இப்படியொரு வரம்பு மீறிய தீர்ப்பு வெளிவந்திருப்பதைத் தற்செயலானதாகப் பார்க்க முடியாது. இந்த வழக்கு தொடர்புடைய சாட்சிகளுள் பெரும்பாலோர் வெளிநாட்டில் இருப்பது தெரிந்திருந்தும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியிருப்பது மூலவழக்கு விசாரணையைக் காலவரையின்றித் தள்ளிப்போடும் உள்நோக்கம் கொண்டதாகும்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் இத்தீர்ப்பை நீதிபதி குன்ஹா ஒதுக்கித் தள்ளியதோடு, மூல வழக்கு விசாரணையை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நிறுத்த முடியாது எனக் குற்றவாளிகளின் பொட்டில் அடித்தாற் போலச் சொல்லிவிட்ட பிறகு, ஜெயா-சசி-பவானி சிங் கும்பல் மூலவழக்கு விசாரணையை முடக்கும் அடுத்த சதியை டெல்லியில் அரங்கேற்றினர்.
****
அரசு வழக்குரைஞர் பவானி சிங் தன் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய மறுத்த கர்நாடகா உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதோடு தனது உடல் நிலையையும் காரணம் காட்டி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கும்படியும் முறையிட்டார். சிறப்பு நீதிமன்றத்தால் பவானி சிங்கிற்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 1,30,000 ரூபாதான். ஆனால், இதனை ரத்து செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய்து வழக்காடுவதற்கு, நீதிமன்றக் கட்டணம், வழக்குரைஞர் கட்டணம் எல்லாம் சேர்த்து பன்னிரெண்டு இலட்ச ரூபாய்க்கும் அதிகமாகச் செலவழித்திருக்கிறார், அவர். 1,30,000 ரூபாயைக் காப்பாற்றிக் கொள்ள பன்னிரெண்டு இலட்ச ரூபாய் செலவு செவதால் பவானி சிங்கிற்கு இலாபமில்லைதான்; ஆனால், அவரை ஆட்டுவிக்கும் ஜெயா-சசிக்கு பம்பர் பரிசே கிடைத்தது.
ஜெயா கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில், அவர் உருவம் பொதித்த முகமூடியை கடமை தவறாது விநியோகிக்கும் “ஜெயா போலீசு”.
பவானி சிங்கின் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான், செல்லமேஸ்வர் அமர்வு, வழக்கின் இந்தப் பின்னணியெல்லாம், குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் கூட்டுக் களவாணித்தனத்தையெல்லாம் தெரிந்துதான், தமிழகத்தில் தேர்தல் முடியும்வரை விசாரணை நடைபெறக்கூடாது என்ற உள்நோக்கத்துடன்தான், விசாரணைக்கு மூன்று வார காலம் – ஏப்ரல் 28 வரை தடைவிதித்து, ஜெயாவின் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறார்கள். ஏப்ரல் 28-க்குப் பிறகாவது வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுமா என்பதற்கும் எந்த உத்தரவாதத்தையும் தீர்ப்பில் கூறாமல், “அதற்குப் பிறகும் உங்களால் (பவானி சிங்) முடியாவிட்டால், கர்நாடகா உயர் நீதிமன்றத்திடம் முறையிடுங்கள்; வேறு வழக்குரைஞருக்கு வழிவிடுங்கள்” என்று அறிவுரை வழங்கி, ஜெயா-சசி கும்பல் வழக்கை மேலும் இழுத்தடிப்பதற்கான வாய்ப்பையும் திறந்துவிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு 7.4.2014 அன்று வெளியானது. அதற்கடுத்த இரண்டாவது நாளில்-9.4.2014 அன்று, சொத்துக்குவிப்பு வழக்கோடு தொடர்புடைய லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவொன்றை விசாரித்துவரும் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயணா, “சொத்துக் குவிப்பு வழக்கில் ஆரம்பம் முதல் தற்போது வரை பல நாடகங்கள் அரங்கேறி வருகிறது. வழக்கைத் தாமதம் செய்ய பல வழிகளில் முயற்சி நடக்கிறது. அனைத்து மட்டத்திலும் நாடகமே அரங்கேறி வருவதாக” விசாரணையின்போது குறிப்பிட்டார். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை முடக்கிப் போடுவதற்கு நடந்துவரும் சதிகள், மோசடிகளை விளங்கிக் கொள்வதற்கு இதற்கு மேலும் வார்த்தைகள் தேவையில்லை.
ஊழல், கிரிமினல் வழக்குகளில் சிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மார்ச் 10 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இத்தீர்ப்பு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே முக்கியமானதொரு ஊழல் வழக்கில், பதினேழு ஆண்டுகளாகக் குற்றவாளிகளால் இழுத்தடிக்கப்படும் வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக விசாரணைக்குத் தடைவிதித்து நீதிபதிகள் தீர்ப்பெழுதுகிறார்கள் என்றால், ஊழலுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் சண்டமாருதமெல்லாம் வெற்று வார்த்தைகள்தான்; ஆளுக்குத் தக்கபடி தீர்ப்புகளை எழுதுவார்கள், சட்டங்களை வளைப்பார்கள் என்பதுதானே உண்மை. நீதியின் செங்கோல் ஜெயாவிற்கு ஏற்றபடி வளையும் என்பதற்கு இன்னொரு உதாரணம் வேண்டுமென்றால், ஜெயா-சசிகலாவிற்கு எதிராக நடந்து வரும் வருமான வரி வழக்கில், அவ்விசாரணையை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பைக் குறிப்பிடலாம்.
***
சொத்துக்குவிப்பு வழக்கைப் போலவே வருமான வரி வழக்கும் கிட்டதட்ட 16, 17 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. ஜெயா-சசி கும்பல், இவ்வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு கடந்த எட்டு ஆண்டுகளாக ஊறுகாய் பானைக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. இவ்வழக்கை நான்கு மாதங்களுக்கு முன்பாகத் தூசிதட்டி எடுத்து விசாரிக்கத் தொடங்கிய கே.எஸ். ராதாகிருஷ்ணன் அமர்வு, தோழிகளின் மனுவைத் தள்ளுபடி செய்து, வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த மார்ச் இறுதியில் உத்தரவிட்டது.
அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்திருப்பதைச் சோதனைச் செய்யச் சென்ற தேர்தல் அதிகாரிகள் தி.மு.க.வினரை உடன் அழைத்துச் செல்ல மறுத்ததைக் கண்டித்து நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா தலைமையில் நடந்த சாலை மறியல்.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்துவரும் சென்னைப் பெருநகரப் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.தெட்சிணாமூர்த்தி, ஜெயா – சசிகலா இருவரையும் ஏப்.3 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டவுடனேயே, வழக்கை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், ஜெயா. இந்த மனுவைப் பழைய மனு போல கிடப்பில் போடாமல் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, ஏப்.10 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கே.எஸ். இராதாகிருஷ்ணன் அமர்வு கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது எனக் கருத்து தெரிவித்தது. ஆனால், அடுத்த ஐந்து நாட்களில் என்ன மாயம் நடந்ததோ, மனுதாரரின் தேர்தல் பணிகளைக் கருத்தில்கொண்டு மூன்று மாத கால அவகாசம் அளிப்பதாக ஏப்.15 அன்று தீர்ப்பு எழுதியது.
ஏப்ரல் 22 அன்றோடு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிடும் நிலையில் இவ்வழக்கை மேலும் மூன்று மாத காலம் நீட்டித்துத் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியமே கிடையாது. எனினும், தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசு அமைப்பது தொடர்பான பேரங்களிலும் ஜெயா கலந்துகொள்வதற்கு வசதியாகவே இந்த கால அவகாசத்தை அளித்துள்ளனர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள். புதிய அரசில் ஜெயா பங்கு பெறும் நிலை ஏற்பட்டால், இந்த வழக்குகளின் நிலை அதோகதிதான்!
வருமான வரி வழக்கில் இன்னொரு சுவாரசியமான திருப்பமும் உண்டு. உச்ச நீதிமன்றம் விசாரணையை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து தீர்ப்பளித்த அதேநாள் காலையில் இவ்வழக்கை விசாரித்துவரும் ஆர்.தெட்சிணாமூர்த்தியை இடம் மாற்றம் செய்து, அவரது இடத்தில் நீதிபதி மாலதியை அமர்த்தி அறிவிக்கை வெளியிட்டது சென்னை உயர் நீதிமன்றம். எனினும், அன்று மாலையே நீதிபதி தெட்சிணாமூர்த்தியின் இடம் மாற்றல் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவரை மீண்டும் பழைய இடத்திலேயே பணியமர்த்தும் உத்தரவு வெளியிடப்பட்டது. ஜெயாவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டதற்காக தெட்சிணாமூர்த்தி மாற்றப்பட்டார் என்று கொண்டால், சுடுகாட்டு ஊழலை விசாரித்துத் தமது முன்னாள் கூட்டாளி செல்வகணபதிக்குத் தண்டனை அளித்த நீதிபதி மாலதியை வருமான வரி வழக்கை விசாரிக்க நியமனம் செய்தது தோழிகளுக்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனக் கருதுவதற்கு இடமுண்டு.
***
“என்னை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது” என சட்டசபையிலேயே திமிராக அறிவித்தவர்தான் ஜெயா. கடந்த பதினேழு ஆண்டுகளாக அப்பாசிச திமிரை அச்சுப்பிசகாமல் நடைமுறைப்படுத்தியும் வருகிறார், அவர். தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணைகளைச் சட்டப்படியும் நியாயப்படியும் சந்திக்காமல், பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு நீதிமன்ற நடவடிக்கைகளைக் கேலிக்குள்ளாக்கி வருகிறார், அவர். தனக்குத் தலையாட்டாத நீதிபதிகளை மிரட்டி விரட்டியடிக்கவும் தயங்காதவர் அவர். ஆனாலும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகூட இதுவரை பாய்ந்ததில்லை. அந்தளவிற்கு நீதிமன்றங்கள் அவரது செல்வாக்கின் முன் செல்லாக்காசாக உள்ளன.
வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் தனது கட்சிக்காரர் தம்பிதுரைக்குச் சட்ட அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்து, தன் மீதான வழக்குகள் அனைத்தையும் ஊத்தி மூடிவிடவும் முயன்றார். அது முடியாமல் போன பிறகு, தனது சுயநலம் காரணமாக வாஜ்பாயி ஆட்சியைக் கவிழ்க்கவும் செய்தார். சட்டம், நீதி பரிபாலனம் உள்ளிட்டு சொல்லிக் கொள்ளப்படும் எந்தவொரு அறத்திற்கும் கட்டுப்படாமல், அனைத்திற்கும் மேலான எதேச்சதிகாரியாக அவர் நடந்து வருகிறார்.
அவரது நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுவதாக இருந்தேபாதும் மக்களின் அறியாமை, அதிகார வர்க்கம், ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாதம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றி வருகிறார். அவர் பதவியில் இல்லாதபொழுதுகூட சோ, சுப்பிரமணிய சுவாமி, சரத் பவார், தேவே கௌடா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள்; விஜ மல்லையா, சாராய உடையார் குடும்பம், ஸ்பிக் முத்தையா உள்ளிட்ட தரகு முதலாளித்துவக் கும்பல்; இந்து, தினமணி உள்ளிட்ட பத்திரிகை குழுமங்கள்; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், சௌகான், கே.எஸ். இராதாகிருஷ்ணன் தொடங்கி ஓவுபெற்றுச் சென்றுவிட்ட நீதிபதி தினகர், தங்கராசு உள்ளிட்ட ஒரு பெரும் அதிகார வர்க்கக் கும்பல் – எனவொரு பெரும் பட்டாளமே ஜெயாவின் விருப்பங்களை ஈடேற்றி வைப்பதற்காக வேலை செய்து வருவது கண்கூடு.
இந்தப் பின்னணியை வைத்துக்கொண்டுதான், சொத்துக்குவிப்பு வழக்கில் நியாயமாக நடந்துகொண்ட அரசு வழக்குரைஞர் ஆச்சார்யாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவரைத் தாமே பதவியிலிருந்து விலகிக் கொள்ளும்படி செய்தார். ஆச்சார்யாவைப் போலத் தமக்குத் தலையாட்டாமல் நடந்துவரும் நீதிபதி குன்ஹா மீது கொலைவெறிேயாடு இருக்கும் ஜெயா கும்பல் அவருக்கு இன்னும் என்னென்ன குடைச்சல்களைக் கொடுக்குமோ?
– செல்வம்
__________________________________ புதிய ஜனநாயகம் – மே 2014
__________________________________
தேர்தல் பரபரப்பில் தமிழகமே மூழ்கடிக்கப்பட்டிருந்த வேளையில், தமது திருபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நிரந்தரத் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது நோக்கியா நிறுவனம். இந்த உத்தரவு நோக்கியாவில் பணிபுரியும் 6,600 தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, நோக்கியாவிற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் பாக்ஸ்கான் உள்ளிட்டு அதன் துணைநிறுவனங்களில் பணிபுரிந்துவரும் 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நோக்கியாவின் இம்முடிவைக் கண்டித்து கடந்த ஏப்ரல்-1 அன்று சென்னை – சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர், நோக்கியா தொழிலாளர்கள்.
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான நோக்கியா, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்ததை வளர்ச்சியின் அடையாளமாகச் சித்தரித்துக் கொண்டாடினார்கள். அந்த வகையில் நோக்கியாவைத் தமிழகத்திற்கு கொண்டுவந்தது நான்தான், இல்லை நான்தான் என்று ஜெயாவும், கருணாநிதியும் போட்டிபோட்டுக் உரிமை பாராட்டிக் கொண்டனர். ஆனால், நோக்கியா தொழிலாளர்கள் தங்களது வேலைக்கும் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் கோரி நடுத்தெருவில் நின்றபோது, இந்த இருவரில் ஒருவர்கூட அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
நோக்கியா தனது தொழிலாளர்களின் கழுத்தில் கத்தியை வைப்பதற்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்டது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கடந்த செப்.2013-ல் கையகப்படுத்தியது. இதனையடுத்து நோக்கியா இந்தியாவிலுள்ள தனது ஆலைகள் மற்றும் சொத்துக்களை மைக்ரோசாப்டுக்கு மாற்றிக் கொடுக்க முனைந்திருந்த நேரத்தில்தான், அந்நிறுவனம் இந்திய அரசிற்குச் செலுத்த வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வரியைக் கட்டாமல் ஏத்திருப்பதைக் கண்டுபிடித்த வருமான வரித்துறை, வட்டியோடு சேர்த்து 21,153 கோடி ரூபாயைச் செலுத்திவிட்டுச் சொத்துக்களை மாற்றிக் கொடுக்குமாறு நோட்டீசு அனுப்பியது. ஏய்த்த வரியைக் கட்ட நோக்கியா மறுக்கவே, அதன் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில், “வரியைக் கட்டச் சொல்லி நிர்ப்பந்தித்தால், சென்னை ஆலையை மூடிவிட்டு வெளியேறுவோம்” என வாதிட்டுத் தொழிலாளர்களைப் பணயம் வைத்தது, நோக்கியா. இதே சமயத்தில், நோக்கியா தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டிய 2,400 கோடி ரூபாய் விற்பனை வரியைக் கட்டாமல் தகிடுதத்தம் செய்திருப்பதும் அம்பலமாகி, தமிழக அரசும் வரியைக் கட்ட உத்தரவிட்டு நோட்டீசு அனுப்பியது.
மைக்ரோசாப்டோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தக் கெடு நெருங்குவதால், ஏய்த்த வரியைக் கட்டாமல் ஆலையை மூடிவிட்டு வெளியேறும் குறுக்கு வழியை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது, நோக்கியா. இதன் முதல்கட்டமாக தனது மாதாந்திர கைபேசி உற்பத்தி இலக்கை 1.3 கோடியிலிருந்து 40 இலட்சமாகத் திட்டமிட்டே குறைத்தது. அதனையடுத்து 6,600 தொழிலாளர்களைச் சிறுகச்சிறுக வெளியேற்றும் முடிவை அறிவித்திருக்கிறது. மேலும், சென்னை ஆலை மூடப்பட்டால் ஏற்படும் உற்பத்தி இழப்பை, சீனாவிலும், வியட்நாமிலும் திறக்கப்பட்டுள்ள புதிய ஆலைகள் ஈடு செய்துவிடும் எனத் தெனாவெட்டாக தெரிவித்திருக்கிறது.
வெறும் 600 கோடி ரூபாய் மூலதனத்துடன் தமிழகத்திற்கு நுழைந்த நோக்கியா அதைவிடப் பலமடங்கு இலாபத்தைச் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் சம்பாதித்துவிட்டு வெளியேற நாள் குறித்து விட்டது. ஆனால், எட்டாண்டுகளாகக் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்குக் கிடைத்து என்ன? இருண்ட, நிச்சயமற்ற எதிர்காலம். வளர்ச்சி, வளர்ச்சி என்று ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஒரேகுரலில் ராகம் போடுகிறார்களே, அதன் பொருள் இதுதானோ?
_____________________________ புதிய ஜனநாயகம் – மே 2014
_____________________________