காயமடைந்த சுரங்கத் தொழிலாளி
காயமடைந்த சுரங்கத் தொழிலாளி

துருக்கியின் சோமா நகரில் அமைந்துள்ள சுரங்கம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 13, 2014) பணிக்குழு மாற்றத்தின் (ஷிப்ட்) போது மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஏறக்குறைய 420 மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தில் சிக்கித் தவித்த சுமார் 800 தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். 363 தொழிலாளிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். 201 தொழிலாளிகள் கொல்லப்பட்டு உயிரற்ற உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள 200-க்கும் மேற்பட்டவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. எஞ்சிய தொழிலாளிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது.

சோமா நகரம் மேற்கு துருக்கியில் உள்ள மனிசா மாகாணத்தில் அமைந்துள்ளது. தலைநகர்இஸ்தான்புலில் இருந்து 250 கிமீ தூரத்தில் அமைந்துள்ள சோமா சுரங்கத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடி விபத்துக்கு நிகழ்ந்திருக்கிறது. விபத்து நடந்தவுடன் கார்பன் மோனாக்சைடு அதிக அடர்த்தியுடன் பரவி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் போதிய பிராண வாயு கிடைக்காமல் மாண்டு போயுள்ளனர்.

சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி
சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி

தரைக்கு அடியில் 2 கிமீ ஆழத்தில் துவங்கிய இந்த வெடி விபத்தைத் தொடர்ந்து சுரங்கத்திற்குள் மின்தூக்கிகள் செயலிழந்து போயின. உள்ளே சிக்கியுள்ளவர்களில் பலரும் முக்கிய கதவிலிருந்து 4 கிமீ தூரத்தில் இருக்க கூடும் எனத் தெரிகிறது. பணிக்குழு மாறும் போது விபத்து நேரிட்டதால் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு சொல்ல முடியாது என்கிறார்கள். இறந்தவர்களில் 15 வயது சிறுவனும் அடக்கம்.

சுரங்கத்திற்குள் ஆக்சிஜனை செலுத்தியபடி மீட்பு பணியை துரிதப்படுத்த முயன்றாலும் இரண்டாவது பிரிவு சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள சரிவு மீட்புப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக மாறி விட்டது. சுரங்கத்தின் முக்கிய கதவை சுற்றிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நின்று கையறு நிலையுடன் அழுதபடியே நின்று கொண்டிருக்கின்றனர்.

துருக்கியின் பிரதமர் எர்டோகன் கடந்த 2002-ம் ஆண்டு, கமால் அட்டாடுர்க்கின் மக்கள் குடியரசு கட்சியை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றினார். இந்தியாவில் காந்தியிசம் என்ற பெயரில் மக்களை ஏய்த்து வரும் காங்கிரசுக் கட்சியைப் போன்று துருக்கியில் கமாலிசம் என்ற பெயரில் நாட்டை சுரண்டி வரும் கட்சி மக்கள் குடியரசுக் கட்சி. இக்கட்சியின் மக்கள் விரோத கொள்கைகளால் வெறுப்படைந்த மக்கள் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியைப் போன்று மதவாதம், கார்ப்பரேட் நலன்கள், மற்றும் உலகமயமாக்கத்துக்கு ஆதரவான எர்டோகனின் AKP கட்சியை தேர்ந்தெடுத்து, எண்ணெய் சட்டியிலிருந்து தப்பி எரிகிற நெருப்பில் விழுந்தனர்.

போலீஸ் தாக்குதல்
போராட்டக்காரர்கள் ரப்பர் குண்டுகளால் தாக்கிய போலீஸ்

கடந்த 10 ஆண்டுகளில் துருக்கியின் பொருளாதாரம், கட்டுமானத் துறையில் (ரியல் எஸ்டேட்) குவிந்த நேரடி அன்னிய முதலீடுகளாலும், வெளிநாட்டுக் கடன்களாலும் வேகமாக வளர்ந்தது. கோட்டு-சூட்டு போட்ட முதலாளிகள் உலகளாவிய நிதிச் சூதாட்டம் மூலம் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். உழைக்கும் மக்களின் உரிமைகள் தொடர்ந்து சூறையாடப்பட்டன. பன்னாட்டு தொழிலாளர் சபையின் (ILO) புள்ளிவிபரத்தின்படி பணியிடத்தில் உயிரைப் பறிக்கும் விபத்துகளின் எண்ணிக்கையில் துருக்கி ஐரோப்பாவில் முதலிடத்திலும், உலகிலேயே 3-வது இடத்திலும் உள்ளது.

2005-ல் சுரங்கங்களை தனியார்மயமாக்கிய பிறகு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை எந்த நிறுவனமும் முறையாக பின்பற்றவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. இதுதான் விபத்துக்கு காரணம் எனத் தெரிந்தாலும் அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது.

விபத்து நடந்துள்ள சோமா நகர சுரங்கங்களில் வழக்கமான வருடாந்திர பரிசோதனைகள் ஏதும் நடைபெறவில்லை என்பதை தொழிற்சங்கங்கள் கடந்த ஏப்ரல் 29 அன்று சுட்டிக் காட்டியிருந்தன. ஆனால் அதனை ஆளும் கட்சியும், பிரதமர் எர்டோகனும் ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியம் செய்து சுரங்கத்தை நடத்தும் தனியார் நிறுவனமான சோமா கோமர்-க்கு ஆதரவாக நடந்து கொண்டனர். இந்த விபத்து நடந்த பிறகு அரசு இட்டுக் கட்டும் வேலைகளை துவங்கி விட்டது. அதாவது 2012-லிருந்து கடந்த மார்ச் வரை ஐந்து முறை சுரங்கத்தை சோதனை செய்து விட்டதாக தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

காயமடைந்த தொழிலாளி
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் காயமடைந்த தொழிலாளி

1992-ல் துருக்கியில் கருங்கடலுக்கருகில் ஸோங்குல்டாக்கில் நடந்த சுரங்க விபத்துதான் இதுவரையில் அதிகமான பேரை பலி கொண்டதாக (270 பேர்) இருந்து வந்தது. அந்த சாவு எண்ணிக்கையை தற்போது தாண்டியுள்ள இந்த விபத்தை தனியார்மயம் கொண்டு வந்த படுகொலை என்றுதான் அங்கு போராடுபவர்கள் கூறுகிறார்கள்.

அரசு மூன்று நாள் தேசிய துக்கம் அறிவித்துள்ளது. மத விவகாரங்களுக்கான தலைமையகம் வரும் வெள்ளிக்கிழமை துருக்கியில் உள்ள மசூதிகளில் எல்லாம் சோமா சுரங்கத்தில் இறந்தவர்களுக்காக வழிபாடு செய்ய உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை புறக்கணித்து தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு வழி வகுத்த சுரங்க முதலாளி சோமா நிறுவனம் தனது இணைய பக்கத்தை கருப்பு பக்கமாக்கி தனது துக்கத்தை பகிர்ந்து கொள்வதாக நாடகமாடுகிறது.

பிரதமர் எர்டோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில் உலகில் பல சுரங்க விபத்துக்கள் நடப்பதாகவும், அவற்றில் பிரிட்டனில் 19-ம் நூற்றாண்டில் நடந்தவையும் அடங்கும் என்று விளக்கம் கூறியிருந்தார். எவ்வளவு முயன்றாலும் சிறு தவறுகள் நேருவது இயற்கைதான் என்றும் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது முதலாளிகள் தமது லாபக் குவிப்பை அதிகப்படுத்த தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு 19-ம் நூற்றாண்டு முறைகளையே பயன்படுத்துவதை நியாயப்படுத்துகிறார்.

சுரங்கத் தொழிலாளர்கள்
சோமா சுரங்கத் தொழிலாளர்கள்

தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மக்கள் அரசுக்கு எதிராகவும், தனியார்மயத்துக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியபடி அங்காராவில் அமைந்துள்ள எரிசக்தித் துறை அமைச்சகத்தை நோக்கி பேரணி போகிறார்கள். இஸ்தான்புல்லில் அமைந்துள்ள கம்பெனியின் சுவற்றில் ‘படுகொலை’ என்று எழுதுகிறார்கள். ஆளும் கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகளின் குடும்பத்தினர் சோமாவிற்கு வந்த பிரதமரின் காரை முற்றுகையிடுகிறார்கள். திருடன், கொலைகாரன் என்று திட்டி முழக்கமிடுகிறார்கள். இதை எதிர்கொள்ள இயலாத பிரதமர் எர்டோகன் தப்பியோடி அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் போலீசு உதவியுடன் ஒளிந்து கொள்கிறார். இதனால் கோபமான அவரது ஆலோசகர் யூசுப் எர்கல் என்பவர் போராடும் ஒருவரை போலீசாருடன் சேர்ந்து தாக்குவது போன்ற புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகவே மக்களின் கோபம் இன்னும் அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரதமருக்கு எதிராக கண்டனங்கள் குவியத் தொடங்கியுள்ளன.

சோமா நகருக்கு வந்த துருக்கி பிரதமரை துரத்தியடிக்கும் மக்கள்

video platformvideo managementvideo solutionsvideo player

சுரங்க விபத்தையும், பாதுகாப்பற்ற பணிச்சூழலில் தொழிலாளர் உயிரிழப்பையும் கண்டித்து தேசத்தின் நான்கு முக்கிய தொழிற்சங்கங்கள் கடந்த வியாழக் கிழமை (மே 15) ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்தன. அங்காரா, இஸ்தான்புல் நகரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடத் துவங்கியுள்ளனர். சிறு நகரங்களிலும் மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தன. சிக்கன நடவடிக்கைக்காக யார் தொழிலாளிகளின் பாதுகாப்பை குறைத்துக் கொள்ள உத்திரவிட்டார்களோ அவர்கள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.  போலீசார் தண்ணீர் குழாய்களாலும், கண்ணீர் புகை குண்டுகளாலும் போராடுபவர்களை எதிர் கொண்டாலும் அடக்க இயலாமல் திணறுகின்றனர்.

வரும் ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் அதுபற்றிய கவலையில் ஆளும் கட்சி இருக்கிறது. சோமா சுரங்க முதலாளியின் மனைவி ஆளும்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றவர். போராடும் பலரும் இளைஞர்கள். பிரதமரோ அடிப்படைவாதிகள் தமது அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக போராடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.

முதலாளித்துவ லாப வெறிக்கு பலியான சோமா சுரங்கத் தொழிலாளிகளுக்கு உண்மையான அஞ்சலி என்பது உலக தொழிலாளிகள் தனியார்மயத்துக்கு பாடை கட்டுவதில்தான் இருக்கிறது என்பதை துருக்கி போராட்டம் முன்னறிவிக்கிறது.

வசந்தன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க