Wednesday, October 16, 2024
முகப்புஉலகம்ஈழம்பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய 'தல'!

பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!

-

தமிழகத்தின் வீரஞ்செறிந்த மாணவர் போராட்ட வரலாறு!

இந்தி எதிர்ப்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள்

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் அறுபதுகளில் தமிழகத் தெருக்களில் அக்கினிச் சுவாலைகளை உண்டாக்கி விட்டிருந்தது, இந்திய ஆளும்வர்க்கத்தின் இந்தித் திணிப்புக் கொள்கைகள். இந்தியின் முன் மற்ற மாநிலங்கள் மண்டியிட்டிருந்த போதிலும் தமிழகம் போர்குணத்தோடு தலை நிமிர்ந்து நின்றது.

பெரியாரின் தலைமையில் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் போராட்டம் நடந்திருந்தது. இந்திக்கு எதிரான இறுதி யுத்தம் போன்ற அறுபதுகளின் இந்தி எதிர்ப்புப் போர் முந்தைய எதிர்ப்புப் போராட்டங்களில் இருந்து வேறுபட்டவொன்று. இதில் இளைமைத் துடிப்பு இருந்தது. கட்டுக்கடங்காத காட்டாறின் வேகமும் துள்ளலும் இருந்தது – துரைத்தனங்களின் மீது காறியுமிழும் திமிர் இருந்தது. ஆம்…. இம்முறை போராட்டக் களத்தில் மாணவர்கள் இறங்கினர்.

ஐம்பதாயிரம் பேர் கொண்ட மாணவர் படை 1965 ஜனவரி 26ம் தேதி சென்னை நேப்பியர் பூங்காவிலிருந்து ஜார்ஜ் கோட்டைக்குச் சென்ற ஊர்வலத்தின் போர் குணத்தைக் கண்டு அஞ்சிய காங்கிரஸின் பக்தவத்சலம் கோட்டையினுள் பதுங்கிக் கொண்டு வெளியே தலைகாட்ட மறுத்தார். மதுரையில் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் பேரணியில் புகுந்த காங்கிரஸ் காலிகள் மாணவர்கள் ஏழு பேரைத் தாக்கிக் காயப்படுத்துகிறார்கள். வெகுண்டெழுந்த மாணவர்களின் கோபக் கணலில் எரிந்து சாம்பலான காங்கிரசைப் புதைத்த இடத்தில் இன்று புல் முளைத்து விட்டது. தமிழகத்தில் கல்லரைக்குப் போன காங்கிரசு தன்னோடு சேர்த்து இந்தியையும் அழைத்துச் சென்று விட்டது. அன்றைக்கு நடந்த அந்தப் போராட்டங்கள் மாணவர் சமுதாயம் எழுதிய மகத்தான வீர காவியம்.

பின்னர் எண்பதுகளின் ஈழத்தில் நடந்த இனவொழிப்புப் போர் மீண்டும் மாணவர்களை வீதிக்கு அழைத்து வந்தது. எரிமலைகள் எப்போதும் உறக்கத்திலேயே ஆழ்ந்து விடுவதில்லை என்பதை அதிகார வர்க்கத்தின் உச்சந்தலையில் சம்மட்டியால் அடித்து உணர வைத்தார்கள் மாணவர்கள். அன்று மொழியைக் காக்க நெருப்பில் இறங்கிய மாணவர்கள் இன்று தன் இனத்தை இனவெறி நெருப்பிலிருந்து காக்க தெருவில் இறங்கினர். தமிழகத்தின் அன்றைய கொந்தளிப்பான சூழல் முள்ளிவாய்க்காலை இரண்டு தசாப்தங்களுக்குத் தள்ளிப் போனதற்கு ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.

உலகெங்கும் ஜனநாயகத்துக்கும் விடுதலைக்கும் நடந்த போராட்டங்களின் முக்கிய ஆயுதமாக – ஆயுத முனையாக அச்சமின்றிக் களத்தில் முன்நின்றது மாணவர் சமூகம்தான். தன்னலம் வெறுத்த அந்த தியாகமும் வீரமும் களத்தில் பெற்றுத் தந்த வெற்றிகள் இன்று வரலாற்றின் பக்கங்களுக்குள் புதையுண்டு போயின. அச்சம் என்பதையே அறிந்திராத அந்த இளம் சிங்கங்களின் மீள்வருகைக்காக இன்றைய போராட்டக்களங்கள் ஏங்கி நிற்கின்றன. அதிகார வர்க்கங்கள் அஞ்சி நடுநடுங்க – ரத்தநாளங்களை அதிரச் செய்த அந்தச் சாகசக் கதைகள் இன்று பழங்கதைகளாய்ப் போயின. இன்றும் சாலையோரங்களில் “வாழ்க தமிழ்” என்று சொல்லி நிற்கும் பதாகைகளுக்குக் கண்கள் இருந்திருந்தால் ‘ஹான்ஸ்’ வாசனையோடு கடந்து செல்லும் மாணவனைக் கண்டு கண்ணீர் சிந்தும்.

அரசியல் உணர்வில் முன்னணி வகிப்பது, பொறியியல் கல்லூரிகளா, கலைக் கல்லூரிகளா?

இன்றைய தேதியில் தமிழகத்தில் சுமார் ஐநூறு பொறியியல் கல்லூரிகளும் ஆயிரத்து நூறு கலை அறிவியல் கல்லூரிகளும் இரண்டாயிரத்தி ஐநூறு பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு 63 கல்லூரிகளை நடத்துகிறது – 150 கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகளாக உள்ளன. மற்றவை தனியார் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுபவை.

இவற்றில் பொறியியல் போன்ற தொழில்சார் கல்லூரிகளின் மாணவர்கள் சாதாரணமாக ஒரு பொதுப் பிரச்சினைக்குக் குரல் கொடுப்பதோ அரசியல் ஈடுபாடு காட்டுவதோ இல்லை. எப்படியாவது படித்து முடித்து அரியர்ஸ் இல்லாமல் வெளியே வந்து ஏதாவது ஒரு வேலையில் ஒட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வழக்கமான கல்யாணம் – வரதட்சிணை – குடும்பம் – குழந்தை – ஹூன்டாய் சான்ட்ரோ – தொப்பை – வழுக்கை – சாவு என்கிற சுழலுக்குள் மூழ்குவதற்காக படிக்கும் காலத்திலேயே தயாராகி விடுகிறார்கள். கேரியரிசம் எனப்படும் காரியவாத சுயநலத்தால் ‘இன்டர்னல்’ மார்க் போய் விடுமோ – பிராஜக்ட் மார்க் போய் விடுமோ என்கிற பயத்திலேயே கல்லூரி நாட்களைக் கடத்த வேண்டியதாகிறது.

கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் தான் இயல்பிலேயே பொதுவான பிரச்சினைகளில் கூட அச்சமின்றிக் களமிறங்கும் மனத் துணிவு கொண்டவர்களாக இருந்துள்ளனர். தொண்ணூறுகளுக்குப் பிறகு பொதுவான அரசியல் ஈடுபாடும் அரசியல் போராட்டங்களில் இறங்குவதும் குறைந்து கொண்டே வந்தாலும் அவ்வப்போது தமது வர்க்கக் கோரிக்கைக்கான போராட்டங்களும் ஸ்டிரைக்குகளும் நடந்து தான் வந்தன.

இந்த நிலையும் கூட இரண்டாயித்துக்குப் பின்  முற்றிலுமாக மாறியது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இது மிகவும் எடுப்பாகத் தெரிகிறது. மூன்று வருடங்கள் படித்து பட்டம் பெற்றாலும் வேலை என்பது நிச்சயமில்லாத ஒரு நிலை மாணவர்களை விட்டேத்தியான ஒரு மனப்போக்கிற்கு ஆளாக்கியுள்ளது. போதைப் பழக்கம், சினிமா மோகம், ஓட்டுக்கட்சிகளின் கூட்டத்திற்கு காசு வாங்கிக் கொண்டு போவது, குழுச்சண்டைகள் என்கிற சீரழிவுப் போக்கு பரவலாக தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் நிலவுகிறது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் சமூக நிலைமை!

இதன் வகை மாதிரியான சென்னை பச்சையப்பன் கல்லூரியைப் பற்றியும் அதன் மாணவர்களை சீரழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுத்து அவர்களின் சக்தியை அவர்களுக்கே உணர்த்தும் வகையில் போராடி வரும் பு.மா.இ.மு (RSYF – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ) தோழர்களின் அனுபவத்தையும் பார்ப்போம்.

அரசு உதவி பெற்று நடத்தப்பட்டு வரும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சுமார் 7,000 மாணவர்கள் படிக்கிறார்கள். இன்றைய சந்தையில் பொறியியல் படித்த குமாஸ்தாக்களுக்குத்தான் ஓரளவுக்காவது மதிப்பு என்பதால் பெரும்பாலான நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் கடனை உடனை வாங்கியோ இல்லை நகை நட்டுகளை அடமானம் வைத்தோ லட்சக்கணக்கான ரூபாய்களை தண்டமாகக் கட்டி, பிள்ளைகளை ஏதாவது பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். இதற்கு வாய்ப்பில்லாத கீழ்நடுத்தர, உழைக்கு வர்க்கத்து ஏழை மாணவர்களின் ஒரே போக்கிடம் அரசுக் கல்லூரிகளோ அல்லது பச்சையப்பன் போன்ற அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள் தான்.

எப்படிப் படித்தாலும் மூன்று வருடம் கழித்து வேலை என்று ஏதும் கிடைக்கப் போவதில்லை – ஆனாலும் ஏதாவது ஒரு டிகிரியைப் போட்டு வைப்போமே என்று தான் கல்லூரியில் இம்மாணவர்கள் சேருகிறார்கள். ஏதோ மூன்று வருடங்கள் நண்பர்களோடு சுற்றினோமா – ஜாலியாக நேரத்தைப் போக்கினோமா என்று இருந்து விட்டுப் போவோம் என்பதாகத் தான் பெரும்பாலான மாணவர்களின் மனப் போக்கு உள்ளது.

இதில் இரண்டாயிரத்திற்குப் பின் உருவெடுத்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் வகை வகையான செல்போன்களையும் தினுசு தினுசான உடை வகைகளையும் மாணவர்கள் கண்முன்னே அணிவகுக்கச் செய்கிறது. வீட்டில் கேட்டால் காசு கிடைக்காது என்கிற நிலையில் அதைத் தாமே சம்பாதித்துக் கொள்ள தவறான பாதைகளில் இறங்குகிறார்கள்.

சென்னை மாணவர்களிடம் நிலவும் “ரூட்” கலாச்சாரம்! விட்டேத்தி ஹீரோயிச குழுச் சண்டைகளின் உறைவிடம்!!

பச்சையப்பா கல்லூரிக்குச் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்தில் வரும் மாணவர்கள் அதன் வழித்தடத்தை மைய்யமாகக் கொண்டு குழுக்களாகப் பிரிகிறார்கள். இதை ‘ரூட்டுகள்’ என்கிறார்கள். உதாரணமாக பூந்தமல்லி வழித்தடத்தில் இருந்து வெவ்வேறு பேருந்துகளில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ‘பூந்தமல்லி ரூட்டு’ கேங். ஒரே வழித்தடத்தில் வரும் வெவ்வேறு பேருந்துகளில் வரும் மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும் முன் ஒரு பொதுவான இடத்தில் கூட அந்த ரூட்டு ‘தல’யின் தலைமையில் கல்லூரிக்குள் நுழைவார்கள்.

பச்சையப்பா கல்லூரி வாசலில் நின்று பார்க்கும் எவருக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் அப்படி கல்லூரிக்குள் நுழைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் – ஆனால், நீங்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று பார்த்தால் – அவர்கள் அப்படியே நேராக உள்ளே நுழைந்து, வகுப்பறைகளைத் தாண்டி நேராக மைதானத்துக்குச் சென்று விடுவார்கள்.

ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அதில் பத்து மாணவர்கள் தான் வகுப்பில் இருப்பார்கள். மீதமுள்ள மாணவர்கள் ரூட்டு மீட்டிங்கில் ‘பிஸியாக’ இருப்பார். இந்த ரூட்டுக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் கூடும் இடத்திற்குப் பெயர் ‘அட்டி’. இந்த அட்டியில் தான் இவர்கள் தமது ரூட்டு மாணவர்களின் பிரச்சினைகளைப் பற்றி ‘அலசி’ ஆராய்வார்களாம். ஆமாம்… இந்த ரூட்டு மாணவர்களுக்கு என்ன பிரச்சினைகள் வரும்?

பெரிதாக எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்… எல்லாம் யார் எந்த ‘பிகரைக்’ கரெக்ட் செய்வது, நம்ம ரூட்டுக்குள் தனது ‘டாவோடு’ கிராஸ் செய்யும் அடுத்த ரூட்டுக்காரனை டீல் செய்வது எப்படி, தண்ணியடிக்க காசு தேத்துவது எப்படி, சினிமாவுக்கு கட்-அவுட் வைப்பதைப் பற்றி ஆலோசிப்பது போன்றவை தான் ரூட்டுத் தலைகளின் தலைகளைக் குடையும் முக்கியமான பிரச்சினைகள்.

தமது ஊதாரித்தனங்களுக்கு காசு சேர்க்க சக மாணவனையே அடித்துப் பறிப்பது, பக்கத்துக் கல்லூரி மாணவனிடம் வழிப்பறி செய்வது, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குச் சென்று பிரியாணியும், பாட்டிலும் கொஞ்சம் காசும் தேத்திக் கொள்வது என்று ரூட்டுத் தலைகள் தமது அடிப் பொடிகளுக்கு வழிகாட்டுவார்கள். பச்சையப்பன் கல்லூரியில் மட்டும் சுமார் ஏழு ரூட்டுகள் இயங்குகின்றது.

இந்த ரூட்டுகள் ஒவ்வொன்றின் பின்னும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு ஓட்டுக் கட்சிகளின் கை இருக்கும். இதில் படித்து முடித்து விட்ட சீனியர் ரூட்டுத் தலைகள்தான் அரசியல் கட்சிகளுக்கும் தற்போதைய ரூட்டுகளுக்கும் தொடர்பாக செயல்படுகிறார்கள். இதில் பி.ஏ படித்து விட்டு ரூட்டு போதையை விடமுடியாமல் மீண்டும் ஏதாவது ஒரு பிரிவில் பி.ஏ சேரும் சீனியர் ரூட்டு தலைகளும் இருக்கிறார்கள். மாணவப் பருவத்தின் ஹீரோயிசக் கனவுகளுக்கு இந்த ரூட்டுக் கலாச்சாரம் தவறான வகையில் தீனி போடுவதாய் இருக்கிறது.

ரூட்டில் முன்னணியாக இருக்கும் ‘கைகளுக்கு’ ஏதோ தம்மால்தான் இந்த ரூட்டில் பயணிக்கும் ‘புள்ளீங்கோ’ பாதுகாப்பாக கல்லூரிக்கு வந்து செல்வது போலக் கருதிக் கொள்கிறார்கள். இதில் வேறு ரூட்டுகளோடு வரும் மோதல்களைத் தீர்க்கும் விதம் பற்றி முன்பு ஒரு ரூட்டின் தலையாக இயங்கி, தற்போது பு.ம.இ.மு தோழர்களால் வென்றெடுக்கப்பட்ட தோழர் விவரித்தது ஆச்சர்யமாக இருந்தது.

சம்பந்தப்பட்ட ரூட்டு தலைகளும் அவர்களின் முக்கியமான ‘கை’களும் ஏதாவது ஒரு இடத்தில் சந்திப்பார்களாம். அப்போது சினிமாக்களில் காட்டப்படுவது போல் இரண்டு தரப்பும் எதிரெதிரே வரிசையாக நிற்பார்களாம். பின் அவரவர் கொண்டு சென்ற ‘பொருள்களை'(ஆயுதங்களை)  கீழே வைப்பார்களாம். அடுத்து உட்கார்ந்து பஞ்சாயத்து பேசித் தீர்ப்பார்களாம். இந்தப் பஞ்சாயத்தில் ‘கட்டிங்’ போட்டதில் (வழிப்பறி) ஏற்பட்ட பிரச்சினையில் இருந்து ‘ஃபிகர்’ பிரச்சினை வரை பேசித் தீர்ப்பார்களாம்.

“ரூட்” கலாச்சாரத்தை வைத்து போலீசு, மாணவர்களை அடக்கியாளுதல்!

சமயத்தில் ரூட்டுகளுக்கு இடையில் நடக்கும் மோதல் கத்திக் குத்து வரை சென்று செய்தித்தாள்களிலும் கூட வந்ததுண்டு. இப்படி மாணவர்களின் குழுக்களிடையே எழும் மோதல்களை சாக்கிட்டு அடிக்கடி போலீசு கல்லூரிக்குள் நுழைவது – மற்ற மாணவர்கள் முன்னிலையில் அடித்து இழுத்துச் செல்வது போன்ற சம்பவங்களும் கடந்த ஐந்தாண்டுகளாக அதிகரித்துள்ளது.

பொதுவாக கல்லூரிக்குள் போலீசு நுழைந்தால் என்ன கதியாகும் என்பதை நாம் அறிவோம். பத்து வருடங்களுக்கு முன் நான் கல்லூரியில் படித்த காலத்திலெல்லாம் மாணவன் ஒருவன் மேல் போலீசு கைவைப்பது என்பதெல்லாம் நடக்கவே நடக்காத காரியம். அப்படியும் மீறி கல்லூரிக்குள் நுழையும் போலீசு வெளியே செல்வதற்கு முன் தண்ணி குடிக்க வேண்டியதாகி விடும்.

இதன் சரி / தவறுக்குள் செல்லாமல் விலகி நின்று கவனித்தால், இதன் பின் மாணவ சமுதாயத்தின் அந்த அச்சமற்ற தன்மையைக் காணலாம். ஆனால், மாணவர்கள் தமக்குள் ஒன்றுபடாமல் மோதிக்கொள்வதும், அதில் போலீசு உள்ளே நுழைந்து ஒருவனை அடித்து இழுத்துச் செல்வதும் ஓரளவுக்காவது மாணவர்கள் மத்தியில் இருந்த தைரியத்தைக் குலைத்து விட்டது.

ஒரு காலத்தில் பொதுப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் அதிகார வர்க்கத்தை துச்சமாக நினைத்து நெஞ்சு நிமிர்த்தி நின்ற மாணவர்கள், இதன் பின் போலீசு என்றாலே அலறி ஓடும் ஒரு நிலைக்கு வந்துள்ளனர். ரூட்டுகளுக்கு இடையிலான ஒரு தகராறை ஒட்டி 2009ஆம் ஆண்டு டிசம்பரில் போலீசு பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை அடித்துள்ளது.

மாணவர்களை ஊழல்படுத்தும் ஓட்டுக் கட்சிகளின் பொறுக்கி அரசியல்!

ஆளும் வர்க்கத்துக்கும் போலீசுக்கும் மாணவர்கள் இப்படி அற்பக் குழுக்களாக பிளவுண்டு கிடப்பது ஒரு சாதகமான நிலை. தமது கோரிக்கைகளுக்காகக் கூட போராடும் வலிமையை மாணவர்கள் இழந்து விட்ட நிலையில், அரசியல் கோரிக்கைகளுக்காக அவர்கள் இனிமேலும் அணி திரள மாட்டார்கள் என்பது ஆளும் வர்க்கத்துக்கு மகிழ்ச்சியான செய்தி.

ஒன்றியம், நகரம், வட்டம், சதுரம் என்று ஏதாவது ஒரு ஓட்டுக் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு அவ்வப்போது தனது தலைவன் நடத்தும் கூட்டத்துக்கு ஆள் திரட்டியனுப்புவது ஒன்றையே அரசியல் திட்டமாக வைத்துக் கொண்டிருக்கும் லோக்கல் தலைவர்களுக்கு மாணவர்களின் இந்த ஒற்றுமையின்மை ஒரு வரப்பிரசாதம்.

ஐம்பது ரூபாய் பிரியாணி, ஐம்பது ரூபாய் பாட்டில், கையில் ஐம்பது ரூபாயும் கொடுத்தால் சல்லிசாக ‘உருப்படிகள்’ கிடைக்கும். பதிலுக்கு, ரூட்டு பிரச்சினையில் யாராவது மாணவனை போலீசு பிடித்துச் செல்லும் போது ஸ்டேசனுக்குப் போய் ‘தவுலத்து’ காட்டி அவனை மீட்டுக் கொடுத்து விட்டால் போதும் – காலாகாலத்துக்கும் அடிமைகள் மாட்டினார்கள்..!

இதுவொரு போதையான சுழல். பேருந்தில் சப்தமாக தாளம் போட்டு கானா பாடுவது, பயணிகளோடு வம்பிழுப்பது, பாக்கெட் அடிப்பது, பெண்களை உரசுவது, விதவிதமான போதைப் பழக்கங்கள் என்று இளமையின் முக்கியமான கட்டத்தில் வரும் ஒரு மூன்று ஆண்டுகளை வீணடிக்கிறார்கள். இது எல்லா மாணவர்களுக்கும் பொருந்தாது என்றாலும் பொதுவில் மாணவர்களின் தற்போதைய ஆளுமையாக இந்த “ரூட்” கலாச்சாரம் இருக்கிறது.

தவறான பாதையில் எதேச்சையாக நுழைந்து விட்டவர்கள் அல்ல இவர்கள்; அதையே ரசித்துச் செய்து பழக்கப்பட்டு விட்டார்கள். அதிலும் இம்மாணவர்கள் போதை ஏற்றிக் கொள்ள பயன்படுத்தும் அபாயகரமான முறைகளை நண்பர் ஒருவர் நமக்கு விளக்கினார்.  இங்கே விவரிக்கவே முடியாது – ஒருவேளை அப்படியான பழக்கங்கள் இல்லாத மாணவர் எவரும் இக்கட்டுரையைப் படித்தால் அவருக்கு அது ஒரு அறிமுகமாகிவிடக்கூடும் என்பதால் அதை இங்கே தவிர்க்கிறோம்.

இந்த ரூட்டுக் கலாச்சாரத்தை எதிர்த்து பு.மா.இ.மு தோழர்கள் ஒட்டிய போஸ்ட்டர் கிழிக்கப்பட்டிருக்கிறது – ரூட்டில் இருக்கும் மாணவன் என்று தவறாக நினைக்க வேண்டாம்… அத்தனை பொறுப்புணர்வோடு அந்தக் கடமையை நிறைவேற்றியது காவல்துறை தான்..!

பு.மா.இ.மு போராட்டத்தால் புடம்போடப்பட்டு ஜோலிக்கும் காட்டு ரோஜாக்கள்!

இப்படியொரு சவாலான சூழலில் தான் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக பச்சையப்பா கல்லூரி மாணவர்களிடையே பணியாற்றி பல மாணவர்களை அரசியல் சமூக உணர்வோடு வென்றெடுத்ததுடன், மாணவர்களுக்கு இடையிலான ஒற்றுமையையும்; மாணவர் – ஆசிரியர் ஒற்றுமையையும் சாதித்திருக்கிறார்கள்.

அழகிய தோட்டங்களில், நன்றாக பதப்படுத்தப்பட்ட மண்ணில், பாத்தியெடுத்து – நீர்பாய்ச்சி, உரம் போட்ட நிலத்தில் வளரும் ரோஜாச் செடியில் மலரும் ரோஜா மலரை விட – எங்கோ ஒரு வனாந்திரத்தின் இடையே கடும் பாறை முகட்டின் மேல் பருந்தின் எச்சத்திலிருந்து உயிர் பெற்றெழும் ஆலமர விதை வேறூன்றி வளர்ந்து, அந்தப் பாறையைச் சாய்த்து சமமாக்கி நிமிர்ந்து நிற்பது அழகானதல்லவா?

ஆம்… புரட்சியாளர்களின் சாதனைகள் கொல்லையில் பாதுகாப்பாய் வளரும் வீட்டுத் தோட்டத்தைப் போன்றதொரு உயிரற்ற அழகல்ல – அது கடும் வனாந்திரத்தினுள்ளே யாருக்கும் வளையாமல், தனது இருப்புக்காக தானே போராடும் ஒரு காட்டு மரத்தின் உயிரோட்டமான கம்பீரமான அழகு.

நீங்கள் அதைக் காண இன்று பச்சையப்பன் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். பிரியாணிக்கும் பாட்டிலுக்கும் ஓட்டுக் கட்சிகளின் பின்னே சென்ற நிலை மாறி – தம்மைத் தேடி வந்து ‘பொறுப்புகள் தருகிறோம் இளைஞர் காங்கிரஸில் சேருங்கள்’ என்று கேட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு லும்பன் அரசியல்வாதியை தமது பாணியில் ‘கலாய்த்து’ அனுப்பும் தன்னம்பிக்கையும் சுயமரியாதையையும் பெற்றுள்ளார்கள் அந்த கல்லூரி மாணவர்கள்.

வாருங்கள்… ஒரு போராட்டத்தின் கதையைக் கேளுங்கள்… போராட்டக்களத்தில் புடம் போடப்பட்டு ஜொலிக்கும் காட்டு ரோஜாக்களின் அழகைப் பாருங்கள்…

சென்னையின் பல பகுதிகளில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிக்குக் கிளைகள் உண்டு. 2003ம் ஆண்டிலிருந்து பச்சையப்பா கல்லூரியில் இருந்த சில தோழர்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வேலை செய்து வந்த பு.ம.இ.மு, கடந்த இரண்டாண்டுகளாக அங்கே ஒரு கிளையைக் கட்டி, மாணவர்களை ஒரு வர்க்கமாக இணைத்து, அவர்களிடையே புரட்சிகர ஜனநாயகப் பண்பை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக கல்லூரிகளில் செயல்படும் மாணவர் சங்கங்களில் போலி கம்யூனிஸ்டு சங்கங்கள் வலுவாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும், அவர்கள் ஒரு லெட்டர் பேடு கட்சியைப் போன்று தான் செயல்படுகிறார்கள். கல்லூரிக்கு ஓரிரண்டு மாணவர்களைக் கொண்டிருக்கும் இவர்கள் மைய்யமாக எடுக்கும் போராட்டங்களுக்கு போஸ்ட்டர் ஒட்டுவதோடு தமது அரசியல் ‘கடமையை’ முடித்துக் கொள்கிறார்கள். மாணவர்களிடையே உள்ள குழுச் சண்டைகளில் (Gang war) தவறியும் கூட தலையிட்டு நிறுத்துவதில்லை.

ஈழத் தமிழரை அழிக்கும் சிங்கள இனவெறி, இந்திய அரசுக்கெதிராக பு.மா.இ.முவுடன் கிளர்ந்தெழுந்த மாணவர்கள்!

மாணவ சமுதாயத்தின் மேல் கவிந்து கிடந்த அபாயகரமான மௌனத்தின் மேல் இடியாய் இறங்கியது ஈழத்தில் நடந்த இனவொழிப்புப் போர். தமிழகமெங்கும் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் படுகொலைகளை எதிர்த்து வீதியில் இறங்கினர். சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஆளும்வர்க்கத்தின் தூக்கத்தைக் கெடுத்தது.

2009ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி பு.மா.இ.மு தலைமையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் இறங்கினர். தங்களுக்குள் அடித்துக் கொண்டும் மோதிக்கொண்டும் இருந்த இம்மாணவர்கள் இப்படி ஒன்று பட்டு ஒரே குரலாய் தெருவில் இறங்குவார்கள் என்பதை நிர்வாகமும் எதிர்பார்க்கவில்லை – காவல் துறையும் எதிர்பார்க்கவில்லை.

“கும்தலக்கடி கும்மாவா பச்சையப்பாஸ்னா சும்மாவா” “பன மரத்துல வவ்வாலா – பச்சையப்பாஸ்க்கே சவாலா” என்று வெட்டித்தனமாய்க் கூச்சலிட்டுக் கொண்டிருந்த வாய்களிலிருந்து கவிதையாய்க் கிளம்பின புரட்சிகர அரசியல் முழக்கங்கள்…!

அந்தப் போராட்ட காலத்தில் பு.மா.இ.மு தோழர்கள் அச்சமின்றி காவல் துறையினரைக் கையாண்ட விதத்தையும், அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் களத்திலேயே நேரடியாக முதன் முறையாகக் காண்கிறார்கள் மாணவர்கள். மாணவர்களை திரட்டிய ‘குற்றத்திற்காக’ சில பு.மா.இ.மு தோழர்கள் போலீசால் அடித்து நொறுக்கப்பட்டார்கள். எனினும் நொறுக்க முடியாத அவர்களது உறுதியை மாணவர்கள் கவனிக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தளவில் அரசியல் கட்சியென்றால் பதவி – தேர்தல் – கூட்டம் – பிரியாணி – பாட்டில். ஆனால் இங்கே ஒரு அரசியல் அமைப்பு தேர்தல் வேண்டாம், பதவி வேண்டாம் என்கிறார்கள் – நெருக்கடியான ஒரு தருணத்தில் பிற ஓட்டுக் கட்சிகள் சந்தர்ப்பவாதமாய் முடங்கிக் கிடக்கும் நிலையில் ஒரு நேர்மையான அரசியலை உயர்த்திப் பிடிக்கிறார்கள் – மிக முக்கியமாக அதிகாரத்தின் உருட்டுக்கட்டையான போலீசையே துச்சமாய் மதிக்கிறார்கள் என்பது அவர்கள் அதுவரையில் காணாத காட்சி.

ஒரு காட்டாறு தனக்கான சரியான பாதையைக் கண்டடைந்த நிகழ்வு அது. ஹீரோயிசம் என்பதன் உண்மையான அர்த்தத்தை மாணவர்கள் அன்று முதன் முதலாக கற்றுணர்கிறார்கள்.

அதன் பின் மெல்ல மெல்ல தோழர்களை நெருங்கி வருகிறார்கள் மாணவர்கள். மாணவர்களிடையேயான ‘ரூட்டு’ பிரச்சினையை நன்கு உணர்ந்திருந்த தோழர்கள் அதையும் மீறி அவர்களிடையேயான நல்லுறவை வளர்த்து வந்த நிலையில் தான் செல்லம்மாள் மகளிர் கல்லூரி பிரச்சினை வெடிக்கிறது.

சென்னை மாணவர்களை ஒன்றுபடுத்திய செல்லம்மாள் கல்லூரி போராட்டம்!

செல்லம்மாள் கல்லூரு மாணவிகள் போராட்டம்

செல்லம்மாள் கல்லூரி முதல்வர் ரமா ராணி கல்லூரியில் வசூலிக்கும் தொகையை செங்கல் சிமெண்ட் போன்ற பொருட்களாக வசூலித்து தனக்கு வீடு கட்டிக் கொள்ள பயன்படுத்தி வந்துள்ளார். இந்த ஊழலை அம்பலப்படுத்தி எதிர்த்துப் போராடிய செல்லம்மாள் கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஐம்பது பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் செல்கிறார்கள். இதில் இரண்டு மாணவர்களை போலீசு கைது செய்து அழைத்துச் சென்று விடுகிறது.

இதனால் கொதித்தெழும் செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் 400 பேர் மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களை மீட்கிறார்கள். அதைத் தொடர்ந்து மெமோரியல் ஹாலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு 800 செல்லம்மாள் கல்லூரி மாணவிகளும் பச்சையப்பன், கந்தசாமி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுமாக சேர்ந்து ஆயிரத்து ஐநூறு மாணவர்கள் திரளுகிறார்கள். மாணவ சமுதாயத்தின் கோரிக்கை ஒன்றிற்காக சமீப காலத்தில் கூடிய கூட்டங்களிலேயே இதில் தான் அதிகளவு மாணவர்கள் கூடியுள்ளனர்.

இந்தப் போராட்டங்கள் மொத்தத்தையும் முன்நின்று வழிநடத்திய பு.மா.இ.மு தோழர்களின் அர்ப்பணிப்புணர்வும் தலைமைப் பண்பும் பச்சையப்பா கல்லூரி மாணவர்களைக் கவர்கிறது.

ரூட்டுகளுக்கு இடையிலான பிரச்சினைகளைக் கூட அதன் தலைகள் தோழர்களிடம் பேசி தீர்த்து வைக்கச் சொல்லும் நிலை ஏற்படுகிறது. தோழர்கள் மாணவர்களிடையேயான முரண்பாடுகளைத் தீர்த்து அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றியையும் சாதித்து வந்த நிலையில் தான் மாணவர்களை இன்னமும் தமக்குள் நெருங்கி வரச் செய்யும் முகமாக பஸ் பாஸ் பிரச்சினையைத் தோழர்கள் கையிலெடுக்கிறார்கள்.

இலவச பஸ் பாஸ் போராட்டத்தால் பின்னுக்குப் போன ரூட் கலாச்சாரம்!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு உதவி பெற்று நடத்தப்பட்டு வரும் 150 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கோ இந்த வசதி இல்லை. ஒப்பீட்டளவில், அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் அரசு உதவி பெறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் ஒரே விதமான வர்க்கப் பின்னணியில் இருந்து வருபவர்கள் தான்.

உழைக்கும் ஏழை வர்க்கத்தைச் சேர்ந்த இம்மாணவர்கள் இருபதில் இருந்து நாற்பது ரூபாய்கள் வரை ஒவ்வொரு நாளும் போக்குவரத்திற்காக செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும் என்று கோரி முதன் முதலாக பச்சையப்பா கல்லூரி பு.ம.இ.மு கிளைத் தோழர்கள் தலைமையில் சுவரொட்டி இயக்கம் எடுக்கிறார்கள் மாணவர்கள்.

கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களும் தாங்க முடியாத ஆச்சரியம். அவர்களைப் பொருத்தளவில் தமக்குள் ரூட்டுப் பிரச்சினைகளுக்காக அடித்துக் கொண்டு திரியும் உருப்படாத மாணவர்கள் என்று கருதியவர்கள் முதன் முதலாக ஒன்றுபட்டு தமக்கான ஒரு கோரிக்கைக்காக போராடுகிறார்கள். தோழர்களைச் சந்தித்த சில பேராசிரியர்கள், அவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவைத் தாம் அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இன்னும் சில பேராசிரியர்கள் “இத்தனை நாட்களாக எங்கேயிருந்தீர்கள்; இப்போதாவது இங்கே வந்தீர்களே… இந்த மாணவர்களை உங்களால் மட்டும் தான் நெறிப்படுத்த முடியும்” என்று மனதார பாராட்டி வாழ்த்தியுள்ளனர். மட்டுமல்லாமல், கண்டிப்பான துறைத்தலைவர்கள் என்று அறியப்பட்ட பேராசிரியர்களே வகுப்பு நேரத்தில் பஸ்பாஸ் பிரச்சினைக்காக மாணவர்களிடம் பேசி ஆதரவு திரட்ட வரும் தோழர்களை ஆதரித்து மாணவர்கள் முன் வகுப்பறையிலேயே பேச அனுமதியளித்துள்ளனர்.

தோழர்களின் தலைமையில் சென்ற ஜூலை 15ம் தேதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டத்திற்காக தோழர்கள் கவனமாக திட்டமிட்டு ஒவ்வொரு ரூட்டுத் தலையாக பேசி வென்றெடுத்து – சம்மதிக்க வைத்துள்ளனர். இவையனைத்துக்கும் சிகரமாக, பச்சையப்பன் மாணவர்கள் ஒரு பத்து பேர் கூடினாலே பஸ் கண்ணாடியை உடைத்து விடுவார்கள் என்ற ஒரு பொதுக்கருத்தை மாற்றியுள்ளனர். கட்டுப்பாடு என்றால் என்னவென்றே அறியாத மாணவர்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்து மிக அமைதியாக ஒருமித்த வகையில் சாலையில் அமர வைத்துள்ளனர்.

சாலை மறிக்கப்பட்டு பேருந்துகள் நிற்கிறது… இறங்கி வந்து விசாரிக்கும் பொதுமக்களுக்கோ அது அதிசயமான சம்பவமாக உள்ளது. அவர்கள் அதுவரை கண்ட பச்சையப்பா கல்லூரி மாணவன் வேறு – அன்று கண் முன்னே காணும் பச்சையப்பா மாணவன் வேறு. மாணவர்கள் கோரிக்கையை விசாரித்தறியும் பொதுமக்கள் பலர் அன்று மாணவர்கள் தங்கள் போராட்டத்தில் வெல்ல வாழ்த்திச் சென்றுள்ளனர்.

இத்தனை நாட்களாக பச்சையப்பன் மாணவன் என்றாலே முகத்தைச் சுழித்துச் செல்லும் சமூகத்தின் பார்வையில் முதன் முறையாக தமது மதிப்பு உயர்வதை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அன்று பார்க்கிறார்கள். சாதாரணமாக கல்லூரி வளாகத்துக்குள் புகுந்து அடிக்கும் போலீசு அன்று மாணவர்கள் முன்னே பவ்வியமாய் நின்று பேச்சுவார்த்தை நடத்திய அதிசயம் அவர்கள் அதுவரை காணாதவொன்று.

அதைத் தொடர்ந்து பஸ் பாஸ் பிரச்சினைக்காக கையெழுத்து இயக்கம் எடுக்கும் பு.ம.இ.மு ஜூலை 20ம் தேதியன்று தலைமைச் செயலகம் சென்று கல்வி துறை செயலரைச் சந்தித்து மனு அளிப்பது என்று முடிவெடுக்கிறார்கள். மாணவர்களின் ஒற்றுமையையும் போராட்ட உறுதியையும் கண்டு பாராட்டும் தலைமையாசிரியரும் பேராசிரியர்களும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவளிக்கிறார்கள்.

ஜூலை 20ஆம் தேதி சில தோழர்கள் மட்டும் தலைமைச் செயலகம் சென்று செயலரைச் சந்திப்பதாகத்தான் முதலில் முடிவெடுத்திருந்தனர். ஏனெனில் பழைய தலைமைச் செயலகம் அருகே இருக்கும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு எப்போதும் ஒத்துக் கொண்டதேயில்லை. இவர்கள் கூட்டமாக அங்கே செல்லும் போது ஏதாவது கோஷம் போட்டு அதனால் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது மோதல் ஏற்பட்டுவிடுமோவென்று தோழர்கள் தயங்கியிருக்கிறார்கள். ஆனால், தோழர்களே ஆச்சர்யப்படும் விதத்தில் மாணவர்கள் கட்டுப்பாட்டைக் கடைபிடித்துள்ளனர். சுமார் ஐநூறு மாணவர்கள் ஆறு பேருந்தில் பச்சையப்பா கல்லூரியில் இருந்து தலைமைச் செயலகம் சென்றுள்ளனர். வழியில் போலீசிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தையும் கூட பொறுமையாக அவர்களே பேசித் தீர்த்துள்ளனர்.

இந்த ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கண்ட சீனியர் மாணவர்கள் சிலர் தோழர்களைத் தனியாக சந்தித்து “ஏன் நாங்கள் படித்த காலத்திலேயே நீங்கள் வராமல் போனீர்கள்” என்று குரல் தழுதழுக்கக் கேட்டுள்ளனர்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை பார்த்து பு.மா.இ.மு தோழர்களின் முயற்சியால் கந்தசாமி நாயுடு கல்லூரியிலும் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடக்கிறது. அங்கும் பச்சையப்பனில் பார்த்த அதே காட்சிகள் அரங்கேறுகின்றன. மாணவர்கள் தமது கோரிக்கைக்காக கட்டுப்பாடுடன் போராடும் அழகை அங்கிருக்கும் ஆசிரியர்களும் பாராட்டுகின்றனர்.

pachaiyappa-colloege-bus-pass-strugglepachaiyappa-colloege-bus-pass-strugglepachaiyappa-colloege-bus-pass-strugglepachaiyappa-colloege-bus-pass-strugglepachaiyappa-colloege-bus-pass-strugglepachaiyappa-colloege-bus-pass-struggle

மாணவர் புரட்சி படையிடம் புறமுதுகு காட்டி ஓடும் ஓட்டு கட்சி பொறுக்கி படை!

சென்ற வாரத்தில் காங்கிரசின் மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தனது மகனை இளைஞர் காங்கிரசில் பொறுப்புக்கு கொண்டு வருவதற்காக மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்க 600 உறுப்பினர் படிவங்களை தூக்கிக் கொண்டு வந்து மாணவர்களைப் பார்த்திருக்கிறார். கட்சியில் பொறுப்பு வாங்கித் தருவதாகவும், ஏதாவது போலீசு பிரச்சினை என்றால் தானே பார்த்து முடித்துத் தருவதாகவும் சொல்லி நூறு விசிட்டிங் கார்டும் கொடுத்துள்ளார்.

அவர் நிச்சயம் பழைய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை நினைத்து வந்திருக்க வேண்டும். இன்றைக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் புரட்சியாளர்களால் களத்தில் புடம் போடப்பட்டு ஜொலிக்கும் வைரங்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை பாவம்.

மாணவர்கள் இது பு.மா.இ.மு கோட்டை என்றும் இங்கே உங்கள் பப்பு வேகாது என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர், “பு.மா.இ.முவா…? யார் அது..?” என்று கேட்டிருக்கிறார்.

மாணவர்கள் பு.மா.இ.மு என்பது ம.க.இ.கவின் தோழமை அமைப்பு என்று சொன்னதும் அவர் அப்படியே பம்மி விட்டாராம். சென்ற மாதத்திலும் கூட காங்கிரசு மாணவர் அமைப்பைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் இதே போன்று 300 உறுப்பினர் சேர்ப்பு படிவத்தைக் கொண்டு வந்து கொடுத்து முகத்தில் கரியோடு திரும்பியுள்ளனர். பகத் சிங் பிறந்த நாளன்று மாணவர்களே தமது முன்முயற்சியில் தமக்குள் காசு வசூலித்து ஒரு பிளக்ஸ் பேணர் வைத்துள்ளனர்.

பொதுவாக மாணவர்களுக்குள் காசு கேட்டால் அத்தனை சீக்கிரம் கிடைத்து விடாது – அவர்கள் கொண்டு வரும் பணமும் போக்குவரத்துச் செலவுக்கே சரியாக இருக்கும். பகத் சிங்கிற்கு பேனர் வைக்க வேண்டும் என்று சொன்னதும் தம்மிடம் இருந்ததையெல்லாம் அள்ளிக் கொடுத்துள்ளனர். சமீபத்தில் போபால் துயரத்தையும் அரசின் மோசடித்தனத்தையும் விளக்கி வாயிற் கூட்டம் நடத்தியுள்ளனர். அதற்கு திரளான மாணவர்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர்.

RSYF
மதுரவாயல் ரவுடி யோசுவாவை எதிர்த்து...

வினவு வாசகர்கள் மதுரவாயல் ரவுடி யோசுவாவை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த சம்பவத்தின் போது கல்லூரித் தேர்வு நேரம்.. விஷயத்தைக் கேள்விப்பட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் தேர்வை முடித்ததும் சாரி சாரியாக மதுரவாயல் காவல் நிலையத்தின் முன் குவிந்துள்ளனர். கிட்டத்தட்ட ஆறு பேருந்துகளில் வந்திறங்கிய மாணவப் படையைக் கண்டு கதிகலங்கிய மதுரவாயல் போலீசு அதன் பின்தான் யோசுவாவை வேறு இடத்தில் கைது செய்து வைத்திருப்பதாக உறுதி கொடுத்துள்ளனர்.

இதில், அதே பகுதியைச் சேர்ந்த யோசுவாவின் உறவினர்களான பச்சையப்பன் மாணவர்களிடம் யோசுவா “நீங்களும் உங்களுக்குத் தெரிந்த மாணவர்களைக் கொண்டு வந்து இறக்குங்கள் – பு.மா.இ.முவை ஒரு கை பார்க்கலாம்” என்று சொன்னானாம். அதற்கு அவர்கள், இப்போது கல்லூரி பு.மா.இ.முவின் கோட்டை என்றும் மாணவர்கள் இது போன்ற ரவுடிகளின் பின்னெல்லாம் செல்ல மாட்டார்கள் என்றும் சொன்னதோடு அவனை ஆதரிக்காமல் பிரச்சினையில் இருந்து தாமும் ஒதுங்கி நின்றுள்ளனர்.

நாட்டு மக்களின் போராட்டங்கள் மாணவர்களுக்காக காத்து கிடக்கின்றன!

எதிர்வரும் காலங்கள் கடும் சவாலானவை. நாடு மொத்தமும் அடகு போய்க் கொண்டிருக்கும் நிலையில் போராட்டக்களங்களில் புரட்சியாளர்கள் நாட்டையாளும் தேச விரோதிகளை எதிர்த்து நிற்கிறார்கள். ஆப்ரிக்காவைக் காட்டிலும் வறுமையான மக்களை அதிகம் கொண்டிருக்கும் இந்த நாட்டில் தான் காமென்வெல்த் போட்டிகள் போன்ற ஆடம்பரங்களை மக்கள் பணத்தில் செய்து அதில் கொள்ளையும் அடிக்கிறார்கள் ஆளும் வர்க்க பாசிஸ்ட்டுகள்.

இன்னொரு முனையில் பார்ப்பன இந்துமதவெறி பாசிச பயங்கரவாதிகள் பாய்ந்து குதறும் வாய்ப்பு ஒன்றுக்காக காத்துக் கிடக்கிறார்கள். மாணவர்களின் உலகம் கல்லூரியையும் கடந்தவொன்று என்று உணரும் தருணம் வந்து விட்டது. அச்சமற்றவர்களை எதிர்பார்த்து போராட்டக் களங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

நெருப்பில் இறங்கத் துணியும் மாணவர்களின் பங்கு இல்லாமல் நாட்டின் போராட்டங்கள் ஏதோ ஒரு சோர்விலும் அவலத்திலும் துவண்டு கிடக்கின்றன. மாணவனின் கை பட்ட பிறகே அவை சுயமரியாதையோடு எழுந்து நின்று போராடும்.

அத்தகைய சுய உணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் காட்டுப் பாறையில் ரோஜாவை வளர்க்கும் கடினமான பணிதான். எனினும் அந்த பாதையில் பு.மா.இ.மு தோழர்கள் பயணிக்கிறார்கள், போராடுகிறார்கள். பச்சையப்பா கல்லூரி அனுபவம் அந்த நம்பிக்கையை தருகிறது. இது மற்ற கல்லூரிகளுக்கும் பரவ வேண்டும். பரவும், பரப்புவோம் என்கிறார்கள் பு.மா.இ.மு தோழர்கள்.

வினவு செய்தியாளர், சென்னையிலிருந்து
_________________________________________

பு.மா.இ.முவின் வலைப்பூ : http://rsyf.wordpress.com/
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’! சிறப்பு ரிப்போர்ட்!!…

    பச்சையப்பன் கல்லூரி மாணவன் என்றாலே முகம் சுழித்துச் செல்பவரா நீங்கள்? ஒரு போராட்டத்தின் கதையைக் கேளுங்கள்! போராட்டக்களத்தில் புடம் போடப்பட்டு ஜொலிக்கும் காட்டு ரோஜாக்களைப் பாருங்கள்……

  2. தவறாக என்ன வேண்டாம். வினவு கட்டுரையாளர்கள் அனைவரும் இளங்கலை வரலாறு, இளங்கலை பொருளாதாரம் படித்தவர்களா.

    பக்கம் பக்கமாக எழுதுகின்றனரே.

  3. கல்லூரி மாணவர்கள் இப்படி அனைத்து ஊர்களிலும் தம் பலமறிந்து ஒன்றிணைந்தால் தமிழ்நாட்டில் ரௌடிசம் கட்டைபஞ்சாயத்து ஈவ்டீசிங் கள்ளச்சாராயம் ஏன் திருட்டும் கொள்ளையும் கூட இருக்காது நிச்சயமாக சொல்கிறேன் சாதி என்ற வார்த்தையே அழிந்துவிடும் அதை நோக்கி திரும்ப விடாமல் அரசியல் மற்றும் சாதிய சக்திகள் அவர்களிடையே பிரிவுகளை தூண்டுகிறார்கள்.சாதிக்கும் ஆற்றலும் கடுமையான துணிச்சலும் உள்ள அந்த பருவத்தில் போதை பணம் மற்றும் சாதிய உணர்வுகளால் அவர்களை ஊனமாக்குகிறார்கள் மாணவிகளின் துணிவும் அதற்கு மாணவர்களின் ஆதரவும் தமிழகத்திற்கு ஒரு புதிய கலாச்சாரமே.மாணவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று மக்கள் நினைக்கவேண்டும்.

  4. மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் பதிவு. செய்தியாளருக்கும் தோழர்களகுக்கும் வாழ்த்துகள்

  5. it is a very good beginning.
    this country belonged to the younger.we fight in the 1965 without any fear. I lost my teacher job because I give training to my students in our school play ground how to escape from the police lathi charge and tear gas. My students are bravely fight for their cause. even to day I have contact with my student.
    it is correct the entire India is waiting for the student action to eliminate all problem.
    all problem arise because of this two
    1. caste
    2. relgion.
    only inter-caste- marriage and inter religious marriage is the solution for this.
    the younger generation must think about this,
    we the senior citizen miserably failed to give good featured to the younger.
    we failed to unite the TAMILS BY INTER CASTE MARRIAGE.
    we expect from the young to think about this.
    because this country is belonged them.

  6. அப்படியேஎல்லா அரசு கல்லூரிக்கும் வாங்க தோழர்,சில மூத்த பேராசிரியர்கள் பி டி ஏ பணம்,எஸ்சிஎஸ்டிக்கு சிறப்பு கோச்சீங் பணம் எல்லாத்தையும் கொள்ளை அடிக்கிறாங்க.கேட்டா சாதி பிரச்சினை கிளப்புறாங்க.

  7. வாழ்த்துக்கள்.
    RSYF தளம் அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது.

  8. என் மாணவப் பருவத்தில் புமஇமு வை சந்திக்காமல் விட்டதை எண்ணி வருத்தப்படுகிறேன். தோழர்களுக்கும் மாணவர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

  9. இன்றைய மாணவர்கள், சுயநலமிக்கவர்கள்! சுகவாசிகள்!
    வடிகால்கள் நிறைய!திசை திருப்பும் நிகழ்வுகள் அதிகம்!
    உமது நோக்கம் நிறைவேறுவது கடினம்!

    பாடசாலைகளில், எந்த அரசியல்/ போராட்ட குழுவுக்கும் வேலையில்லை! வன்முறை அங்கே தேவையில்லை!
    சென்னை சட்டக் கல்லூரி சம்பவத்தை நினைவுறுங்கள்!

  10. கல்லூரிகளில் மட்டுமல்ல பணிபுரியும் அரசு நிறுவனகளாக இருந்தாலும் கூட ஜாதிவெறி தலைவிரித்தாடுகிறது .தனியார் நிறுவனங்கலேன்றால் சொல்லவே தேவையில்லை .

  11. வினவு கட்டுரையாளர்கள் அனைவரும் இளங்கலை வரலாறு, இளங்கலை பொருளாதாரம் படித்தவர்களா.>?

    வாழ்த்துகள் தோழரே.

    முழுமையாக கல்லூரிப் பாடங்களை படித்தவர்கள் மட்டும் நிச்சயம் இது போன்று எழுத முடியாது? கல்லூரில் முனைவர் பட்டங்கள் பெற்று பாடம் நடத்தியவர்களின் ஞானத்தை நீங்கள் பெற்று இருப்பீர்கள் தானே?

    விளக்கு கம்பத்திற்கு ஏதோ சொல்லிக்கொண்டு இருப்பது போல ஒப்பித்துக் கொண்டுருப்பார்கள். இது போன்ற கட்டுரையாளர்கள் சொந்த வாழ்க்கை அனுபவத்தின் மூலமே எழுத முடியும் என்பது என் அனுமானம்.

  12. சபாஷ்..
    அருமையான பதிவு. சென்னை கல்லூரிகளில் நிலவும் ரூட் கலாசாரத்தைப் பற்றி மிக விவரமான தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள். தடம்மாறிய அந்த மாணவர்களை பற்றி யாருமே கவலைப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. உங்கள் நல்லெண்ணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
    நான் சென்னை நந்தனம் கலைக்கல்லூரியின் பழைய மாணவன். அந்த கல்லூரியில் கிட்டதட்ட 5 ரூட்டுகள் இருந்தது. 23C, 12B, 45B, 54L, 18K ஆகியவை. நான் 12B ரூட். அடுத்த கல்லூரி மாணவர்களுடன் மோதல் வருகிறதோ இல்லையோ எங்களுக்குள்ளேயே அடிக்கடி மோதல் நிகழும். மற்ற நேரங்களில் பொதுமக்களையும் போலிசையும் வீண்வம்புக்கு இழுப்போம்.
    அவ்வளவு அசிங்கமான வாழ்க்கையை ஒரு மூன்று ஆண்டுகள் வாழ்ந்ததற்கு இன்று தலைகுனிகிறேன். எங்கள்மேல் அக்கறை கொண்ட எந்த கட்சியும் எங்களை அணுகியதில்லை. அவர்களுடைய லாபத்திற்காகவே எங்களை பயன்படுத்தி கொண்டார்கள்.
    உங்களுக்கு இன்னும் நிறைய கல்லூரிகளில் வேலை இருக்கிறது. வாழ்த்துக்கள்…………………..

  13. Makkaludaiya vari panaththai Engg. padikkum manavarkaluku vaari vazhangi (through the bank) , velai vayppum illamal bank thivalagi, naadum thivalagum. The student should fight against education privatitation.

  14. மீஞ்சூரில் உள்ள மார்வடிகளின் சந்திரபிரபு ஜெயின் கல்லூரிக்கு சரியான சாலைவசதிகள் இல்லை.மழைக்காலம்என்றால் இடுப்பளவு தண்ணீரில்தான் அதுவும் சுற்றி இக்கல்லூரிக்குச்
    செல்லவேண்டு.அதைச் சரி செய்யாத நிர்வாகம் மாணவர்களை அடக்கி ஒடுக்கி வந்துள்ளதுஎதற்கெடுத்தலும் அபராதம்.ஜீன்ஸ் போட்டு வந்தால் குற்றம் அதற்கு அபராதம்.அக்டோபர் மாதம் மாணவர்கள் இரயில் பாதையில் நடந்து சென்றபொழுது இரயில் மோதி நான்கு பேர் இறந்தனர்.மாணவர்கள் கொதித்து எழுந்துள்ளனர். கல்லூரி மார்வாடிகளின் சொத்து.நான்கு பேர் பலியான அன்று மாணவர் கோபம் கல்லூரி மேல் திரும்பியது.ஒருகோடி சேதம்என்கிறது நிர்வாகம்.
    இக்கல்லூரிக்கு வினவு நீஎப்ப போகப்போற?

  15. சமூக வார்ப்படத்தின் தலை வாசலில் நிற்பவர்கள் மாணவர்கள், சமூகத்தின் இளமை,சமூகத்தின் திரண்ட அறிவு,வருங்காலத்தின் குருத்துகள்,சமூகத்தின் நிரந்தர வழிகாட்டிகள்,எரிமலையின் இதயம்,கடலின் ஆழம்,ஈகையின் சிகரம்,சுண்டி இழுக்கும் காந்தம்,சுழலும் அச்சு,வரலாற்றின் நடு நாயகம்,தன் வலிமை தான் உணரும் தருணம்,வருணனைகள் அல்ல,வாய்மை.பு.மா.இ.மு.மாணவர்களின் தோழன்.தோழமையின் எதிர்காலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க