முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!

சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!

-

கேள்வி :

சமச்சீர் கல்வியை பற்றி தங்கள் கருத்தென்ன? சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவை எப்படி பார்க்கிறீர்கள்? தங்கள் தளத்தில் கல்வி சார்ந்த கட்டுரைகள் வருவது மிக குறைவாக உள்ளதேன்?

– சீனிவாசன்

கேள்வி :
ஐயா, சமச்சீர் கல்வி நிறுத்திவைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

– பாலச்சந்தர்

அன்புள்ள சீனிவாசன், பாலச்சந்தர்,

சமச்சீர் கல்வி குறித்து புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை ஒரு தொகுப்பான பார்வையை அளிக்குமென்பதால் அதையே எமது பதிலாக அளிக்கிறோம். வினவில் கல்வி குறித்து அதிகம் கட்டுரைகள் வரவில்லை என்பது உண்மைதான். எதிர்காலத்தில் அதைக் களைந்து கொண்டு போதிய கட்டுரைகள் வெளியிடுகிறோம். நன்றி

– வினவு

__________________________________________________

மச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்ததன் மூலம், பெயரளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும்கூட எதிரான கடைந்தெடுத்த பார்ப்பன-பாசிஸ்டு என்பதைப் பதவியேற்றவுடனேயே நிரூபித்துக் காட்டி விட்டார், ஜெயலலிதா.

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் முகமாக, கடந்த கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், அதற்கான பாடத்திட்டமும் தயாரிக்கப்பட்டு, பாட நூல்களும் அச்சாகி விநியோகிக்கத் தயாராக உள்ள நிலையில், புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டங்களே பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.

200 கோடி ரூபா செலவில் ஏற்கெனவே அச்சாகியுள்ள பொதுப் பாடத்திட்டத்திற்கான பாடநூல்களைக் குப்பையைப் போல ஒதுக்கிவிட்ட அ.தி.முக. அரசு, பழைய பாடத்திட்டத்தின்படி இனிதான் பாடநூல்களை அச்சிடப் போகிறது. இதற்கு 100 கோடி ரூபாக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  ஜெயா, அதிரடியாகச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவிட்டதால், ஒருபுறம் 200 கோடி ரூபாக்கும் மேலான மக்களின் வரிப்பணம் பாழாகிவிட்டது. இன்னொருபுறமோ, பள்ளி தொடங்கும்பொழுதே  மாணவர்கள் பாடநூல்கள் கிடைக்காமல் திண்டாடப் போகிறார்கள். எப்பேர்பட்ட நிர்வாகத் திறன்!

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைத் தனியார் பள்ளிக் கொள்ளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரவேற்கிறார்கள். “சமச்சீர் கல்வி என்ற சொற்றொடரைக் கேட்டவுடன், தமிழகம் கல்வியில் இருண்டு விடுமோ என்ற அச்சம் எங்களை வாட்டிய வேளையில், வாராது வந்த மாமணிபோல் இறைவனால் அனுப்பப்பட்ட விடிவெள்ளி தாங்களே!” என அக்கும்பல் ஜெயாவைப் பாராட்டி விளம்பரங்களை வெளியிட்டிருக்கிறது.

“பல்வேறு பாடத் திட்ட முறைகளிலிருந்து சிறந்த பாடத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில் ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்த முடியாது. இப்போதைய சமச்சீர் கல்விமுறை, கல்வியின் தரத்தை உயர்த்தாது என்பதால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்” எனத் தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்விக்கு எதிராக வைத்து வரும் வாதங்களையே அரசின் நிலைப்பாடாக உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் அறிவித்திருக்கிறார்.

சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியை மறுபடியும் நடைமுறை படுத்தக்கோரி மதுரையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய மறியல் போராட்டம்

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிக்கல்வியில், அரசு பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம், ஓரியண்டல் பாடத்திட்டம், ஆங்கிலோ-இந்தியன் பாடத்திட்டம்  என நான்கு வகையான பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இவ்வேறுபட்ட பாடத்திட்டங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி வருவதால், ஒரே சீரான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வந்ததைத்தான், நாட்டின் ஆகப்பெரும்பான்மை மாநிலங்களில் இருந்து வருவதைப் போன்ற பொதுப் பாடத்திட்ட முறையைத்தான் கடந்த தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த முன்வந்தது.

2006-இல் தி.மு.க. அரசு பதவியேற்றவுடன், “சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வரலாமா, வேண்டாமா?” என்பது குறித்து ஆராய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில், கல்வியாளர்கள் எஸ்.எஸ். ராஜகோபாலன், ஜார்ஜ் ஆகியோரையும் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இக்குழு தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவரும் பல்வேறு பாடத்திட்டங்களையும், கர்நாடகம், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்துவரும் பாடத்திட்டங்களையும் ஆராந்து, சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக 109 பரிந்துரைகளை அரசிடம் அளித்தது.

இப்பரிந்துரைகள் அனைத்தையும் தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, முத்துக்குமரன் அறிக்கையின்படி பொது பாடத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் முனையவில்லை. மாறாக, இதனை நடைமுறைப்படுத்துவதை இழுத்தடிக்கும் முகமாக விஜயகுமார் கமிட்டியை அமைத்தது. மேலும், தனது கட்சியையும்  கூட்டணி கட்சியான காங்கிரசையும் சேர்ந்த பலரும் மெட்ரிக் பள்ளி முதலாளிகளாக இருந்துவருவதாலும் இப்பொதுப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட பல சமரசங்களைச் செய்து கொண்டு, தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில்தான் சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்திரவிட்டது, தி.மு.க. அரசு.

முத்துக்குமரன் கமிட்டி அளித்த பரிந்துரையின்படி, தமிழகப் பள்ளிகளில் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுக் கல்வி வாரியம் அமைக்கப்பட்டது. இதன் கீழ் பொது பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக வல்லுநர் குழு, ஆசிரியர் குழு, மறுஆவுக் குழு ஆகிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டம் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன் நிறை, குறை பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் குறைகள் நீக்கப்பட்டு, புதிய பகுதிகள் இணைக்கப்பட்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், அதனை பொதுக்கல்வி வாரியம் அங்கீகரித்த பிறகே பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், இப்பொதுப் பாடத்திட்டத்தை ஆதரிக்கும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மெட்ரிக் பள்ளி முதலாளிகள் இப்பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தோடு, இச்சமச்சீர் கல்விச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து தோற்றுப் போனார்கள். அவ்விரு நீதிமன்றங்களும் இது மாநில அரசின் உரிமை என்று இச்சட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தன.  அப்போதெல்லாம் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் முடங்கிக் கிடந்தது, ஜெயா கும்பல். இப்பொழுதோ, மெட்ரிக் பள்ளி முதலாளிகளும் அ.தி.மு.க. அரசும் இதனையெல்லாம் மறைத்துவிட்டு, பொதுப் பாடத்திட்டத்தை அவசர கோலத்தில் உருவாக்கி நடைமுறைப்படுத்திவிட்டனர் என்ற பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்லி, இது தரம் குறைந்த பாடத்திட்டம் என்ற அவதூறைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

இப்பொது பாடத்திட்டத்தில் குறைகள் கண்டறியப்பட்டால், அவற்றை ஒரு சுற்றறிக்கையின் மூலம் நீக்கிவிட்டு, பொதுப் பாடத்திட்டத்தை இந்தக் கல்வியாண்டு முதலே ஒன்று முதல் பத்தாம் வகுப்பு முடிய நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்றுதான் கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்பொதுப் பாடத்திட்டம் தரம் குறைவாக இருப்பதாகக் கூச்சல் போடும் அ.தி.மு.க. கும்பலோ, “கருணாநிதி இயற்றிய செம்மொழி தமிழ் பற்றிய பாடலும், அவரைப் பற்றிய குறிப்புகளும் இப்பொதுப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளதை‘‘த் தவிர, வேறெந்த குறைகளையோ, பிழைகளையோ இதுவரை சுட்டிக் காட்டவில்லை.

இப்பொதுப் பாடத்திட்டம் மாணவர்களின் பாடச் சுமையைக் குறைத்திருப்பதைத்தான், தரத்தைக் குறைத்துவிட்டதாக மெட்ரிக் பள்ளி முதலாளிகள் ஒப்பாரி வைக்கிறார்கள். பாடச் சுமையை அதிகரித்தால்தான் தரம் அதிகரிக்கும் என்பது முட்டாள்தனமான, அறிவியலுக்குப் புறம்பான வாதம்.

பொதுப் பாடத்திட்டத்தைத் தரம் குறைவானதெனக் குற்றஞ் சுமத்தும் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க அரசு பாடத்திட்டத்தைதான் பின்பற்றுகின்றன. மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் அரசு பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகிறார்களேயொழிய, ‘தரம்’ அதிகமுள்ள வேறு பாடத்திட்டங்களுக்கு மாறிச் சேல்லவில்லை. +1 மற்றும் +2 அளவில் பொதுப் பாடத்திட்டம் வெகுகாலமாகவே நடைமுறையில் இருக்கும்பொழுது, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தரம் குறைந்துபோகும் என்பதற்கு எந்த அடிப்படையும் இருக்க முடியாது.

புதிய தலைமைச் செயலகம், சட்ட மேலவை போல சமச்சீர் கல்வித் திட்டமும் தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதால்தான், இத்திட்டத்தை ஜெயா நிறுத்தி வைத்துவிட்டார் என இப்பிரச்சினையைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. சனாதன தர்மத்தையும், தனியார்மயம் – தாராளமயத்தையும் தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவிற்குச் சமத்துவம் என்ற சொல் கூட அறவே பிடிக்காது; அவர் சமச்சீர் கல்வித் திட்டத்தை காலவரையற்று நிறுத்தி வைத்துவிட்டதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். அவர் பள்ளிக் கல்வி தொடர்பாக விடுத்துள்ள இன்னொரு அறிவிப்பு இதனை உறுதி செய்கிறது.

சமச்சீர் கல்வி
கோவையில் ஒரு தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையை கண்டித்து பெற்றோர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டம் (மே 2011)

தனியார் ஆங்கிலப் பள்ளிக் கல்வி முதலாளிகள் அடிக்கும் கட்டணக் கொள்ளை அரசால் கட்டுப்படுத்தப்படுமா எனப் பெற்றோர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில், “தனியார் பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு நேரடியாகச் சம்பந்தப்படவில்லை; கட்டண நிர்ணயக் குழுவுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் எனப் பள்ளிகள் விரும்பினால் அரசு தலையிடும்” என அறிவித்திருக்கிறார், ஜெயா. வாராது வந்த மாமணி என ஜெயாவைத் தனியார் பள்ளி முதலாளிகள் புகழுவதற்கு இதைவிட வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்?

மைய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைக்கான சட்டத்தை, இந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தி.மு.க. அரசு தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக உத்தரவிட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போன சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியொன்றின் நிர்வாகம், “இச்சட்டப்படி ஏழை மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டால், பள்ளியின் ஒழுக்கமே கெட்டுவிடும்; எனவே, பெற்றோர்கள் இச்சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டும்” எனக் குறிப்பிட்டு, தமது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதனைத் தனிப்பட்ட பள்ளியொன்றின் கருத்தாகப் பார்க்க முடியாது. ஏழைகளின் கல்வியுரிமை குறித்த தனியார் பள்ளி முதலாளிகளின் பொதுக்கருத்து இதுதான். தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளிகள் “தரம், ஒழுக்கம்” எனக் கூச்சல் போடுவதன் பின்னே, ஏழை மக்களுக்கு எதிரான வெறுப்புதான் மறைந்திருக்கிறது.

“சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கால நிர்ணயம் ஏதும் வகுக்கப்படவில்லை” என அறிவித்து, அக்கல்வித் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்திவிடும் முயற்சியில் ஜெயா இறங்கியிருக்க, சி.பி.எம்., “சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்பட மாட்டாது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தம்மிடம் உறுதியளித்ததாக” அறிக்கைவிட்டு, ஜெயாவின் சதித்தனத்தை மூடிமறைத்துவிட முயலுகிறது. ஏழைகளின் கல்வி உரிமைக்காகப் போராடுவதைவிட, ஜெயாவிற்கு விசுவாசமாக இருப்பதில்தான் சி.பி.எம்.-க்கு எவ்வளவு அக்கறை! சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து கருத்தரங்குகளிலும் ஊடகங்களிலும் வலியுறுத்தி வந்த பிரபல கல்வியாளர்களும் ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பேராசிரியர்களும் இப்போது பாசிச ஜெயாவின் அதிரடி நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டதோடு முடங்கிப் போய்விட்டனர். சமச்சீர் கல்வியை வலியுறுத்திய ராமதாசும் போலி கம்யூனிஸ்டுகளும் எவ்விதப் போராட்டமுமின்றி வாய்மூடிக் கிடக்கின்றனர்.

சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது நிறுத்தப்படுவதால், வாதங்களையும் எதிர்வாதங்களையும் மக்கள் புரிந்து கொண்டு போராட கையில் கிடைத்த ஆயுதமாக இக்கல்வித் திட்டம் மாறிவிட்டது. தமிழகமெங்கும் ஆங்காங்கே உழைக்கும் மக்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் போராடத் தொடங்கியுள்ளனர். இப்போராட்டத்தை பார்ப்பன-பாசிச ஜெயா கும்பலுக்கும் தனியார்மயம்-தாராளமயத்துக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை.

______________________________________

– புதிய ஜனநாயகம், ஜூன் – 2011
______________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்