ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

159
23

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!சிக்ஸ் பேக்ஸ் மற்போர் வீரனின் கட்டுடலுக்கு ஊத்தை உடம்பு இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் தலையைப் பொருத்தி ஓவியம் வரைந்து வைத்துக் கொள்வதாக ஒரு காட்சி அத்திரைப்படத்தில் வருகிறது.

அதைப் போல உல்லாச, ஊதாரி, சொகுசு வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் இம்சை அரசி 24ஆம் புலிகேசியான செல்வி ஜெயலலிதாவை சிறந்த அறிவாளி, துணிச்சல்காரி, நிர்வாகத் திறமைசாலி என்ற பொய்யான சித்திரம் வரையப்படுகிறது.

ஆனால், இவரது ஆட்சியில் மின் பற்றாக்குறையில் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. தொழிலகங்களின் இயந்திரங்கள் துருப்பிடிக்கின்றன; அலுவலகங்களில் ஒட்டடைகள் படிகின்றன; கோப்புகள் தூசு மண்டிப் போயுள்ளன; சாலைகள் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து போயுள்ளன; சாலைகளில் சாக்கடைகள் ஆறாக ஓடுகின்றன; குப்பைக் கூளங்கள் மலைகளாகக் குவிகின்றன.

போலீசு அதிகாரிகள் சசிகலா கும்பல் பதுக்கிய சொத்துக்களை மீட்பதிலும், எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பொய் வழக்குகள் புனைவதிலும், அம்மா பரிவாரங்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அணிவகுத்து நிற்பதிலும் குவிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் கொலை, கொள்ளை, வழிப்பறிப்புகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொழில்முறை குற்றக்கும்பல்களுக்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இந்த வகைக் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குப் பதில் போலீசு நிலையக் கொட்டடிக் கொலைகளும், போலி மோதல்களும் (என்கவுண்டர்) அரங்கேற்றப்பட்டு பீதி உருவாக்கப்படுகின்றது. ஒருவேளை இதுதான் நிர்வாக திறமைசாலி என்பதைக் குறிக்கிறதோ!

ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை குறித்து மூத்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் அரியானா மாநில முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.ஜி.தேவசாகாயம் (இவர் தி.மு.க.காரர் அல்ல) கூறுகிறார், “தமிழகத்தின் கடந்த 6 மாத ஆட்சி நிர்வாகச் சீரழிவு தவிர வேறொன்றுமில்லை. ஒரு தனிநபர் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதுகெலும்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலைமை இல்லை. இது இப்படியே போனால் தமிழகம் அதல பாதாளத்திற்குப் போகும்”. இந்தக் கணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயா ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

நிர்வாகப் பொறுப்பில் எந்தவொரு அமைச்சரும் அதிகாரியும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் கூட நீடிக்க முடியாது; கோப்புகளையும், பொறுப்புகளையும், தம்முடன் பணிபுரியும் அதிகாரிகளும் ஊழியர்களும்ம் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் பந்தாடுவதுதான் ஜெயலலிதாவின் இன்னொரு நிர்வாகத்திறமை! முதலமைச்சர் பதவிக்குத் தகுதியானவர் தானா என்று மதிப்பீடு செய்யாமலேயே ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுத்ததைப் போலவே  தகுதி, திறமைகளை மதிப்பீடு செய்து அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஜெயலலிதா நியமிக்கவில்லை.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!வேறு எந்த அடிப்படையில் பொறுப்புகளைத் தருகிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். கடந்த அமைச்சரவை மாற்றத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செங்கோட்டையனை போயசு தோட்டத்துக்கு அழைத்த ஜெயலலிதா, “அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப் போறேன். இதுநாள் வரைக்கும் நான் உங்களுக்கு எதுவும் செய்ய முடியலை. என் சூழ்நிலை உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். கேளுங்க… உங்களுக்கு எந்த இலாக்கா வேணும்” என்று கேட்டார். “நீங்க நல்லா இருந்தா போதும்மா… நீங்க எது கொடுத்தாலும் சரிங்கம்மா” என்றார், செங்கோட்டையன். “இப்போதைக்கு வருவாய்த்துறை உங்ககிட்ட இருக்கட்டும். இன்னும் சில நாட்களில் வேறு சில துறைகளும் உங்களுக்கு வரும் சரியா” என்று கேட்ட ஜெயாவிடம் குனிந்தபடியே தலையாட்டினார் செங்கோட்டையன்.

அமைச்சர் சிவபதியை முன்பு நீக்கியதற்கும் மீண்டும் சேர்த்ததற்கும் ஜெயலலிதா காரணம் சொல்கிறார்: “ஒரு விழாவுல ராவணன் வந்தபோது, அதைக் கவனிக்காம அவர் செல்போன்ல பேசிட்டு இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, எங்கிட்ட தவறான தகவல்களைச் சொல்லி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்காங்க. எனக்கு இப்போதுதான் அது தெரிய வந்தது. தப்பு செய்யாத யாரும் தண்டனை அனுபவிக்கக் கூடாது இல்லையா?” என்று சொன்ன ஜெயலலிதா, சிவபதியை மீண்டும் அமைச்சராக்கினார்.

எந்த தகுதி அடிப்படையில் அமைச்சர்கள் சேர்க்கப்படுகிறார்கள், நீக்கப்படுகிறார்கள் பாருங்கள்! ஜெயாவின் விசுவாசிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக வருவாய் துறை உட்பட முக்கியத்துறைகளின் அமைச்சராக்கப்படுகிறார்; முன்னாள் பங்காளி (ராவணன்)யை “மதிக்கவில்லை” என்பதற்காக ஒரு அமைச்சர் பதவி நீக்கப்படுகிறார். (யார் நீக்கியது? ஜெயாவுக்கு என்று சொந்த மூளை இல்லையா? யாராவது கோள் மூட்டினால் நம்பிவிடுவாரா? தவறுக்குரிய பொறுப்பு இல்லையா?) பின்னர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். ஆக, தகுதி, மதிப்பீடு அடிப்படையில் பொறுப்புகள் ஒதுக்கப்படுவதும் நீக்கப்படுவதும் இல்லை. விசுவாசம், அடிமைத்தனம், திமிர்த்தனமே அடிப்படை.

கொலை, கொள்ளை, வழிப்பறியில் நாட்டிலேயே முதன்மை இடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், இவைகளைச் செய்யும் குற்றவாளிகள் தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு ஓடிப்போய் விட்டார்கள் என்று ஜெயா புளுகினார். கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தி தலித் மக்களைச் கொன்ற சம்பவத்தை சாதித் தகராறு என்று சித்தரித்தார். இப்படியெல்லாம் பச்சையாகப் புளுகும் ஜெயா உண்மையில் துணிச்சல்காரர்தான்!

அப்புறம் மரியம் பிச்சை, பரஞ்ஜோதி விவகாரம்; மூன்று பெண்டாட்டிக்காரர் மரியம் பிச்சை ஜெயாவுக்குத் தன் விசுவாசத்தைக் காட்ட, மின்னல் வேகத்தில் காரை ஓட்டச் செய்து, விபத்து ஏற்படுத்தி, மாண்டு போனார். அவருக்கு மாற்றாக பெண் மருத்துவரிடம் மோசடித் திருமணம், சொத்துப் பறிப்பு செய்த கிரிமினல் பேர்வழி பரஞ்ஜோதியை இடைத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து, அறநிலையத்துறை அமைச்சரும் ஆக்கி, இரண்டே மாதத்தில் அதே வழக்கில் சிக்கியதால் பதவி நீக்கமும் செய்யப்படுகிறார். விவகாரத்துக்குரியவர் என்று தெரிந்தே நியமனம், நீக்கம் என்று செயல்படும் ஜெயலலிதா தனக்குத் தெரியாமல் நடந்து விட்டதென்று எத்தனை தடவைதான் மழுப்புவார்? ஏதாவது போதையில் மூழ்கிக் கிடப்பவருக்கு எதுவும் தெரியாமல், எதுவும் செய்யலாம் என்றவாறுதானே அரசு நடக்கிறது.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!அடுத்து, ஜெயலலிதா துணிச்சல்மிக்கவர் என்ற கருத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து, நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தான் எதைச் செய்தாலும் அதிரடியாகவும் அடாவடியாகவும், திமிர்த்தனமாக செய்வது; எதைச் சொன்னாலும் அண்டபுளுகு ஆகாசப்புளுகாக சொல்வது; மக்கள் எதிர்க்க மாட்டார்கள், ஏமாந்து போவார்கள் எதிர்க்கட்சிகளுக்கும் கேள்வி கேட்கும் திராணியில்லை என்ற எண்ணத்தில் விளைவதுதான் ஜெயலலிதாவின் துணிச்சல்.

கோவில் பிரசாதத்தில் நஞ்சு வைத்தும், லாரியை மோதவிட்டும் தன்னைக் கொல்ல முயன்றதாகப் புளுகியது; சட்டப்பேரவையில் தன்னை மானபங்கப்படுத்தினார்கள், ஆளுநர் சென்னாரெட்டியே தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று புளுகியது; பணத்துக்காகத்தான் காவல்நிலையக் கற்பழிப்புப் புகார்கள் செய்வதாக பழிபோட்டது; தன் ஆட்சியில் சட்டம்ஒழுங்கு கெட்டு விட்டதாகக் காட்டுவதற்கு தி.மு.க.வினரே திருட்டு, கொள்ளை வழிப்பறியில் ஈடுபடுகின்றனர் என்றும் ராஜீவ் காந்தியையும் கொன்றனர் என்றும் குற்றஞ்சாட்டியது; வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாச்சாரம் தீவிரவாதம், பிரிவினைவாதம் பெருகிவிட்டதாகக் கூறி போலீசாருடன் போலி மோதல்கள், கொட்டடிக் கொலைகளை நியாயப்படுத்தியது; லட்சக்கணக்கான அரசு ஊழியரை வீடு புகுந்து தாக்கியதோடு ஒரே கையெழுத்தில் பணிநீக்கம் செய்தது  இப்படி ஜெயலலிதாவின் துணிச்சலுக்கான பழங்கதைகளைக் கூட விட்டு விடுவோம்.

1.76 இலட்சம் கோடி ரூபாய் ஊழலை தி.மு.க. செய்து விட்டதாக (அப்படி ஒரு குற்றச்சாட்டை ஜெயாவும் அவரது பங்காளிகளும் தவிர யாருமே கூறவில்லை) ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்ததும் கடந்த பத்து மாதங்களில் ஜெயலலிதா சொன்னவையும் செய்தவையுமே அவரது துணிச்சல் எத்தகையவை என்பதற்கு சான்றாக உள்ளன. தேர்தல்களில் வெற்றி பெற்றவுடன் , இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவேன்; தமிழர்கள் தெருக்களில் பாதுகாப்பாக நடமாடலாம்; சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் என் ஆட்சியின் முதற்பணி; ஒரு சில மாதங்களில் மின்பற்றாக்குறை அடியோடு முடிவுக்கு வரும், மின்வெட்டே இருக்காது என்று அறிவித்தார் ஜெயலலிதா.

ஒரு அரசியல் கட்சியின் தலைவி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில் திட்டங்களை அறிவிப்பதும், வாக்குறுதிகள் வழங்குவதும் தவறில்லை. ஆனால், இப்படியெல்லாம் சொல்லிவிட்டு தனது அரசு எந்திரத்தை  அதிகாரிகளையும் போலீசையும்  முதன்மையாக எந்தெந்த வேலைகளில் அவர் ஏவி விடுகிறார்? சமச்சீர் கல்வியும், பாடப்புத்தகங்களும் கேட்டுப் போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்துவது; நீண்டநாள் ஆகியும் திறக்காமல் இருக்கும் தனிச்சிறப்பான வசதி கொண்ட மருத்துவமனையைத் திறக்கக் கோரும் மாணவர்இளைஞர் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவது; மின்வெட்டுக்கு எதிராகவும், புயல் நிவாரணமும் கோரிப் போராடும் மக்கள் மீது தடியடி நடத்துவது; பழங்குடிப் பெண்களைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்முறை செய்வது; குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைச் சித்திரவதை செய்து கொட்டடிக் கொலைகள் புரிவது; அமைதியாகப் போராடும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் திட்டமிட்டு போலீசைக் குவித்து, சுட்டுக் கொல்வது; வழக்கறிஞர்களைத் தாக்குவது; இரகசியப் படுகொலைகள் செய்வது; தனது பங்காளி சசிகலாவையும் அவரது உறவினர்களையும், எதிர்க்கட்சியினர் மற்றும் தம் கட்சியினரையும் உளவுவேலை செய்து கண்காணித்து வழக்குகள் சோடித்து சிறையிலடைப்பது.

இவை மட்டுமல்ல; ஜெயா ஆட்சியில் போலீசு  உளவுத் துறையின் வேலையைப் பாருங்கள். அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அவரது உதவியாளர் ஆறுமுகத்தின் மனைவிக்கும் தவறான உறவு இருப்பதாக செங்கோட்டையன் மகன் ‘அம்மா’விடம் கோள் மூட்டுகிறார் அல்லது முறையிடுகிறார். உடனடியாக உளவுத் துறையை அனுப்பி அம்மா விசாரிக்கிறார். ஆறுமுகத்தின் மனைவியை மிரட்டுகிறார். ஆறுமுகம் கைது செய்யப்படுகிறார்.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!ஜெயா ஆட்சியில் அமைச்சர்களின் வேலையைப் பாருங்கள். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுபட வேண்டி காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தமிழக அமைச்சர்கள் பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். கூடவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்கிறார்கள். அம்மாவுக்காக ”வர்ணாபிஷேகம் நடத்துகிறார்கள். கோவில்சார்பிலே அமைச்சர்களுக்கு ரோஜா மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. கோவிலுக்கு கோபுரம் கட்டி கொடுக்குமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. அதையும் அமைச்சர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சி என்றால் இவைதான் வாடிக்கை என்று பல ஆண்டுகளாகத் தொடரும் அதிரடி, அடாவடி, திமிர்த்தனம் தான் அவரது துணிச்சலா? அதேபோல உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றத் தீர்ப்புகளால் திரும்பத் திரும்ப கன்னத்தில் கரிபூசப்பட்டும், சட்டத்துக்கு புறம்பான முடிவுகள் எடுக்கிறார் ஜெயலலிதா. இவைதான் ஜெயலலிதாவின் அறிவுத்திறமைக்கு சான்றுகளா? இல்லை, தன்மீது தொடுக்கப்பட்ட 42 லஞ்ச ஊழல்அதிகார முறைகேடு வழக்குகளைச் சமாளித்து, கடந்த பதினைந்து ஆண்டுகளாக, நீதித்துறைக்கு தண்ணி காட்டுகிறாரே, இதுதான் அவரது அரசியல் சட்ட ஞானத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

______________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

சந்தா