privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!

வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!

-

வல்லரசு முகத்தில் வழியும் மலம்கொத்தடிமை முறையா? அதெல்லாம் அந்தக் காலமுங்க என்பதுதான் பெரும்பாலோனோரின் எண்ணம். இது பற்றி, அத்தி பூத்தாற் போலத் தினப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் எளிதில் கடந்து சென்று விடுகிறோம்.

உண்மை அத்தனை எளிதில் கடக்கக் கூடியதாய் இல்லை. விழுப்புரம் மாவட்டம் திருவாக்கரையில் கல்குவாரி ஒன்றில் வேலை செய்கிறார் 40 வயதான வெள்ளையன். கடந்த ஜனவரி 31ஆம் தேதி காலை இவரது வீட்டுக்கு வந்த கல்குவாரி முதலாளி துரையின் அடியாட்கள் இவரைச் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். கல்குவாரியில் சம்மட்டி ஒன்றைத் திருடிவிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். தன்னுடன் வேலை செய்யும் வீரப்பன் என்பவரது சம்மட்டியை  இவர் 300 ரூபாய்க்கு விற்றுக் கொடுத்ததுதான் இவர் மீது சந்தேகப்படக் காரணம். இந்தச் சந்தேகத்துக்கு விசாரணை கிடையாது. நேரடியாகத் தண்டனைதான்.

முதலாளி துரையிடம், தான் திருடவில்லை  என்று வெள்ளையன் மன்றாடியுள்ளார்; ஒரு கட்டத்தில் சம்மட்டிக்கான தொகையை வேலை பார்த்துக் கழித்துக் கொள்வதாகச் சொல்லி, தன்னை விட்டுவிடக் கோரிக் கெஞ்சியுள்ளார்.  எதையும் பொருட்படுத்தாத கல்குவாரி முதலாளி, உன்ன மாதிரி ஆட்களுக்கு இப்படி தண்டனை கொடுத்தால்தான் பார்க்கிற மத்தவனுக்கும் புத்தி வரும் என்று சொல்லி, அங்கேயே ஒரு சட்டியைக் கொண்டுவரச் செய்து, மறைவாகச் சென்று தானே அதில் மலம் கழித்து, அதனைக் கொண்டு வந்து வெள்ளையனின் வாயில் திணித்துள்ளான்.

பிற கல்குவாரி தொழிலாளர்கள் மற்றும் வெள்ளையனின் மனைவி முன்னிலையில் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது. பிறகு வெள்ளையனைக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.  அடி தாங்காமல் மயங்கிச்  சரிந்தவரை  அடைத்து வைத்துக் கொண்டனர். இக்கொடுமைகளை  பார்த்தேயாக வேண்டும் என்று இவரது மனைவியை அடித்து உதைத்து நிர்பந்தித்துள்ளனர். இவையனைத்தையும் செல்பேசியில் படம்பிடித்தும் வைத்துள்ளான் முதலாளி துரை.  வெள்ளையனுடைய மற்றும் அவரது மாமனார் வீடுகளிலுள்ள பொருட்களைக்  கைப்பற்றிக் கொண்டு வீடுகளையும் பூட்டி வைத்துள்ளனர். வெள்ளையனின் 9 வயது மகளுக்கு இச்சம்பவம் பற்றி நினைவு கூர்ந்தாலே பேச்சுக் குழறுகிறது.

ஒரு சம்மட்டிக்காகவா இத்தனை வக்கிரமும், கொடூரமும் நிறைந்த வன்கொடுமை? சந்தேகத்தின் பேரிலேயே மொத்த வாழ்வையும் சீரழிக்கும் தண்டனையை கொடுக்கும் அதிகாரத்தைக் கல்குவாரி முதலாளிக்கு வழங்கியது யார்? எதற்கும் அஞ்சாமல் இத்தகைய கொடூரத்தை இழைக்கும் ஆண்டைத் திமிரை கல்குவாரி முதலாளி எங்கிருந்து பெற்றான்? 300 ரூபாயை முதலாளி முகத்தில் விட்டெறிந்துவிட்டு வேறு வேலைக்குப் போக வழியில்லாத அடிமை நிலையில் வெள்ளையனைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது எது? இத்தனை கொடூரமும் கண்முன்னே நிகழ்ந்த போதும் எதிர்க்க இயலா கையறு நிலையில் கல்குவாரியில் வேலை செய்பவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தது எது? இக்கேள்விகளுக்கு மனசாட்சியுள்ள அனைவரும் விடை காண வேண்டியுள்ளது.

கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் 1976இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போலவே கொத்தடிமை முறைக்குக் காரணமான சமூகப் பொருளாதார  காரணிகளை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லாத வெறும் காகிதச் சட்டம்.  1978இல் நடத்தப்பட்ட  கணக்கெடுப்பின்படி 26 லட்சம் கொத்தடிமைகள் நாடு முழுவதும் இருந்தனர். 1995இல் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் கொத்தடிமைகள் இருந்துள்ளனர் என உச்ச நீதிமன்றத்தின் அறிக்கை சொல்கிறது.  இன்றைய நிலையில், தமிழ்நாட்டு கல்குவாரிகளில் மட்டும் 5.5 லட்சம் கொத்தடிமைகள் வேலை செய்கின்றனர் என தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்க நிறுவனர் ஞானமணி சொல்கிறார். கொத்தடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதைத்தான் இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நாடு முழுவதும் கொத்தடிமைகளாக இருப்பவர்களில் 80% பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.  விவசாயம் பொய்த்துப் போவது, குடும்பத் தேவைகளுக்காக அதிக வட்டிக்குக்  கடன் வாங்குவது, அதனை அடைக்க வேறு வழியின்றிக் கொத்தடிமைகளாக வருபவர்கள் ஒரு பக்கமெனில், பரம்பரை பரம்பரையாகவே கொத்தடிமைகளாக வேலை செய்பவர்களும் தொடர்கிறார்கள்.

திருவாக்கரையில் தாக்கப்பட்ட வெள்ளையன் சேலம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தாத்தா, அப்பா காலத்திலிருந்தே கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர். வறுமை காரணமாகவும், நாடோடிகள் போலத் திரிய வேண்டியிருப்பதாலும் இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதால் வாரிசுகளும் கொத்தடிமைகளாக தொடரும் அவலம் நிலவுகிறது.

கல்குவாரிகள், விவசாயம், செங்கல் சூளைகள், கனிமச் சுரங்கங்கள், தீப்பெட்டி, வெடிமருந்துத் தொழிற்சாலைகள், கோவை மாநகரின் தங்கப்பட்டறைகள் போன்றவைதாம் கொத்தடிமைகளை வேலைக்கு வைத்துள்ள பாரம்பரிய தொழில்துறைகள். இங்கெல்லாம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாகும்.

விபத்தின் காரணமாக இறப்போ, உடல் ஊனமோ  ஏற்பட்டால்  எந்த நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. எதிர்த்து கேள்வி கேட்டால் கொலை வெறித் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அவ்வப்போது கணக்குக் காட்டுவதற்காக கொத்தடிமை நிலையிலிருந்து சிலரை  மீட்பதாகக் காட்டிக் கொள்கிறது அரசு. ஆனால், மீட்கப்பட்டவர்களோ மீண்டும் கொத்தடிமைகளாக செல்ல வேண்டிய நிலையில்தான் உள்ளனர். செங்கல் சூளையிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு அரசே  அமைத்துக் கொடுத்த செங்கல் சூளைகளைப் பல இடங்களில் முதலாளிகள் அடித்து நொறுக்கியுள்ளனர்.  கல்குவாரிகளிலிருந்து மீட்கப்பட்ட கொத்தடிமைகள் சொந்தமாகக் கல்குவாரிகள் நடத்த முற்பட்டு, முதலாளிகள் மற்றும் அதிகாரிகளின் கடும் தாக்குதலை எதிர்கொள்கின்றனர்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ரவுடிகளுடன்  கொத்தடிமைகளை வேலைக்கமர்த்தும் முதலாளிகள் நெருங்கிய வலைப்பின்னலைப் பராமரிக்கிறார்கள். எனவே, எதிர்ப்பவர்களை ஒடுக்குவதும், ஓரிடத்தில் வேலையிழந்தவருக்கு வேறெங்கும் வேலை கிடைக்கவிடாமல் செய்வதும் சாத்தியமாகிறது. தட்டிக் கேட்க யாருமின்றித் தனி அரசாங்கம் நடத்தும் ஆண்டைத் திமிர்தான் தொழிலாளர்களை மிருகத்தினும் கேவலமாக நடத்த வைக்கிறது.

தமிழகத்தில்  ஆறு வருடங்களுக்கு முன்பு கல்லுடைப்போருக்கான குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அது எங்குமே நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.  மேலும், கல்குவாரிகளில் 20% சட்டவிரோதமானவை என்று சொல்கிறார்  ஏ.ஐ.டி.யூ.சி துணைச் செயலாளர் கே.ரவி. இன்று இணையம், ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கான வாய்ப்பு வளர்ந்து விட்டதாகப் பலர் கருதிக்கொண்டிருந்தாலும், கொத்தடிமைக் கொடூரங்கள் அதிகரித்துத்தான் செல்கின்றன. அதிகாரிகளின் துணையுடன் முதலாளிகளின் நிலப்பிரபுத்துவ ஆண்டைத்தனம்தான் இங்கெல்லாம் ஆட்சி செய்கிறது.

திருவாக்கரை சம்பவம் போன்றவற்றில் தப்பித் தவறி மாட்டிக் கொள்ளும் சிலரும், பின்னர் முறைப்படி வெளியே வந்து விடுகிறார்கள்.

தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் மட்டுமின்றி, கொத்தடிமைகள் அதிகமுள்ள மாநிலம் என்ற வகையிலும் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது. மறுகாலனியாக்க கொள்கைகள் விவசாயிகளை ஏதுமற்றவர்களாக்கி வீதியில் வீசுகின்றன. சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கிராமப்புற ஏழைப்பெண்களையும், அடுக்குமாடிக் கட்டிடங்களையும் நான்கு வழிச் சாலைகளையும் கட்டி எழுப்புவதற்காக எலிப் பொந்துகள் போன்ற தகரக் கொட்டகைகளில் தங்கி வேலை செய்யும் ஒடிசா, பீகார் தொழிலாளர்களையும் நவீன கொத்தடிமைகளாகத் தினமும் உருவாக்கி வருகின்றன.

நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகவும், தொழிலாளர்களின் ஊதியமும் மக்களின் வாழ்க்கைத் தரமும் அதிவேகமாக உயர்ந்து வருவதாகவும் பிதற்றிக் கொண்டிருக்கும் கனவான்களின் முகத்திலறைகின்றன இவ்வுண்மைகள்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: