privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காதண்ணீர் தனியார்மயம்: பேரழிவின் தொடக்கம்!

தண்ணீர் தனியார்மயம்: பேரழிவின் தொடக்கம்!

-

மான்டெக்-சிங்-அலுவாலியாஅரசுத்துறை நிறுவனங்களையும் இயற்கை மூலவளங்களையும் தனியார்மயமாக்கி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்த்துவரும் இந்திய ஆட்சியாளர்கள்,  இயற்கையின் கொடையான தண்ணீரையும் தனியார்மயமாக்க மூர்க்கமாகக் கிளம்பிவிட்டார்கள்.

இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. அத்தகைய தண்ணீரை பெருமுதலாளிகளின் இலாபத்திற்கான வணிகப் பொருளாக, காசுக்கு விற்கும் கடைச்சரக்காக மாற்றும் அநீதியை கொள்கை அறிவிப்பாக இந்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது (PDF).

“தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012” என்ற 31.1.2012 தேதியிட்ட அறிவிக்கையை இந்திய நீர்வள அமைச்சகம் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்தக் கொள்கை வரைவின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டுமாம். இவற்றைப் பரிசீலித்து இந்த வரைவு அறிக்கை இறுதியாக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பக்கங்களைக் கொண்ட இந்த வரைவு அறிக்கையானது, தண்ணீர் துறையில் சேவையை அளிப்பவர் என்ற பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதற்குப் பதிலாக, சமூகக் குழுக்களும் தனியார் துறையினரும் இச்சேவையை அளிப்பதை ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும் என்கிறது. தண்ணீரை வியாபாரப் பண்டமாக்குவதன் மூலம், தகாத முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதும் விரயமாக்குவதும் குறையும் என்று இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த நகல் அறிக்கையின் தயாரிப்பு ஏற்பாடுகள் நடந்துவந்த சூழலில், உலக வங்கியின் கைக்கூலியும் திட்டக் கமிசனின் துணைத் தலைவருமான மான்டேக்சிங் அலுவாலியா, “இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான்  தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று திமிராக அறிவித்தார். அவரது வழிகாட்டுதலில் தயாராகியுள்ள இந்த வரைவு அறிக்கையானது, விவசாயத்துக்கும் குடிமக்களுக்கும் எந்த வடிவத்திலும் தண்ணீருக்காக மானியம் அளிப்பதை முற்றாக ஒழிக்க வேண்டும் என்கிறது. விவசாயத்துக்கான மின்சாரத்துக்கும், தண்ணீருக்கும் மானியம் அளிப்பது  வீண்விரயமாக்கும் செயல் என்கிறது.

“உலக மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் இந்தியர்கள் 17 சதவீதத்தினர். ஆனால், உலகப் பரப்பில் உள்ள நீர்வள ஆதாரம் வெறும் 4 சதவீதம்தான். புவி வெப்பமடைகிறது. உயிராதாரமான நீர் பற்றாக்குறையாகி வருகிறது” என்றெல்லாம் கவலையோடு முன்னுரையாக இந்த வரைவு அறிக்கை கூறுகிறது. பின்னர் “கவலைப்படாதே சகோதரா! இதோ தீர்வு கிடைத்துவிட்டது;  இயற்கை மூலவளங்களையும் நீராதாரங்களையும் தனியார் முதலாளிகளுக்கு விற்று விடலாம்” என்கிறது.

தண்ணீர்-தனியார்மயம்-3புதிய தேசிய நீர் கொள்கையின்படி, தண்ணீர் சேவை தனியார் வசம் இருக்குமாம். இருப்பினும், மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் குடிமக்களுக்கு அத்தியாவசியமான குறைந்தபட்ச அளவு தண்ணீரைக் கொடுக்க உத்தரவாதப்படுத்த வேண்டுமாம். அதாவது, அரசாங்கங்கள் தனியாரிடமிருந்து தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கி மக்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்தத் தண்ணீரை “இலவசத் தண்ணீர்” அல்லது “விலையில்லாத் தண்ணீர்” என்ற பெயர் வைக்கும் உரிமை மட்டுமே அரசாங்கத்திடம் இருக்கும். ஏனெனில், சேவை அளிப்பவர் என்ற பொறுப்பை அரசாங்கங்கள் படிப்படியாகக் கைவிட வேண்டும் என்கிறது இக்கொள்கை.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போன்று நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்படுமாம். அது கட்டண நிர்ணயம், நீர் ஒதுக்கீடு, கண்காணித்தல், ஆலோசனை வழங்குதல் முதலானவற்றைச் செய்யுமாம். மின்சாரக் கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிப்பதைப் போல, தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம் தண்ணீர்க் கட்டணத்தை நிர்ணயிக்குமாம்.

அப்படியானால் தண்ணீரின் விலை எவ்வளவு? நீர்த் திட்டங்களின் நிர்வாகம், விநியோகம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்கான செலவுகளை முழுமையாக வசூலிக்கின்ற வகையில் கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்று கந்துவட்டிக்காரனைப் போல கூறுகிறது இக்கொள்கை அறிக்கை. அதாவது, காசிலிருந்தால் குடிநீர் கிடைக்கும். இல்லையென்றால், நாவறண்டு குடிமக்கள் சாக வேண்டும் என்கிறது, இந்தக் கொள்கை அறிக்கை. அதேசமயம், தனியார் நிறுவனங்கள் கழிவு நீரைச் சுத்திகரிக்கவும், மறுசுழற்சி செய்யவும் அரசாங்கம் மானியம் அளிக்க வேண்டும் என்கிறது. சாதாரணக் குடிமகன் தண்ணீருக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமாம். தண்ணீர் முதலாளியாய் இருந்தால் மானியமும் ஊக்கத்தொகையும் தரப்படுமாம்.

இந்த வரைவு அறிக்கை இந்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதல்ல. “தேசிய நீராதார திட்ட வரைவுக்கான பரிசீலனை  சீர்திருத்தங்களுக்கான திசை வழிகள்” என்ற அறிக்கையை உலக வங்கியின் கீழ் இயங்கும் “நீர் ஆதாரக் குழு2030” என்ற அமைப்பு இந்திய அரசின் திட்டக் குழுவிற்கு வழங்கியது. இந்த “நீர்ஆதாரக்குழு2030” என்ற அமைப்புக்கு கோக், பெப்சி, யுனிலீவர், கார்கில், மெக்கன்சி முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்  நிதிவழங்கும் புரவலர்களாக உள்ளன.

இந்த நீர் ஆதாரக்குழு, கடந்த 2011 அக்டோபரில் இந்திய திட்டக் கமிசனுக்கு அளித்த திசைவழி அறிக்கைதான், அப்படியே எந்த மாற்றமுமின்றி “தேசிய நீர்க் கொள்கை2012” என்ற பெயரில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நகல் கொள்கை அறிக்கை தயாரிப்பதில் செல்வாக்கு செலுத்திய பெருந்தொழில் நிறுவனங்கள், இப்போது இந்த அறிக்கையை வரவேற்று ஆதரிக்கின்றன. ஃபிக்கி எனும் பெருமுதலாளிகளின் சங்கத்தின் முதுநிலை துணை இயக்குநரான ரொமித் சென், தண்ணீருக்கு முறையான விலை வைப்பதன் மூலம் தண்ணீரை வீண் விரயமாக்குவதைத் தடுக்க முடியும் என்று இந்த வரைவு அறிக்கையைப் பாராட்டுகிறார். இவையனைத்தும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மற்றும் தரகுப் பெருமுதலாளிகளின் கொள்ளைக்காகவே தண்ணீர் தனியார்மயமாக்கப்படுகிறது என்பதையும், ஆட்சியாளர்கள் அவர்களின் கைக்கூலிகளாக இருப்பதையும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

ஏற்கெனவே உள்ள 2002ஆம் ஆண்டின் தேசிய நீர்க் கொள்கையானது, பொது நீராதாரங்களில் பயன்பாட்டிற்கான முன்னுரிமையைத் தீர்மானித்திருந்தது. இதன்படி, குடிநீர், விவசாயம், நீர் மின்சாரம், சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்த மற்றும் சாராத தொழில்கள், போக்குவரத்து மற்றும் இதர பயன்பாடு என்ற வரிசையில் முன்னுரிமை தீர்மானிக்கப்பட்டிருந்தது. இப்போதைய வரைவு அறிக்கையில் இத்தகைய முன்னுரிமை தீர்மானிக்கப்படவில்லை. அதாவது, குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்தாலும், தண்ணீர் இல்லாமல் விவசாயப் பயிர்கள் கருகிக் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு முன்னுரிமை தரப்படாமல், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிகளின் தொழிற்சாலைகளுக்கும், வாட்டர் போலோ போன்ற தண்ணீரில் நடக்கும் மேட்டுக்குடியினரின் கேளிக்கை விளையாட்டுகளுக்கும்  தண்ணீர் தாராளமாகத் தரப்படும். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் மாநிலப் பட்டியலின் 17வது பிரிவில் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை உள்ளன. புதிய வரைவுக் கொள்கையானது,  மாநில அரசின் அதிகாரத்தை மறுத்து, பொது அதிகாரப் பட்டியலுக்கோ அல்லது இந்திய அரசின் நேரடி அதிகாரத்துக்கோ மாற்றியமைக்க ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்கிறது.

1882ஆம் ஆண்டின் இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரர்களுக்கு உரிமையில்லை என்று மாற்ற வேண்டுமென்கிறது புதிய கொள்கை. ஒரு ஊரில் பொதுச் சொத்தாக உள்ள ஏரியோ அல்லது வளமான நீர் நிறைந்த ஒரு விவசாயியின் கிணறோ  இருந்தால், இனிமேல் அவை அவர்களுக்குச் சொந்தமில்லை. அதனைக் கட்டுப்படுத்தி விநியோகிக்கும் பொறுப்பை ஒழுங்குமுறை ஆணையம் பறித்துக் கொள்ளும்.

குடிமக்களுக்கு அடிப்படைத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க அரசாங்கம் உத்திரவாதம் செய்ய வேண்டும் என்று இந்த நகல் அறிக்கை கூறினாலும், இதனை குடிமக்களின் அடிப்படை உரிமையாக்கி சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைக்கவில்லை.  அத்தியாவசியத் தேவையான பால், மின்சாரம் போன்றவற்றைப் போலவே குடிநீர் கிடைக்கவும் உத்திரவாதம் செய்துள்ளோம், காசுள்ளவர்கள் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவிக்க வேண்டியதான் பாக்கி.

தண்ணீர்-தனியார்மயம்-2

தென்னமெரிக்காவிலுள்ள ஏழை நாடான ஈக்வடார், மனித இனம் மட்டுமின்றி இயற்கையும் உரிமைகளைப் பெற்றிருப்பதாக 2008ஆம் ஆண்டில் சட்டம் இயற்றியது. இதன்படி இயற்கையின் அங்கமான மலைகளும் ஆறுகளும் ஏரிகளும் பொதுச் சொத்தான தங்களை வணிகப் பொருளாக்குவதையோ, கழிவுகளைக் கொட்டி நாசமாக்குவதையோ எதிர்த்து தங்களது வாழும் உரிமைக்காக, தங்கள் சார்பில் மனித இனத்தைக் கொண்டு வழக்கு தொடுத்து போராட முடியும். ஈக்வடார் நாட்டின் வழியில் பொலிவியாவும் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. “தாய்மண் சட்டம்” என்றழைக்கப்படும் இச்சட்டம், மனித இனத்துக்கு இணையாக இயற்கைக்கும் சமமான உரிமைகளை அளித்துள்ளது. இதனை மேலும் 12 நாடுகள் சட்டமாக்க ஆலோசித்து வருகின்றன. அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் வழியில் தாய்மண்ணின் உரிமைக்கான பிரகடனத்தை ஐ.நா. மன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்று பொலிவியா முன்மொழிந்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் அடிமையாகவும் அடியாளாகவும் இருந்துகொண்டு வல்லரசாகத் துடிக்கும் இந்திய அரசோ, தண்ணீரைத் தனியார்மயமாக்க மூர்க்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தண்ணீர் வியாபாரம் என்பது நமது பண்பாட்டிற்கு எதிரான கொடுஞ்செயல். அடிப்படை மனித உரிமைக்கு எதிரான அநீதி. இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை. உயிரினங்களைப் பூண்டோடு அழிக்கும் பயங்கரவாதம். தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம். எனவே தண்ணீரை எவனுக்கும் தனியுடமையாக்கக் கூடாது. தண்ணீரை வணிகச் சரக்காக்கக் கூடாது. உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. எனவே நாம் உயிர் வாழ வேண்டுமென்றாலே இத்தனியார்மயத்தை இன்றே இப்பொழுதே எதிர்த்துப் போராடி வீழ்த்த வேண்டும். பொலிவியாவின் கொச்சபம்பா நகர மக்கள் பெக்டெல் எனும் ஏகபோக தண்ணீர் நிறுவனத்தை விரட்டியடித்ததைப் போல, தண்ணீரைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்யவரும் பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளையும் அதற்குக்கைகட்டிச் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களையும் எதிர்த்து போராட வேண்டும்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: