மே – 5
புரட்சிக்காக துடித்த இதயம்
அன்று அடங்கிவிட்டது.
உழைக்கும் வர்க்க நலனை நோக்கி
நகர்ந்த இரத்த ஓட்டம்
அன்று நின்றுபோனது.
இணையில்லா எம் தோழன் சீனிவாசனை
கணையப் புற்றுநோய் கொன்று போட்டுவிட்டது.
இத்தனை காலமாய் சீனிவாசன்
தான் மட்டுமே தாங்கிய நோயின் வலியையும், கொடூரத்தையும்
தோழர்கள் அனுபவித்த தருணம் அது.
இறுகிய முகங்களாய், கதறிய குரல்களாய்
பிரிய மனம் பொறுக்காமல்
சிதறிய உணர்ச்சிகளாய்
சேத்துப்பட்டு மக்களும், தோழர்களும் சூழ்ந்திருக்க
நெடுந்தொலைவு பயணக்களைப்பின் உறக்கத்தைப் போல
சீனிவாசன் முகம் கண்மூடியிருந்தது.
கம்யூனிஸ்டாய் வாழ்வதன் இன்பம்
பிற இன்பங்களை
பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
கம்யூனிஸ்டாய் இறப்பதன் இன்பம்
சீனிவாசன் முகத்தில்
முன்னுக்குத் தெரிந்தது.
மரணத்தின் கொடுவலியின் குறிப்புகளும்
மனம் விம்மும் இறுதிநேர தவிப்புகளும்
அவரைப் பார்த்த முகங்களில் தெரிந்ததே தவிர
சீனிவாசன் முகமோ
பெருவாழ்வின் பெருமிதமும்
கொஞ்சம் முடியாத கடமைகளின்
சிறுகுறிப்போடு சலனமற்று இருந்தது.
மரணத்தின் சுமை
உண்மையில் – இறந்தவர்க்கல்ல
இருப்பவர்க்கு,
எனும் எதார்த்தம் நெஞ்சழுத்த
இறுதி அஞ்சலியில் கனத்தன இதயங்கள்,
சீனிவாசனின் தெருமுனைக் கூட்டங்களில்
கரவொலியெழுப்பிய குழந்தைகள்,
அவரால் ‘என்னங்க பேத்தி’ என
முதுகில் தட்டிக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள்,
பகுதியில் அமைப்பு வேலையெல்லாம்
எப்படி போயிட்டு இருக்கு? என அவரால்
பாசத்துடன் விசாரிக்கப்பட்ட இளைஞர்கள்,
‘தோழர் இப்படி முன்னாடி வாங்க!’ என
அவரால் அரசியலுக்கு முன்னிழுக்கப்பட்ட பெண்கள் என
அனைவரையும் கலங்க விட்டு
அவரின் இறுதி ஊர்வலம்
மரணத்திலும் மார்க்சிய லெனினிய அரசியல் உணர்ச்சியை
மக்களிடம் விதைத்துச் சென்றது.
அமைப்பின் மீதான பெருமிதம்,
“வாழ்ந்தாலும் இவரைப்போல வாழணும்
செத்தாலும் இவரைப்போல சாகணும்,
எத்தனை மரியாதைக்குரிய வாழ்வு!
எத்தனை மரியாதைக்குரிய சாவு! என
காண்போர் வணங்கத்தக்க வகையில்
இடுகாடு வரை சீனிவாசனின் உடல்
அரசியல் தாக்கத்தை எழுப்பியபடியே இருந்தது.
செத்தாலும் இயங்கக்கூடிய செல்
நக்சல் என இலட்சிய வாழ்வின் வசீகரிப்பை
சாவிலும் வெளிப்படுத்திய
கம்யூனிஸ்டு அவர்.
மக்கள் விரோதிகளின் முகத்தில்
வாழும்போதே சவக்களை
சீனிவாசன் முகத்திலோ
செத்த பின்பும் வாழும் கலை
குடும்பம், அரசியல் அனைத்தையும்
பொதுமக்களுடன் சேர்ந்து போராடிய வீரம்,
பிறருக்கும் போராட கற்றுக் கொடுக்கும் சலியாத வேலை,
எப்பேர்ப்பட்ட இடம், ஆளாயினும்
மார்க்சிய-லெனினிய அரசியலை நிலைநாட்டும் சித்தாந்தத் துணிச்சல்
எந்த நேரத்திலும் உழைக்கும் மக்கள் தேவைக்கு
ஓடிப்பணி செய்யும் நடைமுறைத் தலைமை, இப்படி
புரட்சியின் பண்புகளாய் தோழர். சீனிவாசன்.
அடுத்த தலைமுறையும் விரும்பக் கூடிய அந்தத் தோழனை
இழப்பதென்பது அமைப்பின் பெருவலி.
ஆம்!
அடம்பிடிக்கும் பண்புகளை சரிசெய்து, தனிப்பட்ட ஆதாயம் பாராது
முரண்பிடிக்கும் சுபாவங்களை அனுசரித்து
தடம்பதிக்கும் கால்களுக்குக் கீழே.. சிலவேளை மிதிபட்டு
உடன் நடக்கும் பிள்ளைக்கு ஏற்றாற் போல் தானிறங்கி
மெல்ல மெல்ல அரசியலில் மேலெழுந்து நடைபழக்கி
ஒரு அமைப்பு
பாட்டாளி வர்க்க செயல் மூச்சாய்
உருவாக்கிய ஒரு தோழனை பறிகொடுக்கும் அவலம்
பெற்ற தாயின் தவிப்பினும்
பெரிது! கொடிது!
துயரம் அழுத்தும் வேளைதான், எனினும்
எம் தோழனின் சாவை
அழுது தீர்க்க முடியாது,
போராடித்தான் தீர்க்க வேண்டும்.
மரணமிலா பெருவாழ்வு என்பது
மக்களுக்காய் வாழ்வதே என
உணர்த்தி நிற்பது சீனிவாசனின் மரணம்.
உடலைத்தான் இழந்திருக்கிறார் தோழர்
உணர்ச்சிகளை நம்மிடம் ஒப்படைத்துதான் சென்றிருக்கிறார்.
சேத்துப்பட்டின் தெருக்களிலும்
உசிலம்பட்டியின் கம்மாய்களிலும்
இன்னும் காத்துக் கிடக்கிறது சீனிவாசனின் அழைப்பு.
இடுகாட்டில் இறக்கி வைத்ததோடு, எரியூட்டியதோடு
வேலை முடிந்துவிடவில்லை தோழர்களே!
எப்படி பேருந்திலும் இரயிலிலும்
புரட்சிகர பத்திரிக்கைகளை விற்பது,
எப்படி பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது,
எப்படி போராட்டத்தை ஒழுங்கமைப்பது என்பதை மட்டுமல்ல..
அவர் கற்றுக் கொடுத்தது…
எப்படி புரட்சியை நடத்தி முடிப்பது
எனும் நிறைவேறாத அவர் ஆசையை
பூர்த்தி செய்யும் வரை
சீனிவாசனின் நெஞ்சு வேகாது..
வேண்டுமானால் உயிரோடு இருக்கும்
நமது நெஞ்சைத் தொட்டுப் பாருங்கள்…
_______________________________________________________
– துரை.சண்முகம்
_______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- மே நாளன்று களப்பணியில் தியாகியானார் தோழர் செல்வராசு!
- ரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்!
- வீரவணக்கம், தோழர் ஆசாத்! – மருதையன்
- தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்!
- கே.ஜி.கண்ணபிரான்: மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்!
- பெரியாரியக்கத்தின் முதுபெரும் தொண்டர் தோழர் ‘நாத்திகம்’ இராமசாமி மறைவு !!
- சின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது!
மே ஐந்திலிருந்து இன்று வரை – இந்தக் கவிதையும் – அழாத நாளில்லை.
ஆனால்
“துயரம் அழுத்தும் வேளைதான், எனினும்
எம் தோழனின் சாவை
அழுது தீர்க்க முடியாது,
போராடித்தான் தீர்க்க வேண்டும்.”
ஆம்!
துயரத்தைத் துடைக்க வேண்டுமானால்
போராடித்தான் ஆக வேண்டும்!
அன்று தொடர்புக்கு உச்சரிக்கப் பட்ட பெயர்
இன்று தொடர்ந்து செல்ல உச்சரிக்கப் படுகிறது.-இவர்
இரா.சீனிவாசன் இல்லை
இறவா சீனிவாசன்.
விதைத்தவர் இல்லாமல் போகலாம்-ஆனால்
விருட்சங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன.மீண்டும்
விதைகள் உருவாகும் விருட்சங்கள் உருவாகும்…
அன்று தொடர்புக்கு உச்சரிக்கப்பட்ட பெயர்
இன்று தொடர்ந்து செல்ல உச்சரிக்கப் படுகிறது…
VEERA VANAKKAM.
கம்யூனிஸ்டாய் வாழ்வதன் இன்பம்
பிற இன்பங்களை
பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
கம்யூனிஸ்டாய் இறப்பதன் இன்பம்
சீனிவாசன் முகத்தில்
முன்னுக்குத் தெரிந்தது.
செத்தாலும்
இயங்கக்கூடிய செல்
நக்சல் என இலட்சிய
வாழ்வின்
வசீகரிப்பை
சாவிலும்
வெளிப்படுத்திய
கம்யூனிஸ்ட் தோழர் சீனிவாசனை பின்தொடர்வோம்.
துயரம் அழுத்தும்
வேளைதான்,
எனினும் எம்
தோழனின்
சாவை அழுது தீர்க்க
முடியாது,
போராடித்தான்
தீர்க்க வேண்டும்.தோழர் சீனிவாசனுக்கு செவ்வணக்கம்!
//துயரம் அழுத்தும் வேளைதான், எனினும்
எம் தோழனின் சாவை
அழுது தீர்க்க முடியாது,
போராடித்தான் தீர்க்க வேண்டும்.//
வீர வணக்கங்கள் தோழர்.
தோழருக்கு 61 வயது அறிந்த பொழுது, ஆச்சர்யமாயிருந்தது. தனது சுறுசுறுப்பான வேலைகளால், 10 வயதை குறைத்திருந்தார்.
தோழர் மருதையனின் உரையில் குறிப்பிட்டதில்… போராட்டங்களில் மகிழ்ச்சி காண்பது, அயராத உழைப்பு என ஒரு கம்யூனிஸ்டுக்குரிய குணங்களுடன் முன்னுதாரணமிக்க தோழராக வாழ்ந்திருக்கிறார்.
அவரால் வென்றெடுக்கப்பட்ட, இணைந்து வேலை செய்த பல தோழர்கள் அவர் குறித்து குறிப்பிடுகிற நினைவுகளில், அவருடன் சேர்ந்து வேலை செய்யாததின் வருத்தம் வருகிறது.
துரை சண்முகம் தோழர் குறிப்பிட்டது போல, அவருடைய இழப்பு அமைப்புக்கும், தோழர்களுக்கும் மிகப் பெரிய இழப்பு. அவர் இல்லாத குறையை நமது உற்சாகமான, உணர்வுப்பூர்வமான வேலைகளால் இட்டுநிரப்புவது தான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.
தோழருக்கு நமது சிவப்பஞ்சலிகள்.
தோழர் சீனிவாசன் அவர்களுடைய இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக ம.க.இ.க வின் தோழர்களும், அதன் தோழமை அமைப்பைச் சேர்ந்த தலைமையில் உள்ள தோழர்கள் தோழரைப் பற்றி இரங்கல் உரை ஆற்றினார்கள். இறுதியில் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் 15 நிமிடம் இரங்கல் உரை ஆற்றினார்.
அதன் முழு உரையும் கீழே உள்ள சுட்டியில் தரப்பட்டுள்ளது.
http://socratesjr2007.blogspot.in/2012/05/blog-post_17.html
என்றும் நெஞ்சில் ஏந்தியிருப்போம் தோழர்! – குருசாமிமயில்வாகனன்