Wednesday, March 22, 2023
முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!

பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!

-

பதனி-டோலா‘‘தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை நிலைநாட்டுவது, பாதுகாப்பது ஆகியவை குறித்து மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடைக் கூட்டப் போவதாக” மைய அரசு டாம்பீகமாக அறிவித்த இரண்டாவது நாளே, அதனின் முகத்தில் சாணியை அடித்தாற்போன்றதொரு தீர்ப்பை பீகார் மாநில உயர் நீதிமன்றம் அளித்திருக்கிறது.  பீகாரிலுள்ள பதனி டோலா கிராமத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் முசுலீம் மதத்தைச் சேர்ந்த 21 பேரை, ரன்வீர் சேனா என்ற ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் குண்டர் படை படுகொலை செய்த வழக்கில், கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 23 குற்றவாளிகளையும் விடுதலை செய்து அளித்த தீர்ப்புதான் அது.

பதனி டோலாவில் நடந்த படுகொலை தமிழகத்தில் கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைக்கு இணையானது.  அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்படும் கூலியை முப்பது ரூபாயாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரி, சி.பி.ஐ. (எம்.எல்.)  லிபரேஷன் என்ற கட்சியின் தலைமையில் அணிதிரண்டு போராடி வந்தனர்.  கூலி விவசாயிகள் சங்கமாக அணிதிரண்டு தமது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதையும் கூலிஉயர்வு கேட்பதையும் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிகளான ராஜ்புத் மற்றும் பூமிகார் சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், தாழ்த்தப்பட்ட கூலிவிவசாயிகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க நடத்திய படுகொலைதான் பதனி டோலா படுகொலை.

ரன்வீர் சேனா ஜூலை 21, 1996 அன்று நடத்திய அத்தாக்குதலின்பொழுது, நய்முதீன் என்பவரின் மூன்று மாதப் பெண் குழந்தை மேலே தூக்கியெறியப்பட்டு, கொடுவாளால் பந்தாடப்பட்டுக் கொல்லப்பட்டது.  இப்பச்சிளங்குழந்தையின் மரணம் ஒன்றே அப்படுகொலை எந்தளவிற்கு காட்டுமிராண்டித்தனமான முறையில் நடத்தப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும்.  ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட அத்தாக்குதலில் இறந்துபோன 21 பேரில், 20 பேர் பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும்தான்.

இப்படுகொலை நாடெங்கும் அம்பலமாகி, பலத்த கண்டனங்களையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியதால், படுகொலை நடந்த மறுநாளே பாதிக்கப்பட்டோரிடமிருந்து வாக்குமூலம் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம், அப்பொழுது ஆட்சியிலிருந்த லல்லு அர”க்கு ஏற்பட்டது.  ஆனாலும், கீழமை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு பதினான்கு ஆண்டுகள் கழித்துதான் வந்தது.  இவ்வழக்கில் 63 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும்,  கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தபொழுதே, நான்கு பேர் இறந்து போனார்கள்; ஐந்து பேர் பாட்னா உயர் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மீதிப் பேரில், 30 பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்த கீழமை நீதிமன்றம், 3 பேருக்குத் தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மே, 2010  இல் தீர்ப்பளித்தது.  பாட்னா உயர் நீதிமன்றம் தற்பொழுது இத்தீர்ப்பை தள்ளுபடி செய்து, 23 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்துவிட்டது.

ரன்பீர்-சேனா-பதனி-டோலா
படுகொலைக்கு காரணமான ரன்வீர் சேனா, ஆதிக்க சாதியின் கொலைப்படை

பாட்னா உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நவ்நீதி பிரசாத் சிங், அஷ்வாணி குமார் சிங் என்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மன்றம் வழங்கிய இத்தீர்ப்பில் அதிகாரவர்க்கத்திற்கேயுரிய குதர்க்கப் புத்தியும், ஆதிக்க சாதி மனோபாவமும் பின்னிப்பிணைந்து வெளிப்பட்டுள்ளது.  இவ்வழக்கில் படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்தோர்தான் முக்கிய சாட்சியங்கள்.  சாதி மற்றும் வர்க்கப் படிநிலையில் அடிமட்டத்தைச் சேர்ந்த அவர்களது சாட்சியங்களை நம்ப முடியாது என ஒதுக்கித் தள்ளியதோடு, அவர்களைப் பொய்யர்கள், கட்டுக்கதை சொல்பவர்கள், நம்பத்தகாதவர்கள் என ஆதிக்க சாதிக் கொழுப்பெடுத்து அவமதித்துள்ளனர், நீதிபதிகள்.

‘‘ரன்வீர் சேனா பதனி டோலாவில் வசிக்கும் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்ததாகக் கூறும்பொழுது, அவர்கள் தங்களை மட்டும் எப்படி உயிரோடு தப்பவிட்டிருப்பார்கள்?  நீங்கள் புதர்களுக்கு அருகே மறைந்துகொண்டு சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தபொழுதே, ரன்வீன் சேனா தங்களைத் தேடி வந்து கொன்று போட்டிருக்காதா?” எனக் குதர்க்கமாகக் கேள்விகளை எழுப்பி, சம்பவத்தைப் பார்த்த நேரடி சாட்சியங்களைப் பொய் சாட்சியங்கள் என ஒதுக்கித் தள்ளியுள்ளனர், நீதிபதிகள்.

பதனி-டோலாஇந்த ஏழைகளின் சாட்சியங்களுக்கு உள்நோக்கம் கற்பித்து ஒதுக்கித் தள்ளிய நீதிபதிகள், ஆதிக்க சாதியைச் சேர்ந்த 23 குற்றவாளிகளையும் அப்பாவிகள் எனத் தமது தீர்ப்பில் குறிப்பிட்டு உருகியுள்ளனர்.  மேலும், இக்குற்றவாளிகளுள் மூன்று பேர் சம்பவம் நடந்தபொழுது சிறுவர்களாக இருந்தனர் என்றும், அவர்கள் தேவையில்லாமல் தண்டனை அனுபவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு, தீர்ப்பிலேயே வருத்தம் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்.  மனுகூட இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதக் கூச்சப்பட்டிருப்பான்.  ஆதிக்க சாதி பாசத்தால் இத்தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது என்பது பச்சையாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, போலீசு நடத்திய புலன் விசாரணையில் உள்ள ஓட்டைகளையும் பட்டியலிட்டு, குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளனர், நீதிபதிகள்.

பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக நிதிஷ்குமார் அரசு அறிவித்த மறுநிமிடமே, அவரது அமைச்சரவையைச் சேர்ந்த கிரிராஜ் சிங், “பதனி டோலாவை இதோடு கிள்ளி எறிந்துவிட வேண்டும்; இப்பிரச்சினையை மேலும் மேலும் விவாதத்திற்கு உள்ளாக்குவது, நிலைமையை மோசமடையச் செய்யும்” என எச்சரித்தார்.  இந்த எச்சரிக்கையை நிதிஷ்குமாரின் நல்லாட்சியில் ஒட்டிக்கொண்டுள்ள ஆதிக்க சாதிவெறி பிடித்த ஏதோவொரு அமைச்சரின் குரலாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது.

ரன்வீர் சேனாவிற்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமிர் தாஸ் விசாரணை கமிசனை, நிதிஷ்குமார், தான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடனேயே கலைத்து உத்தரவிட்டார்.  இத்தீர்ப்பு வெளிவருவதற்கு ஏறத்தாழ ஒரு வருடம் முன்பாக, ரன்வீர் சேனாவின் தலைவனும் பதனி டோலா படுகொலையைத் தலைமை தாங்கி நடத்தியவனுமான பிரம்மேஷ்வர் சிங்கிற்குப் பிணை வழங்குவது தொடர்பான வழக்கில், பிணையை மறுத்து வாதாடாமல், அவனை மேளதாளத்தோடு வழியனுப்பி வைத்தது, நிதிஷ்குமார் அரசு.

பதனி-டோலாஅவரது அரசு பெயரளவிற்கான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளைக்கூட எடுக்க மறுத்து, ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களுக்குச் சாதகமாகவே நடந்து வருகிறது.  ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையேயான நிலப்பிரச்சினையொன்றில், அமாவ்ஸி என்ற பகுதியில் நடந்த அடிதடி  கொலை வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்ட 14 தாழ்த்தப்பட்டோரில் 10 பேருக்குத் தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.  பாட்னா உயர் நீதிமன்றம் பதனி டோலா வழக்கில் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு விடுதலை வழங்கிய அதேநேரத்தில் நிலத்திற்காகப் போராடிய தாழ்த்தப்பட்டோருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இத்தீர்ப்பு சாதிவெறியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை, சட்டப்படியே அளிக்கப்பட்டுள்ளது எனக் காட்டிக் கொள்வதற்காகவே, அத்தாழ்த்தப்பட்டோர் அனைவரும் மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனச் சாட்சியங்கள் சோடிக்கப்பட்டன.

இந்தப் பின்னணியிலிருந்து பார்த்தோமானால், பாட்னா உயர் நீதிமன்றத் தீர்ப்பு, ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட ஏதோ இரண்டு நீதிபதிகளின் உள்ளக்கிடக்கையல்ல என்பதையும் நிதிஷ்குமாரின் நல்லாட்சி என்பது ஆதிக்க சாதிக் கும்பலின் விசுவாச ஆட்சி என்பதையும் புரிந்துகொள்ளலாம்.  அவரது ஆட்சியைப் புகழ்ந்து தள்ளிவரும் தேசியப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும்கூட இத்தீர்ப்பு குறித்து அடக்கியே வாசிக்கின்றன.  ஜெஸிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து வானத்துக்கும் பூமிக்குமாக சாமியாடிய ஊடகங்களின் மனசாட்சி, இந்தப் பிரச்சினையில் ஊமையாக இருப்பதேன் என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள், அவைகளின் ஆதிக்க சாதிவெறிப் பாசமும் அம்பலப்பட்டுப் போகும்.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. அந்த ஜெசிக்கா லால் எந்த சாதியை சேர்ந்தவர் என்பதை பொறுத்தே ஊடகங்கள் களம் இறங்கும்.

  2. The judges are the representations of conscience this society at large. They too have the same prejudice as any common man.
    That is why the composition of high level judiciary should include people from all caste and religion.
    The dalits, as Dr BR Ambetkar puts it, should be learnt, unite and revolt.

  3. http://tamil.oneindia.in/news/2012/06/01/india-ranvir-sena-chief-brahmeshwar-singh-shot-dead-in-bihar-154919.html ரண்வீர் சேனா சொறிநாய் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதே போன்ற தீர்ப்புகள் நீதிமன்றத்திற்கும் கிடைக்கும் நாள் வரவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க