Saturday, January 16, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் மயிரை கொடுத்துவிட்டு உயிரை எடுக்கும் கார்ப்பரேட்டுகள்!

மயிரை கொடுத்துவிட்டு உயிரை எடுக்கும் கார்ப்பரேட்டுகள்!

-

செய்தி-65

joy-of-giving-week

ந்த ஆண்டுக்கான ‘கொடுப்பதன் இன்பம்’ கொண்டாட்ட வாரத்தில் கார்ப்பரேட்டுகள் முக்கிய ‘பங்களிக்கப்’ போகிறார்கள்.

‘பண நெருக்கடியும் பண வீக்கமும் இருக்கும் போது எப்படி கொடுப்பது’ என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். பணமாகத்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை, தன்னார்வ பணிகளை செய்தல், தமது சேவைகளை இலவசமாக அளித்தல், நலவாழ்வு பணிகளுக்காக தமது வசதிகளை பயன்படுத்துதல் போன்ற பல வழிகளில் கொடுக்கலாம். அன்னையர் தினம், காதலர் தினம் போல ஆண்டு தோறும் ‘கொடுப்பதன் இன்பம்’ வாரம் கொண்டாடப்படுகிறது. ஏழைகளுக்காக பணக்காரர்களிடம் அறப்போராட்டம் நடத்திய காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதியை ஒட்டி இது வருகிறது.

இந்த இயக்கத்தின் பிராண்ட் தூதுவராக இருப்பவர், மக்களுக்கு கடன் அட்டைகள், தனி நபர் கடன்கள், வீட்டுக் கடன்கள்  கொடுத்து அதன் மூலம் ஐசிஐசிஐ வங்கியை மிகப்பெரிய தனியார் வங்கியாக வளர்த்து விட்ட அதன் முன்னாள் சேர்மன் என் வாகுல். ‘கொடுக்கும் எண்ணத்தை வளர்ப்பதே இதன் நோக்கம்’ என்கிறார் அவர். ஐசிஐசிஐ கடன் அட்டை கொடுத்து ரவுடிகளை வைத்து வசூலிப்பதும் இந்தக் கொடுப்பதில் வருமா தெரியவில்லை.

பல ஆயிரம் இளைஞர்களுக்கு டையும் ஷூவும் போடக் கற்றுக் கொடுத்து கடன் விற்க சொல்லிக் கொடுத்த வாகுல், ‘மக்களுக்கு சேவை செய்வதில் அரசாங்கத்தின் சுமையை கார்ப்பரேட்டுகள் பாதியாக குறைக்க வேண்டும்’ என்று சொல்லி மற்ற கார்ப்பரேட்டுகளையும் கொடுத்து இன்பமடையும் படி அழைக்கிறார்.

மேட்டுக்குடியினர் தங்குவதற்கு சொகுசு ஹோட்டல்கள் நடத்தும் கோர்ட்யார்ட் மாரியட் நிறுவனம் தொழுநோயாளிகளின் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிக்கு பணம் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. இவர்களது ஆடம்பர ஹோட்டல்களை இடித்து விட்டு எளிய மக்கள் தங்குவதற்கு வசதி செய்தால் பல நூறு பேர் தங்க முடியம்.

உலக அளவில் கொடுப்பதில் புகழ் பெற்ற கார்பொரேட் முதலாளி பில் கேட்ஸ். மென்பொருள் துறையில் ஏகபோக ஆதிக்கத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தி பல பில்லியன்கள் சம்பாதித்த பில் கேட்ஸ் 2006-ம் ஆண்டு முழுநேர கொடுக்கும் பணியில் அமர்ந்தார்.  பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் மூலம் $33.5 பில்லியன் (சுமார் ரூ 1.66 லட்சம் கோடி) மதிப்பிலான தரும காரியங்களை நடத்தி வருகிறார்.

உலக அளவில் விவசாயம், மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்களின் நலன்களை உறுதி செய்ய பல பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை பயன்படுத்துவதுதான் கேட்ஸ் அறக்கட்டளை கொடுப்பதன் அடிப்படை. விவசாயம் தொடர்பான கொடைக்கு மான்சான்டோ, தடுப்பூசிகள் கொடைக்கு கிளாக்சோ ஸ்மித்கிளைன், கல்வி கொடைக்கு பியர்சன் எஜூகேஷன் என்று ஒவ்வொரு துறையிலும் பொருத்தமான கூட்டாளியை சேர்த்துக் கொண்டு செயல்படுகிறது அந்த அறக்கட்டளை. அதாவது கொஞ்சம் பணத்தை வீசி நிறைய பணத்தை சுருட்டுவதுதான் கேட்ஸின் அறக்கட்டளை பின்னே உள்ள அறம்.

பங்குச் சந்தையிலும் பிற ஊக வணிக சந்தைகளிலும் லட்சக் கணக்கான சிறு முதலீட்டாளர்களின் இழப்பிலிருந்து பில்லியன் டாலர் சொத்துக்களை குவித்திருக்கும் வாரன் ப ்பெட் கார்ப்பரேட்டுகளை சிறப்பாக பராமரிக்கும் கேட்ஸ் அறக்கட்டளைக்கு தனது சொத்தில் கணிசமான பகுதியை கொடுத்திருக்கிறார்.

அமெரிக்காவின் போர்டு அறக்கட்டளை அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்யும் தன்னார்வ குழுக்களுக்கு நிதி கொடுக்கிறது . கேரளாவின் பிளாச்சிமடாவை நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக்கிய கோக் அமெரிக்காவில் நதிகளை பாதுகாக்க நிதி கொடுக்கிறது.

‘வாரன் பபெட்டையும், பில் கேட்ஸையும் பார்த்து கற்றுக் கொள்ளத் தேவையில்லை, இந்தியாவில் கொடுப்பதற்கான பாரம்பரியம் மிகப் பழமையானது’ என்கிறார் வாகுல்.

உண்மைதான்.

பிரம்மாவின் தலை, தோள், வயிறு, கால் என்று பாகம் பிரித்துக் கொண்ட நால்வருணத்தினரின் பங்கில் எந்தக் குறைவும் வந்து விடக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிக்கு பிறந்தவர்கள் என்று பெருமையை கொடுத்த காந்தி இந்து தர்மத்திற்கு ஒரு கீறல் கூட விழுந்து விடாதபடி தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று காட்டிய வழியில் இந்திய கார்ப்பரேட்டுகளும் கொடுப்பதன் இன்பத்தை தொடர்ந்து கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து பல ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திய டாடா குழுமம் தேஜஸ்வனி என்ற பெயரில் பழங்குடி பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறது  அது பற்றி ஆவணப் படம் எடுப்பதற்கும் லீனா மணிமேகலைக்கு பணம் கொடுக்கிறது. சிங்கூரில் விவசாயிகளை கொன்று இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு நானோ கார் கொடுப்பது முதலான டாடா குழுமத்தின் கொடுத்தல்களுக்கு குறைவே இல்லை.

கார்பொரேட் பிளேபாய் விஜய் மல்லையா, ரூ 60 லட்சம் செலவில் சுப்பிரமணியனுக்கு தங்கக் கதவுகள் கொடுத்திருக்கிறார் . கர்நாடகாவின் இரும்பு தாது கொள்ளையர்கள் ரெட்டி சகோதரர்களும், தமிழ்நாட்டில் கிரானைட் கொள்ளையர்களும் திருப்பதி பாலாஜிக்கு லட்ச லட்சமாக கொடுக்காமலா இருக்கிறார்கள்!

மக்களுக்கு மயிரை கொடுத்து விட்டு உயிரை எடுக்கும் கார்ப்பரேட்டுகள் கொடுப்பதற்கு என்று தனியாக ஒரு வாரம் கொண்டாட வேண்டுமா என்ன?

______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. நல்ல பங்களிப்பு. படிக்கப் படிக்க இன்பமாய் இருக்கிறது. தொடரட்டும்.

  2. கார்பரேட் கொள்ளையர்களின் கருணை,அணுக்கதிர் வீச்சின் ஆபத்துக்கு நிகரானது.இது, கொலைக்காரனை மோகிக்கும், நோய் பரப்பும். மக்களை, மந்தைகளாக்கும் மாயம் செய்யும். சிவப்பாய் உதித்த நேபாளம் சடுதியில் எதிரியின் கையில் வீழ்ந்தது, எப்படி? இது கோர விபத்தல்ல! கார்பரேட் கருணையால் நிகழ்ந்த கவிழ்ப்பு!

    பார்க்க…The Drawback Of Nepal’s Revolution : The NGO’s Harvest
    http://thenextfront.com/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க