Tuesday, February 18, 2025
முகப்புகலைகவிதைமாட்டுத்தாவணி - கோயம்பேடு

மாட்டுத்தாவணி – கோயம்பேடு

-

மாட்டுத்தாவணி-கோயம்பேடு

தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி
தாய்ச்சுமையொடு பக்குவமாக
மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து
தேசிய நெடுஞ்சாலையை
பிடித்தது பேருந்து.

இயங்குவது எந்திரம் மட்டுமா?
அதனொரு பாகமாய்
ஓட்டுநரின் கையும், காலும்
தசையும், நரம்பும் அசையும்.
வேகமெடுக்கும் சக்கரத்தின் சுழற்சியொடு
வெகுதூரம் சரிபார்த்து
விழிகள் சுழன்று இசையும்.

அவியும் எஞ்சின் சூடும்
இரையும் அரசுப் பேருந்தின் ஒலியினூடே
பேருந்தின் ஒரு தகடின் ஓசையும் வேறுபட்டால்
உடனே அறியும் ஓட்டுநரின் செவிப்புலம்.
கும்மிருட்டில்
விரியும் அவர் பார்வை நரம்புகள் மேல்
பத்திரமாய் நம் பயணங்கள்.
எத்தனை பேர் அறிவோம்
அவரிதயம் நமக்கும் சேர்த்துத் துடிக்கும் தருணங்கள்.

போகும் நள்ளிரவில்… எதிரே தனியார் பேருந்துகளின்
தகிக்கும் விளக்கொளிகள்,
இரவையும் பகலாக்கும்
நிலவையும் கூச வைக்கும்.
அதை.. தனியே எதிர்கொண்டு
வேகம் குறையாமல்
லாவகமாய் சைடு வாங்கி
தாய்மடி தூங்காத குழந்தையையும்
தனது ஸ்டியரிங் இட வலது தாலாட்டில் உறங்க வைத்து,
துடிக்கும் கண்களுக்குள்
டீசலொடு ஓட்டுநரின் தூக்கமும்
எரிந்து விசையாகி எஞ்சின் துடிதுடிக்கும்.

அண்ணா சமாதி அணையா விளக்கு போல
ஏதோ வெளிச்சம் காட்டும்
முன்விளக்கைப் பற்றிக் கொண்டு
பாதை விரியும் தூரம் முழுக்க
தன் கண் விளக்கால் கடந்து கடந்து
பயணிகளைச் சுமந்து செல்லும்
ஓட்டுநரின் விழி இருக்கை.

கொட்டாம்பட்டி தாண்டும்போதோ
கொட்டும் மழை…
பேருந்து நிர்வாகம் போல் இயங்காத வைப்பர்
தினந்தந்தி நாளிதழோ, தான் போடும் புகையிலையோ
பேருந்து கண்ணாடிக்கும் போட்டு
விழி மறைக்கும் மழை விலக்குவார்.
எதிர்ப்படும் மின்னலை கருவிழி துடைத்து
திருச்சி தாண்டி
ஒரு தேநீர் குவளைக்குள்
இரவைக் கலக்கி குடிக்கும் ஓட்டுநரின் கையில்
பயணிகள் அனுபவித்த தூக்கம்
தோலுரிந்து  கிடக்கும்.

இருள் அப்பிக் கிடக்கும் சாலைகள்…
எதிர்ப்படும் தடைகள், குண்டு குழிகள்
பராமரிப்பில்லாத பேருந்தின் தொல்லைகள்
அத்தனைக்கும் முனகும் குரல்களை
வலிகளாய் தான் வாங்கி…
எரிபொருள்  சிக்கனமாய் வண்டியை ஓட்டி
தன் இரத்தம் தாராளமாய் விடிய விடிய
கண்களில் கொப்பளித்து
அத்தனை பயணிகளையும்
பத்திரமாய் கோயம்பேட்டில் இறக்கி விட
வானம் வெளுத்து வரும்
ஓட்டுநரின் கண்களோ செக்கச் சிவந்திருக்கும்.

தனியார்மயத்தால் தறிகெட்டு ஓட்டி
நாட்டையே விபத்துக்குள்ளாக்கும்
மன்மோகனையும், ப. சிதம்பரத்தையும்
‘மினிஸ்டர்’ என மரியாதையாகப் பேசும் வாய்கள்

பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல்
“ஊம்.. வந்துட்டேன்,
ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.

–  துரை. சண்முகம்.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. என்ன சொல்ல வருகிறீர்கள்? நீங்கள் குறிப்பிடும் போக்குவரத்து தொந்திரவுகள் எல்லா டிரைவர்களுக்கும்தன் உண்டு. இதில் அரசுப்பேருந்து, தனியார் பேருந்து என ஏன் பிரித்து பார்க்க வேண்டும், அலட்ட வேண்டும்?

    அது சரி தங்களுக்கு கிடைக்கும் ஓசி டிபன் சாப்பாட்டுக்கக இதே அரசுப் பேருந்து ஓட்டுனர்கள்/நடத்துனர்கள் காலரா ஓட்டல்களாக பார்த்து நிறுத்தி பயணிகளை மெர்ச்ல் ஆக்குகிறர்களே. அது பற்றி எழுத கவிதையில் இடமில்லையா?

    குடித்துவிட்டு டிரைவர் ஓட்டுகிறாரே அவருக்கு த்ண்டனை வாங்கித் தரமுடியாதபடி யூனியன் தொந்திரவுகள்.

    ஆகவேதான் தனியார்மயமாக்கலை பயணிகளும் வரவேற்கின்றனர்.

    அன்புடன்,
    டோண்டு ரகவன்

    • டோண்டு ராகவன் அவர்களே, நீங்க பஸ்சுல பயணிக்கற ஆள் இல்ல என்பது தெரியுது.

      சென்னையை அடுத்த செங்கல்பட்டுல இருந்து பழையசீவரம் மலை வரைக்கும் எதாவது ஒரு தனியார் பஸ்சுல உட்கார்ந்து வந்துடுங்க பார்க்கலாம். இல்ல.. ‘எனக்கு உடம்பு முடியல உட்காரணும்’ என்றால், ”அப்படியா? சீட்டில உட்கார்ந்துட்டினா எங்க வேனா இறங்கிக்க காஞ்சிபுரம் டிக்கட்டு 17 ரூபாய்” என்று சொல்லும் கண்டக்டர்கள். அதிலும் குறிப்பா ”அம்மன் அருள்” என்ற பஸ்ஸில் 60 பேர் பயணிக்கும் பஸ்சில் குறைந்தது 100 பேருக்கு மேல ஏறினாதான் பஸ்ச நகர்ந்துவார்கள்.

      இரண்டு பக்கமும் தடிமாடு மாதிரி இரண்டு ஆட்களை வைத்துக்கொண்டு ”உள்ளப்போ உள்ளப்போ” என்று அடிக்கும் அடாவடி கொஞ்சநஞ்சம் இல்ல. ‘டிக்கட் டிக்கட்’ அதற்கும் இருவர் ரவுடிகளைப் போல சுற்றி வருவார்கள். டைம் மெயின்டேய்ன் பண்ண பஸ் போகும் வேகத்தைப் பார்த்தா பஸ் ஸ்டான்டுக்கு டிக்கட் வாங்கினோமா? பரலோகத்துக்கு டிக்கட் வாங்கினோமா? என்று இருக்கும். பயணிகளிடம் பேசும் விதம் எல்லாமே கொடுமைதான்.

      டிரைவர், கண்டக்டர்களுக்கும் எங்கு ஓசி சாப்பாடு கிடைக்கிறது என்று சொன்னால் நல்லா இருக்கும். ஏனென்றால், எல்லாரும் கம்மி விலையில சாப்பாடு எங்க கிடைக்குதுனு தேடி அலைஞ்சி சாப்பிடுவதை பார்த்து இருக்கேன்.

      இருக்கிற விலைவாசியில கவர்மெண்ட் டிரைவர்களே காலரா ஓட்டல்லதான் சாப்பிட முடியும். ஏனென்றால், குருவியாட்டம் சேர்த்து வைத்த காசை கவர்மெண்ட் வேலை வேனும் என்பதால் பல லட்சம் லஞ்சம் குடுத்துட்டுதானே வராங்க. அப்பவும் நிரந்தர வேலை இல்லை.

      காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் 212 B பஸ்சுல காலையில 6 மணிக்கு ஏறிப் பாருங்க, வழியில வர்ற ஊர்களிலிருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொள்ள கண்டக்டர்களும் உதவி செய்வாங்க, டிரைவர்களும் அதற்கு தகுந்தவாறு நிறுத்துவார்கள். ஆனா, எந்த தனியார் பஸ்சுலயும் காய்கறி மூட்டைகளை ஏற்ற மாட்டார்கள். ஆட்களைதான் மூட்டை மாதிரி அடுக்குவாங்க.

      கவர்மெண்ட் பஸ்தான் டிரைவர்களை பல முறை மெர்சலாக்கிறத பார்த்து இருக்கேன். எந்த பஸ்சும் சரியான கண்டிஷன்ல இருக்காது. வேலைக்கு போறவங்கவளை உரிய நேரத்தில் விட அக்கறையுடன் தன்னால் முடிந்த வற்றை செய்வார்கள் டிரைவர்கள்.

      குடிக்கறதுக்கு ‘அம்மா’ தானே கடைகளையும், நேரத்தையும் அதிகப்படுத்தி மக்களுக்கு சொர்க்கத்துக்கு வழி காட்டுறாங்க, குடிச்ச டிரைவர்கள் நம்பிய ஜனங்களுக்கு நரகத்தை காட்டாறாங்க. கடைகளை முதல்ல மூட வழி செய்வோம். எரியறதை புடுங்கினா கொதிக்கறது தானா அடங்குது.

      நம்ம வீட்டு பிரச்சனைகளை நாமதான் சரிசெய்ய செய்யணும். அதவிட்டுட்டு பிரச்சனை பெரிசா இருக்கு.. அடுத்தவனை உள்ள நுழைச்சிட்டா.., நாம தப்பிக்க முடியுமா?

    • ஒரு காலத்தில் ஓட்டுனா், நடத்துனா் விரும்பின மோட்டலில் நிறுத்தும் முறை இருந்தது. ஆனால் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் மோட்டல்காரர்கள் அரசியல்வாதிகளை, கழக அதிகாரிகளை வந்து கவனித்து விடுவதால் இந்த தடத்தில் இந்த மோட்டலில்தான் நிறுத்த வேண்டும் என்கிற நடைமுறை வந்துவிட்டது.

      இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தற்போதைய அதிமுக ஆட்சி வந்த பிறகு நிர்வாகத்தின் வழியாக அமைச்சரால் சொல்லப்படும் மோட்டலில் நிறுத்த வேண்டும் என்பதுடன், அந்த மோட்டலில் உள்ள கல்லாவில் பேருந்தின் இன்வாய்ஸில் ஒரு சீல் அல்லது மோட்டலில் உள்ளவர் இனிசியல் வாங்கி வர வேண்டும். அரசுப் பேருந்து இன்வாய்ஸ் என்கிற மதிப்பு மிக்க ஆவணம் அவ்வளவு சீப்பாகிவிட்டது.

      இந்த நிலை வந்த பின்னர், மறைவாக ஓட்டுனா், நடத்துனர் உட்கார்ந்து சாப்பிடும் இடத்தில் ஒரு ஆம்லேட் கூட கேட்டால் ,,,ம் … வரும் பொறுங்க என்கிற சலிப்புத்தான் பதிலாய் வருவது, இன்வாய்சில் கையொப்பம் அல்லது மோட்டல் சீல் என்கிற நிலையினால் ஓட்டுனரின் மரியாதை சீப்பாய் போனது எத்தனை பேருக்கு தெரியும்?

  2. “தனியார்மயத்தால் தறிகெட்டு ஓட்டி
    நாட்டையே விபத்துக்குள்ளாக்கும்
    மன்மோகனையும், ப. சிதம்பரத்தையும்
    ‘மினிஸ்டர்’ என மரியாதையாகப் பேசும் வாய்கள்

    பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல்
    “ஊம்.. வந்துட்டேன்,
    ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.”

    Feeling myself shame… One “thanks” after reaching our destination, will make them feel happy…

  3. போக்குவரத்துத் தொழிற்சங்கங்களில் இடதுசாரிகளின் பலம் அதிகம் என்று கேள்விப்பட்டேன். வேண்டுமென்றே 60 கி.மீ வேகம் லிமிட் என்று வைத்து அதில் இவர்கள் 45 கிமீக்கு மேல் வண்டியை ஓட்டாமல் இழுஇழு என்று இழுத்து தனியார்ப் பேருந்துகள் சென்னை-மதுரைக்கு 7 மணி நேரத்தில் போய்விட அரசுப் பேருந்துகள் டோல் ரோடுகளில் போனாலும் 10-11 மணி நேரம் என்று வேண்டுமென்றே மெதுவாய்ப் போகின்றார்கள். இதில் 3-4 இடங்களில் நிறுத்தம் வேறு.
    கட்டணமும் தனியார்ப் பேருந்துகளை விட சற்றுதான் குறைவு.
    நம் மக்கள் பேருந்துகளின் மோசமான பராமரிப்புக்களைக்கூட சகித்துக்கொள்கிறார்கள். இதில் வேகமும் ஆமை வேகம் என்றால் நாளடைவில் தனியார்ப் பேருந்தில் செல்லும் ஆட்களே இல்லாமல் போய் பின்னர் அது அரசு போக்குவரத்துக் கழகத்தை மூடி தனியார் வசமாக்குவதில் போய் முடியும்.
    இடது சாரி யூனியன்கள் நினைத்தால் இதில் ஒரு மாற்றத்தை காட்டமுடியும்.
    மக்களிடம் அவர்கள் மீதான நன்மதிப்பு பெருகும். செய்வார்களா?
    (உ.ம். இடதுசாரி தொழிற்சங்கத்தின் பேட்ஜ் அணிந்த டிரைவர்கள் இயக்கும் பஸ்கள் ஒழுங்காக, பாதுகாப்பாக சரியான வேகத்தில் முடிந்த அளவு சீக்கிரமாக இயங்கும் என்று மக்கள் உணர்ந்தால், மற்ற யூனியன்களிடமிருந்து அவர்களின் தனித்தன்மை வெளியாகும்)

  4. F1 ரேசுல ஓட்டுற நம்ம நரேன், இந்த கவர்மெண்ட்டு பஸ்ஸை ஒரு அஞ்சு நிம்சம் ஓட்டிக் காட்டிட்டா, இந்தக் கவிதை (உண்மையிலியே) ஒரு கற்பனைன்னு ஒத்துக்கிடலாம்…

  5. Hi,

    I accept your points. Drivers are real heros who drive continously 13 hours(From bangalore to tanjore). I usaully tell them thanks whenever i take that bus. And one more point, it applies to private bus drivers also. Its necessary to thank them because their legs have our lives.

  6. அருமையான கவிதை. ஆனால் தேவையே இல்லாமல் தனியார், அரசு என்ற பிரிவினை ஏன் என்று தான் புரியவில்லை.

    “போகும் நள்ளிரவில்… எதிரே தனியார் பேருந்துகளின்
    தகிக்கும் விளக்கொளிகள்,
    இரவையும் பகலாக்கும்
    நிலவையும் கூச வைக்கும்”

    இந்த அரசுப்பேருந்தின் பின்னால் வரும் தனியார் பேருந்து ஓட்டுனருக்கும் இதே அசெளகரியம் தானே ஏற்படும். அப்புறம் ஏன் இப்படி வேறுப்படுத்தி கூறுகிறீர்கள்?

    ஆட்டோவில், கால் டாக்ஸியில் செல்லநேர்ந்தால் இறங்கியதும் ‘தேங்க்ஸ்’ சொல்லுவது எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் பழக்கம். பேருந்தில் ஏனோ சொல்லத் தோன்றுவதில்லை. அடிக்கடி பேருந்தில் நெடுந்தூரம் பயணம் செய்கிறவன் என்ற முறையில் சொல்கிறேன். “பொறுமையாக பத்திரமாக ஓட்டி வந்தார்”, “சும்மா வளைச்சு வளைச்சு ஓட்டாமே ‘ஸ்மூத்தா’ வந்தார்” என்று டிரைவரை பற்றி நிறைவாக பேசுபவர்களும் உண்டு. கவிதையின் கடைசியில் கூறியது போல் கூறுபவரும் உண்டு.

  7. கவிதையை படித்த உடனே பதில் எழுதிட முடியாமல் போனது , மனதில் இருந்ததை பலரும் பேசியுள்ளார்கள் (மறு மொழியில்). ஆனால் இரு வேறு பகுதிகளாக போக்குவரத்துத்துறை ஊழியர்கள் உள்ளதை நாம் மறந்து விடக்கூடாது. ஒரு முறை திருச்சியில் இருந்து வத்தலக்குண்டு செல்ல வேண்டிய நான் திண்டுக்கல் வந்து மாறி விடலாம் என நினைத்து தேனி பேருந்தில் ஏறினேன்.அப்போது மணி இரவு 9 வண்டி படு வேகம் . 11.20க்கு திண்டுக்கல் வந்து சேர்ந்தது. சரி இனி ஏன் இறங்கி ஏற வேண்டும் இதே வண்டியில் பயணத்தைத் தொடரலாம் என்று அமர்ந்திருந்தேன். ஆனால் வண்டி போவதற்கான அறிகுறி இல்லை. டிரைவரும் , நடத்துனரும் காணவில்லை. கீழே இறங்கினேன் அப்போதுதான் தெரிந்தது பேருந்து நிலையத்திற்குள் வந்த எந்த வண்டியும் செல்ல வில்லை என்று . எனக்கு மட்டுமல்ல யாருக்குமே புரியவில்லை. நேரம் போய் கொண்டே இருந்தது. கடைசியில் மிகச் சரியாக , மிகச் சரியாக 12.00மணிக்கு செய்தி சொன்னார்கள் பேருந்துக் கட்டணம் இப்போது இருந்து உயர்ந்துள்ளது என்று. இப்போது வண்டி கிளம்புகின்றது. வத்தலக்குண்டுக்கு 13 ரூபாய் கேட்க வேண்டிய நடத்துனர் 22 ரூபாய் கேட்கின்றார். கோபம் வருகின்றது , என்ன அநியாயம் திருச்சியில்இருந்து வத்தலக்குண்டிற்கு நான் பயணச்சீட்டு வாங்கியிருந்தால் 9 ரூபாய் இழப்பு இருந்திருக்காது என்பது அல்ல விசயம் . நீங்கள் இதைப்பற்றி பேச மாட்டீர்களா என்றபோது நடத்துனர் அவர்கள் வாங்கச் சொல்கின்றார்கள் நான் வாங்குகின்றேன் என்றார். எதற்கு இவர்களுக்கு யூனியன் சம்பள உயர்வுக்கு மட்டுமா? மக்களைப் பற்றிய சிந்தனை தாசில்தாருக்கும் இல்லை பேருந்து நடத்துனருக்கும் இல்லை என்றால் எப்படி. ஆரப்பாளையம் முதல் உசிலம்பட்டி , மதுரை முதல் திண்டுக்கல் என பல பகுதிகளில் பயணித்த பின் எழுதியிருந்தால் கவிதைக்கு பக்கங்கள் பத்தாது. அந்த தொழிலாளர்களையும் மனிதர்களாக மதிப்போம். அவர்கள் சாதாரன விவசாய மக்களை , வேட்டி சட்டை அணியும் மண்ணின் மக்களை மதிக்கும்போது….

  8. பத்திரமாய் நம் பயணங்கள்.
    எத்தனை பேர் அறிவோம்
    அவரிதயம் நமக்கும் சேர்த்துத் துடிக்கும் தருணங்கள்.

    இது உண்மை. இதை சொன்ன கவிதை அருமை, மிக அருமை.

    அதென்னவோ அங்கும் இங்கும் தனியார், அரசு பெரூந்துகளுக்கு இருக்கும் வித்தியாசம்,ஒரேவகயகத்தான் இருக்கிறது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க