Saturday, August 20, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் நிலக்கரி ஊழல்: திமிங்கலங்களை விடுத்து பெருச்சாளிகள் மீது சி.பி.ஐ விசாரணை!

நிலக்கரி ஊழல்: திமிங்கலங்களை விடுத்து பெருச்சாளிகள் மீது சி.பி.ஐ விசாரணை!

-

செய்தி -93

manmohan-singh-coal-scandal-cartoonநிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கில் ஐந்து கம்பெனிகளின் மேல் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. நவ்பாரத் ஸ்டீல், விம்மி ஸ்டீல்ஸ்,  ஜே.எல்.டி அவட்மால், ஜேஸ் இன்ப்ரா, ஏ.எம். ஆர் ஸ்டீல் & அயர்ன், மற்றும் ‘பெயர் தெரியாத’ அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ள சி.பி.ஐ, தில்லி மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பத்து நகரங்களில் உள்ள சுமார் 30 அலுவலகங்களில் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிறுவனங்களில் சிலவற்றுக்கு 2005-ம் ஆண்டே நிலக்கரி வயல்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்தனை ஆண்டுகள் கழித்தும் இதுவரை இவர்கள் நிலக்கரி வெட்ட எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்றும், இதில் சில நிறுவனங்கள் தாம் எடுத்த உரிமத்தை வேறு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளன என்றும் செய்திகள் வருகின்றன.

நிலக்கரி ஒதுக்கீட்டில் நடந்த பகல் கொள்ளையை மத்திய கணக்குத் தணிகை அதிகாரியின் அறிக்கை வெளிச்சமிட்டுக் காட்டியதைத் தொடர்ந்து பாராளுமன்றமே கூச்சல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. எங்கே கூச்சலின் அளவு குறைந்து விட்டால் போட்ட தேட்டையில் தனக்கு இருக்கும் பங்கு அம்பலமாகிவிடுமோ என்கிற முன்னெச்சரிக்கையில் பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் சவுண்டை ஏற்றிப் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த கண்துடைப்பு விசாரணைகளின் மூலம் காட்டுத் தீயைப் பெட்ரோல் ஊற்றி அணைக்க முடியுமா என்று ஆளும் காங்கிரசு தரப்பு முயல்கிறது. 2ஜி ஊழலில் பெரியளவில் திருடிய கொள்ளையர்களை விட்டு விட்டு சின்ன அளவில் பிக்பாக்கெட் அடித்த உப்புமா கம்பெனிகளின் மேல் பாய்ந்து பிடுங்கியது போலவே இதிலும் டாடா, ஜின்டால், ரிலையன்ஸ், வேதாந்தா போன்ற பெரிய நிறுவனங்களைக் கைவைக்காமல் சிறிய நிறுவனங்களை விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒருபக்கம் சிதம்பரம் போன்ற அனுபவம் மிக்க பெருச்சாளிகளைக் களமிறக்கி ஊழலே நடக்கவில்லை என்று கூசாமல் புளுகி வரும் காங்கிரசு, இன்னொரு பக்கம் ஊழலில் ஈடுபட்டனர் என்று சிறிய நிறுவனங்களை நெருக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது. இதிலும் கூட ஆளும் வர்க்கத்தின் வரம்பு மிகத் தெளிவாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது எதிர்கட்சிகள் நிலக்கரி வயல்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை ரத்து செய்துவிட்டு மீண்டும் பொது ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றன. எதிர்கட்சிகளின் – குறிப்பாக பாரதிய ஜனதாவின் – இந்தக் கூப்பாடும் கூட 2003-ம் ஆண்டுக்கு முந்தைய ஒதுக்கீடுகளின் மேல் கவனம் குவிந்து விடக் கூடாது என்கிற நோக்கத்திலிருந்தே எழுகிறது. ஒருவேளை இந்தக் கூச்சல் எடுபட்டு பொது ஏல முறை வந்தால் என்னவாகும் என்பதை முதலாளிகள் தரப்பு தற்போது ஒரு மிரட்டலாக முன்வைக்கத் துவங்கியுள்ளன.

ஹெச்.டி.எப். சி வங்கியின் சேர்மேன் தீபக் பாரேக், “ஏற்கனவே செய்யப்பட்டுள்ள நிலக்கரி வயல் ஒதுக்கீடுகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டால் வங்கித் துறை மிகப் பெரியளவில் சீர்குலைந்து போகும்” என்று எச்சரித்துள்ளார். தனியார் மூலதனத்தை ஊக்குவிக்கவில்லை என்றால் 2013-ம் நிதியாண்டில் இந்திய தொழில் துறையின் வளர்ச்சி 4.3 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று மோர்கன் ஸ்டேன்லி அறிவித்துள்ளது.

இது தான் இந்த விசாரணைகளின் உச்சகட்ட வரம்பு. தனியார்மயத்தை ஊக்குவிப்பது தான் அரசின் ஆதாரக் கொள்கை என்று தீர்மானித்துக் கொண்டபின், இது போன்ற சிறிய கம்பெனிகளிடம் இருந்து கைபற்றப்படும் வயல்களை நாட்டுடமையாக்கப் போவதில்லை – தனியாருக்கு ஒதுக்கப்பட்ட வயல்கள் அனைத்தையும் பறித்து நாட்டுடமையாக்க வேண்டும் என்பதும் எதிர்கட்சிகளின் கோரிக்கையல்ல. எனவே,  இவ்வாறு சிறிய நிறுவன்ங்களிடமிருந்து கைப்பற்றப்படும் வயல்கள் மீண்டும் ஏற்கனவே பெரியளவில் தின்று கொழுத்துக் கிடக்கும் டாடா ஜிண்டால் மிட்டல் போன்ற பெருச்சாளிகளிடம் தான் சேரப் போகிறது.

ஆக, தடியும் நோகாமல் பாம்பும் சாகாமல் பார்த்துக் கொள்ளும் விதமாகவே திமிங்கலங்களை விடுத்து பெருச்சாளிகளைக் குறிவைத்துள்ளது மத்திய அரசு. அதற்குத் தான் இந்த விசாரணை நாடகம். இதிலும் கூட சுற்றி வளைத்து நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது என்று ஒப்புக் கொள்ளும் ஆளும் வர்க்கம், அதற்குத் துணை போன பிரதமர் ரொம்ப யோக்கியர் என்று இன்னமும் சொல்லி வருவது தான் ஆபாச நகைச்சுவையாக இருக்கிறது.

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க