கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி இடிந்தகரை பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டம் ஓராண்டு நிறைவெய்திய அதே தருணத்தில், கூடங்குளம் அணு மின்நிலையத்தின் முதல் அணு உலையில் எரிபொருட்களை நிரப்பி, அதனை இயக்கும் அனுமதியை அளித்திருக்கிறது, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம். இதனையடுத்து, கடந்த ஐந்து மாத காலமாக கூடங்குளம் அணுஉலையைச் சுற்றி 7 கி.மீ. தூரத்துக்குப் போட்டு வைத்திருக்கும் 144 தடையுத்தரவை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டித்துள்ள ஜெயா அரசு, அப்பகுதியில் மீண்டும் போலீசைக் கொண்டுவந்தும் குவித்திருக்கிறது. இந்த 144 தடையுத்தரவை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கில் வாய்தா வாங்கியே வழக்கை இழுத்தடித்து வருகிறது, தமிழக அரசு.
கூடங்குளம் அணுஉலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்பட்டிருப்பது குறித்து ஆய்வு நடத்தி உறுதிசெய்துகொண்ட பிறகுதான் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்திருப்பதாகக் கூறுகிறது, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம். இக்கூற்று எந்த அளவிற்கு உண்மையானது? கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகின்றன. சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக சமீபத்தில் அளித்திருக்கும் ஒரு உத்தரவு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் சமரசங்கள் செய்துகொள்ளப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது.
அணுஉலையிலிருந்து கடலுக்குள் கொட்டப்படும் கழிவுகளின் வெப்பநிலை 37 டிகிரி சென்டிகிரேடுக்குள்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்தி, கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தமது கழிவுகளை 45 டிகிரி சென்டிகிரேடு கொதிநிலையில் கடலில் கொட்டுவதற்குத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்திருந்தது. மேலும், கடல்சார் ஒழுங்குமுறைச் சட்டங்களிலிருந்தும் கூடங்குளம் அணுஉலைக்கு மைய அரசால் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விதிவிலக்குகள் கடல்சார் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் கூடங்குளம் அணுஉலை இயங்குவதைச் சட்டபூர்வமானதாக்கும் குறுக்கு வழியன்றி, வேறெதுவுமில்லை.
இவ்விரு விதிவிலக்குகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அளித்திருக்கும் விதிவிலக்கை நீக்கச் சொல்லி விட்டது, சென்னை உயர் நீதிமன்றம். எனினும், அணுக் கழிவுகளை எத்தனை டிகிரி சென்டிகிரேடில் வெளியேற்றும் வண்ணம் கூடங்குளம் அணுஉலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது? அதில் குறைபாடு இருப்பது தெரியவந்து, அதன் காரணமாகத்தான் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டதா? இந்த உத்தரவுக்குப் பின் அணுஉலை நிர்வாகம் 37 டிகிரி சென்டிகிரேடுக்குள்தான் அணுக்கழிவுகளை வெளியேற்றும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? அதனை யார் தொடர்ந்து கண்காணிப்பது? என்பது போன்ற கேள்விகளை விசாரணையின்பொழுது நீதிபதிகள் எழுப்பவில்லை. மாறாக, விதிவிலக்கை நீக்கிவிட்டு, அணுஉலை இயங்க மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கலாம் எனக் காதைக் குடைந்தபடி உத்தரவிட்டுள்ளனர். அணுக்கழிவு பிரச்சினையை, ஏதோ குப்பையை அகற்றும் பிரச்சினையைப் போல பார்க்கும் அலட்சியம்தான் நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிகிறது.
‘‘ஜப்பான் ஃபுகுஷிமா விபத்திற்குப் பிந்தைய இந்திய அணுஉலைகள் பாதுகாப்பு குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்திய பிறகே கூடங்குளம் அணுஉலை செயல்படுத்தப்படும்” என அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உயர் நீதிமன்றத்திடம் உறுதி அளித்திருந்தது. ஆனால், நீதிமன்றத்திடம் அளித்த அந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்தாமலேயே எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகப் பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுப்புறச் சூழல் அமைப்பு தற்பொழுது நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது.
அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கும் முன்பாக, அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களுக்குப் பேரிடர் மேலாண்மை பயிற்சி மிகவும் வெளிப்படையாக அளிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், யாருக்கும் எந்த விவரத்தையும் சொல்லாமல், பத்திரிகைகளையும் அழைக்காமல், நக்கநேரி கிராமத்தில் மிகவும் இரகசியமான, மோசடியான ஒரு பயிற்சியை நடத்தி முடித்திருக்கிறது. அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் அனுமதியை வழங்க, ஒப்புக்காக நடத்தப்பட்ட இப்பயிற்சியை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியமும் அங்கீகரித்திருக்கிறது.
எரிபொருள் நிரப்பப்படும் பகுதியான அணுஉலை அழுத்தக் கலனில் இரண்டு பற்றவைப்புகள் (welding) இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் 2008இல் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. எனினும், இந்த பற்றவைப்புகள் அணுக்கதிர் வீச்சைத் தாங்கும் திறன் குறித்த சோதனைகள் நடத்தப்படாமலேயே எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்படி பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து வெளியே கசிந்துவரும் ஒவ்வொரு உண்மையும், இந்த அனுமதி பல்வேறு விதிமுறைகளை மீறித்தான் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகின்றன.
‘‘ஃபுகுஷிமா விபத்திற்கு சுனாமியைவிட, மனிதத் தவறுதான் பிரதான காரணம். பாதுகாப்பு ஏற்பாடுளை நிர்வாகம் அலட்சியப்படுத்தியதுதான் காரணம்” என ஜப்பான் நாடாளுமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், இத்துணை பாதுகாப்பு குறைபாடுகளோடு கூடங்குளம் அணுஉலை இயங்க அனுமதிக்கப்படுகிறதென்றால், ஆளும் கும்பல் தெரிந்தே தமிழகத்தை அழிவுப் பாதைக்குள் தள்ளிவிட முயலுகிறது என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.
ஃபுகுஷிமா அணுஉலை விபத்தின் பின், மேற்குலக நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்திய நாடுகளே அணுமின் திட்டங்களை மூடுவது, குறைப்பது, கைவிடுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன. சூரியமின்சக்தி, காற்றாலை போன்ற சுற்றுப்புறச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று மின்திட்டங்களை அமல்படுத்த முனைகின்றன. தமிழகத்திலும் இப்படிபட்ட மாற்று மின்உற்பத்திக்கான வாய்ப்புகள் இருப்பதை மேலும் 1,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலைகளை அமைப்பது, தனுஷ்கோடி கடற்பரப்பில் காற்றாலைகள் அமைப்பது வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மாற்று மின்திட்டங்களுக்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், இந்திய ஆளும் கும்பலோ ஆபத்தும், பெருஞ்செலவும் நிறைந்த அணுஉலை தொகுப்புகளை வங்காள விரிகுடா கடற்கரையையொட்டி அமைக்கத் திட்டம் போடுகின்றன. இந்திய மக்களின் உயிர், நல்வாழ்வைவிட, இந்திய ஆளும் கும்பலுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு போட்டுக் கொண்டுள்ள அணுஉலை வியாபார, இராணுவ ஒப்பந்தங்கள்தான் பெரிதாகத் தெரிகிறது.
நமது நாட்டில் தற்பொழுது இயங்கிவரும் அணுஉலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அவ்வுலையை இயக்கி வரும் நிறுவனத்திற்குச் சட்டப்படி விதிக்க முடிந்த அபராதம் வெறும் 500 ரூபாய்தான் எனத் தலைமைக் கணக்கு அதிகாரியின் சமீபத்திய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த அணுசக்தி கடப்பாடு சட்டமோ இதைவிடக் கேவலமாக உருவாக்கப்பட்டுள்ளது. அணுஉலையை விற்கும் நிறுவனங்கள் இந்த 500 ரூபாய் அளவிற்குக்கூட அபராதமோ, நட்ட ஈடோ அளிக்கத் தேவையில்லை எனச் சலுகை அளிக்கிறது, அச்சட்டம்.
தற்பொழுது கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ள அணுஉலை எண் 1 மற்றும் 2இல் விபத்து ஏற்பட்டால், இந்த அணுஉலைகளை விற்ற ரசியா அதற்குப் பொறுப்பேற்று நட்ட ஈடு வழங்கத் தேவையில்லை என மன்மோகன் சிங் அரசு, நாடாளுமன்றத்திற்கே தெரியாமல் ரசியாவிற்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளது. இதே போன்ற விலக்கை கூடங்குளத்தில் நிறுவப்படவுள்ள அணு உலைகள் 3 மற்றும் 4க்கும் தர வேண்டும் என்கிறது, ரசியா. “அது சாத்தியமா?” என யோக்கியர் போல அதிகாரிகளிடம் ஆலோசனை கலக்கிறார் மன்மோகன்.
அணுஉலையை ஆதரிப்பதில் ஜெயா வேறு கட்சி, மன்மோகன் சிங் வேறு கட்சி அல்ல. இடிந்தகரை மக்களின் முதுகில் குத்தி ஜெயா இதனை நிரூபித்திருக்கிறார். எனினும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தலைமை, “ புதிய பேச்சுவார்த்தைத் தொடங்க விரும்புவதாகவும், கூடங்குளம் மின் திட்டத்தை மக்களுக்கு உகந்த, இயற்கையோடு இணைந்த திட்டமாக மாற்ற நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்” வேண்டுகோள் விடுத்து, தமிழக முதல்வர் ஜெயாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது (தினமணி 27.8.2012, பக்.9). வௌக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது தகுமா?
_______________________________________________
– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.
_____________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
- அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
பேயாட்டம் போடுகிறது அரசு. மீண்டும் வேதாளம் முருங்கையில் என்பது போல் நீதிமன்றம் செயல்படுகிறது. கொள்ளை,கொலை, கையூட்டு [இலஞ்சம்], ஊழல் எனப் பலநிலைகளில் ஊடுறுவிக் கொண்டு அரசு இருக்கிறது. வருமானத்திற்கு மேல் சொத்து என ஊழல் செய்யும் ஆட்சியாளர்கள் ஏகபோகமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் நிலையில் அடித்தட்டு மக்களை அடித்துக் கொல்லவும் விரட்டவும் காவல்துறை, கப்பற்படை என அனைத்தும் கொண்டு போர்க்குணத்துடன் அரசு செயல்படுகிறது.
அப்ரோ நிறுவனத்திற்கு நன்றிகள்…
Not much resistance against the functioning of K’Kulam reactor across the state.
Views of miniature groups are being overstressed by the imprudent Tamil media.