Friday, July 4, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅணு உலைகளை விட ஆபத்தானவை!

அணு உலைகளை விட ஆபத்தானவை!

-

ஜெயலலிதா-கருணாநிதி

ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள். இதற்கு, பன்னாட்டு  இந்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் இருந்து சோனியா-மன்மோகன் கும்பலுக்குத் துணை நின்று ஈழத் தமிழரின் முதுகில் குத்துவது வரை எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். கருணாநிதி  ஜெயலலிதாவின் பாசப் பிணைப்புக்கு மிகச் சமீபத்திய சான்றாக, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அவதூறு செய்து ஒடுக்குவதில் இருவரும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதைக் கூறலாம்.

இந்த வகையில் காங்கிரசு, பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் “தேசியக் கூட்டணி”யும் கருணாநிதி, ஜெயலலிதாவின் “திராவிடக் கூட்டணி”யும் ஒரே உத்தியைத்தான் பின்பற்றுகின்றன; இரண்டு கூட்டணிகளும் கூட்டுச் சேர்ந்து ஒரு மகாகூட்டணியும் அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன. கூடங்குளம் அணுஉலை பற்றிய அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக என்று மத்திய-மாநில அரசுகள் தனித்தனியே இரண்டு நிபுணர் குழுக்களை அமைத்தன. அவை கூடங்குளம் வளாகத்தில் விருந்துண்டு ஏப்பமும் அறிக்கையும் விட்டதோடு சரி. போராடிய மக்களை சந்திக்கவோ, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவோ இல்லை.

இந்த நிலையில், அணுஉலை எதிர்ப்புப் போராட்டத் தலைமைக்கு எதிராக “அமைப்புசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் அந்நியத் தொடர்பு, அந்நிய நிதி உதவி” என்ற அவதூறு கட்டவிழ்த்து விடப்பட்டது. மன்மோகன்  சோனியாவின் எடுபிடி நாராயணசாமி போதாதென்று சிதம்பரமும் மன்மோகனுமே இந்தப் பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கினர். சி.பி.ஐ., ஐ.பி. முதலிய மத்திய உளவுப் படைகளை ஏவி விசாரணை, சோதனை, வங்கிக் கணக்கு முடக்கம், ஜெர்மனி சுற்றுலாப் பயணி வெளியேற்றம் என்று அனைத்து ஊடக உதவியுடன் பல கூத்துக்களை நடத்தினர். கடைசியில் அவ்வாறான புகார்கள் எதற்கும் ஆதாரங்கள் இல்லை, “உறுதிப்படுத்தப்படவில்லை” என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்து விட்டனர். ஆதாரம் எதுவுமின்றி நாராயணசாமி, சிதம்பரம், மன்மோகன் ஆகியோர் புளுகியதற்கோ, அதற்காக உளவுத்துறைகள் கேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கோ எந்த விளக்கமும் தரப்படவில்லை.

ஆனால், அணுஉலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் அவதூறுப் பிரச்சாரம் என்ற தொடர் ஓட்டக் குச்சியை (பேட்டனை) ஜெயலலிதாவும், தமிழக உளவுத்துறையும் கையேற்றுக் கொண்டனர். அமைதிவழி  உண்ணாவிரதப் போராட்டங்கள் மட்டுமே நடத்தியவர்கள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போட்டு, பல ஆயிரம் போலீசாரை குவித்து, அதிரடிப்படையின் அணிவகுப்பு மிரட்டல் விடுத்து, குழந்தைகளுக்குப் பால் உள்ளிட்ட உணவுப் பொருள், மின்சாரம், குடிதண்ணீர் வழங்கீட்டைத் தடுத்து, ஏதோ பயங்கரவாதத் தடுப்புப் போல பாசிச அடக்குமுறையை ஏவிவிட்டனர். இதனால் ஏற்பட்ட எதிர்ப்பலைகளைத் திசை திருப்பிவிடுவதற்காக வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்துடன், போராட்டத் தலைமைக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு, நக்சலைட்டுகள் ஊடுருவல்  அதனால் தீவிரவாத  வன்முறை போராட்டங்களில் குதிப்பார்கள் என்று ஜெயாவின் உளவுத்துறையும் போலீசும் பீதியூட்டும் செயல்களில் இறங்கின.

இந்த அவதூறுக்கு ஆதாரமாக உளவுத்துறையே “முன்னாள் நக்சல்பாரிகள்” என்று சொல்லும் மூன்றுபேரைப்  பிடித்து, அவர்களிடம் வன்முறைக்கு வழிவகுக்கும் கடிதமும், வரைபடமும் சிக்கியதாகவும், போராட்டக்காரர்களிடையே நக்சல்பாரிகள் உள்ளதான “வீடியோ” ஆதாரங்களை ஆய்வு செய்வதாகவும் பலவாறு புளுகுகிறது. பிடிபட்டதாகக் கூறப்படும் எவரும் நக்சல்பாரி அமைப்பினர் அல்ல. போலி ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதும் பொய் வழக்குகள் புனைவதும் ஜெயலலிதாவின் உளவுத்துறைக்கும் போலீசுக்கும் கைவந்த கலை. கலைஞர் மற்றும் சன் குழுமங்களின் வானொளி அலைவரிசைகள் ஜெயாவின் இந்த அவதூறுப் பிரச்சாரத்தை விசுவாசமாக ஒலிஒளிபரப்புகின்றன.

அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைப் பிடித்து தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொல்வது; ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பழிபோடுவது;  சீரழிந்த, அமைப்பு சாரா நபர்களைப் பிடித்து அவர்களைக் காட்டி நக்சல்பாரிகளை இழிவுபடுத்துவது  இதெல்லாம் போலீசு, உளவுத் துறையின் கைவரிசை.  வெளிநாட்டவர், நக்சல்பாரிகள் என்பதாலயே நாட்டு மக்களின் நியாயமான எந்தப் போராட்டங்களையும்  ஆதரிக்கக் கூடாதா? மக்கள் மீதான பாசிச அடக்குமுறைகளை எதிர்க்கக்  கூடாதா?  மக்களை ஒடுக்க முயலும் தேசிய, திராவிடக் கூட்டணிகள் அணுஉலைகளை விடவும் ஆபத்தானவை.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: