Sunday, April 18, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் அடிமைத்தனம்!

உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் அடிமைத்தனம்!

-

நோவார்டிஸ்நோவார்டிஸ் நிறுவனத்திடம் இந்திய ஏழை ரத்தப்புற்று நோயாளிகளுக்காக கருணை காட்டி கொஞ்சம் விலையை குறைக்க முடியாதா என கடந்த புதனன்று கெஞ்சியது உச்சநீதிமன்றம். அந்த நிறுவனத்தின் தற்போதைய வழக்கறிஞரும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான கோபால் சுப்ரமணியம் தாக்கல் செய்த பதில் மனுவில் ஏழைகளை தங்களது நிறுவனம் கண்டறிந்து மானிய விலையில் மருந்து தருவதாகவும், அதனை 2018 வரை நீட்டித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் இந்த சுவிட்சர்லாந்து மருந்துக் கம்பெனிக்கு ஆஜரானால், சென்னை உயர்நீதி மன்றத்தில் இவர்களுக்காக முன்பு ஆஜரானவர் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அவ்வளவு ஏன் உச்சநீதிமன்றத்திலேயே இவர்கள் இந்திய காப்புரிமைச் சட்டத்தின் 3டி பிரிவை எதிர்த்து தொடுத்துள்ள வழக்கை முன்னர் விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரி இவர்களது விருந்தினர்தான். தற்போதைய சொலிசிட்டர் ஜெனரல் ரோகிந்த் நாரிமன் இதற்கு முன்னர் இவர்களது வழக்கறிஞர்தான்.

கிலிவெக் என்ற பெயரில் இவர்கள் தயாரிக்கும் இமாடினிப் மெசிலெட் என்ற அடிப்படை மருந்தை முன்னர் தயாரித்த ரான்பாக்சி, சிப்லா போன்ற நிறுவனங்கள் மாத்திரையை ரூ.90க்கு விற்றன. மாதமொன்றுக்கு அப்போது பத்தாயிரம் ரூபாய்க்குள்தான் செலவானது. ஆனால் நோவார்டிஸ் மேம்படுத்தப்பட்ட மருந்து என்ற மோசடியுடன் சந்தையில் நுழைந்து 2005-ல் தான் மட்டுமே இம்மருந்தை தயாரிக்க வேண்டுமென காப்புரிமை கோரியது. 2004 ஜனவரியில் மற்றவர்களை தயாரிக்க விடாமலிருக்க தடைகோரி சென்னையில் வழக்கு தொடர்ந்தபோது இவர்களுக்காக வாதாடி தீர்ப்பை பெற்றுத் தந்தவர் ப.சிதம்பரம்.

மேம்படுத்தப்பட்ட ஆய்வுக்காக 10% பணம் மட்டுமே கொடுத்ததாக மருந்துக்கான ஆய்வில் இருந்த அமெரிக்காவின் ஒரேகான் பல்கலையை சேர்ந்த பிரியன் டிரக்கர் குற்றம்சாட்டினார். 1994-ல் உலக வர்த்தக கழகத்தில் இணைந்த இந்தியா 1970-ல் தான் இயற்றிய காப்புரிமைச் சட்டங்களை 10 ஆண்டுகளுக்குள் ரத்துசெய்து விடுவதாக ஒத்துக்கொண்டு 2005-ல் புதிய காப்புரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. கிலிவெக் இல் இச்சட்டப்படி எந்த புதிய கண்டுபிடிப்பும் இல்லை என்பதால் பதிவுசெய்ய மறுத்தது சென்னை உயர்நீதிமன்றம். இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. நிறுவனமே பார்த்து ஏழைகள் யார் என்பதை தீர்மானித்து மானிய விலையில் மருந்து வழங்கினால் தங்களுக்கு போதும் என்கிறார்கள் நீதிபதிகள் அப்டாப் ஆலமும், ரஞ்சனா பிரகாஷ் தேசாயும். மாதமொன்றுக்கு 1.2 லட்சம் என்பது சற்று அதிகமில்லையா? என்று இவர்கள் கெஞ்சிய கெஞ்சலில் மனமிறங்கித்தான் நோவார்டிஸ் மேற்படி ஏழை பங்காளன் வேடம் போட்டது.

கணக்கில் உள்ள 41, 794 இரத்தப்புற்று நோயாளிகளில் 15,690 பேர்தான் தங்களிடம் மருந்து வாங்குகிறார்கள் என ஆதங்கப்படுகிறார் கோபால் சுப்ரமணியம். தொடர்ச்சியாக 80 நாட்கள் மருந்து எடுக்க வேண்டும் என்கிறது நிறுவனம். வயிற்றுப் புற்றுநோய்க்கும் இதுதான் மருந்தாம். தங்களது மானியம் வழங்கலில் யார் ஏழை எனக் கண்டறிவதே சிரமாமாக இருப்பதால் விலையை குறைப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை என்று கடைசியாக உறுதியாக சொல்லி விட்டார் கோபால் சுப்ரமணியம்.

இந்த கிலிவெக் மருந்துக் காப்பீடு இந்தியாவை மாத்திரம் பாதிக்கவில்லை. இங்கு அடிப்படை மருந்துகளின் விலை குறைவு என்பதால் 87 ஏழை நாடுகளுக்கு யுனிசெப் வழியாக மருந்துகளை ஏற்றுமதி செய்த சிறிய நிறுவனங்களால் இனிமேல் இமாடினிப் மெசிலெட் ஐ குறைந்த விலைக்கு தருவது சாத்தியமில்லை. தற்போது இந்தியாவில் 40 சதவீத மருந்து சந்தையை பன்னாட்டு கம்பெனிகள் விழுங்கும் நிலையில் இருக்கிறார்கள். நீதிபதிகள் நோவார்டிசிடம் கெஞ்சுவதைப் பார்க்கும்போது வெள்ளையரிடம் கெஞ்சும் ஆற்காடு நவாப் முகமதலி ஞாபகத்திற்கு வருகிறான்.

காலனிய அடிமைத்தனம் போய் கார்ப்பரேட் அடிமைத்தனம்!

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. சந்தையில் இருக்கும் எந்த மருந்துமே அதன் தயாரிப்பு விலையில் இரநூறு விழுக்காடு விலை வைத்துதான் விற்க்கபடுகிறது…இது தெரிந்தாலும் பொத்தி கொண்டு இருப்பர்கள் அனைவரும்

  2. ஒரு பக்கம் அணு உலை கார்பரேட்களுக்காக மக்களுக்கு புற்று நோயை உண்டு செய்யும் இந்திய அரசு மற்றும் உயர்/உச்சா நீதி மன்றங்கள், இன்னொரு பக்கம் வந்த புற்று நோய்க்கு மருந்து விற்கும் கார்பரேட்டுக்கு சேவகம் செய்கிறது… இதன் மூலம் தெரிய வரும் செய்தி, இந்திய அரசும் நிதி மன்றங்கள் எல்லாம் மக்களுக்கானது அல்ல… கார்பரேட்களின் ஏவல் சொறி நாய்கள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க