பரிசுத்த ஆவிகளும் பாவிகளின் ஆவிகளும்!

10
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!

பாவத்தின் சம்பளம் மரணம். மரணத்தைச் சம்பளமாகப் பெற்ற பாவிகளையே மேல்சாதிப் பாவிகள், கீழ்சாதிப் பாவிகள் என இரண்டு ரகமாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் திருச்சி நகரில்.

திருச்சி – வேர்ஹவுஸ் சுரங்கப்பாதை அருகேயுள்ள கிறித்துவ மயானத்தின் குறுக்கே 600 அடி நீளச் சுவர் ஒன்று சீன நெடுஞ்சுவர் போல நின்று கொண்டிருக்கிறது. சுவரின் தெற்கே ரோமன் கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் கல்லறை; வடக்கே உத்தரிய மாதா கோயில் மயானம் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கான கல்லறை.

அந்தச் சுவரை இடிக்கவொட்டாமல் அதற்கு முட்டுக் கொடுத்து நின்று கொண்டிருக்கிறது ஒரு சங்கம். அதன் பெயர் ரோமன் கத்தோலிக்க மேற்குல கிறித்துவ கல்லறைச் சங்கம்.

கல்லறைச் சங்கம் என்பதால் செத்துப் போனவர்களின் ஆவிகள்தான் கமிட்டி உறுப்பினர்களோ என்று எண்ண வேண்டாம். ரத்தமும் சதையுமாக (அப்பமும் ஒயினுமாக) உயிரோடிருக்கும் ‘பாவிகள்’தான் உறுப்பினர்கள். சரியாகச் சொன்னால் வெள்ளாளக் கிறிஸ்தவப் பாவிகள்; இன்னும் குறிப்பாகச் சொன்னால் ”தாழ்த்தப்பட்டோர் வீடுகளில் மட்டுமே இனி சாப்பிடுவேன்” என்று சபதம் செய்திருக்கும் மூப்பனார் அவர்களைத் தலைவராகக் கொண்ட த.மா.கா. எம்.பி. அடைக்கலராஜை உறுப்பினராகக் கொண்டிருக்கும் சங்கம் அது.

உயிரோடிருப்பவர்கள் தங்கள் சொந்த நன்மைக்காக சங்கம் வைத்து நடத்துவதே பெரும்பாடாக உள்ள இந்தக் காலத்தில், பிணங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு சங்கம் வைத்து நடத்துகிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் நிச்சயமாக ஒரு லட்சியவெறி இருக்க வேண்டும். அந்த வெறி சாதிவெறி; அந்த லட்சியம் தீண்டாமை. அதுவும் நகர்ப்புறத்தில் தனி மயானத்தைச் சுவர் எழுப்பி நிலைநிறுத்துவது என்றால் அது வரம்பு கடந்த சாதித்திமிர்.

சாதித்திமிர் அடையாளமான இந்தச் சுவரை இடித்துத் தள்ளுவோமென திருச்சி நகர புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், மக்கள் கலை இலக்கியக் கழகமும் – அறிவித்துள்ளன. எனினும், இந்தச் சுவர் ஏற்கெனவே இடித்துத் தள்ளப்பட்டு மீண்டும் ‘உயிர்த்தெழுந்த’ சுவர்தான்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தொடுக்கப்பட்ட சிவில், கிரிமினல் வழக்குகள் சாதி – மதம் – சொத்துடைமை – சட்டம் இவற்றுக்கிடையிலான உள் உறவுகள் குறித்த ஒரு புரிதலை நமக்கு அளிக்கின்றன.

**

”14.3.76 அன்று காலை சுமார் 7 மணியளவில் பாதிரியார் சைமன், பாதிரியார் ஜான் பீட்டர் ஆகியோர் தலைமையில் ராஜமாணிக்கம், சந்தியாகு, டேவிட், பால்ராஜ் மற்றும் 17 பேர் கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் கல்லறைக்கும், அரிசன கிறித்தவர்கள் கல்லறைக்கும் இடையே இருந்த மேற்குல கிறித்துவர்களுக்குச் சொந்தமான சுவரை இடிக்கும் நோக்கத்துடன் சட்ட விரோதமாகக் கூடினர்.”

”கையில் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்த சுமார் 200 முதல் 300 பேர் அடங்கிய அந்தக் கும்பல் சுவரை இடித்துத் தள்ளியது. பிறகு அந்தக் கும்பல் மேற்குல கிறித்தவர்கள் மயானத்திற்குள் அத்துமீறி நுழைந்தது. பாதிரியார் சைமனும், ஜான் பீட்டரும் சில நிமிடங்கள் உரையாற்றினர். பின்னர் அந்தக் கூட்டம் கலைந்து சென்றது.”

கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ”சுவர் இடிப்புப் போராட்டம்” பற்றி மேற்கண்டவாறு கூறுகிறது.

மேற்குல கிறித்தவர் சங்கம் குற்றவியல் நீதிமன்றதில் வைத்த வாதம் கீழ்வருமாறு:

”எங்களது மயானம் ஒரு தனியார் மயானம். கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே அங்கே புதைக்க முடியும். எமது சங்கத்தின் உறுப்பினர்கள் எல்லாம் உயர்சாதி இந்துக்களாக இருந்து பின்னர் கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள்.

தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து கிறித்தவ மதத்திற்கு மாறிவர்களுடைய கல்லறை அருகாமையில் உள்ளது. இரண்டுக்கும் இடையிலான சுவர் பன்னெடுங்காலமாக உள்ளது. இந்தச் சுவர் மேற்குல கிறித்தவர் சங்கத்துக்கு சொந்தமானது. எங்களுக்குச் சொந்தமான சுவரை அவர்கள் இடித்து அத்துமீறி நுழைந்தது கிரிமினல் குற்றமாகும்.”

இந்த வழக்கை விசாரித்த முதல் வகுப்பு நீதிமன்ற நடுவர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு: 148, 447, 427 ஆகியவற்றின் கீழ் ‘குற்றவாளி’களுக்குத் தலா ரூ. 50 அபராதமும், மூன்று வாரம் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் இந்தத் தீர்ப்புக்கு எதிராக செசன்சு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ”இடித்துத் தள்ளப்பட்ட சுவர் எங்களுக்குச் (தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு) சொந்தமானது. கிறித்தவ மக்களிடையேயான சமத்துவம் என்ற கருத்துக்கு எதிரானதாக இந்தக் குறுக்குச் சுவர் இருந்ததால் அதை இடித்துத் தள்ளினோம்” என்று வாதிட்டனர்.

மேற்குல கிறித்தவ மயானத்திற்கான நிலம் வாங்கப்பட்டதற்கான கிரயப் பத்திரத்தின் நகலையும் அவர்கள் (13.3.1879 தேதியிட்டது) தாக்கல் செய்தனர். அந்தப் பத்திரத்தில் மேற்படி காலி மனையின் வடக்கு எல்லை ”பரயன் கல்லறை சுவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை செசன்சு நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டது. சுவர் மேற்குலத்தினருக்குத்தான் சொந்தம் என்பதற்கோ, சுவரை அவர்கள் தான் மராமத்து செய்து பராமரித்து வந்தார்கள் என்பதற்கோ உரிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்.

ஆனால் இடிக்கப்பட்ட சுவர் மீண்டும் எழுப்பப்படாமல் இல்லை. மேற்குல கிறித்தவ மயானமும் புறம்போக்குதான் என்ற அடிப்படையில் மீண்டும் அங்கே சுவர் எதுவும் எழுப்பக் கூடாது என 1978-இல் மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் இடைக்காலத் தடை பெற்று மீண்டும் சுவரை எழுப்பி விட்டனர் மேல்சாதி வெறியர்கள்.

மேற்குல கிறித்தவக் கல்லறை நிலம் தனியார் நிலமா, அரசு புறம்போக்கா? மாவட்ட ஆட்சியர் அதனை அரசுப் புறம்போக்கு என்று கூறுவதால் அரசுக்கெதிராக மேற்குல கிறித்தவர்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.

இங்கேதான் அவர்களது நரித்தனம் வேலை செய்கிறது. அரசுக்கெதிராக வழக்கு தொடுத்து தோற்று விட்டால் நிலம் பறி போவது மட்டுமல்ல, சுவரும் இருக்காது, சுவரைக் காவல் காக்க கல்லறைச் சங்கமும் இருக்காது.

எனவே அரசுக்கெதிராக வழக்குத் தொடுப்பதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கெதிராக சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

”வழக்கிடைச் சொத்து (மேற்குலக் கல்லறை நிலம்) சாதி கிறித்தவர்களுக்குச் சொந்தமானது…. எதிர்வாதிகளோ அரிசன கிறித்தவர்களின் பிரதிநிதிகள். அவர்களுடைய மயானம் புறம்போக்கு ஆகும். இரண்டுக்குமிடையில் உள்ளே காம்பவுண்டு சுவர் உள்ளது. தேவையில்லாத சாதி உணர்வுகள் ஏற்பட்டு மேற்படி எல்லைக் கோட்டை இடித்தனர். வாதிகளின் (மேற்குலத்தினரின்) சொத்தில் அரிசன கிறித்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்தால் அமைதி குலையும். தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். எனவே அந்நியர்கள் (அரிசன கிறித்தவர்கள்) எமது நிலத்தை ஆக்கிரமிக்காமலிருக்க நிரந்தர உறுத்துக் கட்டளை (Permanent injunction) பிறப்பிக்க வேண்டும்” என மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்று விட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான வருவாய்த்துறை அதிகாரிகள், 1924-ம் ஆண்டு வருவாய்த்துறை ஆவணங்களின் படி இது அரசு புறம்போக்குதான் என்றும், ஆனால் இது மேற்குல சங்கத்தின் மேற்பார்வையில் இருந்து வருவதும், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மயானமாக உபயோகப்படுத்தப்பட்டு வருவதும் உண்மை என்று கூறியுள்ளனர். அது மட்டுமல்ல, இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கான விசாரணை நடந்தது என்றும், ஆனால் அது தொடர்பான கோப்புகளைக் காணவில்லை என்றும் அவர்கள் கைவிரித்து விட்டனர்.

புறம்போக்கு என நிரூபிக்க அரசு சாட்சிகள் உரிய ஆதாரம் ஏதும் தராததால் நிலம் மேற்குல கிறித்தவ சங்கத்திற்கே சொந்தம் என திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “அந்நியர்கள் யாரும் தங்கள் மயானத்திற்குள் நுழையக் கூடாது என்றுதான் மேற்குல கிறித்தவர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு கூறுவது தீண்டாமைக் குற்றம் ஆகாது. மேலும், பாரம்பரியமாக தாழ்த்தப்பட்டோர் யாரும் அங்கே பிணத்தைப் புதைப்பதில்லை; மேற்குல கிறித்தவ சங்கத்தில் அவர்கள் உறுப்பினராகவும் இல்லை. எனவே தங்கள் சங்க உறுப்பினர்கள் மட்டுமே மயானத்தைப் பயன்படுத்தலாமென மேற்குலக் கிறித்தவர்கள் கூறுவது தீண்டாமைக் குற்றம் ஆகாது; அது அவர்களுடைய மரபுரிமை ஆகும்” – என்றும் சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

இவ்வாறாக தீண்டாமைக்கெதிரான ஒரு போராட்டத்தை சட்டம் கேலிக்கூத்தாக்கி விட்டது.

தீண்டாமை பாராட்டுவது கிரிமினல் குற்றம்; அதே நேரத்தில் சொத்துரிமை அடிப்படை உரிமை. இதுதான் நம் அரசியல் சட்டம். ”தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே நுழையக் கூடாது” என்று எழுதி வைத்தால் அது தீண்டாமைக் குற்றம். ”அந்நியர்கள் அத்துமீறி பிரவேசிக்கக் கூடாது” என்று கூறுவது உரிமை. யார் அந்நியன் என்பதை சொத்துக்கு உரியவன்தான் முடிவு செய்ய வேண்டும். ”அந்நியர்கள்” தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க நேர்ந்தால் அதற்காக அதனை தீண்டாமைக் குற்றம் என்று சொல்லிவிட முடியாது. சொத்துரிமை சாதியைப் பாதுகாப்பது இப்படித்தான்.

கிறித்தவ மதக் கோட்பாடுகளின் படி சாதி என்பது கிடையாது. ஆனால் இந்த மயானப் பிரச்சினையில் ”அது தனியார் சொத்து; அதில் மதம் எப்படித் தலையிட முடியும்” என்கிறது ரோமன் கத்தோலிக்க மத நிறுவனம். அரசு நிலமாக இருந்தால் ”நடவடிக்கை எடு” என்று அரசைக் கோரப் போகிறோம். அங்கே மதத்துக்கு வேலையில்லை. ஆனால் இடம் தனியாருக்கு – கிறித்தவருக்கு – சொந்தமாக இருக்கும் போது பிஷப் அல்லவா நடவடிக்கை எடுக்க வேண்டும்? ஆனால் இடித்த சுவரை மீண்டும் கட்ட பணம் கொடுக்கிறார் பிஷப். பிஷப்புக்கு பைபிள் புனிதம்தான்; ஆனால் தனிச்சொத்து அதைவிடப் புனிதமாயிற்றே!

திருச்சி மயானப் பிரச்சினையில் மட்டுமல்ல, தீண்டாமைக்கெதிரான போராட்டம் ஒவ்வொன்றிலும் சொத்துரிமை குறுக்கிடுகிறது. கிராமப்புற கோயில் நுழைவுப் போராட்டங்களின் போது தீண்டாமையைச் சட்டப்படி நியாயப்படுத்த முடியாத ஆதிக்க சாதியினர் ”இது நாங்க பணம் போட்டு கட்டின கோயில். எங்களுக்கு விருப்பம் உள்ள ஆட்களைத்தான் உள்ளே விடுவோம். உங்களுக்கு தனிக்கோயில் கட்டிக்கிங்க” என்று சொத்துரிமையைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு புரட்சியின் மூலம் உடைமை உறவுகளில் மாற்றம் கொண்டு வராமல் சாதி – தீண்டாமையை ஒழிக்க முடியாது என்ற உண்மையைத்தான் இவை அனைத்தும் நிரூபிக்கின்றன.

புரட்சி செய்வது கம்யூனிஸ்டுகளின் வேலை; சாதி – தீண்டாமையை ஒழிப்பது எங்கள் வேலை – என்று புரட்சிக்கும் சாதி ஒழிப்புக்குமிடையில் கனமான சுவரொன்றை சில அறிஞர்களும், தலித் தலைவர்களும் எழுப்பியிருக்கிறார்கள். பல காரணங்களால் இது அவர்களுக்கு வசதியாக இருக்கலாம்.

ஆனால் இந்தச் சுவரை இடிக்காமல் கல்லறைக் காம்பவுண்டு சுவர்களை நிரந்தரமாக இடித்துத் தள்ளவியலாது.

______________________________________________________

புதிய கலாச்சாரம், மார்ச் 1998

______________________________________________________

10 மறுமொழிகள்

 1. It is shame on Christians. Indian Christians (especially Tamil Christians) are idiotic stupid and evil. They curse people for wearing bindis (which is nothing more than an ornament) and having hindu names (names like Alex, Titus, Linus etc are Greek-Pagan in origin). But they are happy to practice caste system which is integral part of hindu religion. Jesus won’t ask you why you wore bindi, and say go to hell. But for all these caste, status, money, frauds you commit, you have answer Jesus. Stupid people…

 2. A classic historical article written by a real genius . Hats off to the author.
  Well said : ” it is difficult to abolish caste when there is private property ”
  socialism only can abolish the caste. This article can be considered as an historical document . Its a classical stroke .

  And one more thing to share …
  Vinavu still need to improve the outlook of the website … some thing like “live tiles” technology . now it is better than the past. but still i am looking forward for a DYNAMIC AND AGGRESSIVE DESIGN” site.
  Regards
  GV

 3. தேவரே!! இவர்கள் தாம் செய்வது என்னதென்று அறியாதிருக்கிறாகள். இவர்களை மன்னியும்.

  ம்.ம்.ம். வேறென்னத்தைச் சொல்ல?

 4. எந்தச்சுவரை உடைத்தாலும் மணமாற்றம் இல்லையெனில் சரி செய்ய இயலாது.தமிழகம் முழுவதும் இந்த பாகுபாடு பல வடிவங்களில்.திருச்சியில் சுவர் வடிவம் ,அவ்வளவுதான்.
  அவன் என்ன செய்ய முடியும்.ஒரு சாதியில் பிறப்பது என்பது அவன் கையிலா இருக்கிறது.பிறப்பால் வந்தது சாதி என்பதை உணராமல் மனிதன் அடுத்தவனை தாழ்த்துகிறான்.மதம் மட்டுமே மாற்றம்.சாதிப்பிரச்சினை இந்துவாக இருந்தாலும் கிறித்துவனாக இருந்தாலும் ஒன்று தான்.அரசு இந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கும் சலுகைகள் கிறித்தவனுக்கு கிடையாது.சரி நான் இந்துவாக மாறிவிடுகிறேன், எனக்கு சலுகை கொடுங்கள் என்கிறான்.முடியாது என்கிறது சட்டம்.
  கருவறை முதல் கல்லறை வரை discrimination. He can not escape.சாதியை தானாக மாற்றிக் கொள்பவர்கள் சிலர்.
  சாதியை மறைத்து வாழ்பவர் பலர். வேற்று சாதிப்பெண்னை மணந்து மறைபவர் பலர்.
  சட்டத்தில் இடம் இருந்தால் அனைத்து தலித் கிறுத்துவனும் எண்றோ வேறு சாதிக்கு மாறியிருப்பார்கள். ஆனால் சபிக்கப்பட்டவர்கள்.கருவிலேயே சபிக்கப்பட்டவன். தலித் தலைவர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சினை நண்றாகவே தெரியும்.சட்டத்திருத்தம் செய்து தலித் கிறுத்துவனை (pseudo thalith) உண்மையான தலித்தாக மாற்றினால் அது முதல் step.அதற்குப்பிறகு கல்லரை பிரச்சினைக்கு ஒட்டு மொத்த சமுதாயமும் ஒண்றுபட்டு சரி செய்ய்யலாம்

  • Dear Jesudoss,

   As a Christian, I can understand your point. I hate caste. But if we allow government to institutionalize caste inside our religion, then it can’t be eradicated even after 1000 years. One more point. Caste is a Hindu concept. It has no room in Christian faith. I completely destroyed my caste identity like Mallu Christians. I am your brother. I don’t know your caste. But I am your brother in Jesus.

 5. இன்னும் அந்த சுவர் அங்கே உள்ளதா? சாதி இந்துமதத்தின் நோய். அது தன் அருகேயுள்ள கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களையும் பீடித்துள்ளது. சொத்துரிமை என்னும் நோய் உலகெங்கும் புற்றுநோயைப் போல் பரவியுள்ளது. ஒன்று மற்றொன்றை தாங்கிப்பிடித்துள்ளது. இதன் ஒரே மருந்து பொதுவுடைமையே ஆகும்.

 6. ஏனுங்க.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா… இதுக்குப் போயி கட்டுரை கிட்டுரை போட்டுக்கிட்டு… சீறிரங்கதுல கோவில் பக்கத்துல சின்னதா பிராமணாள் காபி என்று ஒரு ஓட்டல் ஒரு ஏழை நட்த்துறார்.. அத எதுத்து பல பேரு… வீரமணி உட்பட போராடி சாதிச்சுட்டாங்க.. கடைசியில அந்தக் கடய காலி பண்ணியாச்சு… அத பத்தி செய்தி போட்டு போராடுவிங்களா… அது விட்டுட்டு சுடுகாட்டுக்கு போராடிகிட்டு இருக்கிங்க.. அது பிரைவேட் இடங்க.. அதனால சுவர் போடறாங்க பாதுகாப்புக்கு.. அது தப்பா.. என்ன ஆளுங்க நீங்க….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க