எழுத்தாளர் கரிகாலன் பேசுகிறார்
ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டு வந்த மக்கள்
ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டு வந்த மக்கள்

விருத்தாசலம் பாலக்கரையில் 13-12-12 அன்று மாலை 5 மணிக்கு, தருமபுரி தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதி வெறித்தாக்குதலை கண்டித்தும், அந்த மக்களுக்கு உரிய நிவாரணமும், நீதியும் வழங்க கோரியும் மனித உரிமை பாது காப்பு மையம் – கடலூர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழுத்தாளர்கள் இமையம், கரிகாலன், வழக்கறிஞர்கள்  செந்தில்குமார், ஜானகிராமன், பு.மா.இ.மு அமைப்பாளர் குழந்தைவேலு, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தலைவர் வை.வெங்கடேசன்,தமிழக ஆதிதிராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கோ.பாக்கியராஜ் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்  வழக்கறிஞர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

“சாதிவெறியை தூண்டும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதிசங்கங்களை தடை செய்,வன்முறையை தூண்டும் காடுவெட்டிகுருவை கைது செய்”, எனமுழக்கமிட்டதை பொறுக்க முடியாத பா.ம.க.வினர் சிறிது சிறிதாக வெகு நேரம் முயற்சி செய்து ஒன்று திரண்டனர். கூட்டத்தை தொடர்ந்து நடத்த விடக்கூடாது என முயன்றனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருமளவில் கூட்டத்தை கேட்க திரண்டிருந்தனர்.

காவல்துறை அதிகாரி, “பிரச்சினை வரும் போல் உள்ளது நீங்கள் கூட்டத்தை சீக்கிரம் முடியுங்கள்,  ஆர்ப்பாட்டம் எனக்கூறி பொதுகூட்டம் போல் நடத்துகிறீர்கள், ஏதேனும் பிரச்சினை வந்தால் நான் என்ன செய்ய முடியும்.என்னிடம் ஸ்டென்த் இல்லை” என்றார். ஆகையால் கூட்டம் அரை மணி நேரம் முன்பாக இரவு 7-30 க்கு முடிந்தது.

எழுத்தாளர் கரிகாலன்,

எழுத்தாளர் கரிகாலன் பேசுகிறார்
எழுத்தாளர் கரிகாலன்

“வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்கு தூண்டா மணிவிளக்காய் விளங்கும் பெருமாட்டி நத்தம் கிராமம் தோழர் இளவரசன்,திவ்யா திருமணத்தை தொடர்ந்து நடந்த தாக்குதல் தீ வைப்பு,கொள்ளையடிப்பு என்பது மனித நாகரீகத்திற்கு விடப்பட்ட சவால். ஒருபெண் தன் கணவனை தேர்வு செய்ய பொருளாதார ரீதியில் தன்னை வைத்து காப்பாற்றுவானா? என்பதுதான் அளவு கோல். அந்த வகையில் இளவரசன் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர். நத்தத்தில் நடந்த தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தபட்டது. ஈழத்தில் ஒரு இனத்தை அழிப்பதற்கு நடந்த முள்ளி வாய்க்கால் படு கொலை போல், நத்தத்தில் தாழ்த்தபட்ட மக்கள் மீது நடத்தபட்டுள்ளது. ஈழத்தாக்குதலை கண்டித்து மருத்துவர் ராமதாஸும் திருமாவளவனும், ஒன்றாக பிரச்சாரம், போராட்டம் நடத்தினர். சாதி பெயரால் கட்சி நடத்துபவர்கள் அடிப்படைவாதிகளாகவும், பாசிஸ்டுகளாகவும் வருவார்கள் என்பது நாம் கற்று கொண்ட பாடம். அரசியலில் தனித்துவிடப்பட்ட ராமதாஸ், சாதி வெறியை தூண்டி தனது வாக்கு வங்கியை உயர்த்த நினைக்கிறார். 20% தாழ்த்தபட்ட மக்களுக்கு எதிராக பிற இடைநிலை ஆதிக்க சாதியினரை திருப்ப நினைப்பது ஆபத்தான போக்கு ஆகும். இதை அனைவரும் கண்டிக்க வேண்டும்.

திருவள்ளுவர் எதிரியை அழிக்கும் கூறான ஆயுதம் அவன் பொருளாதாரத்தை அழிப்பது என்கிறார். தாழ்த்தபட்ட மக்கள் ஆதிக்க சாதியினரிடம் மாடுமேய்த்தார்கள், காடுகழனிகளில் வேலை பார்த்தார்கள், எழவுக்கு சேதி சொன்னார்கள்,பிணம் விழும் போது பறை அடித்தார்கள், ஆங்கிலேயர்கள் வருகைக்கு பிறகு அம்பேத்கர்,பெரியார் பிரச்சாரத்தால், போராட்டத்தால் இடஒதுக்கீட்டில் இன்று படித்து உயர் பதவிக்கு சென்றதும், உழைத்து சம்பாதித்து சமமாக வாழ நினைத்தும் இளைஞர்கள் சாதி இழிவை கடக்க முயலுகின்றனர். இதை சகிக்க முடியாத காரணத்தால் நத்தத்தில் அவர்கள் சொத்துக்கள் முற்றாக அழிக்கப்பட்டது. பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

சுனாமியால் அடைந்த சோகம் போல் நத்தம் மக்கள் மீண்டும் பழைய நிலையை அடைய பல வருடங்களாகும்.ஏனைய தாழத்தப்பட்ட மக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கைதான் நத்தம் தாக்குதல். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாதிவெறித்தாக்குதலில் தாழத்தப் பட்ட மக்கள் மட்டுமே உயிரிழந்தனர்.ஆனால் இன்று திருப்பி நடக்கும் தாக்குதலில் ஆதிக்க சாதியினரும் உயிரிழக்கின்றனர்.ராமதாசும், குருவும் தருமபுரி போல் பிற இடங்களில் நடத்தலாம் என நினைத்தால் அது பொய்த்து விடும். தாழ்த்தபட்ட மக்கள் எதிர் கொள்வார்கள்.

சாதியின் பெயரால் இரு பாட்டாளிகளுக்குள் மோதலை ஏற்படுத்தி வாக்கு வங்கியை உயர்த்தலாம் என்ற ராமதாசின் கணக்கு பலிக்காது.வன்னிய இளைஞர்களே பிற்போக்கு சாதி இழிவை தூக்கி பிடிக்காதீர்கள் சாதி வெறிக்கு பலியாகாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். டாக்டர் ராமதாஸ் காதல் நாடகம் என்கிறார்,  பழைய பண்பாட்டை காப்பற்ற பெற்றோர்கள் முயலுகிறார்கள் என்கிறார். காதல் அன்பு நிறைந்தது. இளைஞர்கள் சாதி மதத்தை மறந்து புதிய பண்பாட்டை உருவாக்குகிறார்கள்.

எனவே சாதி மறுப்பு திருமுணத்தை ஆதரிக்க நானும் நண்பர் இமையமும் பாராட்டு விழா நடத்தி காதலை ஊக்கபடுத்த நினைக்கிறோம். ஆதலினால் காதல் செய்வீர். காதல் நாடகம் அல்ல. பல்வேறு சாதி மறுப்பு திருமணத் தம்பதிகள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை பல்வேறு பத்திரிக்கை வாயிலாகவும் நடைமுறையிலும் பார்க்கிறோம்.தர்மபுரி சம்பவத்தை பார்த்து இளைஞர்கள் அச்சப்பட வேண்டாம்.உங்களோடு நாங்கள் இருக்கிறோம்.”

என்று பேசினார்.

எழுத்தாளர் இமையம்,

எழுத்தாளர் இமையம் பேசுகிறார்.
எழுத்தாளர் இமையம்

“தமிழகத்தில் தொடரும் சாதிப் படுகொலைகளில் தருமபுரியும் ஒன்று. இதோடு முடியப் போறதுமில்லே, இது முதல் முறையுமில்ல, அதற்கான சாதிய விஷ விதைகள் தூவப்பட்டு இருக்கிறது. அதனால் கலவரங்கள் தொடர வாய்புகள் இருக்கு. நடக்கின்ற சாதி கலவரங்களால் மனிதப் பலி, பொருளாதார இழப்புகள் ஆகியவற்றை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறோம்.தொடர்ந்து இந்த சாதிய கலவரங்களை தூண்டியவர்கள் படிக்காதவர்களா? மாடு மேய்ப்பவர்களா? முட்டாள்களா? இல்லை. மருத்துவர்கள், வக்கீல்கள், அறிஞர்கள், மெத்த படித்தவர்கள் தான் சாதி கலவரத்தை தூண்டியிருக்கிறார்கள்.நாம் நாகரீக சமுகத்தில் தான் வாழ்கிறோமா? படித்த சமூகத்தில் இருக்கிறோமா? என்பதில் எனக்கு உண்மையில் நம்பிக்கை இல்லை.

2, 3-ம் நூற்றாண்டில் கூட காதலை போற்றிய சமூகமாக இருந்திருக்கிறது. அங்கு வன்முறை இல்லை,அனைவரும் காதலிக்க வேண்டும் என இலக்கியங்கள் கூறுகின்றன. தற்போதைய நிகழ்வு  சமூகத்தை பின்னுக்கு இழுப்பவையாக உள்ளன. சாதிய வன்முறையை தூண்டுபவர்கள்தான் நம்மை ஆளநினைக்கிறார்கள். சாதிக் கலவரத்தை, மதக்கலவரத்தை நடத்தி ஆட்சியை பிடித்தவர்கள் தான் எம்.பி, எம்.எல்.ஏ ஆகி சமூக நல்லிணக்கம்,தேச ஒற்றுமை என்று நாட்டு நலன் பேசுகிறார்கள். இந்த முரண்பாடு உலகத்தில் எங்கும் இல்லை. பழங்காலத்தில் உள்ளவர்களை படிக்காதவன் காட்டுமிராண்டி, அறிவில்லாதவன், நாகரீகமில்லாதவன்னு பேசுறோம் ஆனா அப்பதான் சாதி கிடையாது கலவரம் கிடையாது.யார் யாரவேணுமின்னாலும் காதலிக்கலாம்,ஆம்பள பொம்பள விரும்பலாம் பொம்பள ஆம்பளய விரும்பலாம். இது இயற்கை,மனுசன் மாட்டையா விரும்ப முடியும். மனிதன் தோன்றி பசிக்கிதுன்னு என்னைக்கு சொன்னானோ அன்றைக்கே காதல் வந்திருச்சு.

40 தலைவர்கள் சேர்ந்து தீர்மானம் போடுறாங்க கலப்பு திருமணம்-காதல் நாடகத் திருமணம் படுதோல்வி ஆகிறது. ஆகவே  தடுத்து நிறுத்த வேண்டும் என்று. காதலிச்சவன்தான் பொண்டாட்டியை விட்டுட்றானா?.ஜோசியம் பார்த்து மந்திரம் சொல்லி 100 பவுன் நகை போட்டு நடந்த திருமணத்தில்  பொண்டாட்டி ஓடிபோறதில்லையா?,இல்லை அவன்தான் கைவிட்றதில்லையா?இது எல்லா இடத்திலும் நடக்கிறது. அந்த இரு நபர்கள் மன ஒற்றுமை பொருத்தது. தனி நபர்கள் சம்பந்த பட்டது. கட்சி சம்பந்தப்பட்டது இல்லை. இதற்கு தீர்மானம் போட முடியாது.

மெட்ராஸ்ல 40 பேர் உக்காந்துகிட்டு  தமிழ்நாட்டுல யாரும் இனிமே காதலிக்க கூடாதுன்னு சொல்றது, வினோதமாக இருக்கு.யாரும் சாப்பிடாதன்னு சொல்ற மாதிரி இருக்கு. எங்கள் இனத்து பெண்களை பிற இனத்து ஆண்கள்  காதலிக்க கூடாது, திருமணம் கூடாது, மீறினா வெட்டுங்கன்னு சொல்றீங்க, அது போல் உங்க இனத்து ஆண்கள் பிற பெண்களை காதலித்தால், உடலுறவு கொண்டால் அவர்களை என்னசெய்யப் போகிறீர்கள் அவர்கள் ஆண் குறியை வெட்டுவீர்களா?.

சமூகத்தில் வாழவே அச்சமா இருக்கு. தருமபுரியை தொடர்ந்து பாச்சாரப்பாளையம் வன்முறை நடக்குது,  நாளைக்குவேற எங்காவது நடக்கும். நாம எம்ஏ.,பி.காம்.எல்லாம் படிச்சவன்னு சொல்றோம், என்னதான் படிச்சோம். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் சமமாக நடத்துவதற்கு சாதி மதம் எப்படி தடையாக இருக்க முடியும், தருமபுரி சம்பவம் உணர்ச்சி வேகத்தில் நடந்த காரியம் அல்ல. இளவரசன் திவ்யா போய் 40 நாள் கழித்து, அறிவாளிகள் ஒன்று கூடி நன்கு திட்டமிடப்பட்டு நடத்தபட்டுள்ளது.

ஒரு இனத்தை அழிக்க மொழியையும், பிறகு அவன் ஆதாரத்தையும்  அழித்தால் போதும். இங்கு பொருளாதாரத்தை அழித்துள்ளார்கள். யாரையும் கொல்லல, ரத்த காயம் இல்லை வெட்டு இல்லை. அறிவுப்பூர்வமாக செய்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கிற சிறு பாதுகாப்பு வன்கொடுமை தடுப்புச்சட்டம், அதையும் திருத்தணுமுண்ணு பேசறாங்க. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் எத்தனை ஆயிரம் பேர்மேல வழக்கு பதியபட்டிருக்கு எத்தனை ஆயிரம் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்காங்கன்னு தெரியல, திருத்தம் வேணும்னு சொல்றாங்க. ஆனால் சிறு பாதுகாப்பும் இருக்க கூடாது என்பது சாதித் தலைவர்கள் நோக்கமாக இருக்குது.

ஆனா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு தருமபுரி மட்டுமல்ல எங்கும் நடக்கலாம், நீங்களும் நானும் ஒன்னா பஸ்சுல போக முடியுமா தெரியல,கடந்த சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியிலிருந்து மீள்வதற்கான ஒரு தந்திரம். இத யாரும் நம்பல  அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு திட்டம் போட்ட மாதிரி தமிழகம் முழுவதும்  நடக்கல. எம்.ஜி.ஆர். காலத்தில் நடந்த கலவரத்தை ஞாபகம் வைத்து அது போன்று நடந்தால் இந்த பலத்தை காட்டி வருகிற நாடாளுமன்ற , சட்டமன்ற தேர்தல்ல அ.தி.மு.க, தி.மு.கவிடம் சீட்டு பேரம் பேசுவதற்காக நடத்தபட்டது இந்த வன்முறை. இப்படிதான் சமூக நல்லிணக்கத்தை குலைத்து எம்.எல்.ஏ எம்.பி.ஆக வேண்டுமா?

மக்கள் பிரச்சினைகள் இருக்கு. மின்சார பிரச்சினை, மழை பெய்யல தண்ணீர் பற்றாக்குறை, இங்குள்ள விளை நிலங்களை பன்னாட்டு கம்பெனி 1000,2000ஏக்கர்னு வளைச்சு போட்டிருக்கான் , அதற்கு போராடலாம், ஐ.டி.கம்பெனியில் அடிமையாக வேலை பார்க்குறான் உரிமைகளுக்கு போராடுங்க,அப்ப ஜனங்க உங்கள ஆதரிப்பாங்க,இதை எதையும் பண்ணாம மனுசன் எளிதில் உணர்ச்சி வசப்படுவானோ எதுல வன்முறையை தூண்டலாமோ அதுல வன்முறைய தூண்டுவது என்கின்ற ஒரு அற்பமான சிந்தனை. இது யாருக்கு இருக்கலாம் ஒன்னுமே தெரியாத படிக்காத முட்டாபயலுக்கு இருக்கலாம். நாம பெரிய தலைவர்களா இருக்கோம், அரசியல் கட்சி வைத்து நடத்துகிறோம் நிறைய எம்.எல்.ஏ.எம்.பி.யை உருவாக்கி இருக்குாம் .மந்திரிகளை உருவாக்க ஆசை படுகிறோம். அதற்கு குறைந்த பட்சம் ஒரு நாகரீகம் வேண்டாமா?

.தமிழ்நாட்டுல சில பேரு உயிரோட இருக்கும் போதே சாவடிப்பாங்க.சில பேரு செத்தும் சாவடிப்பாங்க.தென்மாவட்டங்கள்ல முத்துராமலிங்கத்தேவர் செத்து எத்தனையோ வருசம் ஆச்சு. ஒவ்வொரு வருசமும் அவர் செத்த அன்னைக்கு 4பேர்5பேர் செத்துகிட்டே இருக்கான். இது ரொம்ப கொடுமையாக இருக்கு இது இந்தியாவிலே, உலகத்திலே எங்கும் நடக்காத விசயம்.இவன் எல்லாம் எவ்வளவு பெரிய நச்சு பாம்பு, ஒருத்தம் பேர்லயே கொல நடந்திட்டிருக்கு. இந்த சமூகத்தில் வாழவே அச்சமாக இருக்கிறது.

சங்க இலக்கியத்தில் மகளை காணோம் என்று தேடும் பெற்றோர்களிடம் ஊர்காரர் இவ்வாறு கூறுகிறார் யாழ்லிருந்து மீட்கபட்ட இசை யாழுக்கு சொந்தமில்லை,மண்ணில் விழுந்த மழை நீர் மழைக்கு சொந்தமில்லை. எந்த பொருள் எதோடு சேர வேண்டுமோ அதோடு சேர்ந்து விட்டது. உன்மகள் உரியவனிடம் சேர்ந்து விட்டாள் நீ ஏன் உரிமை கொண்டாடுகிறாய் எனச் சங்க காலத்தில் சொல்லப்பட்டது. அது பின்தங்கிய சமூகம் என சொல்லுகிறோம். நாம படிச்சோமுன்னு சொல்றது முற்றிலும் பொய்யானது. அறிவுக்கு ஒவ்வாத பழமைகளை புறந்தள்ளி படிக்க வேண்டும்.சாதி தலைவர்களை பற்றி பாடம் வைத்திருக்கிறோம் சாதித் தலைவர்கள் பற்றி உணர்வு தூண்டப்படுகிறது.இந்த சமூகத்தை மேன்மையுறச் செய்யும் விசயங்களை விட்டு செல்வதில்லை.மிகவும்  அறிவுக்கு ஒவ்வாத விசயங்களை விட்டு செல்கிறோம்.

வயது வந்த ஆண், பெண் விரும்பும் ஆணை,பெண்ணை திருமணம் செய்ய,  மறுமணம் செய்ய  உரிமை உண்டு. கல்வி கற்க, வாழ அரசியல் அமைப்பு உரிமை வழங்கியிருக்கிறது. இதற்கு சாதி சங்கங்கள் சாதியத் தலைவர்கள் பேச்சு தடையாக இருக்கிறது. இது நாகரீக சமூகம்தானா?.சாதி உணர்வை புறந்தள்ளி,சமத்துவத்தை நமது குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும்”,

எனக் கூறி முடித்தார்.

பாக்கியராஜ், மாநிலத்தலைவர், தமிழக ஆதிதிராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம்,

“கையளவில் உலகம், விண்வெளியில் சாகசம் என  21-ம் நூற்றாண்டில் மனித நாகரீகத்திற்கு முற்றிலும் ஒவ்வாத சாதிய வன்கொடுமை தாக்குதல் தருமபுரியில் நடந்தேறியுள்ளது. சமூகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லாமல் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க காதல் நாடகத் திருமணத்தை கையிலெடுத்துள்ளீர்கள். விஷ விதையை தூவி, ஜாதித் தீயை வளர்க்கும் இந்த பாசிச போக்கு மிக அபாயமானது. தருமபுரி சம்பவத்தை கண்டித்து வேறு எங்கும் இது போல் நடக்க அனுமதிக்க மாட்டோம் என கூறுங்கள் உங்கள்பின் அனைத்து சமூகமும் நிற்கும். ஒடுக்கபட்டவர்களை புறந்தள்ளி யாரும் ஆட்சியை பிடித்த்தாக வரலாறு இல்லை. தாழ்த்தப்பட்டவர்கள் வாக்களித்ததால்தான் நீங்கள் மத்திய அமைச்சராக முடிந்தது. படிக்காத பாமரர்களை சாதித் தீக்கு உட்படுத்துகிறீர்களே, இது சரியா?.16 பதார்த்தங்களை வைத்துவிட்டு நடுவில் ஏதோ வைத்து சாப்பிடுங்கள் என்பார்களே அது போல் உங்கள்  செயல் உள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய்யாக தண்டிக்கப் பட்டார்கள் என ஒரு செய்தியை சொல்லுங்கள் பார்ப்போம். சென்னையில் அனைத்து சாதி சங்கங்களை கூட்டி வன்கொடுமை சட்டத்திற்கு திருத்தம் வேண்டும் என பேசுகிறீர்கள். இது சரியா?.கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்றத்தில் வன்கொடுமை சட்டத்தில் தண்டிக்கபட்டவர்கள் மிகச் சொற்பமானவர்கள். அதுவும் சமூக நிர்பந்தத்தால் தண்டிக்கபட்டவர்களே.வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கோரும் நீங்கள் எங்கள் வாக்கு தேவையில்லை எனச் சொல்லுங்கள்.ஒட்டு மொத்த தலித் மக்கள் மீது சாதி என்கிற விஷ விதையை விதைக்கிறீர்கள்.பயந்தவர்கள் என் மீது படுத்து கொள்ளுங்கள் எனக்கூறுவது போல் அனைத்து சாதிக் கூட்டத்தை ஒருங்கிணைக்கிறீர்கள்.

தருமபுரி தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என காவல் துறை ஒத்துக் கொள்கிறது.இந்த ஆர்ப்பாட்டம் ஒரு சமூகத்திற்கானது அல்ல. தலித் மக்களுக்கு யார் பாதுகாப்பு தருவார்களோ அவர்கள் பின் செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்.”

என்றார்

வழக்கறிஞர் தோழர்  ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்

“தருமபுரி தாக்குதலை கண்டித்து இங்குமட்டும் பேசவில்லை. சென்னையில், விழுப்புரத்தில் தருமபுரியில் என பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.சமச்சீர் கல்வி, மின்வெட்டு, கூடங்குளம்,முல்லைப்பெரியாறு,ஊழல், காவல்துறை அத்துமீறல், என அனைத்திற்கும் போராடுவதுபோல் தருமபுரி நத்தம் காலனி ஆதிக்க சாதி வெறித் தாக்குதலை கண்டித்து பேசுகிறோம். தருமபுரி தாக்குதலின் நோக்கம் வெற்றியடையக் கூடாது என்பதற்காகதான் இந்த கூட்டம். பிரச்சினை வரும் என்னிடம் ஸ்டென்த் இல்லை ஆர்பாட்டம் எனக்கூறி பொதுக் கூட்டமாக நடத்துகீறிர்கள், விரைவாக முடியுங்கள் என காவல்துறை வலியுறுத்துகிறது. தருமபுரியில் உங்கள் கடமையை சரியாக செய்திருந்தால் இந்த ஆர்பாட்டத்திற்கு அவசியமே இருக்காது.

நவம்பர் 7-ம்தேதி லட்சாதிபதி, 8-ம் தேதி காலை மாற்று உடை இன்றி உணவுக்கு தட்டேந்தி வரிசையில் தான் வாழ்ந்த ஊரில் அகதியாக வாழும் நத்தம் காலனி மக்களின் அவலத்திற்கு யார் காரணம். காதலை மையமாக வைத்து வன்னியர்களை பாது காக்க வேண்டிய அவசியம் இல்லை.எவ்வளவோ பாதிப்புகள் இருக்கிறது. ராமதாசின் அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்ட இந்த கொடுரத்தாக்குதலுக்கு வன்னியர்களே நீங்கள் சம்மதிக்கீறிர்களா?. ஒரே பைக்கில் பயணித்த இளைஞர்கள், ஒரே தொகுப்பு வீட்டில் அருகருகே அமர்ந்து சாப்பிட்ட இளைஞர்கள், இன்று பைக்கை அடித்து நொறுக்கி தீ வைப்பதும்,வீடுகளை சூறையாடி பெட்ரோல் பாம் வீசுவதும் எப்படி நடந்தது.

ஜீன்ஸ் பேண்டும், கூலிங்கிளாசும் போட்டால் வன்னிய பெண்கள் மயங்குகிறார்கள் என சொந்த சாதிப் பெண்களை சீப்பாக கேவல படுத்துகிறாரே ராமதாஸ், நீங்கள் அதை ஏன் தட்டிக் கேட்கவில்லை. இரண்டரை கோடி வன்னியர்கள் காடு வெட்டி குரு பின்னால் இருக்கிறார்கள், யாரும் குருவை ஒன்றும் செய்யமுடியாது என ராமதாஸ் பேசுகிறார். தேசியப் பாது காப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த போது எங்கே போனார்கள். தி.மு.க.விடம் சரணடைந்து சட்டமன்றத்திற்கு செல்ல மாட்டேன் என்ற சபதத்தை துறந்து கருணாநிதியை சந்தித்து குருவை விடுவித்தீர்கள். தருமபுரி தாக்குதலுக்கு சி.பி.ஐ.விசாரணை வேண்டும் என்ற வழக்குடன், கலவரத்திற்கான முழு காரணத்தையும் விசாரிக்க நீதிபதி விசாரணைக்கு உத்திரவிட நாங்கள் போட்ட வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது.

தலித் மக்களின் இரண்டு தலைமுறை உழைப்பை சூறையாடி இருக்கிறார்கள். சாதி ஏற்கனவே இருக்கிறது. அதுபிறப்பின் இழிவு. எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடிய சாதி உணர்ச்சியை தூண்டி சாதிக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் நரேந்திர மோடியாக ஆட்சியை பிடிக்க ராமதாஸ் முயற்சிக்கிறார்.நாம் அனுமதிக்க கூடாது. வன்கொடுமை சட்டத்தினை தாழ்த்தப்பட்ட மக்களா இயற்றினார்கள். அனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தில் இயற்றய சட்டம். அரசியலமைப்பு சட்டத்தில் தீண்டாமை மட்டுமே ஒரு குற்றமாக சரத்து 17 -ல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன சொல்ல போகிறார் ராமதாஸ். இரண்டு சதவீதம் தான் தண்டிக்க படுகிறது எனவே வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, திருத்தம் வேண்டும் என அனைத்து ஆதிக்க சாதிகளையும் ஒருங்கிணைக்கிறார்.

பதிவு செய்யப்படாத வன்கொடுமை குற்றங்களை ஆயிரக்கணக்கில் நாங்கள் காட்டுகிறாம். தனிக்குவளை இருக்கு, தனிச்சுடுகாடு இருக்கு  சமவழிபாடு இல்லை,ஊர்த் தெருவில் தலித்துகளுக்கு வீடு கொடுப்பார்கள?பஞ்சாயத்து தலைவராக தலித் சமமாக உட்கார முடியுமா ? ஆதாரங்களை காட்ட முடியும். ராமதாசின் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தலித்துகளை எதிராக காட்டி சாதி இந்துக்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறார் அதன் மூலம் வன்னியர் வாக்கு கிடைக்கும் என கருதுகிறார். இதை நாம் அனுமதிக்கலாமா?. காதல் ஜோடிக்காக அந்த ஊரையே கொளுத்தலாம் என்றால் இந்த உரிமையை அனைவரும் கடைபிடிக்கலாமா? அனைத்து சாதியினர் மீது அமல்படுத்தலாமா?.

ஒரே பள்ளில், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மாணவர்கள் திடீரென்று சாதி பகைமையால் தூண்டப்பட்டு பிளவை, மோதலை ஏற்படுத்துவது ஆபத்தானது. ராமதாசின் இந்த திட்டத்தை நாம் அனுமதிக்க கூடாது, முறியடிக்க வேண்டும்.

என்றார்.

ஆர்ப்பாட்டத்தின் உரைகளைக் கேட்ட பா.ம.க சாதிவெறியர்கள் எப்படியாவது கலவரம் செய்து நிறுத்த வேண்டும் என முயன்றாலும் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் வீச்சாக ஒலிவாங்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பகுதி முழுவதும் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. வன்னிய மக்களில் பெரும்பான்மையினர் தரும்புரி கொடுமையின் அநீதியை புரிந்து கொண்டு ஆதரவளித்தனர். இதனாலேயே மனித உரிமை பாதுகாப்பு மையத்தை தனிமைப்படுத்த நினைத்த பா.ம.க சாதி வெறியர்கள் தோற்றுப் போனார்கள்.

பா.ம.கவின் ‘கோட்டை’ என கருதப்பட்ட விருத்தாசலத்திலேயே நிலைமை இதுதான் எனும் போது ராமதாசின் வயிற்றெரிச்சல் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. தொடர்ந்து ராமதாசுக்கு பேதி போவது உறுதி.

____________________________________________________________________

– தகவல்: மனித உரிமைப் பாதூகாப்பு மையம், விருத்தாசலம்.

____________________________________________________________________

34 மறுமொழிகள்

 1. நீங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என பாமக பொறுப்பாளர்களுக்கு மருத்துவர் இராமதாசு அவர்கள் கட்டளையிட்டுள்ளார். அது தெரியாது அறியாமையில் சிலபேர் உணர்ச்சி வசப்பட்டு எதிர்த்திருக்கலாம். இனிமேல் இப்படி தொந்தரவுகள் உங்களுக்கு வராது என்று நினைக்கிறேன்.

  “தருமபுரி தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதி வெறித்தாக்குதலை கண்டித்து” என்றெல்லாம் சுற்றி வளைக்காமல், நேரடியாக “தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறிக்கு (வன்னிய சாதிவெறியர்களுக்கு) எதிராக” என்றே தலைப்பிட்டு நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • ராமத்தாசு நடத்தும் வன்னிய சாதி வெறி கூட்டத்துக்கும் எந்த தடையும் போடாதீங்கன்னு காவல் துறைக்கு சொல்லியிருப்பாங்க போல ஜெயலலிதா.ஏன்னா வற்ற தேர்தல்ல கருணாநிதியும் சீட்டு குடுக்க மாட்டாப்ல நானும் சீட்டு குடுக்க மாட்டேன். ஏன்னா இவிங்களோட கூட்டணி வச்சா தலித் ஓட்டு கிடைக்காது.அப்புறம் ராமத்தாசுக் கூட சேர்ந்து நானும் கள்ளு விக்கத்தான் போகனும். அதனால கன்டுக்காம விட்ருங்க.சாதி வெறியத் தூண்டுறதுக்கு என்னத்தான் மூச்சப்போட்டாலும் நக்சல்பாரிகள் விட மாட்டாங்க. தன்னாலேயே அடங்கிப்போயி எங்கேயாவது காட்டுக்குள்ள உக்காந்து கள்ளு வித்து பொழச்சிக்கிவாய்ங்க.. காடுவெட்டி குரு ஊத்திக்குடுத்துட்டு ஊறுகாய நீட்டிட்டு டிப்ஸ் வாங்கி பொழ்ச்சிக்குவான்னு சொல்லியிருப்பாங்க.அதனாலத்தான் இன்னும் சுதந்திரமா நடமாட முடியுது.நடக்குட்டும் நடக்குட்டும் எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்….என்றைக்கிருந்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டாமல் விட மாட்டார்கள்.

   • // //” இன்னும் சுதந்திரமா நடமாட முடியுது. நடக்குட்டும் நடக்குட்டும் எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்….என்றைக்கிருந்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டாமல் விட மாட்டார்கள்”// //

    ஏதோ சில தீவிரவாதிகளின் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ நடைமுறைக்கு வராத வரையில் நாட்டில் சுதந்திரம் இருக்கத்தானே செய்யும்.

    சுதந்திரமான நாட்டில், ஜனநாயக நாட்டில் கூட்டம் நடத்துவதை எதற்காக தடுக்க வேண்டும்?

    • //சுதந்திரமான நாட்டில், ஜனநாயக நாட்டில் கூட்டம் நடத்துவதை எதற்காக தடுக்க வேண்டும்?// சிரிப்புதாங்க வருது! எதுங்க சுதந்திர நாடு? இன்றைய தேதியில் இந்தியா அமெரிக்காவின் அடிமை நாடுகளில் ஒன்று. ஆமாம் நீங்க எந்த நாட்டை சுதந்திரமான நாடுன்னு சொன்னீங்க? அப்புறம் என்னமோ சொன்னீங்களே? ம்ம்ம்ம்..ஜனநாயகம்னு…ம்ம் நீங்க போலி ஜனநாயக நாட்டுல இருக்கறதுனால உண்மையான ஜனநாயகம்னா என்னன்னே தெரியாததுன்னால இந்த அடிமை இந்தியாவுல நிலவுறதுதான் ஜனநாயகம்னு நினைக்கிறீங்க போல..உங்க பக்கதுல யாராவது கம்யூனிஸ்டு இருந்தால் அவர்கள் உண்மையான கம்யூனிஸ்டாக இருந்தால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்,உண்மையான ஜனநாயகம் என்றால் என்னவென்று.கூடவே பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி நடக்கும் நட்டில்தான் உண்மையான கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமை கூட்டம் நடத்துவதற்கான உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைக்கும் என்பதையும்…அங்கே ஜாதி மதம் இருக்காது. மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். உண்மையான மனிதர்கள் மட்டுமே சக மனிதனை சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் நேசிக்கத் தெரிந்த மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள்.சங்கராச்சாரி அத்வானி ராமத்தாசு காடுவெட்டிக்குரு வுக்கெல்லாம் உண்மையான ஜனநாயக நாட்டில் உயிர்வாழ உரிமை இருக்காது என்பதையும்….

     • // //நீங்க போலி ஜனநாயக நாட்டுல இருக்கறதுனால உண்மையான ஜனநாயகம்னா என்னன்னே தெரியாததுன்னால// //

      100% சைவம், 100 காட்டன் என்பது போல ‘முழுமையான ஜனநாயக நாடு’ ‘முழுமையான சுதந்திரம்’ என்று உலகில் எதுவுமே இல்லை.

      ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவை விட மேலான அளவில் ஜனநாயகம், சுதந்திரம் இருக்கிறது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்தியாவை விட கீழான நிலையில் ஜனநாயகம், சுதந்திரம் இருக்கிறது.

      எனவே, ஒப்பீட்டளவில் இந்தியாவும் ஒரு ஜனநாயக நாடுதான், சுதந்திர நாடுதான்.

      // //பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி நடக்கும் நட்டில்தான் உண்மையான கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமை கூட்டம் நடத்துவதற்கான உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைக்கும் என்பதையும்// //

      இடதுசாரி தீவிரவாத அரசில் அந்த உரிமைகள் எப்படி இருக்கும் என்பதற்கு, கம்போடியா சாட்சியாக இருக்கிறது.

      • பிழைப்புவாதிகள், சுரண்டல்வாதிகள், சமத்துவத்தை விரும்பாத சாதி வெறிப் பொறுக்கிகளுக்கு கம்யூனிசம் கசக்கத்தான் செய்யும். அருளுக்குக் கசப்பதில் வியப்பேதும் இல்லை.

     • // //சங்கராச்சாரி அத்வானி ராமத்தாசு காடுவெட்டிக்குரு வுக்கெல்லாம் உண்மையான ஜனநாயக நாட்டில் உயிர்வாழ உரிமை இருக்காது// //

      இது தேவையில்லாத முழக்கம். ஏனெனில், பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும் போது “சங்கராச்சாரி அத்வானி ராமத்தாசு காடுவெட்டிக்குரு” ஆகியோர் மட்டுமல்ல – நீங்களும் நானும் கூட உயிரோடு இருக்க மாட்டோம்.

      இப்போது உயிரோடு இருக்கும் 7.2 கோடி தமிழர்களும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியை தமது வாழ்நாளில் பார்க்க வாய்ப்பே இல்லை.

 2. யாருக்கும் ஆஞ்சாமல் தான் தோழர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

  வன்னியர் சங்கத்தின் சொத்துகளைப் பறி முதல் செய்!

  வன்னிய சங்கத்தைத் தடை செய்!

  பா.ம.க வைத் தடை செய்!

  காடு வெட்டி குருவை கைது செய்!

  இவைதான் ஆர்ப்பாட்டத்தின் மைய முழக்கங்கள். விழுப்புரம், சென்னை ஆர்ப்பாட்டங்களையெல்லாம் பார்க்கவில்லையா?

  • // //இவைதான் ஆர்ப்பாட்டத்தின் மைய முழக்கங்கள்// //

   முழக்கங்கள் எல்லாம் இருக்கட்டும், “வன்னிய சாதிவெறிக்கு அல்லது வன்னிய சாதிவெறியர்களுக்கு எதிராக” போராட்டம் நடத்தும்போது, அதை வெளிப்படையாக பேனரிலும் சுவரொட்டியிலும் போட்டால் இன்னும் பொருத்தமாகவும் நேரடியாகவும் இருக்குமே.

   கொஞ்சம் முயற்சி செய்து எல்லா இடத்திலும் “வன்னிய சாதிவெறி” என்று இடம்பெறச் செய்யுங்கள். ப்ளீஸ்…

   • அருள்,

    உண்மை. அப்ப தான் சுத்தமா ஜாதி பற்று / வெறி போன்ற எதுவும் இல்லாத வன்னியனுக்கும் இந்த ஒரு தலை பட்சமான “புரட்சி செய்திகளை” பாத்துட்டு வன்னியர் சங்கம், பா.ம.க மற்றும் மருத்துவர் ஐயாவின் மேல் ஈடுபாடு வரும்.

 3. கொஞ்சமாவது — பேச முயற்சி செய்யுங்கள் அருள்.

  நான் மேலே குறிப்பிட்ட முழக்கங்களெல்லாம், பேனர், பிரசுரம், சுவரொட்டி, தட்டிகளிலுள்ள முழக்கங்கள் தான்.

  மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சாளர்கள் அனைவரும் மேற்கண்ட முழக்கங்களை வலியுறுத்தித்தான் பேசினார்கள். ஆர்ப்பாட்டம் நடந்த அனைத்து இடங்களிலும் வன்னிய சாதி உழைக்கும் மக்களில் கணிசமானோர் நிதியும், ஆதரவும் அளித்திருக்கின்றனர். ஆர்ப்பாட்டக் கோரிக்கையையும் ஆதரித்துள்ளனர்.

  சில சாதிவெறிப் பொறுக்கிகள் பிரச்சனை செய்ய நினைத்து கூட்டத்தைப் பார்த்ததும் பொத்திக்கொண்டு சென்றுள்ளனர்.

  • என்ன பேசினீர்கள், யாராவது பெண்பிள்ளைகள் மீது முட்டையை உடைத்தால் அல்லது கேலி கிண்டல் செய்தால் வீட்டிற்கு அழைத்து விருந்து வையுங்கள் என்றா?

  • தருமபுரி நிகழ்வை குறித்து பேசும்போது, அதற்கு காரணம் “வன்னிய சாதிவெறி” என்றுதானே ஆரம்பித்தீர்கள். அப்புறம் எதற்காக “ஆதிக்க சாதிவெறி” என்று பொத்தாம் பொதுவாக எல்லோரையும் இழுக்கின்றீர்?

   ஆதிக்க சாதிகள் என்று சொன்னால், அதில் முதலில் வருவது பார்ப்பனர்கள்தான். அவர்களா தருமபுரியில் வீட்டைக் கொளுத்தினார்கள்?

   “நான் மேலே குறிப்பிட்ட முழக்கங்களெல்லாம், பேனர், பிரசுரம், சுவரொட்டி, தட்டிகளிலுள்ள முழக்கங்கள் தான்” என்று சொல்கிற நீங்கள் – இந்த போராட்டத்தின் மையக் கருத்தான “வன்னிய சாதிவெறி” எனும் பதத்தை தவிர்ப்பது ஏன்?

   நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று நான் கூறவில்லை. நீங்கள் பயப்பட மாட்டீர்கள், அதற்கான தேவையோ சூழலோ கூட இல்லை என்பதும் தெரியும்.

   ஆனாலும், உங்கள் போராட்டத்தில் நேரடியாக “வன்னிய சாதிவெறி” என்பதை சொல்வதற்கு எதற்காக தயங்குகிறீர்கள் என்றுதான் புரியவில்லை.

   • அருள், கீழ்க்கண்ட கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ள முதல் புகைப்படத்தில் உள்ள பேனர், முழக்க அட்டைகளில் “வன்னியர் சங்கத்தை தடை செய், வன்னிய சங்கத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்” என்று கொட்டை எழுத்தில் காணப்படுகிறது. தெரியவில்லை என்றால் மானிட்டரில் பூதக்கண்ணாடி வைத்து பெரிதாக பார்க்கவும். எல்லா ஊர்களிலும், முக்கியமாக வன்னிய மக்கள் வாழும் ஊர்களிலும் இதே முழக்கங்களும், வன்னிய சாதிவெறி என்ற குறிப்பான அடையாளமும் மக்களிடையே பெருத்த ஆதரவுடன் கொண்டு செல்லப்படுகின்றன. மக்களை குறிப்பாக வன்னிய மக்களை நேரில் சந்தித்த போதுதான் எங்கள் முழக்கங்களுக்கு உள்ள ஆதரவும், பா.ம.கவை வன்னிய மக்கள் சீந்துவதில்லை என்ற உண்மையும் தெரிய வந்தது. அருள் பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது. இனியாவது சாதிவெறியை விடுத்து விட்டு திருந்துவதற்கு வழியைப் பாருங்கள்

    விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!

    • “வன்னியர் சங்கத்தை தடை செய், வன்னிய சங்கத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்” என்கிற உங்கள் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. ஆனாலும், தருமபுரி கலவரத்தில் தொடர்புடைய வன்னியர்கள் பாமக – வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை. கூடவே, திமுக, அதிமுக என்று எல்லா கட்சி வன்னியர்களும்தான் இருக்கின்றனர்.

     எனவே, “ஒட்டுமொத்தமாக எல்லா வன்னிய சாதிவெறியர்களையும்” எதிர்த்து போராடுவதுதான் நியாயம். அந்த வகையில் தருமபுரி கலவரத்துக்கு பின்னால் உங்களது முதல் கட்டுரையில் தெளிவாகவே “தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் சார்பானவர்கள் தொடர்ந்த வழக்கு குறித்து எழுதும்போதும் “ஆதிக்க வன்னிய சாதி வெறியர்கள் நடத்திய வன்கொடுமை தாக்குதல்” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

     எனவே, “வன்னிய சாதிவெறி” என்கிற ஒரு பிராண்ட் அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுப்பதே சரியாகவும் நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கும்.

     மற்றபடி, உங்கள் போராட்டங்களுக்கு என்ன பெயர் வைத்தாலும் அது உங்கள் உரிமை. எளிதான, நேரடியான, சரியான தலைப்பை கைவிடாதீர் என்று ஒரு வேண்டுகோளாகத்தான் கேட்டேன்.

     • நண்பரே,
      ‘வன்னிய சாதிவெறி என்று ஓரிடத்தில் இருக்கிறது; இன்னோரிடத்தில் இல்லை’ என்பதில் என்ன பிழை காண்கிறீர்கள். நன்றாக திட்டுங்கள், அடியுங்கள், உதையுங்கள் அப்போது தான் ராமதாஸ் திருந்துவார் என்கிறீர்களா? அல்லது, ராமதாசும், நாங்களும் உசுப்பேற இவை போதாது; இன்னும் வேணும் என்று கேட்கிறீர்களா?

      தலித் மக்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல? எதன் நிமித்தம் உந்தப்பட்டார்கள் என்பதே முக்கியம். அது வன்னிய சாதி வெறி. இரண்டாவது, அந்த தாக்குதலின் விளைவை அறுவடை செய்ய நினைப்பவர்கள் யார்? திமுக-வோ அல்லது அதிமுக-வோ அல்ல. பா.ம.க என்ற உளுத்து போன கூட்டம். எனவே தான் பாமகவும், வன்னிய சாதிவெறியும் ஜனநாயக — புரட்சிகர சக்திகளின் தாக்குதல் இலக்காக உள்ளது.

    • உண்மையில் சாதிவெறிதான் காரணமா? வெறும் இருபது வரிகளில் புதுச்சேரி சம்பவம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் சாதி வெறி என்ற பெயரில் பல கட்டுரைகள் தொடர்ந்து ஒருதலைபட்சமாக வருகின்றன. வினவு எப்போது ஒருதலை பட்சமான நிலையிலிருந்து மாறும்?

    • வினவின் சார்பான அமைப்புகள் இன்னும் நேரடியாக/கூடுதலாக வன்னிய சாதிவெறியை எதிர்க்க வேண்டும் என்கிற ஏக்கம்தான் பிரச்சினை.

     தலித் அமைப்புகளும் இந்த பிரச்சினையைக் கையிலெடுத்து போராடுகின்றன. அவர்களை விட நீங்கள் கொஞ்சம் கூடுதலாக போராடினால் நன்றாக இருக்குமே என்கிற எதிர்பார்ப்புதான் எனது பிரச்சினை.

 4. வல்லவன், வாள் வீச தெரிந்தவன், அதனால் வாள் பிடித்து வாழவேண்டும் என்ற அவசியம் இல்லாதிருப்பவன், பிறப்பால் உயர்ந்தவன், வீரதிக்கென்று பிறந்தவனை பார்த்து ஊருக்குள் நுழையாதே என்று தடை விதிக்கிறான்.

  அதை விடுத்து தலைவர்கள் சிலை மீது அமர்ந்து உச்சம் போகும் காக்கை போல் எங்கோ அமர்ந்து கொண்டு கையில் அதிகாரத்தை வைத்து கொண்டு இழித்து பேசிவிட்டு ஓயாரம் போல் இழித்து பேசிவிட்டு ஓணான் குஞ்சு போல் உயிருடன் நின்றுகொண்டு இருக்கிறாய்!

  சிங்கத்தின் கர்ஜனையை கேட்டாலே ஒன்னுக்கு போகும் ஓட்டேரி நரி சிங்கத்தை பார்த்து காட்டுக்குள் வராதே என்று தடை போடுகிறது அதை பார்த்து பிணம் தின்னி கழுகுகள் எக்காரணம் அடிக்கிறது!

 5. \\யாழ்லிருந்து மீட்கபட்ட இசை யாழுக்கு சொந்தமில்லை,மண்ணில் விழுந்த மழை நீர் மழைக்கு சொந்தமில்லை. எந்த பொருள் எதோடு சேர வேண்டுமோ அதோடு சேர்ந்து விட்டது. உன்மகள் உரியவனிடம் சேர்ந்து விட்டாள் நீ ஏன் உரிமை கொண்டாடுகிறாய் எனச் சங்க காலத்தில் சொல்லப்பட்டது.\\

  கலீல் ஜிப்ரான் கவிதை ஒன்றும் இந்த கருத்தையே பேசுகிறது. ‘உனது மகனும், மகளும் உன்னிடமிருந்து வரவில்லை; உன் மூலமாக வந்துள்ளார்கள். அவர்கள் உனக்கு சொந்தமானவர்கள் இல்லை’. … என்றவாறு இருக்கும். சமூகத்தின் மீதான ஆழமான உணர்ச்சி ஈடுபாடே சிறந்த படைப்புகளை பிரசிவிக்கிறது. தருமபுரி சம்பவம் ஒரு கவிதை, கட்டுரை என்று நின்றுவிடக் கூடிய ஒன்றல்ல என்பதை எழுத்தாளர்கள் இமயம், கரிகாலன் ஆகியோரின் பங்கேற்பும், கருத்துரையும் காட்டுகிறது. வேடிக்கை மனோபாவத்திலிருந்து எழுதும் வேடிக்கை எழுத்தாளர்களை நிரம்ப பெற்றுள்ள நமது சூழலுக்கு இமயமும், கரிகாலனும் வித்தியாசமானவர்கள். ஆர்ப்பாட்டம் என்றால் கோஷம்; கோஷம் இலக்கியத்துக்கு தோஷம் என்பதே நமது பார்ப்பன- வேளாள இலக்கிய கனவான்களின் வடித்தெடுத்திருக்கும் உளவியல். ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அதனை முறியடித்துள்ளனர்.

  • ராமத்தாசின் வளர்ச்ச்ச்சிசியும் போன்சாய் மரங்களும் ஒன்றுதான்.ஜப்பானியர்கள் ஆலமரம் வளர்ப்பார்கள். ஆனால் பூத்தொட்டியில்.ஆலஞ்செடியும் வளரும்.வளரும் வளரும் கடைசி வரை அது செடியாகவே இருக்கும்.அதுபோலத்தான் ராமத்தாசின் வளர்ச்சியும்.கடைசி வரை போன்சாய் செடியாகவே இருக்கப்போவதால் மரம் வெட்டிக்குருவுக்குக்கூட (அதாங்க காடுவெட்டிக்குரு)பயன் படாமல் தான் இருக்கப்போகிறார்.குருவுக்கே அந்த நிலை என்றால் சிஸ்யப் பிள்ளைகளே உங்கள் நிலை ?…….

 6. ஜாதி வெறின்னு சொல்லிட்டு இந்த வினவு கட்டுறியே பல நேரம் அடுத்த ஜாதி மேல் வெறிதனம்தான் கட்டுரை இதன்னால இன்னும் மக்களிடம் ஜாதி வெறிதான் உருவாக்கும் அதை வைத்து கட்டுரை எழுதலம் உங்களுக்கு சில பேரு கை தட்டு பண்ணலாம் நீங்க எழுதும் கட்டுரையால் இன்னும் அதிகம்தான் ஒரு ஜாதி மேல் திணிக்கும் போது ஆம் நான் அப்படிதனு சொல்லும் நிலைமைதான் வரும் உங்கள் நோக்கம் இன்னும் பல கிராமங்களில் கலவரம் வர வேண்டும் என்பதுதான் அப்பதானே பக்கம் பக்கமா எழுதலம்
  முதலில் இந்த ஜாதி கட்டுரை எழுதம வேற எந்த தலைப்பவ்து பாருங்க

 7. ஒரு தலித் தன்னை தலித் என்று காட்டிக் கொண்டு தன் உரிமைக்காக போராடலாம். ஒரு இஸ்லாமியர் தன்னை ஒரு இஸ்லாமியர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு தனது உரிமைக்காக போராடலாம். ஒரு கிறிஸ்தவர் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு தனது உரிமைக்காக போராடலாம்.
  ஆனால் இந்து மதத்தைச் சேர்ந்த யாரும் தங்களை இந்து என்றோ இன்ன சாதி என்றோ அடையாளப் படுத்திக் கொள்ளக் கூடாது. இதுதான் உங்கள் நியாயம். என்ன நான் சொல்றது சரியா?

 8. சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கொடுக்கிறேன் என்பதை ஏற்க முடியாது. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை சாதி ஒழிப்பை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். என்றைக்கு சமநிலை ஏற்படுகிறதோ அன்றிலிருந்து சாதி ஒழிப்பை மேற்கொள்ளலாம். அது வரை சாதி தேவை, இருக்கும்.

 9. இணையதளத்தில் இருக்கும் நண்பர்கள் எந்த சமூகத்தவர் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம், பெரும்பான்மையானோர் தன்னுடைய சமூக அடையாளத்தை முகநூளில் சொல்லாமலே இருப்பார்கள், நானும் அப்படி தான் இருந்தேன். ஆனால் தலித்கள் தன்னுடைய சமூக அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்துவார்கள். இருக்கும் நண்பர்களில் யார் தேவர், யார், கள்ளர், யார் வன்னியர் என்று கண்டுபிடிப்பது கடினம். ஆனால் ஒரு தலித்தை அடையாளம் காண்பது மிகவும் சுலபம். அப்படி என்றால் இங்கு யார் சாதியை பகிரங்கமாக அடையாளப்படுத்திக்கொள்வது ? யார் சாதி வெறியர்கள் ? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

 10. சாதி தீயது என்று முடிவுக்கு வந்துவிட்டவர்களால் அதன் பக்கம் உள்ள நியாயங்களைப் பற்றி சிறிதளவும் சிந்திக்க முடியாது.
  ஆனால் இவர்கள் சாதியின் அடிப்படையில் கொடுக்கப்படும் எல்லாம் நியாயமானது என்று சொல்வார்கள்.

  • தலித்தை அடிமை படுத்த நினைக்கும் உங்களுக்கு எல்லாம் இட ஓதுக்கீடு (எ) பிச்சை எதற்கு. ஆண்ட பரம்பரைகளே உங்களுக்கு அடிமை படுத்தி மட்டும் தானே பழக்கம், பின்னர் ஏன் உங்களுக்கு இந்த இட ஓதுக்கீடு. அதை ஓதுக்கிவிட்டு பின்னர் எங்களை அடிமை படுத்த ஆசை படுங்கள்.

 11. எங்கள் குல தங்கம் மருத்துவர் ஐயாவையோ அல்லது சின்ன ஐயாவையோ யாராலும் எதுவானாலும் தடுக்கமுடியாது எங்களின் மனதில் இருந்த மிருகத்தை தட்டி எழுப்பிவிட்டீர்கள் இப்பொழுது அனுபவியுங்கள் தோழர்களே

 12. “எங்களின் மனதில் இருந்த மிருகத்தை தட்டி எழுப்பிவிட்டீர்கள்”

  உண்மையை ஒத்துகொண்டார்கள்….தாங்கள் மிருகம் என்று….

 13. தருமபுரி கலவரத்தில் தொடர்புடைய வன்னியர்கள் பாமக – வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை. கூடவே, திமுக, அதிமுக என்று எல்லா கட்சி வன்னியர்களும்தான் இருக்கின்றனர்.

  எனவே, “ஒட்டுமொத்தமாக எல்லா வன்னிய சாதிவெறியர்களையும்” எதிர்த்து போராடுவதுதான் நியாயம். அந்த வகையில் தருமபுரி கலவரத்துக்கு பின்னால் உங்களது முதல் கட்டுரையில் தெளிவாகவே “தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் சார்பானவர்கள் தொடர்ந்த வழக்கு குறித்து எழுதும்போதும் “ஆதிக்க வன்னிய சாதி வெறியர்கள் நடத்திய வன்கொடுமை தாக்குதல்” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

  எனவே, “வன்னிய சாதிவெறி” என்கிற ஒரு பிராண்ட் அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுப்பதே சரியாகவும் நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கும்.

  மற்றபடி, உங்கள் போராட்டங்களுக்கு என்ன பெயர் வைத்தாலும் அது உங்கள் உரிமை. எளிதான, நேரடியான, சரியான தலைப்பை கைவிடாதீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க