முகப்புசெய்திவினவு ஏற்படுத்தும் குற்ற உணர்ச்சி - சீனிவாசன்

வினவு ஏற்படுத்தும் குற்ற உணர்ச்சி – சீனிவாசன்

-

என் பார்வையில் வினவு – 18 : சீனிவாசன்

னது பார்வையில் வினவு என்பதை விட எனது வாழ்க்கையில் வினவு என்பதுதான் பொருத்தமாக இருக்கும். தற்பொழுதெல்லாம் இணையத்தில் இருக்கும் பொழுதெல்லாம் வினவை திறந்து புதிய கட்டுரைகள் இருக்கிறதா என பார்ப்பதும், ஏற்கனவே உள்ள கட்டுரைகளுக்கான மறுமொழி என்ன வந்திருக்கிறது? என பார்ப்பதும் அனிச்சை செயலாகவே மாறிவிட்டது. ஊர் நூலகத்தில் வார இதழ்களும், சுஜாதா, பட்டுகோட்டை பிரபாகர், சு.பா, பால குமாரன் என பொழுது போக்கு நாவல்கள் படித்து கொண்டிருந்த பொழுதுதான் இணையத்தின் வலைப்பூக்கள் பிரெளசிங் சென்டர் வழியே எனக்கு அறிமுகமானது. கணிணி திரையில் தமிழ் காணும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது, ஏற்கனவே இருந்த வாசிப்பு அனுபவத்தின் காரணமாய் மொக்கையாய் இருந்த பதிவுலகமோ, எனக்கு சொர்க்கமாய் இருந்தது. பின்னர் நானும் அந்த உலகத்தில் கலக்கும் பொருட்டு, சில ஆண்டுகள் கழித்து வெளிநாட்டு வாழ்க்கையின் பயனாய் 2009-ல் மடிக்கணிணி வாங்கும் பொழுதுதான் வினவு எனக்கு அறிமுகமாகியது.

குற்றவுணர்வுஅதுவரை விகடன், குமுதத்தில் மட்டும் அரசியல் கட்டுரைகள் படித்திருந்த எனக்கு, வினவு படிக்கும் பொழுது அதிர்ச்சி, ஆச்சரியம், பயம் என குழப்பமான பல கலவைகள் ஏற்ப்பட்டன. எப்படி? இப்படி எழுதுறாங்க என யோசித்ததுண்டு. மேலும் பின்னூட்டங்களின் வாயிலாக பல தோழர்களின் வலைப்பூக்களை படிக்கும் வாய்ப்பும் வினவின் வழியே கிடைத்தது. வாசிக்கத்தக்கது எது? தேவையற்றது எது? என்பதை வினவின் வழியாகத்தான் முதன் முதலில் கற்றுக் கொண்டேன். வினவு இல்லாவிடில் இந்நேரம் ஏதேனும் ஒரு பதிவர் கும்பலில் இணைந்து இந்நேரம் மூத்த பதிவராக கூட ஆகி ஒரு வேளை ஓய்வும் பெற்றிருக்கலாம். நல்ல வேளை பதிவுலகம் பிழைத்தது… 

வினவின் வழியாக நான் கற்றுக்கொண்டவற்றை சில முக்கியமான கட்டுரைகளின் வாயிலாய் பகிர்ந்து கொள்வது சிறப்பாய் இருக்குமென நினைக்கிறேன்.

சுஜாதாவும், பால குமாரனும் படித்து கொண்டிருந்த பொழுது, ஜெ.மோ,சாரு, எஸ்.ரா போன்றோர் எனக்கு என் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இலக்கியம் என்பது இதுதான் என்று போதனையும் அளிக்கப்பட்டது. புலம்பலும், ஒப்பாரியும், பாலியல் சொற்களும்தான் இலக்கியம் என்று நினைத்து கொண்டிருந்த பொழுது, ஜெயமோகன் சுந்தர ராமசாமி குறித்து வந்த கட்டுரைகள் எழுத்தாளர்களின் தரம் பற்றிய நல்ல புரிதலை கொடுத்தன. அதிலும் இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா, அரசியலா எனும் கட்டுரை இலக்கியம் குறித்த நல்ல புரிதலை கொடுத்தது. வெறுமனே வருந்தி பின்னர் நம் உணர்வுகளை நீர்த்துப்போக செய்யும் விதமான விசயங்கள் இலக்கியமல்ல எனும் புரிதல் அந்த கட்டுரையின் வாயிலாகவே எனக்கு ஏற்ப்பட்டது.

மொக்கை என்பதன் விளக்கமும், மொக்கை பதிவு உடல் நலத்திற்க்கு கேடு என்பதன் வாயிலாகவே கிடைத்தது. எதை படிப்பது? ஏன் படிக்க வேண்டும்? எனும் கேள்விக்கு தோழர் மருதையனின் பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் சிறந்த பதில் தரும் கட்டுரை. இந்த கட்டுரையை மட்டும் கணக்கற்ற முறைகள் படித்திருப்பேன், அலுவலகத்தில் புதிதாய் வரும் தமிழ் நண்பர்களிடத்தும் இதை பகிர்ந்து கொண்டு கட்டாயம் படிக்க சொல்லியிருக்கிறேன்.

வினவின் சிறுகதைகள், கவிதைகள் அனைத்தும் சிறப்பான அரசியலை சொல்லிக்கொடுத்திருக்கின்றன. குறிப்பாய் மட்டப்பலகை குட்ட குட்ட குனியாதே எனும் முக்கியமான கருத்தை என்னுள் விதைத்தது. அலுவலகம் என்றாலே டார்ச்சர் இருக்கும்,அதை பொறுத்துதான் செல்ல வேண்டும் என்ற என் மனநிலையும் மாற்றம் பெறத்துவங்கியது.

எவ்வளவு பெரிய ரவுடியாக இருப்பினும், அமைப்பாய் நாம் திரளும்போது நம்மை அவர்களால் ஒன்று செய்ய இயலாது என ஜேப்பியார் கல்லூரியில் தொழிற்சங்கம் உருவான கதை உணர்த்தியது. சுதந்திரம் என்ற பெயரில் உதிரியாய் இருந்து வீணாய் போவதை விட, அமைப்பில் இருந்து சமூகத்தை உயர்த்தி தானும் உயர வேண்டும் என்பதை அறிவாளிகளின் அந்தரங்கம் அழகாய் உணர்த்தியது. எந்த ஒரு அமைப்பிலும் இணைந்து செயல்படாத அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் குறித்து நான் கொண்டிருந்த பிம்பமும் கலைந்தது.

உழைப்பே உயர்வென்பதில் உள்ள அபத்தத்தையும், கல்வியென்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதை நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா? நன்கு புரிய வைத்தது. கல்விக்கு உதவச்சொல்லும் நபர்களிடமும், சினிமா நடிகர்களின் விளம்பரத்தை சேவையாக்கி பரப்பும் நபர்களிடமும் முக்கியமாக நான் படிக்க சொல்லும் கட்டுரை இது.

மெய்யுலகில் நான் கண்ட தோழர்களின் வாழ்க்கையும், மெய்நிகர் உலக வினவின் வார்த்தைகளையே உறுதிப்படுத்தியது. எனது ஊரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தோழர் ஒருவர் பன்னாட்டு குளிர் பானங்களை கடையில் விற்க மறுத்தும், தோழரை பற்றி அறியாமல் அக்குளிர்பானங்களை கேட்போரிடமும் அவர் அந்நிறுவனங்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தி அரசியல் பேசும்விதமும், சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடற்ற தன்மையை கொண்ட தோழர்கள் இவர்கள் என உணர்த்தியது.

“ என்ன தோழர் வீட்டை பாக்காம அமைப்பு வேலை ஜெயிலுன்னு போறீங்க, கோர்ட்டுக்கும் போக வேண்டியிருக்கு, உங்க குடும்பத்தை யாரு பாப்பா?” என்ற என் கேள்விக்கு…

“என்ன தோழர் இது! ரவுடி,கட்ட பஞ்சாயத்துக்காரன்,சாரய வியாபாரி இவனுங்க எல்லாம் ஜெயிலுக்கு போறாங்க, இவங்க எதுக்காச்சும் வெட்கப்படுறாங்களா? நம்ம மக்களுக்காக போராடுறம் தோழர்.. நம்ம எதுக்கு தோழர் வெட்க்கப்படனும்? தயங்கனும்?” என அவர் சொன்ன பதிலில்… உண்மையில் இவர்கள்தான் நம் நாட்டுக்காய் போராடுபவர்கள் என்ற எண்ணமும், என் கேள்வி குறித்து எனக்கே வெட்கமும் ஏற்பட்டது. எங்கள் பகுதியில் செயல்படும் தோழர்களின் செயல்பாடுகளை பார்த்த பின்பு வினவின் மீதான மரியாதை இன்னும் கூடியது.

மற்ற எழுத்தாளர்களின் வாசகர்களாய் இருப்பதில் பிரச்சனை ஒன்றுமில்லை. படித்தோமோ போனோமா என்று இருந்துவிடலாம். வினவு வாசகர்கள் அப்படி இருக்க முடியாதென்றே நினைக்கிறேன், குறைந்தபட்சம் தன் சொந்த வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இயலாத குற்ற உணர்ச்சியாவது அவர்களை வாட்டும். வினவு படித்ததின் விளைவாய் என்னுடைய வாழ்க்கையிலும் பண்பாட்டுத்தளத்தில் மாற்றம் நிகழ்ந்தது.

சாதி, சடங்குகள், தாலி மறுத்து எனது திருமணம் எளிய முறையில் நடந்தது. எனது திருமணத்திற்க்கான அழைப்பிதழை வினவுக்கு அனுப்பியபொழுது அது ஜெயமோகன் கட் அவுட்டை மிஞ்சும் கீ-போர்ட் கட்டுரையின் இறுதியில் வந்தபொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நானும் உலகின் அழகிய மணமக்களில் ஒருவரானேன். திருமணத்திற்கு முன்பும் பின்பும் சரி ஏராளமான முறை மகிழ்ச்சியின் தருணங்கள் படித்துள்ளேன். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் புதிய சிந்தனையையும், புத்துணர்ச்சியையும் செய்யவேண்டிய பணியையும் நினைவூட்டும் கட்டுரை இது. இன்னும் நான் தோழராய் உயரவில்லை, நேரடியான அரசியலிலும் இதுவரை பங்குபெறவில்லை. என் வெளிநாட்டு வாழ்க்கைக்கு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தோழராய் அரசியலில் உயர்வதே வினவை நான் தொடர்ச்சியாய் படிப்பதற்க்கு சிறந்த அடையாளமாய் இருக்கும்.

வினவின் தொடர்ச்சியான வாசகனாய் இருப்பதால் சினிமா, மதம், ஈழம், பதிவுலம் மற்றும் தொழில்நுட்பம் என பரந்து பட்ட தளங்களில் என்னுடைய அறிவு மேம்பட்டிருக்கிறது. வினவிடம் முற்றும் முழுதாக முரண்படும் கட்டுரை ஒன்றும் உண்டு, அது ஸ்ரேயா கோஷல் பிடிக்குமா?

வினவுக்கு சில ஆலோசனைகள்

 • வினவுக்கான வாசகர் வட்டம் கட்டுவது, மாதந்தோறும் கூட்டங்கள் நடத்துவது
 • மூத்த தோழர்களின் வாழ்க்கை அனுபவங்களை வெளியிடுவது,
 • சுரண்டலற்ற புதிய சமூகம் எப்படி இருக்கும் என்பதற்கு பாராளுமன்றத்துக்கு சென்ற பால்காரம்மா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதுபோன்று அன்றைய சோவியத் ரஷ்யாவின் சமூக நிலைகள், போராட்டங்கள் குறித்து அதிகமான கட்டுரைகள் வெளியிடலாம்.
 • தமிழ் மக்கள் இசைவிழா, வினோதகன் மருத்துவமனை போராட்டம், கோக்கோ கோலா போராட்டம், திருவையாறு தமிழிசை போராட்டம், கருவறை நுழைவு போராட்டம், இறால் பண்ணை அழிப்பு போராட்டம் என அமைப்பின் பழைய போராட்ட வரலாறுகளை கட்டுரைகளாக வெளியிடலாம்.
 • இணைய வானொலி உருவாக்கலாம்.
 • கலையரசன் முதலான மற்ற தோழர்களின் மற்றும் மற்ற தளங்களின் முக்கியமான கட்டுரைகள் நிறைய வெளியிடலாம், தற்பொழுது அது குறைந்து விட்டது.
 • வாசிப்பு அனுபவங்கள் அதிகம் இல்லாதவர்கள், வினவு கட்டுரைகளை படித்து புரிந்து கொள்வது சிரமாமக உள்ளது எனவே அவர்களுக்கு புரியும் விதமான எளிய பாடல்கள், நாடகங்கள் வழியாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். சிறந்த உதாரணம் : சொன்னாரு கலாம் சொன்னாரு.
 • தினமும் அரைமணி நேரமோ அல்லது ஒரு மணிநேரமோ அன்றைய செய்திகளை, சிறிய விமர்சனத்துடன் காணொளியாக வெளியிடலாம்.
 • குழந்தைகளுக்கான தனிப்பகுதி ஒன்று ஆரம்பிக்கலாம்.
 • கல்வி குறித்த ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் வருவதில்லை, அதை அதிகப்படுத்தலாம்.
 • மார்க்சிய கல்வி, கேள்வி பதில், நண்பர்களை தோழர்களாக தரம் உயர்த்துவது பற்றி நீங்களே சொல்லி உள்ளீர்கள். இதில் மார்க்சிய கல்விக்கு சற்று முக்கியத்துவம் கூடுதலாய் கொடுத்தால் நலமென தோன்றுகிறது.
 • முன்பெல்லாம் பின்னூட்ட பங்களிப்பில் நிறைய தோழர்கள் காத்திரமான கருத்துக்கள் இடுவர், பின்னூட்டங்கள் வழியாகவும் நிறைய கற்று கொள்ள முடிந்தது. ஆனால் தற்சமயம் தோழர்களின் பங்களிப்பு கிட்டத்தட்ட நின்றுவிட்டது. வருத்தமளிக்கிறது. தோழர்களை பின்னூட்டத்தில் பங்களிக்க இதன் வாயிலாய் கேட்டு கொள்கிறேன்.

இறுதியாய் மிகச்சரியான பண்பாட்டையும், அரசியலையும் என் வாழ்வில் அறிமுகப்படுத்தியதற்கு வினவிற்க்கு என் நன்றிகள், சமூக மாற்றத்திற்க்கான புரட்சிகர அரசியலை தொடர்ந்து முன் எடுத்து செல்ல வினவிற்கு என் வாழ்த்துக்கள்.

– சீனிவாசன்

 1. ஸ்ரேயா கோஷல் ஏன் பிடிக்கவில்லை. குறிப்பாக சொல்லுங்கள். (முந்தைய விவாதங்களின் லிங்க ஏதும் வேண்டாம்.)

  • சொல்கிறேன் மணி, முதலில் ஷ்ரேயா கட்டுரையில் உள்ளடக்கம் என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை. மேலும் இதை விமர்சனம் என்ற வடிவிலும் என்னால் ஏற்க்க இயலவில்லை. கட்டுரையை படித்து முடிக்கும் போது பாமர இரசிகனின் விசிலடிக்கும் மனநிலையே எனக்கு நினைவுக்கு வருகிறது. கட்டுரையாளர் பாமர ரசிகனாய் இருக்க வாய்ப்பில்லை, ஏராளமான கலைச்சொற்களின் வாயிலாய் கட்டுரை அலங்காரமாய் இருக்கிறது. காலி டப்பாவிற்க்கு என்ன அலங்காரம் செய்தாலும் டப்பா காலிதானே. எது மக்களுக்கான கலை என்பதில்தான் கம்யூனிஸ்டின் பார்வை இருக்க வேண்டுமென நினைக்கிறேன். இசை என்ற ஒற்றை அடிப்படையில் பார்ப்பனர்களின் திருவையாறையும் ஏற்க்க இயலுமா? இதற்க்காக நான் பாட்டே கேட்க வேண்டாம் அல்லது புரட்சிகர பாடல்கள் மட்டும்தான் கேட்கவேண்டும் என சொல்ல வருவதாய் புரிந்து கொள்ளாதீர்கள்.

   ஏற்க்கனவே இணைப்பு ஏதும் தர வேண்டாம் என நீங்கள் சொன்னாலும் தோழர் செங்கொடியின் வரட்டுத்தனம் பற்றிய கட்டுரையை படித்து பாருங்கள். http://senkodi.wordpress.com/2012/01/17/varadduthanam/ இணைப்புக்கு செல்ல விருப்பமில்லையெனில் அதில் ஒரு பத்தி உங்களுக்காக இங்கே

   //ஒரு கலை வடிவத்தின் மீதான மக்கள் ரசனை எப்படி இருக்கிறது? அல்லது எப்படி இருக்க வேண்டும்? கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா? அழகியல் உணர்ச்சியா? இருவர், ஒரு பொருள் குறித்து தமக்குள் உரையாடிக் கொள்கிறார்கள் என்றால் எதிரிலிருப்பவர் என்ன பேசுகிறார் என்பது தான் இன்னொருவருக்கு முக்கியமேயன்றி அப்படி பேசும்போது என்ன உடையணிந்திருந்தார்? அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது? நளினமாக கைகளை அசைத்தாரா? என்பதெல்லாம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவைகள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு திரைப்படம் என்றால் நடித்தவர்களின் நடிப்புத்திறன் அலசப்படுகிறது, அமைக்கப்பட்ட இசையின் இசைவு தரப்படுத்தப்படுகிறது, பாடியவர்களின், பேசியவர்களின் ஒலியின் குழைவு இனிமையாக பொருத்தமாக இருக்கிறதா என்பது ஒப்புநோக்கப்படுகிறது, ஒளிப்பதிவின் தரமும், ஒளியின் பாங்கும் கணிக்கப்படுகிறது, காட்சியின் பின்னணி கவனிக்கப்படுகிறது, இயக்குனரின் நெறியாள்கையின் நேர்த்தி மதிப்பிடப்படுகிறது. ஆனால், மறந்தும் கூட அத்திரைப்படம் மக்களுக்கு என்ன கூற முனைகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. இங்கு தான் அரசியல் இருக்கிறது. ஒரு உள்ளடக்கத்தின் புறத்தன்மைகளை மட்டுமே ரசிப்பதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அகத்தன்மை குறித்து வாளாவிருக்குமாறு வழக்கப்படுத்தப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு புறத்தன்மை சில நாட்களில் மறந்து போகும் அகத்தன்மையோ உள்ளுக்குள் மறைந்திருக்கும். ஒரு கலை வடிவத்தில் ஒருவன் காணும் அகத்தன்மைகளே பிறிதொரு நேரத்தில் அவனுடைய விருப்பமாக வெளிப்படுகிறது.//

   இந்த அடிப்படையில்தான் ஸ்ரேயா கோஷல் கட்டுரை அமைந்துள்ளதா? இதனாலேயே கட்டுரையை என்னால் ஏற்க்க இயலவில்லை.

   • மொழியில்லாத இசையை ரசிப்பதும், பூக்களின் மென்மை அல்லது வாசனையை ரசிப்பதும், சாஸ்திரீய சங்கீதமோ அல்லது நடனமோ ஒரு புத்துணர்வை உங்களுக்குள் ஊற்றெடுக்கப் பண்ணினால் கூட காதையும் கண்ணையும் பொத்துக் கொள்வதும் ஒரு கம்யூனிஸ்டின் கடமை என்று சொல்ல வருகிறீர்களா? உள்ளடக்கம் இல்லாத படைப்பாக ஷ்ரேயா கோஷல் கட்டுரை இருப்பதாக சொல்லி உள்ளீர்கள். அதுதான் புரியவில்லை. விசிலடிக்க வைக்க கூட உள்ளடக்கம் இருக்கத்தானே வேண்டும். அல்லது சதுரங்களையும், செவ்வகங்களையும், தெள்ளந்தெளிவான வட்டங்களையும் மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்வீர்களா

    • வரட்டுத்தனமான பார்வையை உங்களை கைக்கொள்ள சொல்லவில்லை நான். எது மக்களுக்கான கலை என்பதை உணர்வதே கம்யூனிஸ்டின் கடமை என நினைக்கிறேன். பூக்களை பற்றி சொல்லி இருந்தீர்கள், அதற்க்கான பதில் செங்கொடியின் கட்டுரையில் இருக்கிறது அதை படித்தீர்களா இல்லையாவென்று தெரியவில்லை. பூக்களின் பின் உள்ள அரசியலை அவர் அழகாய் சொல்வதை கவனியுங்கள்

     // நயவஞ்சகமான அரசியல் கலைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கிறது. அவற்றில் ஒன்று தான் பூ. அழகு என்பதை விடுத்து பூந்தோட்டத்தில், பெண்கள் பூச்சூடுவதில், பூக்களின் வேறு பயன்பாடுகளில் என்ன இருக்கிறது? மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன? பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும்? வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா? மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது?, மக்களை மடமையில் நீடிக்க வைப்பதைத் தவிர. அன்றாட வாழ்வில் மலர்களின் பயன்பாட்டின் பின்னே மறைந்திருக்கும் பொருளை அறியவிடாமல், மலர் என்றால் அழகு என திசைதிருப்பப் பட்டிருப்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?//

     மீண்டும் கட்டுரைக்கு வருவோம்,வரிசையாக பாடல்கள் எழுதி அதன் சிறப்பை சொல்வதுதான் கட்டுரையா? கட்டுரையின் சாரமாய் நீங்கள் கருதுவது எதை? ஸ்ரேயாவின் வாழ்க்கை வரலாறிலும் பாடல் விளக்கத்திலும்,சிறிதாய் வரும் உலகமயமாக்கலின் பண்பாட்டு தாக்கமும், கர்நாடக இந்துஸ்தானி சங்கீத வேறுபாடும் நீர்த்து போவதுதான் மிச்சம். இளையராஜா : ஃபிலார்மோனிக்கிலிருந்து பண்ணைப்புரம் வரை !! படித்து பார்த்துவிட்டு ஸ்ரேயா கோஷல் கட்டுரையையும் படித்து பாருங்களேன். முன்னதின் சிறப்பும் பின்னதின் அபத்தமும் எளிதாய் புரியும்.

 2. Srinivasan,

  Wonderful summary. Thanks to it, I got to read some missed posts of important nature.

  I too found the post on Shreya very very odd to Vinavu.
  By the by, her lilting voice is due to reading of the transliterated text of the lyrics. Many Tamil girls could have been given the chance to sing those songs instead of her. It is a pity, chances go to only select few, which itself is a result of unjust social order.

  • It is also about her talent and fans.And Ilayaraja always has favourites and he keeps repeating them,thats his style.

   Rahman experiments more with voices.

 3. ப்டிப்பது வேறு வாழ்க்கை வேறு என்றில்லாமல் உங்கள் குடும்பத்தையும் சரியான அரசியல் பாதைக்கு வழிநடத்தி வந்த உங்களின் முயற்சி,இன்றைய தலைமுறைக்கு ஒருநல்ல உதாரணம்.

 4. //மற்ற எழுத்தாளர்களின் வாசகர்களாய் இருப்பதில் பிரச்சனை ஒன்றுமில்லை. படித்தோமோ போனோமா என்று இருந்துவிடலாம். வினவு வாசகர்கள் அப்படி இருக்க முடியாதென்றே நினைக்கிறேன், குறைந்தபட்சம் தன் சொந்த வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இயலாத குற்ற உணர்ச்சியாவது அவர்களை வாட்டும். வினவு படித்ததின் விளைவாய் என்னுடைய வாழ்க்கையிலும் பண்பாட்டுத்தளத்தில் மாற்றம் நிகழ்ந்தது.//

  உண்மை!!!உண்மை!!!உண்மை!!!

 5. சீதேவி என்றால் யார், மூதேவி என்றால் யார் என ஒவ்வொரு கட்டுரையிலும் விளக்கிக்கொண்டே வருவதுதான் வினவின் சிறப்பு. ஒரு தராசுத் தட்டில் ‘கா-கிலோ’ கத்தரிக்காயை நிறுப்பதுபோலல்ல; ஒரு எலக்ட்ரானிக் தாராசில் ஒரு டன் சொச்சம் கத்தரிக்காயை எடை போடுவதுபோலத்தான் வினவின் தீர்வான கட்டுரைகள் அமைந்திருக்கும்.

  குழம்பிப்போய், வருங்கால சோஷியலிச / கம்யூனிச ஆட்சியில் பிற்காலத்திய வரலாற்றை அந்தக் காலத்திய மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள், நமது எம்ஜியாரிலும், முரசொலியிலியும், அல்லது சட்டமன்ற நாடாளுமன்ற குறிப்புகளிலும், இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ராஷ் ட்ரிபதி குப்பைத்தொட்டிகளிளும் தேடிக்கொண்டிருக்க வேண்டிய தேவையே சுத்தமாக இருக்காது.

  அவர்களைப் பொருத்தவரை, வினவை ‘குற்றாம்போக்காக’ நாலே நாலு பக்கம் தள்ளினாலும், பொய்யற்ற வரலாற்றின் விடை கிடைத்துவிடும்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க