privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாமாருதி தொழிலாளிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தொழிலாளிகள் !

மாருதி தொழிலாளிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தொழிலாளிகள் !

-

மானேசரில் போராடி வரும் மாருதி-சுசுகி தொழிலாளர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது பாகிஸ்தானின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு. அதோடு, மாருதி-சுசுகி தொழிலாளர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் தொழிலாளர் கூட்டமைப்பு
பாகிஸ்தான் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்.

ஜூலை 19-ம் தேதி கராச்சியில் ”மாருதி-சுசுகி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம்” ஒன்றை பாகிஸ்தானின் தொழிற்சங்களின் கூட்டமைப்பு நடத்தியது, பாகிஸ்தான் துறைமுக தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் நூர் முகமது இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் நாட்டு தொழிற்சங்கங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.

இந்தியாவில் கடந்த ஆண்டு தொழிலாளர்கள் உரிமைகளை மீட்க நடத்தப்பட்ட மாருதி-சுசுகி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போரட்டத்தை ஆதரித்தும், தெற்காசியாவில் கடந்த சில வருடங்களாக தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை பற்றியும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பாகிஸ்தான், பங்களதேஷ், இந்தியா என தெற்காசிய நாடுகளில் தொழிலாளர்கள் மனிதத் தன்மை அற்ற முறையில் லாப வேட்டைக்குக் சுரண்டப்படுவதும், அவர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லா சூழலும், தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் தொழிலாளர் நல உரிமைகள், பல விபத்துக்களை புறக்கணிக்கும் ஊடகங்கள் அல்லது செய்திகளை திரித்து வெளியிடும் ஊடகங்கள் என தொழிலாளர்கள் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

மானேசரில் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்கள் சுமார் 2,500 பேர் வரை பணி நீக்கம் செய்யப்பட்டது, கைது செய்த பல தொழிலாளர்களை விடுவிக்க மறுப்பது, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறுவனமும், அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பது இவற்றை கூட்டமைப்பு கண்டித்தது.

ஜெயிலில் வாடும் மாருதி-சுசுகி தொழிலாளர்களின் செலவுகளுக்கு பாகிஸ்தான் தொழிற்சங்கங்கள் தங்கள் நாட்டு தொழிலாளர்களிடம் நிதி திரட்டி அனுப்புவது, தெற்காசியா முழுவதும் மாருதி-சுசுகிப் போரட்டத்தை பற்றி பிரச்சாரம் செய்வது, அதற்கு தேவையான புத்தகங்கள், பிரசுரங்கள் கொண்டு வருவது, மீண்டும் தெற்காசிய தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு உயிர் கொடுப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதே நேரம் பாகிஸ்தான் தொழிற்சங்கங்கள் எவ்வளவு முயன்றும், இந்திய தொழிற்சங்கங்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவதை அரசியல் கட்சிகள் தடுப்பதையும், அதை மீறி இந்த நல்லுறவை வளர்க்க வேண்டும் என்றும் பேசப்பட்டது.

“செப்டம்பர் 2010-ல் பாகிஸ்தானில் 289 ஆயத்த ஆடை தொழிலாளர்களை பலிகொண்ட விபத்தை பற்றி இந்தியாவில் எத்தனை பேருக்கு தெரியும்? இதை ஏன் ஊடங்கங்கள் இருட்டடிப்பு செய்கின்றன?” என்று நியாயமான கேள்வியை எழுப்பினார் நூர் முகமத்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியத் தொழிலாளர்கள் அந்நாடுகளின் தரகு முதலாளிகளால் சுரண்டப்படுகின்றனர். உலகமயமாக்கல் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் நிலைமை இது தான். குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த நிலை மிக மோசமாகவே உள்ளது.

2010-ல் முதலாளிகளின் லாப வெறிக்காக 289 பேரை பலி கொண்ட பாகிஸ்தான் நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து, வங்க தேசத்தில் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறிக்காக ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் 700 பேரை பலி கொண்ட விபத்து, மிக மோசமான கூலிகளை உயர்த்துவதற்காக போராடும் கம்போடிய தொழிலாளர்கள்  என்று தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கு பின்பு தெற்கு, தென்கிழக்கு ஆசிய தொழிலாளர்களின் நிலை மிகக் கொடுமையானதாக மாறியுள்ளது. இந்தப் பின்னணியில் இந்தியாவின் மாருதி-சுசுகி தொழிலாளர்கள் போராட்டம் பாகிஸ்தான் தொழிற்சங்க கூட்டமைப்பால் விவாதிக்கப்பட்டது.

தொழிற்சங்க தலைவர்கள்
கூட்டத்தில் பேசிய தலைவர்கள்.

தேசிய வெறி, இனம், மதம், மொழி என ஆளும் வர்க்கங்கள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் சதி வேலைகளை கச்சிதமாக செய்தாலும், இரு நாடுகளிலும் தொழிலாளர்களின் மீதான சுரண்டல் ஒரே மாதிரி தான் உள்ளது. தரகு முதலாளிகளின் இந்த சுரண்டலை புரிந்து கொள்ள இனம், மொழி, மதம் என அனைத்தையும் மீறி வர்க்க உணர்வே தேவையானதாக உள்ளது. அதை தான் மாருதி-சுசுகி தொழிலாளர்களுக்கான பாகிஸ்தான் தொழிற்சங்கங்களின் ஆதரவு வெளிப்படுத்துகிறது.

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து மதத்தின் பெயரில் பிரிந்தது பாகிஸ்தான். மதம் என்பது ஒரு நாட்டை எப்படிச் சீரழிக்கும் என்பதற்கு பாகிஸ்தான் ஒரு உதாரணம், அப்படித் தான் நாங்கள் சீரழிவோம் என மதவாதத்தை முன் வைக்கின்றன இந்துத்துவ அமைப்புகள். மொழியின் பெயரால் தங்களை அடையாளப்படுத்தி கொண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்த வங்கதேசமும் தங்கள் நாட்டு மக்களுக்கு ஏதும் செய்ய முடியவில்லை.

மதம், மொழி, இனம் ஆகிய பெயர்களில் ஒரு ஆதிக்க சக்தியிடமிருந்து பிரிவது, பன்னாட்டு முதலாளிகளின் அடிமைகளான தரகு முதலாளிகளின் சுரண்டலுக்கு தங்களை இழப்பதில்தான் முடிகிறது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.

ஆனால் இதையெல்லாம் கடந்து மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவு தரவும், அவர்களுக்கு நிதி திரட்டவும், வங்க தேசத்து தொழிலாளர்களுக்காக் கண்ணீர் சிந்தவும், தெற்காசியாவின் நிலமைகளுக்காக வருந்தவும் முடிவது பாகிஸ்தான் தொழிலாள்ர்களின் வர்க்க உணர்வை காட்டுகிறது.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆயுத விற்பனைகாக உருவாக்கப்படும் செயற்கை தேசியவெறி பின்பு கிரிக்கெட் வருமானத்தை அதிகப்படுத்தி முதலாளிகளுக்கு பயன் தருகிறது. ஹிந்து மற்றும் இசுலாமிய அடிப்படை வாதிகளால இரு நாட்டு மக்கள் மத்தியிலும் மற்ற மதத்தினரின் மேல் துவேஷம் பரப்படுகிறது. கூட்டமைப்பு கூறுவது போல் “இந்திய தொழிலாள்ர்களுடன் நல்லுறவு மேற்கொள்வதை” அரசியல் தடுத்தபடி உள்ளது.

இந்தியாவில் உள்ள போலி கம்யுனிஸ்ட் தொழிற்சங்கங்கள் மாருதி-சுசுகி தொழிலாளார்களுக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்க, பாகிஸ்தான் நாட்டு தொழிற்சங்கங்களோ மாருதி-சுசுகி தொழிலாளர்களுக்காக கராச்சி பிரஸ் க்ள்ப் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

பாகிஸ்தான் தொழிற்சங்களின் இந்த முடிவு நமக்கு நினைவு படுத்துவது சுரண்டுபவர்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தும் ஆற்றல் தொழிலாளர் வர்க்கத்திற்கே உள்ளது, அவர்களின் வர்க்க உணர்வு இனம், மொழி, மதம், தேசம் கடந்து மக்களை ஒன்றுபடுத்தி விடும் ஆற்றல் கொண்டது.

மேலும் படிக்க