கப்பல் துறை (மரைன் இன்ஜினியரிங்) மாணவர்கள் நடுக்கடலில் !

0

மிழ்நாட்டில் மொத்தம் சுமார் பத்து கப்பல் துறை பொறியியல் (மரைன் எஞ்சினியரிங்) கல்லூரிகளும் ஐந்து பல்கலைக் கழகங்களும் இயங்குகின்றன. இதில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் வருடத்திற்கு மொத்தம் 1500 மாணவர்கள்  படிக்கின்றனர். அரசு இடத்துக்கு கட்டணம் ரூ 1.5 லட்சம் மற்றும் நிர்வாக இடத்துக்கு கட்டணம் ரூ  3-4 லட்சம் வசூலிக்கப்படுகிறது.

பல கல்லூரிகள் வளாக நேர்முகம் இல்லாமல் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. சில கல்லூரிகள் கண் துடைப்பாக வளாக நேர்முகத்தில் சில மாணவர்களை வேலைக்கு அனுப்புகின்றன.

வகுப்பு
தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் பத்து கப்பல் துறை பொறியியல் (மரைன் எஞ்சினியரிங்) கல்லூரிகளும் ஐந்து பல்கலைக் கழகங்களும் இயங்குகின்றன (கோப்புப் படம்)

தமிழ்நாட்டில் அரசிடம் பெரியார், அண்ணா, காமராஜர் பெயர் கொண்ட மூன்று கப்பல்கள் மட்டுமே உள்ளன, தனியார் கப்பல் நிறுவனங்களின் தலைமையிடம் சென்னையில் குறைவான எண்ணிக்கையிலே உள்ளன. ஆகையால் கப்பல் நிறுவன தலைமையிடங்கள் அதிகமாக உள்ள மும்பை மாநகரில் வேலை தேடி அலையும் இளைஞர்கள் அதிகம். 3 -4 ஆண்டுகள் தேடியும் வேலை கிடைக்காதவர்கள் ஏராளம்.

தற்போது பணம் செலுத்தினால் வேலை என்கிற முறையில், சேவைக் கட்டணம் வாங்கிக் கொண்டு வேலைக்கு அனுப்புகின்றனர். இந்த சேவைக் கட்டணம் அனைத்து கப்பல் நிறுவனங்களுக்கும்  ஒன்று அல்ல. இதில் ஆள் எடுப்பு, ஆள் சேர்ப்பு நிறுவனம் ஆர்பிஎஸ்எல்  (RECRUITMENT AND PLACEMENT SERVICES LIMITED),  பன்னாட்டு வர்த்தக கூட்டமைப்பு – ஐடிஎஃப் (INTERNATIONAL TRADE FEDERATION) என்று இரண்டு பிரிவுகள் உள்ளன.

ஆர்பிஎஸ்எல் என்பது கப்பல் துறை இயக்குனரகத்தால் வழங்கப்படும் உரிமம் ஆகும். ஆர்பிஎஸ்எல் நிறுவனங்களுக்கு ரூ 3.5 லட்சமும், ஐடிஎஃப் நிறுவனங்களுக்கு ரூ 4.5-5 லட்சமும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் சில கப்பல் நிறுவனங்கள் வெறும் கண் துடைப்பாக எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வினை நடத்துகின்றன. அவ்வாறு பங்கு பெறும் மாணவர்களில் சிபாரிசு மூலம் வரும் நபருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, இதர மாணவர்களில் பணம் கொடுக்கும் அளவிற்கு வசதி இருப்போர் பணம் கொடுத்து வேலைக்குச் செல்கிறனர். நேரில் சென்று பணி காலியிடங்கள் உள்ளதா என்று கேட்கும் மாணவர்களிடம் இல்லை என்கின்ற பதிலை சொல்லும் கம்பெனிகள் ஏஜென்ட் மூலம் பணம் செலுத்தி சென்றால் வேலை கொடுக்கின்றன.

வேலைக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் ஏஜெனடுகள் நன்றாக சம்பாதித்து, பல மாணவர்களை ஏமாற்றி அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குகின்றனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடம் முன் பணமாக ரூ 1 லட்சம் அல்லது அவர்களின் பாஸ்போர்ட், சிடிசி மற்றும் எஸ்டிசிடபிள்யூ சான்றிதழ்களை வாங்கிக் வைத்துக் கொண்டு பல மாதங்களாக இழுத்தடிக்கின்றனர்.

பணத்தைக் கொடுத்து கப்பலில் ஏறினால் அங்கேயும் பிரச்சனையே சந்தித்து உள்ளோம். மும்பையில் இருந்து தரகர்  எடுத்துத் தரும் விமான பயணச் சீட்டு மூலமாக வேலை செய்வதற்காக துபாயில் உள்ள கப்பலில் ஏற வேண்டும். துபாய் சென்றால் தரகர் தெரிவித்த கப்பல் நிறுவன நபர்கள் வருவது கிடையாது. குறைந்த அல்லது தரமற்ற கப்பலில் ஏற்றி விடுவார்கள். (நம்மிடம் அதிக தரம் உள்ள கப்பல் என்று சொல்லி பணம் பெற்றுக் கொள்வார்கள்).

நாம் வேண்டாம் என்கிற நிலையில் பணத்தை திரும்பி கேட்டால் நிர்வாகக் கட்டணம் என்று சொல்லி பாதிப் பணத்தை மட்டும் கொடுக்கின்றனர். கொடுக்கப்பட்ட சான்றிதழ்களை திருப்பிக் கொடுப்பதற்கு மாணவர்கள் 1 மாதத்துக்கு மேலாக அலைக்கழிக்கப் படுகின்றனர். இதில் பல ஏஜென்டுகள், “நீ ரூ 50,000 கொடு, அப்பொழுதுதான் நீ கொடுத்த சான்றிதழ்களை திருப்பிக் கொடுக்க முடியும்” என்று சொல்லுவதும் உண்டு. சில ஏஜென்டுகள் அடியாட்களை வைத்து மிரட்டுவதும் நடக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவரின் கதை :

நான் மும்பை நகரத்திற்கு ஓராண்டு முன்பு வேலை தேடி வந்தேன். கடந்த ஓராண்டாக நான் ஏஜென்டுகளால் அலைக்கழிக்கப் பட்டேன். இந்த ஏமாற்று வேலைகளில் சில கடலோடிகள் சங்கங்களும் அடங்கும். இதில் எம்என்என்எஸ்  எனப்படும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா மற்றும் மற்றும் ஏஐஎஸ்யு  எனப்படும் ஆல் இந்தியா சீமேன் யூனியன் மற்றும் என்யூஎஸ்ஐ எனப்படும் நேஷனல் யூனியன் ஆஃப் சீஃபேரர்ஸ் ஆஃப் இந்தியா என்கின்ற சங்கங்களின்  பங்கும் உண்டு.

மரைன் எஞ்சினியரிங்
துபாய் சென்றால் தரகர் தெரிவித்த கப்பல் நிறுவன நபர்கள் வருவது கிடையாது. குறைந்த அல்லது தரமற்ற கப்பலில் ஏற்றி விடுவார்கள். (கோப்புப் படம்)

இதில் நான் எம்என்என்எஸ் சங்கத்தில் உறுப்பினராக  சேர்ந்தால் வேலை வாங்கித் தருவதாக கடந்த ஒரு வருடமாக ஏமாற்றப்பட்டேன். உறுப்பினராக சேருவதற்கு 5௦௦ ரூபாய் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் வேலை காரணமாக போகும் போதெல்லாம் நாளை வா அடுத்த வாரம் வா என்று சொல்லி அலைக்கழிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளேன் . சில நாட்கள் கழித்து எனக்கு வேலை உறுதியாகி விட்டது என்று கூறி 50,000 ரூபாய் வாங்கிக் கொண்டனர். அதன் பின் நான் வேலையைப் பற்றி கேட்கும் போதெலாம் அடுத்த வாரம் ரெடி ஆகும் என்று கூறி மாதக் கணக்கில் நாட்களை கடத்தினர். தற்போது நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் என்னை அலைக்கழிக்கிறனர். என்னைப் போல் நிறைய மாணவர்கள் மும்பை நகரில் சுற்றி திரிகின்றனர்.

சிலர் 3 ஆண்டுகளாக வேலை தேடிக்கொண்டு இருகின்றனர். இதை போல் நவி மும்பை நகர் வாஷியில் உள்ள எஸ்எம் ஷிப் மேனேஜ்மென்ட் என்கிற கம்பெனியில் கேப்டன் ஆக இருக்கும் கேப்டன் ஆஷிஷ் சுக்லா மாணவர்களிடம் நேரடியாக பணம் கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். மற்றும் வேலைக்கு சேரும் மாணவர்களிடம் 1௦௦ ரூபாய் பத்திரத்தில் கையெழுத்தும் வாங்குகின்றனர். அதில் நாங்கள் உன்னிடம் பணம் ஏதும் வாங்கவில்லை என்று எழுதி கையெழுத்து வாங்குகின்றனர்.

ஒமேகா ஷிப்பிங் – திரு ரஃபீக்,  சீ & சீஸ் ஷிப்பிங் – கேப்டன் உஜ்வல் இவர்களும் நேரடியாக வரும் மாணவர்களிடம் பணத்தை கேட்பதை கொள்கையாக வைத்துள்ளனர்.

இந்த தகவல் மாணவர்களின் இருந்து பெற்றுக்கொண்டது, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களின், பெயர் , புகைப்படம் தவிர்த்து உள்ளேன். இது போன்ற பல சம்பவங்களை மும்பையில் உள்ள தாராவி அருகில் உள்ள மாட்டுங்கா லேபர் கேம்பில் 10X10க்கு அடி (புறா கூண்டு போன்ற) அறைகளில் மாதத்துக்கு ஐநூறு கொண்டு பத்து பதினைந்து நபர்களுடன் வசிக்கும் வேலை தேடி வரும் மாணவர்களிடம் கேட்கலாம்.

மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக மத்திய, தமிழக அரசுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நாம் வைக்கும் கோரிக்கை ,

1. ஏஜென்ட் முறையை ஒழிக்க வேண்டும் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற  (மாணவர்களிடம் இருந்து பணம் பெறாமல் ) ஏஜென்ட்கள் மட்டுமே இருக்க வேண்டும் .

2. இன்று மரைன் இன்ஜினியரிங் என்பது மருத்துவ, இன்ஜினியரிங் படிப்பு போல வசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்கும் கல்வியாக மாறி உள்ளது. அனைவருக்கும் மதிப்பெண் மூலம் (இடஒதுக்கீடு தவிர்த்து விடக் கூடாது) கல்வி மற்றும் வேலைகளை உறுதி செய்ய வேண்டும்.

அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைகளை அரசுகள் உறுதி செய்ய வைக்க போராடுவோம்!!.

தகவல்
சிறிதர் -09702481441,
மும்பை விழித்தெழு இயக்கம்