திருவண்ணாமலை ஊர் பெயரைக் கேட்டாலே ஒரு எரிச்சல் வரும். கிரிவலம், விசிறி சாமியார், ரமண ஆசிரமம், மகா தீபம் போன்ற ஆன்மீக சுற்றுலாக்களில் உருண்டு புரளும் அந்த ஷேத்தரம் உண்மையில் ஒரு சபிக்கப்பட்ட ஊர் போலும். அழகான மலைகளும், சுறுசுறுப்பான உழைக்கும் மக்களும் கொண்ட அந்த ஊர் இத்தகைய பக்தி வணிகத்தால் மறைக்கப்படுகிறது. தன்னை பறிகொடுத்தும் வருகிறது.
இந்த எதிர்மறை பட்டியலில் இன்னுமொரு குறிப்பு சேர்ந்திருப்பது நானே விரும்பி செய்த ஒன்று அல்ல.
_____

‘‘பவா செல்லதுரையைப் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்காங்களாம். விழாவுக்கு வர்றீங்களா?‘‘ நண்பர் ஒருவர் கேட்டார்.
எனக்கு ஒரு கணம் குழப்பம். ஆவணப்படம் அவர் எடுத்ததா? அவரைப் பற்றியதா? ‘‘அவரைப் பத்தினதுதான்‘‘ என்று அழைப்பிதழைக் காட்டினார்.
தமிழச்சி தங்கபாண்டியன், ஜெயமோகன், பாலு மகேந்திரா, இயக்குநர் சேரன், செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் என பெருந்தலைகளின் பெயர்கள் கண்ணில் பட்டன. வலைப்பதிவரான செந்தழல் ரவிதான் ஆவணப் படத்தின் தயாரிப்பாளர். இயக்கம், (காஞ்சனை)ஆர்.ஆர்.சீனிவாசன்.
தமிழ்த் தேசியம், காவி தேசியம், போலி கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள், என்.ஜி.ஓ. காரர்கள், பத்திரிகையாளர்கள், சிறுபத்திரிகை இலக்கியவாதிகள், சினிமா படைப்பாளிகள் என பன்முகங்கள் சங்கமிக்கும் அந்த விழா சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று தோன்றியது. ஒரு ஞாயிறு நேரத்து மாலையை இலக்கிய வம்புகளால் இட்டு நிரப்பலாம் என்று கிளம்பினேன். பிரசாத் லேப் அரங்கில் நிகழ்ச்சி. செல்லும் வழியில் முகநூலைத் தோண்டிய போது பவா செல்லதுரை எழுதியிருந்த குறிப்பொன்றை படிக்க நேர்ந்தது.
அவருக்கு நடிகர் மம்முட்டி போன் செய்தாராம். ‘‘உங்களைப் பத்தி ஆவணப் படம் எடுத்திருக்காங்களாமே..’’ என்று அவர் கேட்க, ‘‘அதை ஆவணப்படம் என்று முழுமையாக சொல்ல முடியாது. நான் சில கதைகள் சொல்கிறேன். அதை படமாக்கியுள்ளனர். ஆவணப் படத்தின் தலைப்பே ‘பவா என்றொரு கதைசொல்லி‘ என்பதுதான்’’ என்று இவர் சொல்லியிருக்கிறார். ‘‘திரையில் உங்க முகம் மட்டுமே வந்தா நல்லாவா இருக்கும்’’ என்று மம்முட்டி அக்கறையுடன் கேட்க, ‘‘இல்லே… பி.சி.ஸ்ரீராம், மிஸ்கின் போன்றவர்கள் இடையிடையே என்னைப் பத்தி பேசியிருக்காங்க’’ என்று பவா பதில் சொல்லியிருக்கிறார். ‘‘அப்படின்னா என்கிட்ட ஏன் கேட்கலை’’ என்று மம்முட்டி உரிமையுடன் கேட்டிருக்கிறார். கொல்கத்தாவில் இருந்ததால் விழாவில் கலந்து கொள்ளா இயலாமை குறித்தும் வருத்தப் பட்டிருக்கிறார் மம்முட்டி.
‘‘அவர் எவ்வளவு பெரிய நடிகர்? அவர் தன்னை நினைவில் வைத்துக்கொண்டு போன் செய்து இத்தனை தூரம் அக்கறையாக விசாரிக்கிறாரே..’’ என்று வியந்து, விதந்து பவா செல்லத்துரை இதை எழுதியிருப்பதுதான் முக்கியமானது. சரியாகச் சொன்னால் இது ஒரு இலக்கிய மார்க்கெட்டிங் திருப்பணி.
இதுதான் பவா. எல்லோரையும் எப்போதும் பாராட்டிக் கொண்டே இருப்பார். விழாவுக்கோ வீட்டுக்கோ வந்தவர்களையும் பாராட்டுவார். வராதவர்களையும் பாராட்டுவார். தன்னைப் புகழ்பவர்களையும் பாராட்டுவார். உள்ளுக்குள்ளே பழிப்பவர்களையும் பாராட்டுவார். புகழ வாய்ப்பு கிடைக்காதவர்களையும், முன்வராதவர்களையும் கூட பாராட்டுவார். மேற்கண்ட பிரபலங்களும் இத்தகைய இலக்கிய வழிப்பட்ட விளம்பரங்களை பதிலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
காரணம் பவா செல்லத்துரை ஒரு தனிநபரல்ல. தமுஎகசவில் ஒரு முக்கிய தூணாக பங்காற்றியுள்ளார். வம்சி பதிப்பகம் மூலம் சில பல புத்தகங்களை வெளியிடுகிறார். இடதில் இருந்தாலும் கடைக்கோடி வலதுகள் வரை நெருங்கிய நட்பு வைத்திருப்பவர். கலை இரவு எனும் போலிக் கம்யூனிஸ்டுகளின் மொக்கை நிகழ்ச்சியை கண்டு பிடித்த அறிவாளிகளில் ஒருவர். இது போக திருவண்ணாமலையின் கோவில் ஜயர், ஆசிரமத்து நிர்வாகி முதல் பொறியியல் கல்லூரி முதலாளி வரை சகலரோடும் தொடர்பையும், நட்பையும் பேணுபவர். மாதம் ஒன்றோ மூன்றோ இலக்கிய நிகழ்ச்சிகளை உடும்பு வறுவல், காட்டுக்கோழி பிரியாணி சகிதம் நடத்துபவர்.
எனவே இப்பேற்பட்டவருடன் நட்பு பாராட்டுவது இலக்கிய, சினிமா பிரபலங்களுக்கு ஒரு மார்க்கெட்டிங் உத்தியாக தேவைப்படுகிறது. இவருக்கும் தன்னைப் போன்ற ‘சாதாரணமானவனை’ பெரும் பிரபலங்கள் கொண்டாடுவதை பிறருக்கு தெரிவித்து தான் சாதாரணமானவன் இல்லை என்று காட்ட வேண்டியிருக்கிறது.
இத்தகைய பரஸ்பரம் பறிமாறப்படும் ஒரு புகழ்ச்சி நிகழ்ச்சி, சினிமா புகழ்ச்சி மேடைகளுக்கு புகழ்பெற்ற பிரசாத் லேப் அரங்கில் நடந்தது பொருத்தமானதுதான். இனி, ஓவர் டூ பிரசாத் லேப்.

‘பவா என்றொரு கதை சொல்லி‘ ஆவணப் படத்தின் உள்ளடக்கம் குறித்து பெரிதாக சொல்வதற்கு எதுவுமில்லை. அரங்கத்தில் அவரை புகழ்ந்து பலர் பேசியதைப் போல, கேமராவிற்கு முன்பாகவும் புகழ்ந்து பேசியுள்ளனர். அப்படி ஆவணப்படத்திலும், வெளியீட்டு அரங்கத்திலும் பேசிய அத்தனை பேருமே… பவாவின் கதை சொல்லும் திறன் குறித்துதான் எக்கச்சக்கமாக புகழ்மாரி பொழிந்தார்கள். ‘‘பவா எழுதிய கதைகளை விட, சொல்லும் கதைகள்தான் மிகச் சிறப்பாக உள்ளன’’ என்று பாலு மகேந்திரா குறிப்பிட்டார். பொதுவில் எழுதும் போது ஒரு செயற்கைத்தன்மையும் திட்டமிட்ட அறிவாளித்தனமும் வந்து விடுவதாக குறிப்பிட்ட பாலுமகேந்திராவை உள்ளுக்குள் கொலைவெறியோடு ஜெயமோகன் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆவணப்படத்தில் செந்தழல் ரவியும் இதர இலக்கியவாதிகளும் “ம்” கொட்டிக் கொண்டிருக்கும் போது பவா பேசுகிறார், கதை சொல்லுகிறார், ஊர் சுற்றிக் காட்டுகிறார், படம் காட்டி அருஞ்சொற்பொருள் விளக்குகிறார். அத்தனையிலும் அவர் பேசுவதைக் கேட்பதில் நமக்கு எந்த சுவாரசியமும் தட்டுப்படவில்லை. இந்தப் பேச்சுக்குத்தானா இத்தனை பாராட்டு பாலகுமாரா?
முதலில் சென்னைத் தமிழ் என்று துவங்கினாலும் வட தமிழகத்தில் செல்வாக்கோடு இருக்கும் அந்த தமிழ் பேசப்படும் பகுதியைச் சேர்ந்தவர் அந்த தமிழை பேசவில்லை. பேசவில்லை என்பதோடு வலிந்து பாதிக்கு பாதி ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசுகிறார். மிகவும் செயற்கையான பேச்சு அது. பாசாங்குத்தனமான அறிவாளித்தனம், தனது இயலாமையை வெளிப்படையாக காட்டிக் கொள்ளும் பாணி பேச்சு. வடிவமே இத்தனை பிரச்சினைகளோடு என்றால் உள்ளடக்கம் இன்னமும் மோசம். அவர் கூற வரும் செய்திகளின் ஆன்மாவை அவர் தரிசித்ததாகவோ இல்லை கண்டு கொண்டு பேசியதாகவோ எதுவும் தென்படவில்லை. களக்காடு அக்ரஹாரம் பகுதியில் உள்ள பெரிய தெருவின் திண்ணைகளில் பேசும் தொந்தி புரளும் பார்ப்பனர்களின் வெட்டி அரட்டை சுவாரசியம் கூட அதில் இல்லை.
ஆவணப்படத்தின் காட்சி ஒன்றில் பள்ளி மாணவர்கள் அமர்ந்திருக்க அவர்களோடு செந்தழல் ரவியும் உட்கார்ந்து கேட்க, ஜெயந்தி என்றொரு பெண்ணின் கதையை பவா சொன்னார். முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரையிலும் தன்னுடன் படித்த ஜெயந்தி என்ற பெண் எப்போதும் முதல் ரேங்க் வாங்குகிறார். ரேங்க் எடுப்பதில் ஜெயந்தியை முந்த வேண்டும் என்று போட்டியிட்டு கடைசி வரையிலும் தோற்றுக் கொண்டே இருக்கிறார் பவா. இந்தக் கதையை நகைச்சுவையாக சந்தானம் பாணியில் சொல்லிக் கொண்டு வந்தார். இதற்கெல்லாம் மாணவர்களும், ரவியும் சிரிக்கிறார்கள்.
கடைசியில், ஜெயந்தியை, 48 வயதான அவரது அக்காள் கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொடுக்கப் போகும் சோகத்துடன் கதையை முடிக்கிறார். வகுப்பில் முதல் ரேங்க் வாங்கிய ஜெயந்தி வாழ்க்கையில் தோற்றுப் போகிறார் என்று, வெற்றி – தோல்வி என இருமை எதிர்வுகளை ஒரு சாதாரண பரபரப்பாக்கி முடிக்கிறார். சிரித்த மாணவர்கள் சிந்தனை ஏதுமின்றி கொஞ்சம் அனுதாபத்துடன் கலைந்திருக்க கூடும்.

உண்மையில் கதை அங்கிருந்துதான் தொடங்குகிறது. மேலும் ஜெயந்தி வாழ்க்கையில் அவளாகவே தோற்கவில்லை. இந்த பார்ப்பனிய ஆணாதிக்க சமூகம்தான் அவளை தண்டித்திருக்கிறது. குற்றமிழைக்காத அவள் ஏன் தண்டிக்கப்பட்டாள் என்பதை விவரிப்பதில்தான் கதையின் ஆன்மா ஒளிந்திருக்கிறது. அதை வெற்றி தோல்வி என்று எதுகை மோனை எஃபக்டில் சொல்வதால் மாணவர்கள் பெறுவது ஏதுமில்லை. இதிலிருந்து தெரிவது என்னவெனில் பவாவைச் சுற்றியுள்ள மனிதர்களின் கதைகளில் எவை எந்தக் காட்சிகள் அவரை ஈர்க்கின்றன என்பதுதான். அந்த என்பது என்பது வெறுமனே உயிரற்ற சுவாரசியங்கள் கொண்ட, தெரிந்தே துண்டித்துக் கொண்ட பழமையின் மங்கிய வாசம் மட்டுமே. பர்மா பஜார் செண்டில் அலுப்புற்றவர்களை அந்த பழங்கஞ்சியின் வாசம் சில கணங்கள் வேண்டுமானால் ஆக்கிரமிக்கலாம். ஆறு நாள் பீசா, பர்கர், ஒரு நாள் பழங்கஞ்சி என்பதைத் தாண்டி அதற்கு மரியாதை ஏதுமில்லை.
‘வேட்டை‘ என்றொரு கதை. ஜப்பான் கிழவன் என்ற நரிக்குறவர் வேட்டைக்காரனைப் பற்றிய கதை அது. அவர் வைத்த கண்ணியில் விலங்குகளும், பறவைகளும் சிக்காமல் போனதையும், வேதகாரர்களின் ‘கண்ணி‘யில் ஜப்பான் கிழவன் வீழ்ந்து போனதையும் இணைத்து… கதையில் சொல்ல வருவது என்ன? ‘அவன் பையில் கண்ணிகள் பத்திரமாக இருந்தன‘ என்று ‘வேட்டை‘ கதை முடிகிறதாம். முடியட்டும். கதை வாசிப்பின் மிச்சம் என்ன? ‘நரிக்குறவர்களை அவர்களின் பாரம்பரியத்தில் இருந்து வீழ்த்தி மதமாற்றம் செய்து ‘வேட்டை‘யாடிவிட்டார்கள்‘‘ என்பதா? எனில், இக்கதையின் இந்துத்துவ சார்பு குறித்து நாம் தனியே விவாதிக்க வேண்டும்.
ஊசி பாசி, காரை, புறா விற்கும் குறவர் இன மக்களை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை விட அவர்கள் எப்படி சுவாரசியமாக வாழ்கிறார்கள் என்பதே பவாவின் கலாபூர்வ கண்டுபிடிப்பு. பழங்குடிகளை நாகரீக சமூகம் அழிக்கிறது என்ற பின்நவீனத்துவ சொல்லாடல் முழு உண்மையை மறைக்கும் பாதிப் பொய். எல்லா குடி மக்களையும் வறுமை என்ற ஒன்று வாய்ப்பு, வசதிகள், அறிவு சரியாகச் சொன்னால் வர்க்கம் காரணமாக விடாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறது. பழங்குடி மக்களிடம் எளிய வாழ்க்கை பண்பு இருப்பதாலேயே, திறமையாக பிரசவம் பார்க்கிறார்கள், அவர்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் தேவையில்லை என்று சுவாரசியமாக கதை சொல்வது நேயமற்றது.
பிறகு ஆவணப்படத்தில் பவா செல்லதுரை சொன்ன கதைகளை கேட்டு முடித்தபோது ஓர் அமானுஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தது போலிருந்தது. காடு, வேட்டை, குறி சொல்பவர்கள், ஆவிகள், இருண்மை மனம், இறுகிப் போன நம்பிக்கைகள்… என அவர் விவரித்தக் கதைகளின் மையச் சரடாக மர்மத் தன்மையே நிரம்பியிருந்தது. அந்த மர்மத்தை விலக்கி உண்மையின் ஒளியை காட்டுவதற்குப் பதிலாக… அவர் மர்மத்தை ரசிக்கிறார்; ரசிக்கக் கற்றுத் தருகிறார்.
கர்ப்பவதியான பெண் ஒருத்தி தனது பிள்ளை இறந்து பிறக்கும் என்று கற்பித்துக் கொண்டு கொடுங்கனவுகளோடு வாழ்கிறார். அதை வாய் பேச இயலாத ஒரு குறி சொல்பவன் அதிகப்படுத்துகிறான். இதை மலிவான ஒரு மர்மப் பட உத்தியோடு அடித்து விடுகிறார் பவா. பின்னர் கிறிஸ்மஸ் நாட்களில் வரும் தேவாலயக்குழு, ஏசுநாதர் பிறந்த கதையை சொல்லி, அந்த பெண்ணின் கொடுங்கனவு மறைவதை காப்பிய சுவையோடு சொல்கிறார் பவா. ஓர் உளவியல் மருத்துவரிடம் சென்று 200 ரூபாயில் முடிய வேண்டிய பிரச்சினையை மர்மம், ஊமையன், குறி, தொன்மம் என்று கொல்வதை நம்மால் ரசிக்க முடியவில்லை. மூடநம்பிக்கைகளை விஞ்ஞானம் வென்று விட்டாலும், இவரைப் போன்ற இலக்கியவாதிகள் தமது திறனால் கதைகளாக வாழ வைக்க விரும்புகிறார்கள். நம்மைப் பொறுத்த வரை இது ஒரு கொலை நடவடிக்கை என்கிறோம்.
பழங்கால மர்ம சடங்குகளை, மூட நம்பிக்கைகளை விமர்சனமின்றி வழி மொழியும் இவரது கதைகளை, செந்தழல் ரவி, ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனாக கொண்டு வரப் போகிறாராம்.. சபாஷ் ரவி. ஏற்கெனவே கம்ப்யூட்டர் ஜோசியம் எல்லாம் இங்கே வந்து விட்டது. பிறகென்ன இனி பவா செல்லத்துரை சொல்லும் ஜமீன் குளமும், அதில் சுற்றும் ஆவியும் சாகா வரம் பெற்று இணைய வெளியில் கால் பதிக்கட்டும்.

ஆவணப் படத்தில் ஒவ்வொருவரும் பேசுவதற்கு முன்பு ‘மானிட்டர்‘ பார்ப்பதையும், தயார் ஆவதையும் படம் பிடித்து அதையும் சேர்த்துள்ளனர். இந்த ஒழுங்கற்றத் தன்மை குறித்து பேசிய அனைவருமே சிலாகித்தனர். இது ரொம்பவும் இயல்பாக இருக்கிறதாம். ஜாக்கிஜான் படங்களில், படம் முடிந்ததும் ‘மேக்கிங் ஆஃப் தி ஃப்லிம்‘ என்று போடுவார்கள். நடிக்கும்போது ஏற்படும் தவறுகள் தொகுக்கப்பட்டிருக்கும். அதையே இங்கும் எடுத்து ஒவ்வொருவர் பேசுவதற்கும் முன்பு இணைத்து விட்டால் அது புதுமையாம்… ஒழுங்கிற்கு எதிரான கட்டவிழ்ப்பாம். அப்படின்னா முதலில் அந்த கட்டை உலக அளவில் அவிழ்த்தவர் ஜாக்கிஜான்தான், ஆர்.ஆர்.சீனிவாசன் அல்ல. மேலும் இந்த உத்தி முதல் காட்சிகளிலேயே வரும் போது இது ஒரு செயற்கையான அணுகுமுறை என்று நமக்கு உடனேயே தோன்றுகிறது. இயல்பை இயல்பாக காட்டாமல் இத்தகைய உத்திகளால் செயற்கையாக உருவாக்கும் போது அது இருக்கும் கொஞ்ச நஞ்ச இயல்பையும் கொன்று விடுகிறது.
பொதுவில் கேமரா, பத்திரிகை, ஆவணப்படம் என்று வரும்போது அறிஞர்கள் முதல் மக்கள் வரை ஒருவித செயற்கைத் தன்மையோடு வடிவம், உள்ளடக்கம் இரண்டிலும் பேசுகிறார்கள். அவர்களை பேசவிட்டு, வாதிட்டு, கோபப்படுத்தி உண்மைக் கருத்துக்களை வெளியே கொண்டு வரும் ஆற்றல் இயக்குநருக்கு இருக்க வேண்டும். இங்கே அது இல்லை. அதனால் பவா செல்லத்துரை எனும் அரட்டை மனிதர் குறித்து அறிஞர் பெருமக்கள் செப்பியிருக்கும் கருத்துக்களில் சரக்கோ, முறுக்கோ எதுவுமில்லை.
நிகழ்ச்சியில் பேசிய ஜெயமோகனே இதற்கு சாட்சி. ரெண்டு சிறுகதை தொகுப்பு எழுதிய பவா செல்லத்துரைக்கே இத்தனை பிரபலங்களின் துணுக்குகளோடு ஆவணப்படமா என்று அவர் உள்ளுக்குள் குமைந்திருக்க வேண்டும். தண்டி தண்டியாக புத்தகங்கள் எழுதியும் நமக்கு ஒரு ஆவணப்படம் இல்லையா என்று அவர் கேட்டால் அது நியாயமான கேள்விதான். ஆனாலும் அவரது மனக்குளத்தில் உள்ள அவரது ஆவணப்படத்தை கமலோ, மணிரத்தினமோ எடுத்தால்தான் அவர் ஆழ்மனம் சாந்தியடையும்.
“பவா செல்லத்துரை வாழ்க்கையில் பெரிய சோகங்களை கண்டவரில்லை, அதனால்தான் அவர் வாழ்வை மகிழ்வாக எதிர் கொள்கிறார், பேசுகிறார், விருந்து வைக்கிறார்” என்று ஒரு மாதிரி வஞ்சகப் புகழ்ச்சியில் பேசினார் ஜெயமோகன். அவர் உன்னத இலக்கியங்களை படைப்பதற்கு வாழ்வில் அவர் கண்ட பெருஞ்சோகங்களே காரணம் என்பதை இங்கே சொல்லாமல் சொல்கிறார். இந்த உள்குத்தை யாரும் கண்டுபிடித்த மாதிரி தெரியவில்லை.
மேலும் அவரது மகனான அஜிதன்தான் தனது முதல் மாணவன் என்பதையும் மேடையில் பகிரங்கமாக அறிவித்தார். விஷ்ணுபுரத்திற்கு என்னதான் வாக்கப்பட்டாலும் அரங்கசாமி போன்ற பக்த கோடிகளுக்கு கூட அந்த முதல் மாணவன் தகுதியில்லை என்பதிலிருந்து இலக்கியம் கூட ஆதீன பட்டத்திளவரசு மூலம்தான் கைமாறும் என்று தெரிகிறது. சரி, குடும்ப வாரிசு இல்லாத இடம் எது என்று நீங்கள் எரிச்சலடைவது தெரிகிறது. இதனால்தான் பவா குறித்த ஆவணப்படத்தில் அவரது அன்பான குடும்பம் ஆவணப்படுத்தப்படவில்லை என்று வருத்தப்படுகிறார் ஜெயமோகன். எனவே ஜெமோ குறித்து ஆவணப்படம் எடுக்கும் போது இந்தக்குறை தீர்க்கப்படும் என்று தெரிகிறது.
நிகழ்ச்சியில் பேசிய பலர் பவா செல்லதுரையே கூச்சப்படும் அளவுக்கு புகழ்ந்து தள்ளினார்கள். பெரும்பாலானோர், ‘எப்போ போனாலும் பவா வீட்டில் பிரியாணி சாப்பிடலாம்‘ என்று சாப்பாட்டு ராமன்களைப் போல அடுக்கியதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் இப்படி எந்நேரமும் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு சாப்பாடு போடும் இல்லம் என்றால் அது சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்‘ வீடுதான். அதன்பிறகு இப்போது பவா செல்லதுரையின் வீடு. ‘பவா வீட்டுக்கு எந்த நேரத்துக்குப் போனாலும் பிரியாணி கிடைக்கும்‘ என்று லெக் பீஸ் தின்ற எச்சிலின் ஈரத்துடன் பேசுபவர்கள், இப்படி கொத்து, கொத்தாக வரும் நபர்களுக்கு எல்லாம் சமைத்துப் போட எவ்வளவு பணம் வேண்டும் என்பதையோ, இது மற்றவர்களால் முடியாதது ஏன் என்பதையோ கொஞ்சம் கருணை கூர்ந்து பரிசீலிக்க கூடாதா?

ஏனெனில் இந்த இலக்கியவாதிகள் அத்தனை பேரும் வாழ விரும்பும் வாழ்க்கையை, பவா செல்லதுரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமா செட் போல ஒரு வீடு, அதற்கு எந்நேரமும் வருகை தந்து கொண்டிருக்கும் சினிமா; இலக்கிய வி.ஐ.பி.கள், அவர்களுடன் அசைவ விருந்து, மா மரத்தடியில் இலக்கியம், மலையோரத்தில் வாக்கிங்… இந்தக் ‘கொடுப்பினை‘ எத்தனை பேருக்கும் கிடைக்கும்? எனில், இந்த இன்பமயமான வாழ்வைப் பார்த்து ரசித்து பங்கு பெறுவது மட்டும்தான் பவா அண்ட் கோவை இணைக்கும் இழையா என்றால், நிச்சயம் இல்லை.
பவாவிற்கு கருணா என்றொரு நண்பர் இருக்கிறார். முழுப்பெயர் கருணாநிதி. எஸ்.கே.பி.கருணா என்று சொல்வார்கள். தி.மு.க. முன்னால் அமைச்சர் கு.பிச்சாண்டியின் தம்பி. திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் முதலாளி. இப்படி கல்லூரி உரிமையாளராக மட்டும் இருந்திருந்தால் அவர் பத்தோடு பதினொன்று. மாறாக, கருணாவுக்குள் ஓர் இலக்கியவாதி உறங்கிக் கொண்டிருந்தார். அதைக் கண்டுபிடித்து எழுப்பிவிட்டவர் பவா செல்லதுரை. ஓர் ஊழல் அரசியல் பணக்கார வாரிசின் இலக்கியத் தாகத்தை இனம் கண்டு கொண்ட பவா, திருவண்ணாமலைக்கு எந்த இலக்கியவாதி வந்தாலும் கருணாவுக்கு அறிமுகப்படுத்துவார்.
அரசியல் குடும்பத்தில் பிறந்து இலக்கிய நட்பு வட்டம் இல்லாமல் காய்ந்து கிடந்த கருணாவுக்கு அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்? ஒரு பணக்கார இலக்கிய கோயிந்து பலியாடாக கிடைத்திருக்கிறது என்றால், எழுத்தாளர்களுக்கு அதை விட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்? ஆகவே இந்த நட்பு செழித்து வளர்ந்தது. ‘‘பவா செல்லதுரை ஒவ்வொரு வாரமும், அந்த வாரத்தின் மிகச் சிறந்த பிரியாணியை சாப்பிடுகிறார்‘‘ – என்று ஆவணப்படத்தில் எஸ்.கே.பி.கருணா சொல்லும் போது பின்னணிக் காட்சியில் ஏராளம் பேர் சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். ஜெயமோகனுக்கு அருகில் சாப்பிடும் பவா ‘வெளியே சிலர் வந்திருக்கிறார்கள், அவர்களுக்கும் பிரியாணி போடுங்கள்’ என்று கூறுகிறார்.
ஆவணப்படத்தின் காட்சி ஒன்றிற்காகவே ஒரு பிரியாணி விருந்தென்றால் மற்றதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நாகர்கோவிலில் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் சுந்தர விலாஸ் இல்லமும் கூட இத்தகைய விருந்து உபசரணைகளுக்கு பெயர் போனதுதான். ஒரே ஒருவித்தியாசம், அங்கே சைவம், இங்கே அசைவம். இது போதாதா இலக்கியவாதிகளுக்கு?

கருணாவின் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு எழுத்தாளர்களையும், சினிமாக்காரர்களையும் வரவழைக்க வேண்டுமா? பவா நிறைவேற்றிக் கொடுப்பார். தெரிந்தவர்கள் யாருக்கேனும் பொறியியல் சீட் வாங்க வேண்டுமா? பவாவுக்கு போன் செய்தால் போதும். இயக்குநர் சேரன் இதை நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே சொன்னார்,
‘‘பவாகிட்ட ‘முடியாது’ங்குற வார்த்தையே வராது. ‘என் மனைவி திருவண்ணாமலை கோயிலுக்கு வரணும்னு சொல்றாங்க’ன்னு சொன்னாப் போதும், ‘அனுப்புங்க… நம்ம ஸ்ரீதர் அய்யர் இருக்கார்’னு சொல்லுவார். ரெண்டு பேருக்கு எஞ்ஜினீயரிங் சீட் வேணும்னு சொன்னா, ‘கருணாகிட்டப் பேசிடலாம்’பார். ஷூட்டிங் நடக்கும்போது திடீர்னு பணப் பற்றாக்குறை. பவாவுக்கு போன் போட்டு ‘ஒரு 25 லட்சம் உடனே வேணும்’னு கேட்டா, அதுக்கும் முடியாதுன்னு சொல்ல மாட்டார். ‘கருணா ஆஸ்திரேலியாவுல இருக்கார். பேசிட்டு சொல்றேன்’னு சொல்லுவார். இவரைப் போல ஒரு மனுஷனை நீங்க பார்க்கவே முடியாது” என்று பேசினார் சேரன்.
வாங்கிக் கொடுக்கும் எஞ்ஜினியரிங் சீட்டுக்கு கமிஷன் உண்டா, கல்லூரிக்கு அழைத்து வரும் வி.ஐ.பி.களுக்கு கட்டிங் உண்டா என்பது எல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கல்லூரியை முதலாளி கருணா எப்படி ‘உழைத்து’ கட்டினார், மாணவர்கள் எவ்வளவு ‘பீஸ்’ கட்டுகிறார்கள் என்பதை பவா எனும் கதை சொல்லி கதையாக சொல்வாரென்றால் அவர் ஒரு கதை சொல்லி என ஏற்கலாம். கதைகளை மறைத்தால் அதற்கு என்ன பெயர்?
சேரன் பேச்சில் இருந்து தெரிவது என்னவெனில், வி.ஐ.பி.களின் வீட்டம்மாவுக்கு விபூதி வாங்கித் தருவது, ரமணாஸ்ரமத்தை சுற்றிக் காட்டுவது, கிரிவலத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதில் பவா செல்லதுரை கை தேர்ந்தவராக இருக்கிறார். (பாலகுமாரனுக்கு விசிறி சாமியாரை அறிமுகப்படுத்தியது பவா செல்லதுரைதானாம். இதையும் விழாவிலேயே சொன்னார்கள்). இதுதான் வி.ஐ.பி.களை கவிழ்க்கும் கலை.
சொகுசான வாழ்க்கை, எந்நேரமும் நல்ல தீனி, யாரைப் பிடித்தால் காரியம் நடக்குமோ அவர்களுக்கு கூச்சமே இல்லாமல் சோப்புப் போடுவது, தரகு வேலை பார்ப்பது… இதையே 24 மணி நேரமும் செய்து கொண்டிருக்கும் இந்த நபர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஏதோ பொறுப்பில் இருக்கிறாராம். இவரது நட்பு வட்டம், செயல்பாடு, எழுத்து, பேச்சு… போன்றவைக்கும், கம்யூனிஸத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? ஆனால், பவா செல்லதுரையின் வீட்டில் தினம் பத்து பேர் பிரியாணி சாப்பிடுவதை ‘கம்யூன் வாழ்க்கை’ என்கிறார் செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள். கறிச்சோறு சாப்பிட்டா கம்யூன் வாழ்க்கையா? என்னா ஒரு பொருள்முதல்வாத புரிதல்..?!
இவர்கள் எல்லோரும் எதன் அடிப்படையில் ஒருங்கிணைகின்றனர்? இவர்களை இணைக்கும் கண்ணி எது? ‘இலக்கியம்’ என்று யாராவது சொன்னால், அது பொய் என்பதை இந்த ஆவணப் பட நிகழ்ச்சியே நிறுவிவிடுகிறது. இவர்களை இணைப்பது பச்சையான காரியவாதம். பவா செல்லதுரையின் செல்வாக்கான சினிமா, அரசியல் தொடர்புகள் மற்றவர்களை கவர்ந்து இழுக்கின்றன. அதனால்தான், ‘ஐயாமாரே… உங்கூட்டு உடும்பு கறி சூப்பர்’ என்று கூவுகின்றனர். இந்த அசிங்கமான சொறிந்து விடும் பண்பை இலக்கியம் என்ற பெயரில் அடுத்தத் தலைமுறைக்கும் கடத்துவதுதான் இதில் உள்ள மெய்யான அபாயம். எழுத்தாளன் என்பவன் சுய மரியாதை மிக்கவனாக, மற்ற பிரிவினரைக் காட்டிலும் சமூகப் பொறுப்புணர்வு மிக்கவனாக இருந்த காலம் ஒன்று உண்டு. அந்த குறைந்தபட்ச நேர்மையோ, தன்மானமோ இவர்களிடம் இல்லை.
இவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஒட்டி உறவாடி, அவர்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வரும் பாணபத்திர ஓணாண்டிகள்!
– வளவன்
இப்படியெல்லாம் கதைசொல்லி அதனை ஆவணப்படுத்தி இன்பமயமான வாழ்க்கை வாழ்வதும் அதனை பாராட்டி ’உச்’ கொட்டும் இலக்கிய கைத்தடிகளையும் சரியாக விமர்சனம் செய்து எழுதி உள்ளீர்கள்.
வினவு இது போன்ற இலக்கிய தடித்தோல் வியாதிகளையும் அவர்கள் படைப்புகளையும் அம்பலபடுத்தி அதிகம் எழுத வேண்டும்.
கார்த்திகை தீபம் – என் வீட்டனுபவங்கள் By பவா செல்லதுரை
ஞாயிற்றுக்கிழமைக்கான தீபக்கொண்டாட்டம் எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவே துவங்கிவிட்டது. சாத்தூரிலிருந்து தியாகு அண்ணன் தன் மனைவியுடனும், இரு மகன்களுடன் கூடவே அ.முத்துக்கிருஷ்ணனைக் கூட்டிக் கொண்டு இரவு எட்டு மணிக்கு, சாத்தூர் சண்முக நாடார் கடை கருப்பட்டி மிட்டாய், சேவு தலா இருபது கிலோவுடன் வந்து சேர்ந்தார். இதுவரையிலான அவர் சந்திப்பு கருப்பட்டிமிட்டாயும், சேவுமின்றி ஒருமுறை கூட நிகழ்ந்ததில்லை.
அவர் தம்பி மகேந்திரன் சென்னையிலிருந்து தன் ஏழுவயது மகனோடு தனி காரில் இரவு எட்டரைக்கு வந்து சேர்ந்தார். மிக சமீபத்தில் தன் மனைவியை கேன்சருக்கு பலிகொடுத்திருந்தார் மகேந்திரன். அத்துயரம் அவர் பேச்சை உறிஞ்சியிருந்தது. அமெரிக்க வாழ்வு தந்த அலுப்பும் அதனுடன் சேர்ந்திருந்தது.
இன்னும் இரண்டு நாட்களுக்கு முன்பே என் நண்பர் ஓவியர் சீனிவாசன் தன் மனைவி ஜெயந்தி, ஐந்து வயதேயான மகன் தம்புக்குட்டியோடு வந்திருந்தார். அவர் வாழ்வு கொண்டாட்டங்களாலும், மௌனங்களாலும் மட்டுமே நிறைந்தது. ரமணாஸ்ரமம், கந்தாஸ்ரமம், ஆஸ்ரம சாப்பாடு இதெல்லாம் மௌனத்தின் பக்கம் சேரும். தன் நண்பர்கள் கார்த்தி, ஜெய், முருகனோடு நீண்ட பின்னிரவுகளில் ஊர்சுற்றல், விவாதம், எவரையும் காயப்படுத்தாத நக்கல்கள் இவை முதல்வகை.
நானும் நண்பன் சிந்து ஏழுமலையும், வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஒவ்வொரு இடமாகத் தயார் செய்தோம். ஜெயஸ்ரீயின் கல்வீடு, எங்கள் இரண்டாம்நில கெஸ்ட் அவுஸ், மாத்தூர் நில வீடு ஆகியவை ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி போன்ற நண்பர்களால் இரவு பகலாய்ப் பொலிவூட்டப்பட்டன.
சனிக்கிழமை இரவு முதல் என் தொலைபேசி பல்வேறு குரல்களால் மூச்சு திணறியது. மூன்று நான்கு முறை அதை சார்ஜ் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை, இயல்பு. எல்லாரையும் தாங்கிக் கொள்ள ஒரு வலுவான இதயம் வேண்டும்தான். அது எனக்கு சிறுவயது முதலே வாய்த்திருந்தது.
இரவு பனிரண்டு மணிக்கு மேல் வந்த மருதா பாலகுரு, மற்றும் அவர் நண்பர்களை அழைத்து வந்து மாத்தூர் நிலத்தில் தங்க வைத்தோம். அடுத்த விடியலுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே மிச்சமிருந்தது. ஏதோ விசித்திர சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்து பார்த்தால் அடைமழை துவங்கியிருந்தது.
மாலை மூன்று மணியளவில் மலேசியாவிலிருந்து என் மாமா மகள் பரமேஸ்வரியும் அவள் ஸ்நேகிதி யோகேஸ்வரியும் மழையினூடே திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு எங்கள் போலோ காரில் வந்திறங்கியது இனிமையான காட்சி.
சனிக்கிழமை மாலையே வந்து சேர்ந்த இன்னொரு முக்கியஸ்தர் எழுத்தாளர். ஜெயமோகனின் மகன் அஜிதன்.
வம்சி, மானசி, ஹரி, அஜி, தியாகு அண்ணனின் மகன்கள் நிருபன், அஸ்வின் அ.முத்துகிருஷ்ணன் இவர்கள் எல்லோரும் நிறைந்திருந்த கிணற்று நீரில் ஐந்து மணி நேரத்திற்கும் மேல் ஊறிக் கிடந்தார்கள்.
நாங்கள் எல்லோரும் ஜெயஸ்ரீ வீட்டிற்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்தோம். ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு விதமாக சமைத்து சாப்பிட்டோம்.
இடையே சிபிச்செல்வனும், வேல்கண்ணனும் வந்து ஒரு கறுப்பு காபி மட்டும் குடித்து அவசரமாக விடைபெற்றார்கள். இரவு சாப்பாட்டிற்கு அவசியம் வருவதாக அப்போதே பொய் சொன்னார்கள். எல்லாம் கடந்து போனது.
இப்போதெல்லாம் என் தம்பியும் கவிஞனுமான நா.முத்துக்குமாரும், பாட்டெழுதும் விதமே அலாதியானது. படத்தின் இயக்குநரோடு காலையில் சென்னையிலிருந்து கிளம்பி வாணியம்பாடிவரை பயணிப்பது. இடையிலேயே பாடல் கருக்கொண்டுவிடும். வாணியம்பாடியிலோ, ஆம்பூரிலே முஸ்லீம் வாசம் வீசும் பிரியாணியோடு அப்பிரசவம் முடிந்திருக்கும்.
திரும்பி வரும்போது அவர்களை ஒரு புதுப்பாடல் நிறைக்கும். இம்முறை அருணாசலேஸ் வரருக்காக அல்லாவைத் தவிர்த்திருந்தான்.
ஞாயிற்றுக்கிழமை காலையே முத்துக்குமாரும் நீயா நானா’ ஆண்டனியும், அவரின் நண்பனும் பட இயக்குனருமான சார்லஸ் ஆகியோர் இரு கார்களில் புறப்பட்டு வந்தவாசி வழியே தங்கள் பயணத்தைத் துவக்கியிருந்தார்கள்.
ஆண்டனி சார் தயாரிப்பில் சார்லஸ் இயக்கும் படத்திற்கு முத்துக்குமார் பாடல் எழுத வேண்டியிருந்தது. அப்படப் பாடல் நிறைவடையும் இடத்தில் சார்லசும் கோபியும் அப்படியே சென்னைக்குத் திரும்பிவிடுவார்கள். (டப்பிங் வேலை) நாங்கள் எத்தனை பேருக்கு சமைப்பது என்பது குழப்பத்திலிருந்தது. வந்தவாசி அவர்களுக்கு அப்பாடலை பரிசளித்து அப்படியே திருப்பியனுப்பியது. ஆண்டனியும், முத்துக்குமாரும் மட்டுமே மாலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தார்கள். தமிழகத்தின் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்த நண்பர்கள் ஒவ்வொருவரின் பயணம் பற்றியும் ஒரு அத்தியாயம் எழுத வேண்டியிருக்கும்.
மாலை ஐந்து மணிவரையிலும் நண்பர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். ஐந்து மணிக்குக் குளித்து முடிந்து எல்லோரும் மொட்டைமாடிக்குப் போனோம். மானசி, வம்சி, அஜி, பாஸ்கர், ஹரி எல்லோருமாக அம்மொட்டைமாடியை அகல் விளக்குளால் அலங்கரித்திருந்தார்கள். செம்மண் அகல்களில் தீப எண்ணெய் நிறைந்திருந்ததே தனி அழகு.
எங்கிருந்தோ சிந்து ஏழுமலை ஒரு பை நிறைய மத்தாப்புகளையும், பட்டாசுகளையும் கொண்டு வந்தான். நான் நேரம் பார்த்தேன். சரியாக 5.50 எனக்குள் ஒரு பரவசம் தொற்றிக் கொண்டது. பல லட்சம் கண்களோடு சேர்ந்து என் கண்களும் மலையின் திசையில் நிலைகொண்டது. மலை உச்சியை கருமேகங்கள் நிறைப்பதும், விலகுவதும் அட… அது ஒரு சுவாரசியமான ஏமாற்றம். பக்கத்து அறையில் படுத்திருந்த முத்துக்குமாரையும், ஆன்டணி சாரையும் எழுப்பினேன். பதறியடித்து எழுத்து வந்து மொட்டைமாடி வெறுந்தரையில் சப்பராங்கால் போட்டு உட்கார்ந்து கொண்டார்கள். மானசி முதல் மந்தாப்பைக் கொளுத்துவதற்கும் தீபம் ஏற்றுவதற்கும் சரியாயிருந்தது. எங்கிருந்தோ வந்த உற்சாகம் எங்கள் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. எல்லார் வீட்டு மொட்டைமாடிகளிலும் அதுவே பிரிதிபலித்தது. அடுத்த அரைமணி நேரத்திற்கு ஊரெங்கும் வான வேடிக்கையும், குதூகலமும், ஆன்மீக அனுபவமுமாகத் திகழ்ந்தது.
அகல் விளக்குகளின் ஒளி குறைதலுக்கு அஜி தனியே எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வம்சி இவைகளை ஓடிஓடி பல கோணங்களில் படமாக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்த ஒரு சிறு குழுவிடம் ஆன்டணி நீயாநானாவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை பரிதி அதில் மூழ்கியிருந்தார்.
ஷைலுவும், ஜெயஸ்ரீயும் ஒரு பெரிய மேசையில் தாங்கள் இதுவரை சமைத்த இருபத்தியோரு வகை உணவை மிக அழகாக மூடியிட்டு அடுக்கிக் கொண்டேயிருந்தார்கள். அதில் என்னைக் கவர்ந்த ஆறேழு வகை, காலிபிளவர் ப்ரை, முருங்கைக்கீரை மல்லாட்டை கலவை, பாகற்காய் வெங்காயம் சேர்ந்தொரு வறுவல், மூக்குகடலை, மொச்சை, பட்டாணி, பெரும்பயறு கலந்ததொரு சுண்டல், ஷைலஜாவின் பிரத்தேயக சேமியா பாயாசம். இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய பீர்க்கங்காய் காரக் குழம்பு. சிறுசிறு குழுக்களின் பேச்சினூடே சாப்பிட ஆரம்பித்தோம். ஒவ்வொருவருக்கும் முன் ஒரு மூன்றடிக்கு தலைவாழை இலை. பௌர்ணமி வெளிச்சத்தில் அதன் மஞ்சள் கலந்த பச்சை நிறம் மின்னியது.
உற்சாகமும், உணவும் கூடிக் கொண்டேயிருந்தது. ட்ரம்ஸ் சிவமணியை முத்துக்குமார் சாப்பிட அழைத்தான். அவர் பேசி முடித்து என்னிடம் தொலைபேசியைத் தரச்சொல்லி, ‘‘சாரி பவாண்ணே, போன வருட தீபத்துக்கு உங்க வீட்டு மொட்டமாடியிலதான் சாப்பிட்டேன். நாளைக்காலை பூனாவுக்கு ப்லைட் பிடிக்க அவசர அவசரமா போறேன். இடையில் இன்னொரு முறை வர்றேன். தீபத்துக்கு சமைச்ச அத்தனை வகையும் வேணும்’’ தொலைபேசியை முத்துக்குமார் கைகளுக்கு மாற்றிய என்னிடம் ஒரு பெருமிதமான சிரிப்பிருந்தது.
அதைத் தொடர்ந்து இன்னொரு தொலைபேசி அழைப்பு, இது ஷைலஜாவுக்கு, அவள் முதல் வார்த்தையிலேயே பரவசமாகி அதையும் என்னிடமே தந்தாள். ‘‘சார் நான் சப்தரிஷி, லா.ச.ரா பையன். பத்து வருசமா உங்களை பாக்கனுன்னு முயற்சிக்கிறேன். இன்னிக்கித்தான் வாய்ச்சது. உங்க ‘வம்சி’ முன்னால நிக்கறேன். அங்கிருந்த போர்ட்லதான் நெம்பர் எடுத்தேன். வீட்டுக்கு எப்படி வரணும்?’’ நான் ஆட்டோவிற்கு வழி சொன்னேன். அவரும் அவர் மனைவி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) ஆட்டோ கிடைக்காமல் நடந்தே மூணு கிலோமீட்டர் தூரம் வந்தார்கள். அவர் மொட்டைமாடியில் ஏறும்போதே பெரும் உற்சாகத்தைக் கூடவே கூட்டி வந்தார். அது எல்லோரையும் பற்றிக் கொண்டது.
நான் உங்களைப் பார்க்க வந்தது 49%. தான் ஷைலஜாவைப் பார்க்க வந்ததுதான் 51%. கணக்கு சரியா?
அதற்கும் நான் சிரித்துக் கொண்டேன்.
‘சிதம்பர நினைவுகள்’ என்னை உலுக்கியது. அதுக்கு அப்புறம்தான் ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’.
‘‘நேற்று நீங்க உங்க இப்லாகு-ல எழுதினதுவரை படிச்சிட்டேன் சார்’’ இது இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வாய்ஸ்.
அவர்களுக்கு ஷைலுவும், ஜெயஸ்ரீயும் தாங்கள் மொழிபெயர்த்த புத்தகங்களைக் கையெழுத்திட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர், அப்பாவின் ‘தொனி’யை மீண்டும் படித்தேன் பெரிய கலைஞன்தான் அவர் என அதிலிருந்த ஒரு பகுதியை அச்சுப் பிசகாமல் அப்படியே எங்களிடம் பகிர்ந்தார்.
‘அபிதா’வும், ‘பச்சைக்கனவும்’ வந்துவந்து போனார்கள். இடையிடையே கருமேகத்திற்கிடையே தீபம் மினுக்கிமினுக்கி எல்லோருக்கும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது.
ஜெயமோகனின் ‘அறம்’ கேட்டார். கொடுத்தவுடன் அதில் ஜெயமோகனுக்கு பதிலாக அவர் மகன் அஜியிடம் கையெழுத்து கேட்டார். அவன் முடியவே முடியாதென அடம்பிடித்தபோது என் தொலைபேசி வழியே ஜெயமோகனே வந்தார். நான் பெரும் சிரிப்பினூடே, ‘அஜி உங்களுக்கு பதிலா கையெழுத்து போட மறுக்கிறான் ஜெயமோகன்’ என்றேன். அவரும் சிரித்துக் கொண்டே தொலைபேசியை அஜியிடம் கொடுக்கச் சொன்னார். அவர் என்னமோ சொல்ல அவன் மிக வெட்கப்பட்டு, நாணிக் கோணி அப்புத்தகத்தில் கையெழுத்திட்டது பேரழகு.
நான் ஜெயமோகனிடம் ‘அஜி இப்போது ஐந்தாவது பந்திக்குப் பரிமாறுகிறான்’ என்றேன்.
அவர் ‘அவனை உங்கள் வீட்டிற்கு பஸ் ஏற்றுவதற்கு முன் ‘எதிரிகளை சம்பாதிப்பது எப்படியென்று அப்பாவிடமும், நண்பர்களை சம்பாதிப்பது எப்படியென பவா மாமாவிடமும் கத்துக்கோடா’ என சொல்லித்தான் பவா பஸ் ஏற்றினேன்’ என்றார். இருவருமே முடிந்தவரை சிரித்துத் தீர்த்தோம்.
இப்போதைக்கு எவரும் பேசுவதை நிறுத்துவதாயில்லை. என் கை கால்களைத் தனித்தனியே கழட்டிவிட வேண்டும் போலிருந்தது. தாங்கமுடியாத வலி உடலெங்கும் பரவியிருந்தது.
அவர்களை அப்படி அப்படியே விட்டுவிட்டு நானும் சிந்து ஏழுமலையும் பைக்கை எடுத்துக் கொண்டு நிலத்து கெஸ்ட் அவுஸ்க்கு போனோம்.
கெஸ்ட் அவுஸ் திறந்தே கிடந்தது. ஏதோ ஒரு அவசரத் தொலைபேசியின் அழைப்பின் பொருட்டு இத்தனை கொண்டாட்டங்களையும் இழந்துவிட்டு தீபம் பார்க்காமலேயே பஸ் ஏறிவிட்ட கட்டுரையாளன் அ.முத்துகிருஷ்ணன் படுத்திருந்த தடயத்தை மட்டும் விட்டு சென்றிருந்தான். இந்த வருடம் நிச்சயம் அவனால் அவ்வளவு அதிரடிக் கட்டுரைகளை எழுதவே முடியாது, அண்ணாமலையாரின் சாபம் அப்படி.
மேடைமீது நேற்று நண்பர்கள் குதூகலித்து முடித்த மிச்சமாய் வயலட்நிற ‘வோட்கா’ இருந்தது.
அதை பார்த்துக் கொண்டே நான் அப்படியே படுக்கையில் சரிந்தேன். திரும்பிப் பார்த்தால் ஏழுமலை சிறு குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான்.
எழுந்து வெளியே வந்து கிணற்றுத் திட்டின் மீதமர்ந்தேன். அங்கிருந்து தீபத்தைப் பார்த்தேன். நள்ளிரவிற்குப்பின் சுடர் பிரகாசமாய் எரிந்தது தெரிந்தது. ஆரவாரங்களின் அடங்கல்களில் எதுவும் பிரகாசமடைகிறது. அதை முழுவதும் தரிசிக்கவும், பருகவும் முடிகிறது. அந்நிலப்பரப்பில், சுற்றிலும் வயல்வெளிகளிள் அடர்பச்சையின் அசைவினில் அப்பாவின் நினைவு வந்தது.
பத்து வருடத்திற்கு முன் ஒரு தீபம் ஏற்றி முடித்த முன்னிரவில், ஷைலஜாவை தன்னருகே அழைத்து ‘தீபம் ஏற்றிட்டாங்களாம்மா’ என்ற வார்த்தையோடுதான் அவரின் உயிர்ச்சுடர் அணைந்தது. அவர் பேசிய கடைசி வார்த்தைகளும் அதுதான். எல்லாவற்றையும் தாண்டி அப்பாவை நினைத்து ‘ஓ’ வென கத்தி யாருமற்ற இந்த வனாந்தரத்தில் கொஞ்சநேரம் அழவேண்டும் போலிருந்தது எனக்கு.
– பவா செல்லதுரை (http://bavachelladurai.blogspot.in/2013/11/blog-post_20.html?m=1)
இப்படிப்பட்ட வாழ்க்கையை இந்த இலக்கிய மொக்கைகள் வாழ்வதால் தான் மக்கள் மீதான அரசின் அடக்குமுறையாகட்டும், அதற்கு எதிரான மக்கள் போராட்டமாகட்டும் எதற்கும் இவர்கள் வாய் திறக்க மறுக்கின்றனர் என உணர முடிகிறது.
சி.பி.எம். என்ற கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவரும், தமுஎகசவின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான பவா செல்லதுரை, தனது முகநூலில் ஒரு குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். திருவண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டதைப் பற்றி அவர் பரவசப்பட்டு சுகி.சிவத்துக்கு சவால் விடும் விதத்தில் எழுதியிருக்கிறார் இந்த கம்யூனிஸ்ட். அது ஒரு பக்கம் இருக்கட்டும்… தீபம் முடிந்த மறுநாள் இவர் நகர்வலம் சென்றிருக்கிறார். அப்போது, ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்று போலீஸ் வைத்த தட்டி கண்ணில் பட்டிருக்கிறது. அதில் திருடர்கள் என்ற அடைமொழியுடன் பலரது புகைப்படங்கள் இருந்துள்ளன.
அவற்றைப் பார்த்ததும் அண்ணன் என்ன எழுதுகிறார் என்றால், “ஊரே கொண்டாட்ட மனநிலையில் பரவசத்துடன் இருக்கும்போது, இப்படி ஒரு போர்டு வைப்பது ஊரின் கொண்டாட்ட மனநிலையை முற்றிலுமாக சிதைக்கிறது” என்கிறார். கொண்டாட்ட மனநிலையை கெடுக்கிறதாம். எத்தனை நெஞ்சழுத்தம்? இதை எழுதும் இந்த நபரை இன்னமும் கம்யூனிஸ்ட் என்று சொல்கிறது ஒரு கூட்டம். இந்த அற்பமான பிழைப்புவாதியின் வீட்டில் லெக் பீஸை கடித்து திண்ண நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிறார்கள் எழுத்தாளர்களும், கலைஞர்களும், பத்திரிகையாளர்களும்.
அந்த முகநூல் குறிப்பில் ‘ஏழைன்னா தொக்கா? கிரிமினல் எம்.பி.யை இந்த மாதிரி செய்வியா? எம்.எல்.ஏ.வை இந்த மாதிரி செய்வியா?’ என்று கோயிந்துத்தனமாக கொந்தளிக்கிறார் என்றாலும் அவருடைய மெயின் பாய்ண்ட் இதுதான். மொத்தமாக திருவண்ணாமலையில் ஏதேனும் ஆன்மிக நிகழ்வு நடந்தால் அண்ணன் பரவச நிலைக்கு சென்றுவிடுகிறார் என்பது அவர் எழுதுவதைப் படித்தாலே தெரிகிறது. இந்த வருட தீபத் திருநாளுக்கு பல ஊர் நண்பர்களை அழைத்து விருந்து வைத்ததைப் பற்றி, தன் வலைதளத்தில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்… பக்தி பரவசத்தில் திளைக்கலாம்!
வினவு ஆசிரியர் குழுவிற்கு,
ஏற்கனவே உங்களுடைய பல கட்டுரைகளுக்கு நான் மறுப்பு விருப்பு இரண்டையும் தெரிவித்துக் இருக்கிறேன்.ஆனால் இந்த கட்டுரை எழுதிய உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.முற்போக்கு என்ற பெயரில் நடைபெறும் பம்மாத்துகளுக்கு அளவே இல்லாமல் போய் வரும் இந்த தமிழ் சூழலில் இப்படி ஒரு கட்டுரை மிகவும் தேவை.பாவாவைப் போலவே எங்கள் ஊரில் ஒரு இலக்கிய ஏஜென்ட்டை எனக்கு தெரியும்.பதினைந்து வருடங்களுக்கு முன்னாலேயே இலக்கியத்திற்கும் ஏஜெண்டுகள் வந்து விடுவார்கள்.என்ன எழுதுகிறோம் என்பது பின்னுக்கு தள்ளப் பட்டு எப்படி சந்தைப் படுத்துகிறோம் என்பது முன்னிலை படுத்தப் படும் என்று கூறி இருக்கிறேன். இது போன்ற பம்மாத்துக்களை கண்டு ஒவ்வொரு முறை நான் குமுறிய குமுறலுக்கு இது ஒரு நல்ல தரமான பதில் கட்டுரை. நன்றி.
அன்புடன் என்றும்
உண்மை விரும்பி.
[…] வசவு இணையதளம் நான் தவறாமல் […]
இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. பாரதியார் மட்டும் தான் சுதந்திரப் போராட்டம் தீவிரமான காலத்தில் கவிதை எழுதினார் என்று நினைக்கிறீர்களா? இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலைஞர் மட்டும்தான் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாரா?
விளம்பரம், அண்ணே… விளம்பரம்…!!
விளம்பரம் பண்ணலேன்னா ஒரு பயலும் திரும்பிப் பார்க்க மாட்டேங்குறான். செத்துப் போனப்புறம் அந்தக் கவிதையை, கதையை வெளியிடுறவனைத் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். உயிருடன் இருக்கும்போதே விளம்பரம் வேண்டுமென்றால், இப்படியெல்லாம் சிக்கன் பிரியாணி போட்டு, சினிமாக்காரனுடன் தொடர்பு வைத்து, அதை வெளியில் சொல்லி பிரபலப்படுத்தினால் தான் ஆயிற்று.
சமீபமாக கவிஞர் என்று சொல்லிக்கொள்ளும் வார்த்தைச் சுருக்கி, விஜய் என்பவர் மட்டும் எப்படி பிரபலமானார். நல்லவேளை அவர் நடித்த படங்கள் நன்றாக ஓடவில்லை. அதனால், கார்க்கி வைரமுத்து நடிப்பைப் பார்க்க கூடிய அவல நிலையிலிருந்து தப்பி விட்டோம்.
இது விளம்பர உலகம். அவ்வளவு தான். உங்களின் தலைப்பு மிகச் சரி.
அகில உலக இலக்கிய செம்மல்,சேவைநாய் அகம்…மன்னிக்கனும் சேவைநாயகம்,
உடலுறவு நிபுணர் சாரு நிவேதிதாவைப் பற்றி ஆவணப் படம் எடுக்காத,உஙகளை
தொல்காப்பியர்/கம்பர் ஆவி மன்னிக்காது!
சூப்பர்…
அதற்குள் அவசர அவசரமாக நம் உள்ளொளி டீ மாஸ்டர் திரு சுயமோகம் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று ‘நகைச்சுவையாக’ எழுதியிருக்கிறார். ம்ம்… அடி விழ வேண்டிய இடத்தில் குறி தப்பாமல் விழுந்திருக்கிறது 😉
உங்களை தேவாசுரர்கள் என்றும் புகழ்ந்திருக்கிறார்..!!!
மொத்த குறைந்தபட்ச சிந்தனையாளர்களும் ஒரு மனிதனை சென்று சேர்வது உங்கள் பொச்சை ஏன் எரிக்கிறது நண்பா?…இத்தனை பேர் அவனை சென்று சேர அவன் எக்காலத்தில் இருந்து மனிதர்களை உபசரித்து இருப்பான்…????ஒரு பத்தாண்டுக்கு முன்பே கூட, அவன் இவ்வளவு மனிதர்களின் அன்பை சம்பாதிக்கும் முன்பே கூட, அவனைத் தேடி இது போல மனிதர்கள் வந்தார்கள்..ஒரே ஒரு கவளம் சோற்றை உருட்டிக்கொடுத்து அவர்களை மகிழ்வித்திருக்கிறான்… இந்த உண்மை தெரிந்தும் உன்னை மிருகமாக்குவது எது நண்பா????………
//soonaapaanaa
Who is this fan…?
Hello fan … did u read this story fully?
சூனாபானா
மூணு நாலு வீடு, போலோ கார், சில பல ஏக்கர் நிலம், ஆ ஊன்னா விருந்து, கூட்டம் இதெல்லாம் ஒரு பண்ணையார், ஜமீன் மாதிரி தெரியலை?
பவா செல்லத்துரை நல்ல கதை சொல்லின்னா அந்த இன்ஜினியரிங் ஓனர் எப்புடி உழைச்சு வந்தாருங்கிற கதையை சொல்லலாமில்லையா?
அம்புட்டு ஏன், இந்தாளு ஏன்யா தன்னை கம்யூனிஸ்ட்டுன்னு விளிக்கிறாரு? தீபத்துக்கு ஒரு கிலோ நெய்ய மாக்சிஸ்ட்டு குடும்பத்திலிருந்து போவுதுன்னு வெட்கம் கெட்டு எழுதியிருக்காறு. இதெல்லாம் தெரியாம நீ மிருகம் மாதிரி பேசாதா!
// எழுத்தாளன் என்பவன் சுய மரியாதை மிக்கவனாக, மற்ற பிரிவினரைக் காட்டிலும் சமூகப் பொறுப்புணர்வு மிக்கவனாக இருந்த காலம் ஒன்று உண்டு. அந்த குறைந்தபட்ச நேர்மையோ, தன்மானமோ இவர்களிடம் இல்லை. // (Y)
இந்த லட்சணத்தில் சாருவை விமர்சனம் செய்கின்றனர் இந்த டுப்பாக்கூர் இலக்கியங்கள் , இந்த இலக்கிய் அயோக்கிய பயலுக எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் 😉
// திருவண்ணாமலை ஊர் பெயரைக் கேட்டாலே ஒரு எரிச்சல் வரும். //
இப்படி பெயரைக் கேட்டே எளிதில் எரிச்சல் படுவது ஆரோக்கியமல்ல.. நாட்டுல நாலு பய சந்தோசமாக இருந்திடப்படாது என்று நம்பும் நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிடும்..
// ஒரு ஞாயிறு நேரத்து மாலையை இலக்கிய வம்புகளால் இட்டு நிரப்பலாம் என்று கிளம்பினேன். பிரசாத் லேப் அரங்கில் நிகழ்ச்சி. செல்லும் வழியில் முகநூலைத் தோண்டிய போது பவா செல்லதுரை எழுதியிருந்த குறிப்பொன்றை படிக்க நேர்ந்தது. //
ஞாயிற்றுக் கிழமை மாலை நேர இலக்கியக் கூட்டத்துக்குக் கூட மறக்காமல் மடிக்கணினியோடு போயிருக்கிறீர்கள்..?!
// களக்காடு அக்ரஹாரம் பகுதியில் உள்ள பெரிய தெருவின் திண்ணைகளில் பேசும் தொந்தி புரளும் பார்ப்பனர்களின் வெட்டி அரட்டை சுவாரசியம் கூட அதில் இல்லை. //
மேற்படி அக்ரகாரத்தை குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு அந்த அரட்டையில் என்ன சுவாரசியமோ..?! திண்ணையில் தொந்தி புரள்வதைப் பார்க்க சுவாரசியமாக இருந்ததோ..?! பிரியாணி சாப்பிட்டால் தொந்தியுடன் திண்ணையுமல்லவா புரளும்.. எங்கெல்லாமோ சுவாரசியத்தை கண்டுபிடித்து ரசித்த நீங்கள், திருவண்ணாமலை என்ற பெயரை கேட்டாலே எரிச்சல் படும் அளவுக்கு இப்படி மாறிப் போயிருக்கிறீர்கள்..
// இந்த அசிங்கமான சொறிந்து விடும் பண்பை இலக்கியம் என்ற பெயரில் அடுத்தத் தலைமுறைக்கும் கடத்துவதுதான் இதில் உள்ள மெய்யான அபாயம். //
இலக்கியவாதிகள் ஒருவரை ஒருவர் பார்க்கும் இடத்திலெல்லாம் குடுமியை பிடித்துக் கொண்டு அடித்துக் கொள்ளவேண்டும் என்ற மரபு தொடர்வதால் மட்டும் யாருக்கு என்ன நன்மை..
// இவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஒட்டி உறவாடி, அவர்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வரும் பாணபத்திர ஓணாண்டிகள்! //
இவர்கள் பிரியாணி சாப்பிடவோ, திருவண்ணாமலையைச் சுற்றிப் பார்க்கவோ வசதியில்லாத ஓணாண்டிகளாகத் தெரியவில்லையே.. இலக்கியவாதிகளை நண்பர்கள் வட்டத்துக்குள் கொண்டு வந்து இணைக்கும் அரிதான ஒரு சிலரையும் 23ம் புலிகேசியாக்கி இலக்கியவாதிகளின் ஒன்று கூடும் மகிழ்சியில் மண்ணையள்ளி போடாதீர்களய்யா..!
Hello law Makker ammpi,,,
Now u start to flay the law points one by one!!!
Beef Beriyani Ok va ammpi?
அட நம்ம பவாவுக்கா வினவு இவ்வளவு மெனக்கெட்டு ஒரு பதிவு எழுதுகிறது என்ற ஆச்சரியத்துடன் படிக்கத் துவங்கினேன். ஏனென்றால் நாம் விமர்சிப்பதற்குக் கூட தகுதியற்ற இதுபோன்ற அற்பர்களைப் பற்றி பதிவு எழுத வேண்டுமா என்ற சலிப்புதான். ஆனால் கட்டுரை பவாவை மட்டுமல்லாது அற்பர்களால் கோர்க்கப் பட்ட இந்த இலக்கிய மொக்கை மாலைகளில் ’அலங்கரிக்கும் பூக்கள்’ அனைத்தையும் அம்பலப்படுத்தும் விதமாக இருப்பதை வரவேற்கிறேன்.
///தமிழ்த் தேசியம், காவி தேசியம், போலி கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள், என்.ஜி.ஓ. காரர்கள், பத்திரிகையாளர்கள், சிறுபத்திரிகை இலக்கியவாதிகள், சினிமா படைப்பாளிகள் என பன்முகங்கள் சங்கமிக்கும் அந்த விழா சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று தோன்றியது. ///
இந்த சுவாரஸ்ய கூட்டணி இந்நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல… இவர்கள் அங்கம் வகிக்கும் த.மு.எ.க.ச என்ற அமைப்பே இத்தகைய சுவாரஸ்யமுடையதுதான். ச.தமிழ்ச்செல்வன் முதல் ஆதவன் தீட்சன்யா என்று நீளும் பட்டியலில் கவின்மலர் வரை அனைவரும் பவாவை ஒத்த அற்பர்களே…
இலக்கிய மொக்கைகளை விமர்சிக்கும் இந்த பதிவிற்கும் எனது வாழ்த்துக்கள்!
– இரணியன்
பவா பற்றிய வினவின் பார்வை முதலில் சரியானதாக தோன்றியது. அதாவது business network மாதிரி இது ஒரு பிரபலங்களின் network.இந்த தொடர்புகளை சரியாக பயன்படுத்துவதன் மூலம் அந்த குழுவிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளை தீர்த்துக்கொள்ள முடியும். திரைத்துறை கலைஞர்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு, வசதிபடைத்தவர்கள் அவர்களின் பிரபலத்திற்கு என்று ஒவ்வொருவரும் மற்றவரை பயன்படுத்துக்கொள்கிறார்கள். ஆனாலும் குழுவிலுள்ள ஒவ்வொருவரிடத்திலும் ஏதோஒரு தனித்தன்மை இருக்கவேண்டும். கலைஞன், வசதியுள்ளவன் இந்த மாதிரி. ஏதோ ஒரு விதத்தில் இவர்களை இணைக்கும் சரடாக பவா இருந்திருக்க வேண்டும். மனிதர்களை நிஜமாக நேசிக்காத ஒருவனால் இந்த மாதிரி வேஷம் போடமுடியாது.
வினவின் இந்த பதிவை படித்த பிறகுதான் பவாவை பற்றியே எனக்கு தெரிய வந்தது. ஜெமோவின் தளத்தில் இந்த நிகழ்ச்சியை “இரு விஷயங்கள்” என்ற தலைப்பில் கமலின் பிறந்தநாளுடன் சேர்த்து எழுதியிருந்தார். அப்போது பவா நிகழ்ச்சியின் மேல் ஆர்வம் பிறக்கவில்லை. ஆனால் வினவில் அவர் ஒரு தரகர் என்ற பொருளில் எழுதியிருந்ததை படித்தபின்புதான், பவா சம்பந்தமாக இணையத்தில் தேட ஆரம்பித்தேன். மேலும் இந்த “மறுமொழிகளில்” கார்த்திகை தீபத்தை பற்றி எழுதியிருந்தது மேலும் ஆர்வத்தை தூண்ட செய்தது. மனிதர்கள் கூட்டத்தின் நடுவே இருக்க விரும்பும், அல்லது அதிக நட்புகளை விரும்பும் ஒருவனால்தான் இதை இயல்பாக செய்ய முடியும்.
என்னுடைய குழப்பம் என்னவென்றால் பவாவை பற்றி உயர்ந்த எண்ணத்தை கொள்வதா? அல்லது அவரை இகழ்வாக எண்ணுவதா? மொத்தத்தில் மதிப்பதா? அல்லது மிதிப்பதா?
எனக்கு நட்பு வட்டம் கிடையாது. யாரிடமும் நான் நெருங்கி பழகியதே கிடாது. எல்லோரிடமும் ஒரு அளவோடுதான் பழக்கம். அதாவது எதிலுல் ஜாக்கிரதையாகவே இருக்கிறேன். அதாவது எனக்கு நட்பு வட்டம் தேவையில்லை. எனக்கு தனியாக இருப்பதே பழக்கம். இது எப்படி சாத்யமோ அதேபோல் இதற்கு மறுபக்கமும் இயற்கையில் சாத்யமாக இருக்கவேண்டும். அதாவது பவா மாதிரி ஆட்கள்.
பவாவை பார்த்து நானும் இதேபோல் ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டால் எனக்கும் பயனுண்டே. அவர்களிடல் ஒருவர்கொருவரை அறிமுகப்படுதி, ஒத்தாசை செய்து காசு பார்க்கலாமே என்று நினைத்து செய்தால் அது எனக்கு ஒரு மனக்கொந்தளிப்பில்தான் போய் முடியும். மேலும் பவா காசு பார்த்திருப்பார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. காசில்லாமல் எந்த ஏமாளி இதை செய்வான் என்ற பொதுப்புத்தியின் அடிப்படையில் இந்த பதிவை சரியானதாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் நட்புகளின் மத்தியில் இருப்பது அதில் சந்தோஷம் அடைவது என்பது தெரியாத ஒருத்தன், காசுக்காக, ஆதாயத்துக்காக் என்று இதை ஒற்றை வரியில் புரிந்து கொள்ளலாம்
சாராம்சமாக சொல்லவேண்டுமென்றால் பவா தன்னளவில் இயல்பாக இருக்கிறார். அதில் அவருக்கு புகழும், பணமும்(?) ஒருபக்கவிளைவாக வந்திருக்கிறது. இந்த இயல்பு அமையப்பெறாத மற்றவர்கள் ஒன்று சேர்ந்து இதை சிறுமைப்படுத்தி, பரிகசித்து அதன்மூலம் தாங்கள் வாழும் வாழ்க்கையை முழுமையாக உண்ர்கிறார்கள்
முழுக்கமுழுக்க பவாவும் அவருடைய பிரபலங்களின் கூட்டமும் உன்னதமானது என்று சொல்லும் அளவுக்கு நான் வெகுளியல்ல. ஆனால் ஆதாயம் ஒன்ரையே குறிக்கோளாக கொண்டு இது செய்யப்பட்டது என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
ஜெமோவின் பவா பதிவை மீண்டும் படித்தேன். அதில் “மேலும் ஒரு நாள் தங்க நேர்ந்ததால் பவா நிகழ்ச்சிக்கு சென்றேன்” என்று எழுதியிருக்கிறார். அதில் ஒரு உள்குத்து இருப்பதாக அதாவது நான் ஒரு இலக்கியவாதி, எனக்குன்னு ஒரு இது இருக்கு. நடிகைகள் புரோட்டா கடை, நகை கடை திறப்புக்கு போற மாதிரி இதுக்கெல்லாம் நான் போக மாட்டேன். அன்னிக்கு சென்னைல இருந்ததால் சரி நேரம் போகணுமேன்னு போனேன். இந்த மாதிரி நான் பொருள் எடுத்துக்கொண்டேன். இதுனால ஜெ திமிர் பிடித்தவர் என்று எடுத்துகொண்டு அவரி நான் தவிர்த்தால் அவருடைய மற்ற சிந்தனைகளையும் நான் இழப்பேன்
மொத்தத்தில் total package ஆதான் ஒவ்வொருவரையும் எடுத்துக்கொள்ள வெண்டும். இதுதான் என் கருத்து
மிகச் சிறந்த மறுமொழி.
எனக்குத் தெரிந்த ஒருத்தர் இது போல எல்லாரிடமும் பழகுவார். சாப்பாடு போடமாட்டார். ஆனால் நிறைய நண்பர்கள் கொண்டவர். ஒருவரை மற்றவரோடு கோர்த்து விடுவார்.வருடம் ஒரு முறையோ இரு முறையோ கலைநிகழ்ச்சி நடத்தி மார்க்கெட் குறைந்த கலைஞர்களை கூட்டி வந்து டிக்கட் போட்டு வசூல் பண்ணி விடுவார். மேடையில் அவரை எல்லோரும் புகழ்வார்கள்.வசூலாகும் பணம் ஏழைகளின் உதவிக்கு, சுனாமிக்கு என்பார். உண்மையில் நடப்பதாகத் தெரியவில்லை.
இவர் அந்த வகை போலத் தெரியவில்லை.நீ எனக்கு சொரிந்து விடு நான் உனக்கு என்பது எல்லா இடத்திலும் நடப்பதுதான்.
வினவில் வரும் கட்டுரைகளின் பெரும்பாலான கருத்துக்களோடு நான் உடன்படாவிட்டாலும்
எழுத்து நடை, ஓட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது.
நேர்மையான பதிவு.
// மனிதர்களை நிஜமாக நேசிக்காத ஒருவனால் இந்த மாதிரி வேஷம் போடமுடியாது.//
அய்யா முதலாளி கருணாவுக்கும் பவாக்கும் உள்ள நட்பு எப்படி? ஒரு சுயநிதிக் கல்லூரி கொள்ளை முதலாளியோட ஒரு கம்யூனிஸ்ட் எப்படிய்யா பிரண்ட் ஷிப் வைக்கிறது?
//மனிதர்கள் கூட்டத்தின் நடுவே இருக்க விரும்பும், அல்லது அதிக நட்புகளை விரும்பும் ஒருவனால்தான் இதை இயல்பாக செய்ய முடியும்.//
போலோ காரில் பவனி, கெஸ்ட் ஹவுஸ், இயற்கைக்கு தோட்டம், நிலம், மலை, குடிக்க வோத்கா, தின்ன நாட்டுப்புற நான்வெஜ் இப்புடி சகல வசதிகளும் இருக்கிற இந்த மண்சார்ந்த டாஸ்மாக்கில் கூடினோம், தண்ணியடிச்சோம், இலக்கியம் ரசிச்சோம்னு சொல்ல வாரீயிளா? இதுனாலா பவாக்கு ஆதாயமில்லைன்னு எத வைச்சு சொல்றீங்க?
//இந்த இயல்பு அமையப்பெறாத மற்றவர்கள் ஒன்று சேர்ந்து இதை சிறுமைப்படுத்தி, பரிகசித்து அதன்மூலம் தாங்கள் வாழும் வாழ்க்கையை முழுமையாக உண்ர்கிறார்கள்//
ஒரு டூரிஸ்ட் கைடு, லொகேஷன் மானேஜர், வட்டிக்கு வாங்கித் தரும் நட்பு, ருசியான தீனி, இமேஜூக்கு க்ம்யூனிஸ்ட் முத்திரை, ………..இதே திருவண்ணமலையில இருந்து விவசாயசம் செய்யமுடியாம கோயம்பேடுல மூட்டை தூக்குற தொழிலாளிங்க மத்தியில இந்த ஷோக்கு பேர்வழியை ரசிக்கிறதுக்கு உம்ம மாதிரி பாசிஸ்ட்டால மட்டும்தான் சார் முடியும்.
ஒரு மனிதனுக்கு சக மனிதன் மேல உள்ள கடமை என்ன? அப்படின்னு ஏதாவது இருக்கா? மனிதனுக்கு தன் மேல பாசம் இருக்கு. தான் சௌகர்யமா இருக்கணும்னு நினைக்கிறான் அதுக்கு முயற்சி பண்றான். தனக்கு அடுத்தபடியா குடும்பத்து மேல பாசம் இருக்கும். அதுக்காக சில பல தியாகங்களும் பண்றாங்க. ஆனா சக மனிதன்மேல அப்படி ஒரு பாசம் majority மக்களுக்கு இயல்பா வரலையே? இதுக்கு என்ன செய்ய? சக மனிதர்கள் விபத்துல, சண்டைல, சுரண்டல்ல சின்னாபின்னமா போறத தொலைக்காட்சில பார்த்துக்கிட்டே வாய்க்கு ருசியா திங்க முடியுதே? இதுக்கு என்ன பண்ண?
இப்ப நாம தேனீக்கள்லேர்ந்து பரிணாம வளர்ச்சில வந்திருந்தா, “ஒருத்தன் என்ன அடிச்சுட்டாண்டான்னு” குரல் வந்தவுடனே சும்மா தற்கொலைபடையா மாறி நம்ம காலனிதான் முக்கியம், தனி நபராகிய நாம் முக்கியமில்லைன்னு இயற்கையாகவே பாய்ஞ்சிருப்போம். அல்லது இந்த ஆடு, மடு, யானை இந்த மாதிரி ஜந்துக்கள்லேர்ந்து வந்திருந்தா அடிதடி இல்லாம சாத்வீகமா இருந்திருப்போம். ஆனா நாம் இந்த குரங்குக்கு முன்னோடிலேர்ந்துல்லா வந்துருக்கோம். நமக்கு சமீபத்துல இருக்கறது சிம்பன்ஸி. அது கூட்டங்கூட்டமா போய் வேட்டையாடுது. சைவம் அசைவம் ரெண்டும் சாப்பிடுது. அதே மாதிரி நாமும் போர் செஞ்சு சக மனிதர்க்ளை கொன்றொழித்திரிக்கிறோம். அதுலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா வள்ர்ச்சி அடைஞ்சி இப்ப நூதனமா சுரண்டி (அதாவது சீனாவுல இந்த கரடியை கூண்டுல அடைச்சி அதுலேர்ந்து bile எடுக்கற மாதிரி) அவனோட தேவைகளை பூர்த்தி பண்ணறேங்கற பேர்ல எல்லாவிதத்திலயும் சகமனிதனினை உறிஞ்சி வாழ்ந்துக்கிட்டிருக்கோம்
அப்ப இதுதான் மனித குணத்துக்கான, இயற்கை மனிதனை அமைத்த விதத்திற்கான ஒரு நடைமுறையில் செல்லுபடியாக கூடிய வாழ்க்கைமுறை. இல்ல இல்ல நாம புரட்சில மாத்துவோம்னா, ஏற்கனவே சுரண்டி கொழுத்துருக்கவன் கைலதான் எல்லா ஆயுதமும், அதிகாரமும் இருக்கு. அவனே எங்கடா சண்டைக்கு, நான் புதுசா கண்டுபிடிச்ச ஆயுதத்தை பிரயோகிக்க வசமா எவனும் சிக்கமாட்டேங்கறானேன்னு இருக்கான்
இதுல போயி, அங்க பாருங்க ஒரு புரோகர் பய பெரிய ஆளாயிட்டான், இங்க பாருங்க இவன் ஜால்ரா அடிச்சி பெரிய ஆளாயிட்டான்னா, ஒவ்வொருத்தனும் தனக்கு எது இயல்பா வருதோ அப்படித்த்தான வாழமுடியும். மேலும் சட்டத்துலேயே வேற அது தப்புன்னு சொல்லலை
மேலும் தகிடுதத்தம் பண்ணி ஒருத்தன் பெரிய ஆளா வந்தான்னா, அப்படி செஞ்ச எல்லாரும் பெரிய ஆளா வந்ததில்ல. அதுவும் ஒரு தொழில் மாதிரிதான். இருக்கதிலேயே கஷ்டமான தொழில் அதுதான்.எல்லாத்தொழில்லயும் எல்லாரும் பெரிய ஆளா வரதில்லையே. அந்த பெட்டிக்கடைக்காரன் இன்னும் பெட்டிக்கடையேதான் வச்சிகிட்டிருக்கான்.
ஒரு வார்த்தைலை சொல்லணும்னா, பலர் ஆடு மாடு மேய்ச்சிக்கிட்டிருக்காங்க, சிலர் மனுசனையே மேய்ச்சிக்கிட்டிருக்காங்க. அதுதான் திறமை, அறிவு, neural circuit, DNA, சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம்…இத்யாதி, இத்யாதி
பவாவோட பதிவுகளை படிச்சேன் அதுல வீடு கட்டறதுக்கான சித்தாள், மேஸ்திரி இவங்களையெல்லாம் பார்த்து “சே, என்ன அற்புதமான வாழ்க்கை. சிரிப்பும் களிப்புமா” அப்படின்னு வியக்கறாரு.ஆனா நான் வீடு கட்டும்போது அவங்கள பாத்து என்ன குற்றவுணர்ச்சிதான் வந்தது. நம்ம சௌகர்யமா இருக்கோம் இவங்க இல்லையேன்னு
ஆயிரம் நண்பர்கள். அதுல பாதிக்கு மேல பிரபலங்கள். அப்ப அவங்களோட ஆளுமை, ego எப்படி இருக்கும்னு சொல்ல தேவையில்லை. இதுல பாதி பேரு அடுத்தவங்களை பத்தி புகாரா சொல்லிட்டிருப்பான், நேரடியா சொல்லுவான், நாசூக்கா சொல்லுவான், தண்ணி போட்டு ஒளறுவான். இன்னும் பாதி பேர் ஏதாவது சான்சு கேட்டு நச்சரிப்பான். இன்னும் பாதி பேர் அகால வேளைல வந்து வக்கணையா தின்னுட்டு கிச்சன், டாய்லெட்டுன்னு எல்லாத்தையும் நாறடிப்பான். இப்ப இவங்களையெல்லாம் பொறுமையா, அன்பா, சிரிச்ச முகத்தோட handle பண்ணணும். ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல வருசம் 365 நாளும். ராப்பகலா, வருசா வருசம். அப்படி இவர் 20 வருசத்துக்கு மேல பண்ணியிருப்பார்னு நினைக்கிறேன்.அப்ப ஒரு நாள் சண்டை வரும் ,மறு நாள் மன்னிப்பு கேட்கணும், பழசையெல்லாம் மறந்துட்டு சிரிச்சி பேசி ஜாலியா இருக்கணும். இப்படி யாரால இருக்கமுடியும்? மனிதர்கள் சிறுமையாய் நடந்து கொண்டு, சின்ன பெரிய துரோகங்கள் செய்தாலும், திருப்பி திருப்பி மனுசந்தான் முக்கியம்னு பாக்கற ஒவ்வொரு புதுமனிதனையும் முன்முடிவு இல்லாம அணுகக்கூடிய இயல்பு இருக்கறவனாலதான் இது சாத்யம். என்னக்கேட்டா பவாவை பேசாம வெளிநாட்டு தூதரா போடுங்கன்னு சொல்லுவேன்
அதுனால பவா காசு அடிச்சாருன்னு ஒத்த வார்த்தைல அவரோட 20 வருட வாழ்க்கையை சிறுமைப்படுத்தறது, நம்மை நாமே சிறுமைப்படுத்திக்கொள்வதாகும்
நமது இலக்கு ‘அழைத்த குரலுக்கு ஓடோடி வந்து உழைப்பேன்’ என்று தனது குடும்பத்திற்கு சொத்துக்களை சேர்த்துக்கொண்ட அரசியல்வாதிகள் தான் ….!இவர்கள் நடத்தும் வாரிசு அரசியலால் குட்டிச்சுவரான நமது நிலை குறித்துத்தான் நாம் அதிகம் கவலைப்படவேண்டும் .
சமூகத்தில் இலக்கியத்தொடர்புள்ள வெகு சிலருக்கே அறிமுகமாகி இருக்கும் தனிநபர்களின் எழுத்துக்கள் குறித்தே நாம் அதிகம் விமர்சிக்க வேண்டும் …..அவர்களுடைய சொந்தவாழ்க்கையில் ….நிகழ்வுகளில் அதிகம் அக்கறை செலுத்த தேவையில்லை அவர்கள் அரசியலுக்கு வராதவரை!!!
தினா
பவா மாறி ஆளுங்கதான் போலி கம்யூனிஸ்டுகட்சிகாகார இலக்கியவியாதிங்களுக்கு ரோல் மாடல்! இத எழுதாம வுட்டா நல்ல இளைஞருங்க பலரை காயடிக்காம உட மாட்டாங்க, தெரிஞ்சிக்குங்க!
கதை இங்குதான் ஆரம்பிக்கிறது.. அங்குதான் முடிகிறது என்று படைப்புகளை விமர்சிக்கும் “வினவுத்தனம்” எனக்கு எப்போதுமே உடன்பாடானது அல்ல. இதிலும் அப்படித்தான்.
ஆனால் இந்த கட்டுரையில் பவா செல்லத்துரை பற்றிக் குறிப்பிட்டிருப்பவை உண்மையே. கார்ப்பரேட் சாமியார்கள் உருவானது மாதிரி “கார்ப்பரேட் இலக்கியர்கள்” உருவாகிவிட்டார்கள். (வைரமுத்து போல) அங்கமெல்லாம் பரவிய புற்றுநோய் போல, எங்கும் பரவி நிற்கும் முதலாளித்துவ சமுதாயத்தில் இப்படித்தான் நடக்கும். பவாவை, “எழுத்து நீரா (ராடியா)” என்று விளிக்கலாம் போல.. அவ்வளவு “திறமையாக ” செயல்படுகிறார்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விசயம்… நடையில் தென்படும் எள்ளல். எழுதியவருக்கு வாழ்த்துகள்!
” பெரும்புகழ்பெற்ற வசவு இணையதளம் நான் தவறாமல் வாசிக்கக்கூடிய ஒன்று. தமிழில் அசலான நகைச்சுவையை அளிக்கும் இணையதளங்களில் இதுவே முதன்மையானது.” என்கிறார், இ.வ. ஜெயமோகன்.
கீபோர்ட் ஆர்ட்டிஸ்ட் கேரக்ட்டரில் நடிகர் வடிவேல் எப்படி பின்னிஎடுப்பாரோ, அப்படி இவர், தமிழ் இலக்கியத்தை, கீபோர்ட் வைத்து பின்னிஎடுக்கிறார்! அதனால், இவர் இலக்கிய, வடிவேல் ஆவார்! ந.வ., க்கும், த.இ.வ. க்கும், வித்தியாசம் என்னவென்றால், முன்னவர் நகைச்சுவை இயல்பாக, இருக்கும், பின்னவர் நகைச்சுவை குரூரமாக இருக்கும். அதற்கான உதாரணம், ”வினவு” தளத்தை, ”வசவு” தளம் என்று, இவர், பெயர் சூட்டி மகிழ்வது!
ஏனைய வறட்டுவாதிகள்போல், தமிழ் இலக்கியத்தில், இவர் அறிவு ஊனமாக பிறக்கவில்லை! இவர்,”உள்ளொளி” வரம்பெற்ற இந்து ஞான மரபில், தோன்றியவர்!
எனவே, ஒரு நிகழ்வை, விவாதம் மூலமாகவோ, தர்க்கத்தின் அடிப்படையிலோ ஆராயவேண்டிய அவசியமில்லை! ”ஆண்டவன் சொல்றான், அருணாசலம் முடிக்கிறான்!” என்ற, சினிமா ரஜினி போன்று, தமிழ் இலக்கிய ரஜினி இவர்!
எனவே, இவருடைய அடிப்பொடிகளை, பக்தக்கோடிகளை வழிநடத்தி, இவர் இலக்கிய நகர்வலம் வரும்வேளை யாரவது, தும்மினாலோ, இருமினாலோ, விக்கினாலோ இவர், கூகுளாடி விடுவார்! மற்றப்படி, ஸ்வரம்சேர்த்து பாடினால், கைப்பிடித்து, தமிழ் இலக்கியத்தின் கரைச்சேர்த்துவிடுவார்!
இப்படித்தான்,…பவா செல்லத்துரைப்பற்றிய வினவுக்கட்டுரை, இவர் மீது முள்ளாய்படர்கிறது! உலகமே காறி உமிழும், சுயமோக இழிவு!, சுயஅரிப்பாகி முற்றியநிலையில், பார்வையாளர்களையும் சொரியச்சொல்லி ஏங்கும் நோயாளியின் உடல் மொழிதான் இவர்களின் இலக்கிய மொழி !
[ஊ.ம்]
* “”எல்லா உரைகளும் பவா என்ற மனிதனின் பிரியத்தைப்பற்றியவையாகவே இருந்தன. பிரியத்தைக் கொஙண்டாடக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகவே அது நடந்து முடிந்தது்”
* “அத்தனை வெளிச்சத்திற்குள்ளூம் அவர் (கமல்)வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் இடத்தைக் கண்டுகொள்வது ஆச்சரியம்தான். சென்னையின் உச்சநிலைமனிதர்கள் சூழ்ந்த அந்த இடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சக எழுத்தாளரிடம் தெருமுனை டீக்கடையில் நின்று பேசிக்கொள்ளும் உணர்வே இருந்தது.”
சுய மோகியின் நோய் குறி இது! சொரியச்சொல்லி கழுத்தை தூக்கி காட்டும் அஃறிணையின் உடல்மொழி அல்லவா இது!
தமிழக சுழலில் விவாதிக்க வேண்டிய எராளமான முக்கியப் பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால், பவா செல்லதுரையை குறிவைத்து வினவு தொடுத்திருக்கும் தாக்குதல் ரசிக்க இயலவில்லை. தென்னிந்தியாவின் பல முக்கிய ஆளுமைகள் பாவாவின் ஒப்பனையற்ற கருப்பு நிறத்தாலும் கதை செல்லும் நேர்த்தியாலும் தோழமையை வளர்த்து வருகிறார்கள். பவா பிரியாணிகளால் யாரையும் வீழ்த்திவிடவில்லை. பிரியாணிக்கி அப்படி ஒரு மகிமை இருப்பதாக நம்பும் உங்கள் மதிப்பீடு குழந்தைத்தனமானது. மம்முட்டி, மிஸ்கின், பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், ஜெயமோகன், சேரன் இன்னும் பல பெரும்புள்ளிகள் பிரியாணிக்கி வக்கற்றவர்கள் அல்ல. இவர்களும் இவர்கள் போன்றவர்களும் இணைக்கிற மையப்புள்ளியாக பாவாவின் ஆளுமைத் தன்மை சாட்சியாய் உள்ளது. உங்களுக்கு பாவாவையும் பிடிக்கவில்லை; பாவாவுடன் உறவு மற்றும் நட்பு பாராட்டுபவர்களையும் பிடிக்கவில்லை. நூறு சதவித யோக்கியன் இங்கு யாருமில்லை. இப்படியான நமது பண்பாட்டிலிருந்து கொண்டு ஒருவரை குறிவைத்து தூற்றுவதை எப்படி ஏற்க முடியும். வினவின் விமர்சனம் போங்காய் இல்லாமல் நேர்மையாய் பாயட்டும். அப்படியான விமர்சனத்தை வரவேற்க காத்திருக்கின்றோம்.
மேட்டர் பிரியானி இல்லை பிரியானி செய்யர காச ப்த்தி
ஆத்மா அவர்களின் (மறுமொழி) கருத்துக்களுக்கு, பவா செல்லத்துரையின் தீபத்திருநாள் அனுபவமே (மறுமொழி இடுகை) சிறந்த பதிலைத் தந்துவிட்டது.
தனது மனதுக்கு உகந்த மனிதர்கள் யார்யார் தன் வீட்டுக்கு வருகை தந்தார்கள்
என்பதைவிட, அவர்கள் எந்தெந்த காரில் வந்தார்கள், குறிப்பாக ஒருவர் தனது காரில் அழைத்துவரப்பட்டார் என்பதையெல்லாம் தெரிவிக்கவே ப. செல்லத்துரை முனைந்து நிற்கிறார். “அன்புடன் விருந்து பறிமாறப்பட்டது” என்பதைவிட எத்தனை அயிட்டங்கள் பறிமாறப்பட்டன என்பதைக் குறிப்பிடவே ஆசைப்படுகிறார் செல்லத்துரை.
யார் யார் தங்கினார்கள் என்பதைவிட தனது வீடுகளில் “எவ்வெவற்றில்… ” என்பதை வெளிப்படுத்தத் துடிக்கிறார். வோட்கா எனும் மது விருந்து நடந்ததையும் பெருமை தொணிக்கவே சொல்கிறார்.
மொத்தத்தில் இவரது பதிவில், அன்பு, விருந்தோம்பல் என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இவரது பணக்காரத்தனத்தை வெளிப்படுத்தும் அவாவே தெரிகிறது.
ஆகவே ஆத்மா அவர்களே… பவா செல்லத்துரை வெளிப்படுத்துவது அவரது பகட்டையும், அதிகாரத்தையும்தான். இதன்மூலம் மேலும் பலர் தன்னைத் தேடிவருவார்கள் என்கிற வியாபார நோக்கமும் இருக்கலாம்.
சுந்தரராமசாமி, தனது விருந்தோம்பலை இப்படி பகட்டுகாட்டி எழுதியதில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டியது. அவரது எழுத்தில் கருத்தில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் இலக்கியத் தரகராக இல்லை.
தவிர எல்லோருக்கும் நண்பராக இருப்பவர் எவருக்கும் நண்பராக இருக்க முடியாது என்பதற்கு பவா செல்லத்துரையே உதாரணம். தமுஎசவின் பகுத்தறிவுக்கு (?) நேர்மாறாக தீபஒளியில் திளைக்கிறார்.
மேலும் இவருக்கான புகழ்மேடையில், நடிகர் சேரன் பேசியது, பவா செல்லத்துரையி்ன் “இலக்கிய பணிகள்” என்ன என்பதை வெளிச்சம்போட்டுக்காட்டிவிட்டது.
(அது சரி.. பவா செல்லத்துரை பற்றிய கட்டுரையை “நான் எழுதவில்லை” என்பதாகச் சொல்லி சிலர் வாலியண்ட்டராக வண்டியேறிக்கொண்டிருக்கிறார்களே.. வினவின் கவனத்துக்கு வந்ததா…)