பிக் பாஸும் பவா செல்லத்துரையும்

தங்களின் சுய விளம்பரத்திற்காக, சமூக சீரழிவை ஏற்படுத்துவதும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக நடத்தப்படுவதுமான பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்த சமூகப் பொறுப்பற்ற பிழைப்புவாத நடவடிக்கையைத் தான் நாம் கண்டிக்கின்றோம்.

0
பவா செல்லத்துரை

க்களின் உணர்ச்சியை சுரண்டிப் பணமாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற விஜய் டிவியில் “பிக் பாஸ் சீசன் 7” அக்டோபர் 1-ஆம் தேதியன்று தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி என்று கூறப்படும் பவா செல்லத்துரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதல் தற்போது அவராக வெளியேறியுள்ளது வரை பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது.

ஒரு இலக்கியவாதி, ஒரு எழுத்தாளர் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தவறு என்ற கருத்துக்களை சிலர் தெரிவித்து வந்தனர். இன்னும் சிலர் பிக் பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்று முற்போக்கு கருத்துக்களை பேசினால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று பேசினர்.

பவா‌ செல்லத்துரை சி.பி.எம் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) முன்னாள் உறுப்பினர் ஆவார். அவரது பிக் பாஸ் நுழைவு குறித்து தமுஎகச மாநிலச் செயற்குழு உறுப்பினரான எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனிடம் கேட்கப்பட்ட போது, “அது அவரது தனிப்பட்ட விருப்பம்” என்று கருத்துக் கூறியுள்ளார்.


படிக்க : சிறப்புக் கட்டுரை : பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் ?


“பாவா செல்லத்துரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கதைகளை சொல்லி சில புத்தகங்களை விற்றுவிட்டுப் போகட்டும். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று கூறுவோரும் உண்டு.

ஒரு இலக்கியவாதி பிக் பாஸில் கலந்து கொள்வதை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள ‘இலக்கியவாதிகள்’ குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக குட்டி முதலாளித்துவ இலக்கியவாதிகள் கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளின் மூலம் சமூகத்திற்காக ஏதாவது செய்து கொண்டேயிருப்பதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தாங்கள் செய்யும் அற்ப விஷயங்களை எல்லாம் ஊதிப் பெரிதாக்கி பூதாகரமாக விளம்பரம் செய்து கொள்கின்றனர். தங்களின் படைப்புகளை தனிப்பட்ட திறனின் வெளிப்பாடாகவும் தங்களின் ஆளுமையின் வெளிப்பாடாகவும் கருதுகின்றனர்.

ஆரம்பத்தில், சமூகத்தின் எதார்த்தத்தையும் மக்களின் அவலங்களையும் தங்களது கலைப்படைப்பின் மூலம் வெளிப்படுத்தி எழுத்தாளர்களாக கலைஞர்களாக அறியப்பட்ட இவர்கள், அங்கீகாரம் கிடைத்த பின்பு மண்டை வீங்கிகளாக மாறிவிடுகின்றனர். சுருக்கமாக சொல்வதென்றால் தங்களை சமூகத்திற்கு மேலானவர்களாக மக்களுக்கு மேலான ‘அறிவாளி’களாகக் கருதிக் கொள்கின்றனர்.

பவா செல்லத்துரை

மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பது தான் கலை – இலக்கியம் என்பதை மறுத்து தங்களின் கனமான மண்டையிலிருந்து உதிப்பதுதான் இலக்கியம் என்று கர்வம் கொள்ளத் தொடங்கி விடுகின்றனர்.

இதனால் தான் குட்டி முதலாளித்துவ கலைஞர்கள் இலக்கியவாதிகள் உள்ளிட்ட அறிவுத்துறையினர் திசை மாறிப் போகின்றனர்.

“முழு நேரமாக மக்கள் குறித்தும் சமூகம் குறித்தும் சிந்திக்கத் தேவையில்லை; தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தினாலே போதுமானது” என்ற போதனை ஆளும் வர்க்கத்தால் பல்வேறு வழிகளில் தொடர்ந்து குட்டி முதலாளித்துவ பிரிவினரிடையே ஊட்டப்பட்டு வருகிறது.

நேற்று வரை குட்டி முதலாளியாக இருந்த பவா செல்லத்துரை இன்று கார்ப்பரேட் வசம் ஈர்க்கப்பட்டு பிக் பாஸ்க்குச் சென்று விட்டார். பவாவைப் போல தங்களின் தனித்துவத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் பலரை சமூகத்திற்கானவர்களாக காட்டுவதை தமுஎகச செய்து வருகிறது.


படிக்க : பிக்பாஸ் ஜூலி முதல் செங்கல்பட்டு கலா வரை – விதவிதமாக குற்றச் செய்திகள் !


பவா செல்லத்துரை மட்டுமல்ல தனித்திறன் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் இவ்வாறு ஆளும் வர்க்கத்தோடு கலந்து விடுவதென்பது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. சிலர் திசை மாறிய பின்பும் ஆவேசமாக பேசுகின்றனர். மற்றும் சிலரோ முற்றுமுழுதாகக் கரைந்து போய் விடுகின்றனர். இது தவிர்க்க முடியாதது.

ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரலெழுப்பிய தெருக்குரல் அறிவு தற்போது கார்ப்பரேட்டுகளால் உறிஞ்சப்பட்டுள்ளார். சதுரங்க ஆட்டக்காரர் பிரக்ஞானந்தாவின்‌ தனித்திறன் வெளிப்பட்டதும் அவரை அபகரித்துக் கொள்ள ஆளும் வர்க்கம் எல்லாவற்றையும் செய்தது. இப்படிப் பல எடுத்துக்காட்டுகளை கூறிக் கொண்டே போகலாம்.

சரி; அதெல்லாம் இருக்கட்டும். பிக் பாஸில் கலந்து கொண்டு ஒருவர் முற்போக்குக் கருத்துக்களைப் பேசக் கூடாதா என்று சிலர் கேட்கலாம்.

அதற்கான பதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பகுப்பாய்வு செய்தால் நமக்குக் கிடைக்கும்.

“பிக் பாஸ்”

1998-ஆம் ஆண்டில் “தி டுரூமன் ஷோ” (The Truman Show) என்ற திரைப்படம் வெளியானது. ஒரு தனிமனிதரின் வாழ்க்கையை குழந்தைப் பருவத்தில் இருந்து காட்டுவது போன்றதான ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தப்படுவதாக அத்திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும். இப்படியெல்லாம் வருங்காலத்தில் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று சிலர் ஆச்சரியப்பட்டனர். மற்றும் சிலர் இத்திரைப்படம் அதீத கற்பனையாக உள்ளதென விமர்சனம் செய்தனர்.

ஆனால் 2000-ஆம் ஆண்டிலேயே “பிக் பிரதர்” (Big Brother) என்ற தனிநபர் வாழ்க்கையை எட்டிப் பார்க்கும் வகையிலான ரியாலிட்டி ஷோ தொடங்கப்பட்டது. தற்போது வரை 25 சீசன்கள் வெளியாகி இன்னும் முடிவு பெறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. The Real Housewives (2006), Keeping Up with the Kardashians (2007) என அடுத்தடுத்து இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்கள் உலகம் முழுவதும் நடக்கத் தொடங்கின.

பிக் பிரதரின் இந்திய வடிவமாகத் தான் பிக் பாஸ் 2006-ஆம் ஆண்டு இந்தி மொழியில் நடத்தப்பட்டது. பிக் பாஸ் தமிழ் 2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் பார்வையாளர்களை ஒரு வகையான பார்வை மோகத்திற்கு (Voyeurism) ஆட்படுத்துகிறது. அடுத்தவரின் அந்தரங்க உரிமையை மதிக்காமல் அவரது அறையை எட்டிப் பார்ப்பதைப் போன்றதான ஒரு கேடுகெட்ட கலாச்சாரத்திற்கு பழக்கப்படுத்தி சமூகத்தையே சீரழிக்கிறது.

மேலும், “உடன் இருப்பவர்களை ஒழித்துக்கட்டினால் தான் முன்னேற முடியும்” என்பதை பல்வேறு போட்டிகளின் மூலமாகவும் டாஸ்க்களின் மூலமாகவும் கற்றுக் கொடுக்கிறது. அது கற்றுக் கொடுப்பது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல; பார்வையாளர்களுக்கும் தான். ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர் ஒருவர், தானும் அந்த பிக் பாஸ் வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கப்படுகிறார்.

அதனால் தான் இப்படிப்பட்ட கேடுகெட்ட நிகழ்ச்சியை நாம் புறக்கணிக்க வேண்டியுள்ளது. தங்களை முற்போக்காளர்கள் என்று சமூகத்தில் அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அதைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியுள்ளது. அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதென்பது அந்நிகழ்ச்சிக்கு ஒருவகையான முற்போக்கு முகத்தை அளித்து கூடுதல் பிரமோஷனாகத் தான் அமைகிறது.


படிக்க : பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா ?


‘முற்போக்காளர்’ பவா செல்லத்துரை பிக் பாஸில் கல்வி குறித்துக் கூறிய அடிமுட்டாள்தனமான கருத்துகளுக்காகவும், அனைத்து இடங்களிலும் இந்துத்துவத்திற்கு முட்டுக்கொடுக்கும் புளிச்சமாவு ஜெயமோகனின் கதைகளை புரமோட் செய்வதற்காகவும் மட்டும் அவர் விமர்சிக்கப்பட வேண்டும் என்பதல்ல‌ நாம் கூற வருவது.

பவா செல்லத்துரையும் அவர்களைப் போன்றவர்களும் தங்களை சமூகத்திற்கும் மேலானவர்கள் என்று கருதிக் கொள்கின்றனர். தங்களின் சுய விளம்பரத்திற்காக, சமூக சீரழிவை ஏற்படுத்துவதும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக நடத்தப்படுவதுமான பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்த சமூகப் பொறுப்பற்ற பிழைப்புவாத நடவடிக்கையைத் தான் நாம் கண்டிக்கின்றோம்.


பொம்மி



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க