நாளிதழைத் திறந்தாலே… கொலை, பாலியல் வன்முறை, கள்ளக்காதல் தொடர்பான வன்முறைகள், தற்கொலைகள், செயின் பறிப்பு, கொள்ளைச் சம்பவங்கள் போன்றவையே செய்திகளில் அதிகம் இருக்கின்றன. பொள்ளாச்சி பாலியல் வன்முறை போன்ற ஓரிரண்டு சம்பவங்களே மக்களின் கவனத்தை பெறுகின்றன. நமது கவனத்திற்கு வராத செய்திகள் நாம் எப்படி ஒரு அபாயகரமான காலத்தில் வாழ்கிறோம் என்பதை மறைத்து வைத்திருக்கிறது.
இந்த குற்றச் சம்பவங்களுக்கு தமிழக அரசின் டாஸ்மாக் போதையும், பாலியல் வெறியைத் தூண்டும் ஃபோர்னோ இணையதளங்களும், குற்றச் செய்திகளையே நொறுக்குத் தீனிகளாக வழங்கும் ஊடகங்களும், குற்றவாளிகளுக்கு ஆதரவான போலீசு – அதிகாரவர்க்கமும், பணத்திமிர் பிடித்த மேட்டுக்குடி உலகமும் காரணங்களாக இருக்கின்றன. மக்கள் தமது பாதுகாப்பை தாமே எப்படி உருவாக்குவது, சக மனிதர்களின் துயரங்களை துடைக்கும் புதிய சமூக அமைப்புக்களை எப்படி உருவாக்குவது என்பதை கோருகின்றன இன்றைய நிலைமைகள். கீழ்க்கண்ட செய்திகள் 13.03.2019 அன்று நாளிதழ்களில் இடம்பெற்றவை
குற்றச் செய்தி 1:
போலீசை தாக்கிய நடிகை!
சென்னை வேப்பேரி டவுட்டன் ரித்தர்ட்டன் சாலையில் இரவு 9.30 மணிக்கு ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்தக் காரில் பிக்பாஸ் ஜூலியும் அவரது நண்பர்களும் இருந்திருக்கிறார்கள். இதனால் அந்த சாலையில் டிராபிக் அதிகமாகி இருக்கிறது. அந்த வழியாக வந்த வேப்பேரி தலைமைக் காவலர் பூபதி, இது குறித்து கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் பூபதி புகார் அளித்துள்ளனர். பதிலுக்கு ஜூலி தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இரண்டு புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறது போலிசு.
சென்னையில் குடித்து விட்டு அராஜகம் செய்யும் திரையுலக மாந்தர்களின் எண்ணிக்கை தற்போது வாடிக்கையாகி விட்டது. தமது சினிமா செல்வாக்கால் தங்களை ‘கடவுள்கள்’ போன்று அவர்கள் கருதிக் கொள்கின்றனர்.
குற்றச் செய்தி 2:
சைதாப்பேட்டை அரசு விடுதியில் மாணவர்களுக்குள் மோதல்….
சென்னை சைதாப்பேட்டையில் எம்.சி ராஜா மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். அதில் ஒரு சில மாணவர்கள் குடித்துவிட்டு விடுதிக்கு வந்திருக்கிறார்கள். குடிக்காத சக மாணவர்கள் ஏன் குடித்துவிட்டு வருகிறீர்கள்? என்று கேட்க….. இரு தரப்பு மாணவர்களும் மோதிக் கொண்டனர்.
இதுகுறித்து விடுதி காப்பாளர் சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்திருக்கிறார். தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தாக்குதல் நடத்திய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அந்த விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மாணவர்கள் படிக்கும் சூழலை, கட்டமைப்பை உருவாக்காத அரசு…. பள்ளி-கல்லூரி, கோவில் என எங்கும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பதே மாணவர்களின் சீரழிவுக்கு காரணம்!
குற்றச் செய்தி 3:
தனியாக இருந்த இளம்பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்க முயற்சி…
திருவொற்றியூர் சண்முகபுரத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் கணவனைப் பிரிந்து வாழும் பெண் ஒருவர். அவர் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞன் குடித்து விட்டு இரவு ஒரு மணிக்கு அவரது வீட்டுக்கு சென்று கத்தி முனையில் மிரட்டி இருக்கிறான். பயந்த அப்பெண் கூச்சலிடவே தப்பிக்க முயற்சித்துள்ளான். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவனைப் பிடித்து சராமரியாக தாக்கி போலிசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அவனை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலிசார் சிறையில் அடைத்தனர்.
ஒரு வேளை இந்தக் குற்றவாளி பெரிய இடத்து இளைஞனாக இருந்தால் போலீசு வழக்கை அந்தப் பெண் மேலேயே போட்டிருக்கும். அரசு நடத்தி வரும் மதுக் கடைகள் மக்களை எப்படி கிரிமனல்களாக மாற்றி வருகின்றன என்பதற்கு இந்தச் செய்தி ஒரு சான்று!
குற்றச் செய்தி 4:
பள்ளி மாணவியை சீரழித்த டிரைவர்.
பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்த வண்ணம் இருந்தாலும் பல சம்பவங்கள் வெளி வருவதில்லை. விதிவிலக்காக சில சம்பவங்கள் வெளியில் தெரிகின்றன.
சென்னை பெருங்குடி-சீவரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளான் பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்த பிரபு என்பவன். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்கவே அவன் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட பிரபுவுக்கு ஏற்கனவே இரண்டு மனைவி, மூன்று குழந்தைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுபோன்று 4 மாணவிகளை தான் ஏமாற்றியுள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளான். அவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
விடலைப் பருவ மாணவிகளுக்கு தேவையான விழிப்புணர்வு, பாலியல் கல்வி, பாதுகாப்பு எதுவும் இந்த அரசால் செய்யப்படவில்லை. மறுபுறம் இந்த பாதுகாப்பின்மையை தேர்ந்த குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
குற்றச் செய்தி 5:
குடிக்க பணம் தராததால்… கத்தி குத்து……
அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அப்பு, நேற்று முன்தினம் தனது நண்பர்கள் முருகன், நெப்போலியன், ஆறுமுகம் ஆகியோருடன் வீட்டின் அருகே மது அருந்தி கொண்டிருந்தபோது, கூடுதலாக மதுவாங்க அப்புவிடம் நண்பர்கள் பணம் கேட்டுள்ளனர்.
அவர் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவர்கள் அப்புவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். படுகாயமடைந்த அப்பு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
குடித்து விட்டு நடக்கும் குற்றங்கள் ஒரு ரகமென்றால் குடிக்கும் போதே நடக்கும் குற்றங்கள் இன்னொரு ரகம். இந்த குற்றங்களின் ஸ்பான்சர் தமிழக அரசேதான்! இதைத் தடுப்பதற்கு ரேசன் கடையிலேயே மாதம் ரெண்டு ஃபுல் என்று அளிக்கலாமே!
குற்றச் செய்தி 6:
ஆணவ கொலை செய்ய திட்டமிட்டதால் காதல் ஜோடி தற்கொலை முயற்சி…
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த ஏழுமலை மகன் தேவராஜ். கல்லூரியில் படிக்கும்போது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இந்த விவகாரம் திவ்யா வீட்டுக்கு தெரிய எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். எனவே நண்பர்கள் உதவியுடன் இருவரும் பதிவுத் திருமணம் செய்திருக்கிறார்கள்.
இது பெண்ணின் வீட்டிற்கு தெரிந்து பையன் வீட்டுக்கு வந்து சண்டை போட்டிருக்கிறார்கள். கூடவே மகளை வீட்டிற்கு அழைத்து சென்று ஆணவகொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அவர்களிடம் போலிசு விசாரணை நடத்தி வருகிறது.
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களை கொலை செய்ய துடிக்கும் பெற்றோர்கள் இன்னமும் நிறைய இருக்கிறார்கள். தருமபுரி இளவரசன், உடுமலைப்பேட்டை சங்கர், திருச்செங்கோடு கோகுல் என்று கொலைகள் தொடர்கின்றன. இந்த சூழ்நிலையில் தமது காதல் மறுக்கப்படும் போது காதலர்கள் என்ன செய்ய முடியும்? ஆதிக்க சாதிவெறியை தகர்ப்பது எப்போது?
குற்றச் செய்தி 7:
கஞ்சா கடத்தியவர் கைது…
மதுரை கூடல்புதூர் போலிசார் அலங்காநல்லூர் மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபொழுது இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்த இரண்டு பெரிய பண்டல்களை பிரித்து பார்த்தபோது கஞ்சா இருந்தது. அது 11 கிலோவாம். அதனை பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
டாஸ்மாக்கில் மது கடலாக ஓடிக் கொண்டிருக்கும் போது கஞ்சா கொஞ்சம் குளம் போல ஆங்காங்கே இருக்கிறது. இன்றைய இளைஞர்கள், மாணவர்களை சீரழிக்கும் விதவிதமான போதை பொருட்களில் கஞ்சா முக்கியமான ஒன்று. இன்று வரை எல்லா இடங்களில் விற்பனைக்கு கிடைக்கும் கஞ்சாவை ஏன் அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை?
குற்றச் செய்தி 8:
மூதாட்டியிடம் 6 சவரன் பறிப்பு
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 74 வயதான பச்சைமால் நேற்று முன்தினம் மாலை வீட்டின் வெளியே நின்றபோது ஹெல்மட் அணிந்து பைக்கில் வந்த வாலிபர் பச்சைமாலிடம் தண்ணீர் கேட்டுள்ளார். பச்சைமால் தண்ணீர் கொடுத்ததும் குடித்து முடித்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த 6 சவரன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியுள்ளார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசில் பச்சைமால் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தனித்திருக்கும் முதியவர்களை கொலை செய்வது, கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது. குறுக்கு வழியில் ஆடம்பரமாக வாழ நினைக்கும் இளைஞர்கள் சிலர் முதியவர்களை குறிவைத்து திருடுகின்றனர். நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவு இது!
குற்றச் செய்தி 9:
ரேசன் கடை ஊழியரிடம் செயின் பறிப்பு…
திண்டுக்கல்லில் உள்ள ரேசன் கடை பெண் விற்பனையாளர் அழகுமணி நேற்று மாலை வேலை முடிந்து திண்டுக்கல் ஒத்தகடை அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது ஹெல்மெட் அணிந்த இருவர் அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்றனர்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை போலிசு விசாரணை செய்கிறதாம்.
வீட்ட விட்டு வெளியில வரும்போது செயினை கழட்டி வச்சிட்டு வர வேணாமா… என்று அறிவுரைக் கூறுவதைத் தவிர போலீசு வேறு என்ன செய்ய முடியும்? வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பதற்கேற்ப செயின் வழிப்பறியும் அதிகரித்து வருகின்றது.
குற்றச் செய்தி 10:
வரதட்சணை கொடுமை… ஆர்.டி.ஓ மிரட்டுவதாக கலெக்டரிடம் மனு…
செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் தென்பாதி கிராமத்தை சேர்ந்த அஞ்சலிதேவிக்கும், இருங்குன்றபள்ளியைச் சேர்ந்த விஜயகுமாருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. வரதட்சனையாக 21 சவரன் நகை, தட்டுமுட்டு சாமான்கள் உட்பட அனைத்து கொடுத்திருக்கிறர்கள். திருமணமான அடுத்தநாளே நகையை அடமானம் வைத்து வீடு கட்ட வாங்கிக்கொண்டார் மாமியார் கலா.
இன்னொரு பக்கம் கணவனும் அவரது சகோதரியும் பெரிய பைக் வாங்கித்தர சொல்லி துன்புறுத்தியதாக தெரிகிறது. அஞ்சலிதேவி வெளியில் செல்ல நகை வேண்டும் என்று கணவனிடம் கேட்க…. இருவருக்கும் சண்டை வந்துள்ளது. கணவன் தாக்கியதால் அஞ்சலிதேவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. எனவே அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறார். சில காலம் கழித்து தனிக்குடித்தனம் சென்றிருக்கிறார்கள். ஆனால் விஜயகுமார் வீட்டுக்கு வருவதில்லை. வீட்டு வாடகையும் கட்ட முடியவில்லை. மாமியார் கலாவிடம் காசு கேட்டதற்கு அடித்து உதைத்ததாக தெரிகிறது. கணவனும் இதை கண்டு கொள்ளவில்லை.
மேலும் “ ஐந்து லட்சம் கொண்டு வா” என்று கணவன் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28 -ம் தேதி அஞ்சலிதேவி இறந்து விடுகிறார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடக்கிறது.. அந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட தங்களது குடும்பத்தாரையே மிரட்டுவதாகவும், மணமகன் வீட்டுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாகவும் அஞ்சலிதேவியின் சகோதரர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆண்டுதோறும் வரதட்சணைக் கொடுமையால் ஆயிரக்கணக்கான பெண்கள் மடிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆணாதிக்கத்தின் ஆணிவேராக இந்த கட்டமைப்பு இருக்கும் வரை இந்த மரணங்களை தடுப்பது எப்படி? சாதிவெறி, மதவெறி இரண்டும் இணைந்து நமது பெண்களை துன்புறுத்துவதில் வரதட்சணையும் போட்டி போடுகிறது. வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள் இருந்தும் என்ன பயன்?
குற்றச் செய்தி 11:
ஒரு காதல்.. மூன்று கொலை…
திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் திருப்பூர் பாண்டி, அவரது மனைவி பஞ்சவர்ணம் இருவரும் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டனர். கடந்தாண்டு குமரேசனை வெட்டிக்கொன்றதற்காகவே பழிக்குபழியாக இந்த கொலை நடந்துள்ளதாக போலிசு கருதுகிறது.
திண்டுக்கல் குடைப்பாறைபட்டியில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்க பெரியகுளத்தை சேர்ந்த முருகன் தனது உறவினரான அருண்பாண்டியன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது திருப்பூர் பாண்டியின் உறவுக்கார பெண் சுகன்யாவோடு காதல் வந்துள்ளது. இந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட திருப்பூர் பாண்டி முருகனை தாக்க, ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் திருப்பூர் பாண்டியை தாக்கியுள்ளார். அதுநாள் முதல் அருண்பாண்டியனின் உறவினர் கோபிநாதனுக்கும்- திருப்பூர்பாண்டிக்கும் கோஷ்டி பிரச்சனையாக மாறி உள்ளது.
இந்த இரண்டு கும்பலுக்கும் அடிக்கடி கத்தி-குத்து சண்டைகளும் நடந்த வண்ணம் இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் கோபிநாதனின் ஆதரவாளர் குமரேசன் தங்களை தீர்த்துகட்டி விடுவார் என்ற பயத்தில் திருப்பூர்பாண்டியின் மகள்கள் குமரேசனை போட்டுத்தள்ளியுள்ளனர். அதற்குப் பழி வாங்கவே தற்போது இருவரையும் போட்டுத்தள்ளி இருக்கிறார் குமரேசனின் அக்கா மகன் சிவா.
காதல், குடும்பம், நட்பு எதிலும் நமது மக்கள் இன்னமும் ஜனநாயக ரீதியாக செயல்படுவதில்லை. நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு போலி ஜனநாயகம் கை கொடுப்பது போல, சமூகத்தை பிற்போக்காக நிறுத்தி வைப்பதற்கு பார்ப்பனியம் கை கொடுக்கிறது. போலி ஜனநாயகத்தை வீழ்த்துவதும், பார்ப்பனியத்தை ஒழிப்பதும் வேறு வேறு அல்ல!