வானம் பார்த்த பூமி’ என்று அறியப்படும் இராமநாதபுர மாவட்டம், கடலாடி வட்டத்தில் உள்ளது மடத்தாகுளம் கிராமம். வறட்சியாலும் இலாபகரமற்ற தொழிலாக மாறிப்போனதாலும், கிராமத்திலுள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தைவிட்டே வெளியேறி, விவசாயம் அல்லாத கூலி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். மீதமுள்ள மக்கள் தங்களது நிலத்தை கைவிட மனமில்லாமல், கடும் நெருக்கடியிலும் விவசாயப் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். விவசாயத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு நீராதாரமாக விளங்குவது கண்மாய்கள்தான்.

கடலாடி வட்டத்தில் மடத்தாகுளம், சிறுமடத்தான்குளம், உப்புத்தண்ணீர், வெள்ளாள, பரதன்குளம், பாடுவனேந்தல், தெற்கு ஊரணி உள்ளிட்ட கண்மாய்கள் உள்ளன.

மழைக்காலங்களில் இக்கண்மாய்களில் சேகரிக்கப்படும் நீரைக் கொண்டுதான் சுமார் 200 ஏக்கர் அளவில் பருத்தி, கம்பு, கேழ்வரகு, சோளம், நெல், கடலை போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. விவசாயம் மட்டுமல்லாது குடிநீர், கால்நடைகளை பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இக்கண்மாய்கள்தான் பூர்த்தி செய்கின்றன.

இவ்வாறு விவசாயத்துக்கும் மக்களது வாழ்வாதாரத்துக்கும் உயிராதாரமாக விளங்குகின்ற கண்மாய்களை அரசு அதிகாரிகளின் துணையோடு சில உப்பள நிறுவனங்கள் ஆக்கிரமித்து, அழித்து நாசம் செய்து வருகின்றன.

உப்பள நிறுவனங்கள் கண்மாயை ஆக்கிரமித்துள்ள பகுதியைப் பார்வையிடும் போலீசு அதிகாரிகள். ஒரு கண் துடைப்பு நாடகம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கடலாடி வட்டத்தில் கால்பதித்த வேலவன், கெம்பேப் ஆல்கலிஸ் லிமிடெட், பார்வதி சால்ட், அபிசேக் சால்ட் உள்ளிட்ட தனியார் உப்பள நிறுவனங்கள், மடத்தாகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, உப்பள உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றன. தொடக்கத்தில், புறம்போக்கு இடங்களில் உப்பளங்களை அமைத்ததால் மக்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை.


படிக்க : ஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.


‘இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்ட கதை’யாக, கொஞ்சங்கொஞ்சமாக கண்மாய்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கின உப்பள நிறுவனங்கள்.

2018-ல் வேலவன் நிறுவனம் பொக்லைன், ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மடத்தாகுளம் கண்மாய்க்குள் உப்பளம் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டது. அரசு அதிகாரிகளின் துணையோடு ஊருக்கு சொந்தமான கண்மாயையே தனது பெயருக்கு பட்டா போட்டது அப்போதுதான் மக்களுக்கு தெரியவந்தது. அதே ஆண்டில், கெம்பேப் ஆல்கலிஸ் நிறுவனமோ, உப்பளங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை கண்மாய்க்குள் கொட்டியது.

கண்மாய்களில் உப்பள கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் உபயோகிக்க முடியாத அளவுக்கு உப்பு நீராக மாறுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, மழைநீரை சேமிக்க முடியாமல், விவசாயம் அழியும் சூழலுக்கு தள்ளப்படும் என அஞ்சிய கிராம மக்கள், இந்நிறுவனங்களை எதிர்த்து 03.12.2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அப்போது, கண்மாய்களில் உப்பளம் அமைப்பதிலிருந்து அந்நிறுவனங்கள் தற்காலிகமாக பின்வாங்கின.

ஜூன் 2021-ம் ஆண்டில் மீண்டும் கண்மாய்களை ஆக்கிரமிக்கும் வேலைகளில் ஈடுபட தொடங்கின. அதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மீண்டும் மனுகொடுத்துள்ளனர்.

இரண்டு மாதத்துக்கு பிறகு, கிராம மக்களால் ஊராட்சி மன்றக் கூட்டம் கூட்டப்பட்டு, கண்மாயில் உப்பளம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது. அக்டோபர் மாதம் 11-ம் தேதி இராமநாதபுரம் பணிமனை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மனுவிற்கு மேல் மனு கொடுத்தும் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பல ஆண்டுகாலம் மனுகொடுத்தும் பலனில்லை. ஊருக்குள் பந்தல் அமைத்து தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மடத்தாக்குளம் கிராம மக்கள்.

அரசு அதிகாரிகள் உப்பள நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் உண்டு. அரசு அதிகாரிகள் மற்றும் பெரிய குளத்தைச் சேர்ந்த இரண்டு ஆதிக்க சாதி வெறியர்களின் உதவியோடுதான் இத்தனியார் உப்பள நிறுவனங்கள், கிராம மக்களை மிரட்டி 900 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்தன. போலீசு உள்ளிட்ட அதிகாரவர்க்கம், உப்பள முதலாளிகளிடமிருந்து பணம் பெற்றுகொண்டு, அந்நிறுனங்களுக்கு ஆதரவளிக்கிறது என்கிறார்கள் ஊர் மக்கள்.

எனவே, இந்நிறுவனங்களுக்கு எதிராக கிராம மக்கள் அளிக்கும் புகாரை திசைதிருப்பி அம்மக்கள்மீதே பழியைப் போட்டு குற்றவாளியாக்குகிறது அதிகார வர்க்கம். மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அவர்களைப் பிளவுப்படுத்தும் வேலையையும் சேர்த்து செய்துவருகிறது.

அதற்கு சிறந்த உதாரணம், “நான்கு தனியார் நிறுவனங்கள் 900 எக்கர் பரப்பிற்குள் வரும் நீர்பிடிப்புகளை உப்பள நிறுவனங்கள் தங்களின் பயன்பாட்டிற்காக வைத்திருந்தது உண்மைதான். அவர்கள் ஆக்கிரமித்திருந்த நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரப்பை அகற்றிவிட்டோம்” என்று கூறும் அதிகார வர்க்கம், “தனியார் நிறுவனங்கள் உப்பள உற்பத்தியில் ஈடுபடுவதை ஒட்டுமொத்த கிராம மக்களும் எதிர்க்கவில்லை. அக்கிராமத்தில் இருக்கும் 25 குடும்பங்கள்தான் கண்மாய் பகுதியின் 25 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உப்பளங்களை நடத்திவருகின்றன. அதை மூடிமறைக்கதான் தனியார் உப்பளங்கள்மீது பழியை சுமத்துகின்றன” என மக்கள் மீது பழியை போடுகிறது.

25 குடும்பங்கள் உப்பளங்களை நடத்திவருவது உண்மைதான். முறைப்படி குத்தகைக்கு எடுத்து நடத்திவரும் அவர்கள், தனியார் நிறுவனங்களைபோல் கண்மாய்களில் உப்பளங்களை அமைக்கவோ, கழிவுநீரை கொட்டவோ இல்லை.


படிக்க : உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி || பாகம் 1 || வீடியோ


2021-ம் ஆண்டில் இருந்து உப்பள நிறுவனத்திற்கு எதிராக தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் மடத்தாகுளம் கிராம மக்கள். கடந்தாண்டு நவம்பரில், கடலாடி வட்டாச்சியர் சேகர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கெம்பேப் நிறுவனத்தால் வெளியேற்றப்படும் கழிவு நீரை மடத்தாகுளம் கண்மாயில் கொட்டக்கூடாது என்றும் கண்மாயை கையாளும் உரிமை ஊர் மக்களுக்குதான் உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தீர்மானத்தை இந்நிறுவனம் மயிரளவும் மதிக்கவில்லை.

மாவட்ட ஆட்சியர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு பலமுறை மனுக்களை அனுப்பியுள்ளனர் கிராம மக்கள். ஆனால், அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க மண் மீட்பு இயக்கம் என்ற தொடங்கி ஊருக்குள் பந்தல் அமைத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மண் மீட்பு இயக்கத்தினர், ஊர் மக்கள் உள்ளிட்டோர்மீது பல பொய் வழக்குகளை ஜோடித்து வருவதோடு, தனக்கு எதிரானவர்களைக் கூலிப்படையினரை வைத்து கொலையும் செய்துவருகிறது உப்பள நிறுவனங்கள்.

சில ஆண்டுகள் முன்பு, விளைநிலங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வரும் உப்பள நிறுவனங்களுக்கு எதிராக புகாரளித்த துரைப்பாண்டி, தோமஸ், அந்தோணி ஆகியோரை உப்பள நிறுவனங்கள் கூலிப்படையை வைத்து கொன்றது.

உப்பள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்மாயிலேயே தங்கி, சமைத்து சாப்பிட்டு போராடும் கிராம மக்கள்.

இதேபோல, கடந்த மார்ச் மாதம், ஊர் செயலாளர் டேவிட் ராஜாவை கொலை செய்யும் நோக்கத்தோடு சென்ற கூலிப்படை டேவிட் ராஜா என்று நினைத்து அவரது அண்ணன் அற்புதக்கனியை அறிவாளால் சரமாரியாக வெட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார்.

கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள்மீது புகார் அளித்தும், போலீசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. மாறாக, உப்பளத்தின் குடிசையை கூலிப்படையை வைத்து அவர்களே எரித்துவிட்டு 12-ம் வகுப்பு படிக்கும் அற்புதக்கனியின் மகன்மீது பொய் வழக்கு பதிந்துள்ளது. இதேபோல பலர் மீது பொய் வழக்குகளைப் போட்டு சித்திரவதை செய்துவருகிறது.

மண் மீட்பு இயக்கத்தின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 6 பேரை உப்பள நிறுவனப் பொருட்களைச் சேதப்படுத்தியதாக பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. மண்மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளரின் தம்பியின் திருமணம் நெருங்கிவரும் வேளையில் போலீசு திட்டமிட்டு அவரை கைது செய்தது.

சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு பிணை வழங்கக்கோரி, மாரியூர் வி.ஏ.ஓ. அதிகாரி பூப்பாண்டியனை கிராம மக்கள் சந்திக்க சென்றனர். அவர்களிடம் பூப்பாண்டியன், “முதலில் போராட்டப் பந்தலை பிரித்துவிட்டு வாருங்கள். பின்னர் பிணை வழங்க கையெழுத்துடுகிறேன்” என திமிர்தனமாக பேசியுள்ளார். தாசில்தார் முருகவேல் என்பவரோ, “போராட்டத்தை கைவிடுமாறு எழுதிதாருங்கள்” என நிர்பந்தித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி அடுத்தடுத்து ஐந்து வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளியுள்ளது போலீசு. சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தங்களை பார்க்க வருபவர்களிடம், “இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சரி, நாங்கள் சிறையில் இருக்க தயாராக இருக்கிறோம். எங்களைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் போராட்டத்தை தொடருங்கள்”, என்று கூறியிருக்கிறார்கள். இவர்களது வார்த்தைகள் தங்களுக்கு ஓர் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது என்கிறார்கள் ஊர் மக்கள்.


படிக்க : என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது … | தோழர் ஸ்ரீரசா | வீடியோ


மனு அளித்து ஓய்ந்தவர்கள்; களப்போராட்டத்தில்!

அதிகாரவர்க்க பலத்தோடு, தங்களின் வாழ்வாதாரமான கண்மாய்களை அழித்துவரும் தனியார் உப்பள நிறுவனங்களை, மனுகொடுப்பதன் மூலம் இம்மியும் அசைக்கமுடியாது என எதார்த்தத்தில் புரிந்துக்கொண்ட மடத்தாகுளம் கிராம மக்கள் களப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம், 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தீப்பந்தங்களோடு கண்மாய்குள் குடியேறின. ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கேயே தங்கி போராட்டம் நடத்தினார்கள். “பச்சிளங்குழந்தைகளோடு கண்மாயில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களை சந்திக்கவராத தாசில்தார், வி.ஏ.ஓ. அதிகாரிகள், உப்பள நிறுவன முதலாளிகளின் பணத்திற்கு விலைபோகின்றனர்” என்கிறார்கள் போராடும் மக்கள்.

உப்பள முதலாளிகளின் கொலைமிரட்டலுக்கும், போலீசின் பொய் வழக்குகளுக்கும் அஞ்சாது துணிவோடு போராடும் உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்! அவர்களுக்கு கரம் கொடுப்போம்!

புதிய ஜனநாயகம்,
களச் செய்தியாளர், நெல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க