பெண்களை இழிவுபடுத்தினால் தண்டனை கொடுக்க முடியும்

4

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்து சென்ற ஆண்டு புரட்சிகர அமைப்புகளின் சார்பில் இயக்கம் எடுக்கப்பட்டிருந்தது. அதற்கான வேன் பிரச்சாரத்திற்கு காவல்துறை ஆணையரிடம் அனுமதி வாங்க பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் 4 பேர் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். தனியார் பேருந்துகளின் கொள்ளை லாபத்திற்கு துணை போகும் வகையில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் மக்களை ஆடு, மாடுகளை போல நடத்துவது தொடர்கதையாகி விட்டது.

உழைக்கும் பெண்தோழர்கள் சென்ற தனியார் பேருந்தில் மக்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டே, “உள்ளே போ, சோத்த தானே திங்கிற, என்ன அறிவில்லையா?” என மரியாதை குறைவாக நடத்துனர் பேசி கொண்டிருந்தார். அதை தோழர்கள் கண்டித்தனர். பலருக்கு முன்னிலையில் பெண்கள் தங்களை கண்டித்ததை அவமானமாக கருதிய நடத்துனரும். ஓட்டுனரும் ஆபாசமான வார்த்தைகளா, பாலியல் ரீதியில் பெண்களை இழிவுபடுத்தி பேசியும், தோழர்களை திட்டியும், செருப்பால் அடிப்பேன் என செருப்பை கழற்றினான். பொது இடங்களில் நீதி கேட்கும் பெண்களை இத்தகைய ஆண்கள் கொலைவெறியுடன் பார்க்கிறார்கள். அவர்களுடைய ஆணாதிக்கம் இத்தகைய எதிர்ப்புகளால் கள் குடித்த குரங்காகியும் விடுகிறது. இவ யாரு நம்மள எதிர்த்துக் கேட்க என்ற மனநிலையில் ஓட்டுநரும், நடத்துநரும் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள்.

வாக்குவாதம் அதிகரிக்கவே நிறுத்தம் வந்ததும் தோழர்கள் இறங்கி உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். ஓட்டுனர் தரப்பில் சிலர் வந்து சமாதானம் பேசினர். அதனால் காவல்துறையும் வழக்கை பதிவு செய்யாமல் தாமதப்படுத்தியது. இரவு 11 மணி வரை தோழர்கள் இருந்து காவல்துறையை கண்டித்து முழக்கமிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி கொடுத்த பின்தான் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான செய்தி ஏற்கனவே வினவில் வெளியாகியிருந்தது. கடந்த ஒரு வருடமாக நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்து கொண்டிருந்தது. தோழர்கள் அமைப்பு வேலைகளினுடே வாய்தாவிற்கும் சென்று வந்தனர்.

ஓட்டுனர், நடத்துனருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டுமென்பதில் உறுதியுடன் இருந்தனர். அந்த வகையில் சென்ற 4.2.14 அன்று நீதிமன்றம் குற்றவாளிகளான ஓட்டுனருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், நடத்துனருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது. அதை ஒட்டி திருச்சி நகர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சுவரொட்டி ஒட்டும் போதே பலர் நின்று கவனித்து, இப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என கருத்து தெரிவித்தனர். இவ்வழக்கில் கிடைத்த வெற்றி என்பது, பெண்கள் மீது நடக்கும் அடக்குமுறைக்கு அமைப்பாய் சேர்ந்து போராடுவதன் மூலம் வெற்றியடைய முடியும் என்பதை நிருபித்து காட்டும் விதமாக அமைந்தது.

செய்தி :
பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி

4 மறுமொழிகள்

  1. பெண்கள் அமைப்பாக அணிதிரண்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பெவிமு தோழர்கள் இந்த வழக்கின் முலம் எடுத்துறைத்துள்ளன. தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க