Sunday, June 26, 2022
முகப்பு அரசியல் ஊடகம் தடையற்ற கார்ப்பரேட் கொள்ளைக்கு மோடியின் சேவை

தடையற்ற கார்ப்பரேட் கொள்ளைக்கு மோடியின் சேவை

-

மோடி அரசின் அவசரச் சட்டங்கள் : கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கான ஏற்பாடுகள்!

இந்தியாவில் தயாரிப்போம்” (Make in India) என்ற திட்டத்தை மோடி அறிவித்தவுடனேயே, இப்படிப்பட்ட ஒன்றை எதிர்பார்த்துதான் பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு தரகு முதலாளிகளும் காத்துக்கொண்டு இருந்தது போலவும், இனி அந்நிய முதலீடு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டப்போவது போலவும்” கார்ப்பரேட் பத்திரிகைகள் வலிந்துவலிந்து எழுதித் தள்ளின. ஆனால், நடப்பதோ அதற்கு நேர்எதிராக உள்ளது. “முதலில் அரசாங்க காசைப் போட்டு அடிக்கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள், குறைந்த வட்டியில் எங்களுக்குக் கடன் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்; மற்றதை பிறகு பார்க்கலாம்” எனப் பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் பச்சையாகக் கூறிக் கையை விரித்துவிட்டார்கள்.

பிரதமர் மோடியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனும் அரசுக்கு அளித்துள்ள  2014-ம் ஆண்டிற்கான அரையாண்டு பொருளாதார அறிக்கையில், “பொது முதலீடுதான் தனியார் முதலீட்டை ஈடு செய்வதோடு, அதனைக் கவர்ந்திழுக்கும்” என நயத்தகு முறையில் குறிப்பிட்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் கருத்துக்கு ஒத்தூதியிருக்கிறார்.

அதானி - மோடி - ஸ்டேட் வங்கி
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை அதானி குழுமத்திற்கு வாங்கிக் கொடுக்க நடந்த பேச்சுவார்த்தையில், அதற்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 6,200 கோடி ரூபாய் கடனாக அளிக்க ஒப்புக் கொண்டது. (கோப்புப் படம்).

தனியார்மயத்தின் மிகத் தீவிரமான ரசிகனான இந்தியா டுடே ஏடு, “பொது முதலீட்டுக்கு மறுவாழ்வு தருவதை முற்போக்கு வளர்ச்சிக்கான முக்கியக் காரணியாக்க வேண்டும். அதற்குப் பதில் வேறு முதலீடு இருக்க வேண்டும் என்பதல்ல. அதற்கு மறுவாழ்வு தந்து ஆதரவு தரப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களிடம் வீணாகத் தேங்கிக் கிடக்கும் ‘தூங்கும் முதலீடான’ இரண்டு இலட்சம் கோடி ரூபாயைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கப் பயன்படுத்தலாம்” என அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. கேட்பது பிச்சை என்றாலும், கார்ப்பரேட் விசுவாசிகளின் பந்தா மட்டும் குறையவில்லை.

நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடிக் கொண்டிருக்கும் மைய அரசால் எப்படி முதலீடுகளைச் செய்ய முடியும் என்ற கேள்வியை அலசும் இந்து நாளிதழ், “அலைக்கற்றை ஏல விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தலாம். பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் உற்பத்தி வரியின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தலாம்” என மோடிக்கு வழிகாட்டுகிறது. பொதுமக்களின் கையை வெட்டி முதலாளிகளுக்கு சூப் வையுங்கள் என்பதுதான் இந்த ஆலோசனையின் வக்கிரமான பொருள்.

கார்ப்பரேட் கும்பல் எள் என்றால் எண்ணெயாக நிற்கக் கூடியவரல்லவா நமது பிரதமர். அதனால் அரசாங்க கஜானாவை மட்டுமல்ல, அடித்தட்டு மக்களின் அற்ப உடமைகளையும் கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் நிறுத்திவிட்டார், அவர்.  காப்பீடு துறையில் 49 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீடை அனுமதிக்கும் சட்டத் திருத்தம், நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம், தொழில் பழகுநர் சட்டத் திருத்தம், நிலக்கரிச் சுரங்கங்களையும், இரும்பு, பாக்சைடு போன்ற அரிய வகை தாதுப் பொருட்களையும் ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் சட்டத் திருத்தம் – என அடுத்தடுத்து அவசரச் சட்டங்களை அறிவித்து, அதன் வழியாக நமது நாட்டின் கனிம வளங்களை, விவசாய நிலங்களை, பொது மக்களின் சேமிப்பை, தொழிலாளர்களின் உழைப்பை ஏகாதிபத்திய நிறுவனங்களும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் கூட்டாகச் சேர்ந்துகொண்டு தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி வைத்துவிட்டது மோடி அரசு.

ஜப்பான் உதவியோடு காசியில் நவீன நகரம்
ஜப்பானின் கூட்டோடு, உ.பி. மாநிலத்திலுள்ள காசியை நவீன நகராக உருவாக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் நரேந்திர மோடியோடு கலந்து கொண்ட ஜப்பானின் பிரதமர் ஷின்ஸோ அபே (வலது ஓரம்).

காங்கிரசு கூட்டணி அரசு 2013-ம் ஆண்டில் நிறைவேற்றிய புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், அரசு மற்றும் தனியார் இணைந்து செய்யல்படுத்தும் திட்டங்கள் என்றால், அத்தனியார் நிறுவனங்கள் 70 சதவீத நில உரிமையாளர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும். தனியார் திட்டங்கள் என்றால் 80 சதவீத நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்; விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் விளைவால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்; நகர்ப்புற நிலமாக இருந்தால் அரசு வழிகாட்டி மதிப்பீட்டுக்கு மேல் 2 மடங்கும், கிராமப்புறமாக இருந்தால் 4 மடங்கும் விலையாக நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றவாறு சில கவர்ச்சிகரமான (populist) சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன.  எனினும், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், அணுசக்தி திட்டங்கள், இராணுவப் பயன்பாடு உள்ளிட்ட 13 வகையான அரசின் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டால், நில உரிமையாளர்களின் சம்மதத்தையும் பெற வேண்டியதில்லை, சமூக தாக்கம் பற்றிய மதிப்பீடையும் செய்ய வேண்டியதில்லை என்றவாறு விதிவிலக்குகளையும் அச்சட்டத்திலேயே வைத்திருந்தது.

விவசாயிகளின் சம்மதத்தைப் பெறுவதும், சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிப்பதும்தான் காங்கிரசு அரசு கொண்டுவந்த சட்டத்தின் உயிர்நாடியாகக் கூறப்பட்டது. அந்த உயிர்நாடியைத் திருத்தங்களின் மூலம் ஒழித்துக்கட்டிவிட்டது, மோடி அரசு.  பாதுகாப்பு, பெருந்தொழிற்பேட்டைகள், வீட்டுவசதித் திட்டங்கள், கிராமப்புற அடிக்கட்டுமானத் திட்டங்கள், சமூக அடிக்கட்டுமானத் திட்டங்கள் என்ற இந்த ஐந்து பிரிவுகளின்கீழ் வரும் திட்டங்களுக்கு அது அரசுத் திட்டமாக இருந்தாலும், முழுக்க முழுக்கத் தனியார் திட்டமாக இருந்தாலும், நில உரிமையாளர்களின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை, சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கைத் தயாரிக்க வேண்டிய தேவையும் இல்லை என மோடி அரசு கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டம் வரையறுக்கிறது. எந்தவொரு திட்டத்தையும் இந்த ஐந்து பிரிவுக்குள் அடக்கிவிட முடியும் என்பதால், இனி நிலங்களை அபகரிப்பது ஆற்று மணல் கொள்ளை போல நடக்கக்கூடும்.

இனி தனியார்கள் கட்டும் கக்கூஸைக்கூட சமூக அடிக்கட்டுமானத் திட்டம் என வரையறைத்துவிட முடியும் என்பதால், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக்கொள்ளையை விவசாயிகளால் சட்டப்படி தடுத்து நிறுத்த முடியாது.  பெரிய செலவு எதுவும் இல்லாமல், எதிர்ப்பும் இல்லாமல் சிறுவிவசாயிகளை அப்புறப்படுத்தி, அவர்களது நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கும் அடியாளாக அவதாரமெடுத்திருக்கிறது, மோடி அரசு.

கோல் இந்தியா
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்து கோல் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்களும் ஊழியர்களும் கொல்கத்தாவில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்

கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கங்களை வணிகரீதியான பயன்பாட்டுக்கு ஏலம் எடுப்பதையும்; அப்படி ஏலம் எடுத்த சுரங்கங்களை மற்றொருவருக்கு கைமாற்றிவிடுவதையும் அனுமதிக்கும் விதத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு சட்டத்தில்  திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை, மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழலைவிட, மிகப்பெரும் ஊழலைப் பிரசவிக்கும் அடிப்படையைத்தான் கொண்டுள்ளன.  குறிப்பாக, 2-ஜி அலைக்கற்றைகளை ஏலம் எடுத்த நிறுவனங்கள் அவற்றை வேறொரு நிறுவனங்களுக்கு கைமாற்றிவிட்டுக் கொள்ளை இலாபம் அடைந்ததைப் போன்ற முறைகேடுகள் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடில் இனி அடிக்கடி நிகழும்.  ஆனால், 2-ஜி விவகாரத்தைப் போல அதனை யாரும் ஊழல் என்றோ, முறைகேடு என்றோ குற்றஞ்சுமத்த முடியாது. ஏனென்றால், சுரங்கங்களைக் கைமாற்றிவிடுவதைச் சட்டபூர்வமாக்கிவிட்டார், யோக்கியவான் மோடி.

நிலம், நிலக்கரி உள்ளிட்ட நாட்டின் பொதுச் சொத்தான இயற்கை வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் இந்த அவசரச் சட்டங்களுக்கு அப்பால், “பொது முதலீட்டை அதிகரிப்பதற்குச் சில சிறப்பான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்” என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தரகு முதலாளிகளிடம் உறுதியளித்திருக்கிறார். அச்சிறப்பான நடவடிக்கைகள் வரி விதிப்பு என்ற பெயரில் மக்களைக் கொள்ளையடிப்பதும், அரசு வசமுள்ள மக்களின் சேமிப்புகளை முதலாளிகளுக்குப் படையல் போடுவதும்தான்.

இதன் தொடக்கமாக, தொழிலாளர் வைப்பு நிதியில் கைவைக்கத் துணிந்திருக்கிறது, மோடி அரசு.  அந்நிதியிலிருந்து 7 இலட்சம் கோடி ரூபாயை எடுத்து, அதன் மூலம் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக, கேழ்வரகில் நெய் வடியும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ஏழைகளுக்கு வீடு கிடைக்கிறதோ இல்லையோ, ரியல் எஸ்டேட் கம்பெனிகள், இரும்பு, சிமெண்ட் நிறுவனங்கள் கொழுத்த இலாபம் அடைவது உறுதி செய்யப்படும்.

எதிர்வரும் மார்ச்சுக்குள் 43,500 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்டும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காகளை அடித்து – இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது மற்றும் அதில் கிடைக்கும் பணத்தைப் பொது முதலீட்டுக்குத் திருப்பி விடுவது – முதலாளிகளின் மடியில் விழச் செய்யும் தந்திரம் நிறைந்தது.

ஏழையின் கண்ணில் சுண்ணாம்பையும் பணக்காரனின் கண்ணில் வெண்ணெயையும் வைக்கும் பாரபட்சமான அரசுதான் இது என்பதை பெட்ரோல் விலையைக் கொண்டே விளங்கிக் கொள்ளலாம். அதன் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரி கடந்த சில மாதங்களில் நான்குமுறை அடுத்தடுத்து கூட்டப்பட்டதால், 2012-ம் ஆண்டில் ரூ 9.48 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான உற்பத்தி வரி, இப்பொழுது ரூ 16.95 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த வரி உயர்வின் மூலம் மட்டும் மைய அரசிற்குக் கிடைக்கவுள்ள கூடுதல் வருமானம் 18,000 கோடி ரூபாயாகும்.

எனினும், இந்தக் கூடுதல் வரி விதிப்பால் இந்திய மேல்தட்டு வர்க்கம் பெரும் பாதிப்பு அடைந்துவிடக் கூடாது என்ற பாரபட்ச நோக்கோடு, அவர்கள் பயணிக்கும் விமானத்திற்கான பெட்ரோல் மீது கூடுதல் வரி விதிக்காமல் தவிர்த்துவிட்டது, மோடி அரசு.  இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் ரூ 58.91-க்கு விற்கப்படும்பொழுது, விமான பெட்ரோல் ரூ 52.42 என மலிவு விலையில் விற்கப்படுகிறது. மேன்மக்களுக்கு காட்டப்பட்ட இப்படிபட்ட சலுகைகள் எதையும் ரயில் பயணிகளுக்குத் தரப் போவதில்லை என்பதையும் அகங்காரத்தோடு அறிவித்துவிட்டது, மோடி அரசு.

இது மட்டுமின்றி, ஏழைகளின் அரை வயிற்றுக் கஞ்சியிலும் மண்ணை அள்ளிப் போடவும் இந்த அரசு தயங்காது என்பதை சாந்தகுமார் அறிக்கை எடுத்துக் காட்டியிருக்கிறது. உணவு மானியத்தைக் குறைக்கும் வழிகளை ஆராய்வதற்காக  மோடி அரசால் நியமிக்கப்பட்ட அக்குழு, “இந்திய உணவுக் கழகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, நாட்டின் 67 சதவீத மக்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி உணவுப் பொருட்களை வழங்குவதற்குப் பதிலாக, 40 சதவீத பேருக்கு மட்டும் உணவுப் பொருட்களை வழங்கி உணவு மானியத்தை வெகுவாகக் குறைத்துவிடலாம்” என இரக்கமின்றி அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. மானிய வெட்டுகள், பல்வேறு வரி விதிப்புகளின் மூலம் ஏழைகளைச் சுரண்டி கஜானாவை நிரப்பிக் கொள்ளும் மோடி அரசு, பொது முதலீடு, வரிச் சலுகைகள் என்ற பெயரில் அப்பொதுப் பணத்தைத் தின்று கொழுக்கும் உரிமையைப் பணக்கார வர்க்கத்திற்கு அளிக்கிறது.

தனியார் துறை முதலீடைக் கவருவது என்ற பெயரில் அரசின் கஜானாவைத் திறந்துவைப்பதொன்றும் இதற்கு முன் நடவாத புதிய விசயமல்ல. கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் வங்கிக் கடன்களாகவும், வரிச் சலுகைகளாகவும் பொது முதலீடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட பலன் என்ன?  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன்களால் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் பெருகி, அவை திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. கடந்த ஆட்சியில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகளால் அரசின் பற்றாக்குறை அதிகரித்ததேயொழிய, நாட்டிற்கோ, மக்களுக்கோ அதனால் எந்தப் பலனும் கிட்டவில்லை.  வரிச் சலுகைகளைப் பெற்ற நோக்கியா, வோடாஃபோன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வரி மோசடியிலும் ஈடுபட்டுப் பொதுப்பணத்தைச் சுருட்டிக் கொண்டதைத்தான் கண்டோம். பொது நலன் கருதிதான் அலைக்கற்றைகளையும் நிலக்கரிச் சுரங்கங்களையும் குறைந்த விலைக்கு ஏலம் விட்டதாக காங்கிரசு கட்சி கூறியது.  அப்பொது நலன் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்குத்தான் வழியைத் திறந்துவிட்டது. இப்படிப்பட்ட ஊழலும் மோசடியும் கார்ப்பரேட் பகற்கொள்ளையும் இல்லாமல், மோடி தனியார் முதலீட்டை அள்ளி வருவார் என நம்புவதற்கு காதில் பூதான் முடிந்திருக்க வேண்டும்.

– செல்வம்
________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க