மீனவர்களை கடற்கரையை விட்டு வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு  கடந்த 2011-ஆம் ஆண்டு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தினை கொண்டு வந்தது மத்திய அரசு. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்திற்கான வரைவு அறிக்கையை, சென்னையிலுள்ள நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) தயாரித்து உள்ளது. இந்த வரைவு அறிக்கை, பொது மக்கள் பார்வைக்காக, சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில், பிப்-9 இல் வெளியிடப்பட்டது. இதன்மீது பொதுமக்களின் கருத்துக்களையும், ஆட்சேபணைகளையும் 45 தினங்களுக்குள் தெரிவிக்கக் கோரியிருந்தது.  இந்த கெடுவும் ஏப்.06-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

அரசின் அறிக்கையும், கருத்துக் கேட்பு அறிவிப்பும் ஆங்கிலத்தில் இருந்ததோடு, இணையதளத்திலும் ஆங்கில செய்திதாள்களில் மட்டுமே வெளியிடப்பட்டது. இதன்மூலம், அரசின் நோக்கம் அம்மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்பதல்ல; சம்பிரதாயமான சடங்கு ஒன்றை முடித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

வனப் பாதுகாப்பு என்ற பெயரில், காடு மலைகளிலிருந்து பழங்குடி மக்களை விரட்டியடித்ததைப்போல… விவசாயத்திலிருந்து விவசாயிகள் படிப்படியாக வெளியேற்றப்படுவதைப்போல போல… கடற்கரையிலிருந்து மீனவர்களை விரட்டியடிப்பதற்கான திட்டம்தான் இது என்பதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கும் மீனவர்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகர் அருகேயுள்ள ஆல்காட், ஆரூர் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கருப்புக்கொடி நிரந்தரமாகப் பறந்துகொண்டிருக்கிறது. கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் எனப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

ராதாகிருஷ்ணன் மற்றும் சந்திரசேகர், மீனவ சங்க பிரதிநிதிகள்.

கடற்கரை மேலாண்மை வாரியம் என்ன சொல்லுது? கடற்கரை மீனவனுக்கு சொந்தம் இல்லை. கடல் தண்ணீர் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து கி.மீ வரை கடலுக்கு சொந்தம். அங்கு அரசு என்னவேணாலும் செய்யலாமாம். கடலும் கடற்கரை பகுதியும் மீனவனுக்கு சொந்தம். மீனவனின் வாழ்வாதாரமே கடலை நம்பித்தான்.

சுரேஷ் .

எங்க குப்பத்துல 1500 குடும்பம் இருக்கிறது.  சில குடும்பங்கள் இந்த தொழிலை விட்டு வேறு பொழப்பை தேடி போய் விட்டார்கள்.  நாங்க காலையில ஆறு மணிக்கு கடலுக்கு போனா சிலநாள் சாயங்காலம் ஆறு மணிக்கு வந்துடுவோம். இல்லனா மறுநாள் காலையிலதான். சராசரியா ஒரு நாளைக்கு 35 கி.மீ. தூரம் வரைக்கும் போவோம்.  சீசன் என்றால் 70 கி.மீ. போவோம். நாங்க கூலி தொழிலாளி. எங்ககிட்ட போட் இல்லை. பைபர் போட், ஸ்டீமர் போட் இரண்டு வகை இங்க இருக்கு. ஒரு பைபர் போட் வாங்கி சொந்தமா தொழில் செய்ய நாலு லட்சம் செலவாகும். ஒன்னரை லட்சம் போட், ஒன்னரை லட்சம் வலை, நாற்பத்தி ஏழாயிரம் இஞ்சின் .

இந்த ஒரு போட் இருந்தா ஐந்து குடும்பம் பிழைக்கும். ஒருமுறை கடலுக்கு போனா 35 கிலோ மீட்டருக்கு  டீசல் செலவு 500 ஆகும்; 100 ரூபா மீனுக்கு இறை வாங்குவோம்.   எங்களுக்கு ஆயிரம் ரூபா மீன் கிடைத்தால் கூட செலவு போயி, கூலி ஒருத்தருக்கு 75 ரூபா கிடைக்கிறதே கஷ்டம்.

நிர்மலா.

வீட்டு பெண்கள் கூடையில் மீன் வாங்கி தெருவில் விற்று பிழைக்கிறோம். ஆயிரம் ரூபா சரக்கு எடுத்து போனா முன்னூறு ரூபா கூலியா கிடைகிறது கஷ்டம். இதுல புள்ளைங்களோட செலவயும் பாக்கணும். சொந்தம் பந்தம்னு யாராவது வந்தா கவனிக்கனும்.

கலா

ஆண்டுக்கு நாற்பத்தி ஐந்து நாள் மீன்பிடி தடைக்காலம் வரும்போது அரசாங்கம் கொடுக்கிற பணம் நான்காயிரம் ரூபா. அதுல இருந்தே எங்களோட ஒருநாள் வருமானம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு எண்பது ரூபா கூட இல்ல எங்க வருமானம்.

மதுமிதா,அனுசியா.

அடையாறு அவ்வை இல்லத்தில் படிக்கும் மீனவக் குழந்தைகள். வக்கீலாக வேண்டுமென்று எதிர்கால ஆசை. “பிள்ளைங்க எல்லாம் கவர்மெண்டு பள்ளிக்கூடத்துல தான் படிக்க வைக்கிறோம். இங்க எல்லோரும் அதிகபட்சம் பத்தாவது, பன்னிரெண்டாவது தான் படிச்சிருக்காங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியல” என்கிறார்கள் பெற்றோர்கள்.

எங்க புள்ளைங்க பதினெட்டு வயசுல கடல்  வேலைக்கு வந்துடுவாங்க. ஒரு நாளைக்கு எங்களுக்கு 500 ரூபா கெடச்சா எங்க பிள்ளைங்களை எங்க விருப்பம் போல படிக்க வைப்போம். பெரிய படிப்பு படிக்க வச்சி நல்ல வாழ்க்கை கொடுக்கலாம். இப்ப மீனவ பசங்க தானேன்னு இளக்காரமா பாக்குறாங்க.

கந்தன், குழந்தை மிதுன்.

கடலுக்கும் போவேன், அங்கு வருமானம் இல்லனா பீச்சில பஜ்ஜி கடைபோடுவேன். இன்னா பண்றது பொழைக்கனும்ல. அதுக்கும் இப்ப வேட்டு வச்சிட்டானுங்க. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு எப்பபாரு 144 தடையுத்தரவு. இப்ப காவிரி போராட்டத்த வச்சி  பீச்ச சுத்தமா மூடிட்டான்.

எங்களால் மீனவ  தொழிலை விட்டு போக முடியாது. எங்க உயிர் போனாலும் அது இந்த கடல்ல தான் போகணும்.! – என்கிறார்கள், பகுதி வாழ் மீனவ மக்கள்!

– நேர்காணல், படங்கள்: வினவு புகைப்படச் செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க