போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ? மு.வி.நந்தினி

ஆணாதிக்கத்தின் ஆகச் சிறந்த பிரச்சார வடிவம் போர்னோகிராபி. போர்ன் படங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுகின்றன.

டந்த வாரம் (ஏப்ரல் 2018 முதல் வாரம்) ‘போர்ன்’ படங்கள் குறித்த துணுக்கு ஒன்று முகநூலில் பகிரப்பட்டிருந்தது. அந்த துணுக்கு சொன்ன சேதி இதுதான்:

“போர்ன் படங்கள்தான் பாஸிட்டிவான படங்கள்! கொலைகள் இல்லை; போர் இல்லை; சண்டை இல்லை; ஏமாற்று இல்லை; நிறவெறி இல்லை; மொழி பிரச்சினை இல்லை; நல்ல ஒத்துழைப்பு; நல்ல ஒருங்கிணைப்பு; யதார்த்தமான நடிப்பு. உச்சக் காட்சியை எல்லோரும் ரசிப்பார்கள். ஏராளமான அன்பு; அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இன்பமான முடிவு கிடைக்கும். முக்கியமான விஷயம்…படத்தின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் படத்தின் கதை புரியும். (கண்ணீர் வரும் அளவுக்கு சிரிப்பை உதிர்க்கும் எமோஜிகளுடன் அந்த துணுக்கு முடிகிறது)”.

இந்தத் துணுக்கை பெரியாரிய – அம்பேத்கரிய – பெண்ணிய – தாராளவாத – முற்போக்கு ஆண்கள் பலர் பகிர்ந்திருந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது. சினிமா செயல்பாட்டாளராக தன்னை அறிவித்துக் கொள்ளும் ‘செக்ஸி துர்கா’ என்கிற படத்தை இயக்கி ‘புகழ்’பெற்ற சனல்குமார் சசிதரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிரித்து ரசித்து இந்தத் துணுக்கை பகிர்ந்திருந்தார்.

சனல்குமார் சசிதரன்

இந்த முற்போக்குகளின் பகிர்தலில் கிடைத்த ஒரே ஆறுதல், இவர்களின் பக்கங்களில் இணைந்திருந்த பெண்கள் விருப்பக்குறி இடவில்லை என்பதுதான்.

போர்னோகிராபி எனப்படும் பாலியல் படங்களை ஆதரிக்கும் போக்கு நீண்ட காலமாகவே தாராளவாதிகளிடம் உண்டு. அவர்கள் பாலியல் தொழிலையும்கூட அங்கீகரிக்க வேண்டும் என குரல்கொடுக்கிறார்கள். பாலியல் தொழில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் பாலியல் படங்கள் பார்ப்பதும் நடிப்பதும் இங்கே குற்றமில்லை. பாலியல் படங்களுக்கு உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையாக இந்தியா இருப்பதும், அது வளர்ந்து முதல் இடத்தை வெகுவிரைவில் பிடிக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் கூடுதல் ‘மதிப்பை’ உண்டாக்கலாம். பிரபல பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி, ‘‘பாலியல் படங்கள் பார்ப்பதில் தவறொன்றுமில்லை. இயல்பானதுதான்’’ என்கிறார். ‘‘சினிமாக்களில் இருக்கும் ஆபாசத்தை குறைத்தால் சமூகம் உருப்படும், பாலியல் படங்கள் தடை செய்யப்படவேண்டியதில்லை’’ என்கிறார் இவர். அதோடு, ‘‘பாலியல் படங்களை ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் பார்க்கிறார்கள்’’ என்கிறார் பி.பி.சி. தமிழ் இணையதளத்துக்கு கொடுத்த பேட்டியில்.

ஆமாம், முற்போக்காளர்கள் – மருத்துவர்கள் – அரசு சொல்வதைப் போல பாலியல் படங்களைப் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? போர்னோகிராபியை ஏன் எதிர்க்க வேண்டும்? அதுவும் ஒருவகையில் நடிப்பு தானே?

“வளர்ந்துவரும் சிறுவர்களை வன்முறைமிக்கவர்களாக போர்னோகிராபி மாற்றுகிறது” என்கிறார் பெண்ணியலாளர் கெய்ல் டைன்ஸ்.

கெய்ல் டைன்ஸ்

போர்னோகிராபிக்கு எதிராகப் பரப்புரை செய்துவரும் கெய்ல் போர்னோகிராபி எப்படி பெண்ணுக்கு எதிரானது என பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘‘பாலியல் படங்கள் சிறுவர்களின் பால் தன்மையை பாதிப்பதோடு, பெண்கள் மீதான எதிர்மறை கண்ணோட்டத்தையும் ஏற்படுத்துகின்றன’’ என்கிறார். தொழிற்நுட்ப வளர்ச்சியின் விளைவாக சராசரியாக 13 வயதுள்ள சிறுவர்கள், பாலியல் படங்களை நுகர்வோராக மாறிவிடுகின்றனர் என்கிற புள்ளிவிவரத்தை சுட்டும் கெய்ல், பாலியல் படங்களின் தாக்கத்தில் வளரும் சிறுவர்கள் உண்மையான உறவுகளை இனம் காண்பதில் பிரச்னைக்குள்ளாகிறார்கள் என்கிறார். இந்தியாவில் 40 சதவீதம் பேர் செல்போன் வழியாக பாலியல் படங்களை பார்க்கிறார்கள் என்பதும் அவர்களில் கணிசமானோர் சிறுவர்கள் என்கிறது புள்ளிவிவரம் ஒன்று.

கடந்த மார்ச் மாதம் புதுக்கோட்டையில் 14 வயது சிறுவன், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறான். பாலியல் படங்களால் உந்தப்பட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுவனின் வாக்குமூலம் சொல்கிறது.

குழந்தைகளை ஈடுபடுத்தும் பாலியல் படங்கள் மீது தற்போது பலர் ஆர்வம் கொள்கிறார்கள் என்று புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டுகிறார் கெய்ல். குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி சிறையில் உள்ள சிலரை நேர்கண்ட கெய்ல், அவர்கள் குழந்தைகளை ஈடுபடுத்திய பாலியல் படங்களை நுகர்ந்ததன் விளைவாகவே இந்தக் குற்றச் செயல்களைச் செய்ததாக பதிவு செய்கிறார்.

“போர்னோகிராபி என்பது கோட்பாடு; வல்லுறவு என்பது நடைமுறைப்படுத்துதல்” என்கிறார் பத்திரிகையாளரும் பெண்ணியலாளருமான ராபின் மார்கன்.

ராபின் மார்கன்

போர்னோகிராபி படங்கள் வல்லுறவுகளை, வன்கொடுமைகளை ஊக்கப்படுத்துகின்றன, நியாயப்படுத்துகின்றன என்பது இவருடைய வாதம். பாலியல் படங்களின் பரவல் திருமண உறவில் உள்ள பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது. குறிப்பாக இந்தியாவில் 74 சதவீதம் பெண்கள் தங்கள் கணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது. இறுக்கமான கலாச்சாரச் சூழல், தங்களுக்குள்ள உரிமைகள் குறித்து பெண்கள் அறியாமல் இருப்பது போன்ற காரணங்கள் இருந்தாலும் பாலியல் படங்களின் நுகர்வும் பெண்கள் மீது வன்முறை ஏவ முதன்மை காரணமாக இருக்கிறது.

“ஆணாதிக்கத்தின் ஆகச் சிறந்த பிரச்சார வடிவம் போர்னோகிராபி. போர்ன் படங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுகின்றன. பாலியல் வன்முறைகளை போர்ன் படங்கள் சாதாரணமானவையாக எண்ண வைக்கின்றன. பாலியல் படங்களை பார்த்து பாலியலை அறியும் ஆண்கள், பெண்ணை இழிபடுத்துவதையே செய்கிறார்கள்” என்கிறார் கெய்ல் டைன்ஸ். ஆயிரக்கணக்கான பாலியல் படங்களைப் பார்த்து ஆய்வு செய்திருக்கும் கெய்ல், மூன்று ஆண்கள் ஒரு பெண்ணைப் புணர்வது, மாற்றி அவர்களுடைய ஆணுறுப்பை ஒரு பெண் மீது திணிப்பது, பெண்ணின் முகத்தில், வாயில் ஆண் தன்னுடைய விந்தை பீய்ச்சி அடிப்பது என பெண்ணுடல் மிகக்கடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கிறார். நாராயணரெட்டி போன்ற மருத்துவர்கள் இதையும் சாதாரணமானது என்கிறார்களா? அல்லது பெண்கள் மீதான வன்முறையை ஏற்றுக்கொண்ட ஆணாதிக்க சமூகத்தின் குரலாக நாராயணரெட்டி ஒலிக்கிறாரா? நாராயணரெட்டி பெண்களும்கூட பாலியல் படங்களைப் பார்ப்பதாக தனது கருத்தை நியாயப்படுத்துகிறார் இல்லையா?

‘‘போர்ன் படங்கள் ஆண்களை மட்டும் பாதிப்பதில்லை. பெண்கள், சிறுமிகள் தங்கள் உடல் குறித்தும், பால்தன்மை குறித்தும், உறவுகள் குறித்தும் சிந்திப்பது மாற்றத்துக்கு உள்ளாகிறது’’ என்கிறார் கெய்ல். மனிதத் தன்மையிலிருந்து கீழிறக்கப்பட்டு வெறும் சதைப் பிண்டமாக பெண் மாற்றப்படுகிறாள். அவளுடைய விருப்பங்கள் இங்கே ஒருபோதும் மதிக்கப்படுவதில்லை என்பது கெய்லின் வாதம்.

கோயில்களில் ‘‘நம் முன்னோர்’ பால் உறவு சிற்பங்கள் செதுக்கி வைத்திருக்கிறார்களே? நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’’ என்கிறார் மருத்துவர் நாராயணரெட்டி. ஆம், கோயில்களில் யார் நுழைந்தார்கள், யாருக்காக கோயிலில் பால் உறவு சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டன. அத்தனையும் அரசர்களுக்காகவும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுக்காகவுமே. அங்கேயும் பெண் ஒரு காட்சி பொருள். புணர்வதற்கென்றே பிறந்த உடல். விதவிதமாக புணர்வதற்குப் படைக்கப்பட்ட பண்டம். செக்ஸ் பொம்மைகளைக் காட்டிலும் பெண் உடல் மிகக் கீழாக மதிக்கப்பட்டிருக்கிறது. இதை ஆண்கள் வேண்டுமானால் கொண்டாடலாம். அவர்களுக்கான தேவை எப்போதும் இருக்கிறது!

மேலே சொல்லப்பட்ட முகநூல் பகிர்வில் சொல்லப்பட்டதுபோல, இதை ஆண்கள் – பெண்கள் விரும்பி செய்கிறார்கள்; அதில் மகிழ்கிறார்கள் என்பதில் துளியும் உண்மை இருக்க முடியாது. பாலியல் படங்களில் நடிக்கும் பெண்கள் பல்வேறு பால்வினை நோய்களுக்கு உள்ளாவதும் வாழ்நாள் முழுக்க அவர்கள் நரக வேதனைக்கு உள்ளாவதும் அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் படங்களில் நடிக்க வைக்கப்படும் பெண்கள், சினிமாக்களில் நடிக்க ஒரு வாய்ப்பாக அல்லது அதிக பணம் தரப்படும் என்கிற ஆசை வார்த்தை காட்டி நடிக்க வைக்கப்படுகிறார்கள். பல நேரங்களில் அடித்து துன்புறுத்துவதும் நடக்கிறது.

போர்னோகிராபிக்கு எதிரான பெண்ணியலாளர்களில் கேத்ரின் மெக்கினான் முக்கியமானவர். 90’களின் தொடக்கத்தில் நடந்த செர்பிய- போஸ்னிய போரின்போது, வல்லுறவுகள் பாலியல் படங்களாக பதிவு செய்யப்பட்டு போரில் பரப்புரைக்காக பயன்படுத்தப்பட்டது குறித்து இவர் எழுதிய TURNING RAPE INTO PORNOGRAPHY: POSTMODERN GENOCIDE முக்கியமான ஆவணம்.

கேத்ரின் மெக்கினான்

செர்பிய வதை முகாம்களில் போஸ்னிய – இஸ்லாமிய மத பெண்கள் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது, அவர்கள் செய்த வகை வகையான பாலியல் சித்திரவதைகள் வீடியோ படமாக்கப்பட்டு இனவாதிகளால் பரப்பப்பட்டதையும் சொல்லுகிறது இந்த ஆவணக் கட்டுரை. செர்பியர்களின் இன சுத்திகரிப்பு அட்டூழியங்களில் ஒவ்வொரு இரவும் அந்தப் பெண்களுக்கு உண்மையான நரகத்தைக் காட்டியதாக அந்த ஆவணம் பதிவு செய்துள்ளது. இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் செர்பிய இனவெறியர்கள் அந்தப் பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து, கூட்டத்தினர் பார்க்க அவர்களை வல்லுறவு செய்ததோடு, அதை படமாக்கி களித்திருக்கிறார்கள். ஒருவரின் வல்லுறவு படத்தை இன்னொருவர் பார்த்து குதூகலித்த விதத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்கிறார்கள். ‘‘செர்பிய வீரர்களின் அறைகளின் சுவர்களில் ‘பிளே பாய்’ போன்ற பத்திரிகைகள் வெளியிட்ட பெண்களின் நிர்வாணப்படங்கள் நிரம்பி வழிந்தன’’ என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்.

பெண்களை பண்டங்களாக்கி விற்கும் பிளே பாய் போன்ற பத்திரிகைகள் இனவெறுப்பின் உச்சத்தில் பெண் உடல்களை சிதைக்கப் பயன்பட்டன என்கிற உண்மையை வெளிக்கொணர்கிறார் கேத்ரின். தொழிற்நுட்பம் வளர்ந்த காலத்தில் வதைமுகாம்களில் பாலியல் வல்லுறவுகள் படங்களாக பதிவு செய்யப்பட்டு அவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன. ஈழப்போரின் போது தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, அவர்களின் சிதைந்த உருக்குலைந்த ஆடைகள் அற்ற உடல்கள் அந்த சிங்களர்களாலேயே செல்போனில் படம் பிடிக்கப்பட்டு இணையதளங்களில் பரப்பப்பட்டதை இங்கே நினைவு கூறலாம்.

“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீரழிந்திருந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டிய முக்கியமான பணி இருந்தது. நுகர்வை இரு மடங்காக்கினால் மட்டுமே அது சாத்தியமாகும். தொலைக்காட்சிகளின் வழியாக பெண்களை பொருட்கள் வாங்க வைக்க முடிந்தது. ஆண்களுக்கு..? ‘பிளேபாய்’ இதழை தொடங்கிய ஹெஃபனர் அறிவாளி, 1953-ஆம் ஆண்டு போர்னோகிராபியை தொழிற்மயமாக்கினார். அதை ஒரு பண்டமாக மாற்றினார். ‘பிளேபாய்’ பத்திரிகையில் வந்த விளம்பரங்கள் இந்தப் பொருளை வாங்கினால் இதுபோன்ற பெண் கிடைப்பாள், அல்லது இதே பெண் கிடைப்பாள் என சொல்லப்பட்டது. அவர் பாலியலை மட்டும் பண்டமாக்கவில்லை. எல்லா பண்டங்களையும் பாலியல்மயப்படுத்தினார்” என்கிற கெயிலின் கூற்றை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக உறுதி செய்துகொள்ளலாம். லுங்கி விளம்பரத்திற்கு ஏன் பெண் தேவைப்படுகிறார்? கைக்குட்டைக்குக்கூடவா?

‘பிளேபாய்’ தொடங்கிவைத்த போர்னோகிராபி சந்தை இன்று உள்ளங்கைகளுக்கு வந்துவிட்டது. வயதுக்கேற்ற, நிறத்துக்கேற்ற, இனத்துக்கேற்ற, உடல்வாகுக்கேற்ற, குறிப்பாக ‘அவுஸ் வைஃப்’, ‘ஆண்டி’ என ஆப்சன் வைத்து தேடிக் கண்டுகளிக்க பாலியல் படங்கள் ஏராளமாக குவிந்துக்கிடக்கின்றன. தேடுபொறி சொற்கள் உள்ளிட்டு எல்லாமே ஆண்களின் நுகர்வுக்கேற்ப உருவாக்கப்படுபவையே. முட்டுச் சந்துகளில், இருட்டு அறைகளில், நுண் வெளிச்சம் பாய்ச்சும் ஸ்டுடியோ மெத்தைகளில், சிறைக்கூடங்களில், பாலியல் தொழில் நடக்கும் அழுக்கேறிய அறைகளில் அவதிப்படும் பெண்ணின் வலிகள் எப்போதும் ஆண்களுக்குப் புரியப்போவதில்லை. ஆண்கள் நுகரப் பிறந்தவர்கள். அவர்கள் ஒருபோதும் குற்றவுணர்ச்சி கொள்ளப்போவதில்லை.

– மு.வி.நந்தினி

தரவுகள்:

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார்.

15 மறுமொழிகள்

 1. மரியாதைக்குரிய நந்தினி அவர்களுக்கு, சிறப்பான ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய கட்டுரை. என்னுடய புரிதலில் போர்னோக்ராப் காணொளிகளைப் பார்க்காத பதின்பருவ வயதினர் இருக்கிறார்களா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக, இன்று ஊர்களில் இருக்கும் இணையதள மையங்களில் 14 வயது முதல் 17 வயதுக்குள்ளாக பையன்கள் ஒவ்வொரு கேபின்களுக்குள்ளும் பார்த்துக்கொண்டிருப்பது இந்த போர்னோ படங்களை மட்டுமே. இவர்களுக்கு பொர்னொக்ராப் விபரீதங்களை யார்புரிய வைப்பது என்பதை நினைத்தால் மனது கனக்கிறது.
  இதன் தொடர்ச்சியாக இந்த ஆணாதிக்க சமூகம் ஆடைச்சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதைப் பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை. படித்து உங்கள் கருத்தை கூறலாம். தவறிருந்தால் திருத்திக்கொள்வேன்
  https://www.facebook.com/notes/yasar-arafath/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/1897621627188242/

 2. தோழர் இன்றய தேவைகளை சொல்லும் பதிவு. பெண் வலியை உணரும் ஆண்களை வாழ்த்துவோம். சரியான பார்வை

 3. பெண் மய்யத் தன்மையுடைய, பெண்ணுடலை பண்டமாக மாற்றாத போர்னோகிராபி சாத்தியமே இல்லையா?

 4. போர்னோ – சந்தைக்குள்ளாக்கப்பட்ட விடயம் என்பதைக் கவனம் கொள்ளவேண்டும். சந்தைகளை ஆக்ரமித்துள்ள முதலாளிகள் அதன் விற்பனையைப் பெருக்குவதற்காகச் செய்கின்ற வேலைகளின் அடிப்படையிலே போர்னோ இங்கே உருவாக்கப்படுகின்றது. அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் இப்படங்கள் பெண்ணடக்குமுறையினையே கற்பிக்கின்றன. அந்த வகையில் இவைகள் ஆணாதிக்கத்தின் ஆயுதங்களே!

 5. மு.வி.நந்தினி அவர்களுக்கு நன்றி. ஆண்களின் ஆணாதிக்கப் பண்பு மாறப்போவதில்லை என்ற உணர்வில் முடிவுரையை அமைத்திருக்கிறீர்கள். ஆனால் ஆணாதிக்கத்தை ஒழிக்க சமூக விடுதலை உணர்வுடன் பெண்கள் எடுக்க வேண்டிய சவால்கள் நிறைந்த முன்னெடுப்புகளை அவசியப்படுத்துவதாக முடிவுரையை அமைத்திருந்தால் இன்னும் சரியாக அமைந்திருக்கும் என்று கருதுகிறேன். அறிவன்புடன் புதியவன்.

  • எனக்கும் அதே கருத்துதான் புதியவன் அவர்களே. எதிர்மறையை தோலுரிக்கும் இந்த கட்டுரையை போல இனி ஆண் சமூகத்தின் வரலாற்று பிழைக்கு என்ன செய்ய வேண்டும் என்ற நோக்கில் இன்னுமொரு கட்டுரை பாதிக்கப்படும் சரிபாதி பெண்களின் சார்பாக அவரிடம் எதிர்பார்க்கிறேன். நன்றி

 6. நீண்ட நாட்களுக்குப் பிறகு நந்தினியின் சிறப்பான கட்டுரை வினவில். நன்றி!
  ஆனால் ஒருக் கேள்வி. ஆண்கள் நுகரப் பிறந்தவர்கள் என்ற ஒற்றை அடையாளத்துடன் அவர்களை சரிபாதி பெண்கள் கடந்து போய் விட முடியுமா?

 7. Dear Comrade Nandhini,

  Congratulations for the excellent and phenomenal work done….I hope this will be very helpful to the youngsters who is wasting time or forced to consume the corporate way of living life. Keep doing the work and contribute more to the society…congrats again.

 8. மு.வி. நந்தினி,

  சமீபத்தில் ஒரு திரையரங்கிற்கு சென்ற போது, அந்த திரையரங்கின் ஊழியர் ஒருவரிடம் ‘இ.அ.மு.கு’ என்ற இப்போது ஓடிக்கொண்டிருக்கும் போர்ன் படத்தை பற்றி பேசினேன்.

  பெண்கள் குறிப்பாக கல்லூரி மாணவிகள் தங்களது தோழியருடன் பார்க்க வருவதாக தெரிவித்தார். சிலர் தங்கள் மனைவியுடன் பார்க்க செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், பாதி படத்திற்கு மேல் உட்கார முடியாமல் வெளியேறிவிடுகிறார்களாம்.

  படத்தோட பேர இப்படி வச்சிருக்கான் இதை எந்த நம்பிக்கையில் பார்க்க வருகிறார்கள் என்றதுடன் காலம் கெட்டுப்போச்சு சார், பொண்ணுங்களும் கெட்டுப் போச்சு சார் என்றார்.

  இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?

  போர்ன் படங்களை ஆண்கள் மட்டும் தான் ரசிக்க வேண்டுமா என்று கேட்போருக்கும், ஆண்கள் மட்டுமா ரசிக்கிறார்கள் என்று கேட்போருக்கும் எந்த வேறுபாடும் இல்லை, இரண்டுமே ஒரு வகை ஆணாதிக்க மனோபாவம் என்றே நான் நினைக்கிறேன்.

 9. மு.வி. நந்தினி,

  ’நடிகையர் திலகம்’ – திரைப்படம் பற்றி உங்களுடைய கருத்தை இணையத்தில் காண முடிந்தது:

  //மு.வி. நந்தினி

  சாவித்ரியின் அலங்கோல, அகால மரணத்துக்கு மிக முக்கியமான காரணம், அவருடைய கணவரும் காதலருமான ஜெமினி கணேசன். தன் மனைவி அல்லது காதலி தன்னைவிட செல்வாக்கு மிக்கவராக இருப்பதை ஆணாதிக்க சமூகத்தைச் சேர்ந்த எந்த ஆணாலும் சகித்துக்கொள்ள முடியாது. அன்பின் பேரில் சுரண்ட ஆரம்பித்து, தோற்றுப்போய், ஒதுக்க ஆரம்பிக்கும் ஆண்களின் சூழ்ச்சியில் தெளிவில்லாத எந்தப் பெண்ணும் வீழ்ந்துதான் போவார். சாவித்ரியின் வீழ்ச்சி அத்தகையதே. சாவித்ரியின் நடிப்பு, திறமை எக்ஸ்ட்ரா..எக்ஸ்ட்ராவை புகழ்ந்துவிட்டு, ஏதோ சாவித்ரியின் குடிப்பழக்கம் மட்டுமே அவருடைய அத்தனை வீழ்ச்சிகளுக்கும் காரணமென பல ஆண்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் எப்போதும் ஆண்கள்தான். முற்போக்கென்ன, பிற்போக்கென்ன///

  உங்களுடைய இந்தக் கருத்தின் அடிப்படையில் அந்த ’நடிகையர் திலகம்’ படத்தை பற்றி ஒரு விமர்சனம் எழுதுங்களேன்..
  காத்திருக்கிறோம்.

 10. அரசனின் அந்தப்புறம் வந்ததிலிருந்தே பெண் போதையாக்கப்பட்டிருக்கிறாள்…..
  பெண்களின் வலியும்,வேதனையையும் என்று ஒவ்வொரு ஆணிடமும் ஒரு பெண் பகிர்ந்து கொள்ளும் நிலை வருமோ அன்றுதான் பெண் பெண்ணாக மதிக்கப்படுவாள்….
  அது பெண் நினைத்தால் கண்டிப்பாக மாற்ற முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க