காவிரி : கபினியில் கைது செய்ய முடியுமா ?

காவிரியை அவர்கள் தடுத்து நிறுத்த முடியுமா? தோழர் துரை.சண்முகத்தின் கவிதை!

நான் காவிரி
என்னை
உன்னால் தடுக்கமுடியாது

சிவசமுத்திரத்தில்
சிறையிட்டால்
சிதம்பரம் விளையாட்டரங்கில்
என் குரல் கேட்கும்.

 

என்னை
கபினியில் கைது செய்தால்
நான்
அண்ணா சாலையில்
ஆர்ப்பரிப்பேன்.

வரலாற்றுப் பெருக்கெடுத்த
நதியை
உனது லத்திக்கம்பால்
தடுக்க முடியாது

நீ அடித்து
நீர் விலகாது
குளம், குட்டை
ஏரி, தாங்கல்
மெரினா, நெய்வேலி
மீண்டும் மீண்டும்
நான் நிறைவேன்.

ஆயிரமாய் அணை கட்டு
அபாண்டமாய் கதை கட்டு
அடி, உதை
வெறிகொண்டு விளாசு
தெறிக்கும் உதிர நதியில்
அவமானப்பட்டு
மிதக்கிறாய் நீ

நான் காவிரி
என்னை
உன்னால்
அடக்க முடியாது.

செந்நெல், சீரகச்சம்பா
செங்கரும்பு, கேழ்வரகு
செங்கால் நாரை
சேற்றுக்கால் கொக்கு
நண்டு, நத்தை
ஊர்க்குருவி, ஊமத்தம் பூ
துளசிச்செடி, ஓணாண் கொடி
மாடு, ஆடு
நன்றியுள்ள நாய்
ஆலமரம்
ஏலேலங் கிளி
கோரை விலா
ஈர நிலா
கலப்பையில் துளிர்க்கும்
சூரியன்
எல்லாமும்
என் பக்கம்,
எனக்கு ஆதரவாய்.

எல்லாவற்றுக்கும் மேல்
இயற்கையின் நீதி
என் பக்கம்.

இயற்கைக்கும்
எதிரான காவியே,

நான் காவிரி
உன்னால்
தடுக்க முடியாது!

– துரை. சண்முகம்