திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் ‘’ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளு!!’’ – என்ற கோரிக்கையுடன், தோழர் நிர்மலா தலைமையில் 24-04-2018 அன்று திருச்சி காவல் ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர் ‘’சென்னையில்தான்  வழக்கு போட்டுட்டாங்களே, நீங்க ஏன் திரும்ப மனு கொடுக்கிறீங்க?’’ என்றார், காவல் ஆணையர். ‘’இந்த ஒரு சம்பவம் என்றில்லை, தொடர்ச்சியாகவே வன்மத்துடனும் வக்கிரமாகவும் கருத்துக்களை வெளியிட்டுவரும் எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை’’ என்று பதிலளித்தனர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

காவல் ஆணையரிடம் வழங்கப்பட்ட மனு:

அனுப்புதல்

ஜெ.நிர்மலா,
மக்கள் அதிகாரம்,
21-சி, என்.என்.என். கட்டிடம்,
காஜாமியான் தெரு,
பாலக்கரை, திருச்சி-1.
பேச:-94454 75157

அடைதல்

உயர்திரு.காவல்துறை ஆணையர் அவர்கள்,
திருச்சி மாநகரம்,  திருச்சி.

அய்யா,

பொருள்:- ஊடகத் துறையில் பணியாற்றும் லட்சுமி சுப்ரமணியன் உள்ளிட்ட பெண்களைமிகக் கேவலமாக சித்தரித்து, தமிழகத்தின் அமைதியை கெடுத்து, வன்முறையைத் தூண்டும்  எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.வி.சேகர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தால் கன்னத்தில் தட்டப்பட்ட ஊடகத் துறையில் பணியாற்றும் லட்சுமி சுப்ரமணியன் என்ற பெண் நிருபர் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் “மதுரை யுனிவர்சிடியும், கவர்னரும் பின்னே கன்னிப் பெண்ணின் கன்னமும்” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அதில், “அசிங்கம் பிடித்த கேவலமான பிறவிகள், படிப்பறிவில்லாத கேவலமான பொது அறிவில்லாத பொறுக்கிகளே தமிழகத்தில் பெரும்பாலும் மீடியாவில் வேலைக்கு வருகிறார்கள். இந்தப் பெண்ணும் அதற்கு விதிவிலக்கில்லை என்பது தெரிகிறது. பல்கலைக் கழகங்களை விடவும் அதிக அளவில் செக்ஸுவல் அப்யூஸ் நடப்பது மீடியாக்களில்தான்பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்டராகவோ செய்தி வாசிப்பவரோ ஆகிவிட முடியாது என்பது சமீபத்திய பல புகார்களின் மூலம் வந்த அசிங்கம். இந்த மொகரக்கட்டைகள்தான் கவர்னரைக் கேள்விக் கேட்க கிளம்பி விடுகிறார்கள். தமிழகத்தின் மிகக் கேவலமான ஈனமான அசிங்கமான அருவருப்பான ஆபாசமான இழிந்த ஈனப் பிறவிகள் அதன் பெரும்பாலான மீடியா ஆட்களே” என்று பதிவிட்டுள்ளார்.

கவர்னரின் செயல் குறித்து உரிய பத்திரிக்கையாளர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சம்மந்தப்பட்ட கவர்னரும் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், மேற்படி பதிவானது ஜனநாயகத்தின் முக்கிய தூணாக கருதப்படுகின்ற பத்திரிக்கை துறையில் பணியாற்றும் பெண்களை அவதூறு செய்வதாக உள்ளது. மேலும் மேற்படி பேஸ்புக் பதிவானது அமைதியை கெடுத்து, வன்முறை தூண்டும் நோக்கம் கொண்டதாகும். ஒரு ஊடகத் துறை பெண்ணையும் அதை முன்னிட்டு ஒட்டு மொத்த பெண் இனத்தையுமே சிறுமைப்படுத்தி பேசியுள்ள இச்செயலை ஒரு ஜனநாயக சமூகம் சகித்துக் கொள்ள முடியாது. ஆணாதிக்க கருத்தியலின் அருவெறுக்கத்தக்க இக்கருத்தை பேசியவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவராகவும் சினிமா நடிகராகவும் இருப்பவராவா்.

காஷ்மீர் கதுவா தொடங்கி உ.பி. உன்னாவ் வரை பா.ஜ.க. தலைவர்கள் சிறுமிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியும் கொலை செய்தும் வந்துள்ள நேரத்தில்… முன்னாள் மேகாலயா கவர்னர் தொடங்கி இந்நாள் தமிழக கவர்னர் வரை பாலியல் விவகாரங்களில் சிக்கி சந்தி சிரித்து வரும் நிலையில்… எஸ்.வி.சேகர் இவ்வாறு பெண்கள் பற்றி மட்டமான கருத்தை வெளியிட்டிருப்பது மிகவும் கீழ்த்தரமான ஆணாதிக்க கருத்து என்பதுடன் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தக் கூடியதுமாகும்.

வாய்க்கொழுப்பெடுத்து இவ்வாறு பேசியுள்ள எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மனநோயாளிகளின் நிலைக்கு ஆளாகிவிட்ட இப்படிப்பட்ட நபர்கள்  சுதந்திரமாக நடமாடுவதும் கருத்து தெரிவிப்பதும் இனியும் தொடரக்கூடாது என்ற வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கருதுகிறோம். எனவே, இவரை குறைந்தபட்சம் ஓராண்டுக்கு தடுப்புக்காவலில் வைக்க வேண்டும் எனக் கருதுகிறோம்.

தமிழக அரசின் தலைமைச்செயலராக இவரது நெருங்கிய உறவினர் இருப்பதால் இவரைக் கைது செய்ய காவல்துறை அஞ்சுவதாக ஊடகங்களில் கருத்து வந்து கொண்டுள்ளது. தவறிழைத்தவர்கள் எத்தகைய செல்வாக்குள்ளவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் படி தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். எனவே, தாங்கள் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
(நிர்மலா)
மக்கள் அதிகாரம், திருச்சி.

தகவல்: மக்கள் அதிகாரம், திருச்சி.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க