நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா ? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள் !
நடிகர் எஸ்.வி.சேகர் மீது தமிழகமெங்கும் பல காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பா.ஜ.க. இளைஞரணிக்காரர் புகார் கொடுத்த மறுநாளே திருச்சியில் தோழர் கோவனை வீடு புகுந்து இழுத்துச்சென்ற தமிழக போலீசு, பத்திரிகையாளர் சமூகமே புகார் கொடுத்த பின்னரும், மயிலாப்பூர் சேகர் வீட்டு வாயிற்படியையே மிதிக்கவில்லை.
அதே நேரத்தில் குற்றத்தை எதிர்த்த பத்திரிகையாளர்கள் மீதான நடவடிக்கை மட்டும் வேகம் பிடித்திருக்கிறது. சேகர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களில் பெரும்பான்மையினர் நியூஸ் 18 தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் பலர் அந்த தொலைக்காட்சி நிர்வாகத்தால் தண்டிக்கப்படுவர் என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மற்ற பத்திரிகையாளர்களை அந்தந்த நிர்வாகங்கள் பாராட்டியிருக்கும் போது, நியூஸ் 18 நிர்வாகம் மட்டும் தண்டிப்பதற்கு விரும்புகிறதா?
அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனை பத்திரிகையாளர்கள் மீதான நிர்வாக ரீதியான நடவடிக்கையாக நாம் பார்க்கக் கூடாது. அதனை பா.ஜ.க.-வின் உத்தரவுக்கிணங்க எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும்.
ஆண்டாள் பிரச்சனை, பெரியார் சிலை உடைப்பு, ஆளுநர் நடத்தும் துணைவேந்தர் நியமனங்கள், பத்திரிகையாளர் சந்திப்பில் ஆளுநர் “தாத்தா”வின் நடவடிக்கை, முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் அவர் மனைவி மக்களையும் இழிவு படுத்திய எச்.ராஜாவின் பதிவு, காவிரி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் தமிழ் மக்களை அவமதிக்கும் சுப்பிரமணியசாமியின் கருத்துகள், புதிய தலைமுறை செந்தில் நடத்திய நேர்காணலில் எஸ்.வி.சேகர் அவருக்கு எதிராக வெளிப்படுத்திய பார்ப்பனத் திமிர், துக்ளக் குருமூர்த்தியின் எழுத்துகள்.. ஆகிய அனைத்தின் தொடர்ச்சிதான் சா.திருமலை அலையஸ் எஸ்.வி.சேகரின் பதிவு.
எனவே, ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக எந்த நிறுவனம், என்ன முகாந்திரத்தின் பேரில் நடவடிக்கை எடுத்தாலும் அந்த நிறுவனத்துக்கு எதிராக தமிழகத்தின் கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடவேண்டும். இது பத்திரிகையாளர்களுடைய பணிப்பாதுகாப்பு குறித்த தொழிற்சங்க பிரச்சினை அல்ல. தமிழ்ச் சமூகத்தை இந்துத்துவ பாசிஸ்டுகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிக் கொள்வது குறித்த பிரச்சினை.
***
போராடிய பத்திரிகையாளர்களுக்கு எதிராக சங்கி டிரோல்கள் நடத்தும் தாக்குதல் ஒருபுறம் இருக்க, பத்ரிகா தர்மம் என்ற பெயரிலும் நிறுவனத்தின் ஒழுங்கு என்ற பெயரிலும் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. நாம் செய்தது தவறுதானோ என்ற குற்றவுணர்வுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
போராடிய பத்திரிகையாளர்களுக்கு எதிராக கேள்வி எழுப்பும் அருகதை நிர்வாகத்தினருக்கு உண்டா என்ற கேள்விக்கு முதலில் பதில் தேவை. தொலைக்காட்சி நிறுவனங்களில் பெண் பத்திரிகையாளர்களுக்கான நேர்முகம் படுக்கையறையில்தான் நடக்கிறது என்று எழுதி, எல்லா தொலைக்காட்சிகளையும், அவற்றின் ஊழியர்களையும் இழிவுபடுத்தியிருக்கும் இந்த பொறுக்கிகளுக்கு எதிராக நிர்வாகங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? சேகர் மீதும், தன்னுடைய நண்பர் என்று சேகரால் உரிமை பாராட்டப்படும் திருமலை மீதும் குறைந்த பட்சம் ஒரு போலீசு புகாரைக் கூட கொடுப்பதற்குத் திராணியில்லாத ஒரு நிர்வாகத்துக்கு, தனது ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் அருகதை உண்டா?
இந்நிறுவனங்கள் பத்திரிகையாளர்களின் உழைப்புக்குத்தான் ஊதியம் கொடுக்கின்றனவேயன்றி, பா.ஜ.க. பொறுக்கிகளின் பேச்சையெல்லாம் கேட்டுச் சகித்துக் கொண்டு போவதற்கு அல்ல. கார்ப்பரேட் முதலாளிகள், தங்கள் சொந்த ஆதாயத்துக்காக, தொழிலாளிகளின் மானத்தையும் சுயமரியாதையையும் விலை பேசுவதை பத்திரிகையாளர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
***
இன்று இந்தியாவில் இந்துத்துவ அரசியலை கேள்விக்குள்ளாக்கும் மாநிலமாக இருப்பது தமிழகம். ஊடக முதலாளிகளின் நெருக்குதலையும், பா.ஜ.க. வினரின் திரைமறைவு அழுத்தங்களையும் மீறி சங்க பரிவாரத்தின் அரசியலுக்கு எதிரான குரல் ஒலிக்கின்ற ஒரு களமாக தமிழ்த் தொலைக்காட்சிகள் இன்னமும் இருக்கின்றன. இன்று இந்த ஊடகவியலாளர்கள் தண்டிக்கப்பட்டால், விரைவிலேயே தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் தந்தி டி.வி.-யாக மாறிவிடும். அப்படி மாற்றுவதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம்.
சங்க பரிவாரத்தின் இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் விதத்தில், “ஆங்கில-மேட்டுக்குடி-அதிகாரத் தாழ்வார“ பத்திரிகையாளர்கள் சிலர் வேலை செய்கின்றனர். அவர்களுடைய இலக்கில் நியூஸ் 18 தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி சங்கபரிவாரங்கள் விரும்பாத சில பத்திரிகையாளர்களும் இருப்பதாகத் தெரிகிறது. எந்தக் காயை யார் என்ன நோக்கத்துக்காக நகர்த்துகிறார்கள் என்பதை இப்போது நாம் ஊகிக்க முடியாது. ஊகங்களை விட்டுவிடுவோம். அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு வருவோம்.
ஊடகத்துறை அறம் பற்றி பெரிதும் கவலைப்படுகிறார் மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன். சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டதை எதிர்த்து பிராம்மண சமூஹம் நடத்திய மனிதச் சங்கிலியின் ஒரு முனையில் எஸ்.வி.சேகர் இருந்தாரென்றால் இன்னொரு முனையில் இருந்தவர் இவர். சங்கராச்சாரியை நிரபராதியாக காண முடிந்தவருக்கு கல்லெறிந்தவர்கள் குற்றவாளிகளாகத் தெரிவதில் வியப்பில்லை.
சந்தியா ரவிசங்கர் என்ற அம்மையார் பத்திரிகையாளர் சமூகத்தின் சார்பில் எஸ்.வி.சேகரிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். மன்னார்குடி மாபியாவைச் சேர்ந்த விவேக் எப்படி சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர் என்பதை விளக்கி ஆங்கில தி இந்துவில் உருக்கமான ஒரு கட்டுரை எழுதியவர் இவர். பார்க்க வினவு கட்டுரை . விவேக்கை உழைப்பால் உயர்ந்த உத்தமராக கருதுபவருக்கு பத்திரிகையாளர்கள் ரவுடிகளாகத்தானே தெரிய வேண்டும்.
இவை இரண்டு எடுத்துக்காட்டுகள் மட்டுமே. சென்னையைச் சேர்ந்த ஒரு மேட்டுக்குடி கூட்டத்தைத் தவிர, ஊரகப் பகுதி பத்திரிகையாளர்கள் யாரும் மேற்படி “கல்லெறி” சம்பவத்தை கண்டிக்கவில்லை, மாறாக வரவேற்கவே செய்கிறார்கள்.
***
கல்லெறி என்பது தீவிரமான எதிர்ப்புணர்வின் ஒரு வடிவம். எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்த அந்த வக்கிரத்தை ஒரு பெண்ணிடம் யாரேனும் நேரில் பேசியிருந்தால், சேகருக்கு விழுந்திருக்கக் கூடிய தர்ம அடியை எண்ணிப் பார்த்தால் அதில் ஒரு விழுக்காடு கூடக் காணாது இந்தக் கல்லடி.
கல் எறிந்தது சட்ட விரோதமாம். உண்மைதான். ஆனால் இன்று தமிழகத்தில் நடப்பதும், டில்லியில் நடப்பதும் சட்டவிரோத ஆட்சிகள்தானே. சென்னை உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வழக்கிற்குப் பின்னரும், அசீமானந்தா, மாயா கோத்னானி விடுதலைக்குப் பின்னரும் லோயா தீர்ப்புக்குப் பின்னரும் இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? இந்த தீர்ப்புகள் மீது கேள்வி எழுப்புவது நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டுகிறார் ரவிசங்கர் பிரசாத். இந்த தீர்ப்புகளின் மீது கல்லெறிவதையும் நிறுத்திக் கொள்வோமா?
பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி, குஜராத் படுகொலை வரை ஒரு நீண்ட சட்டவிரோதக் கொலைக்குற்றங்களின் மூலம் ஆட்சிக்கு வந்திருக்கும் பாசிசக் கிரிமினல்கள்தான் சங்க பரிவாரத்தினர். சட்டத்தின் ஆட்சி என்று நடிப்பதற்கு பாரதிய ஜனதாக் கட்சி. சட்டவிரோதக் கொலைகள், கலவரங்களை அரங்கேற்ற சங்க பரிவாரம். பிறகு பரிவாரத்தின் குற்றங்களை சேனல்களில் அமர்ந்து நியாயப்படுத்த ராகவன்கள், நாராயணன்கள்.
“எச்.ராசா கள்ள உறவுன்னுதான் சொல்லியிருக்கார். யார் பெயரையும் சொல்லலியே” என்று விவாதத்தில் தி.மு.க.வினரை நக்கல் செய்கிறார் ராகவன். “ஆசிபாவைக் கொன்றது ரோஹிங்யா முஸ்லிம்கள்தான்” என்கிறார்கள் பா.ஜ.க. ஊடகப் பிரதிநிதிகள். எத்தனை ஆண்டுகளாக தொடர்கிறது இந்த நாடகம்?
அன்று பத்திரிகையாளர்கள் வீசிய கல் சேகர் வீட்டின் மீது எறியப்பட்ட கல் மட்டுமல்ல, இந்த நாடகத்தின் மீது எறியப்பட்ட கல்.
***
கல்லை மட்டும் எறியாமல் இருந்திருந்தால்…. என்று பத்திரிகையாளர்களிடம் சொல்பவர்கள், அதை டாஸ்மாக் கடையை உடைக்கும் பெண்களிடம் சொல்வார்களா? மணல் லாரிகளை சிறைப் பிடிக்கும் மக்களிடம் சொல்வார்களா? ஓ.என்.ஜி.சி யைத் தடுத்து நிறுத்தும் விவசாயிகளிடம் சொல்வார்களா? இவர்கள் தமிழிசையிடம் மனுக் கொடுத்ததைப் போல, அதிகாரிகளிடம் மனு கொடுக்குமாறு டாஸ்மாக்கை எதிர்த்து நிற்கும் பெண்களிடம் இவர்கள் சொல்வார்களா?
சட்டத்தை நம்பி, அதற்கு அடங்கி நடந்து பயனில்லை என்று தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து, தமக்கே உரிய முறைகளில் சட்டத்தை மீறி மக்கள் நடத்தும் போராட்டங்களைத்தான் எல்லா தொலைக்காட்சிகளும் அன்றாடம் ஒளிபரப்புகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், போலீசு, அதிகார வர்க்கம், நீதித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்தும் தாம் சொல்லிக் கொள்ளும் நோக்கத்துக்கு எதிராகவே செயல்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேறு எங்கும் போகத் தேவையில்லை. மற்றெல்லோரையும் விட இந்த உண்மை புரிந்தவர்கள் பத்திரிகையாளர்கள்தான். தொலைக்காட்சி விவாதங்கள் இந்த உண்மையைத்தான் அன்றாடம் நிறுவுகின்றன.
இப்படிக் குமுறி வெடிக்கின்ற மக்களுடைய கோபத்தின் இன்னொரு வடிவம்தான் பத்திரிகையாளர்களின் கல்வீச்சு. இது ஆண்டாள் விவகாரத்தின்போதே வீசியிருக்கவேண்டிய கல், பெரியார் சிலையை உடைப்பேன் என்றவுடன் வீசியிருக்க வேண்டிய கல். மேலாண்மை வாரியத்துக்கு கைவிரித்தவுடன், தி.மு.க. தலைவரின் குடும்பத்தை இழிவு படுத்தியவுடன் வீசப்பட்டிருக்க வேண்டிய கல்.
***
சிலர், இந்தக் கல்வீச்சை புத்திசாலித்தனமற்ற நடவடிக்கையெனக் விளக்குகிறார்கள். கல்லை வீசியவர்களுக்குத்தான் பாதிப்பு என்று லாபநட்டக் கணக்குப் போட்டு அறிவுரை சொல்கிறார்கள். இந்த அறிவுரைகள் நிர்மலாதேவி மாணவிகளுக்கு வழங்கும் அறிவுரையுடன் அதிசயிக்கத்தக்க முறையில் ஒத்துப் போகின்றன.
போராட்டங்களில் ஈடுபடுகிறவர்கள் அதன் விளைவுகள் குறித்து யோசித்துக் கொள்ளவேண்டும் என்பதென்னவோ சரிதான். ஆனால், “இந்தக் கோட்டைத் தாண்டினால் என்ன குற்றப்பிரிவு, அந்தக் கோட்டைத் தாண்டினால் என்ன குற்றப்பிரிவு” என்று யோசிப்பவர்கள் எந்தக் காலத்திலும் எந்தக் கோட்டையும் தாண்டுவதில்லை.
இந்தக் கல்வீச்சு எதை சாதிக்கவில்லையென்றாலும், “அனுமதிக்கப்பட்ட எதிர்ப்பு முறைகள்” என்ற கோட்டைத் தாண்டியிருக்கிறதே அதுதான் மிக முக்கியமான சாதனை.
இந்த சட்டங்களும் அரசும் எதிரிகளை தண்டிக்கப் போவதில்லை என்பது தெளிவான பிறகு, புதிய போராட்ட முறைகளை நாம்தான் கண்டு பிடிக்க வேண்டும். சட்ட வரம்புகள், அவற்றின் மீதான அச்சம், புனித கற்பிதங்கள் ஆகியவற்றை நாம் மதிப்போம் என்ற நம்பிக்கை இருக்கும் வரையில்தான் எதிரிகள் நிம்மதியாக இருக்க முடியும். பத்திரிகையாளர்கள் அந்தக் கோட்டைத் தாண்டிய காரணத்தினால்தான் சில நாட்களுக்காவது சேகர் தலைமறைவாக வேண்டிய நிலை வந்திருக்கிறது.
ஆகப்பெரிய புத்திசாலிகளாகிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளே எல்லைக் கோடுகளை மீறி தெருவுக்கு வந்து கல்லெறியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, பத்திரிகையாளர்கள் எம்மாத்திரம்?
***
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக வழக்கறிஞர் சமூகத்துக்கு என்ன நடந்ததோ அதுதான் இன்று தமிழக பத்திரிகையாளர்களுக்கும் நடக்கிறது. வழக்கறிஞர் சமூகம் வீதியில் இறங்கிப் போராடுவதென்பது இந்தியாவில் தமிழகம் தவிர வேறு எங்கும் இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாதபோது, அந்த நியமனத்தையே நிறுத்தியதும் வேறு எங்கும் இல்லை. சுப்ரீம் கோர்ட் என்பதே சுப்பிரமணியசாமி கோர்ட்டுதான் என்ற அளவுக்கு செல்வாக்கு பெற்ற சு.சாமியை நீதிமன்ற அறைக்குள் வைத்தே முட்டையால் அடித்ததும் வேறு எங்கும் இல்லை. கிரானைட், தாதுமணல் கொள்ளைக்கு ஆதரவாக வழங்கப்பட்ட முறைகேடான தீர்ப்புகளையும், அவற்றை வழங்கிய நீதிபதிகளையும் பற்றி ஊழல் புகார் கொடுத்து பயனில்லாத நிலையில் 1500 வழக்கறிஞர்கள் பகிரங்கமாக (மதுரையில்) பேரணி நடத்தியதும் இந்தியாவில் வேறு எங்கும் நடக்கவில்லை.
இன்று பத்திரிகையாளர்களை குற்றம் சொல்லும் மேட்டுக்குடி ஜர்னலிஸ்டுகளைப் போலவே, மேட்டுக்குடி வக்கீல்களும் தமிழக வழக்கறிஞர்களைக் குற்றம் சொன்னார்கள். தகுதியற்றவர்கள் வக்கீலாகிவிடுவதாக அங்கலாய்த்தார்கள். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் பல வழக்கறிஞர்களுக்கு விசாரணையே இல்லாமல் வாழ்நாள் தடை விதித்தது அனைத்திந்திய பார் கவுன்சில். இந்தியாவிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் மத்தியப் படையைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக வழக்கறிஞர்கள் ஒடுக்கப்பட்டார்கள். இன்று உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் ஒடுக்கப்படுவதைப் பார்க்கிறோம். நீதிபதிகளின் மர்ம மரணத்தைப் பார்க்கிறோம்.
***
சித்தார்த் வரதராஜன், புரொபீர் புர்காயஸ்தா, கிருஷ்ணபிரசாத், ஹரிஷ் கரே, பாபி கோஷ் ஆகிய பத்திரிகையாளர்கள் கல்லெறிந்த காரணத்தால் வெளியேற்றப்படவில்லை. கவுரி லங்கேஷ் கல்லெறிந்த குற்றத்துக்காக படுகொலை செய்யப்படவில்லை.
இன்று போராடும் பத்திரிகையாளர்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் கருத்துகளிலும் சரி, அன்று தமிழக வழக்கறிஞர்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளிலும் சரி சாதியக் காழ்ப்பும், மேட்டுக்குடி மனோபாவமும் அப்பட்டமாக வெளிப்படுகின்றன. இவ்வாறு கருத்து தெரிவிப்போர் சங்க பரிவாரத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் சங்க பரிவார எதிர்ப்பாளர்களாகவும் இருக்கலாம்.
ஆனால் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு எதிராக, இயல்பாக, நேர்மையாகப் போராடிய இளம் பத்திரிகையாளர்களைக் காவு கொடுப்பதற்கு துணை நிற்பவர்கள் அனைவரும் எதிரிகளுக்குத்தான் துணை நிற்கிறார்கள். இப்போது தேவைப்படுவது பத்திரிகையாளர்களின் ஒற்றுமையல்ல, பிளவு.
காவிரி, நியூட்ரினோ, ஸ்டெரிலைட், ஹைட்ரோகார்பன், நீட், இந்தித்திணிப்பு ஆகியவை மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் பணிநீக்கமும் இனி தமிழ்ச்சமூகத்தின் பிரச்சனைதான்.
பத்திரிகையாளர்களே, பிளவுபடுங்கள். இந்துத்துவ ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் என்று! தமிழ்ச்சமூகம் இந்துத்துவ எதிர்ப்பு பத்திரிகையாளர்கள் பக்கம்!
- வினவு