Sunday, March 26, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுருங்கைக்காயை வழித்துக் கொடுத்த அம்மா ! The Hindu Exclusive

முருங்கைக்காயை வழித்துக் கொடுத்த அம்மா ! The Hindu Exclusive

-

போயஸ் தோட்டத்தில் புரட்சித் தலைவியின் வளர்ப்பில் துள்ளி விளையாடிய விவேக் ஜெயராமன்!

“முருங்கைக்காயின் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் ’அம்மா’எனக்கு வழித்துத் தருவார்” – இது கடந்த 21.11.2017, செவ்வாய்க்கிழமை தேதியிட்ட ஆங்கில The Hindu-வில் வெளிவந்துள்ள ஒரு சிறப்புக் (Exclusive) கட்டுரையில் இடம்பெற்றுள்ள ‘வைர’ வரி!

வழித்து தந்தது சாதா அம்மாவாக இருந்திருந்தால் இது ஒரு மேட்டரே இல்லை. மாறாக முருங்கை சதையை வழித்து தந்தவர் ‘மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா’. வழித்த சதையை தின்ற வாய், விவேக் ஜெயராமனுடையது.

அம்மா, முருங்கைகாயை மட்டுமா வழித்துத் தந்தார்? ஜெயா டிவியோடு ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தையும் அல்லவா விவேக்கிற்கு வழித்துத் தந்திருக்கிறார்! மட்டுமல்ல… சசிகலா குடும்பத்துக்காக தமிழ்நாட்டின் சரிபாதியை வழித்துக் கொடுத்தவர் ஜெயலலிதா. திருப்பதியில் மொட்டை போடும் தமிழ் மக்களின் தமிழகத்தையே ஒரு இருபது ஆண்டுகளில் மொட்டையடித்த பாரம்பரியம் இந்த ஜெயா சசிகால கும்பலினுடையது!

ஆனால் The Hindu பேட்டி, விவேக் ஜெயராமனை ஆர்வத் துடிப்புள்ள ஒரு இளம் தொழிலதிபராக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனான விவேக், தனது ஒண்ணரை வயதில் இருந்து போயஸ் தோட்டத்திலேயே வளர்ந்தவர். தற்போது ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டி.வி. நிறுவனங்களின் சி.இ.ஓ.வாக இருக்கிறார்.

கடந்த வாரம் வரிமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டில் விவேக்கின் வீடு, அலுவலகங்கள் அனைத்தும் அடக்கம். ரெய்டை தொடர்ந்து, இந்த மன்னார்குடி குடும்பம் நடத்தியிருக்கும் சூறையாடல் குறித்து மக்கள் காறித் துப்பிக் கொண்டிருக்கும் நிலையில்தான், விவேக் குறித்து ஓர் இனிமையான சித்திரத்தை நம் முன்னே வைக்கிறது தி இந்து பேட்டி.

“நான் போயஸ் தோட்டத்திலேயே வளர்ந்தேன். போயஸ் மாடியில் நின்றபடி பட்டம் விடுவது எனக்குப் பிடிக்கும். என்னை அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் எனினும், நான் தெரியாமல் பட்டம் விடுவேன். அதை சின்னத்தை (சசிகலா) பார்த்து விட்டால், கையில் குச்சியுடன் மொட்டை மாடியில் தட்டியபடியே என்னை நோக்கி வருவார். அந்த சத்தமே எனக்கு நடுக்கத்தை வரவழைக்கும்” – எப்படி ஒரு கண்டிப்பு மிகுந்த குடும்பச் சூழலில் விவேக் வளர்க்கப்பட்டார் என்பது நமக்கு சொல்லப்படுகிறது. ஆனானப்பட்ட சிபிஐ கட்சியின் நல்லக்கண்ணுவிற்கே ஒரு தேர்தலில் சீட் இல்லை என்று கதவடைத்த சொர்க்க வாசல் கொண்ட போயஸ் தோட்ட வேதா இல்லத்தில்தான் சீமந்த புத்திரன் விவேக் பட்டம் விட்டிருக்கிறார்.

அ.தி.மு.கவிற்காக அடிவயிற்றிலிருந்து குரலையும், வார்த்தைகளையும் எழுப்பி ஆவேச நடனம் புரியும் சி.ஆர்.சரஸ்வதி போன்ற செய்தித் தொடர்பு அடிமைகளே பார்த்திருக்காத அந்த மொட்டை மாடி, ‘அம்மா’ காலத்தில் ‘அம்மா’வையும், பரப்பன அக்ரகாரத்திற்கு முன்னால் ‘சின்னம்மா’வின் தரிசனத்தையும் தாங்கி நின்ற அந்த பால்கனி, கீழே நின்று கொண்டு பிரியாணி ஏப்பத்தோடு தரிசிக்கும் அதிமுக தொண்டர்களின் மகரவிளக்கு காட்சியான அந்த மாடியில்தான் இந்த விவேக பட்டம் விட்டிருக்கிறார். இப்பேற்பட்ட மொட்டை மாடியின் மகத்துவம் நம்மைப் போன்ற சாதா தமிழர்களின் நனவிலி மனதில் உறைந்திருக்க, விவேக்கின் விளையாட்டு பருவத்தின் மூலம் அந்த மகத்தான மாடியில் பட்டம் விடும் பட்டத்து இளவரசனை தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகும் ஹீரோ போல சித்திரிக்கிறார் தி இந்து கட்டுரையாளர்.

“என்னை சின்ன அத்தை அடிக்கமாட்டார். ஆனால் கையில் குச்சியுடன் என் அருகில் இருக்கும் பொருட்களை தட்டியபடியே அடிப்பதைப் போல் வருவார். உடனே பெரிய அத்தை (ஜெயலலிதா), ‘சசி… அடிக்காதே’ என சத்தம் போடுவார். நான் அழுவதை பெரிய அத்தையால் தாங்கவே முடியாது” – ஆனந்தம் தவழும் ஒரு வீட்டின் சூழல் நமக்கு விவரிக்கப்படுகிறது. இயக்குநர் விக்கிரமன் இதை ஒரு காட்சியாக்கினால் உலகமே அந்த கணங்களில் பாசிட்டீவ் எனர்ஜியின் ஆனந்தத்தில் துள்ளுவது உறுதி!

விவேக் உறுதியான மூன்று பெண்களால் வளர்க்கப்பட்டாராம். இதை சொல்வது விவேக் இல்லை. தி இந்து கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கர் அப்படி எழுதுகிறார். ஒருவர் விவேக்கின் அம்மா இளவரசி. இன்னொருவர் ‘சின்ன அத்தை’ சசிகலா. மற்றொருவர், ‘பெரிய அத்தை’ ஜெயலலிதா. ஆனால் ‘சின்னத்தையும், பெரியத்தையும் சாதா அத்தைகள் இல்லையே!

“எனக்கு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும். என் பிறந்த நாளுக்கு பெரிய அத்தை ஒரு கிப்ட் கொடுத்தார். பிரித்துப் பார்த்தால் உள்ளே பெரிய ‘பாணா காத்தாடி’. முதல்முறையாக மொட்டை மாடியில் இருந்து அந்த பட்டத்தை விடுவதற்கு எனக்கு அனுமதி தந்தார்கள். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நான் பாதுகாப்பாக பட்டம் விடுவதை கண்காணிக்க நான்கு போலீஸ்காரர்களையும் உடன் அனுப்பி வைத்தார்கள் – வளர்ப்பு மகன் கல்யாணத்தில் சாம்பார் வாளி தூக்கிய நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழக காவல்துறை, பொடியன் விவேக்கின் பட்டம் விடும் பணியை கண்காணிக்க தனிப்படை அமைத்திருந்த ரகசியத்தை பகிர்ந்து கொள்கிறார், கட்டுரையாளர்.

தீரன் அதிகாரம் ஒன்றில் தமிழக காவல்துறையின் ஊதிப்பெருக்கப்பட்ட ஹீரோயிசத்தின் யோக்கியதை என்ன என்று ஆய்வு செய்வோருக்கு இந்தக் காட்சி ஒரு வரலாறு. ஸ்காட்லாந்து யார்டோடு போட்டி போடும் தமிழக போலீசு இங்கே ஒரு பையனின் பட்டம் விடும் விளையாட்டிற்கு பந்தோபஸ்து கடமை ஆற்றியிருக்கிறது.

டைம்ஸ் நவ் தொடங்கி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் வரையிலும் ரவுண்ட் கட்டிய பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், ‘இப்படி போலீஸ்காரனை பந்து பொறுக்கி போட விட்டது நியாயமா?’ என்று கேட்கவில்லை. மாறாக, he recalls with a laugh – அவர் சிரிப்புடன் நினைவு கூர்கிறார்.. – என ஒரு இனிய “பசுமை நிறைந்த நினைவுகளே” பாடலை பாடுகிறார். பாருங்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பதால் அடிமைத்தனம் எவ்வளவு கவித்துமாக வருகிறது என்று!

“ஆஸ்திரேலியாவில் பி.பி.ஏ. சேர்ந்தேன். சின்ன அத்தை என் கையில் 5000 ஆஸ்திரேலியா டாலர் செலவுக்காகக் கொடுத்தாங்க. மூணே நாள்ல எல்லாம் செலவாகிடுச்சு. சின்னத்தைக்கு போன் பண்ணி பணம் வேணும்னு கேட்டேன். அனுப்பவே இல்லை. அப்புறம் சிங்கப்பூர்ல இருந்த என் அக்காவுக்குப் போன் பண்ணி பணம் கேட்டேன். என் அக்கா கணவர் நேரா ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி வந்து இன்னொரு 5000 டாலரை கையில் கொடுத்துட்டு, ‘இனிமே குடும்பத்துலேர்ந்து பணத்தை எதிர்பார்க்காதே’ன்னு சொல்லிட்டுப் போனார்.’’ – என்று சொல்லிவிட்டு நேர்காணலில் ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார், விவேக்.

ஐயாயிரம் டாலரை கொடுக்க சிங்கப்பூர்லேர்ந்து பிளைட் பிடிச்சு வந்த அதிர்ச்சியை விட, ‘அய்யய்யோ.. அதுக்குப் பிறகு விவேக் செலவுக்கு என்ன செய்திருப்பார்?’ என நம்மிடம் பதைபதைப்பை கூட்டுகிறார் சந்தியா ரவிசங்கர்.

“விவேக், ஆஸ்திரேலியாவில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்கும் ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்தார். பிறகு ஒரு பீட்ஸா டெலிவரி பையனாக பணியாற்றினார். பிறகு பூனேவில் எம்.பி.ஏ. படித்தார்; ஐ.டி.சி-யில் வேலைக்கு சேர்ந்து கல்கத்தாவில் கடை, கடையாக சிகரெட் பாக்கெட் விற்றார்’ என்றெல்லாம்  தி இந்து நேர்காணலில் விவரிக்கப்படுகிறது. இதில் கட்டுரையாளர் இரண்டு நீதிகளை உணர்த்துகிறார். 1. விவேக், செல்வச் செழிப்பில் திளைத்த ஊதாரி அல்ல. தானே சம்பாதித்து தானே படித்த தானைத் தலைவன். 2. எவ்வளவுதான் பணம் இருந்தாலும், ஒரு புள்ளையை எப்படி டிசிப்ளினோட வளர்க்கிறார்கள் பாருங்கள்!

இப்படி கட்டுரை முழுக்க நிறைய பன்ஞ்ச் டயலாக்குகள் ரஜினிக்கே சவால் விடுகின்றன. அதில் கடைசி பீஸ், செம மாஸ்!

“2014 வரை என்னை யாருக்கும் தெரியாது. அப்போதுதான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் நான்கு பேரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நான் என் மேனேஜரிடம் லீவ் கேட்டேன். காரணம் கேட்டார். வேறு வழியின்றி நான் யார் என்று சொல்ல வேண்டியதாயிற்று. முதல்முறையாக அவரது கண்களில் பயத்தைக் கண்டேன்.’’  என்கிறார் விவேக்.

– அது பயம் இல்லை. மரண பீதி. உண்மையாவே அந்த ஊழியரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஆனானப்பட்ட மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் குடும்பத்தைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதியை கைது செய்ய வேண்டும் என்று புரட்சித் தலைவி நடத்திய சேஸிங் நாட்களில் கஸ்தூரி அய்யங்கார் குடும்பம் எப்படி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது என்பது ஊருக்கே தெரியும். எனில் விவேக்கை வேலை வாங்கிய அந்த மேனேஜர் பயப்படாமல் என்ன செய்வார்?

“அதுவரையிலும் என்னை எல்லா ஊழியர்களை போலதான் நடத்துவார். காபி எடுத்து வரச் சொல்வார். ஏதேனும் ஒன்றுக்கு ஒப்புதல் தர மணிக்கணக்கில் காக்க வைப்பார். ஏனோ எனக்கு அதில் திருப்தி இருந்தது. நான் லீவ் முடிந்து மீண்டும் வேலையில் சேர்ந்தபோது எல்லோரும் என்னிடம் மிகையான மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். பயந்து ஒதுங்கினார்கள்”

– புகழையும், பணத்தையும், கௌரவத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு விவேக் எப்படி ஒரு துறவியைப் போல வாழ்ந்தார் என்பதை ஒரு திரைக்கதையின் நேர்த்தியுடன் விவரிக்கிறார் கட்டுரையாளர்.

*******

இந்தக் கட்டுரையை எக்ஸ்க்ளூசிவ் என்கிறது தி இந்து. ஆனால், அதே நாளில் இதே விவேக் ஜெயராமனின் இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எக்கனாமிக்ஸ் டைம்ஸில் வெளியானது. இந்த சிறிய பேட்டியை எழுதியிருந்தவர் பிரேம்சங்கர். இந்த பிரேம்சங்கரும், தி இந்து கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கரும் கணவன் மனைவி. ஒண்ணா கெளம்பிப்போயி ஒரு காபியை குடிச்சு அரட்டையடிச்சுட்டு, இந்தம்மா எழுதினது தி இந்து எக்ஸ்க்ளூசிவாம். அவரு எழுதினது எக்கனாமிக்ஸ் டைம்ஸில் எக்ஸ்க்ளூசிவாம்.

********

என்ன கேவலம் இது? எதற்காக இந்தப் பேட்டி? இதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா என்ற ஜனநாயகத்துக்கு சற்றும் பொருத்தமற்ற ஒரு சர்வாதிகாரியின் துணையுடன் சசிகலாவின் உறவினர் வலைப்பின்னல் கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாபெரும் பொருளாதார சூறையாடலை நிகழ்த்தி வருகிறது. இவர்களால் சுரண்டப்படாத ஆறுகள், மலைகள், இயற்கை வளங்கள் எதுவும் பாக்கியில்லை. அனைத்து அரசுத் துறைகளும் மொட்டையடிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் ரவுடித்தனத்தை; பொறுக்கித்தனத்தை நிறுவனமயபப்டுத்தியிருக்கிறார்கள். அடிமைத்தனத்தை ஓர் இயல்புபோல மாற்றி வைத்திருக்கிறார்கள். மிடாஸ் என்ற பெயரில் எரிசாராயம் காய்ச்சி ஒட்டுமொத்த மாநிலத்தையும் கொன்றொழிக்கும் கொலைகாரர் கூட்டம் இது. விவேக் என்ற 29 வயது இளம் தொழிலதிபருக்கும், இந்த பணத்துக்கும் சம்பந்தமே இல்லையா?

ஆனால் கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கருக்கோ, இதை முக்கியத்துவடன் வெளியிட்டுள்ள தி இந்துவுக்கோ இதுவெல்லாம் ஒரு பொருட்டில்லை. மாறாக, அவர்கள் விவேக்கை சில்லறைத்தனம் இல்லாத; ஒரு நாகரிகமான கண்ணியமான நபராக முன்வைக்கிறார்கள். விவேக் ஜெயா டி.வி.யில் பொறுப்பேற்றவுடன் தி.மு.க. செய்திகளும் அதில் இடம் பெறுகிறதாம். ஜெயா டி.வி.யில் துரைமுருகன் பேட்டி வந்ததாம். இது அவருடைய நாகரிகமான அணுகுமுறைக்கு உதாரணமாம்.

இந்த சந்தியா ரவிசங்கர் தான் வைகுண்டராஜனின் மணல் மாஃபியா குறித்து thewire.in  தளத்தில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். அது பரவலாக பேசப்பட்டது. இப்போது வைகுண்டராஜனின் மகன் சுப்ரமணியன் தான் நியூஸ் 7 தொலைக்காட்சியின் நிர்வாகியாக இருக்கிறார். அவரை ‘இளம் தொழிலதிபராக’ சித்தரித்து எழுதுவாரா? வைகுண்டராஜன் சட்டவிதிகளை மீறி இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளை அடிக்கிறார் என்றால், சசிகலா குடும்பத்தினர் என்ன உழைத்து பொருளீட்டும் உத்தமர்களா? அந்த ஒட்டுமொத்த கொள்ளை சாம்ராஜ்ஜியத்தின் தளபதியாக இருக்கிறார் விவேக் ஜெயராமன். ஆனால் அவரை ஓர் உத்தமனை போல சித்தரிக்கிறார்கள் இவர்கள்.

இந்த சந்தியா ரவிசங்கர் மக்களின் வில்லன்களான வரலாற்று மாந்தர்களை கஷ்டப்பட்டு அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி நேர்காணல் செய்தால் எப்படி இருக்கும்?

 • மோனோலிசா ஓவியத்தின் பொருளை ஆழமுடன் விளக்குகிறார் அடால்ப் ஹிட்லர்
 • 2002 குஜராத்தில் புறாக்களுக்காக மாடம் கட்டினார் ஒரு முன்னாள் டீக்கடை இளைஞர்!
 • பிலிப்பைன்ஸ் ஓட்டல் பையனின் கேர்ல் பிரண்டுக்காக ஆடை வடிவமைத்த விஜய் மல்லையா!
 • நித்தியானந்தாவின் நித்திரைக் கனவில் உதயமான நான் ஸ்டாப் அன்னதான ஓட்டல்!
 • அசீமானந்தா கண்டுபிடித்த அரிய ஆசனங்கள்!

இப்படியெல்லாம் சில பல நேர்காணல்கள் எடுக்கப்பட்டு தி இந்துவில் அவை சிறப்புக் கட்டுரைகளாக வராது என்பதற்கு எந்த உத்திரவாதத்தையும் நாங்கள் தர இயலாது!

– கீரன்

மேலும் படிக்க:

https://thewire.in/110405/tamil-nadu-sand-mining/

https://thewire.in/122893/mining-ball-centres-court/

 1. வாவ்… கட்டுரை நெடுக கொலை குத்து குத்திருக்கீங்க.

  ஹிந்து பத்திரிகைன்னு இல்ல பொதுவா ஏதோ ஒரு வகையில, பிராடு பித்தலாட்டமாவது செய்து வாழ்க்கையில் “முன்னேறியவர்களை” பார்த்து பத்திரிகைகள் வழிவது மாதிரி ஒரு ஆபாசம் வேறு ஏதும் இல்லை.

  நல்லா சூடு வைச்சிருக்கீங்க. மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவுக்கு புரியுமா?
  இந்த மாதிரி ஒரு “கக்கத்தில் லெதர் பேக்” கும்பலில் இருந்து பிரண்ட்லைன் மாதிரி ஒரு பத்திரிகை எப்படித் தான் வருதோ தெரியலை…

  சரி, எனக்கு இந்த கட்டுரையில் பிடித்த கொலைக் குத்து – –

  //– அது பயம் இல்லை. மரண பீதி.//

 2. ஈவிரக்கம் இல்லையா உங்களுக்கு..
  அன்னா ஹசாரேவுக்கு பிறகு காட்டுத்தனமாக கிழித்து தொங்கவிடும் பதிவு.
  விக்கிரமன் ரெபரன்ஸ் சிரித்து வயிறு புண்.

 3. இந்த வினவு தளம் பாரபட்சமான கட்டுரைகளுக்கு பேர் போனது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று . இதுபோல் திமுக கும்பலை அம்பலப்படுத்தும் ஒரு கட்டுரையை வெளியிடுவீர்களா?

 4. இந்த மொழி நடையும், யுக்தியும் அற்புதமானது……வாழ்த்துக்கள்

 5. சந்தியா ரவிசங்கர்களின் ஆதிக்கம்
  கௌரவ கொலைகள் பெருக்கம்.
  அதாங்க நம்ம ஜனநாயகத்தை
  சொன்னேன்.

 6. அவங்களுக்கும் சில பொருளாதார தேவைகள் இருக்குமில்லையா !! இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்தா எப்படி பொழப்ப ஒட்டுறது..அதான் வைகுண்டராஜன் பற்றி கட்டுரை கூட எழுதி்இருக்கோமே…பத்து போட்டு கொடுங்க…எடை அநியாயத்துக்கு உங்க பக்கம் இருக்கு !!

 7. //என்ன கேவலம் இது? எதற்காக இந்தப் பேட்டி? இதன் நோக்கம் என்ன? //

  பூமி தட்டை பூமி தட்டை என்று பலமுறை கூவினாலே ஏற்று கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்னும் போது , பொது ஜன கருத்தை இது போன்ற கட்டுரைகள் சிறிது சிறிதாக புத்தியில் ஏற்றும்

 8. ஜெயா டிவி CEO விவேக் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை வடித்த “வினவு” இணையதளத்தில், அதே போன்று கருணாநிதி மகன் ஸ்டாலின் பற்றியோ, அல்லது ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பற்றியோ எழுத திராணி இருக்கா?

  எப்படி எழுதுவார்கள் 🙂 முதலாளிகள் பற்றி அடிமைகள் விமர்சிக்கத்தான் முடியுமா? சொன்ன வேலையை கச்சிதமாக முடித்துவிட்டு, கோப்பாலபுரம் வாசலில் வைத்திருக்கும் தட்டில் இருக்கும் மிச்சம் மீதி உணவை மட்டுமே சாப்பிட முடியும் அல்லவா 🙂

  கோபப்பட்டு அழகிரியைப் பற்றியோ அல்லது அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியைப் பற்றியோ எழுதி விடாதீர்கள் “வினவு” அடிமைகளே… தினகரன் பத்திரிக்கையாளர்கள் எரிப்பு சம்பவத்தை நினைவில் கொள்க 😉

 9. மூணு நாளில் 5000 டாலர ஏப்பம் விடனும்னா ஒன்னு ஸ்டார் காசினோல ஜூதாடி இருக்கணும் இல்லைனா ஸ்டிரிப் கிளப்பில் விளையாடி இருக்கனும். இந்த ரெண்டுல நீங்க எத செஞ்சேள் விவேக் பய்யா? டெவலப்பரா 457ல வர்ற டெவலப்பர் மாசச் சம்பளமே 5000 வராது. இதுல அவன் செலவு பண்ணீட்டு ஆயிரம் டாலர் வீட்டுக்கு அனுப்புவான். உங்களுக்கு மாதிரி பிளைட் புடிச்சு வந்து பாக்கட் மணி கொடுக்கிற அத்தான் அவனுக்கு இல்லையே.

 10. சேகர் சார் “தொழில்”அதிபர் விவேக் பற்றி உங்கள் கருத்தென்ன? கொள்ளைக்கூட்டக்கும்பலான தமிழகத்தை சீரழித்த ஏ1,ஏ2 ச(சி)தி லீலாவதிகளைப் பற்றிப் பேசினால் சூடும் சுரணையும்தான் நமக்கு வர வேண்டும்.கருணாநிதியையும் சொல் என்று உத்தரவு போடும் உங்கள் செயலை என்னவென்று
  சொல்ல?ஜெயா சசீ கும்பலால் நாடே சூறையாக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு இணையாக வைத்து திமுகவை எழுதவே முடியாது.கட்சிகளுக்கிடையேயான வேறுபாடுகளும் அதை எவ்வாறு எதன் வழி நின்று விமர்சிக்க வேண்டும் என்பது பற்றியும் ஏற்கனவே வினவில் “விலாஆஆஆஆஆஆஆஆஆஆ”வாரியாக எழுதியிருக்கிறார்கள்.படியூங்கள் புரியுங்கள்.அப்படி படித்து அந்த வேறுபாடான அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளும் போது உங்கள் இதயம் கனக்கும் விழிகள் பணிக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க