சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ரிக்சா தொழிலாளிகள் முக்கியமானவர்கள். கால ஓட்டத்தில் இன்று ரிக்சாவிற்கு தேவை இல்லை. ஆட்டோ வந்து, பிறகு ஷேர் ஆட்டோ வந்து இன்று அவையும் தத்தளிக்கும் வண்ணம் ஓலா – உபர் கால் டாக்சிகள் ஆக்கிரமித்துவிட்டன. ரிக்சா தொழிலை நம்பி வாழ்ந்த சில ஆயிரம் தொழிலாளிகள் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள். ஆனால் சிலர் வேறு போக்கிடம் இல்லாமல் இன்றும் ரிக்சாவை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தொழிலாளிகள் அனைவரும் வயதானவர்கள்தான். மே தினத்தில் இந்த தொழிலாளிகளை சந்தியுங்கள்!

சென்ட்ரல் ரயில் நிலையம் வால்டாக்ஸ் சாலையில் பயணிகளை ஏற்றிச் செல்லை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள் ரிக்சாக்கள்!

இன்னைக்காவது ஒரு சவாரி வருமா என்ற ஏக்கத்துடன் சென்ட்ரல் ரயில் நிலைய வாசலையே பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் ரிக்சா தொழிலாளி!

குப்புசாமி, ஒரு புது ரிக்சா வாங்கணும்னா 25,000 ரூபா. இதுவே பழசு வாங்குனா 10,000  ஆகும். அதுக்கு பெயின்ட் அடிச்சி  FC காட்டி லைசென்ஸ் வாங்க மூவாயிரம் ஆகிடும். ஆர்.டி.ஒ முத்திரை குத்தினா தான் வண்டிய ஓட்ட முடியும். இப்ப யாரும் ரிச்சாவுல ஏறது இல்ல. ஓலா ஆட்டோ,ஓலா காருன்னு  போறாங்க. முன்பெல்லாம் மார்வாடிங்க ஏறுவாங்க. இப்ப அவங்களும் இல்ல.  லக்கேஜ் அதிகமா  இருந்தா எங்ககிட்ட வருவாங்க. இல்லனா வெத்தலைய அடுக்கின மாதிரி ஆட்டோவுல கூட்டம் இருந்தாலும் அதுல ஏறிக்குறாங்க. ரிக்சாவ கேவலமா நெனக்குறாங்க. காலையில நாலு மணியில இருந்து இப்ப வரைக்கும் ஒரு சவாரி வரல. மூணு நாளா கூட வண்டி ஓடாம இருந்திருக்கு.

ஆடலழகன், எம்ஜிஆர் ரிச்சாக்காரன்னு படம்  எடுத்தாரு. அதனால அவரு நல்லா சம்பாதிச்சாரு. ஓபீஸ்,இபிஎஸ்னு எந்த பாடுபசங்களும் எங்களுக்கு ஒன்னும் பண்ணல. பத்து வருசத்துக்கு முன்னாடி இந்த சென்னையில 18,000 ரிக்சா இருந்துச்சி. இப்ப இரண்டாயிரம் வண்டி கூட இல்ல. பட்டாளம் B&C மில்லுல மட்டும் மூவாயிரம் ரிக்சா இருந்துச்சி இப்ப ஒன்னு கூட இல்ல.  சென்ட்ரலயும், சவுகார்பெட்டையிலும் தான் ஏதோ கொஞ்சம் வண்டி ஓடிட்டு இருக்கு. எல்லாம் ஆட்டோவால அழிஞ்சிடுச்சி. ஆட்டோவோ சொல்லியும் தப்பு கிடையாது. அவங்களுக்கும் வாயிவயிறு இருக்கு. அதுக்கும் பெட்ரோல் போடணும். அவங்க தி.நகர், அண்ணா நகர்னு  தொலைவா போனா பரவாயில்லை. இங்க இருக்க சந்து பொந்து கூட சவாரி வந்தா நாங்க எப்படி பொழைக்கிறது சொல்லுங்க!

சவாரி எதுவும் இல்லாததால் ரிக்சாவிலேயே தூங்கும் தொழிலாளி.

ராமு-மணி, ஆட்டோ எங்களுக்கு பெரிய போட்டியா இருக்கு. தொழில்ல நாங்க எப்பவும் நேர்மையா இருப்போம். யாரையும் ஏமாத்த மாட்டோம். நாங்க மிதிக்கிற கஷ்டத்தை பார்த்துட்டு பத்து ரூபா அவங்களே சேர்த்து கொடுப்பாங்க. அப்படித்தான் எங்க வண்டி ஓடுது.

சீனுவாசன்-ஜெயலட்சுமி, எங்க மாமனார் இங்க ரிக்சா ஓட்டிட்டு இருந்தாரு. அவரு போன பிறகு நான் இந்த வேலைய செய்யுறேன். கல்யாணம்,கருமாதி எதுவானாலும் இந்த பிளாட்பாரத்துலதான். என்னோட கல்யாணமும் இங்கதான் நடந்துச்சி. கானா பாட்டு கச்சேரி, விருந்து எல்லாம் இங்க நடக்கும். ரேசன் கார்டு,ஆதார் கார்டு எல்லாத்துலயும் இந்த அட்ரஸ் தான் இருக்கு.  குடிக்கிற தண்ணிய சென்ட்ரல்ல புடிச்சிப்போம். இங்கேயே சாப்பிட்டு படுத்துப்போம். காசு இருந்தா கவுச்சி. இல்லனா சாம்பார் சோறுதான்.

எங்க சொந்த பந்தம் எல்லாம் இங்க தான் இருந்தாங்க. இரண்டு வருசத்துல அஞ்சி பேர் செத்துட்டாங்க. என்னோட தங்கச்சி தீக்குளிச்சி இறந்துடுச்சி. ஏழுமலை, வெங்கடேசன் தண்ணி அடிச்சி இறந்துட்டாங்க. இவங்க தான் எங்க கடவுள்.

சின்னபொண்ணு, என்னோட புருஷன் செத்த பிறகு, பழக்கடை போட்டு பொழச்சிட்டு வந்தேன். இப்ப அந்த கடையையும் கார்ப்பரேசன் ஆளுங்க எடுத்துட்டானுங்க. நாலு நாளா சாப்பாட்டு வழி இல்லாம இருக்கேன். எனக்கு 12 வயசுல ஒரு பொண்ணு இருந்துச்சி. அதுவும் இங்க கரண்ட் ஷாக் அடிச்சி செத்துடுச்சி. எந்த ஆதாரவும் இல்லாம இந்த பிளாட் பாரத்துல கெடக்கிறேன்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.