புதுச்சேரி

மே நாள் சூளுரை!

  • கட்சிகளை மாற்றுவது தீர்வாகாது! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!
  • தோற்றுப் போய், ஆள அருகதையற்றுப் போன கார்ப்பரேட் அதிகாரத்தை அகற்றுவோம்!
  • தொழிலாளர்கள் – விவசாயிகள் – மாணவர் – இளைஞர்கள் – சிறுவணிகர்கள் – சிறுதொழில் முனைவோர் கூட்டதிகாரத்தை நிறுவுவோம்!

மே நாள்! நமக்கு மேற்கண்ட சூளுரையுடன் தான் துவங்கியது. ஆனால், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், ஓட்டுக் கட்சி தலைவர்களது அறிக்கைகளிலும் வாழ்த்துச் செய்திகளால் நிரம்பி வழிந்தது. ஓட்டுக் கட்சிகள் மற்றும் தனிநபர் தொழிற்சங்கங்களும், இனிப்புக்கள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

8 மணி நேர உரிமைகளைப் பெற்றுத் தந்து கொத்தடிமைத்தனத்திலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலை பெற்ற மாபெரும் போராட்ட நாள்தான் மே நாள் என்றாலும் அதைக் கொண்டாடுவதற்கான சூழ்நிலை தற்போது நிலவுகிறதா என்பது தான் நம்முன் உள்ள கேள்வி. அடக்குமுறைகள், சிறை, சித்திரவதைகள் என ஆயிரமாயிரம் தொழிலாளர்களின் உயிர்த் தியாகத்தால் பெற்ற வெற்றியை அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டு செல்ல முடியாமல், பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் கூட தொழிலாளி வர்க்கம் இல்லை. மாறாக, அந்த வெற்றிகளை இழந்து வருகிறோம். 12 மணிநேர வேலை கட்டாயமாகி விட்டது. சங்கம் சேரும் உரிமையைக் கூட இழந்து நிற்கிறோம். இன்றைய இந்த சூழ்நிலையில் மீண்டும் நமக்கான விடுதலையை மே தினத் தியாகிகளின் வழியிலே மாபெரும் போராட்டமாக நடத்த வேண்டியது நம்முன் உள்ள கடமையாகும்.

தொழிலாளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் தங்களது உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர். மக்களின் சொத்துக்களைப் பறித்தெடுத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கி முதலாளித்துவத்திற்குச் சேவை செய்யும் அரசாக மாறிவிட்டது. இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பும் தோற்றுப்போய் மக்களுக்கு எதிர்சக்தியாக மாறி விட்டது.

எனவே, இந்த கட்டமைப்பில் ஓட்டுக் கட்சிகளை மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்தும் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. அது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால், கட்சிகளை மாற்றுவதால் பிரச்சினைகள் தீராது. மாற்றாக, இந்த அரசுக் கட்டமைப்பை மாற்றி, மக்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசுக் கட்டமைப்பை மக்களாகிய நாமே நிறுவிக் கொள்வதன் மூலமே நமக்கான பிரச்சினைகள் தீர்க்க முடியும்.

அன்றுதான் 8 மணிநேர வேலை உரிமை மட்டுமல்ல, நாம் இழந்து நிற்கும் அனைத்து உரிமைகளையும் வெல்ல முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மே நாள் போராட்டத்தை மீண்டும் நடத்த அறைகூவல் விடுக்கும் விதமாகவும் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பேரணியை, புதுச்சேரி புஜதொமு மாநில இணைச் செயலாளர் தோழர் ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். அவர் தனது உரையில், மே நாளை கொண்டாட்ட நாளாக அல்லாமல் போராட்ட நாளாக நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியத்தை விளக்கினார். இன்று பெற்ற உரிமைகளை இழந்து நிற்கிறோம். இதை மீட்டெடுக்க வேண்டுமென்றால், தொழிலாளர்களாகிய நாம் மட்டுமே களத்தில் நின்றால் போதாது. குடும்பம் குடும்பமாய் போராட்டங்களில் பங்கு பெற வேண்டும். பிற உழைக்கும் வர்க்கங்களும் இணைய வேண்டும் என்ற அறைகூவலுடன் பேரணியைத் துவங்கி வைத்தார்.

மே நாள் வாழ்கவே! என்று பறை முழக்கத்துடன், மே நாள் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கம்பீரமாக துவங்கி, நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக வரிசையாகவும், ஒழுக்கம், கட்டுப்பாடுடன் நகர்ந்த பேரணி, வழிநெடுகிலும் உள்ள வியாபாரிகள், மக்களின் கவனத்தை ஈர்த்தது. கொளுத்தும் வெயிலையும் வழிந்த வியர்வையையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் வீறுநடை போட்டனர். தொடர்ச்சியான முழக்கங்களுடன் நிறைவு பெற்ற பேரணியைத் தொடர்ந்து, நகரின் முக்கிய இடமான சாரம் அவ்வை திடலில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி புஜதொமு மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமை ஏற்றார். தனது தலைமையுரையில், மே நாள் என்பது போராட்ட நாள்தான் என்பதை வலியுறுத்திய அவர், அமெரிக்காவின் மேநாள் போராட்டங்களுக்கு முந்தைய நிலையில்தான் இன்று ஒட்டுமொத்த நாடும் உள்ளது. எல்லா அரசுத் துறையும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளால் சீரழிந்துள்ளது. அறிவு புகட்ட வேண்டிய கல்வித்துறை, கூட்டிக் கொடுக்கும் வேலை செய்கிறது. மக்களின் நண்பன் என்று சொல்லும் போலிசு குட்கா விற்கிறது. கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுகிறது. நீதிமன்றங்களில் நீதி விலை பேசப்படுகிறது. தொழிலாளர் துறையில் இழுத்தடித்து தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர். எனவே இதை ஒழிக்க, கட்சிகளை நம்பி ஏமாறாமல் கட்டமைப்பை மாற்றுவதற்கான வேலைகளில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தோழர் மகேந்திரன் தனது உரையில், “இன்று மாணவர் இளைஞர்கள் சமூக உணர்வற்றவர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். தமிழகமே போராட்டக்களமாக மாறிய போதும், ஐபிஎல் கிரிக்கெட்டை வேடிக்கை பார்க்கத் திரள்வதே இதற்குச் சாட்சி. லட்சங்களைக் கொட்டி படித்து எப்படியாவது முன்னுக்கு வந்து விடலாம் என முட்டி மோதுகின்றனர். என்ன தான் படித்தாலும், இறுதியில் காண்டிராக்ட் வேலைதான் மிஞ்சுகிறது” என குறிப்பிட்டார். அரசின் பல்வேறு துறைகளும் சீரழிந்து வருவதைப் பட்டியலிட்டுப் பேசிய தோழர், மோடி போராடும் விவசாயிகளைச் சந்திக்காமல், நடிகைகளைச் சந்திப்பதையும், லெனின் விவசாயிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் ஒப்பிட்டுப் பேசினார். எனவே, மக்களை மதிக்கின்ற அரசை உருவாக்க கட்சிகளை மாற்றுவது தீர்வாகாது கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு என்றார்.

திருவெண்ணெய் நல்லூர் வட்டார விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஏழுமலை, இன்று விவசாயம் அழிந்து விட்டது. விவசாயிகளுக்கு மானியம், கடன் தள்ளுபடி என்று சொல்லி ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும், விவசாயத்தை நிரந்தரமாக காப்பாற்ற பேசுவதில்லை. விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இன்று காவிரியைத் தடுத்து, டெல்டாவைப் பாலைவனமாக்க மோடி அரசு வேலை செய்கிறது. விவசாயத்தில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் நிலைமை அதுதான் என்று விளக்கிய தோழர், இவற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு புரட்சிகர அமைப்புகளின் தோளில் உள்ளது. அதை அந்த அமைப்புகளால் மட்டும் செய்து விட முடியாது. அந்தத் தோள்களின் மேல் உள்ள பொறுப்பை மக்களும் பகிர்ந்து கொள்வதன் மூலமே சாதிக்க முடியும் என மக்களுக்குப் போராட அறைகூவல் விடுத்தார்.

தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் பேசும் போது இந்த அரசின் எந்த உறுப்பும் மக்களுக்குப் பயன்படாத நிலையில்தான் உள்ளது. அதனால், இந்த அரசு நமக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு மக்கள் வர வேண்டும். கட்சிகளால் மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை என்பதுதான் நாம் தினமும் காணும் உண்மை. எனவே, கட்சிகளை அல்ல, கட்டமைப்பை மாற்ற வேண்டுவதற்கான போராட்ட தருணம் இது என்றார்.

இறுதியாகப் பேசிய புதுச்சேரி, புஜதொமு மாநிலப் பொருளாளர் தோழர் செல்லக்கண்ணு, மே-1 தொழிலாளர் தினம் என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நாளில் பிறந்த அஜீத்தின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர் இளைஞர்கள். எந்த ஒரு சமூகப் பிரச்சினைக்கும் வாயே திறக்காத ஒரு சுயநல தறுதலை, உங்களுக்கு தலையா? இன்று எது நமக்குத் தேவை? என கேள்வி எழுப்பினார்.

போலிசு உங்கள் நண்பன் என்கிறது உண்மையில் போலிசு மக்களின் நண்பனா? எனக் கேள்வி கேட்டால் சிறுகுழந்தை கூட இல்லை என்ற உண்மையைச் சொல்லும். மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் போலீசின் நிலை இன்று இதுதான். போலீசு மட்டுமல்ல, மற்ற அரசுத் துறைகளின் நிலைமையும் இதுதான் என்பதை உதாரணங்களுடன் விளக்கிப் பேசி, மக்களின் போராட்டங்களை ஒன்றிணைப்பதும் புரட்சியை நடத்துவதும் தான் நமது வேலையாக இருக்க வேண்டும் என்று முடித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பாடப்பட்ட தொழிலாளர்கள், மேதினம் மற்றும் கம்யூனிசத்தை பற்றிய பாடல்கள் உணர்வு பூர்வமாகவும், உற்சாகத்தை ஊட்டுவதாகவும் இருந்தன. மக்களும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஆங்காங்கே நின்று கேட்டனர்.

மேதினம் என்பது கொண்டாட்ட நாளல்ல! போராட்ட நாள் என்பதையும் இந்த கட்டமைப்பை நொறுக்குவதற்கான போராட்டமாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் நிகழ்ச்சி அமைந்தது.

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: 959778901.

*****

மதுரையில்…

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு புரட்சிகர அமைப்புகளின் சார்பில் பேரனி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக 01.05.2018 அன்று மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் மாலை 5:00 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணியின் முன் வரிசையில் பறையிசை முழங்க சிறுவர்களின் கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இது சுற்றி இருந்தவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இறுதியாக விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க