சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இருக்கும் பெரியார் பாதை. எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி.  கடப்பவர் எவரையும் ஒருகணம் திரும்பி பார்க்க வைக்கும் கலைநயம்… சென்னையில்கூட இப்படி விதவிதமான மண்பாண்டங்கள் உண்டா? என்று வியக்கவைக்கும் நேர்த்தி, வாருங்கள் அருகில் சென்று பார்ப்போம். மண்பாண்டங்களை மட்டுமல்ல; அதைச் செய்யும் மனிதர்களையும்…

திருமதி. உஷா வடிவேல். மண் பானைகள் மற்றும் கலைபொருட்கள் விற்கும் கடையின் உரிமையாளர்.

ஏறக்குறைய மூணு தலைமுறையா மண்பானை தொழில செஞ்சிக்கிட்டு இருக்கோம். மண்பானை, முகூர்த்த பானை, தீபத்துக்கு அகல், நவராத்திரிக்கு கொலு செய்வோம். சென்னையை பொருத்த வரைக்கும் பானை வாங்கணும்னா எங்களோட நினைவு தான் எல்லோருக்கும் வரும். அந்த அளவுக்கு இந்த இடத்துல மக்களோட நம்பிக்கையை பெற்று இருக்கோம்.

ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டி. களிமண்ணும் மணலும் கலந்து செய்யப்பட்ட மண்பானை. இந்த பானையை செய்வதற்கான வசதி சென்னையில் இல்லை என்பதால் பாண்டிச்சேரியை சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து களிமண் எடுக்கிறோம். ஐந்து லோடு ஏற்றி வர எல்லா கிராமங்களுக்கும் கோவில் டொனேசன் கொடுக்கணும். தலையாரி முதல் தாசில்தார் வரை கவனிக்கணும். களிமண்ணை தூளாக உடைத்து காயப்போடுவோம். உலர்ந்த களிமண்ணை தண்ணீரில் ஊற வைத்து அதனோடு மணல் உள்ளிட்ட பொருட்களை கலந்து பானை செய்வோம். பானை மேலே கொஞ்சம் செம்மண் பூசி சூளையில் எரியப்போடுவோம். அதன் பிறகே இந்த அழகிய வடிவமைப்பு பானை கிடைக்கும்.

சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் குவளை, தரமானது. இதன் விலையும் அதிகம். இதன் கூடுதல் சிறப்பு, விரைவாக தண்ணீர் ஜில்லென்று ஆகிவிடும், நீண்ட நேரம் ஜில்லென்று நீடிக்கும், தண்ணீர் கசியாது. வழக்கமான சூளையிலிருந்து வேறுபட்டு நவீன முறையில் முறையில் சுட்டெரிக்கிறோம். இதே தரத்துடன் பானையை செய்யலாம். ஆனால் அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.

சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்ட அழகிய மண் குதிரைகள்.

மோல்டிங் முறையில் செய்யப்பட்ட ஒட்டகம். அதன் மேலுள்ள அலங்கார மணிகள் கைவினைஞர்களின் கைவண்ணம்.

மண்பானை குக்கர். நாங்க 1800 ரூபாய்க்கு விற்கிறோம். ஆன்லைன்ல எங்களை விட அதிகமா விக்கிறாங்க. மண் பாண்டன்களால் ஆன பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு பொறுமை வரும், படபடப்பு குறையும். காரணம் பானை உடைந்து விடும் எச்சரிக்கை. மண்பானையில் சமைப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

சாப்பிடும் தட்டு முதல் அஞ்சரை டப்பா வரை 35 வகையான பாத்திரங்கள் களிமண்ணால் ஆனவை.

எங்க கிட்ட வருபவர்கள் கருப்பு சட்டி அதிகம் கேட்கிறார்கள். அதனால் சூளையில் நன்கு தீய்ந்த பிறகே எடுத்து விற்பனை செய்கிறோம்.

வடநாட்டில் இருந்து அதிகம் பேர் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளதால் அவர்கள் வணங்கும் கடவுள் சிலையை கேட்கிறார்கள். இதற்காகவே கல்கத்தாவில் இருந்து கைவினை பொருட்கள் செய்யும் ஐந்து குடும்பங்களை இங்கேயே அழைத்து வந்துள்ளோம். வடநாட்டவர்களின் சிலைகளை செய்து கொடுக்கிறோம். எங்களிடம் ஒரு ரூபாய் அகல் விளக்கிலிருந்து ஆறாயிரம் ரூபாய் அய்யனார் சிலை வரை உள்ளது.

திரு. ரங்கநாதன், மண்பாண்டங்கள் விற்பவர்.

கிட்டத்தட்ட ஐம்பது வருசமா இதே பிளாட்பாரத்துல தான் வித்திட்டிருக்கேன். சொந்தமா ஒரு வீடு கூட வாங்க முடியல. பானை, பூந்தொட்டி, மாட்டுத்தொட்டி விக்குறேன். விழுப்புரம், கடலூர்,மானாமதுரை போன்ற இடத்துல இருந்து வாங்கறேன். தனியா செய்ய ஆள் பலமோ, பண பலமோ இல்லை. ஏற்கனவே கார்பரேசன் கொடச்சல். அதையே சமாளிக்க முடியாத நிலமையில இருக்கேன்.

வள்ளியம்மாள், மண்பாண்டங்கள் விற்பவர்.

நான் பெரிய வியாபாரி எல்லாம் இல்லை. எங்க மாமனார், மாமியார் காலத்துல இருந்தே இங்க விக்கிறேன். எனக்கு நாலு பசங்க இருந்தும் பிரயோஜனம் இல்ல. கடைசி காலத்துல அதுங்களுக்கு தொல்லையா இருக்கக்கூடாதுன்னு இந்த பானைங்களை வித்துகிட்டு இருக்கேன். கடவுள் விட்ட வழி. அவர் மேல பாரத்த போட்டுட்டேன்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க